கண் விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தாள் பத்மா.
மணி 10.10.
சொரக்..! சொரேரென்றது !!.
‘சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருக்கிறோம். எதற்கு கண் அசைந்தோம், ஏன் அசைந்தோம்…. ? ‘- என்று நினைக்கக் கூட நேரமில்லாமல்…
‘இத்தனை நாளும் 12.30.க்கெல்லாம் வருபவர்.. இன்றைக்கு 12.00 மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்று சொன்னாரே..! ‘- இந்த நினைப்புதான் முதலில் வந்து மூச்சைப் பிடித்தது.
‘போட்டது போட்டபடி கிடக்கின்றதே..! இன்னும் இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து விடுமா..? ‘என்று நினைக்கும்போதே….
பரபரப்பாக எழுந்தாள். சாமான்களை எடுத்து ஓர ஒதுங்க வைத்தாள்.
‘கொஞ்ச நேரம் இருக்க மாட்டார். குதி குதியென்று குதிப்பார். !’நினைப்பு இன்னும் வேகமாக செயல்பட வைத்தது.
மீண்டும் அவளையறியாமல் கண்கள் கடிகாரத்தைப் பார்த்தது.
அதற்குள் இருபது நிமிடங்கள் ஓடி.. மணி 10. 30 தைத் தொட்டது.
துரித கதியில் சமையல் செய்ய வேண்டிய சாமான்களை சுத்தம் செய்தாள்.
புளியை ஊற வைத்தாள்.
‘ஒரு குழம்பு, ஒரு கூட்டு போதும். அதிகம் செய்ய நேரம் இருக்காது ! ‘- மனதில் சொல்லிக் கொண்டே… கை,கால், மனம்…. துடிக்க பரபரப்பாக வேலைகள் செய்தாள்.
கேரட் சீவும்போது உலை கொத்தித்தது. அரிசியைப் போட்டாள்
‘சீக்கிரம் ஆக வேண்டும் ! ‘- என்று வேண்டிக்கொண்டு மற்றக் காரியங்களைக் கவனித்தாள் .
‘12.00 மணி என்றால் 11.45.க்கு சமையலை முடித்து வைத்திருந்தால்தான் அவர் வந்ததும் சரியாக இருக்கும்.! ‘மறுபடியும் மனசுக்குள் கணக்கு. நினைப்பு.
அதே கதியில்…. கை பரபரக்க வேலையை முடித்தபோது மணி 12.00. த் தொட்டது.
‘அப்பாடி ! ‘என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்….
அழைப்பு மணி ஒலித்தது.
‘அப்படி பிழைத்தேன் !’- நினைத்து….
”இதோ வந்துட்டேன்..! ”என்று குரல் கொடுத்துக் கொண்டே தான் தயாராய் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டு கேரியருடன் கதவைத் திறந்தாள்.
அலுவலகத்தில் வேலை செய்யும் கணவனுக்குச் சாப்பாடு எடுத்துச் செல்லும் கூலிக்காரக் கிழவர் கை நீட்டினாள்.
அவர் வாங்கிக் கொண்டு பத்தோடு பதினொன்றாக… தன் சைக்கிள் கூடையில் வைத்துக் கொண்டு நகர்ந்தார்.
‘அப்பாடி ! கரணம் தப்பினால் மரணம். கணவருக்குப் பயப்படுகிறோமோ இல்லையோ…சாப்பாடு எடுத்துச் செல்லும் இவருக்குப் பயந்து காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் இந்தக் கிழவர் வந்து நிற்பார். நில்லென்று சொன்னாலும் நிற்க மாட்டார். நான் பத்து வீடு பார்க்கனும் சொல்லி நகர்ந்து விடுவார்.
அதற்கு அடுத்துதான் களேபரம் !
இவள் கை பேசி எடுத்து…
”என்னங்க… ! இன்னைக்குச் சாப்பாடு கொடுத்தனுப்பல. எடுத்து வர்றவர் நேரத்தோடு வந்து விட்டு சென்று விட்டார். நீங்க… இன்னைக்கு ஓட்டல்ல சாப்பிடுங்க…”என்று எடுத்து வருபவர் மேல் பழி போட்டு பக்குவமாய் சொன்னாலும்…
சங்கருக்குத் தாங்காது. !
”நீ தூங்கி இருப்பேடி. சோம்பேறி முண்டம்.! தண்டம் ! இல்லே தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர் பார்த்து கோட்டை விட்டிருப்பே.. ! உன்னைத் தெரியாதா எனக்கு..? ”கணவர் காண்டிலிருந்தும் தப்பித்தோம் ! ‘நினைக்க… பத்மாவிற்கு அவளையுமறியாமல் நிம்மதி மூச்சு வந்தது.