கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,296 
 
 

கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது ஆய்க்குடியில்!

ஆய்க்குடி…. என் பால்யத்தின் பள்ளி நாட்கள் கழிந்தது அந்த ஊரில்தான். கோலி, செல்லாங் குச்சி, பம்பரம் என எல்லா விளை யாட்டுக்களையும் கற்றுத்தந்தது அந்த ஊர்தான்.

என் தந்தைக்கு அரசாங்க உத்தியோகம். அடிக்கடி இடம் மாற்றம் வந்துகொண்டே இருக்கும். ஒரு முறை, விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த என்னை அழைத்துக்கொண்டு ஆய்க்குடியில் போய் இறங்கினார் அப்பா. ”இனி மூணு வருஷத்துக்கு இந்த ஊர்தான்!” என்று சொல்ல, எனக்கு பழைய நண்பர்களிடம் விடை பெறக்கூட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்.

நாற்றங்காலில் இருந்து பிடுங்கப்பட்டு வயலில் நடப்பட்ட நாற்று, முதல் நாளில் வாடி, அடுத்த நாள் துளிர்க்குமே… அது போல, ஒரே வாரத்தில் ஆய்க்குடியுடன் ஐக்கியமாகிவிட்டேன்.

கிராமத்துக்கும் பெரிய கிராமத்துக்கும் இடைப்பட்ட ஊர் ஆய்க்குடி. ஒரு சிவன் கோயில், ஒரு முருகன் கோயில், தெளிவாக ஓடும் ஒரு நதி, ஒரு பள்ளிக்கூடம், ஓர் ஆஸ்பத்திரி எல்லாம் இருந்தாலும், கிராமத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது டூரிங் டாக்கீஸ். திருநெல்வேலியில் ரிலீஸாகி, செகண்ட் ரிலீஸாக தென்காசிக்கு வந்து ஓடித் தேய்ந்துபோன படங்களைத்தான் திரையிடுவார்கள். என்றாலும், அந்த ஊருக்கு டூரிங் டாக்கீஸ் தனி கம்பீரத்தைத் தந்தது.

ஆய்க்குடிக்குப் போய்ச் சேர்ந்த அன்றைக்கே அந்த டூரிங் டாக்கீஸில் படத்துக்கு கூட்டிப் போனார் அப்பா. கூடவே அம்மா, அப்பாவின் அத்தை, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் என்று பாதி கொட்டகைக்கு நாங்களே இருந்தோம்.

வசதியான வீடு பார்த்துக்கொள்ளும் வரையில், தன் வீட்டில் இருக்கச் சொல்லியிருந்தாள் அப்பாவின் அத்தை, சோளச் சோறு, கேழ்வரகுக் கூழ், அகத்திக் கீரை என்று நான் பார்த்தறியாத உணவுப் பண்டங்களை ருசித்தது அங்கேதான்.

அத்தைக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது என்று அப்பா வேலை நேரம் போக, மீதி நேரமெல்லாம் தீவிரமாக வீடு தேடினார். அவருடைய சிரமத்தைக் குறைக்க, என் பங்குக்கு நானும் வீடு தேடினேன். என் வகுப்புத் தோழன் ஒரு வீடு பற்றிச் சொல்ல, அதை என் அப்பாவிடம் சொன்னேன். அன்றைக்குச் சாயங்காலமே இருவரும் அந்த வீட்டைப் பார்க்கப் போனோம்.

ஒற்றை அறை, அதை ஒட்டி ஒரு சமையலறை, அதைத் தாண்டி சந்து வழியாகச் கொஞ்ச தூரம் நடந்தால் டாய்லெட், பாத்ரூம் என்று மிகவும் சிறிய வீடு. பார்த்ததும் எனக்கே பிடிக்கவில்லை.

”நம்ம ஊரில் கிடக்கும் உன் கட்டிலைக் கொண்டு வந்தால், இங்கே போட இடமிருக்காது. வேறு வீடு பார்க்கலாம்” என்று அப்பா சொல்லிக்கொண்டே வர, திரும்பி நடந்தோம்.

”அண்ணாச்சி, வீடு தேடுதியளோ..?” என்று ஒரு குரல் எங்களைத் தடுத்து நிறுத்தியது. வைக்கோல் போரே தலையாக எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு மனிதர், எங்கள் பதிலை எதிர்பார்க்காமல், ”எங்க அண்ணன் ஒரு வீடு கட்டியிருக்காரு. வாடகைக் குதான் கொடுக்கணும்னு சொல் லிட்டிருந்தாரு. பாருங்களேன்!” என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

அப்படித்தான் கந்தன் சித்தப்பா எனக்கு அறிமுகமானார். இப்போ தும் கந்தன் சித்தப்பாவை நினைத் தால், வைக்கோல் போர் தலையராக அவர் நின்ற காட்சிதான் மனதில் தோன்றும்.

”என்ன அண்ணாச்சி..! ஆறாங்கிளாஸ் படிக்கும் பையன் கூப்பிட்டான்னு இத்தாம் பெரிய ஆள் வீடு பாக்க வந்திருக்கியளே..!” என்று பேசியபடி, கிடுகிடுவென்று முன்னால் நடந்தார்.

வீடு அமைப்பாகவே இருந்தது.. நாலு பத்தி வீடு. எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. புதிய வீடு என்பதால், மனசுக்கும் சந்தோஷமாக இருந்தது.

”எல்லாம் சரிதான்… எதுத்தாப்புல மாடு கட்டியிருக்காங்களே..” என்றாள் அம்மா.

”மதினி..! நீங்க ஏன் கவலைப்படுதிய? நீங்க குடி வார அன் னைக்கு மாடுகளை என் தொழுவுல கட்டிக்கிருதேன்” என்று உரிமையாக உறவு கொண்டாடத் தொடங்கினார் கந்தன் சித்தப்பா.

”பால் காய்ச்சணும்னு கடைக்கு கிடைக்கு பால் வாங்கப் போயிடாதீய. நம்ம வீட்லயே நாலு பால் மாடு நிக்கு” என்ற கந்தன் சித்தப்பா கையோடு ஒரு சொம்பு பாலையும் கொண்டுவந்து கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் புது பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் எடுத்துக்கொண்டு வந்தாள் முருகம்மா சித்தி.

”பால் காய்ச்சுற வீட்டுக்கு கம்மா வர முடியுமா.. அதான், கடை திறந்ததும் இதெல்லாம் வாங்கிட்டு ஓடியாறேன்” என்ற முருகம்மா சித்தி, பால் காய்ச்சிய பாத்திரம், தம்ளர்களை விளக்கிக் கழுவி ஓரமாக அடுக்கிவைத்தாள்.

நாங்கள் குடிவந்த காம்பவுண்டிலேயே அடுத்த வீடுதான் கந்தன் சித்தப்பா வீடு. அவர் வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தது என் விளையாட்டுக்குத் தோதாக இருந்தது.

”ஏடே! இன்னிக்கு எங்கூட குளிக்க வாரியா? மதினி, இவனையும் வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று வராண்டாவில் கிடந்த துண்டை எடுத்து எனக்கு மாலையாகப் போட்டு அழைத்துக் கொண்டு போனார்.

கந்தன் சித்தப்பாவின் வயற்காட்டில் எனக்குப் பிடித்தது அந்த வட்டக் கிணறுதான். அவர் தந்த செவ்விளநியை விட, கண்ணை நிறைத்த நெல்வயலைவிட, மீன்கள் துள்ளும் கிணறுதான் கவர்ச்சியாக இருந்தது.

”நம்ம வயல் எது சித்தப்பா?” என்றேன். பழகிய பத்தே நாட்களில் எனக்கும் அந்த உரிமை வந்துவிட்டது.

”இந்த ஒரு கிணத்துப் பாசனமும் நம்ம வயல்தாண்டே. இன்னைக்கு கிணத்தைத் தூர் அள்ளப் போறோம். மோட்டார்ல ஆசை தீரக் குளிப்பியேனுதான் கூட்டிட்டு வந்தேன். சாயங்காலம்தான் வீட்டுக்கு” என்று டவுசரை அவிழ்த்துவிட்டார். இரண்டு மோட்டார் பம்புகள் ஓடத் தொடங்கின. இரண்டிலும் ஓடி ஒடிக் குளித்தேன். வேலையாட்களை விரட்டிக்கொண்டே தென்னந் தோப்பின் நடுவே பாத்தி கட்டித் தண்ணீரை நிரப்பினார்.

மூன்று மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு கிணறு தரை தெரியவும், முருகம்மா சித்தி பெரிய தலைச்சுமையோடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

”அதுக்குள்ள வத்தவெச்சுட்டியளாக்கும்! நான் கொஞ்சம் துணி சோப்பு போட்டுறலாம்னு பார்த்தேன்” என்று சித்தி சொல்ல,

”அடி இவளே! வயலுக்குப் பாயுற தண்ணியில சோப்பு போடப் போறியா..? அழுக்கைத் தூக்கிக்கிட்டு ஆத்துக்குப் போக வேண்டியதுதானே..?” என்றபடி அவள் தலைச்சுமையை இறக்கினார் சித்தப்பா.

”அண்ணாச்சி! விறால் எல்லாத்தையும் புடிச்சிரவா..?” என்று கிணற்றுக்குள் இருந்து குரல் வர, ”எலேய்! அடுத்தாப்புல மீன் திங்க ஆசையில்லையா? எண்ணி பத்து விறாலுக்கு மேல புடிக்கப்படாது” என்று கிணற்று விளிம்பில் நின்று கத்தினார் சித்தப்பா.

கிணற்றுக்குள் இருந்து கேட்ட குரலும், பதிலுக்கு சித்தப்பா பேசியதன் எதிரொலியும் வித்தியாசமாகப் பட, கிணற்றை எட்டிப் பார்த்தேன். ஈர வாசனை ஜிலீர் என்று முகத்தை வருடியது.

”உள்ளே இறங்கிப் பாக்கியா..? உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மாதிரி ஜில்லுனு இருக்கும்!” என்று சித்தப்பா என் இடுப்பில் கயிற்றைக் கட்டி உள்ளே இறக்கினார்.

ஈரம் கசியும் ஊற்றுகளும், பாசி படிந்த சுவர்களும் அடிவயிற்றைப் பயமாகக் கவ்விப்பிடிக்க, மெதுவாகக் கிணற்றுக்குள் இறங்கினேன். இறங்கிய நொடியில் பயம் போய்விட, ஓடி ஓடி மீன் பிடித்தேன்.

என்னை இறக்கிய கயிற்றில் மீன்களைப் போட்ட வாளியைக் கட்டிவிட, சரசரவென்று மேலே இழுத்த சித்தப்பா, பத்து நிமிட இடைவெளியில் வாளியைக் கீழே இறக்கி என்னை அதில் உட்காரச் சொல்லி, மேலே தூக்கிவிட்டார்.

பத்து நிமிடம் பாதாள உலகத்தைப் பார்த்துவிட்டு வந்தது போலப் பரவசமாக இருந்தது. சித்தப்பா கட்டி வைத்திருந்த பாத்தியில் நீந்திக்கொண்டு இருந்த விறால்களை ஒவ்வொன்றாகப் பிடித்து உரசி, கழுவி நறுக்கத் தொடங்கினாள் சித்தி.

என்னை அழைத்துக் கொண்டு வயலைச் சுற்றி வந்த சித்தப்பா, ”ஏய்.. என்னப்பா தண்ணி அடைக்கீங்க..? கீழக் கடைசியில ஒரு துண்டு காஞ்சு கிடக்கு. அடுத்த மோட்டாருல முதல் தண்ணியை இங்க திருப்புங்க!” என்று குரல் கொடுத்தார்.

வயலைச் சுற்றிய அரை மணி நேரத்தில் மணக்க மணக்க மீன் குழம்பு தயாராகி இருந்தது. ”கை காலைக் கழுவிட்டு உட்காருடே..!” என்று சொல்லிவிட்டு, வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து இலை அறுத்துக்கொண்டுவந்தார் சித்தப்பா.

”அவனுக்குக் காட்டுக்குள்ள எல போட்டுச் சாப்பிடத் தெரியாதுனு தட்டு கொண்டாந்திருக்கேன். நீங்க முதல் சோறு சுடுசோறு வாங்கிட்டுப் பிறகு பழையது வாங்குதியளா..?” என்றபடி, தட்டில் சோற்றைத் தோண்டினாள் சித்தி.

சித்தப்பா, ”எனக்குப் பழையது போதும்” என்று சொல்லிக்கொண்டே தரையில் பள்ளம் பறித்து, அதில் வாழை இலையைப் பதித்தார். சித்தி பழையதும் நீச்சத் தண்ணியுமாக அதில் சாப்பாட்டைப் போட்டு, மீன் துண்டைத் தனியாக ஒரு இலையில் எடுத்துவைத்தாள்.

”சித்தி.. எனக்கும் பழையது. அதுவும் இலை போட்டு” என்றேன்.

”ஆத்தி.. கிணத்து தண்ணியில இந்த ஆட்டம் ஆடியிருக்கே! அதுக்கு மேல பழையது தின்னா அக்காளுக்கு யாரு பதில் சொல்லுறது? சித்தப்பா கணக்கா இலை வேணா போட்டுக்கோ!” என்று எனக்குப் பள்ளம் பறித்து இலைபோட்டு சுடுசோறு பரிமாறினாள் சித்தி.

”சாப்பாடு மட்டும்தான் சித்தப்பா மாதிரினு ஆசையா, இல்லை சம்சாரி ஆகணும்னும் ஆசையா?” என்று குறுஞ் சிரிப்போடு கேட்டார் சித்தப்பா.

வயல்களிடையே அவர் கம்பீரமாக நடைபோடுவதையும், வீடெல்லாம் நிறைந்து கிடக்கும் நெல் தானியங்களையும், மாடுகளுக்குத் தீவனமாக வைக்கோல் சுமப்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் குறுஞ்சிரிப்போடு வாழும் அவர் இயல்பையும் பார்த்தபோது சம்சாரி (விவசாயி) ஆகவும் ஆசை வந்தது.

ஆனால், யதார்த்தம் என்னை கம்ப்யூட்டர் இன்ஜினீயராக்கி, சென்னையில் இருந்துகொண்டு அமெரிக்காக்காரனின் பிரச்னைக்குத் தீர்வு சொல்ல வைத்துவிட்டது.

தென்காசியில் ரயிலைவிட்டு இறங்கி, குளித்துத் தயாராகி ஆய்க்குடிக்கு புறப்பட்டேன். கதிரேசன் தாலி கட்டியதும் கந்தன் சித்தப்பா வீட்டுக்குப் போய்விட வேண்டும். இப்போதாவது வீடு, குடும்பம் என்று இருக்கிறாரோ… இல்லை மாடு, வயல் என்று அலைகிறாரோ! என்னைப் பார்த்தால் அதிர்ந்து விடுவார். முருகம்மா சித்திக்கு என்னை அடையாளம் தெரியுமா என்று பார்க்கலாம்!

மண்டபத்தில் நுழைந்தவுடன், ”மாப்பிள்ளையும் பொண்ணும் தாலி கட்டக் கோயிலுக்குப் போயிருக்காங்க. அவங்க வர்றதுக்குள் டிபன் சாப்பிட்டுடலாமே!” என்று ஒருவர் உபசரித்து டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார். இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!

– 20th பெப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *