திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கர ஐயரின் திருமணச் சமையலைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர் எது செய்து பரிமாறினாலும் அவ்வளவு சுவை. அவர் சமையல் செய்தால், திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும் காலை டிபன், மதியம் சாப்பாடு, மாலை டிபன், இரவுச் சாப்பாடு என ஆற அமர அமர்ந்து அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவார்கள். அது என்னவோ அவரின் கை மணம் அப்படி.
சமையலைத் தவிர சில பிரத்தியேக வகைகளை அவரைச் செய்யச்சொல்லி, அவைகளை நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு தங்களையே மறந்து லயித்து சுவைப்பவர்கள் ஏராளம். அவர் செய்யும் அக்கார வடசலும், அடை அவியலும், பால் போளியும் பிரசித்தம்.
நல்ல சமையலுக்கு சிறந்த சுவையுண்டு என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அனால் அதற்கு நல்ல சுவையுடன் கூடிய மணமும் உண்டு சங்கர ஐயரின் சமையலில். அவர் செய்து எது சாப்பிட்டாலும் அடுத்த சிலமணிநேரங்களுக்கு வேறு எதுவும் நமக்கு சாப்பிடத் தோன்றாது. நம் நாக்கு வேறு எதையும் சுவைக்காது மறுத்துவிடும்.
ஒருமுறை கல்லிடைக்குறிச்சி பண்ணையார் தன் மகளின் திருமணம் முடிந்து, மறுநாள் சம்பந்திகளுக்கு கட்டுசாதக் கூடை கொடுத்து அனுப்பும்போது, மைக்கில் சங்கர ஐயரின் பிரமாதமான சமையலுக்கு நன்றி சொல்லிவிட்டு, “தான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால் சங்கர ஐயரின் சமையலில் சொக்கிப்போய் அவரைத் திருமணம் செய்துகொண்டு, அவரின் காலடியிலேயே என் வாழ்நாளை கழிப்பேன்” என்று புகழ்ந்தபோது ஐயர் அழுது விட்டார்.
இன்னொருமுறை நெல்லை ஜங்க்ஷன் மனகாவலன் பிள்ளை, ஐயர் செய்து கொடுத்த டிபன், காப்பியில் மயங்கி, தன்னிடமிருந்த பல காராம்பசுக்களில் ஒரு பசுவை தானமாக கொடுத்தார்.
எழுபது வயது பாளையங்கோட்டை ஆவுடையப்பன் பிள்ளை, “சங்கர ஐயர் மருந்து மாத்திரைகளை தொட்டுக் கொடுத்தாலும் அவைகள் சுவையாக இருக்கும்” என்றார்.
சங்கர ஐயரும் தான் செய்யும் எதையும் ஒரு முழு ஈடுபாட்டுடன் செய்வார். தன் சமையலைச் சாப்பிட்டுவிட்டு அதைப்பற்றி அடுத்தவர்கள் வயிறார, வாயார புகழும்போது, இந்த உலகத்தையே தான் ஜெயித்துவிட்ட மாதிரி ஒரு பெருமை அவர் முகத்தில் தாண்டவமாடும்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்.
அவருக்கு தற்போது வயது ஐம்பத்தி எட்டு. கடந்த முப்பது வருடங்களாக அவர் கல்யாணச் சமையல்களை கான்ட்ராக்ட் எடுத்து செய்கிறார். அவரது ஒரே மகன் நளன்சங்கர் தற்போது +2 முடித்துவிட்டான். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரன். எதையும் சட்டென புரிந்துக்கொண்டு அதை திறம்படச் செய்பவன். சமையல்கலை மீது உள்ள பற்றினால்தான் தன் ஒரே மகனுக்கு நளன் என்று பெயர் வைத்தார் ஐயர்.
அன்று ஒரு பிரபல கல்யாணத்தில் சமைத்து, கடைசி பந்தியில் சாப்பிட்டுவிட்டு, பதை பதைக்கிற வெய்யிலில் மிகவும் களைப்புடன் வீட்டுக்கு திரும்பி வந்தார் ஐயர். அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர், மனைவியிடம், “கோமு ஒருவாய் தூத்தம் கொடேன்” என்றார்.
அவள் தண்ணீர் கொண்டு வந்ததும், “இந்த சமையல்கார பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை ஒரு பெரிய இஞ்சினியரா ஆக்கணும்…எப்படியாவது அவன கஷ்டப்பட்டு படிக்க வச்சிரணும்” என்றார்.
“ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்… இப்படி அடுப்புல தினம் வெந்து சாகிற பொழப்பு உங்க பரம்பரைல உங்களோட முடியட்டும், என்னோட மாட்டுப் பெண்ணாவது ஒரு இஞ்சினியர் பொண்டாட்டியா இருக்கட்டும்.”
நாட்கள் ஓடின. மகன் நளன் +2 வில் மாவட்டத்திலேயே மிகச் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகியிருந்தான்.
“ஏம்பா எந்தக் காலேஜ்ல இஞ்சினியரிங் சேர்ந்து படிக்கப்போறே?” என்று ஆர்வமுடன் மகனிடம் கேட்டார் சங்கர ஐயர்.
“இல்லப்பா, நான் இஞ்சினியரிங் படிக்க விரும்பல.”
ஆடிப்போனார் ஐயர். மகன் தன் கனவை சிதைத்து விடுவானோ என்று பதறியது அவர் மனம்.
“நீ இஞ்சினியரிங் படிக்கனும்கறது அப்பாவோட நெடுநாளைய கனவுப்பா…
அதை கலைச்சுடாதடா கண்ணா.” வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவினார்.
“அப்பா இஞ்சினியரிங் படிப்பு ஒரு காலத்துல பெரிய படிப்புதான், நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்ப தெருவுக்கு தெரு இஞ்சினியரிங் காலேஜ் மலிஞ்சு போச்சு. அங்க படிச்சவங்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பா ஆயிடுச்சுப்பா. அத படிச்சேன்னா நானும் வீட்லதான் மோட்டு வளையப் பாத்துகிட்டு சும்மாதான் இருக்கணும்.”
“சரி வேற என்ன படிக்கலாம்னு இருக்க?”
“கேட்டரிங் டெக்னாலஜி.”
தூக்கி வாரிப்போட்டது சங்கர ஐயருக்கு.
“ஏம்பா, இந்த சமையல் வேலை என்னோட போகட்டும்னுதான நானும் உங்க அம்மாவும் துடிக்கிறோம். இப்ப நீ என்னடான்னா வாழையடி வாழையா இந்தப் பொழைப்புக்கே வரணும்னு சொல்றியே?”
“அப்பா சமையல்னா கேவலமாப்பா? ஊருல கேட்டுப்பாருங்க சங்கர ஐயர் சமையலைப் பத்தி. உங்க சமையல்னா ஊர் சனம் ஒம்பது பந்தி கழிஞ்சும் காத்திருந்து சாப்பிட்டுவிட்டு போகும். வாய்க்கு ருசியா சமைக்க உங்களைப்போல ஒண்ணு ரெண்டு பேர்தாம்ப்பா இந்த நெல்லை மாவட்டத்துல இருக்காங்க…உங்க சமையல்கலை உங்களோட அழிஞ்சு போயிடக் கூடாது. அதுக்கு வாரிசா நான்தான் வரணும், அதுக்காகத்தான் கேட்டரிங் டெக் படிக்க ஆசைப் படுகிறேன்.”
“…………………….”
“என்னோட ஏட்டுப் படிப்போட, உங்க அனுபவ பாடமும் சேர்ந்தா, நாட்டிலேயே நான் பெரிய சமையல் கலைஞனா ஆயிடுவேன். ஆயிரம் இஞ்சினியர்கள் எளிதா உருவாகிடுவாங்க, ஆனா வாய்க்கு ருசியா, மணமா சமைக்க ஒரு சங்கர ஐயர் உருவாகிறது ரொம்ப கஷ்டம்பா.”
“நான் ஒரு சமையல்கலை சங்கர ஐயராகத்தான் உருவாக விரும்புகிறேன்.”
கேட்டரிங் படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை தந்தையின் பாதங்களில் வைத்து வணங்கினான் நளன்.
“ரொம்ப நல்லா வருவப்பா.”
கண்ணீர் மல்க மகனை ஆசீர்வதித்தார் ஐயர்.
உடனே மெரிட் ஸ்காலர்ஷிப்பில் ஒரு புகழ்பெற்ற கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்தான் நளன். அதன்பிறகு மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?
ஐந்தே வருடங்கள்… நளனின் சீரிய முயற்சியால், இன்று தமிழகத்தில் சிறந்து விளங்கும் பிரபல ‘சங்கர்பவன்’ தொடர் ஹோட்டல்களுக்கு சங்கர ஐயர்தான் முதலாளி. ‘சங்கர்பவன்’ தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் சக்கைப்போடு போடுகிறது. அவ்வப்போது அதன் முதலாளி சங்கர ஐயர், மனைவி கோமதி, மகன் நளனுடன் சந்தோஷமாக தன் வெள்ளைநிற பென்ஸ்காரில் அதன் கிளைகளுக்கு நேரில் சென்று அடிக்கடி வலம் வருகிறார்.
எதைச் செய்தாலும் அதை நேர்மையாக, அதீத முனைப்புடன் செய்தால் வெற்றியின் உச்சம் நிச்சயம் என்பதை நளன் நிரூபித்துவிட்டான்.
அடையாறு ஆனந்தபவன் மற்றும் சங்கர்பவன் ஆகிய இரண்டுக்கும்தான் தற்போது ஆரோக்கியமான தொழில் ரீதியான போட்டியே.