சந்தோஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 6,446 
 
 

முன்னையனுக்கு எட்டு ஒம்பது வயசிருக்கும். தன் தகப்பனாருடைய சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு, வேதக் கோயில் சாமியாரின் அங்கி மாதிரி பெரிசாய் இருந்தது. எண்ணெய் அறியாத செம்பட்டை ரோமம் கொண்ட பரட்டைத் தலை. அந்தக் தலையின் மேல் ஒரு கோழிக் குஞ்சுவை வைத்துக்கொண்டு அந்தக் கிராமத்தின் இடுக்காட்டமுள்ள ஒரு தெருவில் அந்தக் கடேசிக்கும் இந்தக் கடேசிக்குமாக “லக்கோ லக்கோ லக்கோ லக்கோ” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்துகொண்டிருந்தான்.

லக்கோ என்ற சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்ற அவனுக்கும் தெரியாது; யாருக்கும் தெரியாது! அது, அவனால் சந்தோஷம் தாள முடியாததினால் அவனை அறியாமல் அவன் வாயிலிருந்து வந்த ஒரு வார்த்தை. அந்த மாதிரியான வார்த்தைகளுக்குத் தாங்க முடியாத சந்தோஷம் என்பதைத் தவிர வேறு அர்த்தம் கிடையாது.

அவன் தலையில் வைத்துக் கொண்டிருந்த அந்தக் கோழிக்குஞ்சு ரொம்ப அழகாக இருந்தது. பிரகாசமான ஒரு அரக்குக் கலரில் கருப்புக் கோடுகளும் வெள்ளைப் புள்ளிகளுமாக, பார்க்கப் பிரியமாக இருந்தது. அதனுடைய கண்களின் பின்பக்கத்தில் மிளகு அளவில் ஒரு சின்ன வட்ட வடிவக் கோடு அதன் அழகை இன்னும் அதிகப்படுத்தியது.

முன்னையனுடைய தகப்பன் அந்தச் ‘சாதிக் கோழி’க் குஞ்சுவுக்காகத் “தபஸ்’ இருந்து கொண்டுவந்த மாதிரி மேகாட்டில் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்து இரண்டு ”சாதிக் கோழி” முட்டை களுக்கு நடையாய் நடந்து எத்தனையோ நாட்கள் காத்திருந்து கொண்டு வந்து தனது அடைக் கோழியில் வைத்துப் பொரிக்கப்பட்ட குஞ்சு அது.

வீட்டில் யாரும் இல்லை. எல்லாரும் பருத்திக் காட்டுக்குப் பருத்தி எடுக்கப் போயிருந்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. தூளியில் தூங்கும் சிறு குழந்தையைப் பார்த்துக்கொள்ள அவன் மட்டும் இருந்தான். கோழிக் குஞ்சுவை வைத்துக்கொண்டு இப்படி விளையாடிக்கொண்டிருக்கிறான்.

முன்னையனுக்குக் குஷி பிடிபடவில்லை. கோழிக் குஞ்சுவுக்குப் பயம். அது அவனது தலைமயிற்றைக் கால் விரல்களால் பற்றிக்கொண்டது. அவனும் அதனுடைய கால் விரல்களைத் தலையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு லக்கோ லக்கோ என்று சொல்லிக்கொண்டு மறுக்கி மறுக்கி ஓடிவந்தான்.

அந்த வேளையில் அங்கே வந்த மூக்கண் இந்தக் காட்சியைப் பார்த்தான். அவன் மனசையும் அது தொட்டது. சிரித்துக்கொண்டே பார்த்தபடி நின்றான்.

மூக்கனுடைய சொந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. கடவுள் அவனை அவன் அம்மாவின் வயிற்றுக்குள் அனுப்புமுன் அப்பொழுதுதான் அவன் செய்து முடிக்கப்பட்டிருந்தான். இன்னும் சரியாகக்கூடக் காயவில்லை. பச்சை மண்ணாக இருந்தான். அப்பொழுது அவன் மரியாதையில்லாமல் கடவுளைப் பார்த்துச் சிரித்தானாம். அவருக்குக் கோவம் வந்துவிட்டது. லேசாக மூக்காந் தண்டில் ஒரு இடி வைத்தாராம். உடனே மூக்கின்மேல் மத்தியில் பள்ளம் விழுந்து விட்டதாம். மூக்கன் அப்படியே பிறந்தான். பிறந்த உடனேயே அவனுக்கு அந்தப் பேர் நிலைத்துவிட்டது. இப்பொழுதுகூட அவன் யாரையாவது பார்த்துச் சிரித்தாலும் மூக்காந்தண்டில் ஒரு குத்து விடணும் போலத்தான் இருக்கும்! இந்த அழகில் அவனுக்கு முகம் நிறையச் செம்பட்டைமயிர், கிருதா மீசை வேறு.

மூக்கன் மீசைக்குள்ளேயே சிரித்துக் கொண்டு முன்னையனைத் தன் அருகே இழுத்து நிறுத்திப் பிரியத்தோடும் அதிசயத்தோடும் “ஏது இந்தக் கோழிக் குஞ்சு? ரொம்ப நல்லா இருக்கே!” என்று கேட்டான்.

முன்னையன் சந்தோஷ மிகுதியால் “இப்படிக்கூடி இந்தக் கோழிக் குஞ்சை ஒரு பெரிய்ய பிறாந்து தூக்கீட்டுப் போச்சி. நான் அதைத் துரத்திக்கிட்டே ஓடினேன். அது கீழே போட்டுட்டுப் போயிருச்சி” என்று சொன்னான்.

“ஐய்யோ இது என் குஞ்சு மாதிரி இருக்கே; இந்தக் குஞ்சைத் தேடித்தான் நான் அலையுதேன். பிறாந்தா தூக்கீட்டுப் போனது; நீ நல்லாப் பாத்தியா?” என்று அவனும் அந்தக் கோழிக் குஞ்சைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு பொய் சொன்னான்.

“கண்ணாணை சொல்லுதேன். செத்த மிந்தி தான் தூக்கீட்டுப் போனது. எம்புட்டு ஒசரம் அந்தப் பிறாந்து பறந்ததுண்ணு நினைக்கே! கல்லைக் கொண் டியும் கட்டியைக் கொண்டியும் எறிஞ்சேன். ஒரு கல்லு அதந்தலையில் உரசிக்கிட்டுப் போனது. ‘சரி, இவன் இனி விடாமாட்டா’ண்ணு கீழே போட்டுட்டது. அப்பிடியே பிடிச்சிக்கிட்டேன்” என்று இறைத்துக் கொண்டே சொன்னான்.

மூக்கன் குஞ்சை வாங்கிப் பார்த்தான். அது பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தது. இடது கையில் அதை வைத்துக் கொண்டு வலது கையால் பிரியத்தோடு தடவிவிட்டுக் கொண்டே, யாராவது வருகிறார்களா என்று நோட்டப்பார்வை பார்த்தான்.

முன்னையனுக்கும், யாராவது வருவதற்கு முன்னால் அதை அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து “இது ஓங்குஞ்சா, சரி; கொண்டு போ;” என்று சொல்லி மூக்கனுடைய கைகளைக் குஞ்சோடு சேர்த்துத் தள்ளினான். அது, சீக்கிரம் கொண்டு போய்விடு என்று சொல்லுவது போலிருந்தது.

மூக்கன் மடியில் குஞ்சைப் பதனமாகக் கட்டிக் கொண்டு புறப்பட்டான்.

முன்னையனுக்கு இப்பொழுதுதான் தன்னுடைய சந்தோஷம் நிறைவு பெற்றதாகப் பட்டது.

மூக்கனுக்குத் தொழிலே கோழி பிடிப்பதுதான். இதைத் தெரிந்து முன்னையன் அவனுக்குக் கொடுக்க வில்லை. யார் வந்து அந்தச் சமயத்தில் கேட்டிருந்தாலும் அவன் கொடுத்திருப்பான்.

மூக்கன் வேலைக்கே போகமாட்டான். பேருக்கு ஒன்றிரண்டு கோழிகளை விலைக்கு வாங்குகிறது மாதிரி வாங்கிக் கோழிக் கூடையில் போட்டு மூடிக் கோவில் பட்டிக்குக் கொண்டு போய் விற்பான். ஆனால் அவன் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு கள்ளத்தனமாகத் திருட்டுக் கோழிகளைப் பிடித்து விற்றுச் சம்பாதிப்ப தையே தொழிலாகக் கொண்டிருந்தான்.

கிராமத்தில் மக்கள் காட்டு வேலைகளுக்குப் போன பிறகுதான் மூக்கன் எழுந்திருந்து தன் குடிசையைவிட்டே வெளியே வருவான். ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகவும் கோழிகள் குப்பையைக் கிளறிக் கொண்டு தனித்து மேயும் இடமாகவும் பார்த்துத் தன்னுடைய வேட்டையைத் தொடங்குவான்.

ஒரு வெங்காயத்தில் முள்ளைக் குத்திப் போடுவான். அதற்கு முன்பாக முள்ளைக் குத்தாத ஒன்றிரண்டு வெங்காயத்தையும் போடுகிறதுண்டு. முள்ளைக் குத்திய வெங்காயத்தை எறிகிறதிலும் ஒரு சாமர்த்தியம் வேணும். முள், ஒருச்சாய்ந்து அது ஓடிவந்து ஆவலோடு கொத்தும்போது அதன் உள்மேல் அண்ணத்தில் குத்து கிறாப்போல் அமைய வேண்டும். மூக்கனுக்கு இதெல் லாம் சாதாரணம்.

வாய்க்குள் நிரம்பிய வெங்காயமும் குத்திய முள்ளு மாக இருக்கும்போது கோழி, அதிர்ச்சியாலோ அல்லது அபயக்குரல் எழுப்ப முடியாமலோ போய்விடுகிறது. கோழி செயலற்றுப் போய் அப்படியே இருக்கும். ஒரு சிரமமும் இல்லாமல் எடுத்துக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறைத்துக் கொண்டு வந்துவிட வேண்டியது தான். இது பகல் வேடடை.

மூக்கன் ராவேட்டைக்கும் போவான். ராவேட்டைக்கு முள்ளும் வெங்காயமும் வேண்டியதில்லை. ஒரு ஈரத்துணியே போதும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், கோழிகள் நெருக்கமாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து நிற்க வேண்டும். திடீரென்று அதன் மேல் ஈரத்துணியைப் போட்டதும் அது சப்தம் எழுப்புவ தில்லை. அப்படியே சுருட்டிக் கொண்டு வந்துவிட வேண்டியதுதான்.

மூக்கன் அந்தக் குஞ்சைத் தன் குடிசைக்குக் கொண்டு வந்து தண்ணீரும் உணவும் வைத்தான். தாயைக் காணாத குஞ்சு கிய்யா கிய்யா என்று கத்திக் கொண்டே இருந்தது.

மூக்கனின் பெஞ்சாதி மாடத்தி பருத்திக்குப் போய் விட்டு வந்தாள். குடிசைக்கு முன்னாலுள்ள பானையடிக் குப்போய், மாராப்பை மட்டும் நீக்கிவிட்டு ஒரு அரைக்குளிப்பு குளித்து விட்டு வந்தாள். அன்று அவள் ஏழு தரத்துக்குப் பருத்தி எடுத்திருந்தாள். அதுவும், தண்ணீரின் குளுமையும் சேர்ந்து ஒரு கொந்தளிப்பான மன நிலையில் குடிசைக்குள் வந்தாள்.

பொங்கிப் போயிருந்த புருஷனையும் அவன் தீனி வைத்துக் கொண்டிருந்த கோழிக் குஞ்சுவையும் பார்த்தாள். அவனை இடித்துத் தள்ளிவிட்டு அந்த அழகான குஞ்சை ஆச்சரியமும் ஆனந்தமும் பொங்க எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். மனித வெதுவெதுப்பை அனுபவித்த குஞ்சு தன் அனாதரவான நிலை மாறி இனிமைக் குரல் கொடுத்து அவளோடு ஒட்டிக் கொண்டது.

ஏது இது என்று தலையை மட்டும் அசைத்து மூக்கைச் சுரித்துப் புருவத்தை வளைத்துத் தலையாலேயே கேட்டாள்.

“மேலூர் சின்னக் கருப்பன், இது பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மண் எடுத்துக் கொண்டாந்து அடைகாக்க வச்ச குஞ்சு; கட்டாயம் நீ இதை வச்சுக்கிடணும்ன்னு குடுத்தான்!” என்றான்.

அவள், தான் அவனிடம் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக வேண்டி அவன் சொன்ன அந்த வார்த்தைகளை அங்கீகரித்தாள். பிறகு அவள் சொல்லுவாள்,”என் உடன் பிறந்தான் ஒரு சாவல் வச்சிருந்தான். நல்ல பச்சை நிறம். இந்தச் சில்லாவிலேயே அதுக்குச் சோடி கெடையாது. அது, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மண்ணை எடுத்துக்கிட்டு வந்து, நல்ல அக்கினி நட்சத்திரத்திலே அடைகாக்க வச்சிப் பொரிச்சு குஞ்சாக்கும் அது. அதோட கூட வச்ச அம்புட்டு முட்டைகளும் முட்டையாப் போச்சு. அது ஒண்ணுதான் குஞ்சானது. சீமைச் சஜ்ஜு பொஞ்சாதி வந்து ஆயிரம் ரூவாய்க்கு அந்தச் சாவலை ஆசைப்பட்டுக் கேட்டா. தலை ஒசரம் பவுனாக் குவிச்சாலும் நாந் தர முடியாதுண்டு சொல்லீட்டான்,” என்று பொங்குதலாகச் சொன்னாள்.

அவள் சொல்லுகிறது பொய் என்ற மூக்கனுக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும். ஆனால் அதை நிஜம் மாதிரியே நினைத்து இருவரும் ஏற்றுக் கொண்டார்கள்!

இரண்டு மனித வெது வெதுப்பில் மூழ்கித் தனது அடைக்கலக் குரல் முனகலைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பைய நிறுத்தி, கண்களை மூடி அந்த இதமான வெப்பத்தில் ஓய்வு எடுக்க ஆரம்பித்தது அந்த அழகிய சின்னக் கோழிக் குஞ்சு.

(ஜூலை 1972)

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *