சந்திரக் கற்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 2,273 
 
 

குமரநாதன் சோம்பலாய் எழுந்து பாதிக் கண்களைத் திறந்தும் திறக்காமலும் தலையணைக் கடியில் வைத்திருந்த கைக்கடியாரத்தை எடுத்து நேரம் பார்த்த போது மணி ஆறு.

ஆறாகி விட்டதா? விசுக்கென்று எழுந்தவர் அனிச்சையாக “வனஜா” என்றார். இரண்டு நிமிடம் பதில் வராததில் வனஜாவும் குழந்தைகளும் முந்தைய தினம் ஊருக்குப் புறப்பட்டப் போனது ஞாபகம் வந்தது.

அட, வனஜா இல்லை, குழந்தைகளும் இல்லை, வீட்டில் நான் இப்போது தனி…! திடீரென்று உற்சாகமாக இருந்தது.

வெளியே பார்த்தார்.

விடிந்தும் விடியாததுமாய் ஒரு இருட்டு! மழை பெய்து கொண்டிருந்தது. மழையைப் பார்த்ததும் மறுபடி ஒரு உற்சாகம் கிளம்பி வந்தது. போர்வையை உதறி எறிந்து விட்டு எழுந்தார். மூடப்பட்டிருந்த கீழ் இரு ஜன்னல்களையும் அகலத் திறந்து கொக்கிகளை மாட்டினார் தெருவைப் பார்த்தார்.

தூறல் என்றும் சொல்ல முடியாத, கொட்டும் மழை என்றும் சொல்ல முடியாத ஒரு நடுத்தர மழை! தரைமேல் விழுந்து குமிழ் குமிழாய்ப் பூத்து ஒரு நிமிடத்தில் உடைந்து போகும் மழை துளிகள் நூறு …. இருட்டிலே இடைவிடாத ஜரிகையாய்ப் பளபளத்த மழைக் கம்பிகள் நூறு… நூறு நூறாய் அற்புதங்கள்!

மழையே ஒரு மாயப் பிசாசு. மனதை மயக்கி அப்படியே எங்கோ அழைத்துச் சென்று விடும் போல் சுயநினைவின்றி பார்த்துக் கொண்டேயிருந்தார். தூரத்தில் டார்ச் லைட்டும் குடையுமாய் நடந்த ரங்கநாதனை அடையாளம் தெரிந்தது. அலுவலகம் நினைவுக்கு வந்தது.

காலை டிபன் முடித்து ஸ்கூட்டரைத் துடைத்தும் கிளம்பி, எட்டு கி.மீ. பயணம் செய்து அலுவலகம் அடைய வேண்டும். ஐந்து நிமிடத்தில் கம்ப்யூட்டர் அள்ளிக் கொடுத்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க வேண்டும். மெல்ட்டிங் பிட்டின் பின்விளைவுகளைப் பற்றி ஆறுபேராய் ஆராய்ந்து தந்த அறிக்கையின் நியாயங்களைத் தனியாளாய் முடிவு செய்ய வேண்டும். எட்டு மணி அலுவலகத்திற்குக் காலை ஆறு மணியிலிருந்தே திட்டமிட வேண்டும். எம்.டி.யின் தீர்மானத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் வெல்விஷர் நிறுவனத்தின் பரிந்துரை இணைக்கப்பட்டதா என்று அர்த்த ராத்திரி 12 மணிக்கு விழிப்பு வரும் போது யோசிக்க வேண்டும், யோசனை.. யோசிப்பதை நிறுத்த முடியாது, கூடாது. நிறுத்தினால் வகிக்கிற பதவிக்கு ஆபத்து. யோசிப்பதில் அலுப்பில்லாத வேறு ஒருவன் அந்த இடத்துக்கு வருவான்.

ப்ச்…. காலை ஆறு மணிக்கு வெல்விஷரையும் கம்ப்யூட்டர் பேனலையும் நினைக்க நேர்ந்தது கொடுமை! வெளியில் ஒரு உலகம் இருக்கிறது வானமென்றும் மழையென்றும்…

இன்று அலுவலகம் போகாதிருந்தால் என்ன? இந்த நினைப்பு வந்ததுதான் தாமதம்… ஒரு நிமிடத்தில் தோன்றி, தீர்மானமாகி, தீர்மானம் உறுதியான போது சந்தோஷமாக இருந்தது.

ஒரு நாள்…. முத்துப்போல் கிடைத்த இந்த ஒரு நாளை எனக்காகக் செலவழிக்கலாம். வானமும் மழையுமாய் இருக்கும் வெளியுலகத்தில் சராசரி மனிதனாய் சஞ்சரிக்கலாம். வெல்விஷரை நினைக்காமல், பிறந்த நாள் என்று தெரிந்து வாழ்த்துக் சொன்னால் கூட அடுத்த நிமிஷம் சாகப் போகிற மாதிரி முகத்தை வைத்துக் கொள்ளும் முசுட்டு மேலதிகாரியை நினைக்காமல்….

விடுமுறையின் சந்தோஷம் ஏராளமாகி வழிந்தது. மனசை அடக்க முடியவில்லை படுக்கையை உதறிப் போட்டார். போர்வையை மடித்தார்.

குளியலறையில் வெந்நீர் இல்லை. மீண்டும் வனஜா இல்லாதது நினைவுக்கு வந்தது. அவள் இல்லாதது பெரிய சுதந்திரமாய் உணர்த்தியது. அவளை வெறுக்கிறோமா? ச்சே… அது முடியாது. வனஜா இல்லையென்றால் இந்த வீடு இல்லை, நாசூக்காய்ப் பேசுகிற குழந்தைகள் இல்லை, இத்தனை வசதிகள் இல்லை….

அப்புறம் ஏன் இன்று இத்தனை சுதந்திர உணர்வு? பச்சைத் தண்ணீரில் நனைந்த உடம்பைத் துவட்டி, வெடவெடத்துக் கொண்டே வெளியில் வந்தார். மீண்டும் ஜன்னல் ஈர்த்தது. மழைதான் காரணமோ?

துண்டால் நன்கு போர்த்திக் கொண்டு கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தார். மழை கொஞ்சம் குறைந்து சாரலாய் அடித்துக் கொண்டிருந்தது. வெளிச்சம் தூக்கலாய்த் தெரிந்தது. எதிர்ப்புறம் வானவில் ஒன்று, சற்றே வர்ணம் கலங்கலாய் உருவாகியிருந்தது. எப்படி சொல்லி வைத்த மாதிரி நிற அடுக்காய் ஒரு வில் அத்துவானத்தில் தோன்ற முடியும்?

பௌதிகம் சொல்லித் தந்திருக்கிற நிறப்பிரிகை நினைவுக்கு வரவில்லை. வானம் கொஞ்சம் உறுதியாக இருந்திருந்தால் வில் உடைந்து போயிருக்கும். அதுமெத்து மெத்தென்று முதுகைக் காட்டிக் கொண்டு இருப்பதால் தான் இந்த வில் இப்படி வளைந்து சுவாதீனமாய் உட்கார்ந்திருக்கிறது. எத்தனை நேரம் இப்படியே இருக்கும்?

படித்த படிப்புக்கும் பார்க்கிற தொழிலுக்கும் சம்பந்தமேயில்லாமல் வானவில் ஆராய்ச்சி வார்த்தை கோர்வையில் கொண்டு விட்டது. தன்னைப் போல,

“வானவில் காத்திருக்கிறதே!
எந்த ஜனகனது வில் இது?
வானராமன் இதை உடைத்தால்
மேக சீதை மழை மாலை இடுவாளோ….!”

என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். நினைத்து முடித்ததும் தான் அதை ஒரு கவிதையைப் போல உணந்தார். வாழ்நாளிலேயே கவிதைகளை ரசித்துப் படித்ததும் கிடையாது, கவிதை எழுத வேண்டும் என்று நினைத்ததும் கிடையாது. இது என்ன கவிதைதானா? இதை நானேதான் புனைந்தேனா, இல்லை எப்போதோ படித்தது இப்போது நினைவுக்கு வந்திருக்கிறதா?

நினைக்க நினைக்க எல்லாமே புதிராய் இருந்தது. வானத்தையும் மழையையும் பார்த்து யாராவது அலுவலகத்திற்கு மட்டம் போடுவார்களா?

மைனஸ் ஒன்று, மைன்ஸ் இரண்டு, மைனஸ் ஆறு… போதாது… சார்லி மானிட்டர் கிட்டயே நில்லு, ஸ்டீஃபன் கிட்டயிருந்து கேபிள் வந்திருக்கு, இதே வந்திடறேன் – ஐந்து நிமிடம் சாப்பிட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவனுக்கு வானவில்லைப் பார்த்தால் கவிதை தோன்றுமா? நான் நான்தானா, இல்லை இன்று ஏதாவது புது அவதாரம் எடுத்திருக்கிறேனா? எப்படி!

தன்னையே நம்ப முடியாமல் எப்படி, எப்படிகளுடன் கீழே வந்து, வாசல் கதவு திறந்து ஹ’ந்து, பால் பாக்கெட் எடுத்து, பால் காய்ச்சி, காபி தயாரித்து, ஹாலில் வந்து ஹ’ந்துவைப் பிரித்து நிதானமாய்த் தலையங்கம் வாசிக்க ஆரம்பித்தார்.

என்றைக்காவது இத்தனை நிதானமாய் இருந்திருக்கிறேனா? வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டு, ஒட்டத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டு… இந்த நிதானம் சந்தோஷமாக இருந்தது. நிதானப்படுகிறோம் என்பதே பரபரப்பாக இருந்தது. காபியை மெதுவாக விழுங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

எட்டேகால் வரை சோஃபாவை விட்டு அசையவில்லை. நிதானமாய் பேப்பர், அப்புறம் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து, வர இயலாமையைத் தெரிவித்தார்.

ரமணியை அழைத்து பி.ஸி.யில் பதிவு செய்த சொந்த சேகரிப்பை உபயோகப்படுத்திக் கொள்ள சொல்லாமா? ஃபிளாப்பி கண்டுபிடிப்பது எளிது. ஜி.கே.என் – பி.18.

வேண்டாம், ஒரு நாள் குமரநாதன் இல்லாவிட்டால் தொழிற்சாலை இயங்காமல் நின்றுவிடாது. சமாளிப்பார்கள். உன் இந்த ஒரு நாளால் இத்தனை நஷ்டம் என்று நிர்வாகம் ஒன்றுக்குப் பின் எத்தனை பூஜ்யங்கள் நிரப்பினாலும் அது லாபம் தான். நஷ்டம் என்பது பொய். காகிதக் கணிப்பு. இன்றைக்குப் பூரா அலுவலகத்தை நினைக்கவே கூடாது. திஸ் இஸ் தி எண்ட்….

ரிசீவரை எடுத்துக் கீழே வைத்தார். ஊருக்குப் போய்ச் சேர்ந்த விவரம் சொல்ல வனஜா கூப்பிடுவாள். அலுவலகத்திற்கு வரவில்லை என்று தெரிந்ததும் இங்கே கூப்பிடுவாள். கூப்பிடட்டும், இன்று எனக்கு யாரும் தேவையில்லை. நான், இந்த வீடு, மறுபடி நான், அவ்வளவு தான்.

சமையலறைக்குப் போய் ஃபிரிட்ஜை ஆராய்ந்தார். மாவு எடுத்து தோசை வார்த்து ஹாட்பேக்கில் வைத்தார். மிக்ஸியில் தேங்காய்ச் சட்னி அரைத்தார். டைனிங் டேபிளில் வைத்து மிக நிதானமாயச் சாப்பிட்டார், சிரத்தையாய்ப் பாத்திரங்களைக் கழுவி வைத்தார்.

தெருக்கோடி வரை நடந்து விட்டு வரலாமா? வேண்டாம். தெரிந்தவர்கள் பார்த்தால் புருவத்தை உயர்த்துவார்கள். நாளைக்கு வனஜாவிடமும் சொல்லலாம் அனாவசியம்.

வெளியே மழை நின்றிருந்தது. ஆனாலும் மசமசப்பு தீரவில்லை. காலை பத்தரை மணி என்று நம்ப முடியாது. ஜன்னல்கள் திறந்திருந்தாலும் வீட்டுக்குள் இருட்டாகத்தான் இருந்தது. நிசப்தமாக இருந்தது.

என்ன செய்யலாம்? டிக்ஷனரி பார்க்கலாம். டைஜஸ்ட் படிக்கலாம்…..

இல்லை, அதெல்லாம் அப்புறம்.. இப்போது சுறுசுறுப்பாக ஏதாவது செய்யலாம். ஒட்டடை அடிக்கலாமா?

உயரம் போதாத இடங்களில் டேபிள் சேர்கள் இழுக்கப்பட்டு, தரைவிரிப்பு ஆங்காங்கே மடிக்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் அறை அமைப்பே மாறிப் போனது. நிதானமாயக் குப்பையைச் சேகரித்த போது, வாய் தன்னைப் போல “பொன்னரை நாணோடு மாணிக்கக் கிண்கிணி தன்னரையாட, தனிச் சுட்டி தாழ்ந்தாட…” என்று ராகம் பாடியது. வார்த்தைகள் ராகம் பெறப்பெற கம்பை அப்படியே போட்டு விட்டு சோஃபாவில் சாய்ந்தார்.

நான் யார்? செம்மண் புழுதியில் ஆடிக் கொண்டு, பாசுரங்கள் பாடிக் கொண்டு வளர்ந்த காலங்கள் முடிந்துதான் போயிற்றா? மனசுக்குள் பதிந்திருக்கும் பிரபந்தங்கள் அப்படியே மறைந்துதான் போய் விட்டனவா? மெஷின்களும் ஜெனரேட்டர்களும் என் நினைவுக்குத் திரை போட்டு விட்டனவா? வளர்ந்து வசதிகள் பெற்றால் பழசு இல்லையென்றாகி விடுமா?

ஒருநாள் தனிமையே என்னைக் கிளறி விட்டுவிட்டதே! மாமா, எப்படி இந்த வயசில் யாருமில்லாமல் தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

யாருமில்லையா என்ன ஒரு பொய்! பெற்ற வளர்த்த மகன்கள், எடுத்து வளர்த்த தங்கை மகன், மகள்… எத்தனை பேர் இருக்கிறோம்? ஏன் யாருக்குமே இரக்கமில்லாமல் போய் விட்டது? ஓடுவதையே வாழ்க்கையாக்கிக் கொண்டோம், திரும்பிப் பார்த்தால் நீங்கள் இருப்பீர்களா?

தலையை சோஃபாவில் சரித்துக் கொண்டார். கண்ணீர் பொங்கி கன்னங்களில் வழிந்தது. என்றுமில்லாமல் மாமாவின் நினைவு இன்று வதைத்தது. பிறந்த வளர்ந்த கிராமமும், உலகம் சொல்லித் தந்த மாமாவும் அந்நியமாய்ப் போய் விட்டார்கள். அடுத்த தெருவிலிருக்கும் மாமா வீடே கதியென்று கிடந்ததும், திவ்வியப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பாட்டாய், எண்ணெய் தீர்ந்த போன இருட்டில் ஒவ்வொருவராயச் சொல்லிக் காட்டியதும், உடல் சோர்ந்தாலும் மனம் சோர்ந்தாலும் மாமா வீட்டு வலப்பக்க அறையில் கொட்டி வைத்திருக்கும் நெல்மணியில் கரைத்துக் கொண்டது…. எல்லாமே, எல்லாமே… நினைவில் ரொம்பப் பின்னோக்கிப் போய் விட்டன.

பெற்ற குழந்தைகள் தான் விட்டுவிட்டுப் பட்டணம் போய் விட்டார்கள் என்றால், எனக்கும் தான் அறிவில்லாமல் போய் விட்டதே! சொந்த மக்கள், தங்கை மக்கள் என்று நீங்கள் எப்போதுமே பாரபட்சம் காட்டியதில்லையே! பெற்ற மகன்களே சும்மாயிருக்கிறார்கள். உங்களுக்கு எதுக்கு இந்த வேலை என்று வனஜா கேட்ட போது எந்த மயக்கத்தில் பேசாதிருந்தேன்! கல்யாணம் என்பது ஒரு அளவிற்குப் பின் எல்லா மனிதருக்கும் விலங்காகித்தான் போகிறது.

வேதனை உள்ளத்தை மூழ்கடித்தது. குற்ற உணர்வு பாம்பாய் மாறி மனசைப் பிணைத்துக் கொண்டது. கொத்தாமல் விட மாட்டேன் என்று பயமுறுத்தியது. மாமா, எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும். இப்போதே, இந்த நிமிஷமே…..

மனசிலிருந்த உத்வேகம் உடனே உறுதியாயிற்று. பரபரப்பாய் எழுந்து ஹாலை ஒழுங்குபடுத்தினார். உடை மாற்றிக் கொண்டார். ஸ்கூட்டரில் போகலாம். ஆனால் அதில் அவரை அழைத்துவர முடியாது. வீட்டைப் பூட்டிக் கொண்டவர், நிர்வாகம் தந்த காரை வேண்டாம் என்று நிராகரித்ததற்கு முதன் முறையாக வருத்தப்பட்டார். டாக்ஸி பிடித்து மாதம்பட்டி போய்ச் சேர்ந்த போது மணி ஒன்றாகியிருந்தது.

மாமா வாசலில், ஈசிசேரில் சாய்ந்திருந்தார். எண்பது வயதிருக்கலாம். பார்வை மங்கலாக இருந்தாலும் அடையாளம் கண்டு கொண்டு பளிச்சென்று சந்தோஷப்பட்டார்.

“அடடே, குமாரு, நான் கனவு ஒண்ணும் காங்கலியே?” என்றார். “எவ்வளவு நாளாச்சுப்பா உன்னைப் பார்த்து. சௌக்கியமா? ஏனோ நாலு நாளா உன்னையே நினைச்சுகிட்டிருந்தேன்” என்றார்.

இவர் நெகிழ்ந்து போய், குனிந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டார். “மாமா உங்களைப் பார்க்கணுமாட்ட இருந்தது. அதான் வந்தேன்.”

“சாப்பிட்டயாப்பா? பாரு, இன்னிக்குப் பார்த்து கண்ணம்மா வரலை. துழாவி துழாவி நானே சமைக்கறதுக்குள் விடிஞ்சு போயிடும். பக்கத்து வீட்டு வாண்டுக யாராவது வந்தா கடைக்கு அனுப்பி எதுனா வாங்கியாரச் சொல்லலாம்னா ஒரு பய கண்ணில் படமாட்டேங்கறானே? மழையா இருக்கா…. யோசனை பண்ணிகிட்டே உட்கார்ந்திருக்கேன்….”

என்ன கொடுமை! டாக்டரும் கலெக்டருமாய் அங்கே மகன்கள் பணத்தை வாரியிறைக்கிறார்கள். பெற்ற தகப்பனார் இங்கே அடுத்த வேளை சோற்றுக்கு யோசனை செய்கிறார்.

“அதிருக்கட்டும் மாமா. இப்ப கிளம்புங்க. நம்ம வீட்டுக்கப் போகலாம். இன்னிக்கு லீவு போட்டிருக்கேன்.”

ஏன், எதற்கு என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. என்ன திடீர் அன்பு என்று ஏளனம் செய்யவில்லை. உடனே கிளம்பி விட்டார். குமரநாதனே அவருக்குத் தேவையானவற்றை ஒரு பையில் போட்டு எடுத்து கொண்ட போது “அலமாரியில் இருக்கற பிரபந்தத்தையும் எடுத்துக்கோ குமாரு” என்றார்.

அதே டாக்சியில் ஏறி வீடு வந்த சேர்ந்தார்கள். வழியில் வாங்கி வந்த சாப்பாட்டுப் பொட்டலாங்களைப் பிரித்து டைனிங் டேபிளில் வைத்துப் பரிமாறினார் குமரநாதன். கிழவர் நடக்கத் தடுமாறினார். கைத்தாங்கலாய் அழைத்து வந்து உட்கார வைத்தார். மூன்று மணிக்கு மதியச் சாப்பாடு ரொம்பத் தாமதம்தான். இருந்தாலும் பேசிக் கொண்டே சாப்பிட்ட போது பசி தெரியவில்லை. அலுப்புத் தெரியவில்லை. நிலவில் நடப்பது போலிருந்தது.

சாப்பிட்டானதும் தூங்க வேண்டும் என்றார். கீழேயே மாலினியின் அறையைத் தயார் செய்தார். கிழவர் படுத்த பின்பும் அறையை விட்டுப் போகாமல் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இருள் கவிழ்ந்திருந்த அறையில் உயர்ரக படுக்கை விரிப்பில் அவர் படுத்திருந்தது. கதைகளில் வரும் வர்ணனை போலிருந்தது. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல மனசுக்குள் கிளர்ந்து கொண்டேயிருந்தது. ஃபேனை நிறுத்தி விட்டு விசிறியால் வீசத் தொடங்கினார்.

கண் அசந்த கிழவர், திடீரென்று விழித்துப் பார்த்தார். “ஏம்ப்பா, கை நோகுமில்லை? காத்தில்லாட்டிப் போகுது, இப்ப என்ன?” என்றார். கொஞ்சம் பொறுத்து, “ரெண்டு பாட்டு வாசிக்சுக் காட்டுறியா? எவ்வளவு நாளாச்சு! பாட்டு வாசிடான்னா பசங்க ஒருத்தனும் வர மாட்டான். தமிழ் அவ்வளவு சரளம் அதுகளுக்கு. நமக்குக் கண்ணு ரொம்ப மங்கிட்டதால இப்ப ஒண்ணும் முடியறதில்லை” என்றார்.

குமரநாதன், “மண்ணும் மலையும் மறிகடலும் மருதமும் விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்” என்று ஆரம்பித்து மூன்று பாடல்கள் முடிப்பதற்கு முன் கிழவர் அசந்து தூங்கி விட்டார். அவர் உறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தார் குமரநாதன்.

மாமாதானா இது? இரண்டு மணி நேரம் முன்பு எங்கோ இருந்தவர் இப்போது என் வீட்டில், என் அருகில் உறங்குகிறார். நம்ப முடியவில்லையே! ஒரு வேளை மாதம்பட்டிக்குப் போனது, இவரை அழைத்து வந்தது எல்லாம் பிரமைதானோ?

பைத்தியக்காரத்தனமாய் கிழவரின் கைகளைத் தொட்டுப் பார்த்தார், நிஜம்தான்.

மாலை ஐந்தரை மணிக்கு விழித்தது, சுக்குக் காபி போட்டுக் கொடுத்தது, கண் டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று, கிழவரை அழைத்து சென்று கண் பரிசோதனை செய்தது, இரண்டே மணி நேரத்தில் புதிய கண்ணாடி வாங்கியது…. எல்லாமே பிரமையாகத்தான் இருந்தது. நடுவில் கூட ஒரு முறை தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

“உலகமே இப்ப பளிச்சின்னு இருக்கே! பெருமாளே, உன்னைப் பார்க்கணுமே” என்றார் கிழவர் ரொம்ப சந்தோஷமாய். அந்த சந்தோஷத்தைப் பார்க்கப் பார்க்க உடம்பெல்லாம் ஜில்லென்றாகியது குமரநாதனுக்கு.

இரவு சாப்பிடும்போது, கிழவர் “சீரங்கம் பார்க்கணும்னு” ரொம்ப நாளா ஒரு ஆசை. முன்ன எப்பவோ போனது, ஞாபகமிருக்கா? அப்ப நீங்கல்லாம் பொடிசுகள். கோபுரம் கட்டினதுக்கப் புறம் போகவே முடியலை” என்றார்.

சாப்பிட்டனாதும் ஸ்கூட்டரை எடுத்துக் கிளம்பினார் குமரநாதன். “மழையாயிருக்கே! எங்கப்பா இந்த இருட்டிலே?” என்றவரிடம் “இப்ப வந்திடறேன் மாமா” என்றார்.

காந்திபுரம் வரை வந்து டாக்சி ஏற்பாடு செய்து விட்டுத் திரும்பினார். மாமாவிடம் “காலையில ஆறுமணிக்குக் கார் வந்துடும். கிளம்பிடுவீங்களா?” என்றார்.

“எங்கே போறதுக்கு?”

“ஸ்ரீரங்கத்துக்கு. ஆறு மணிக்குப் புறப்பட்டாதான் பதினொரு மணிக்காவது போய்ச் சேர முடியும்.”

“அடடே, உனக்கு ஆபீஸ் போக வேண்டாமா?”

“வேண்டாம்…. நாளைக்கும் லீவு போடப் போறேன்.”

கிழவரால் காலை ஆறு மணிக்குப் புறப்பட முடியவில்லை. ஏழு மணியாகி விட்டது. திருச்சியை அடைந்து, ஹோட்டலில் அறை எடுத்து, சாப்பிட்டுத் தூங்கி, மாலை ஐந்து மணிக்கு ஸ்ரீரங்கம் போய்க் கடவுளை தரிசித்த போது கிழவர் புளகாங்கிதப்பட்டுப் போனார். “குமாரு, இது போதும்ப்பா, இது போதும்ப்பா,” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இரவு திரும்பி வரும் போது, அலுப்பு தாளாமல் குமரநாதனின் மடியில்தான் சாய்ந்திருந்தார். டாக்சி, மெதுவாகப் போனால் போதும் என்று சொல்லி விட்டதால் இரவு வீடு வந்து சேரும் போது மணி ஒன்று.

குமரநாதன் யோசித்து யோசித்துப் பார்த்தார். இந்த இரண்டுநாள் அனுபவங்களை. நெஞ்சுக்குள் இனிப்பை வைத்துத் தைத்து விட்டது மாதிரி இருந்தது. எத்தனை சுகமான அனுபவம், நிலவுக்குப் போனவன் ஞாபகார்த்தமாய் கற்களை எடுத்து வந்தது போல! நினைத்தவுடனே மீண்டும் போக முடியுமா என்ன?

மறு நாள் கிழவரை மாதம்பட்டியில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவலகத்திற்குத் தாமதமாய்ப் போன போது, வழக்கம் போல காகிதங்களும் மனிதர்களும் காத்திருந்தார்கள். மனசு அதில் ஒன்றவில்லை. யாரிடமாவது இந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும் போலவே இருந்தது.

மணிவண்ணனிடம் மட்டும் சொல்லாம் என்று நினைத்தவர் அப்புறம் யோசனையை மாற்றி கொண்டார்.

நிலவுக்குப் போனேன், கல் சேகரித்து வந்தேன் என்றால் “அப்படியா?” என்பார்கள். கல்லாக இருந்தாலும் போய் எடுத்து வந்தவனுக்குத்தானே தெரியும் அதன் அருமை! கேட்பவருக்குத் தெரியுமா?

மீட்டிங் முடிந்து வெளியில் வரும் போது, எம்.டி. “என் குமரநாதன், ரெண்டு நாளா காணோம், அவுட் ஆஃப் ஸ்டேஷனா?” என்றார்.

“ஆமாம சார், நிலா….” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

– சந்திரக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1998, சென்னை பல்கலைப் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *