அதிர்ஷ்டம் என்பது சில அடிகள் வித்தியாசத்தில்தான் தவறி விடுகிறது.. அல்லது கிடைத்து விடுகிறது. அழகேசனால் நம்பவே முடியவில்லை. உண்மைதானா? உண்மைதானா? கண்ணில் படுகிற ஒவ்வொருவரையும் வலுவில் அழைத்து, அதுபற்றிக் கூற வேண்டுமெனற பெருமிதத்துடன் கூடிய ஆவல், பரபரப்பு, மகிழ்வுத் துடிப்பு..!
தமிழில் வெளிவரும் வார இதழ்களில் புகழ்பெற்ற இதழான மலர்க் கொத்துவிலிருந்து வந்த கடிதம் அது. அழகாய், தமிழில் கணிணி அச்சு செய்யப்பெற்று, அடியில் ஆசிரியர் கையொப்பம் இட்டிருந்தார்.
‘அன்புடையீர், வணக்கம்.
மலர்க் கொத்து வார இதழ் அறிவித்திருந்த இலக்கியப் போட்டிக்குத் தாங்கள் அனுப்பியிருந்த, ‘ஆண்மையும் உண்மையும்’ என்ற கவிதை, ரூபாய் பத்தாயிரம் பெறும் முதல் பரிசுக்குரிய கவிதையாக நடுவர் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் நடைபெறவுள்ள ஒரு விழாவில் பரிசளிப்பு நடைபெறும். விழா பற்றிய அறிவிப்பினை விரைவில் தங்களுக்குத் தெரியப்படுத்துவோம். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
அன்புள்ள
(ஒ-ம்)…
ஆசிரியர்’
ஐயாயிரம் ரூபாய்…அடேயப்பா! அழகேசனுடைய தலை கம்பீரமாக நிமிர்ந்து வானை நோக்குகிறது. வீதியில் ராஜ நடை நடந்தான். “பெரிய ஆள் ஐயா, நீர்! இத்தனை திறமையை எங்கே ஐயா ஒளிச்சு வெச்சிருந்தீர்..?” எதிர்ப்படுகிறவர்கள் எல்லோரும் கேட்ட கேள்வி, வியப்புடன், பிரமிப்புடன், பொறாமையுடன்!
வீட்டுக்குத் திரும்பியபோது, வாசலில் கார் ஒன்று வந்து நிற்கிறது. “கவிஞர் ஸார் வீடு இதுதானே?”
“ஆமாம். உள்ளே வாங்க!”
“வானவில் கிரியேஷன்ஸின் புரொட்யூசர் நான். எங்க அடுத்த திரைப்படத்துக்கு நீங்கதான் பாட்டு எழுதணும். பிடிங்க அட்வான்ஸ் ஐயாயிரம்!”
“அட, நினைப்பதற்கு எவ்வளவு ஜோராக இருக்கிறது? நிஜமாக நடக்குமா? உம்.. நடக்கத்தான் போகிறது!”
மனைவி சரளா உள்ளூரில் இருந்திருந்தால் இந்நேரம் பலவித ஸ்வீட்களோடு ஒரு திருவிழாவே கொண்டாடியிருப்பாள், தோழியின் மகளுக்கு நிச்சயதார்த்தம் என்று திருவண்ணாமலை போயிருக்கிறாள். நாளை வருவாள்.. அவள் இல்லாததும் ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று! எழுந்தான். பளிச்சென்று உடைகளைத் தேர்வு செய்து அணிந்து கொண்டான்.
காரை எடுத்துக் கொண்டு காந்திநகர் போனான். தெரு முனையில் இறங்கிக் கொண்டு நடந்தான். புதிதாகத் தோன்றிய நகர் அது. அங்குதான் அவன் நண்பன் சுராஜின் பங்களா இருந்தது.
சுவரில் தெரிந்த கூப்பிடு மணிக் குமிழை அழுத்த உள்ளே அழகிய கீதமாக மணி ஒலித்தது.
“ஓ நீங்களா, வாங்க!”
“ஆமாம் சௌமி, சுராஜ் இருக்கானா?”
“உள்ளே வாங்க! இந்த நேரத்துல என்னிக்கு அவர் வீட்டுல இருந்திருக்கார்? காலை ஒன்பது மணிக்கே பஜாரில் கடையைத் திறந்து உட்கார்ந்தால்தானே தங்கமும் வெள்ளியும் விற்பனை செய்ய முடியும்?”
கதவை உட்புறமாகத் தாளிட்டுவிட்டு அவளைத் தன்பக்கம் இழுத்தான் அழகேசன்.
***
மேடை ஜாஜ்வல்யமாக ஒளியில் குளிக்க, நடுநாயகமாக அழகேசன் வீற்றிருந்தான்.
முதல் பரிசுக் கவிதை, `ஆண்மையும் உண்மையும்’ ஆஹா, ஓஹோவெனப் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கே தெரியாத சிறப்புக்களை அந்தக் கவிதையில் கண்டுபிடித்துச் சிலாகித்துக் கொண்டிருந்தார், விழாத் தலைவரான ஓர் நீதிபதி. பளிச், பளிச்சென்று கேமரா ஃப்ளாஷ்கள்…
கூட்டத்தைக் கம்பீரமாகப் பார்த்துக் கொண்டிருந்த அழகேசனின் பார்வையில் தொலைவு ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் பட்டார். அட, இவரா? சடக்கென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். உடம்பு மெல்ல நடுங்கியது. இந்தக் கிழவன் இங்கு எப்படி வந்தான்?.
***
“புலவர் ஐயா இருக்காங்களா?”
“அடடே அழகேசனா, வாப்பா வா!” என்றார் அவர்.
“இலக்கிய உலகம் எப்படி இருக்குங்க ஐயா?”
“அதுக்கு என்னப்பா நல்லாவே இருக்கு. இப்ப நான் பவணந்தி முனிவரைப் பற்றி-அவர் எழுதிய இலக்கண சூத்திரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கேன் தம்பி…”
“கவிதைகள் ஏதும் எழுதலையா ஐயா?”
“இரண்டு எழுதினேன். என் கவிதை நோட்டில் கடைசியாக இருக்கு பார்!”
“அடடே, முதல் வரியே எத்தனை அழகாய், ஆழமாய்! நான் எடுத்துகிட்டுப் போய் வீட்டில் படிச்சுட்டு நாளைக்குத் திருப்பி எடுத்து வரேன் ஐயா? உங்க கவிதைகளை ஓஹோன்னு தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டத்தான் போகுது!”
அழகேசன் கூறியது உண்மையாகத்தான் ஆயிற்று. புலவர் தமிழ்க் கண்ணனிடம் படித்துவிட்டு மறுநாள் தருவதாகச் சொல்லி எடுத்துவந்த கவிதை நோட்டை அவன் திருப்பித் தரவே இல்லை. அதிலிருந்து ஒரு கவிதையை உருவி, தன் பெயரில் மலர்க் கொத்து இலக்கியப் போட்டிக்கு அனுப்பியிருந்தான். அதற்குத்தான் இப்போது பாராட்டு விழா, பரிசு, அமர்க்களம் எல்லாம்!
***
அழகேசன் நடுங்கினான்.
புலவர் தமிழ்க் கண்ணன் இந்த விழாவுக்கு வருவார் என்று அவன் நினைக்கவேயில்லை. உண்மையை அவர் இந்தப் பெரும் கூட்டத்தில் உடைத்து இவன் மானத்தை வாங்கிவிட்டால்..?
பரிசுக் காசோலை அடங்கிய உறையை விழாத் தலைவர் பரிசளித்தார். பட படவென்று கை தட்டல். நன்றியுரையை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்தான்.
தேசீய கீதம் பாடப்பட்டபோது, புலவர் தமிழ்க் கண்ணன் இருந்த இடம் நோக்கிப் பார்வையை நகர்த்தினான். அந்த இருக்கை காலியாக இருந்தது.
***
காரில் திரும்பிக் கொண்டிருந்தான் அழகேசன். இரவு மணி பத்து.
நடந்தவைகளை மனம் அசைபோட்டது. பேண்ட் பாக்கெட்டில் ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலை; மனதில் மகிழ்ச்சி. நீ செய்தது நியாயமா அழகேசா?- அந்தக் கிழவர் திடுமென முன்னால் தோன்றி அவனைப் பார்த்துக் கேட்டார். வீசிய ஊதற்காற்று உடம்பைச் சிலீரிட வைத்தது.
சாலைத் திருப்பமொன்றில் காரைத் திருப்பியபோது, அங்கிருந்த பிள்ளையார் கோயில் மீது காரின் முகப்பு விளக்கு ஒளி பட்டது. அந்தக் கணத்தில் அழகேசனுக்குத் தெரிந்த ஒரு காட்சி… பூட்டிய பிள்ளையார் சந்நிதி முன் இரு கரம் கூப்பி நின்று மனமுருகத் தொழுத நிலையில் அந்த ஜிப்பா உருவம். நரைத்த தலை, ஒல்லியுடல், புலவர் தமிழ்க் கண்ணன்தான்! அவர் விநாயகரிடம் என்ன பிரார்த்தனை செய்கிறார்?
அழகேசன் சிரித்துக் கொண்டான்.
காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தபோது நிசப்தம். கதவு தொட்டதுமே திறந்து கொண்டது. சரளா! சரளா! என்று அழைத்தபடியே உள்ளே போனான்.
ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நடுவே இருந்த மேசையில் ஒரு தாள் படபடத்தது. அட இதென்ன?
மேலே வைக்கப்பட்டிருந்த வெயிட்டை எடுத்துவிட்டு, பரபரப்புடன் அந்தத் தாளை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.
***
‘சரளா எழுதுகிறேன்…
இது என் கடைசிக் கடிதம்.
நான் உங்களை உயிருக்கும் மேலாக நேசித்தேன். அதனால்தான் என் சுற்றம், உற்றார், பெற்றோர் அனைவரையும் எதிர்த்து, சொத்து சுகங்களைத் துறந்து உங்களைத் திருமணம் செய்து கொண்டேன். உங்கள் மீது கொண்ட தூய அன்புக்காக நான் பலவற்றை இழந்தபோது, நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?
உங்கள் உயிர் நண்பர் சுராஜுக்குத் துரோகம் செய்து, அவர் இல்லாத சமயங்களில் நீங்கள் அவர் மனைவியோடு கூடிக் குலவுகிற விவரங்கள் எல்லாம் அறிய நேர்ந்தது என் துரதிர்ஷ்டம்தான். பூட்டியே இருக்கும் உங்கள் பீரோவின் லாக்கரை இன்று மறந்துபோய் பூட்டாமல் சென்றுவிட்டீர்கள். தற்செயலாகப் பீரோவைத் திறந்தவள் திறந்திருந்த உங்கள் லாக்கரினுள் அவள் உங்களுக்கு எழுதிய காமரசம் சொட்டும் கடிதங்களை, ஆட்டோமாட்டிக் கேமராவில் நீங்கள் இருவரும் கட்டிப் பிடித்து எடுத்துக்கொண்ட பல கோணப் புகைப்படங்களை நான் பார்த்தேன்.
பிறன் மனை நோக்காத பேராண்மையோ, கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்யாத நேர்மைத் திறனோ, பழகிய குரு புலவர் தமிழ்க் கண்ணன் போன்றோருக்கு முதுகில் கத்தி குத்தாத உண்மையின் உயர்வோ இல்லாத உங்களோடு வாழ எனக்குத் தெம்பில்லை; போகிறேன்.
போகுமுன் இரண்டு காரியங்களைச் செய்துவிட்டுத்தான் போகிறேன்.
ஒன்று: உங்களுக்கும் உங்கள் நண்பரின் மனைவிக்கும் இடையில் உள்ள கள்ளத் தொடர்பைப் பற்றித் தெரிவித்து, இனியேனும் ஜாக்கிரதையாக இருக்குமாறு உங்கள் நண்பர் சுராஜுக்கு ஒரு விவரமான கடிதம் எழுதி-அவருடைய மனைவி உங்களுக்கு எழுதிய கடிதங்களை, புகைப்படங்களுடன் அனுப்பியிருக்கிறேன்.
இரண்டாவது: புலவர் தமிழ்க் கண்ணனின் கவிதை நோட்டை இரவல் வாங்கி வந்து அதிலிருந்த கவிதையைத் திருடிப் போட்டிக்கு அனுப்பி நீங்கள் பரிசு பெற்ற விஷயத்தைக் குறிப்பிட்டு, பரிசு பெற வேண்டியவர் புலவர் தமிழ்க் கண்ணனே என்று எழுதி, அந்தக் கவிதை நோட்டையும் சேர்த்து மலர்க் கொத்து ஆசிரியருக்கு அனுப்பி வைத்தேன்.
கடைசியாக ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உலகத்திலேயே பெரிய துரோகம், நம்பிக்கைத் துரோகம்தான். அதற்கு மட்டும் மன்னிப்பே கிடையாது!’
– சரளா.
‘அடி, சண்டாளி!’
வாய்விட்டுத் திட்டியபடி, தளர்ச்சியுடன் நடந்து படுக்கை அறையை நோக்கிப் போனான் அழகேசன்.
வழக்கமாக அறையின் நடுவில் காணப்படும் கட்டில் ஒரு ஓரத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது. அங்கே ஒரு ஸ்டூல் சாய்ந்து கிடந்தது. அது நின்றிருந்திருக்க வேண்டிய இடத்திற்கு நேரே மேலே அவளது கால்கள் தொய்வுடன் தொங்கி, இலேசாகக் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்தன.
– 10-08-1980