சதுரத்துக்குள் வட்டம்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 3,193 
 
 

“அம்மா! இந்த டிரெஸ் எப்போ வாங்கின?”

சுமி பேக் பண்ணிக் கொண்டிருக்கும் சூட்கேஸில் இருந்து ஒரு மேக்ஸியை சட்டென்று உருவினாள் இந்து.

“வாவ், சூப்பர் கூல்! இதப்போட்டுட்டு போனா கண்டிப்பா யாராவது உன்ன பிரபோஸ் பண்ணிடுவாங்க”

அவள் கையிலிருந்த உடையைப் பிடுங்கினாள்‌ சுமி.

“கன்னாபின்னான்னு உளறாத, ஏற்கனவே லேட்டு, இப்பத்தான் பேக் பண்ணஆரம்பிச்சிருக்கேன் எல்லாத்தையும் கலச்சிட்ட. சமையலறையில எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கு, காலைல மூணு மணிக்கு கிளம்பணும்”

“எனதருமை தாயே! உனக்குஇன்னிக்கு சமையலறையில் நுழைய அனுமதி இல்லை! பதட்டம் வேண்டாம்! நான் எதுக்கு வந்தேன், நானே பேக்பண்ணித்தரேன், போதுமா, ?”

அனிலும் முகிலும் “பாட்டி, பாட்டி!” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

“இந்து, என்ன இது? இந்த வாலுங்க இன்னமுமா தூங்கல?”

இரண்டு பேரன்களையும் அப்படியே வாரி எடுத்துக் கட்டி முத்தமிட்டாள்.

“அப்பா, ஜாக்கிரதை! அம்மாவ யாராவது கடத்திட்டு போயிடப் போறாங்க”

“பாவம் அந்த ஆள்!”

ராஜன் ஒரு ஜாலி பேர்வழி, எப்போதுமே கிண்டல் தான், .

“அப்பா, இந்த ஒரு வாரமும் தூள் கிளப்பிடலாம்”

“ஆமா, அப்பாக்கு பேரன்கள் இருந்தா போதுமே”

அதற்குள் சுமிக்கு ஒரு கால்.

“ஹை . அனு, இப்பத்தான் பேக் பண்ணவே ஆரம்பிச்சிருக்கேன், பரவாயில்யே. . நீ எப்பவுமே ஸிஸ்டமேடிக், உனக்கு அவரே பேக் பண்ணி குடுத்துட்டார்னு சொல்றியே, அதிர்ஷ்டசாலி!சரி, ஏர்போர்ட்ல பாப்போம். பை தி வே, ஆர்த்தி கூப்பிட்டாளா? ஃபோன எடுக்கவே மாட்டேங்கறாளே, நேரத்துக்கு வந்துடுவாளா?”

“நானும் கூப்ட்டேன், பதிலே இல்லை, வழக்கம்போல மூடு அவுட் போலிருக்கு, எப்படியும் படுக்கறதுக்கு முன்னால மறுபடியும் முயற்சி பண்றேன், .குட்நைட், நாளைக்கு பாக்கலாம், .”

இப்போதெல்லாம் பெண்கள் தனியா சுற்றுலா செல்வதென்பது ஒரு டிரெண்டாக உருவாயிருக்கிறது.அதிலும் ஐம்பதிலிருந்து எழுபது வயதில் இருப்பவர்கள், ஓரளவுக்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின், தங்கள் கல்லூரி அல்லது அலுவலக தோழியருடன் பத்து நாள் குடும்ப பொறுப்பிலிருந்து விலகி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது. புதிய அனுபவம்,

அனு, .ஆர்த்தி, சுமதி, மாலு, நெருக்கமான சினேகிதிகள், நாளைக்கு டெல்லி, தரம்சாலா, அமிர்தசரஸ் பொற்கோயில், அப்படியே தாஜ்மகால், டெல்லி, சென்னை,போன வருஷம் தான் சுமி ஐடியா குடுக்க , நாலுபேர் வீட்டிலிருந்தும் NOC! இலங்கை பயணம்.இனிமேல் வருடத்துக்கு ஒரு முறை, தலையே போனாலும் போக முடிவெடுத்து விட்டார்கள். சுமி எனும் சுமதிக்கு இரண்டு பெண்கள்.பெரியவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த பின் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தபடியே கன்சல்டன்சி செய்கிறாள். உள்ளூர் என்பதால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம். இரண்டாவது பெண் மஞ்சரி ஆஸ்த்திரேலியாவில் M.B.A. படிக்கிறாள்.

அனு ஈவென்ட் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவள், கமல்நாத் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. குழந்தைகள் இல்லை. பெப்பரும், ஸால்ட்டும், இரண்டு அழகான நாய்குட்டிகள்தான் குழந்தைகள். போகாத ஊர் இல்லை.டூர் லீடர் அனுதான். நாலுபேரில்ஆர்த்தி தான் கொஞ்சம் சிக்கலான மனநிலை கொண்டவள். திருமணம் ஆனதும் அமெரிக்கா போனவள் இரண்டு குழந்தைகளுடன் பத்து வருஷத்தில் திரும்பி வந்தாள் மைனஸ் அபிஷேக், விவாகரத்து, ஆர்த்தி ஓரளவுக்கு தனிமை விரும்பி, தன்னுடைய கஷ்டங்களை தானே சமாளிக்க வேண்டுமென்ற மனப்பான்மை இருப்பதால் அதைப்பற்றி அதிகம் பேச மாட்டாள்.சுமியிடம் மட்டும் எப்போதாவது தனது கசப்பான திருமண வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறாள். மாலதி தான் நாலுபேரில் அதிகம் பேசுபவள், கூட்டுக் குடும்பம்.மாமனார், மாமியார் அவளைத் தலையில் வைத்து தாங்குவார்கள். கணவன் சிவாதான் கடைசி பிள்ளை. இரண்டு மைத்துனர்கள், நாத்தனார் , . எல்லோருக்கும் செல்ல தம்பி. அவள் வீட்டில் குதூகலத்துக்கு பஞ்சமே மில்லை.கிரிக்கெட், சினிமா, எதுவாயிருந்தாலும் மொத்த குடும்பமும் ஆஜர், சுமி வேலையெல்லாம் முடிந்ததும் மறுபடியும் ஆர்த்தியை ட்ரை பண்ணினாள், ஒரு வழியாக கிடைத்தாள்.

“சொல்லு, சுமி”

“என்ன? சொல்லு? ஏன் போன எடுக்கல, நாளைக்கு காலைல மூணு மணிக்கு கிளம்பணும், ஞாபகம் இருக்கா?

“என்னமோ , மனசே சரியில்லை சுமி, பேசாம டிரிப்ப கேன்சல் பண்ணிட்டா என்னன்னு யோசிச்சேன்”

“உத வாங்குவ, பேக் பண்ணினயா இல்லையா?”

“நேத்தே பண்ணிட்டேன் சுமி, ”

“குட் , நிம்மதியா படுத்து தூங்கு, .”எல்லாம் சரியாய்டும் , குட் நைட், , நாளைக்கு பாக்கலாம், 3.30. . மணிக்கு உன்ன நான் பிக்கப் பண்றேன். ரெடியா இரு, , ”

‘மாக்லியாட் கன்ஞ் ‘(MacLeod Ganj)

இமயமலையின் மடியில் படுத்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு, தலையைத் தட்டிச் செல்லும் மேகக் கூட்டம். நாலுபேருக்கும் சேர்த்து அருமையான காட்டேஜ். நாலு நாள் தங்கி தரம்சாலா, , மலையேற்றம் , .கோட்டை, என்று திட்டம்.வந்த களைப்பு, ஒரு சூப்பும் இரண்டு சப்பாத்தியும் சாப்பிட்டு விட்டு படுக்கத்தான் நேரமிருந்தது. சுமிக்கும் ஆர்த்திக்கும் ஒரு அறை, வரும்வரை மூடியாகவே இருந்த ஆர்த்தி இமயமலையின் அழகில் மயங்கி கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத் தெரிந்தாள்,

“ஆர்த்தி, . என்னடா, மனசுல எதையெதையோ போட்டு குழப்பிக்கிற, என்ன ஆச்சும்மா?”

சுமியின் கனிவான குரலுக்கு செவிசாய்க்காமல் யாராலும் இருக்க முடியாது,

“சுமி, எனக்கு இருக்கவே பிடிக்கல, I’m chewing more than i can swallow”

கொஞ்சம் அழுதாள், சுமியும் அழட்டும் என்று விட்டுவிட்டாள். நாலு நாள்தான் இருக்கிறதே, பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து.

“ஆர்த்தி, இன்னைக்கு ரொம்ப அலுப்பாக இருக்க, பேசாம தூங்கு, .நாளைக்கு காலைல ஒரு வாக் போனா மனசு கொஞ்சம் லேசாகும்”

இரண்டு பேரும் படுத்தது தான் தெரியும், தூங்கி விட்டார்கள்,

காலையில் சுடச்சுட நல்ல மசாலா டீயைக் குடித்துவிட்டு நாலு பேரும் ஒரு சின்ன வாக் கிளம்பினார்கள். தரம்சாலா வரும் சுற்றுலா பயணிகள் எல்லோருமே MacLeod Ganj ல் தங்குவதையே விரும்புவார்கள். தலாய்லாமா தர்மசாலாவில் ‘ நாம்கியால் (Namgyal Monastery) புத்த ஆலயத்தில் தங்கியிருப்பதால் அவரை தரிசிப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தரம்சாலா திபெத் அரசாங்கத்தின் புத்தமத நிர்வாக தலைமை அலுவலகமாகவும் செயல் படுவதால் திரும்பிய இடமெல்லாம் காஷாயம் அணிந்த புத்த துறவிகளைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். நடந்து முடிந்த களைப்பு தீர வென்னீர் குளியல் எடுத்து விட்டு நாலு பேரும் காலைச் சிற்றுண்டிக்கு தயாரானார்கள். சுடச்சுட கஞ்சி , சுட்ட ரொட்டி , மோமோஸ் என்கிற கொழுக்கட்டை மாதிரியான பதார்த்தம், மசாலா டீ.

“மாலு, இது கொழுக்கட்டை மாதிரியே இருக்கு பாரேன்.ஆனா உள்ள காய்கறிதான் வச்சிருக்கு”

“ஆனா எனக்கென்னவோ நம்மூரு கொழுக்கட்டைக்கு கிட்ட எதுவும் வரமுடியாதுன்னு தோணுது!”

“அனு, இவ்வளவு புத்த பிஷூக்களை சேந்து பாக்குறது. ஒருமாதிரி புல்லரிச்சு போச்சு, எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க பாரேன்”

“சுமி, .முகத்தில என்ன ஒளி பாரு, அவங்க வெளிலே டீயெல்லாம் குடிக்கிறாங்க, ”

“ஆமா, மாலு, . அவங்க கையில ஒரு கிண்ணம் இருக்கு பாத்தியா”

“சுமி.அவங்க பிஷைஎடுத்து தான் சாப்பிடுவாங்க. இங்க இருக்கிற உணவு விடுதியில அவங்களுக்காக தனியா சாப்பாடு செய்வாங்க,அதைத்தான் அவங்க சாப்பிடணும்”

“நாளைக்கு நாம மடாலய விசிட் வச்சுக்கலாமா?”

“ஆர்த்தி, நீ சரியா இருக்கியா?”

“நா நல்லாருக்கேன்.அந்த புத்த துறவிகளப் பாத்தப்புறம் மனசில ஒரு அமைதி, எதோ ஒரு புதிய சக்தி பிறந்தது மாதிரி, , , ”

கொஞ்ச நேர மௌனத்துக்கப்புறம் ஆர்த்தி பேச ஆரம்பித்தாள்.

“நா கிளம்பும் போது ரொம்ப கலக்கமா இருந்தேன். என்னோடே பெண் ரேகா தெரியும்தானே, சிகாகோவில வேல பாக்குறாளே, அவ ஒரு குண்ட தூக்கி போட்டாள்.ராஜீவ விட்டு பிரியப் போறாளாம், ஏற்கனவே விவாகரத்துக்கான பேப்பரெல்லாம் குடுத்தாச்சாம், கொஞ்சம் கூட கவலப் படறதா தெரியல! நாந்தான் தனியா நின்று கஷ்ட்டப்பட்டேன், அவளுமா?”.

“ஆர்த்தி உன்னோட காலம் வேற, உன்னோட அவள கம்பேர் பண்றதே சரியில்ல, அவ நல்ல வேலைல இருக்கா, குழந்தைகள வளக்கிற பொறுப்புமில்லை, நீ ரொம்ப யோசிக்காத, அவளப் பாத்துக்க அவளுக்கு தெரியும்”

“அனு, உங்கள மாதிரி நண்பர்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை? நான் உண்மையாலுமே குடுத்து வச்சவ!”

மதியம் தால் ஏரி, காஷ்மீரில் இருப்பதைப் போலவே பளிங்கு போல் தெளிந்த ஏரி. சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் மலைத் தொடர், கடைத்தெருவை சுற்றிவிட்டு இரவு உணவுக்கு நல்ல சைவ உணவகத்துக்கு போக முடிவு செய்தார்கள், தெருவில் திரும்பிய இடமெல்லாம் புத்த துறவிகள்.

திடீரென்று ஆர்த்தி, “கௌதம், கௌதம்!” என்று கத்தி கூப்பிட்டாள். அவள் பக்கத்தில் ஒரு இளம் துறவி ஒரு கடையின் முன்னால் நின்று கொண்டிருந்தார்.

அவரை நோக்கி திரும்பவும், “கௌதம், கௌதம்” என்று பலமாய் கூப்பிட்டாள்.ஆனால் அவரோ திரும்பி கூட பார்க்கவில்லை.

“ஏய், ஆர்த்தி, என்ன இது, மனச சாந்தப்படுத்து, வா போலாம்”

அனு ஆர்த்தியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த கடையை விட்டு நகர்ந்தாள்.

“என்ன மன்னிச்சிடுங்க, அந்த இளைஞனைப் பார்த்தவுடன்!”

ஆர்த்தியால் மேலே பேச முடியவில்லை.

யாரும் எதுவும் கேட்கவில்லை, மௌனமாய் நடந்து உணவகம் வந்தப்புறம்தான் நாலு பேருக்கும் மூச்சு வந்தது, .

“ஆர்த்தி, முதல்ல இந்த தண்ணியக் குடி”

மாலுவும் சுமதியும் மெனு கார்டை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்,

“முதல்ல நாலு பேரும் ஒரு சூப் ஆர்டர் பண்ணலாம், உங்களுக்கெல்லாம் சம்மதமா.?”

“நாலு வெஜிடபிள் தென்துக் சூப் கொண்டு வர முடியுமா?”

திபெத்தியர்களின் பிரபலமான காய்கறி, நூடுல்ஸ். கலந்த சூப், Thenthuk .

பத்து நிமிஷத்தில் ஆவி பறக்கும் சூப் வந்துவிட்டது,

அனு நூடுல்ஸை லாவகமாய் சாப்ஸ்டிக்கில் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஏய் நமக்கு இந்த சாப்ஸ்டிக்கெல்லாம் எல்லாம் ஒத்துவராதுப்பா, மரியாதையா முள்ளுக்கரண்டிதான் சரி”

மீதி மூணு பேரும் ஃபோர்க்குக்கு மாறிவிட்டார்கள், .

“ஆர்த்தி, நீ சரியா இருக்கியாடா ?.யாருடா கௌதம்? என்னாச்சு உனக்கு”

“விடு சுமி, திரும்பி திரும்பி என் சோகக் கதைய சொல்லி இந்த டிரிப்ப கெடுக்க விரும்பல, நீங்களாவது மகிழ்ச்சியா இருங்க”

“என்ன பேசற ஆர்த்தி, நாம தனியா டூர் வந்ததே வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமா, மனசு விட்டு எல்லாம் பேச இது மாதிரியான சந்தர்ப்பம் கிடைக்குமா, கமான் ஆர்த்தி, மனசில இருக்கிறத ஷேர் பண்ணு, உனக்கு ஆட்சேபம் இல்லைன்னா”.

ஆர்த்தி சுமியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்,

“கல்யாணம் ஆகி ஒரு வருஷத்ல ரேகாபொறந்தா.அபிஷேக்கப்பத்தி சொல்லி உங்க மூட கெடுக்க மாட்டேன். ரேகா கிட்ட ரொம்ப ஆசையவே இருந்தான்.

இரண்டு வருஷத்தில கௌதம் பிறந்தான். அவனக் கண்டாலே அபிஷேக்குக்கு பிடிக்கல.ஏன்னே தெரியல, , . .

என் குழந்தைன்னு சொல்லல.கௌதம் மாதிரி ஒரு பையன் பிறந்ததுக்கு நான் தவம் பண்ணியிருக்க வேணும்.கற்பூர புத்தி,

இரண்டு வயசில நல்லா பேசுவான். எதையும் உடனே புரிஞ்சிட்டு அப்படியே சொல்லுவான்.

ஆசிரியர்கள் எல்லாருமே இது மாதிரி குழந்தையைப் பார்த்ததேயில்லைன்னு சொல்ற அளவுக்கு புத்திசாலி,

ஆனா அப்பான்னா பயம், அப்பாகிட்ட நிறையவே அடி வாங்கியிருக்கான்.ஒரு நாள் அவனோட முக்கியமான ஆஃபீஸ் பேப்பர எடுத்து ஏதோ கிறுக்கிட்டான்னு காலால் எட்டி உதச்சிட்டான். குழந்தய!!

அதுவும் இப்படி ஒரு அதிசயமான குழந்தையைப் போய் காலால உதச்சத என்னால ஏத்துக்க முடியல.அன்னிக்கே தீர்மானம் பண்ணிட்டேன்.

அதற்குள் ஆர்டர் பண்ணின சாப்பாடு வந்துவிட்டது.

வெஜிடபிள் மோமோஸ் , சாதம் , பொரித்த நூடுல்ஸ், . முட்டைக்கோஸ் வைத்த ரொட்டிகள் சீஸ் , தயிர்.

கௌதம் பதினாலு வயதிலேயே +2 முடிச்சிட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கு, அப்புறம் தத்துவம், முழு உதவித் தொகையுடன், இரண்டு வருஷம் லீவுக்கு வந்தான். நல்லாதான் இருந்தான். மூணாவது வருஷம் அவன் பேரில் கல்லூரிலேர்ந்து ஒரு கடிதம் வந்தது. பிரிச்சு பார்த்தவள் அப்படியே ஷாக் ஆய்ட்டேன்,கௌதம் அந்த வருட வகுப்புகளுக்கு வரவேயில்லையேன்றும் , அதைப் பற்றி ஒரு விவரமும் தெரிவிக்காததால் உதவித் தொகையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாயும் ஒரு வருஷத்துக்குள் திரும்ப சேர்ந்தால் படிக்கலாமென்றும் என்றும் எழுதி இருந்தது, சுருக்கமாக சொன்னா ‘ drop out’.

அதுதான் கடைசியா அவனைப் பத்தின செய்தி. கௌதம தொலச்சிட்டேன் சுமி, எனது புதையலை இழந்து விட்டேன்.நான் எதுக்காக உயிரோட இருக்கணும்?”

“அது சரி ஆர்த்தி, . அந்த புத்த துறவியப்பாத்து?”

“கௌதம் அச்சு அசல் அவர மாதிரியே இருப்பான்”

“ஆனா , நீ கூப்பிட்டதும் திரும்பி கூட பாக்கல.அதுவும் இவ்வளவு கிட்ட”

“தெரியல மாலு, ஆனா என் மனசு சொல்லுது, அவன் கௌதம் தான்! அம்மாவுக்கு தன் குழந்தையை அடையாளம் தெரியாதா?”

அன்றைக்கு ராத்திரி யாரும் சரியாய்த் தூங்கவில்லை.காலை சிற்றுண்டி முடித்து நாம்கியால் புத்தகத்துக்கு போவதற்கு தயாரானார்கள்.

தரம்சாலா அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஒரு மணி நேரம் தான். தலாய் லாமா தங்கியிருக்கும் புத்த மடத்தில் நுழைந்ததுமே ஒரு ஆகர்ணசக்தி இருப்பதை நன்கு உணர முடிந்தது, மஞ்சள் நிற ஆடையில் தங்க பீடத்தில் புத்தர் அமைதியே வடிவாய் அமர்ந்திருந்தார், எங்கும் நிசப்தம், அவர்கள் சென்ற சமயம் தலாய் லாமா அங்கில்லாதது ஒரு ஏமாற்றம் என்றாலும் அதை ஈடுகட்ட பெரிய அதிசயம் நடக்கவிருப்பதை அவர்கள் உணர வாய்ப்பில்லை, பரந்த அந்த புத்த ஆலயத்தில் துறவிகள் ‘மண்டாலா ‘ எனப்படும் வண்ணக் கற்களின் பொடிகளால் ஆன சித்திரத்தை வரைவதில் முழுமூச்சில் ஈடுபட்டிருந்தார்கள். இன்றைக்கு முழுக்க அவர்கள் வரையும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம், மண்டாலா என்பதற்கு வட்டம் என்பது பொருள்.பூரணத்துவத்தை விளக்கும் அற்புத இந்திய, புத்த மத தத்துவம். அதை ஒரு பெரிய சடங்காகவே கொண்டாடுகிறார்கள், கையில் புனல் போன்ற ஒரு குழலில் வண்ணக் கற்களின் பொடியை நிரப்பிக்கொண்டு மற்றொரு குச்சியால் ஒரே சீராக அவர்கள் சித்திரத்தை வரையும் நேர்த்தியை பார்க்க ஆயிரம் கண்கள் போதாது, சடங்கு முடிந்தவுடன் அந்த ஓவியத்தை கலைத்து விடுவார்கள்.இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை விளக்குவதே இதன் பொருள்.

எல்லோருடைய மனசும் பூரண அமைதி அடைந்தாலும் ஆர்த்தி மட்டும் கொஞ்சம் படபடப்பாக தெரிந்தாள். கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. வெளியில் வந்ததும் மற்றொரு அரிய காட்சி, பரந்த மைதானத்தில் புத்த துறவிகள் இரண்டிரண்டு பேராய் விவாதம் புரிவதில் ஈடுபட்டிருந்தார்கள். காணக் கிடைக்காத அற்புத காட்சி, புத்த மத துறவிகளுக்கு வாதம் புரிவது ஒரு கலையாகவே கருதப் படுகிறது. ஒருவர் குரு ஸ்தானத்திலும் மற்றவர் சீடனாயும் இருந்து பல தத்துவங்களை கேள்வி பதில் மூலம், சைகையாலும், சில சப்தங்களாலும் மௌனத்தாலுமே விளக்கும் அரிய கலை. பார்த்துக்கொண்டே வரும்போது ஆர்த்தி ஒரு இடத்தில் அப்படியே நின்று விட்டாள்.சிறிது நேரத்தில் அப்படியே மயங்கி விழுந்து விட்டாள்.

அங்கு விவாதித்து கொண்டு இருந்த இளம் துறவி உடனே அவர்களருகில் வந்தார். சிறிது தண்ணீர் எடுத்து ஆர்த்தியின் முகத்தில் தெளித்ததும் ஆர்த்திக்கு மயக்கம் தெளிந்து விட்டது,ஆம், அன்று பார்த்த அதே இளைஞன் தான்.

“கௌதம், கௌதம்”, ஆர்த்தியின் உதடுகள் முணுமுணுத்தன.

“அம்மா!”

இந்த கனிவான குரலைக் கேட்டு ஆர்த்தி உடனே எழுந்து நின்றாள், “இப்போது நீங்கள் எல்லோருமே எனக்கு தாயாகத்தான் தெரிகிறீர்கள், அம்மா நான் உங்கள் கௌதம் தான்.இப்போது என் ‘ தர்மா’ பெயர் போதிவர்மன், அம்மா, உங்கள் நிலைமை எனக்கு நன்றாகப் புரிகிறது, பந்த பாசத்தை துறந்து , துறவறம் பூண்டாலும் கடமையை செய்ய தவறக்கூடாது என்று தான் புத்த மதம் போதிக்கிறது, நான் இங்கு வந்து ஐந்து வருஷம் பூர்த்தியாகி விட்டது. பொது இடங்களில் என்னால் ஒரு துறவியாக மட்டுமே நடந்து கொள்ள முடியும். ஒரு வட்டத்தின் வெளியே இருக்கும் சதுரத்தில் நீங்களெல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் , ஒரு மூலையில் , ஒருவரையொருவர் பார்த்து பேசவும் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ளவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாங்களோ, அந்த சதுரத்துக்குள் இருக்கும் வட்டத்தில் எங்களுடைய பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம்.முன்னோக்கி போய்க்கொண்டிருக்கும் போது நிற்பதோ, நேற்று, நாளை, என்பதோ இல்லை, இன்று இந்த வினாடி மட்டுமே எங்களுக்கு சொந்தம். ஆனால் எப்போது உங்களுக்கு மிகவும் அவசியமாக என்னைப் பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் உடனை இந்தமடத்தை தொடர்பு கொள்ளுங்கள். சிறிது நாட்கள் தங்க எனக்கு அனுமதி உண்டு, இப்போது நான் செல்ல வேண்டும்.உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்”.

பத்து நிமிடத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை புரிய வைத்து விட்டு போய்விட்டார் போதிவர்மன்! ஆர்த்தியின் கௌதம். எல்லோருக்குமே சிறிது நேர மௌனம் தேவையாயிருந்து. எப்படி அந்த துறவியால் இத்தனை அமைதியாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இயல்பாக வாழ்வின் சாரத்தை பிழிந்து கொடுக்க முடிந்தது.

மதிய உணவு தயாராயிருந்தது! ஆர்த்தி உடைந்து போய்விடுவாளோ? எல்லோர் மனதிலும் அதே கேள்வி!

யாருக்கும் அவளைக் கேட்க தைரியமில்லை, ஆனால் அவள் முகம் மிகவும் தெளிவாக, சாந்தமாக, இது புதிய ஆர்த்தி!

“மாலு, அனு, சுமி, நா இப்போ ரொம்ப திருப்தியா இருக்கேன். எனக்குள்ள ஏதோ பெரிய மாற்றம், கௌதம பார்த்ததுமே அவன கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்க துடிச்சேன். ஆனா, ஆனா, ஒரே வினாடி தான், எப்படி அமைதியானேன்னு எனக்கு தெரியவேயில்ல, அவன் எனக்கு மட்டுமே சொந்தம்கிற நினப்பேயில்லை! உங்க எல்லோரையுமே அம்மான்னு கூப்பிடறான்னு தெரிஞ்சதும், எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவனைக் காணாத இத்தனை வருஷத்தில் வேண்டாத கற்பனையில் எத்தனை நாள் தூக்கமில்லாம தவிச்சிருப்பேன், இப்படி ஒரு முடிவை அவன் எடுத்திருக்கான்னு கேள்விப்பட்டிருந்தால் உடைந்து நொறுங்கியிருப்பேன். ஆனால் நேரில பார்த்த அனுபவம் இருக்கே, அத வார்த்தைல விவரிக்க முடியாது, பரவச நிலை, அனு, நான் குடுத்து வைத்தவள்”

தரம்சாலாவை விட்டு வரவே யாருக்கும் மனதில்லை. ஆர்த்தியிடம் பெரிய மாற்றம். அமிர்தசரஸ் பொற்கோயில், தாஜ்மகால், ஒவ்வொன்றையும் அணுஅணுவாய் ரசித்தாள். ஆர்த்தியை சுமி இப்போது ‘மகாமாயா’ என்றுதான் அழைக்கிறாள்.புத்தரின் தாயல்லவா?.

“ஆர்த்தி, கௌதமைப் பார்த்தப்புறம் உனக்கு மனவருத்தம் ஏதாவது?”

“நிச்சயமாய் இல்லை சுமி, கிளம்புவதற்கு முன்னால நான் எப்படி இருந்தேன்னு உனக்கே தெரியும், நாம பிறக்கும்போதே ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாதை தயாரா இருக்குன்னு நினைக்கிறேன்.அதுக்கு ஏத்தமாதிரிதான் நம்முடைய எண்ணங்களும் செயல்களும் இயல்பா அமஞ்சிடுது, அதை வளைக்கவோ, மாற்றவோ செய்யும்போது நாம நாமளா இருக்க முடியாது, கௌதம அந்த சூழ்நிலைல பாக்கும்போது அவன் அதில எவ்வளவு பொருந்தி போயிருக்கான்னு நினச்சு ஆச்சரியப்பட்டேன்! மீன் தண்ணியில தான் இருக்கணும், சிங்கம் காட்டிலதான் இருக்கணும், நான் இப்போ ரொம்பவே நிம்மதியா இருக்கேன் சுமி”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *