சக்திலிங்கம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 4,252 
 
 

” வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! ” – செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில் எங்களைப் போல் ஓய்வு.

” உண்மையா..?? ! ” நம்ப முடியாமல் தகவல் சொன்ன நண்பரைப் உற்றுப் பார்த்தேன்.

” சத்தியம்ப்பா…! ” அவர் என் தலையிலடித்தார்.

நான் அப்படியே அசந்து போனேன்.

” பொண்ணு யார் தெரியுமா…? ” – நண்பர் கேட்டார்.

” எனக்கு எப்படித் தெரியும்..? ”

” சொல்றேன். சக்திலிங்கம் அம்மா..! ” அவர் அடுத்த இடியை இறக்கினார்.

ஆள் புரிய அப்படியே சிலையானேன்.

பத்து வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ வடிவேல் எங்கள் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வரும்போது கையில் டிரங்கு பெட்டியுடன் தனி ஆள். எங்கள் பள்ளி நகரத்தைத் தள்ளி வெகு தூரம். சாப்பாடு, தங்க வசதி இல்லாத ஊர். எப்படி இருக்கப் போகிறார்..? – என்று யோசித்த எங்களுக்கு பள்ளியிலேயே தங்குவதற்கு இட வசதி செய்து கொடுத்தோம்.

அடுத்து சாப்பாடு..!

வடிவேலுக்குச் சமைக்கத் தெரியாது. அடுத்து… பள்ளியிலேயே சமைத்து சாப்பிடுவது என்பது சரிப்படாது. இரண்டு நாட்கள் அவர் நரகத்திற்குப் போய் சாப்பிட்டு வர சிரமப்படடார். இதற்கும் ஏதாவது வழி செய்யவேண்டுமென்று யோசிக்கும்போதுதான்….

எட்டாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன் சக்திலிங்கம் எங்கள் கண்ணில் பட்டான்.

ஒரு நாள் மாலை வடிவேலுவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டு வாசலில் போய் நின்றோம்.

‘ பையன் பள்ளிக்கூடத்துல தப்புத் தண்டா ஏதாவது பண்ணிட்டானா…?! ‘ – என்கிற கலவரத்தில் அவனின் தாய் பரமேஸ்வரி – விதவை கலவர முகத்துடன் வெளியே வந்தாள்.

”கவலைப்படாதீங்கம்மா. ஒரு உதவி கேட்டு உங்ககிட்ட வந்தோம். ” நண்பர் சொன்னார்.

அவள் புரியாமல் பார்த்தாள்.

” இவர் வடிவேல் வாத்தியார். இந்த ஊர் பள்ளிக்கூடத்துக்குப் புதுசா வந்திருக்கார். . குடும்பம் இல்லாதவர். பள்ளிக்கூடத்துல தங்க வச்சிட்டோம். சாப்பாட்டுக்கு மட்டும் சிரமப்படுறார். மாசம் கொஞ்சம் பணம் வாங்கிக்கிட்டு இவருக்கு சாப்பாடு போட்டீங்கன்னா.. உதவியா இருக்கும். இவருக்காக நீங்க அஞ்சு கறியும் சோறும் சமைக்க வேணாம். நீங்க வழக்கமா சமைக்கறதையே கொடுத்தா போதும். உங்களுக்குத் சிரமம் வைக்காம வாத்தியாரை இங்கே வந்து சாப்பிடச் சொல்றோம். இந்த ஊர்ல உங்ககிட்ட மட்டும் இந்த உதவியை ஏன் கேட்கிறோம்ன்னா… இந்தப் பணம் சிரமப்படுற உங்களுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கும். கொஞ்சம் மறுக்காம பெரிய மனசு பண்ணுங்க..” சொல்லி கெஞ்சலாக அவளைப் பார்த்தேன்.

பரமேஸ்வரி கொஞ்சம் யோசித்தாள். பின்….

”சரி ! ” தலையாட்டினாள்.

அன்றிலிருந்து வடிவேலுக்கு அவள் வீட்டில் சாப்பாடு. மூன்று வேளையும் அங்கே போய் சாப்பிட்டுவிட்டு இரவில் பள்ளிக்கூடத்தில் படுக்கை.

பையன் பள்ளிக்கூடத்தை விட்டு நின்று….. இப்போது வயது இருபதுக்கு மேல். பத்தாம் வகுப்புவரை படித்து முடித்துவிட்டு வேலைக்காக அலைகிறான். வாத்தியாருக்கு இன்னும் பரமேஸ்வரி வீட்டில் சாப்பாடு.

திருமணம் எப்படி…?

அவரும் அனாதை. அவளும் விதவை. வயதும் ஏறக்குறைய கொஞ்சம் ஏற்றத்தாழ்வு. ஒத்துப்போய் தொடர்பேற்பட்டுவிடாதா..? உண்ட வீட்டிற்கு இரண்டகமா..? திருமண வயதில் பையன் இருக்கும்போது பரமேஸ்வரி எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாள்..? ! சக்கிதிலிங்கம் அவமானப்படாமல் எப்படி சம்மதித்தான்.???….. எனக்குள் கேள்வி மேல் கேள்வி.

அப்போதுதான் சக்திலிங்கம் வீட்டு படி ஏறி வந்தான். வெகு நாட்களாக அவனைப் பார்க்கவில்லை. ரொம்ப உடைந்து உருமாறிப் போயிருந்தான்.

” என்ன சக்திலிங்கம்..? ” ஆளை ஏறிட்டேன்.

” அம்மாவுக்கும் வாத்தியாருக்கும் திருமண ஏற்பாடு செய்திருக்கேன் சார். நாளைக்கு காலையில நம்ம ஊர் மாரியம்மன் கோயில்ல திருமணம். நீங்க ரெண்டு பேரும் வரணும்…” சொன்னான்.

இது நாங்கள் எதிர்பாராதது. நானும் நண்பரும் உள்ளுக்குள் துணுக்குற்று ஒருவரை ஒருவர் பார்த்தோம் .

பின் எனக்குள் கொஞ்சம் துணிவு வந்து….

” சக்தி ! கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. இப்போ இந்த திருமணம் அவசியமா…? ” கேட்டேன்.

” அவசியம் சார் ! ” அவன் தாழ்ந்த குரலில் சொன்னான்.

” ஏன்ப்பா..? ” – நண்பர்.

” தொடர்பு அது இதுன்னு ஊரெல்லாம் அவுங்களைப் பத்தி தப்பாய் பேசுறாங்க. ஆனா… உண்மையை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். எனக்கு உடல்நிலை சரி இல்லாம மருந்து மாத்திரை சாப்பிவிட்டு வர்றேன். கிட்னி பழுது. !! ” நிறுத்தினான்.

” சக்தி ! ” இருவரும் அலறினோம்.

” பிழைக்கிற அளவுக்கு செலவு செய்ய வசதி இல்லே என்கிறது உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம். யார்கிட்டேயும் கையேந்த மனசில்லே. அவ்வளவு பெரிய தொகை யார் கொடுப்பா..? வசூலிச்சு மருத்துவம் பார்க்கிற அளவுக்கு கால நேரம் இல்லே சார்.ரொம்ப முத்திப் போச்சு.”

உறைந்தோம் .

”எனக்குப் பிறகு அம்மா அனாதையாகிடுவாங்க. நான் இல்லாம வாத்தியார் வீட்டுக்குச் சாப்பிட வரமாட்டார். ஆக மொத்தத்துல ரெண்டு பேருமே கஷ்டப்படுவாங்க. அதனால இவுங்களைச் சேர்த்து வைச்சா கஷ்டம் தீரும். ஒருத்தருக்கொருத்தர் துணையாய் இருக்கிறதோட இல்லாம ரெண்டு பேரும் சேர்ந்து என்னை சீக்கிரம் மறப்பாங்க இது எல்லாம் யோசிச்சி முடிவெடுத்துதான் சார்… அம்மாகிட்டேயும் வாத்தியார்கிட்டேயும் விபரம் சொல்லி சம்மதம் கேட்டேன். லேசுல மசியலை. கால்ல விழாத குறையா ரொம்பநேரம் கெஞ்சி….. ஒரு வழியா சம்மதிச்சாங்க. நீங்க ரெண்டு பேரும் வந்தீங்கன்னா…இந்த திருமணத்துக்கும் அவுங்களுக்கும் தெம்பு, தைரியம்.! கண்டிப்பா வாங்க சார்..! ” சொல்லி கையெடுத்துக் கும்பிட்டான்.

” சக்தீஈஈ….” நானும் நண்பரும் ஆடிப்போய் படீரென்று எழுந்து அவனை ஆரத்தழுவினோம்.

‘ சக்தி எவ்வளவு பெரிய மனிதன் ! ‘ – பொங்கிய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மினோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *