சக்கரம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,394 
 
 

என் மனைவி சோறு போட… அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து…..

” எங்கேடி அந்த தண்டச்சோறு. ..? ” என்று கோபாவேசமாகக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அப்பா.

” ஏன். ..? என்ன. ..? ” அம்மா அவர் பின்னாலேயே வந்தாள்.

” ஒரு வேலை விசயமாய் அய்யாசாமியைப் போய் பார்த்துட்டு வரச் சொன்னேனே பார்த்துட்டு வந்தானா. .? ”

” பார்த்துட்டு இப்பதான் வந்து சாப்பிடுறான் ! ”

” அவரைப் பார்க்கவே இல்லேன்னு இப்ப பார்த்தவரு சொல்லிட்டுப் போனாரு. .! ”

” அப்படியா. .ஆ …” அம்மா வாயைப் பிளக்க. ..

உள்ளே அவன் வாயில் வைத்த சோறோடு திருதிருவென்று விழித்தான்.

” எல்லாம் நீ கொடுக்கிற செல்லமடி. ஒரு காசு சம்பாதிக்க வழி இல்லாம ஊரை சுத்திக்கிட்டு வர்றவனுக்கு மூணு வேளையும் வடிச்சுக் கொட்டறே பாரு. .. அந்தத் திமிறுடி. ..” என்று அப்பா அம்மா மேல் பாய. ..

” எனக்கு எப்படித் தெரியும். .? அவன் போனானா போவலையான்னு. நீங்களாச்சி உங்க பிள்ளையாச்சி. ..” அம்மா முறுக்கிக்கொண்டு வெளியேறி விட்டாள்.

அப்பா ராத்திரியே சேகரைக் கூப்பிட்டு………

” மார்கெட்டுல மளிகை கடை வச்சிருக்கிற அய்யாசாமி கணக்கப்பிள்ளை வேணும்ன்னாரு. நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி மாசம் ஐயாயிரம்ன்னு பேசி வந்திருக்கேன். அவரைக் காலையிலேயே போய் பார். என்ன. ..? ” சொன்னார்.

அவன் தலையை ஆட்டிக்கொண்டான்.

பொறியியல் படிப்பு படித்தவன். மளிகை கடை கணக்கெழுத ஒப்புக் கொள்வானா. ..?! இவன் போகவில்லை போலிக்கிறது.!

அப்பா அடுப்பங்கரைக்கே வந்து….அவனைப் பிடித்து உலுக்கு உலுக்கென்று உலுக்கி விட்டார்.

அவன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு அழுகையும் ஆத்திரமும் அடைக்க மொட்டை மாடிக்குப் போய்விட்டான்.

” தடிக்கழுதை ! சம்பாதிக்க வக்கில்லேன்னாலும் ரோசத்தைப் பாரு. ..” அதையும் பொருட்படுத்தாமல் முணுமுணுத்தார்.

அப்பா எப்போதுமே இப்படித்தான். பையன் படித்துவிட்டு சும்மா திரிகின்றானே என்று பார்த்தவர்களிடமெல்லாம் புலம்பி ஏதோ ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்வார். அது இன்ன வேலையென்று கிடையாது. அவரைப் பொறுத்தவரை வீட்டில் சும்மா இருக்காமல் வெளியே போனால் சரி.

வேலையைப் பொறுத்து இவனும் போய்ப் பார்ப்பான், பார்க்காமலிருப்பன். இல்லை. .. அவர் வற்புறுத்தலுக்காவது இரண்டொரு நாட்கள் வேலை செய்து விட்டு வருவான்.

இப்படித்தான் அப்பா ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்த்துவிட. .. இரண்டாம் நாள் முதலாளி போய் டீ வாங்கி வரச் சொல்ல. .. மறுநாளே வந்து விட்டான்.

அப்பா தாம் தூம்மென்று குத்தித்தார்.

” ஏன். .. டீ வாங்கி வந்து கொடுத்தால் என்ன. உங்களுக்குக் கௌரவக் குறைச்சலோ …? ” என்று வேறு கேட்டார்.

அப்பாவிற்கு விவஸ்தையே கிடையாது. பி. டெக். முடித்த ஒரு பொறியியல் பட்டதாரியை என்ன வேலைக்கு அனுப்பலாம் என்கிற நினைப்பும் அதிக படிப்பறிவும் கிடையாது. எப்படியோ பையன் வேலை கிடைக்கும்வரை எதிலாவது ஒட்டிக்கொண்டு ஊரைச்சுத்தி கெட்டுப்போகாமலிருந்தால் சரி என்பது அவர் நினைப்பு.

அதனால் சேகர் வீட்டில் நுழைந்தாலே போதும். ..இல்லை இவர் கண்ணில் பட்டால் போதும். …

” தண்டச்சோறு திங்கிறீயே. எனக்காவது உதவி ஒத்தாசையா இருக்கலாமில்லே. ! என்னைப் பாரு. இந்த அம்பது வயசிலேயும் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து வயல், வரப்பெல்லாம் சுத்தி வர்றேன். நீ என்னடான்னா எட்டு மணிக்கு எழுந்திரிச்சி, ஒண்ணுக்கும் உதவாம ஊரைச்சுத்தி உலா வர்றே. உன் மனசுல என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கே..? ” என்று ஏதாவது கத்துவார். தேள் மாதிரி கொட்டுவார்.

இவரைப் பார்த்து அம்மாவும். …

” ஏன்டா. ..! அண்ணனாட்டம் வேலைக்குப் போகணும், சம்பாதிக்கணும், நாலு பேருக்கு முன்னால மதிப்பு, மரியாதையாய் நடக்கணும், வாழணும்ன்னு இல்லாமல் இப்படியே தண்டச்சோறு தின்னுக்கிட்டிருப்பது சரியா. .? ” என்று சமய சந்தர்ப்பத்தில் திட்டுவாள்.

இவர்கள்தான் இப்படி கரித்துக் கொட்டுகிறார்களேத்தவிர சேகர் அப்படியெல்லாம் கிடையாது.

வீட்டிற்குத் தேவையான…. காய்கறி, ரேசன், அரிசி, மண்ணெண்ணெய் என்று எல்லாம் வாங்கி வருவான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின் கட்டணம், இன்டர்நெட், தொலை பேசி கட்டணம் வரை எல்லாம் கட்டி ஓய்வு ஒழிச்சலின்றி எடுபிடி வேலையெல்லாம் பார்ப்பான். எப்போதும் அங்கே இங்கே என்று வீட்டு வேலைகளாகவே ஓடிக்கொண்டிருப்பான்.

இவன் இப்படியெல்லாம் வேலை செய்வதை பார்த்து, ‘ இவன் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் இந்த வேலைகளையெல்லாம் யார் பார்ப்பது, செய்வது. .? திண்டாட்டம் !’ மனசுக்குள் தோன்றும்.

ஆனால் அப்பா அம்மாவிற்கு. …?

இதெல்லாம் வேலைகளாகத் தெரியாது. நாலு பேர்களைப் போல் வெள்ளையும் சள்ளையுமாக நின்று மாதச் சம்பளம் வாங்கி வந்தால்தான் சம்பாத்தியம் என்று நினைத்து அவனை எப்போது பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருப்பார்கள்.

நாட்டில் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதென்பது குதிரைக்கொம்பு என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம். வேலைகளுக்கான தகுதித் தேர்வு, இன்டெர்வியூக்களில் தேர்ந்து வருவதென்பதும் சாமானிய விசயமில்லை.வேலை கிடைக்கிறபோது கிடைக்கட்டும் அதுவரை முயற்சி செய்வதுதான் சரி என்று இருப்பதுதான் சரி. அதில்லாமல் எப்போதுபார்த்தாலும் தண்டச்சோறு அது இதுவென்று கொட்டி, மனசு நோகச் செய்வது எந்த விதத்தில் நியாயம். .?

அவனென்ன வேலைகிடைத்து போகாமல் ஊரைச் சுற்றுகின்றானா. .? வெட்டிப்பயல்களோடு நின்று தண்டமாய் நிற்கின்றானா. ..? முயற்சி செய்துகொண்டும், வீட்டுக்கு உதவியாகவும் இருப்பவனை இப்படியே தேள் போல கொட்டிக்கொண்டிருந்தால். ..மனித மனம் ஒரு நிலையாய் இருக்காது. !

இப்படி நினைக்க எனக்குச் சொரேலென்றது.

மாடிப்படி ஏறினேன்.

வெறுந்தரையில் மல்லாக்கப் படுத்து கண்கள் பளபளக்க வானத்தை வெறித்துப் பார்ப்பவனைப் பார்க்கப் பாவமா இருந்தது.

மெல்ல அவன் அருகில் அமர. …என் கை பற்றி

” அண்ணா !!…” .. கமறினான்.

பற்றிய அவன் கையை இறுக பற்றி. ..

” கவலைப் படாதே சேகர். படிச்சுட்டு அஞ்சு வருடமாய் வேலை இல்லாதவரைக்கும் அம்மா அப்பாகிட்ட நானும் இப்படித்தான் திட்டு வாங்கி இருக்கேன். நரகத்தை அனுபவிச்சிருக்கேன். நேற்றைக்கு நான். இன்றைக்கு நீ. இப்படித்தான் காலச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கு. இப்போ உள்ள சூழ்நிலைக்கு அப்பா, அம்மா மேல உனக்கு கோபம், வெறுப்பு வர்றது நியாயம், சரி. ஆனா இது தப்பு. அப்பா, அம்மா, தன்னைக் காப்பாத்துறதுக்காக உன்னை வேலைக்குப் போகச் சொல்லி துன்புறுத்தல, துரத்தலே. நீ நல்லா இருக்கணும் என்கிற நினப்பு அப்படி துரத்துறாங்க. முயற்சியில் துவளக்கூடாது என்கிறதுக்காகத்தான் இப்படி உன்னை என்னை ஓட ஓட விரட்டுறாங்க.இதை நீ புரிஞ்சுக்கணும். நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன். அதனால் நீயும் அவுங்க பேச்சுகளை வலிகளாய் எடுத்துக்காம வக்கணை, அக்கறையாய் எடுத்து முயற்சி செய். நமக்கான வேலை சீக்கிரம் கிடைக்கும் ! ” ஆதரவாய் தடவி கொடுத்து சொன்னேன்.

” சரிண்ணா. ..! ” சேகர் தெளிந்து நம்பிக்கையாய்ச் சொல்லி கண்களைத் துடைத்தான்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *