கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 14,514 
 

பள்ளியாசிரியரின் பெயர் பார்ட். அவருக்கு ஆண்டெர்ஸ் எனும் சகோதரர் ஒருவர் இருந்தார். அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள். ஒருவரைப்பற்றியொருவர் சிந்தித்தவண்ணமாக இருந்தார்கள். ஒன்றாகவே இராணுவ சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒன்றாகவே நகரத்தில் வசித்தார்கள். ஒன்றாகவே போருக்குப் போனார்கள். ஒரே படைப்பிரிவில் பணியாற்றினார்கள், இருவருமே `கார்ப்பொரல்’ நிலைவரை பதவி உயர்வு பெற்றார்கள். அவர்கள் போரிலிருந்து வீடு திரும்பியதும்,அவர்கள் இருவரையுமே திடகாத்திரமான சிறந்த மனிதர்கள் என்று எல்லோரும் சொன்னார்கள்.

பிறகு அவர்களுடைய அப்பா காலமானார். அவர் நிறைய சொத்துக்களை வைத்து விட்டுப் போயிருந்தார். அதைப் பங்கிட்டுக் கொள்வது சிரமமாக இருந்தது. ஆகவே அவர்கள் அந்தச் சொத்துக்கள் தங்களுடைய பாசப் பிணைப்புக்கு குறுக்கே இடையூறாக வர அனுமதிக்கக் கூடாது என்றும், அவற்றை ஏலத்தில் விட்டு விரும்பியவர்கள் வாங்கிக் கொள்வதென்றும், பிறகு மொத்தத் தொகையை பிரித்துக்கொள்ளலாம் எனவும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

அவ்வாறே செய்யப்பட்டது.

அவர்களுடைய அப்பா தங்கத்தினாலான பெரிய கைக்கடிகாரம் ஒன்றை வைத்திருந்தார். அந்தப் பகுதியிலிருந்த மக்கள் பார்த்திருந்த ஒரே தங்கக் கடிகாரம் அதுதான் என்பதால், அது நீண்ட நெடுந்தொலைவு அறியப்பட்டிருந்தது. அந்தக் கடிகாரம் ஏலத்துக்கு வந்தபோது, பல பணக்காரர்கள் அதை விரும்பினார்கள். ஆனால், இரண்டு சகோதரர்களுமே அதை ஏலத்தில் கேட்டதால், மற்றவர்கள் ஏலம் கேட்பதைத் தவிர்த்துவிட்டார்கள். ஆண்டெர்ஸ் அதைத் தனக்கு விட்டுக் கொடுப்பான் என்று பார்ட் எதிர்பார்த்தான். ஆண்டெர்சும் பார்ட்டைப் பற்றி அப்படியே நினைத்தான்.

ஒருவனை விஞ்சி ஒருவன் மாறி ஏலம் கேட்டார்கள். அப்படிக் கேட்டபோது அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாகப் பார்த்துக்கொண்டார்கள். கடிகாரத்தின் விலை இருபது டாலர்களை எட்டியபோது, தன் சகோதரன் இப்படிச் செய்வது அவனுக்கு அழகல்ல என்று பார்ட் உணரத் தொடங்கினான். அவன் விலையை உயர்த்தி அது கிட்டத்தட்ட முப்பது டாலர்களை எட்டும் வரை கேட்டான். அப்போதும் ஆண்டெர்ஸிடம் நல்லவனாக நடந்து கொண்டுள்ளான் என்பதையெல்லாம் ஆண்டெர்ஸ் அடியோடு மறந்துவிட்டான் என்று பார்ட் வருத்தமுற்றான். மேலும், இருவரில் பார்ட் தான் மூத்தவன். கடிகாரத்தின் விலை முப்பதுக்கு மேலே போயிற்று. ஆயினும் ஆண்டெர்ஸ் விடுவதாக இல்லை.

பிறகு பார்ட் விலையை ஒரேயடியாக நாற்பதுக்கு உயர்த்தினான். அப்புறம் அவன் தன் சகோதரனைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. ஏல அறையில் அமைதி நிலவியது. அமீனா மட்டும் தொகையை அமைதியாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அங்கே நின்றபடி ஆண்டெர்ஸ், பார்ட்டினால் நாற்பது டாலர்கள் வரை செலவழிக்க முடியும் என்றால், அது தன்னாலும் முடியும் என்று நினைத்தான். தான் அக்கடிகாரத்தைப் பெறுவதைக் கண்டு பார்ட் பொறாமை கொள்வானேயாகில், என்னைவிட அதிக விலை கொடுத்து அவனே அதைப் பெற்றுக் கொள்ளட்டுமே என்றும் ஆண்டெர்ஸ் நினைத்தான். அது பார்ட்டுக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகத் தோன்றியது. தாழ்ந்த குரலில் அவன் ஐம்பது டாலர்களுக்கு ஏலம் கேட்டான். அங்கே மக்கள் அதிக அளவில் இருந்தனர். அத்தனை பேருக்கும் நடுவே தன் சகோதரன் தன்னை ஏளனப்படுத்துவதைத் தான் அனுமதிக்கக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட ஆண்டெர்ஸ் மீண்டும் ஏலத்தொகையை உயர்த்தினான். பார்ட், ஹோவென்று சிரித்தான்.
“நூறு டாலர்களையும், மேலும் என்னுடைய சகோதரத்துவத்தையும் பேரத்தில் வைக்கிறேன்” என்றவன் தன் குதிகாலை ஊன்றித் திரும்பி, சடக்கென்று அறையை விட்டு வெளியே சென்றான்.

சற்று நேரம் கழித்து, அப்போதுதான் ஏலத்தில் வாங்கிய குதிரைக்கு அவன் சேணம் கட்டிக்கொண்டிருந்தபொழுது, அறையிலிருந்து வெளியே வந்த ஒருவன் அவன் அருகில் வந்தான்.

“கடிகாரம் உனக்குத்தான்; ஆண்டெர்ஸ் விட்டுக்கொடுத்துவிட்டான்.”

அந்த செய்தியைக் கேட்டதும் அவனுக்குள் கழிவிரக்க உணர்வு பீறிட்டது. அவன் அப்பொழுது தன் சகோதரனைப் பற்றித்தான் நினைத்தானேயன்றி கடிகாரத்தைப் பற்றியல்ல. சேணம் ஏற்கெனவே சரியான இடத்தில் இருந்தது. ஆனால் அவன் தன் கைகளால் குதிரையைத் தடவியபடி ஏறுவதா வேண்டாமா என்று குழம்பினான். பலர் வெளியே வந்தார்கள். அவர்களுக்குள் ஆண்டெர்ஸும் இருந்தான். சேணம் பூட்டப்பட்ட குதிரையுடன் தன் சகோதரன் புறப்படத் தயாராக இருந்ததைக்கண்ட அவனுக்கு பார்ட்டின் மனதில் ஓடிக்கொண்டிருப்பவை எத்தகைய எண்ணங்கள் என்பது கொஞ்சமும் தெரியவில்லை.

“கடிகாரத்துக்காக நன்றி, பார்ட்!” அவன் சத்தம்போட்டுச் சொன்னான். “நீ போகும் வழியில் உன்னுடைய சகோதரன் போவதை இனி நீ ஒருநாளும் பார்க்கமாட்டாய்!”

“நீயும் ஒருநாளும் என் கை உன் வீட்டுக்கதவைத் தீண்டுவதைப் பார்க்கமாட்டாய்” என்று பார்ட் பதிலளித்தான். வெளிறிய முகத்துடன் அவன் தன் குதிரையின் மீது தாவிஏறினான்.

அன்றைய தினத்துக்குப் பிறகு அவர்கள் இருவருமே தங்கள் தந்தையோடு சேர்ந்து வாழ்ந்த வீட்டில் மீண்டும் கால்வைக்கவேயில்லை.

அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே ஆண்டெர்ஸ் ஒரு எளிய விவசாயக் குடும்பத்துப் பெண்ணை மணந்து கொண்டான். ஆனால் அவன் தன்திருமணத்துக்குப் பார்ட்டை அழைக்க-வில்லை. பார்ட்டும் தேவாலயத்துக்குப் போகவில்லை. திருமணம் செய்து கொண்ட முதல் ஆண்டிலேயே ஆண்டெர்ஸ் தன் ஒரே பசுவை இழந்துவிட்டான். அது வீட்டுக்கு வடக்குப் பக்கத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே இறந்துகிடந்தது. அது எதனால் இறந்தது என்பதை யாராலும் விளக்கமுடியவில்லை. அவனுக்கு அடுக்கடுக்காகப் பல துன்பங்கள் ஏற்பட்டன. அவனுடைய நிலைமை மோசத்திலிருந்து படுமோசமானது. எல்லாவற்றுக்கும் மேலாக மிகப் பெரிய அடியாக கடுங்குளிர் காலத்தில் அவனுடைய வைக்கோற் போரும் அவற்றுக்குள்ளேயிருந்தவையும் ஓர் இரவு தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின. எப்படி நெருப்புப் பிடித்தது என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

“எனக்குக் கெடுதல் நினைக்கிற யாரோ ஒருவரால்தான் இது செய்யப்பட்டிருக்கவேண்டும்” என்றான் ஆண்டெர்ஸ். இரவு முழுவதும் அவன் அழுதான். அவன் ஏழையாகிப் போனான். வேலை பார்ப்பதற்குரிய உற்சாகத்தையும் அவன் இழந்துவிட்டான்.

தீப்பிடித்ததற்கு மறுநாள் பார்ட் அவனுடைய சகோதரன் வீட்டுக்கு வந்தான். ஆண்டெர்ஸ் படுக்கையில் படுத்திருந்தான். பார்ட் வீட்டுக்குள் நுழைந்ததும் ஆண்டெர்ஸ் விருட்டென்று துள்ளி எழுந்தான்.

“உனக்கு இங்கே என்ன வேண்டும்?” என்று கேட்டு பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன் சகோதரனைப் பார்த்து முறைத்த வண்ணம் நின்றிருந்தான். சற்று நேரம் தாமதித்தபின் பார்ட் பதில் சொன்னான்.

“நான் உனக்கு உதவி செய்ய விரும்புகிறேன். ஆண்டெர்ஸ், நீ மோசமான நிலையில் இருக்கிறாய்.”

“நான் எப்படி ஆக வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ அதைக் காட்டிலும் மோசமாக ஒன்றும் நான் ஆகிவிடவில்லை. போய்விடு. இல்லையென்றால் என்னால் எவ்வளவு தூரம் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.”

“நீ தவறாக நினைக்கிறாய் ஆண்டெர்ஸ். நான் வருந்துகிறேன்…”

“போய் விடு, பார்ட். இல்லாவிட்டால் ஆண்டவன் நம் இருவருக்கும் கருணை காட்டட்டும்.”

பார்ட் பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தான்.

“உனக்குக் கடிகாரம் வேண்டுமென்றால், அவன் நடுங்கும் குரலில் சொன்னான், “நீ அதை எடுத்துக் கொள்ளலாம்.”

“போய் விடு பார்ட்!” அவனுடைய சகோதரன் உரக்கக் கத்தினான். மேலும் தொடர்ந்து அங்கே இருக்கவிரும்பாதவனாய் பார்ட் அங்கிருந்து கிளம்பினான்.

இடைப்பட்ட காலத்தில் பார்ட்டுக்கு நடந்தது இதுதான் : தன் சகோதரனுக்கு நேர்ந்த துயரச் சம்பவங்களைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவன் மனம் மாறியது. ஆயினும் தன் சுயகௌரவம் அவனைக் கட்டிப்போட்டிருந்தது. தேவாலயத்துக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு ஏற்பட்டது. அங்கே அவன் பல நல்ல முடிவுகளை சங்கற்பமெடுத்து, அவற்றை நிறைவேற்றுவதாகவும் தீர்மானித்துக் கொண்டான். ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்கான வலிமை அவனிடம் இல்லை. வீட்டைக் கண்களால் காணும் தூரம் வரை அவன் அடிக்கடி அங்கே போனான், ஆனால் யாராவது அப்போதுதான் அங்கிருந்து வெளியே வருவார்கள் அல்லது அந்நியர்கள் இருப்பார்கள், அல்லது ஆண்டெர்ஸ் வெளியே இருந்து மரத்தை வெட்டிக் கொண்டிருப்பான். எப்போதும் வழியில் ஏதாவது ஒரு தடை இருக்கும்.

மாறாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை, குளிர்காலத்தின் முடிவில் அவன் மீண்டும் தேவாலயத்துக்குப் போனான்; அந்த ஞாயிற்றுக்கிழமை ஆண்டெர்ஸும் அங்கே இருந்தான். பார்ட் அவனைப் பார்த்தான். அவன் வெளுத்து, இளைத்துப் போயிருந்தான். சகோதரர்கள் ஒன்றாக இணைந்திருந்தபோது அணிந்திருந்த அதே ஆடைகளையே அப்பொழுதும் அணிந்திருந்தான். ஆனால் அவை இப்போது பழையதாகி ஒட்டுப்போடப்பட்டிருந்தன. பூசை நேரம் முழுதும் ஆண்டெர்ஸ் சாமியாரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அன்பும் சாந்தமும் கொண்டவனாக இருப்பதாக பார்ட்டுக்குத் தோன்றியது. அவன் தங்களுடைய குழந்தைப் பருவ நாள்களை நினைவுகூர்ந்தான். அப்பொழுதெல்லாம் ஆண்டெர்ஸ் எவ்வளவு நல்ல பையனாக இருந்திருந்தான். அன்று பார்ட் ஆண்டவர் இராமப்போஜன விழா நன்மையைக்கூட பெற்றுக்கொண்டான். என்ன நேரிட்டாலும் சரி, தன் சகோதரனுடன் சமாதானம் செய்துகொள்வதாக அவன் ஆண்டவன் முன் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டான்.

அவன் திராட்சை ரசத்தைப் பருகியபோது, அந்த முடிவு அவனுடைய ஆன்மாவினூடே புகுந்து அவன் எழுந்தபோது தன் சகோதரனிடம்போய் அவன் அருகே இருந்த இருக்கையில் அமரவேண்டும் என்ற ஓர் உத்வேகம் அவனுள் ஏற்பட்டது. ஆனால் வழியில் யாரோ இருந்தார்கள். ஆண்டெர்ஸ் நிமிர்ந்து பார்க்கவில்லை. பூஜை முடிந்த பிறகும்கூட வழியில் ஏதோ தடை இருந்தது. அங்கே நிறைய ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆண்டெர்ஸின் மனைவி அவனோடு இருந்தாள். அவளை பார்ட்டுக்குத் தெரியாது. ஆண்டெர்ஸின் வீட்டுக்குப் போய் அவனைப் பார்த்து, அவனிடம் அமைதியாகப் பேசுவதே நல்லது என்று பார்ட் முடிவு செய்தான்.

மாலை வந்ததும் அவன் புறப்பட்டான். கதவுவரை போனான். தயங்கி நின்றான். அவனுடைய பெயர் பேச்சில் அடிபட்டதைக் கேட்டுக்கொண்டு நின்றான். ஆண்டெர்ஸின் மனைவி பேசிக்கொண்டிருந்தாள்.

“இன்று காலை அவர், ஆண்டவன் போஜனப் பெருவிழாவில் நன்மை வாங்கிக்கொண்டார். நிச்சயமாக அவர் உங்களைப் பற்றி நினைத்திருப்பார் என்று எனக்குத் தெரியும்” என்றாள் அவள்.

“இல்லை. அவன் நினைத்துக்கொண்டிருந்தது என்னைப் பற்றியல்ல” ஆண்டெர்ஸ் பதிலளித்தான். “எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் தன்னைப் பற்றி மட்டும்தான் சிந்திப்பான்”.

நீண்ட நேரம் எவ்விதமான பேச்சும் இல்லை. அங்கே நின்றிருந்த பார்ட்டுக்கு அந்தக் குளிர் மிகுந்த இரவிலும் வியர்த்தது. உள்ளேயிருந்த ஆண்டெர்ஸின் மனைவி கொதிக்கும் பாத்திரத்தில் எதையோ முனைப்புடன் செய்து கொண்டிருந்தாள். அடுப்பிலிருந்த நெருப்பு சடசடத்து உஸ்ஸென்று சீறியது; ஒரு குழந்தை அவ்வப்போது அழுதது; ஆண்டெர்ஸ் தொட்டிலை ஆட்டிவிட்டான். நீண்ட நேரம் கழித்து ஆண்டெர்ஸின் மனைவி மீண்டும் பேசினாள்.

“நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட நீங்கள் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“நாம் வேறு எதைப் பற்றியாவது பேசலாம்” என்றான் ஆண்டெர்ஸ்.

சற்று நேரம் கழித்து ஆண்டெர்ஸ் வெளியே போவதற்காக எழுந்தான். பார்ட் விறகுக்கொட்டகையில் ஒளிந்து கொள்ள வேண்டியதாயிற்று. ஒரு கை நிறைய விறகு எடுக்க ஆண்டெர்ஸும் அந்தக் கொட்டகைக்கே வந்தான். தான் நின்றிருந்த மூலையிலிருந்து பார்ட் அவனை நன்றாகப் பார்க்கமுடிந்தது. அவன் ஞாயிற்றுக்கிழமை அணிந்திருந்த கந்தலாகிப்போன ஆடைகளை அகற்றிவிட்டு பார்ட்டினுடையதைப் போன்றதேயான சீரான உடையை அணிந்திருந்தான். அதைத் தாங்கள் அணிந்துகொள்ளவே கூடாதென்றும், தங்கள் குழந்தைகளுக்குக் குடும்பச் சொத்தாகத் தந்து விட வேண்டுமென்றும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டெர்ஸின் உடை பழையதாகி ஒட்டுப் போடப்பட்டிருந்தது. அதனால் அவனுடைய வலிமையான திடகாத்திரமான உடல் கந்தல் துணியால் மூட்டையாக கட்டப்பட்டது போலிருந்தது. அதே சமயத்தில் தன்னுடைய சட்டைப் பையில் தங்கக் கடிகாரம் எழுப்பிக்கொண்டிருந்த `டிக் டிக்’ ஓசையைப் பார்ட்டினால் கேட்க முடிந்தது. ஆண்டெர்ஸ் சுள்ளிக்கட்டைப் புதரின் பக்கம் போனான். ஆனால் குனிந்து விறகைச் சேகரித்து அள்ளுவதற்குப் பதிலாக அவன் விறகுக்கட்டு ஒன்றின் மீது சாய்ந்து, நட்சத்திரங்களுடன் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்த வானத்தை நிமிர்ந்து பார்த்தான். பிறகு கனத்த பெருமூச்சை விட்டபடி தனக்குத்தானே, “சரி…. சரி…. சரி…. அய்யோ கடவுளே, அய்யோ கடவுளே!” என்று முணு முணுத்துக் கொண்டான்.

பார்ட் உயிரோடு இருந்தவரையிலும் அந்த வார்த்தைகளை அவன் மறக்கவேயில்லை. அவன் முன்னால் ஒரு அடி எடுத்து வைக்கவிரும்பினான். அதற்குள் ஆண்டெர்ஸ் பயங்கரமாக இருமினான். அது மிகவும் கடினமாகத் தெரிந்தது. அவனைத் தடுத்து நிறுத்த மேற்கொண்டு வேறு எதுவும் தேவைப்படவில்லை. ஆண்டெர்ஸ் தன் கை நிறையச் சுள்ளிகளை எடுத்துக்கொண்டான். வெளியே போகும் போது கையிலிருந்த குச்சுகள் பார்ட்டின் முகத்தில் குத்தும் அளவு அவ்வளவு நெருக்கமாக உரசிக்கொண்டே போனான்.

முழுதாகப் பத்து நிமிடங்கள் ஆணியடித்தது போல பார்ட் அங்கேயே நின்றான். உணர்ச்சிப் பெருக்கு தோற்றுவித்த மன அழுத்தத்துக்கு மேலாகக் குளிர் அவனைப் பற்றிக்கொண்டு போட்டு உலுக்கி எடுத்திருக்காவிட்டால் இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்திருப்பானோ தெரியாது. பிறகு அவன் வெளியேறினான். தான் இப்பொழுது அங்கே நுழைய முடியாத அளவுக்குக் கோழை என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதனால் அவன் வேறு ஒரு திட்டத்தை வகுத்தான். அவன் அப்போதுதான் வெளியேறிய மூலையிலிருந்த சாம்பல் பீப்பாய்க்குள்ளிருந்து அவன் சில கரித்துண்டுகளைத் தேடி எடுத்தான், ஒரு தேவதாரு மரக்குச்சியைக் கண்டெடுத்தான், வைக்கோற் போர் மீது ஏறினான், கதவைச் சாத்திவிட்டு விளக்கை ஏற்றினான். பந்தத்தைக் கொளுத்திய பிறகு காலையில் ஆண்டெர்ஸ் களத்துக்கு வரும்போது லாந்தரை மாட்டும் மூலையைத் தேடினான். பார்ட் தன் தங்கக் கடிகாரத்தை எடுத்து அந்த மூலையில் மாட்டித் தொங்கவிட்டான். விளக்கை அணைத்து விட்டு வெளியே கிளம்பினான். அவனுடைய மனம் மிகவும் இலேசானது. அதன் பிரதிபலிப்பாக அவன் ஒரு இளைஞனைப் போல உறைபனியின் மீது ஓடினான்.

முந்தைய இரவு அந்த வைக்கோற்போர் எரிந்துபோய் விட்டிருந்ததாக மறுநாள் காலை அவன் கேள்விப்பட்டான். அநேகமாகக் கடிகாரத்தைத் தொங்கவிட்டபோது அவன் பயன்படுத்திய தீப்பந்தத்திலிருந்து தீப்பொறிகள் தெறித்திருக்கலாம்.

இது பார்ட்டை வெகுவாக பாதித்ததன் விளைவு அவன் நாள் முழுதும் உடல்நிலை சரியில்லாதவனைப் போலத் தனித்துக்கிடந்தான். பிரார்த்தனைப் பாடல்கள் கொண்ட புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அவனுக்கு ஏதோ கோளாறாகிவிட்டது என்று வீட்டிலிருப்பவர்கள் நினைக்கிறவரை அவன் பிரார்த்தனைப் பாடல்கள் பாடித்தீர்த்தான். மாலையில் அவன் வெளியே போனான். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது. அவன் தன் சகோதரனின் வீட்டுப் பக்கம் போய் நெருப்பினால் கருகிப்போயிருந்த இடத்தைத் தோண்டினான். உருகிய தங்கம் ஒரு சிறிய கட்டியாகியிருந்ததைக் கண்டான். கடிகாரத்தில் எஞ்சியிருந்தது அதுதான்!

அதைக் கையில் எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி சமாதானமாகிவிட வேண்டும் என்ற துடிப்புடன் அவன் தன் சகோதரன் வீட்டுக்குப்போனான். ஆனால் அன்று மாலை என்ன நடந்தது என்பது ஏற்கெனவே தெரியுமே..

அவன் சாம்பலைக் கிளறித் தோண்டிக்கொண்டிருந்ததை ஒரு சிறிய பெண் பார்த்திருந்தாள். நடனத்துக்குப் போய்க்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் வழியில் அவன் பிரச்சினைக்குள்ளான அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தன் சகோதரனின் வீட்டை நோக்கிப் போனதைக் கவனித்திருந்தார்கள். அவன் தொடர்ந்து வந்த திங்கட்கிழமை அன்று அவன் எவ்வளவு விநோதமாக நடந்து கொண்டான் என்பதை அவன் வசித்த பகுதியில் வாழ்ந்தவர்கள் விளக்கினார்கள். அவனும் அவனுடைய சகோதரனும் கடுமையான விரோதிகள் என்பது ஊரறிந்த விஷயம் என்பதால், இந்த விவரங்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டன. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவனுக்கு எதிராக யாராலும் எதையும் நிரூபிக்க முடியவில்லை. ஆயினும் அனைவரின் சந்தேகமும் அவனைச் சுற்றியே வட்டமிட்டது. இப்போது அவன் தன் சகோதரனை நெருங்குவதற்குண்டான வாய்ப்பு முற்றிலும் அற்றுப்போயிற்று.

வைக்கோற் போர் எரிந்தபோது ஆண்டெர்ஸ் எதுவும் பேசாமல் பார்ட்டைப் பற்றியே நினைத்திருந்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் மாலை முகம் வெளுத்துப்போனவனாக விநோதமான நிலையில் வீட்டுக்குள் நுழைந்த பார்ட்டைக் கண்டதும் அவன் தன் குற்ற உணர்வினால்தான் வேதனைக்கு ஆளாகியிருக்கிறான் என்று ஆண்டெர்ஸ் நினைத்தான். ஆனால் தன் சகோதரனுக்கு எதிராக இவ்வளவு பயங்கரமான செயலைச் செய்தவனுக்கு மன்னிப்பே இருக்க முடியாது என்றும் நினைத்தான். மேலும் தீப்பிடித்த அன்று மாலை பார்ட் தன்னுடைய வீட்டை நோக்கி வந்ததை ஜனங்கள் பார்த்திருப்பதைப் பற்றியும் கேள்விப்பட்டான். விசாரணையில் எதுவும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்றாலும் தன்னுடைய சகோதரன்தான் குற்றவாளி என்பதில் ஆண்டெர்ஸ் தீர்மானமாக இருந்தான்.

பார்ட் நல்ல ஆடைகளையும் ஆண்டெர்ஸ் பழைய கந்தல்களையும் அணிந்தபடி அவர்கள் விசாரணையின் போது ஒருவரையொருவர் சந்தித்தார்கள். உள்ளே நுழையும்போது பார்ட் தன் சகோதரனைப் பார்த்தான். அவனுடைய கண்களில் தென்பட்ட கெஞ்சலை ஆண்டெர்ஸின் உள் மனம் தெளிவாக உணர்ந்தது. `நான் எதையும் தெரிவிக்கக்கூடாது என அவன் விரும்புகிறான்’ என்று ஆண்டெர்ஸ் நினைத்தான். அவன் தன் சகோதரனைச் சந்தேகப்படுகிறானா என்று விசாரணையில் கேட்கப்பட்டதும், அவன் சத்தமாகவும் தீர்மானமாகவும் “இல்லை” என்று பதில் சொன்னான்.

அன்றைய தினத்துக்குப் பிறகு ஆண்டெர்ஸ் அதிகமாக குடிக்கத் தொடங்கினான். விரைவிலேயே மிகவும் சீரழிந்துவிட்டான். குடிக்க-வில்லையென்றாலும் பார்ட்டின் நிலை அதைக்காட்டிலும் மோசமாயிற்று. ஜனங்கள் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அவன் அவ்வளவு மாறிவிட்டான்.

ஒரு நாள் முதிர்மாலைப்பொழுதில் பார்ட் வாடகைக்கு எடுத்திருந்த சிறிய அறைக்குள் ஓர் ஏழைப்பெண் நுழைந்து அவனைத் தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டாள். அவன் அவளை அடையாளம் கண்டுகொண்டான். அவள் அவனுடைய சகோதரனின் மனைவி. அவள் வருகைக்கான நோக்கம் என்ன என்பதை அவன் உடனேயே தெரிந்து கொண்டான். மனக்கவலையால் முழுவதும் வெளிறிப்போன அவன் தன் ஆடைகளைச் சீர்படுத்திக்கொண்டு, மறு வார்த்தை ஏதும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தான். ஆண்டெர்ஸ் வீட்டு ஜன்னலிலிருந்து வெளிப்பட்ட மங்கலான வெளிச்சம் அவ்வப்போது மின்னுவதும் மறைவதுமாக இருந்தது. பனியினால் பாதை மறைந்திருந்த நிலையில் அவர்கள் அந்த வெளிச்சத்தை இலக்காகக் கொண்டு நடந்தார்கள். பார்ட் மீண்டும் கதவருகே நின்றபோது உள்ளிருந்து வந்த விநோதமான வாடை அவனை நிலைகுலையச் செய்தது. அவர்கள் உள்ளே சென்றார்கள். ஒரு சிறிய குழந்தை அடுப்பின் அருகே உட்கார்ந்து கொண்டு கரிக்கட்டியைத் தின்று கொண்டிருந்தது. அதன் முகம் முழுவதும் கரிபடிந்திருந்தது. ஆனால் அது நிமிர்ந்து பார்த்து தன்னுடைய வெண்ணிறப் பற்களைக் காட்டி சிரித்தது. அது அவனுடைய சகோதரனின் குழந்தை.

படுக்கையில் எல்லாவிதமான துணிமணிகளையும் போர்த்தியவாறு, வெளுத்து, எலும்புக்கூடாகி, ஆண்டெர்ஸ் படுத்திருந்தான். அவனுடைய நெற்றி மேடாகவும் சீராகவும் இருந்தது. அவன் தன் குழிவிழுந்த கண்களால் தன் சகோதரனை உற்றுப் பார்த்தான். பார்ட்டின் முழங்கால்கள் நடுங்கின. அவன் படுக்கையின் கால்மாட்டில் உட்கார்ந்து,அடக்கமுடியாமல் அழத் தொடங்கினான்.நோயுற்றிருந்தவன் ஏதும் சொல்லாமல் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் கழித்து அவன் தன் மனைவியை வெளியே போகும்படி சொன்னான். ஆனால் பார்ட் அவளை அங்கேயே இருக்கும்படி சைகை செய்தான். பிறகு இரு சகோதரர்களும் ஒருவரோடொருவர் பேசத் தொடங்கினார்கள். கடிகாரத்துக்கு ஏலம் கூறிய அந்த நாளிலிருந்து அவர்கள் இறுதியாகச் சந்தித்திருக்கிற இந்த நாள் வரையிலான இடைப்பட்ட பல வருடங்களில் நடந்தவைகளை அவர்கள் இருவரும் விஸ்தாரமாகப் பேசித்தீர்த்தார்கள். பார்ட் எப்போதும் தன்னுடன் எடுத்துச் சென்ற அந்தத் தங்கக் கட்டியை இறுதியாக எடுத்துக்காட்டினான். இத்தனை வருடங்களில் அவர்கள் இருவருமே ஒருநாள்கூட உண்மையில் மகிழ்ச்சியோடு இருந்ததில்லை என்பது அவர்களுடைய பேச்சின் மூலம் வெளிப்பட்டது.

வலிமையற்ற ஆண்டெர்ஸினால் அதிகமாகப் பேசமுடியவில்லை. ஆனால் அவன் நலமின்றி படுக்கையில் இருந்த அவ்வளவு காலமும் படுக்கை அருகே இருந்து பார்ட் அவனைப் பார்த்துக்கொண்டான்.

ஒருநாள் காலை கண் விழித்ததும் ஆண்டெர்ஸ், “நான் இப்போது முழுமையாகக் குணமடைந்துவிட்டேன்” என்றான். “அண்ணா, நாம் இனிமேல் பழைய காலத்தைப் போல எப்போதும் ஒன்றாகவே வாழ்வோம். ஒருவரை விட்டு ஒருவர் ஒருபோதும் விலகமாட்டோம்”

ஆனால் அவன் அன்று இறந்துவிட்டான்.

விதவைப் பெண்ணையும், குழந்தையையும் பார்ட் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச்சென்றான். அன்று முதல் அவர்கள் நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டார்கள். படுக்கையருகே அவ்விரு சகோதரர்கள் என்ன பேசிக்கொண்டார்களோ அது அந்த இரவில் சுவர் வழியே பரவி பள்ளத்தாக்கில் வசித்த மக்கள் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகியது. அந்த மக்களுக்கிடையே பார்ட் பெரிதும் மதிக்கப்பட்ட மனிதன் ஆனான். மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகி பிறகு அதிலிருந்து மீண்டு அமைதியைக் கண்டவன் அல்லது நீண்ட காலம் இல்லாமல் போய் மீண்டும் திரும்பி வந்தவன் என்று அவனை அவர்கள் எல்லோரும் கௌரவித்தார்கள். அவர்கள் பாராட்டிய நட்பின் காரணமாக பார்ட்டின் மனத்தில் திட சக்தி வளர்ந்தது. மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உபயோகமாக இருக்கவேண்டும் என்று அவனே சொல்லியதற்கேற்ப, பழைய இராணுவ அதிகாரியான பார்ட் பள்ளியாசிரியராகி பிறர்க்குதவியாக இருந்து ஒரு தெய்வீக மனிதன் ஆனான். முதலும் இறுதியுமாக அவன் குழந்தைகளிடம் வலியுறுத்துவதெல்லாம் அன்புதான். அவனைப் பொருத்த அளவில் குழந்தைகள் அவனை `விளையாட்டுத் தோழன்’ என்றும் `அப்பா’ என்றும் நேசிக்கும் அளவுக்கு அவன் மற்றவர்களிடம் அன்பாக இருந்தான்.

– ஜான்சன் மார்டினஸ் ஜான்சன் – தமிழில் திலகவதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *