க்ஷணப்பித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 5,032 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனோதத்துவத்தைப்பற்றி ராகவனுக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்திருந்தால் அந்தச் சங்கடங்களும் ஏற்பட்டிராது. அற்பச் சபலமும் தட்டியிராது. ஆனால், ராகவனை விட்டுவிடுவோம். உண்மையில் . மனித வாழ்க்கை மனோ தத்துவ ரீதியில் தான் நடக்கிறதா?

அது எனக்குத் தெரியாது.

மனிதனுடைய பிரதான குணங்கள் எல்லாம் ரஜோ தமோ சத்வ குணங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

ரஜோ குணமாகிய காமத்தை அமுங்கடித்தால், தமோ குணமான குரோத உணர்ச்சியின் கை ஓங்கி விடும். குரோதத்தை உள்ளடக்கினால், காமம் படம் எடுத்துச் சிறும். ரஜோ தமோ குணங்களை வெற்றி கண்டால் சத்வகுணமான சாந்த உணர்ச்சி நெஞ்சில் படரும்…

அப்படித்தானா?

கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம், ரஜோ குணத்தை அதாவது ஆசாபாசத்தை உள்ளடக்கிய விஸ்வாமித்திரர் மகா கோபி. ஆனால் மேனகை காட்டிய கண்ணசைப்பில் தமோ குணம் படத்தைச் சுருக்கிப் படுத்துவிட்டது. எனவே, காமம் தன் செந்நாக்குகளைச் சுழற்றி நக்கிக்கொண்டு சிறியெழுந்தது. அதன் விளைவாக சகுந்தலை பிறந்து விட்டாள். ஆனால், நீதிஷ்ட மகரிஷி: இப்படிப்பட்டவரல்ல, அவர் ரஜோ தமோ குணங்களை எல்லாம் வென்றவர். சாந்த செரூபி , நமது நாட்டுக் கவிஞர்கள் விஸ்வாமித்திரரைப் புலனுணர்ச்சிகளை எல்லாம் உள்ளடக்கியவர் என்றும், வசிஷ்டரைப் புலதுனர்ச்சிகளை எல்லாம் அறுத்தெறிந்துவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதாவது விஸ்வாமித்திரரை எந்தச் சம்யத்திலும் புலனுணர்ச்சி ஆட்கொள்ளும், ஆனால், வசிஷ்டரைப் புலனுணர்ச்சிகள் அசைத்துவிட முடியாது என்பதுதான் தாத்பரியம்.

ராகவன் வசிஷ்டன் அல்ல; விஸ்லாமித்திரன் தான். அவன் ஒரு குடும்பஸ்தன், வசிஷ்டரைப்போல் புலனுணர்ச்சி களை செல்லாம் சுட்டெரித்துவிட்டு, காமக் குரோத மத மாச்சரியங்க வென்றுவிட்ட, சாந்த சொரூபியாய் இருக்க அவனால் முடியாது; இருந்தால் அது தர்ம விரோதம், ஆனால் விஸ்வாமித்திரரைப்போல் அவன் முன்கோபியாயிருந்தான்; முன்கோபம் அவனுக்கு உடன்பிறப்பு. எனவே அவன் காமத்தை உள்ளடக்கிய கர்மயோகி என்றும் அர்த்தமல்ல; அவன் காமத்தை அடக்கவில்லை.

அதற்குக் காரணம் அவன் மனைவி, ஸ்ரீமதி ராகவனன ராஜம்மா நல்ல அழகி. மூக்கும் முழியும் செதுக்கிவைத்த மாதிரி. அழகானவள்; நிறம் சிவப்பு. சுண்டினால் ரத்தம் தெறிக்கும் என்பார்களே அத்தனை அழகு. அவள் உடல் மட்டும் அப்படியல்ல; உள்ளமும் அப்படித்தான். ஒரு சுடுசொல்லைப் பொறுக்கமாட்டாள், இப்படிப்பட்ட அழகியை வைத்துக்கொண் டு, ராகவன் காமத்தைப் பூட்டுப் போட்டு வைக்க முடியாது. ராகவன் அப்படிச் செய்யவில்லை, அதற்கு அத்தாட்சியாக, சொர்ண விக்ரகம் பெற்றெடுத்த கிருஷ்ண விக்ரகம் மாதிரி செல்வச் சிரஞ்சீவி பாலச்சந்திரன் “அப்பா அப்பா’ என்று சுற்றி வருகிறான்.

இருந்தாலும் ராகவனுக்குச் சமயங்களில் ரஜோ குணம் உள்ளடங்கிப் போவதுண்டு. அதற்குக் காரணம் அவன் பார்த்துவந்த குமாஸ்தா உத்தியோகம்; ராஜம்மா அல்ல! சர்க்கார் சட்டப்படி தினம் ஏழு மணி நேர வேலையென்றாலும், அதற்காக ஐந்து மணிக்கே கோட்டை மாட்டிக் கொண்டு அவனால் கிளம்பிவிட முடியாது. மேல் உத்தி யோகஸ்தரின் கெடுபிடிக்குப் பயந்து சமயங்களில் ஏழு எட்டு மணிவரை வேலை பார்த்துவிட்டுத்தான் திரும்புவான் ராகவன்! காலையில் பரக்கப் புரக்கச் சுடுசாதம் சாப்பிட்டு .. விட்டு, மத்தியானம் ஆபீஸ் காண்டீனில் ஒரு கப் காப்பியோ, டிபனோ சாப்பிட்டுவிட்டுச் செக்கு மாடு மாதிரி திரும்பிவரும் . ராகவன் உடம்பில் ரஜோ குணம் இருக்காது. பசியின் பிடுங்கலால் தமோ குணம்தான் இருக்கும். வயிற்றில் பசி எடுத்தால் காமம் படுத்துவிடும்; கோபநாடி படபடக்கும். இந்த நிலைமையில் ராகவன் வீடு திரும்பினால், அவனது தமோ குணத்தைப் பசியாற்றுவதன் மூலம் உள்ளடக்கி, ரஜோ நாடியைத் தட்டி யெழுப்புவது சகதர்மிணியின் கடமை, ராஜம்மாவோ பட்டணக்கரைப் பிறவி! எனவே அந்த ஞானம் அவ்வளவாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. எனவே அவள் சர்வாலங்கார பூஷிதையாக சீவிப் பூ முடித்த சிங்காரியாக வந்து ஸ்பரிச சுகம் காட்ட வந்தால், காமத்துக்கும் குரோதத்துக்கும் பகைதான் மூளும். ரஜோகுணம் தன் பலத்தைச் சேகரிப்பதற்குள் தமோ குணம் அவள் மீது சீறிப் பாய்ந்துவிடும். தன் புருஷன் ஏன் இப்படி எரிந்து விழுகிறான் என்பது அவளுக்குத் தெரியாது; அதுபோலவே தனக்கு ஏன் இந்தச் சிடு சிடுப்பு ஏற்படுகிறது என்பதும் ராகவனுக்குத் தெரியாது. அவர்கள் இருவரும் மனோதத்து வத்தைக் கண்டார்களா? ‘ரஜோ தமோ சத்வகுண சொருபங்களைக் கண்டார்களா?

எனவே அவர்களுக்குள் அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்படுவதுண்டு. சண்டை பிடித்து ஓய்ந்த பிறகு ராகவன் சமயங்களில் “ராஜி, இன்னம் என் மேலே கோபமா? என்னமோ க்ஷணச்சித்தம், க்ஷணப்பித்தம் என்பார்களே அந்தப் புத்தி எனக்கு, கொஞ்சம் முகத்தைத் திருப்பேன்!” என்று கொஞ்சுவான். இப்படிச் சமாதானம் ஏற்படாவிட்டால், சமயங்களில் ராஜம்மா கத்திக்கொண்டு, தாய் வீடு சென்றுவிடுவாள். அவளுக்குத் தாய் வீடு பக்கத்து ஊரிலேயே இருந்ததாலும், தனியாகவே போய்வந்து பழக்கம் இருந்ததாலும், அந்த எண்ணம் தோன்றிவிட்டால் அவள் வீட்டிலேயே தரிப்பதில்லை; ராகவனும் விட்டுப் பிடிப்பான், என்றைக்காவது ஒருநாள் இவனாகப் போய்க் கூட்டி வருவான்; அல்லது அவளாகவே ‘சந்திரனுக்கு அப்பா மேல் தேடிவிட்டது’ என்று ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு, வந்து சேருவாள்.

ஆனால் இப்போது கொஞ்ச நாளாய் ராகவனுக்கு இந்த க்ஷண்ணப்பித்து க்ஷணச்சித்த புத்தி அடிக்கடி தலைகாட்டிக் கொண்டே இருந்தது, அதற்குக் காரணம் அவன் வீட்டுக்குப் புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரி!’

மூக்காயிக்கு அந்தப் பெயரை வைத்ததைக் கண்டு கொஞ்சம் முகத்தைச் சுழிக்கத்தான் தோன்றும். ஆனால் அவருடைய முக்கைப் பார்த்தவர்கள் நிச்சயம் முகத்தைச் சுழிக்கமாட்டார்கள்..

எள்ளுப்பூ நாசி என்று புலவர்கள்வர் கணிக்கிறார்களே, அந்த மாதிரி மூக்கும் அல்ல; அவளுடைய மூக்கு அழகாகக் குவித்து உ ருண்டு தனி அழகோடு விளங்கியது. மூக்குக்குக் கீழே வரிக்கோடு கீறியதுபோல் குவிந்து, எந்தச் சமயத்திலும் புன்னகை பூட்ட போலவே தோன்றும் ஒரு மயக்கத்தை ஊட்டும் உதடுகள், மூக்கின் அழகை எடுத்துக்காட்டும் முத்தாய்ப்பு, நல்ல நாட்டுப்புறப் பிறவி. எனவே மேனி கொழுகொழு வென்றிருக்கும்; ஊளைச்சதை கிடையாது. திரட்சியும் திண்மையும் பெற்ற தேகக்கட்டு. அவள் முகத்தி லுள்ள லட்சுமிகரமான களையாரையுமே வசீகரித்துவிடும்; காலையில் எழுந்தவுடன் அந்த மாதிரிக் களை பொருந்திய மூகத்தில் விழித்தால் அன்று முழுவதுமே அலுப்புத் தட்டாது. அவளது பருவ எழிலுக்கும் உருவ வாய்ப்புக்கும் அவள் தோல் மட்டும் கொஞ்சம் சிவப்பாக இருந்தால், எந்த சணப்பித்தல் நவநாகரிக யுவனும், அவளை மோப்பம் பிடித்துத் திரியவே விரும்புவான். பொதுவாக ஆண்மையுள்ள எவனும் அவளைக் கண்ட மாத்திரத்தில் கறுப்பையும் சிவப்பையும் பார்க்கமாட் டான். அவள் கறுப்பி தான்; ஆனால் கறுப்பில் அழகி. திருவாங்கூர் யானைத் தந்தப் பொம்மைகளில் எத்தளை மோகனம் இருக்கிறதோ, அதுபோலவே எருமைக் கொம்புப் பொம்மைகளிலும் ஒரு அழகு இருக்கத்தானே செய்கிறது? மூக்காயி தந்தச் சிலையல்ல; கொம்புச் சிலை!

‘ராகவன் ஆண்மையற்றவன் அல்ல. நல்ல ஆண்மை புள்ளவன் தான்! எனவே மூக்காயியைப் பார்க்காமல், பார்த்து ஒரு கணமேனும் கண்ணையும் நெஞ்சையம் பறி கொடுக்காமல் இருக்க முடியவில்லை. தினம் காலையில் ஏழெட்டு மணிக்கு முன்னால் எழுந்திருக்கத் தெரியாத ராகவன், மூக்காயி வேலைக்கு வந்ததிலிருந்து காலை ஆறு மணிக்கே எழுந்துவிடுவான். காலையில் மூக்காயி விளக்கு மாற்றை எடுத்துக்கொண்டு கூட்டத்தைப் பெருக்கும் சத்தம் அவனுக்கு எப்படியோ கேட்டுவிடும். உடனே எழுந்து உட்கார்ந்து கட்டிலில் படுத்தவாறே மூக்காயியின் அழகை ரசித்துக் கொண்டிருப்பான்.

மூக்காயி சிலை தான்; ஆனால் வெறும் சிலையாக மட்டு மிருந்தால் ராகவன் அத்தனை தூரம் மயங்கி இருக்கமாட் டான், அவள் நடமாடும் சிலை; புன்னகை குமிழச் சிரிக்கும் சிலை. எனவே அவன் அந்தச் சிலையின் நடமாட்டத்தையம் புன்னகையையும் காண்பதில் சொல்லுக்கு வசப்படாத ஏதோ ஒரு புதுமையைக் கண்டான். மூக்காயி வீடு பெருக்கும் போது, ரவிக்கை அ கனியாத அந்த வாரம் போன்ற உடம்பு குனிந்து வளைய, எந்தக் கோணத்திலும் சாய்ந்து சரியாத அவளது அழகு வனப்புக்கள் கிறுகிறுத்து நிற்கும் மோகனத்தைக் கண்டு மனம் சொக்குவான், கேணியில் குடத்தைக் கட்டி இறைக்கும்போது, அவளது கரிய கைகள், மேலும் கீழும் ஏறியிறங்கும் லாகவத்தை , அந்த லாகவத்தால், மனம் பூரித்து நிமிரும் நெஞ்சத்தை அளந்து பார்ப்பான். மாவு அரைக்கும்போது, அரிசி குத்தும்போது, சரிந்து குழையும் கூந்தலை ஒரு கையால் தூக்கிச் சொருகி, அவள் பெருமூச்சு விடும்போது, ராகவனுக்கும் தன்னை அறியாமல் பெருமூச்சு வரும்.

அதிகம் விளக்குவானேன்? மூக்காயியின் கிராமிய அழகு ராகவனைக் கிளறிவிட்டது; தூங்கிக்கிடக்கும் ரஜோகுணத்தை உசுப்பிவிட்டது. அவன் நிமிஷத்துக்கு நிமிஷம் ரஜோ குணத் துக்கு வசப்பட்டுக் குறுகுறுப்பு அடைந்தான். ஆனால் ராஜம்மா வுக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியவா, செய்யும்? களைத் திப்போய் வீட்டுக்கு வரும்போது, அவனுக்குப் பசியாற்றத் தெரியாதவள், அவன் மனசின் அந்தரங்கத்தில் எழும்பியுள்ள – புதிய பசியைத் தெரிந்து கொள்வாளா? ராகவன் தன் அழகு ரசனையில் மூழ்கியிருக்கும் சமயத்தில் திடீரென வந்து “’என்னங்க, இப்படி உக்காந்திருந்தா வீட்டுக் காரியம் எப்படி, நடக்கிறது? கடைக்குப் போய் காய்கறி வாங்கி வாருங்கள்!” என்று சொல்லி விடுவாள். வெந்து கனன்று பொறி பறக்கும் அவனது ரஜோகுணத்தின் மீது, ஒரு குவளைத் தண்ணீரை விட்ட மாதிரி இருக்கும். எரிகிற நெருப்பில் தண்ணீர் விழுந்தால், அது உஸ்ஸென்று சீறாமல் என்ன செய்யும்? ராகவனுக்கு உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும், ராஜம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டிவிடுவான்!

எனவே ராஜம்மாவுக்கும் ராகவனுக்கும் வரவிரப் பூசல்கள் பெருக்கலாயின. தன் கணவனை ராஜத்தால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தன் கணவன் வேண்டுமென்று தான் கோபிக்கிறானா, இல்ல, அவனது குணமே அப்ப டித்தானா என்ற சந்தேகம் அவளுக்கு இத்தனை காலத்துக்கு அப்புறம் தான் மனசில் பட்டது. ஆனால், அவளுக்கு அதை ஆராய்ந்து முடிவு காணப் பொறுமை இல்லை; எனவே ஒரு நாள் மதியம் அவள் வழக்கம்போல் , கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் பணம் புறப்பட்டு விட்டாள்!

ராஜம்மா இவருக்குப் போனது நல்லதென்றே ராகவனுக்குப் பட்டது. ராஜம்மா போய் விட்டதால், மூக்காயி வராமல் நின்று விடுவாளோ என்ற பயம் வேறு மனசில் அடித்துக் கொண்டது. ஆனால், அன்று மாலையே மூக்காயி வேலைக்கு வந்துவிட்டாள். வீட்டில் அம்மா இல்லாததைக் கண்டு திகைத்தாள்.

“என்ன சாமி, அம்மா எங்கே? ஊருக்குப் போயிட்டாங்களா?”

ராகவனுக்கு உடம்பு குதுகுதுத்தது, இத்தனை நாள் வரை மூக்காயி அவனிடம் நேரடியாகப் பேசியதில்லை.

“ ஆமா. நீ அதுக்காக வேலைக்கு வராமல் நின்னுடாதே!”

மூக்காயி யோசித்தாள்.

“காலையிலே வந்து வீட்டைப் பெருக்கிட்டு, குளிக்க வைக்கக் கொஞ்சம் தண்ணியும் பிடிச்சு கூட்டுப் போ. அவ்வளவு தான் உன் வேலை!”

மூக்காயி பதிலே பேசவில்லை. ஒருவேளை போய் விடுவாளோ என்று ராகவனுக்கு அங்கலாய்ப்பு. ஆனால், அவள் வீட்டைப் பெருக்குவதற்காக, விளக்குமாற்றைத் தொட்டதுமே அவனுக்கு அந்த அங்கலாய்ப்பு மறைந்து விட்டது.

மூக்காயி தினம் காலையில் வந்து வேலை பார்த்து விட்டுப் போய்விடுவாள். இப்போதெல்லாம் ராகவனுக்கு ரஜோ குணம் ஒன்றே தலைதூக்கி நின்றது! ஹோட்டல் சாப்பாடும் ஹோட்டல்காரன் நல்ல கறி புளி வைக்காவிட்டாலும், நேரத்துக்குச் சாப்பாடு போடுகிறான்; மேலும் அவனிடம் கோபித்துக் கொள்வதற்கு முடியாது. எனவே தமோகுணம் படுத்தே உறங்கிவிட்டது. ரஜோகுணம் தினம் தினம் காலையில் மூக்காயி வந்தவுடன் காலையரும்பி, பகலெல்லாம் போதாகி மாலை மலர்ந்துகொண்டே இருந்தது. இருந்தாலும், ராகவன் மூக்காயியின் செளந்தர்ய தரிசனத் துடனேயே திருப்தியடைய எண்ணினான். காரணம், அவன் ஒரு பயந்தாங்கொள்ளி. என்றாலும் மனிதனுக்கு எந்தவித உணச்சியும் மிதமிஞ்சிப் போய் விட்டால் பயமோ வெட்கமே குறுக்கிடுவதில்லை.

ஒருநாள் காலையில் முக்காயி வரக்காணோம். நின்று வீட்டாளோ என்று ராகவனுக்குச் சந்தேகம். அன்று மாலை அவன் ஏனோ, வீட்டுக்குச் சீக்கிரமே திரும்பி வந்து விட்டான். சொல்லிவைத்த பாதிரி மூக்காயியும் சிறிது நேரத்தில் வந்துவிட்டாள். ராகவனுக்கு மனசில் என்னவோ காரணம் தெரியாத ஒரு நம்பிக்கைத் தலையெடுத்தது.

“காலையில் ஏன் ஏன் வரலே? சரி சரி! வேலையைப் பாரு” என் சொல்லிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

மூக்காயியும் ஒன்றும் பதிலே சொல்லாமல் வேலை பார்க்கத் தொடங்கினாள்.

ராகவன் ஒருச்சாய்த்துப் படுத்தவாறே மூக்காயியைக் கவனித்துக் கொண்டிருந்தான். மூக்காயியை ஒவ்வொரு கோலத்திலும் பார்க்கும்போதும், அவன் ரஜோகுண வேகம் உச்சிக்கேறியது. அவள் பின்புறமாகப் பெருக்கினால், அந்தப் பின்னழகைக் கண்டு ரசிப்பான்; முன்புறமாகப் பெருக்கினால் முன்னழகைக் கண்டு ரசிப்பான், கட்டு மஸ்தான அந்தச் சொகுசுக்காரி வேலை செய்வதைக் கண்டு, அவன் மனம் . குறுகுறுத்தது. கருமையிலேயே கறுமை பாய்ந்த இளமையின் செழுமை வாவா என்று அழைப்பது மாதிரி தோன்றியது.

அவனுக்கு நரம்புக் கால்கள் எல்லாம் புடைத்தன. நெற்றிப் பொருத்துக்களில் இளம் வேதனை தோன்றியது.. உடம்பு முழுவதும் போன தபால் தளர்ந்து, போனதுமாதிரி நிலையிழந்து கொதித்துக் கொண்டிருந்தது.

அவனால் அதிக நேரம் படுத்துக்கிடக்க முடியவில்லை.

“மூக்காயி!” என்று அவன் தொண்டை கரகரத்தது.

குபீலென்று தாவி, அவளை வாரித் தூக்கினான், கரிய ரத்தம் பாய்ந்த அந்த வெற்றிலைக் காவி உதடுகளின் தாம்பூல் ரசத்தை ருசி பார்த்துவிட்டான்.

மூக்காயி திமிறினாள்; திகைத்துப் போனாள்,

“விடுங்க, சாமி!”

“மூக்காயி!”

ராகவன் கண்கள் தெறித்து விழுவதைப் போல் விழித்தன. கைகளில் இரும்பின் கடினம் எங்கிருந்தோ வந்து புகுந்துகொண்டது. இருந்தாலும் மூக்காயி ராகவனை விடப் பலம் வாய்ந்தவள். எனவே அவள் பணிந்துவிட வில்லை. தப்பித்துவிட்டாள்.

மூக்காயி ஓடிப்போனவுடன் அவள் போட்டுவிட்டுச் சென்ற விளக்குமாற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். ரஜோகுணம் தன் இஷ்ட பூர்த்தியை அடையாமல் தோற்றுப் போனதால், அவன் தன்னைத் தானே கோபித்துக் கொண்டான், முட்டாள் தனமாக தான் நடந்து கொண்டதாகச் சபித்துக்கொண்டான் . இந்தச் க்ஷணப்பித்தம் ஏன் ஏற்பட்டது என்று அவனுக்கே புரியவில்லை. பழைய நினைவுகள் எல்லாம் வட்ட மிட்டன. ஊருக்குச் சென்றுள்ள ராஜத்தையும், சந்திரனையும் பற்றி நினைவு வந்தது. ஒன்றிலும் நிலைகொள்ளாமல் படுத்தே கிடத்தான்.

அன்றிரவு அவன் சாப்பிடவில்லை. மறுநாள் மூக்காயியும் , வேலைக்கு வரவில்லை. “எதிர்பார்த்தது தான்” என்று முனகிக்கொண்டது மனம். ஊருக்குப் போய் ராஜம்மாவை அழைத்து வந்துவிடுவோமா என்று ஒரு எண்ணம். இருந்தாலும் மூக்காயியிடம் தோற்றுப்போன ஆண்மை, ராஜம்மாவைத் தானே போய் அழைத்து வர, அதிலும், தோற்றுப் போகச் சம்மதிக்கவில்லை. மேலும் ராஜம்மா வந்தால், அவளுக்கு மூக்காயி இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டால் என்ற பய உணர்ச்சிகளும் அவன் மனசில் கிளம்பின. இருந்தாலும், தானாக முந்திப் போய் ராஜம்மாளை அழைத்து வந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்பது அவன் நம்பிக்கை. ஆனாலும், அவன் ராஜத்தை அழைத்து வருவதற்கே முனையவில்லை. ‘சரி, நாளைக்கு எப்படியும் ராஜத்துக்குக் கடிதம் போட்டுவிட வேண்டியது தான்’ என்று தீர்மானித்துக்கொண்டு ஒரு நாள் இரவு படுத்தான்.

காலையில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது; எழுந்து போய்க் கதவைத் திறந்தான். அங்கு ராஜம்மாவும் சந்திரனும் நின்றுகொண்டிருந்தனர்.

ராகவன் ஒன்றுமே பேசாமல் உள்ளே திரும்பினான்; அவர்களும் உள்ளே வந்தனர்.

“காலை வண்டியிலோ வந்தே?”

“ஆமாம்.”

“திடீரென்று வந்திட்டியே?”

“ஆமா, மூக்காய் காயிதம் போட்டிருந்தாள்.”

“என்ன மூக்காயியா?”

ராகவன் உள்ளூர நடுங்கினான்; ராஜம்மா அந்தக் கார்டை எடுத்து நீட்டினாள்.

“அன்புள்ள அம்மாவுக்கு மூக்காயி எழுதுவது. இங்கே எனக்குக் கண்ணாலம் ஆவப்போவுது. எம் மச்சான் ஊருக்குப் போவப்போறேன், அய்யாவுக்கு நீங்க இல்லாமே ரொம்பக் கயிட்டமா இருக்காப்பிலே தோணுது, நானும் நின்னு கிட்டேன். நீங்க புறப்பட்டு வரணும். குட்டி ராசா எப்படி இருக்கு?
மூக்காயி”

ராகவனுக்குக் கடிதத்தைப் படித்த பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது.

“மூக்காயிக்குக் கல்யாணம் ஆகப்போவுதா? என்னிடம் கூடச் சொல்லலையே.”

“எங்கிட்ட முன்னேயே சொல்லியிருக்கிறாள்.”

“சரி, உன் விலாசம் அவளுக்கு எப்படித் தெரியும்?”

“மூக்காயிக்கு நம்ப வீட்டு விஷயம் பூராவும் நல்லாத் தெரியும். நீங்க இருக்கறப்போ மட்டும்தான் அவள் ஊமை மாதிரி இருக்கிறா. ஆனா, பெரிய வாயாடி!”.

“சரி தான்.”

ராகவன் சிறிதுநேரம் மௌனமாயிருந்தான். பிறகு “சரி, வீட்டைப் பெருக்கிட்டு, அடுப்பை மூட்டு, நான் பத்து . மணிக்கு ஆபீசுக்குப் போகணும்” என்றான்.

ராஜம்மா விளக்குமாற்றைத் தொட்டாள். ராகவன் சந்திரனைத் தூக்கிக்கொண்டு காய்கறிக் கடைக்குப் போனான். போகும்போது அவன் மனம் “க்ஷணப்பித்தம்’ ‘க்ஷணச்சித்தம்’ என்று முனகிக்கொண்டது.

– க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 50, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *