க்ளையண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 2,119 
 

அகத்தியன் மும்மரமாக தேடிக்கொண்டிருந்தார்.

தன் ஒரே மகளுக்குத் திருமணம் குதிர்ந்த நாள் முதல் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்.ஆனால் கிடைத்தபாடில்லை.

திருமணம் முடிந்து மகளை புகுந்த வீடு சென்று மகளும் மாப்பிள்ளையும், மறு வீடு கூட வந்தாயிற்று.

இன்றைய தேடல் அதிதீவிரமாக இருந்தது. காலை 7 மணிக்குத் துவங்கி மதியம் 12.30 க்கும் தொடர்ந்தது.

‘சை…! முட்டாள் தனம் செய்துட்டேனே…!’ நொந்து கொண்டார்.

‘மாடியறை கொலுப் பெட்டியருகே உள்ள மூட்டையில் இருக்குமோ…?’ அதையும் பிரித்து மேய்ந்தாயிற்று.

‘கௌசல்யா கைப்பேசி எண் சொன்னபோது, அப்போதைக்குக் கையிலிருந்த ‘மக்கள் குரல்’ நாளிதழில் எழுதியது கூடத் தவறில்லை. உடனடியாக கைப்பேசியில் பதிவு செய்திருக்க வேண்டும். .!’

ஞானம் எப்போதுமே காலம் கடந்துதானே வருகிறது.

அகத்தியனின் ஒரே ஆசை மணமக்களை நேரில் அழைத்துச் சென்று இந்தத் திருமணத்திற்கு மூல காரணமாக இருந்த கௌசல்யாவின் ஆசியைப் பெறவேண்டும் என்பதுதான்.

ஒன்றரை மாதத்திற்கு முன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார் அகத்தியன்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர் மட்டுமே ஏறினார். அந்த கேபினில் மற்ற ‘பர்த்’களுக்கு எவரும் வராததால், கால்களை எதிர் இருக்கையில் நீட்டியபடி ‘மக்கள் குரல்’ நாளிதழில் ஆழ்ந்தார்.

தாம்பரத்தில் எதிர் ‘பர்த்’க்கு ஆள் வந்துவிட்டது.

40 வயது மதிக்கத்தக்க பெண்.

மெட்டியற்ற கால் விரலும், குங்குமத் தீற்றலற்ற வகிடும் அவளை திருமணம் ஆகாதவளாகக் காட்டியது. எந்த விதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாத முகம். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி பிரயாணம் செய்தாள்.

‘உம்’ என்று அமைதியாக எவ்வளவு நேரம்தான் பிரயாணம் செய்வது..! மற்ற மற்ற ‘பர்த்’துகளுக்காவது கலகலப்பாகப் பழகக்கூடிய ஆசாமிகள் வந்தால் நன்றாக இருக்கும்!’ என்று யோசித்த வேளையில் திருமணத் தரகர் தம்பிராஜனிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்க தரகரே…!” .

“…”

“ என்ன..?” அதிர்ந்தார்.

“…”

“ஆண்டவன் விட்ட வழி. ! என் மகளுக்கு குரு பலன் வரலையோ என்னவோ.. !!” சோகமாகப் பேசி முடித்தார் அகத்தியன்.

“காப்பி…காப்பி…”

“ரெண்டு காபி … !” 20 ரூபாயை நீட்டினாள் எதிர் ‘பர்த்’ மாது.

காப்பிச் சுடுகலனுடன் இணைந்த கொக்கியை, மேல் படுக்கைக்கு ஏறும் படியில் மாட்டிவிட்டு ‘குழாய்’ திருகி ‘பேப்பர் கப்’பை கீழிருந்து லாகவமாய் உயர்த்த ‘ஜல்…ல்…ல்….ல்..’ என்ற சத்தத்துடன் காப்பியில் நுரை எழும்பியது.

“சார்! காப்பி குடிங்க… !” என்றாள் அவள்.

அகத்தியனுக்கு அப்போது இருந்த மனநிலையில் அந்த உபசரிப்பும், காப்பியும் இதமாக இருந்தது. ‘தாங்க்ஸ்’ என்றார். லேசாகத் தலையாட்டி நன்றியை ஏற்றாள் அவள்.

மேல் மருவத்தூரில் ஜன்னல் வழியாக ஆதி பராசக்தி கோவிலை திக்கு நோக்கி வணங்கி…”ஒரு நல்ல வழி காட்டும்மா..!”என்று வாய்திறந்து அகத்தியன் வேண்டியபோது எதிர் சீட் பெண் “சார்… !” என்று திருவாய் மலர்ந்தாள்.

திண்டிவனம் வரை தன்னைப் பற்றியும் , தன் குடும்ப நிலை பற்றியும் , தன் மகளின் திருமணம் தள்ளிப்போவதைப் பற்றியும் அவளிடம் புலம்பித் தீர்த்தார்.

அந்த பெண்மணியும் அகத்தியனுக்கு வடிகலாய் இருந்து பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள். “ அரைமணி நேரம் முன்னாடி போன் வந்துது போல…?”என்று இயல்பாகக் கேட்டாள் அவள்

“ஆமாமாம்… ! ஒரு இடம் முடியறமாதிரி இருந்து, கடைசீ நேரத்துல தட்டிருச்சு…!”

“கவலைப் படாதீங்க.. அதது நேரம் வரும்போது நடக்கும். !”

“உங்களுக்கு தெரிஞ்சி வரன் ஏதாவது…?”

பெண்ணை பெற்றவர்களின் இயல்பான கேள்வி

“என் கிளையண்ட்ஸ் சில பேர் மகன்களுக்கு பார்க்கறாங்க.. உங்க அட்ரஸ் கொடுங்க. முயற்சி பண்றேன். நல்லது நடக்கும்..!.” என்றாள் அவள்.

அவர் முகவரி சொல்ல முகவரியை டைப் செய்து சிலருக்கு வாட்ஸ்ஸப்பினாள்.

சற்று நேரத்தில் அவளுக்கு செல் அழைப்பு வரத்தொடங்கித் தொடர்ந்தது.

விழுப்புரம் விட்டு, கடலூர் நெருங்கிவிட்டது. அகத்தியன் இறங்கத் தயாரானார். கர்டசிக்கு ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போகலாம் என்றால் அவளோ பேசியை வைப்பதாய் இல்லை.

வண்டி நின்றே விட்டது. பரவாயில்லை என்று அவளிடம் “நான் இறங்கறேன்…” என்றார்.

அவள் ஃபோனை தொடையில் கவிழ்த்துக் கொண்டு “ஓ கே” வாங்க ..!.நல்லது நடக்கும்..!.” என்றாள்.

“உங்க பேரு?”

“கௌசல்யா…”

“உங்க ஃபோன் நம்பர்… தரமுடியுமா?”

“ம்…!” எண்ணைச் சொன்னாள்.

ஷாப்பர் பையில் செருகியிருந்த ‘மக்கள் குரலை’ உருவி நம்பரை எழுதினார்.

அந்த ‘மக்கள் குரலை’த்தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தொடர்ந்து தேடி வருகிறார்.. இன்று வரை அகப்படவில்லை.

அவளுக்குத் திருமணப் பத்திரிகை கூட அனுப்பமுடியவில்லை.

அவளைச் சந்தித்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்குள் மகளுக்குத் திருமணம் முடிந்து, மறு வீடும் வந்து திரும்புகிறார்கள் இன்று.

ரயில் பயணித்தின்போது ‘கௌசல்யாவை நினைத்து நெகிழ்ந்தார். அவள் தொலைபேசி எண்ணைத் தொலைத்துவிட்ட கழிவிரக்கத்தில் கலங்கினார்.

இரவு டிபனுக்காக சாப்பாட்டு மேசையில், மனைவி கட்டிக் கொடுத்த இட்லிப் பொட்லங்களை பார்த்த அகத்தியனுக்கு “ஆ…! யுரேகா..! யுரேகா..!” என்று கத்த வேண்டும் போலிருந்தது .

இத்தனை நாட்களாய்த் தேடிய ‘மக்கள் குரல்’ . இவர் எழுதிய நம்பர் இட்லி பொட்டலத்தில் பளிச் என கண்ணில் பட்டது.

எண்ணை செல்போனில் ஏற்றினார். பலமுறை சரிபார்த்து கொண்டார். மகிழ்ச்சியுடன் மொட்டை மாடிக்கு ஓடினார்.”

“ஹலோ…கௌசல்யா மேடமா…?”

“….” ஒன்றும் பதிலில்லை.

“போன மாசம் திருச்செந்தூர் போனப்ப எனக்கு வழிகாட்டினீங்களே..! உங்க தயவுல என் மகளுக்கு கல்யாணமாயிடுச்சு. மகள் மாப்பிள்ளையை அழைச்சிக்கிட்டு வந்து உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்க வரணும்..எப்ப வரலாம்…?”

“….”

எந்த பதிலும் இல்லாததால் “ஹலோ…ஹலோ…!!! என்று விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார்..அகத்தியன்…!”

எதிர் முனையில் தன் கஸ்டமரின் இச்சை தீர்கத் தயாராகிக் கொண்டிருந்த கௌசல்யா,’தன் சம்பந்தி ‘பாலியல் தொழிலாளியின் கஸ்டமர்’ என்பதை இந்த அகத்தியன் ஏற்பாரா? தீர்க்கமாக யோசித்தாள்.

“ராங்நம்பர்…!” என்று இணைப்பைத் துண்டித்தாள்.

– மக்கள் குரல் 29.12.2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *