கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 3,900 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-9 

அமிர்தா எதற்கும் துணிந்தவளைப் போல, ஒரு வித லட்சியமுமில்லாமல் தன்னை மீறிப் போய்விட்டாள் என்பதை எண்ணி எண்ணிப் பார்த்துப் பொருமிய பசுபதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உன்மத்தம் பிடித்த வரைப்போல சிறிதுநேரம் வீட்டினுள்ளேயே நடந்தார். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார். எழுந்தார். மீண்டும் நடந்தார். 

நேரம் செல்லச் செல்ல, அமிர்தா தம்மை அலட்சியம் செய்துவிட்டு, தூக்கி எறிந்து பேசிச் சென்றுவிட்டாள் என்ற கோபத்தைவிட, அவள் ஆஸ்பத்திரியில் தன்னந்தனியாக ஒரு சொந்தபந்தமில்லாத நோயாளியின் அருகே இருக்கிறாளே என்ற தாபம்தான் அவருள் மேலோங்கி நின்றது. அவர் அன்று தம் வயதுக்கு ஏற்ற படியில்லாமல், ஒரு பக்குவம் இல்லாத வயதுக்காரன்போல முன்கோபத்துடன் பேசியதை நினைத்து நினைத்துப் பார்த்தார். 

கடைசியில் அவருக்கு ஒன்று தெளிவாயிற்று. தவறு முழுக்க முழுக்க அவருடையதுதான். அமிர்தா என்ன செய்தாள்? ஏழு ஆண்டுகளாகப் பரிச்சயமான ஒழுங்கை ஒரு தர்மமாகக் கடைப்பிடித்து வரும் ஒரு சிநேகிநனுக்கு உதவி செய்யப் போயிருக்கிறாள். அவருக்கு ஏன் அப்படிக் கோபம் வந்தது? ஆஸ்பத்திரியில் கிடக்கிறவன் ஒரு ஆண், ஒரு அன்னிய புருஷன். அமிர்தா ஒரு பெண். இன்னும் கலியாணமாகாதவள் என்ற காரணங்கள் தானே? 

இந்த நாகரிக உலகத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பரஸ்பரம் எந்த விதமான விபரீத உணர்ச்சிகளும், ஆசைகளுமில்லாமல் சினேகமாக இருக்க முடியும் என்பதை அவர் நம்ப வில்லை. எத்தனையோ குதர்க்க புத்திக்காரர்களைப்போல அவரும், ‘ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் நட்புடன் இருக்க முடியாது, அவன் அவளுடன் பழகுகிறான் என்றால் அது தன்னுடைய மிருக இச்சையைத் தீர்த்துக் கொள்ளுவதற்காகத் தான்’ என்று நினைத்தார். 

இப்படி உலக ரீதியில் சிந்தித்தவர் ஏன் ரகுவின் தரத்தைப்பற்றியே எண்ணிப் பார்க்கவில்லை? நேர்மையைக் கடைப்பிடிக்கிறவன் ரகு. பெண்ணுக்கு வகுத்த கோடுகளைத் தாண்டாதவள் அமிர்தா. இவர்கள் ஒரே அறையில் தன்னந்தனியாக ஒருவர் பக்கம் ஒருவராகப் படுத்துக் கொண்டால் கூட எந்த விபரீதமும் நிகழாதே. உண்மை இப்படி இருக்கையில் அவர் எப்படித் தம் வசம் இழந்து கத்தினார்? 

அவர் எல்லாவற்றையும் மறந்து தம்முள் புழுங்கிப் புழுங்கி ஒரு வழியாய் சாய்வு நாற்காலியிலேயே தூங்கலானார். வீட்டு வாசற்கதவைச் சாத்தக் கூடத் தோன்றவில்லை. 

திடீரென்று அமிர்தாவின் குரல் கேட்கவே அவர் திடுக்கிட்டு எழுந்தார். அறையில் விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. காய்ச்சிய பால் அப்படியே இருந்தது. அடுப்பங்கரைப் பாத்திரங்கள் அப்படியே கிடந்தன. 

“அப்பா! அப்பா….” 

அமிர்தாவின் குரல் அந்த இரவின் நிம்மதியில் ஒரு ஓலமாகக் கேட்டது. 

அலாரம் கடிகாரம் இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஒரு வேளை அது வேகமாக ஓடுகிறதோ? 

“அப்பா” 

இப்போதுதான் அவள் அவர் கண்ணில் தெரிந்தாள். 

”என்னப்பா, இது படுக்கையை விரித்துப் படுக்காமல்…” 

“அமிர்தா, வந்துட்டியா?” 

“அதான் வந்துட்டேனே” 

“என்னை மன்னிச்சுடு அமிர்தா.” 

“எதுக்குப்பா?” 

“நான் என்னென்னவோ உன்கிட்டே பேசி விட்டேன். உன் மனசைப் புண்படுத்திட்டேன்”. 

”ராத்திரி வேளையிலே ஏதும் பேத்தாதீங்க அப்பா….. நான் உங்க பெண். உங்களுக்கு என்னைக் கண்டிக்க உரிமை இல்லையா? நானும் தான் பேச்சுக்குப் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசிட்டேன்… ஏதானும் சாப்பிட்டீர்களா…” 

“சாப்பாடு கிடக்கிறது, அமிர்தா… இதென்ன பிளாஸ்க், பழம் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டே? ரகுவை டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்களா?”

“அவரே டிஸ்சார்ஜ் வாங்கிண்டு போயிட்டார்!”

“என்னம்மா சொல்றே?” 

“ரகு காலமாயிட்டார் அப்பா…” 

பசுபதி சிலையாக நின்றார். 

“ரகு இறந்து போய் விட்டானா? இளம் வயதிலேயே அவனுடைய விதி முடிந்து விட்டதா? இது என்ன கோரம்?” 

“சாகிறதுக்கு முன்னாலே என்கிட்டே ரெண்டு வார்த்தை பேசினார். அவர் என்ன கொடுத்தார் தெரியுமா?”

“என்னம்மா?” பசுபதியின் நாக்கு தழுதழுத்தது. 

“ஒரு பூப்பொட்டணம்!” 

“அப்படியா?”

“ஆமாம்ப்பா… அவர் ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு முன்னேயே வாங்கி வைத்திருக்கணும், அவரைப் பார்க்க நான் போவேன் என்று நம்பியிருக்கிறார். முன்னேற்பாடாகப் பூ வாங்கி, படுக்கைக்கு அடியில் வைச்சிருக்கிறார்”. 

“பாவம், ரகு…” 

“அவருடைய ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் தான் பிரச்சினையே இருக்கு.” 

“என்னம்மா பிரச்சினை?”

“அவருடைய கடைசிக் காரியங்கள் இருக்கே. உடல் இன்னும் ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறது. காலையில்தான் தருவார்களாம். யாரும் போய் அதைக் கேட்காவிட்டால் அது அனாதைப் பிணமாகப் போய்விடும். அனாதைப் பிணங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமே அப்பா” 

“இப்போ என்ன செய்யறது?” 

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. நான் பெண்ணாக இல்லைன்னா, நானே சிதைக்குத் தீ வைத்து விடுவேன். அவருக்கு ஒரு அண்ணன் கல்கத்தாவில் இருக்கிறார். விலாசத்தை ஆபீசில்தான் கேட்கணும் இல்லாமப்போனா அவர் ரூமைத் திறந்து குடைந்து பார்க்கணும். ஆனா அந்த அண்ணன்காரன் வர்ற வரைக்கும் உடலை வைச்சுக்க முடியாதே”. 

“நீ ஏம்மா கவலைப்படறே… அன்னிக்கு உன் அம்மா மார்பிலே கொள்ளி வைச்சேன்… நாளைக்கு ஒரு சிநேகிதன் மார்பிலே வைக்கிறேன். எனக்குப் பிள்ளை ஒருவன் இருந்து அவன் போயிருந்தால் நான் செய்யமாட்டேனா?”

“என்னப்பா சொல்றீங்க?”

”சத்தியத்தைத் தாம்மா சொல்றேன்… என்னைப்பத்தி நினைச்சுப்பார்… நானே நாளைக்கு செத்தேன்னா என் உடம்புக்கு கொள்ளிபோட யார் இருக்கிறார்கள்? பிள்ளை இல்லை. உற்றார் உறவினர் யாரும் இல்லை. கோவிந்தா கொள்ளி தானே… இப்போ இவனுக்கு நான் செய்தால், எனக்கு யாராவது ஒரு புண்ணியவான் செய்வார்”. 

“இதைக் கேட்க எனக்கு சந்தோஷமா இருக்கு, அப்பா”.  

“ஏம்மா?” 

“ஒரு ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்கிறது”. 

அமிர்தாவின் கண்முன் டாக்சி டிரைவர் தோன்றினான். அவனும் முன் வந்தான். வாழும் உயிருக்குத்தான் என்ன மதிப்பு! 

“நீ எதுக்கும் கவலைப்படாதே..ஆனா ஒரே ஒரு சுவலை தான்”

“பணம் தானே அப்பா? அது என்கிட்டே இருக்கு.”

“அப்போ ஒரு கவலையுமில்லை.. அது சரி, ஏதானும் சாப்பிட்டியா?”

“இல்லை, நீங்கள்?”

“வேண்டியிருக்கவில்லை.”

“ரகுவின் அண்ணாவுக்கு நாமும் தந்தி கொடுப்போம். ஆபீசில் பிராவிடண்ட் பண்ட், சம்பளபாக்கின்னு நிறைய வர இருக்கும்”. 

”சரிம்மா. ரகு என்ன பாவம் செய்தான் இப்படி அகாலமா போவதற்கு?”

“அவருடைய ஆயுசுக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அப்பா ஒரு ரகசியத்தைச் சொல்லட்டுமா?”

“என்னம்மா”

“அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். அதனாலேயே அவர் மற்ற பெண்களை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.” 

“பாவம்.” 

“நான் ரகசியத்தை இன்னும் சொல்லவில்லை.”

“என்னம்மா?” 

”அவர் சாகிறத்துக்குச் சில நிமிடங்கள் முன்னாலே எனக்குக் கூட அந்த ஆசை பிறந்தது. அப்பா! என் மனசிலே அந்த மாதிரி ஒரு ஆசை இதுக்கு முன்னாடி ஏற்பட்டதேயில்லை. திடீரென்று என் கண் முன்னாலே கலியாணமேடை தோணித்துப்பா. நான் குனிஞ்ச தலையோடு இருக்கேன். ரகு என் கழுத்திலே தாலியைக் கட்டறார். நான் சந்தோஷத்திலே பூரிச்சுப் போறேன்”. 

“ஐயோ அமிர்தா!” 

“அடுத்த நிமிஷம் அவர் உணர்வில்லாமல் கிடந்தவர் கண் முழிச்சுப் பார்க்கிறார். என்கிட்டே பூவைக் கொடுக்கிறார். உதட்டாலே சிரிக்கிறார். இரண்டொரு வார்த்தைகள் பேசறார். அப்புறம் சாகிறார்.. அப்பா, அந்த ரெண்டு நிமிஷத்திலே நான் பிறந்து வளர்ந்து பெரியவளாகி, கலியாணமாகி, அஸ்தமனமும் ஆகிவிட்டேன் அப்பா” 

“அமிர்தா, அமிர்தா!” 

“வாழற வாழ்க்கையை நாம் காலத்தாலே அளந்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையின் தன்மை, தரம் இதெல்லாம் தான் முக்கியமல்ல… அவர் ஒரு சுத்த பிரம்மசாரி. நான் சத்தியம் தவறாத பெண். எங்க ரெண்டு பேருக்கும் மானசீகமாக மரணப்படுக்கையில திருமணம்! கேட்க அசம்பாவிதமா இருக்கும்… ஆனா என் கண்முன் இப்படி ஒரு காட்சி. தோன்றியதே…” 

“அது உன் ஆசையின் பிரதிபிம்பம்… உன் உள்குரலின் எதிரொலி அமிர்தா… ஆனா உண்மை இல்லை.” 

“நான் உண்மை என்று சொல்லி என்னை ஏமாற்றிக் கொள்ளவில்லை அப்பா… என் ஆச்சரியமும் வியப்பும் எல்லாம் ஏன் என் மனசிலே அப்படியெல்லாம் என்னிக்கும் இல்லாமல் இன்னிக்கு அதுவும் அவர் சாகிற நிலையில் தோணித்து? தோணணும்?” 

“எனக்குப் புரியவில்லை.”

“எனக்கு இப்போ புரியற மாதிரி இருக்கு, அப்பா.”

“என்னம்மா?” 

“நானே என்னை அறியாமல் என் மனசுக்குள் இந்த ஆசையை அடிமனத்தில் ஒளிச்சு வைத்திருக்கிறேன். ரொம்ப காலமா… இன்னிக்கு, இன்னிக்கு, அது கைகூடாது என்ற நிலை பிறந்த போது வெடிச்சு வெளியே போயிருக்கிறது… அதுக்கு முன்னாடி எனக்கு ஆசையின் வடிவத்தைக் காட்டியிருக்கு”. 

”நீ சொல்றது ஒண்ணும் எனக்குப் புரியவில்லை, அமிர்தா”. 

அத்தியாயம்-10

பெண் மீனாவும், மாப்பிள்ளையும் வந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தபோதிலும் இன்னொரு பக்கம் தர்ம சங்கடமாகப் போய்விட்டது ராஜம்மாவுக்கு. மாப்பிள்ளையை எப்படி உபசாரம் செய்வது, கலியாணமான பிறகு ஓரிரு தடவைகளுக்கு மேல் மாப்பிள்ளை மீனாவுடன் வந்ததில்லை. பெண் மட்டும் அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறாள். 

“வாருங்கள், வாருங்கள்” என்று எதிர் கொண்டு அழைத்த ராஜம்மா ஓரக்கண்ணால் பார்த்தாள். மருமகள் கௌரி ஒரு வெற்றிப்புன்னகையுடன் நிற்பது தெரிந்தது. பிள்ளை மோகன் திருட்டு முழி முழித்து தவித்துக் கொண்டிருந்தான். 

“ரெண்டு பேரும் அசோக் நகருக்கு வந்திருந்தோம். அம்மா!” என்று ஆரம்பித்த மீனா, “நாங்க எந்த வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போனோமோ அந்த வீடு பூட்டி இருக்கு. பக்கத்து வீட்டிலே விசாரிச்சப்போ, அந்த வீட்டுக்காரர், அதான் இவருடைய சினேகிதர் பெண்டாட்டியையும் அழைச்சுண்டு திடீர்னு ஊருக்குப் போயிட்டார்னு தெரிஞ்சுது.” 

அம்மாவும் பெண்ணும் பேசிக்கொண்டிருக்கையில், கெளரி மெதுவாக நழுவினாள். சமையலறையினுள் நுழைந்த ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். 

அப்போது ராஜம்மா பிள்ளையுடன் பேசிக் கொண்டிருந்தாள். 

“அஞ்சு நிமிஷத்திலே இலைபோட்டு விடறேன்… ரெண்டு பேரும் சாப்பிட்டு விட்டுப் போங்கள்.”

“நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சாப்பிடத்தான் போகிறோம். விருந்து சாப்பிடப்போகிறோம் என்கிற எண்ணத்தில் எங்க வீட்லே சமைக்கவேயில்லை. இவரோடே அம்மா அப்பாவிற்குப் பலகாரம்தானே. அதை ஏழுமணிக்கே முடித்து விடுவார்கள்”. 

“ராஜம்மா நான் வந்த வழியிலேயே இலை வாங்கிண்டு வந்து விட்டேன். கெளரியை பரிமாறச் சொல்லு”. 

“நானே பரிமாறுகிறேன்”. 

“என்ன மோகன், ஆளையே காணோம்?” என்று விசாரித்தான் மீனாவின் கணவன். 

“கௌரி, என் அம்மாகிட்டேர்ந்து இந்த வீட்டு வேலை யெல்லாம் கத்துக் கொண்டு விட்டாயா?” என்று கேட்டாள் மீனா. 

“இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அதையும் முடிச்சுட்டா. நான் மாமியாரை மிஞ்சி விடுவேன்” என்றாள் கெளரி. அவளுடைய பேச்சின் அர்த்தம் புரியாமல் மீனா அம்மாவைப் பார்த்தாள். 

அம்மா இலையைப் போட்டு விட்டு, விசுபலகையை எடுத்துக் கொண்டிருந்தாள். மீனா தன்னைப் பார்ப்பதைக் கவனிக்கவில்லை. 

“நீ என்ன சொல்றே, கௌரி?” 

“புரியவில்லையா?”

“ஊஹும்”. 

“உன் மாமியார் உன்னை எப்படி நடத்துகிறாள்?”

“ஏன் இப்படிக் கேட்கிறே?”

“இங்கே என்னை அடுப்புலே போட்டு வதைக்கிறாள்….” என்று சொல்ல வந்தவள் திடீரென்று தன்னையே அடக்கியவளாய், “நான் எதிர்த்துப் பேசாம இருந்தா உன் அம்மா எனக்கு நல்ல மாமியார் தான்” என்றாள். பிறகு தொடர்ந்து, “ஆனா ஒண்ணு, உன் அம்மாவை எதிர்த்துப் பேசாம எந்த தன்மானமுள்ள பெண்ணாலும் இருக்க முடியாது. ஊமைகூட வாய் திறந்து பேசுவாள்” என்று முடித்தாள். 

மாப்பிள்ளைக்கு முன்னால் மருமகளைக் கண்டிக்க முடியவில்லையே என்று தன்னுள் பொருமிய ராஜம்மா இலைக்கு அருகே தண்ணீரை வைத்தாள். பெண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட உட்கார்ந்தார்கள். 

“நீயும் உட்காரேன் அண்ணா!” என்றாள் மீனா மோகனைப் பார்த்து. 

“நான் அப்புறமா சாப்பிட்டுக் கொள்ளுகிறேன்” என்றான் அவன். 

“உபசாரத்தில் அம்மாவுக்கு சளைச்சவர் இல்லை பிள்ளை” என்று கூறிச் சிரித்த கௌரி நகர்ந்து ஒரு ஓரமாக நின்று கொண்டாள். 

சமையல் அறையிலிருந்து குரல் கேட்டது. 

“கௌரி!”

“என்னம்மா?”

“இங்கே என்னடிவெறும் சாதம் மட்டும்தான் இருக்கு?”

“நீங்கதானே சாக்கடையில் கொட்டச் சொன்னீர்கள்? கொட்டி விட்டேன்!”

“என்னடீ சொல்றே?”

குரலை மாப்பிள்ளைக்காகத் தாழ்த்திய ராஜம்மா கௌரியின் எதிரே வந்தாள். 

“இந்த வீட்டு அடுப்பிலே வெங்காயம் வேகக்கூடாது. தயார் பண்ணின சாம்பாரை சாக்கடையில் கொட்டணும்னு நீங்க நானே உங்க பெண்ணும் மாப்பிள்ளையும் வர்றதுக்கு முன்னாலே சொன்னீர்கள்? உங்க வார்த்தையை நான் என்னிக்காவது மீறியிருக்கேனா, அம்மா?”

மருமகளின் நையாண்டியை ரசித்த மீனாவின் கணவன் மனைவியின் தொடையை யாரும் பார்க்காத சமயத்தில் கிள்ளினான். தான் வரும்முன் வீட்டில் ஏதோ ஒரு யுத்தம் நடந்திருக்கிறது என்று ஊகித்த மீனா இலையை விட்டு எழுந்தாள். அம்மா அருகே நின்று கொண்டாள். 

“என்ன பொண்ணுடீ, நீ. ராட்சசியா?” என்று கேட்டாள் ராஜம்மா. 

“நீங்கள் ஒரு கந்தர்வப் பெண் என்றால் நான் நிச்சயம் ஒருராட்சசிதான்.”

“என்ன காரியம் செஞ்சிருக்கே… இப்போ நான் இவர்களுக்கு எதைப் போடறது”

“சாதம், மோரு, தொட்டுக்க ஊறுகாய்… நான் பரிமாறட்டுமா?”

திடீரென்று கைலாசம் அருகே வந்தார். 

“கௌரி, என்ன இது, வீட்டுக்குப் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்திருக்கிறார்கள். நீ கொஞ்சம்கூட அடக்க ஒடுக்கம் இல்லாம எதிர்த்துப் பேசறே… கிண்டலாப் பேசறே…”

“உங்களுக்கு பூர்வகதை என்னன்னு தெரியாது, மாமா.”

“உன் பெண்டாட்டி என்னடா பேசறா. மோகன்? இப்படித்தான் அவளுக்குச் செல்லம் கொடுக்கிறதா?” என்றார் கைலாசம். 

“எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா? கௌரி வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு கறியும் பண்ணினா. அம்மாவுக்குத் தான் வெங்காயம் ஆகாதே… தயார் பண்ணின சாம்பரை சாக்கடையிலே கொட்டுன்னா…” 

“அதான் கொட்டினேன்.”

“மாப்பிள்ளை வெறும் மோர் சாதத்தையா சாப்பிடுவார்?” என்றார் கைலாசம். 

“பிள்ளையும் மருமகளும் அதைத்தான் சாப்பிடணும் என்கிற அம்மா, பெண்ணும் பிள்ளையும் மட்டும் வெங்காயத்தைச் சாப்பிட அனுமதிப்பாளா? அம்மாவுக்குத் தான் பாரபட்சமே இல்லியே?” 

“கறியையும் கொட்டித் தொலைச்சிருக்கா” என்று கத்தினாள் ராஜம்மா. 

“சாம்பாருக்குத் தொட்டுக் கொள்ளத்தான் கறி வைச்சிருந்தேன். சாம்பாரே இல்லைன்னு ஆனப்புறம் கறிக்கு என்ன வேலை? மாட்டையே தூரத்தினால் கன்னுக் குட்டியையும் விரட்ட வேண்டியதுதானே?”

ராஜம்மாவின் கண்களில் நீர்முட்டியது. மாப்பிள்ளைக்கு முன்னால் இப்படித் தலைகுனியும் படியாகி விட்டதே என்று அவள் நொந்து போனாள். மருமகள் தன்னை நன்றாக, சரியான சமயத்தில் பழி வாங்கிக் கொண்டாள் என்ற ஆத்திரம் வேறு எழுந்தது. 

மௌனப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த கௌரியைப் பார்த்து திடீரென்று மீனாவின் கணவன் பேசினான். 

“மிஸஸ் மோகன்! நீங்க சொல்றது எல்லாம் உண்மையா?” 

“தெய்வம் அறிய சத்தியம்… கலியாணமாகி இங்கே வந்ததிலிருந்து ஒரு நாள் கூட ராத்திரி புதுசா ஒரு குழம்பு, கறியை நான் பார்த்ததில்லை. இன்னிக்குக் கார்த்தாலே இவர் தன் ஆசையை வெளியிட்டார். அமாவாசையாக இருக்கே, மாமனாருக்குத்தான் ராத்திரி சாப்பாடு கிடையாதேன்னு நான் வெங்காய சாம்பார் செஞ்சு, உருளைக் கிழங்கு கறியையும் பண்ணினேன். சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே என் மனசில் எழவில்லை. புருஷன் ஒண்ணை ஆசையா கேட்கிறார். அதுவும் அற்பமான ஒண்ணு. அதைக்கூடவா செஞ்சு போடக் கூடாதுன்னு தோணித்து. செஞ்சேன். ஆனா பொறுக்கவில்லை. வீட்டுக்குள்ளே நாய், பெருச்சாளி இதெல்லாம் வரப்படாதுன்னா அர்த்தமுண்டு. வெங்காயம் வரப்படாதுன்னா அது எவ்வளவு முட்டாள் தனம்! நான் சாக்கடையில் கொட்ட மாட்டேன்னு பிடிவாதமாக இருந்தேன்…” 

“நானும் மீனாவும் வந்து இலையிலே உட்காரப் போகிறோம்னு தெரிஞ்சதும் நம்ம மாமியார் சொன்னதை நிறைவேற்றினீர்களாக்கும்”

“ஆமாம்”. 

“சபாஷ்!கங்க்ராஜுலேஷன்ஸ்… உங்களுடைய நாத்தி, இந்த மீனா, தினம் தினம் எங்க வீட்லே வெங்காயம் சமைக்கிறா… பிறந்த வீட்லே தான் கிடைக்கலே. இங்கே ஆசை தீரச் சாப்பிடலாம்னு ஒரு புடிபுடிக்கிறா… நீங்க செஞ்சது தான் சரி… நாங்க ரெண்டுபேரும் இப்போ மோருஞ் சாதமே சாப்பிடுகிறோம். நீங்களே பரிமாறுங்கள்.”

கௌரி திடீரென்று நெகிழ்ந்து போனாள். அவளுக்கு உண்டான நெகிழ்ச்சியில், “நீங்க சாம்பாரும் கறியும் சாப்பிடக் கூடாது என்கிற துவேஷம் சத்தியமாக எனக்கு இல்லை” என்றாள். 

“எனக்கு உங்க.நிலைமை புரியறது. விவேகம் இல்லாம நடந்து கொண்டா, இப்படித்தான் ஒரு ஆபரேஷன் செய்து சரி பண்ணணும். மீனா, சாப்பிட உட்கார், நேரமாகிறது”. 

“அம்மா! நீ செய்தது தப்பு” என்றாள் மீனா. ஏற்கனவே உட்கார்ந்து விட்ட கணவனின் அருகே அமர்ந்து கொண்டே.

“ராஜம்மா! நீ தணிஞ்சு போயிருக்கலாம்!” என்றார் கைலாசம். 

“சாம்பார் என்னமாய் மணந்தது. அதைக் கொண்டு போய் கொட்டி விட்டாள்!” என்றாள் மோகன். 

“உனக்கு அதிஷ்டம் இல்லை மோகன்! தினமும் மோர்சாதம் தான் என்று உன் தலையில் எழுதியிருக்கு!” என்று சிரித்தான் மாப்பிள்ளை. 

ராஜம்மாவைக் காணவே காணோம். பொறுக்க முடியாத ஆத்திரம், வேதனை, அவமானத்துடன் அவள் வாசற் பக்கம் போய்விட்டாள். மாப்பிள்ளையே சொல்லிவிட்டார். அவளுக்கு விவேகம் போதாது என்று. அவரே, கௌரி செய்தது தான் சரி என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டார்! 


இந்தப் புகுந்த வீட்டிலிருந்துதான் வெளியேறி, தனிக் குடித்தனம் நடத்த வேண்டும் என்று கௌரி மோகனிடம், அன்று காரியாலயத்துக்குச் செல்லும்போது கூறிக் கொண்டிருந்தாள். மாமியாரின் கட்டில் பிரோ நச்சரிப்பை அவளால் மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

அவளுடைய ஆசை நிறைவேறுமா? அப்படியானால் எப்படி? 

அத்தியாயம்-11

ரகுனாதன் இறந்துபோய் ஒரு வாரமாகிவிட்டது. காரியாலய நண்பர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி. அவனுடைய கடைசி யாத்திரைக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த விஷயத்தில் அமிர்தா மன நிம்மதி பெற்றாள்.

ரகுவைப்பற்றி நினைக்கையில் ஒரு உண்மை அவளுக்குப் புலப்பட்டது. ரகுவின் அகால மரணம் அவளை உலுக்கவில்லை. அவளுடைய இயல்பான மனப்போக்கைப் பாதிக்கவில்லை. அவன், அவளை மனமாரக் காதலித்திருக்கிறான். அது வெற்றியா தோல்வியா என்று தெரிவதற்குள் காலம் அவனை விழுங்கிவிட்டது. ஆட்டம் முடிவு பெறுவதற்கு முன் மழை வந்து தடுத்து விட்டது. 

ஆனால் கடைசி நிமிடத்தில் அவனுடைய மரணப் படுக்கையின் அருகே அமர்ந்து அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அமிர்தாவின் மனத்தில் சலன மேற்பட்டது. அவள் மனத்தை, திடீரென்று உணர்வில்லாமல் கட்டை போலக்கிடக்கும் ரகு ஈர்த்தான். ஒரு சில நிமிட நேரங்கள் தான் அவனைக் காதலிப்பதை அமிர்தா உணர்ந்தாள்.

இப்போது ரகு மண்ணோடு மண்ணாகி, அந்த மண்ணின் மேலும் எத்தனையோ சடலங்களை எரித்த பிறகு அமிர்தா தன் நினைவுகளை அலசிப் பார்த்தாள். கடைசியாக அவளுள் தோன்றியதெல்லாம் வெறும் பிரமை ஒன்று தான். 

ரகுவே ஒரு பிரமையாகிப் போய் விட்டான். அவளைக் காதலித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நினைப்பே வெறும் பிரமை, ஒரு கனவில் அனுபவிப்பது போன்ற மயக்க நிலை. 

இந்த மயக்க நிலையிலிருந்து சீக்கிரத்திலேயே தெளிவு பெற்றாள் அமிர்தா. 

ரகு இறந்து போய் ஏழு நாட்களாகியும், பூக்கடையிலிருந்து பூ வருவது நிற்கவில்லை. ரகு அவளுடைய மனத்தில் முத்திரையாகப் பதித்து, நினைவுகளை ஒரு வடுவாக்க வில்லை என்றாலும் இந்த தினசரிப் பூ அவளை வாட்டியது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்று பூக்கடைக்குச் சென்றாள். 

பூக்கடையில் கிழவன் உட்கார்ந்திருந்தான். அமிர்தாவைக் கண்டதும் சிரித்தான். 

“வாங்க அம்மா. பூசரியா வந்திட்டிருக்கல்ல…?”

“அதைப்பத்திப் பேசத்தாம்ப்பா வந்தேன். நாளையிலிருந்து அனுப்பாதே!!” 

“ஏம்மா?”

“அவர்தான் காலமாகி விட்டாரே.” 

“தெரியும்மா… நானும் கூடப் போயிருந்தேனே…” 

“பின் ஏன் அனுப்பறே….” 

“ஒரு வாட்டி அவர் என்கிட்டே சொன்னார்: ‘மயில்சாமி, ஒருவேளை நான் திடீர்னு போயிட்டேன்னாலும் நீ அனுப்பிக்கிட்டிரு… பணம் உனக்கு வந்து சேரும்னு. அதான் அனுப்பறேன்”. 

“எப்பத்தான் நிறுத்தச் சொன்னார்?” அமிர்தாவுக்கு அலுப்பு தட்டியது. 

“உனக்குக் கலியாணமான பிறகு…” 

“இதோ பார். அவரும் போயிட்டார். நானும் அவரை மறந்துட்டேன். அதனாலே இனிமே அனுப்பாதே. இதனாலே உனக்கு வியாபாரம் குறையறதுன்னு நீ நினைச்சா ஒண்ணு செய். இதே ஒரு முழம் பூவை தினமும் சுவாமி கோவிலுக்கு அனுப்பி விடு. என்ன புரியறதா?” 

“புரியறதும்மா… பூவுக்கு காசு அவர் ஏற்பாடு செய்து விட்டுப் போயிருக்கார்…. காசைத் திருப்பிக் கொடுக்க முடியாது… பூவை சுவாமி கோவிலுக்கு அனுப்பவும் அவர் சொல்லலே… அதனாலே நான் என் கடமையைச் செய்துடறேன்”. 

அமிர்தாவுக்கு ஆத்திரமும் அழுகையும் ஒரே சமயத்தில் பீறிட்டுக் கொண்டு வந்தன. ஆனால் அவள் தன்னையே அடக்கிக்கொண்டு, “சரி உன்னிடம் பேசிப் புண்ணியமில்லை. பூவை அனுப்பித் தொலை… வீட்லே எத்தனையோ சுவாமி படங்கள் இருக்கு… நான் வரேன்… நான் வரேன்…” என்று சொல்லிப் புறப்பட யத்தனித்தாள். 

“இந்தாம்மா, ஒரு நிமிஷம்” என்று அவளை நிறுத்திய கிழவன், “நான் ஒரு உண்மையைச் சொல்லிடறேம்மா…” என்றான். 

“என்ன?” அமிர்தா நின்றாள். ஏதோ ஒரு புதுவிஷயம் வெளியே வரப்போகிறதா? 

“உன்னைத்தான் கட்டிக்கணும்னு ரகு அய்யாவுக்கு மொதல்லே ஒரு எண்ணம் இருந்துச்சு…. ஆனா நாள் போகப் போக அதை அவர் மாத்திட்டார்… ஆனா அதுக்குக் காரணம் நீ அவரைக் கட்டிக்கொள்ள மாட்டேன்னு அவர் நினைச்சது இல்லே…” 

“பின்னே?” 

“தனக்கு அற்பஆயுசுன்னு அவருக்கே தெரியும். அவர் எங்கிட்டே ஒரு வாட்டி சொன்னார்: ‘மயில்சாமி! நான் முப்பத்திரண்டு வயசைத் தாண்ட மாட்டேண்டா’ன்னார்.நான் கூடக்கேட்டேன், ‘கடவுள் நேரே வந்து உன் சாவுத் தேதியைச் சொன்னாரா’ன்னு. அதுக்கு ரகு சிரிச்சார்.”

“நான் இதையெல்லாம் நம்பறதில்லை” என்றாள் அமிர்தா. 

“நானும் நம்பறவன் இல்லேதாம்மா… ஆனா அவர் வாக்கு பலிச்சுட்டுதே… இன்னொன்று, நாள் செல்லச்செல்ல உன் பேர்லே அவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகிக் கிட்டே வந்தது… உனக்கு அவர் என்ன பேரு வைச்சிருந்தார் தெரியுமா?”

“என்ன?” 

“துர்க்கை!” 

“துர்க்கையா?” 

“ஆமாம்மா… கோவில்லே துர்க்கையைக் கும்பிடற போதெல்லாம் உன் நினைவு வந்துடறதாம். உன்னைப் பார்க்கிறப்பவெல்லாம் துர்க்கை ஞாபகம் வந்துடறதாம். உன் தைரியம், அலட்சியமா நீ பார்க்கிற பார்வை, எதிராளியைச் சமாளிக்கிற சாமர்த்தியம் இதெல்லாம் துர்க்கையின் குணம்னு அவர் சொல்வார்.” 

“நான் வறேன், மயில்சாமி”

“நாளைக்கும் பூ வரும்”. 

“நான் சீக்கிரமே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிறேன்”.

மயில்சாமி சிரித்தான். 

வீட்டுக்குத் திரும்பிய போது அங்கே அக்கா கௌரி இருப்பதைக் கண்டாள். 

“எங்கேடீ போயிருந்தே…?”

“நீ எப்போ வந்தே அக்கா?” 

“நான் அப்பவே வந்து விட்டேன். ஞாயிற்றுக்கிழமை, நீ வீட்டில்தானே இருப்பேன்னு வந்தேன்”. 

”உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்கார்…?”

“இப்பவெல்லாம் என் பேச்சுக்கும் கொஞ்சம் தலையாட்டறார்.” 

“கட்டிலும் காட்ரெஜ் பீரோவும் என்னாச்சு?”

“அதைப்பத்திப் பேசத்தான் வந்திருக்கேன், அப்பா நீ வந்தப்புறம் பேசலாம்னு சொல்லி, வெளியே போயிருக்கிறார்.”

“போன வாரம் நாங்க ரெண்டுபேரும் வர்றதாக இருந்தது. ஆனா அன்னிக்கு திடீர்னு ஆஸ்பத்திரிக்குப் போகும்படியாகி விட்டது”. 

“எதுக்கு?” 

“எனக்கு ஒருத்தர் தினமும் பூ அனுப்புவாரே, அவரைப் பார்க்க”. 

“யார் அந்தப் பித்துக்குளி ரகுவா?” 

“அவர் பித்துக்குளி இல்லை. ரகு!” 

“இப்போ எப்படி இருக்கார், என்ன உடம்பு?”

“என்ன உடம்பானால் என்ன? இப்போ அவர் இல்லை.”

“செத்துப் போயிட்டாரா?”

“ஆமாம். ஏழு நாளாகிறது.”

“அடப் பாவமே. அப்போ உனக்கு இனிமே பூ வராதுன்னு சொல்லு”. 

“அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படறே… நான் சொல்ல வந்தது. போன வாரம் நானும் அப்பாவும் உன் வீட்டுக்குப் புறப்பட இருந்தோம்னு தான்”. 

“அதான் வரல்லியே.”

“உன் மாமியார் பல்லவி பாட ஆரம்பிச்சா ஓய மாட்டாள்.”

“பீரோவும், கட்டிலும் வாங்கணும்னா ரெண்டாயிரம் ஆகும். உன் சாந்தி முகூர்த்தத்துக்கு மெத்தை, தலையணை, பெட்ஷீட், ஜமக்காளம் கூட ஒண்ணுமே வாங்கலைன்னு அப்பா அடிக்கடி நொந்து கொள்வார்.” 

“நொந்து கொண்டால் எல்லாம் மானத்திலேந்து வந்து விழுமா… எனக்கு என் கலியாணத்துக்கு என்ன செய்தாராம்? அம்மாவோட இரட்டை வடம் சங்கிலியும், நாலு ஒடிசல் வளையலும் இருந்தது. அதைத் தட்டான் கிட்டே கொடுத்து அழிச்சு ஏதோ போட்டார். மாப்பிள்ளை டிரஸ்ஸுக்கு இரு நூறு ரூபாய் கொடுத்தார். பாண்ட் கோட் பூட்ஸ் டை இதுக்கெல்லாம் அவர் அறு நூறு ரூபாய் பிராவிடண்ட் பண்ட்லே, யாருக்கும் தெரியாம கடன் வாங்கித் தாமே பார்த்துக் கொண்டார்… என் மாமியார் நினைச்சுண்டிருக்காள் அப்பா ஐந்நூறு ரூபாய் கொடுத்திருக் கார்னு… விஷயம் அன்னிக்கே தெரிஞ்சிருந்தா ஜான வாசத்தையே நிறுத்தியிருப்பார்கள்”. 

“அப்பாரெண்டாயிரத்துக்கு எங்கே போவார் அக்கா?”

“எங்கே போவாரோ, எப்படிப் போவாரோ, நான் அங்கே நிம்மதியா ரெண்டு வேளை சோறு தின்னுண்டு இருக்கணும்னா கட்டிலும் பீரோவும் வரணும்”. 

“உன் மாமியார் டைனிங் டேபிள் ஏன் கேட்கலை?” அமிர்தாவுக்கு ஆத்திரம் வந்தது. 

“உனக்குப் பரிகாசமா இருக்கு. இல்லையா அமிர்தா?”

“பரிகாசம் இல்லை.”

“பின் ஏன் இந்தக் குறும்பு?”

“பின் என்ன அக்கா, உனக்குக் கலியாணமாகி ஏழெட்டு மாசமாறது. இப்போ அதைக் கொண்டா, இதைக் கொண்டான்னு பிடிவாதம் பிடிச்சா?”

“எத்தனை வருஷம்தான் ஆகட்டுமே… எனக்குச் செய்ய விட்டுப் போனதைத் தானே கேட்கிறா…”

“அக்கா, உனக்கு நம்ம அப்பாவின் நிலைமை நன்னாத் தெரியும். நான் ஒண்ணும் புதுசா சொல்ல வேண்டியதில்லை. கையிலே இருந்தா அப்பா வஞ்சனை இல்லாம நமக்குத்தான் கொடுக்கிறார். இப்போ இல்லை. அவரை நம்பி ரெண்டாயிரம் ரூபாய் யார்கடன் கொடுப்பார்கள்?” 

“ஏன், உன் பணம் என்னாச்சு”

“நான் மாசா மாசம் முப்பதும், நாப்பதுமா போட்டு பூதம் காக்சுற மாதிரி காத்துண்டிருக்கேனே. அதைக் கேட்கிறாயா?” 

“ஆமாம், என் கவியாணத்தின் போதே இரண்டாயிரத்துக்கு மேலே இருந்தது”. 

“உன் அக்கவுண்டிலும் தான் இரண்டாயிரம் இருந்தது.”

“அதைத்தான் நான் என் கலியாணச் செலவுக்கு புடவையும் பாத்திரமுமா வாங்கினேனே!” 

“இதே மாதிரிச் செலவுக்குத்தான் நானும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்”. 

“அதை இப்போ அப்பாகிட்டே கொடுத்தா என் பிரச்சினை தீரும்”. 

”என் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு தங்கை இல்லை. நீ பிறவிக் கருமி. உன் தங்கைக்காக நீ ஒரு பைசா தரமாட்டே…” 

கௌரி ஒரு நிமிஷம் மௌனமாக இருந்துவிட்டு, “அமிர்தா, உன்னைப் பத்தித் தெரிஞ்சிருந்தும் உன்னைக் கேட்டேன் பாரு… என் புத்தியை…” 

அவள் முடிக்கவில்லை. பசுபதி மெதுவாக உள்ளே வந்தார். 

அத்தியாயம்-12

கௌரியின் குணமும் போக்குமே அலாதி. கல கல வென்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கையிலேயே திடீரென்று கண்களில் கனல் தெறிக்கக் கோபம் வரும். இவ்வளவுக்கும் அவளுக்குக் கோபம் ஊட்ட வேண்டும் என்று யாரும் ஒரு வார்த்தையும் பேசியிருக்க மாட்டார்கள். கெளரியாக ஏதாவது ஒரு வார்த்தைக்கு விபரீதமான அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு கத்துவாள். மாமியாரிடம் அடங்கி நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் காலையில் எழுந்திருக்கிறவள், பல் தேய்த்துக் காபி குடிப்பதற்குள்ளேயே தன் சங்கல்பத்தை மறந்துவிடுவாள். இவ்வளவுக்கும் எவ்வளவோ பேசக் கூடிய ராஜம்மா ஒன்றும் பேசியிருக்கமாட்டாள். அதே மாமியாரிடம் இதே கௌரி சிறிது நேரத்திலேயே மன்னிப்பும் கேட்டு குழைந்து பேச ஆரம்பித்து விடுவாள். 

ராஜம்மா பீரோ கேட்பதோ கட்டிலுக்காகப் பிடிவாதம் பிடிப்பதோ கெளரிக்குத் தப்பாகப்படவில்லை. அவளுடைய அப்பா தன் கடமையில் தவறி விட்டதாகத்தான் அவளே நினைத்தாள். ஆனால் இந்தப் பொருள்களை ராஜம்மா கேட்கும் முறைதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ராஜம்மாவின் குத்தலாகப் பேசும் பாணி அவளைப் புண்படுத்தியது. அவள் மனது வைத்திருந்தால் தவணை முறையில் இந்த இரண்டு பொருள்களையும் வாங்கி மாமியாரின் முகத்தில் எறிந்திருப்பாள். இதனால் அவளுடைய பிரச்சினை நீர்ந்திருக்கும். ஆனால் பிரச்சினையை அப்படித் தீர்க்க அவள் விரும்பவில்லை. அப்பா-தன் கடமையைச் செய்ய வேண்டும். மாமியார் ராஜம்மா தன் வாயை அடக்க வேண்டும். கணவன் மோகன் அவளுடைய சொற்படி கேட்க வேண்டும். இப்படி ஓடியது அவளுடைய எண்ணம். 

இந்த எண்ணத்தோடு தான் அப்பாவைப் பார்க்க அவள் வந்திருந்தாள். அமிர்தா கெளரியை நன்றாக எடை போட்டு வைத்திருக்கிறவள். என்ன தான் கூடப்பிறந்த சகோதரியாக இருந்தாலும், அமிர்தாவுக்கு இயல்பாக இயற்கையாகத் தோன்றக்கூடிய பாசத்தையெல்லாம் கௌரி நன்னுடைய சுயநலத்தாலும் அப்பாவை உதறி எறியும் பேச்சாலும் குழி தோண்டிப் புதைத்து விட்டாள். சிற்சில சமயங்களில் தன்னந் தனியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அமிர்தா கௌரியை நினைத்துப் பரிதாபப்படுவாள். இப்படியும் ஒரு பெண். மனப்பக்குவமோ முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கிறாளே என்று மனம் கசியும். ஆனால் இந்தக்கசிவை அவள் என்றுமே வெளியே காட்டியதில்லை. அப்பாவால் புரிந்து கொள்ள முடியாது. கௌரிக்கு இம்மாதிரி உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாது. 

அமிர்தா தன்னுடைய எதிர்காலத்தை மனத்தில் கொண்டு, மாதச்சம்பளத்திலும், போனசிலும் சிறுகச்சிறுகப் பணம்பிடித்து பாங்கியில் கட்டிக் கொண்டு வருகிறாள். கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் வரையில் சேர்ந்திருக்கிறது. அவள் மனம் வைத்தால், ஒரு நொடியில் கௌரியின் பொய்மை கௌரியின்பொய்மை யான பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால் அப்படித் தீர்க்க அமிர்தா விரும்பவில்லை. கௌரியின் பிரச்சினை ஒரு பொய்ப் பிரச்சினை. ராஜம்மாவின் நிபந்தனை ஒரு பிடிவாதத்தால் பிள்ளை பெற்றவள் என்ற திமிரால் ஏற்பட்ட நிபந்தனை. இதற்குச் செவி சாய்த்தால் நாளைக்கு இன்னும் ஏதாவது கேட்டுக்கொண்டு வருவாள். அமிர்தா தன் தகப்பனாரின் ஏழ்மையை நினைத்து அக்காவுக்கு உதவி செய்யத் தயார். அதனால் அப்பாவும் தற்காலிகத் திருப்தி அடைவார். ஆனால் அதன் பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடுமே! 

அக்காவும், தங்கையும் ஒருத்தியை ஒருத்தி தாக்கிக் கொண்டிருக்கையில் பசுபதி திடீரென்று பிரவேசித்தார். 

“கௌரி, எப்போ வந்தே நீ?… அமிர்தா, கௌரிக்கு காபி கொடுத்தாயா? எம்மா… உன் புகுந்த வீட்டிலே எப்படி இருக்கேடி” 

பசுபதிக்கு கௌரி என்றால் ஒரு தனி அன்பு, வாஞ்சை உண்டு. இதற்கு ஒரு காரணம் கௌரி, இறந்து போன அவளுடைய அம்மாவை உரித்து வைத்திருந்ததுதான். கௌரி அவரை மதிப்பது கிடையாது. எவ்வளவோ தடவைகள் தகப்பனாரின் ஏழ்மையை அவமானப் படுத்தியிருக்கிறாள். கையாலாகாதவர் என்று ஏசியிருக்கிறாள். இதையெல்லாம் பசுபதி பொருட்படுத்தியதே இல்லை. அவருடைய ரத்தம் தான் அவரையே நிந்திக்கிறது. அதனால் பாதகமில்லை என்று மறந்திருக்கிறார். 

“ஏம்ப்பா, நான் இப்போ உங்களுடைய உபசாரத்துக்காக வந்திருக்கேன்று நினைச்சிங்களா?” 

“ஏன் கௌரி கோபிச்சுக்கறே.. என்ன நடந்து விட்டது”

“இன்னும் என்ன நடக்கணும்? என்னை ஒரு சீரும் சிறப்பும் இல்லாமல் மணையில் உட்கார வைத்தீர்கள். என்னுடைய கூரைப்புடவைக்கும் மாங்கல்யப் பொன்னுக்கும் கூட என்னுடைய பணம்தான் உங்களுக்குத் தேவையாக. இருந்தது… இப்போ ஆறுமாசமா என் மாமியார் கேவலம் ஒரு பீரோவுக்கும் ரெண்டு சுட்டிலுக்கும் என்னைப் பிடுங்கித் திங்கறா… அவள் இடிச்சுப் பேசற பேச்சு உங்க காதிலே ஏறலை. எனினும் கட்டில், பீரோ வாங்க உங்களுக்கு வக்கு கிடையாது”. 

அமிர்தா வேடிக்கை பார்க்கிறவளைப்போல, அக்காவையும், அப்பாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா அமிர்தாவை ஒரு சுதந்திரத்துடன் திட்டுவார். அடக்கப் பார்ப்பார். ஆனால் கௌரி என்ன சொன்னாலும் தாழ்ந்தே போவார். இவ்வளவுக்கும் அவருக்கு. உண்மையான பயம் அமிர்தாவிடம் தான். 

“ஏன் கௌரி இப்படி எல்லாம் பேசறே?” என்றார் பசுபதி. 

“பின் எப்படிப் பேசணும் என்கிறீர்கள்?..”

“உனக்குத்தான் தெரியுமே கௌரி, என்னுடைய நிலை?”

“உங்க நிலை என்னிக்குப் பேசும்படியா இருந்தது?. கலியாணத்தன்னிக்கு ராத்திரி, ரெண்டாந் தடவை வடிக்க அரிசிகூட இருக்கவில்லை. சமையற்காரனாகப் பார்த்து இரக்கப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வந்தான். உங்க நிலையும் மார்க்ஸோட நிலையும் ஒண்ணுதான்”. 

“உன் மாமியாருக்கு எப்போ கட்டிலும் பீரோவும் வேணுமாம்?”

“இப்போ… இன்னிக்கே”

“சரிம்மா கௌரி… நான் வாங்கியே தரேன்னு வைச்சுக்கோ, அதைப் போட்டுக் கொள்ள உங்க வீட்லே ஏது இடம்?”

இதே கேள்வியை கௌரி மோகனிடமே கேட்டிருக்கிறாள். ராஜம்மாவின் நச்சரிப்பு பணத்துக்காகத் தான், பொருள்களுக்காக இல்லை என்பதை இடித்துக் காட்டியிருக்கிறாள். ஆனால் அவளுக்கு, இப்போ அப்பாவின் கேள்வி நியாயமாகப் படவில்லை. 

“நாங்கள் எங்கே வேண்டுமானாலும் போட்டுக் கொள்வோம்… உங்களுக்கு என்ன கவலை? என் புக்ககத்திலே இடம் இல்லேன்னா பக்கத்து வீட்டுத் தொழுவத்திலே கூடப் போடுவோம்.” 

“மாடு கட்டிலிலே படுத்துக் கொள்ளாது அக்கா!” என்று சொல்லிச் சிரித்தாள் அமிர்தா. 

“நீ பேசாம இரு!” என்ற பசுபதி, “ஏம்மா, எனக்கு ஒண்ணு புரிகிறது!” என்றார் கௌரியைப் பார்த்து. 

“என்ன?” 

“உங்களுக்கெல்லாம் பணம்தான் தேவை. நானே வந்து ராஜம்மாவிடம் பேசிக்கொள்கிறேன்”. 

“என்னைத்தான் அனுப்பி இருக்கிறாளே!” என்றாள் பசுபதி. 

“அவள் அனுப்பினாளோ நீயாக வந்தாயோ எனக்குத் தெரியாது… இன்னும் ரெண்டு நாளிலே நான் அங்கே வரேன். ராஜம்மாவும் நீயும் மட்டுமா அங்கே இருக்கிறீர்கள்… உன் புருஷனும் மாமனாரும் இருக்கிறார்களே, அவர்களையும் சந்திக்கணும்”. 

கௌரி ஏதோ பேச வாய் எடுப்பதற்குள் அமிர்தா குறுக்கிட்டாள். 

“பாவம் அவங்க ரெண்டு பேரும் வாயில்லாப்பூச்சிகள். பிள்ளைப்பூச்சிகள். கொட்டறதுக்கு இவளும் மாமியாரும் தான்.” 

“ஏண்டி நாங்கள் என்ன தேளா?”

“உனக்கு அப்படிப் பட்டா உனக்கும் மூளை இருக்குன்னு அர்த்தம்…”

“சரி சரி, ரெண்டு பேரும் அடித்துக் கொள்ளாதீர்கள்… கௌரி சாப்பிட்டு விட்டுப் போ, என்ன?”

“இரு, அக்கா. உனக்குப் பிடிக்கிறதா சமைக்கிறேன்… வள்ளுவள்ளுன்னு விழுந்தா ஒரு காரியமும் நடக்காது. மொதல்லே காபி கலந்து தரேன்.” 

“வழக்கம் போல சர்க்கரையை அள்ளிக் கொட்டாதே. நல்ல காபியா தா… நல்ல காபி குடிச்சு எட்டு மாசமாறது”. 

திடீரென்று கோபமும் ஆவேசமும் போய், சூழ்நிலையே மாறி சிரிப்பும் கும்மாளமும் பிறந்தன. எத்தனைக்கு எத்தனை கெளரியால் ஆத்திரப்பட முடியுமோ அத்தனைக்கு அத்தனை அவளால் சிரித்துப் பேசவும் முடியும். 

“அமிர்தா, சீக்கிரம் ஒரு கலியாணத்தைப் பண்ணி தொலைச்சுக்கோயே.” 

”பண்ணிக் கொள்ளணும் அக்கா… எங்க ஆபீஸ்லே எத்தனையோ நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்… ஒண்ணு ரெண்டு பேர் ஆசையும் படறா… ஆனா எனக்குப் பிடிக்கவில்லை.” 

“இப்படித்தள்ளிக் கொண்டே போனால் எப்படி?”

“பார்க்கலாம்.”

“நல்லவேளை, ரகு பெண் கேட்டு வரலை…” 

“யார் சொன்னா… அவர் கேட்கவில்லை என்று. அவரைக் கலியாணம் பண்ணிக் கொண்டிருந்தா, இப்போ நான் ஒரு விடோ… விதவை!” 

அமிர்தா தன்னை மீறிப் பேசினாள். 

“சீ, இப்படிப் பேசாதே, துக்கிரி…” 

திடீரென்று வாசலில் ஒரு கார் நிற்பது தெரிந்தது. இருவரும் மெளனமானார்கள். அப்பா கார் அருகே சென்றார். 

அடுத்த கணம் தான் கண்ட காட்சியில் அமிர்தா வியப்பும் திகைப்பும் அடைந்தாள். 

காரிலிருந்து இறங்கியவர் அப்பாவுடன் உள்ளே வந்து கொண்டிருந்தார். 

– தொடரும்…

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *