கணவன் பாலுவிடம் கலாவுக்குக் கோபம்.
ஊருக்குப் போகிறேன், என்று பஸ் பிடித்தாள். பாலுவும் தொடர்ந்து வந்தான்.’நீங்கள் என்னுடன் வரக்கூடாது’ என்று தடுத்தாள் அவள்.
‘நான் உன்னுடன் வரவில்லை. பொதுப் பயணியாக வருகிறேன்’ என்று இரண்டு வரிசை பின்னால் அமர்ந்து கொண்டான், அவன்
பஸ் பட்டுக்கோட்டைக்கு வந்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிப்பது வழக்கம். ஆனால் இப்போது பேருந்தைவிட்டு இறங்கி பத்து நிமிடமாயிற்று.
மெளனமாய் நின்றிருந்தாள், கலா. ”ஆட்டோ பிடிக்கட்டுமா? என்றான் பாலு தயங்கிய குரலில்.
அவள் பேசவில்லை. விறு விறுவென்று போய் அவள் வந்த பேருந்திலேயே ஏறினாள்.
“வீ…வீட்டுக்கு…”
‘போகல்லை’ என்றாள் கண்களில் அரும்பாக ஒரு புன்னகை. ‘கோபத்துடன் வீட்டை விட்டுக் கிளம்பிய மனைவி எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாபமல்
இவ்வளவு தூரம் எனக்குப் பாதுகாப்பாக வந்தீர்களே….அந்த உயர்ந்த குணத்தை நினைக்கிறபோது என் கோபம் அற்பமா தோணுதுங்க…வாங்க…திருச்சிக்கே போகலாம்”
– தமிழினியன் (ஜூலை 2011)