கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 13,031 
 
 

“குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே”

குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்….மாடுகள் கத்துதெல்லவே!……”

குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தொ¢ந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ¤ம் படிந்து பழுப்புநிறமாகத் தொ¢ந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.

“குலம்!….கொஞ்சம் வைக்கல்…..

அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.

“நீயே இழுத்துப்போடேன்…எனக்கு ஒரே அலுப்பு”

அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித்தாள்.

சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேலைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான்.

எவ்வளவு அருமையான மகன்!

அவன் ஏன் அப்படிப் போனான்?

ஊரை நீங்கித் தூரே வயல்வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே பனங்கூடல்களும் திடல்களும் தனித்துக் கிடக்கின்றன. மாலைநேரங்களில அம்மா அவ்விடங்களில் புல் செதுக்கிக் கொண்டு வரப்போவாள். சைக்கிள் ஓட்ட முடியாது அவ்விடங்களில், சீலன் சைக்கிளில் சாய்ந்த படியே ரோட்டில் காத்து நிற்பான். அம்மா புல்லுக் கட்டுடன் திரும்பி வரும் நேரங்களை அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம் மிகத்தூரே மங்கலாகத் தொ¢யும் போதே ரோட்டை விட்டிறங்கி அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான்.

அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக்கொள்ள முருகன் கோயில் மணி சிணுங்கி அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்றாக இருள் சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொத்தியபடி விபூதியும், சந்தனமுமாக திரும்பி வரும்போது, சீலன் வீட்டில் ‘பளிச்’சென விளக்கேற்றியிருப்பான்.

மேசைக்கு முன்னால் விளக்கொளியில் முகம் விகசித்துத் தொ¢யும்படிக்கு அவன் உட்கார்ந்திருப்பான். ஏதாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னால் மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும் பக்கத்திலே சைக்கிள் முன்சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்த்து பளீரென ஒளிவீசிச் சிரிக்கும்.

மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்னவள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காணக் கிடைக்காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களை அம்மாவுக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. அவன் தொழில் அப்படி!

மாடுகள் கழுத்துமணிகள் கிணுகிணுக்க புல்லை அரைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும் வாலைத் தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும், கேட்கும் சாணியின் மணத்துடன் பசும்புல்லின் வாசனை நாசியில் உறைக்கும், கோழிகள் எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறு வெனக் கொக்கா¢க்கும். ‘படபட’ வெனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும்.

சுடச்சுட ஒரு கோப்பை தேநீர்…கடுமையான உழைப்புக்குப் பின், தொழுகையின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில்…..அருமையான தனது பிள்ளைகளுடன் அம்மா அருந்துவாள். அதுவல்லவோ வாழ்க்கை!

எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பிரிவு சொல்லாமலே போயினவோ?

அம்மா அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கிப் போனாள்.

ஓரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனோ இவ்வாறு வேறு வேறு குணம் கொண்டவர்களாய் ஆகிப் போனார்கள்? இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதிரித்தான் சீராட்டினாள். ஒரே மாதிரித்தான் உணவூட்டினாள். ஒரே பள்ளிக்கூடத்திலேதான், கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, எண்ணெய் பூசிபடியச் சீவிய தலைகளுடன் அவர்கள் பள்ளிக்கூடம் போவதை வாசலில் நின்று பார்த்து ரசித்தாள்.

குலம் மட்டும் படிப்பை ஒரேயடியாகக் குழம்பினான். அண்ணனுடன் நெடுகலும் சண்டை போட்டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சிலவேளை சாப்பிடாமலே போனான். ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள், அவனது இளையமகன் மிகவும் புத்திசாலி. ஆனாலும் ஏன் அவனால் படிக்க முடியவில்லை என அம்மாவுக்குப் புரியவில்லை.

சீலன் அமைதியாகப் படித்தான். அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்கத் தொ¢யாதவனாக இருந்தான். நடப்பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் புல்லுக்குக் கூட நோகாத நடை. கண்கள் பெரிதாக இருந்தன. உள்ளங்கைகள் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும், நீளமாகவும்….விரல்கள் கூட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன, பெண்களைப் போல.

சீலன் ஒரு மோகனமான மாலை நேரம் பிறந்தான். பறவைகளின் கீச்சொலிகள் அடங்கிய பிறகு, மாடுகள் எல்லாம் மேச்சல் நிலங்களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு, மென்மஞ்சட் கதிர்களை மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்….அம்மாவின் இடது தொடையை சற்றே உரசியபடி ஒரு வளர்பிறை நாளில் சீலன் பிறந்தான். புணர்பூச நட்சத்திரம். ‘இவன் பெரிய காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவன்’ என அவனது சாதகம் சொல்லிற்று.

குலம் அத்த நட்சத்திரம். அது தான் அவனிடம் முரட்டுச் சுபாவங்கள் சேர்ந்து விட்டனவோ? அத்தம், அதமம் என்றார்கள் சாத்திரிமார்.

மத்தியான நேரம் கொடுமையானது. மெளனமானது. காற்றை வெயில் விரட்டிவிடும். ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடுவெயிலில் வாடித் துவளும். சனங்கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி ஓடித்திரியும் ‘கர்ர்ர்’ எனக் கடூரமாகக் கத்துகின்ற காக்க்கைகள் நீர் தேடிப் பறக்கும்.

குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இறாத்தல் நிறை காட்டினான். அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஓய சில நாளாயிற்று.

என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும்…அவனது கேசங்களை வருடுவதில் அம்மா இன்புற்றாள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர்.

குலத்துக்கு மிகவும் முரட்டுத் தலைமயிர். சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து உள்வாங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும், ஒயில் நாற்றமும், வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி. குலம் ஒரு மெக்கானிக் ஆகவேண்டி ஆயிற்று. அவனது மாமனைப் போல, நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற் போல வராமல் இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேரமில்லாமல் போயிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத்தானோ, என்னவோ? ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான்.

நினைக்க நினைக்க அம்மாவுக்கு நெஞ்சைப் பிழக்கும்படி நெடுமூச்சு எறிந்தது.

சீலன் ஏன் அப்படிப் போனான்.

அம்மா மெல்ல மெல்ல போரிலிருந்து வைக்கோலைப் பிடிங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஓடி வந்தது. கால்களில், ‘சில்லென’ இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்தூக்கி சுழற்றிச் சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.

நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்த நாய். அம்மா அதை உதைப்பாளா? கால்களை மடக்கிக் கொண்டாள்.

‘சொதசொத’ வென்ற மாரி காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதைத் தூக்கிக்கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளைநிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்துவிட்டது.

மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்துபோய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக்கொண்டு வந்தான். ஓலைப் பெட்டியால் கவிழ்த்து மூடினான். பெரிய காரியவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்குச் சொன்னான்.

“வளர்ந்தாப் பிறகு நல்லது…மரநாய் வராதம்மா….கோழிகளுக்குக் காவலாயிருக்கும்.”

தினமும் செங்காரிப் பசுவில் பால் கறந்து ஊட்டினான். அவனுக்குத் தொ¢யும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்கதென்று.

அம்மா மாடுகளை நோக்கிப் போனாள். நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடியது.

வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாகத் தான் கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழுகொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன்னங்களும், காந்தக் கண்களுமாக…எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்!

அமைதியாக இருந்தான். ரேடியோவைக் கூட சத்தமாக முடுக்கி விட மாட்டான். அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னாலிருந்து எதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளைத் துடைக்கும் போதும் பாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கும், ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் ‘பளபள’ வென மின்னுமாறு சைக்கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் தலையைக் குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது.

அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்றுப் போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து விட்டது. அந்த வீடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சீந்துவாரற்று தூசி படிந்துபோய், ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட சுவரோடு சாய்ந்து வைக்கப்பட்டு விட்டது.

குலத்துக்கு சைக்கில் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம், காரோ, வானோ, மோட்டார் பைக்கோ….காற்றைக் கிழித்துக்கொண்டு வருபவனென வந்து நிற்பான்.

சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும், மெளனமும், அம்மாவின் ஏக்கப்பெரு மூச்சுகளும் மட்டுமே மிஞ்சிநிற்கின்றன. மகளோவெனில் மிகவும் சின்னவள். புரியாத பேதை. அழகிய சிறு மொட்டு.

சீலன் ஏன் வீட்டை விட்டுப் போனான்?

அம்மா நன்றாகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சா¢யாகவே இல்லை. பா£ட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.

எதையோ குறித்து தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது; எதையோ குறித்து மிகவும் கவலை கொள்பவனாகவும் தொ¢ந்தது.

பா£ட்சையை நினைத்துக் கலவரப் படுகிறானே? ஏன், நன்றாகத்தானே படித்தான்!

பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தான். வாய்க்குள் ஏதோ முனகிக்கொள்பவனாய் தலையை அடிக்கடிகுலுக்கினான். இரவுநேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட்டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக்கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டுவதாகத் தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து அவனது இனிய சா¡£ரமே மிதந்து வருகிறது போல…உலகின் இனிய வஸ்துகள் யாவும் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதென….அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என….அவனுக்காக எங்கோ ஒரு அரிய நங்கை வளர்ந்து வருகிறாள் என…அவர்கள் அம்மாவுக்கு அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என….

சீலனோ எனில், சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பா£ட்சை எழுதப் போனான். மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்படவில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல்…என்று ஏதாவது?….அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள்.

“நேரமாகுதெல்லே மேனே….”

சா¢யாகச் சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான், வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை.

மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஓட்டினான்.

“போயிட்டு வாறன் அம்மா…..”

“வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ….”

பிறகும் ஏன் நிற்கிறான்……

“நேரமாகுதெல்லே….”

“நான் போறன்…..” மொட்டையாக முணுமுணுத்தான்.

மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக்கொண்டு போனான். அம்மா அவன் பின்னாலேயே போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள் முடுக்கால் திரும்பி மறையுமுன் ‘சட்’ என ஒருதரம் திரும்பிப் பார்த்தான்.

அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத்தலைத் தேடினாள்.

வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப்பார்த்தாள்.

சீலன்!

என்னவாயிற்று இன்று இவனுக்கு?

மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்து போய் விட்டுவிட்டுப் போனானோ?

திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப்போய் இருந்தது.

“ஏன் மேனே தலையிடிக்குதோ…..”

“சாச் சாய்…..”

குனிந்துநிலத்தை கீறவாரம்பித்தான்.

“இரு கோப்பி போட்டுத் தாறன்….”

“……..”

“இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடாதோ?”
அசிரத்தையாகத் தலையைக் குலுக்கினான்.

“அப்ப ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?”

“…….”

“காசு….கீசு….ஏதாவது வேணுமோ?”

சிரித்தான் அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை, பறித்தான்! அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில் இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த்திருந்தன.

“தங்கச்சி எங்கை அம்மா……?”

“ப்ச்…உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்”

“……”

“ஏன்”

“சும்மா தான்”

“அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு….நேரம் போகுது…..”

ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைந்து நின்று கொண்டான். சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ தேடினான் போலும்!

“நான்……போ-ற-ன்….அம்மா!”

வெடுக்கெனத் திரும்பிச் சைக்களில் பாய்ந்து ஏறினான். வெகுவேகமாகப் போனான். ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்கிறதென….

அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பை தொங்கிக் கொண்டிருப்பதை அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதித்துத் தொ¢ந்தது.

அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவங்களைச் சுருக்கினாள்.

மாலையில் யாவும் புரிந்தன. தயங்கித் தயங்கி ஒரு பையன் சீலனின் கைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான். தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன் சைக்கிளைச் சாத்தினான். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தைப் பாராமல் எங்கோ வேண்டுமென்றே பார்வையைத் திருப்பினான்.

வெகு ஆயத்தமாக தொண்டையைச் செருமிச் சா¢பண்ணிக் கொண்டான்.

“சீலன்….இதை…இஞ்சை கொண்டு வந்து விடச் சொன்னவர்….”

“ஆங்!. சீலன் எங்கையப்பு…”

“……”

“ஐயோ! என்ரை பிள்ளை….”

அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. தலையைத் குனிந்தவனாய் விடுவிடென விரைந்து போனான்.

அம்மா பதைத்தாள் கி¡£ச்சிட்டாள்.

“சீலன் எங்கையப்பு….”

பையன் பின்னே தட்டுத்தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கினான்.

“சீலன் எங்கையப்பு….”

இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்துபோன காற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது.

இவ்வாறான எத்தனை அன்னையா¢ன் சோகங்களை அது பார்த்திருக்கிறது! அது பேசாமல் போனது.

“ஐயோ, என்ரை சீலன் எங்கே….”

சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள்.

இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று.

“சீலன் எங்கை?”

அவளுக்குத் திருப்பிதயான பதிலைத் தர ஒருவரும் இல்லை.

“சீலன் எங்கை?”

அம்மாவின் பா¢தாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங்கினார்கள்.

அவளுக்குப் புரிந்தது சீலன் எங்கே போனான் என்று! இவ்வாறான எத்தனை கதைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப்போயினர்.

பிறகு,

அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவனுடன் கூடப் போய்விட்டதாய்….

வெறுமை,

மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கித் தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும், பனங்கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கின்ற திடல்களிலும் புல் செதுக்கிக் கொண்டு வரப் போவாள். முழுத் தூரமும் இளைத்து, இளைத்து முதுகொடியச் சுமந்து வந்தாள்.

அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாருமில்லை.

அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேட்கும். அவளால் வேளா வேளைக்கு பூசை காணப்போக முடியவில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்தமாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக. சிந்திக் கிடக்கின்ற சில மலர்களும்…மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும்…. முணுக்கென எரிகின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும்…இழுத்துப் பூட்டப்பட்டிருக்கிற சித்திர வேலைப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும்…

அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகினாள்.

வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்புறத்தில் ஒன்றையன்று கொம்புகளால் குத்தி விரட்டியபடி துள்ளித்திரியும். கண்ட இடத்திலெல்லாம் குளம்புகளால் உழக்கிய அடையாளங்களும்…சாணியும்…

அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டைகளில் கட்ட வேண்டியிருந்தது.

கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப்பழகின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். “சூ” என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கா¢ப்புகளாலும், சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும்.

அம்மாவே தனியாக, அவற்றின் கூடுகளில் அடைக்கவேண்டி இருந்தது.

புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேஜையின் மீது சீலனின் புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகி விட்ட ஒரு ரேடியோ. அருகிலே மகள் அமர்ந்திருப்பாள். அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட்டக் கொட்ட விழித்தபடி தனிமையில் உட்கார்ந்திருப்பாள். பாவம்!

அந்த அருமையான மாலைநேரத் தேநீர் அம்மாவுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை.

அம்மா வரவர மெலிந்தாள். கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றின. நடை வரவத் தளர்ந்தாள். முன்புபோல உற்சாகமாக வேலைசெய்ய முடியவில்லை. அம்மா வயோதிபத்தை நோக்கி மெல்ல மெல்ல போய்க்கொண்டிருந்தாள்.

இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். அலுத்துப்போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ ஏதோ விபா£த எண்ணங்கள் தோன்ற பெருமூச்சுகள் விடுவாள்.

குலத்தைப் பற்றியும் அம்மாவுக்கு வரவர ஒன்றும் புரியவில்லை. எப்போதாவது மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை வருவான். அம்மா அரைத்தூக்கத்தில் அவஸ்தையுடன் புரளும்போது கனவேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒருதரம் உறுமி ஓயும். குலம் ‘திமுதிமு’வென உள்ளே வருவான், அம்மாவுடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமலே…அம்மா முகத்தைச் சா¢யாக ஏறிட்டுக் கூடப் பார்க்காமலே…கைகளில் பணத்தைத் திணிப்பான். சேட்டைக் கழற்றிக் கண்ட இடத்தில் எறிவான். ஓலைப்பாயை விரித்து, தலையணைகூட இன்றிப் படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்தப் போட்டபடி….கால்களை ஆட்டியபடி…மயிரரும்பும் மார்புகளும் விம்மித் தணிய ஒரு நொடியில் தூங்கிப் போவான்.

இப்போ தூங்கிக் கொண்டிருக்கிறானே, அது மாதிரி! ஒரு காட்டுப் பிறவி”

* * *

இப்போ,

குண்டுச் சத்தங்கள் அடிக்கடி கேட்கின்றன. குண்டுச் சத்தங்களைக் கேட்டவுடன் அம்மா நடுங்குவாள். கண்கள் பீதியால் விரியும். அடிவயிறு குலுங்கும்.

‘அவர்கள்’ அடிக்கடி ஊர்களைச் சுற்றி வளைத்தனர். கன ரகவாகனங்களின் உறுமலைக் கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்றுப் போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் “மகன் எங்கே?” என உறுக்கியபடி அவர்கள் போகும் பாவனையில் பிள்ளைகளை அவர்கள் வளைத்துக் கூட்டிச் செல்லும்போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது.

“கடவுளே!…நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு…”

ஊரில் தினமும் இரவுநேரங்களில் குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காதுச் சவ்வுகள் கிழிந்து விடுமாற்போல் ‘கிண்’ என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய் விடுகின்றது.

ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.

அம்மாவுக்கு மிகவும் பா¢ச்சயமான அந்த வயல் வெளிகளிலே, பனங் கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கும் திடல்களிலே பொடியன்கள்’ குண்டு வெடிக்கவைத்துப் பழகுகின்றார்கள் என ஊர்ப்பெண்கள் அம்மாவிடம் சொல்லினர்.

சீலனும் அவர்களுள் ஒருவனான இருக்கலாமோ? அம்மா பெரும் பீதியுடன் எண்ணினாள். ஆனால் சீலனைக் கண்டதாக ஒரு நாய் கூட அம்மாவிடம் சொல்லவில்லை.

அவன் எந்த ஊரில் குண்டு வெடிக்கவைத்துப் பழகுறானோ? அம்மா பிற ஊர்களை அதிகம் அறியாள். இந்தச் சிறு குடிசைவீடும்….முருகன் கோயிலும்…..புழுதி பறக்கின்ற ஒழுங்கைகளும் ….பனங்கூடல்களும் …திடல்களும் …மாடுகளும் …கோழிகளும் தான் அம்மாவின் உலகம். அவளது பிள்ளைகளே அவளீட்டிய ஈடற்ற செல்வம்.

2

இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று.

குலம்கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இன்றாவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப்பட்டாள்.

இவன் என்ன பிள்ளை? வீட்டுக்கு வருவதே குறைவு வந்தவுடன் விழுந்து படுக்கிறான்.

“அம்மா…பசிக்கிது” என ஒரு வார்த்தை!

ம் ஹ¤ம்.

பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்துவிடுமே. இதுகூடப் புரியாது. ஒரு காட்டுப்பிறவி.

எங்கேதான் இவன் சாப்பிடுகிறானோ?

இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினாள் அம்மா. தூங்காமல் விழித்திருந்தாள். திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தாள்.

இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக்கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின் நெற்றி போலத் தொ¢கிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் திரிவதை அம்மா பார்த்துக்கொண்டிருத்தாள். பூவரசயிலைகள் மங்கின நிலவொளியில் பளபளத்துத் தொ¢கின்றன.

அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக்கில் சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகுறுப்பதை, நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஓடுவதை, நிலத்தைப் பிராண்டுவதை…அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிள்வண்டு ஒன்று கி¡£ச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்றுப் பலமுறை குரைத்தது. நிலவைக் கண்டு அது குரைப்பதாக எண்ணினாள்.

செங்காரிப்பசு வேதனையான குரலில் கதறியது “எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

நடுநிசியின் மணத்தையும், உருவத்தையும் சத்தத்தையும் அம்மா உன்னிப்பாக கவனித்தாள். எங்கோ புல்லாந்தி மலர்ந்திருக்க வேண்டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை! வேலி சரசரத்தது. உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரைகளைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன் பாம்பு வழுவி வழுவி வேலிக்குள் வருகிறதோ?….அம்மாவுக்கு ஒரே பயம்!

குலம் எப்போது வருவான்? அவன் கட்டாயம் வரவேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி வேண்டினாள்.

அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. நிலமும், காற்றும் வானும் அதிர்கின்றன. அடிவயிறு குலுங்குகிறது.

சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே, பிசாசுகளும் உலவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எப்படிப் பழகினர்? இந்தப் பயங்கர சத்தங்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர்? இந்த ஆபத்துக்களை எவ்வாறு சிரிப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்? இவ்வாறு வேகத்தையும் வெஞ்சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத்தது யார்?

“கடவுளே”….எவளெவள் பெத்த பிள்ளையளோ,…இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லாமல்….”

குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேட்டுப் பழக்கமில்லாத வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத்தக்க, அருவருப்பான சத்தம் அரை குறையில் பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல.

அம்மாவுக்கு உடல் ‘பட்’டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறியதாக உள்ளுணர்வு சொல்லிற்று.

எழுந்து மேசையை நோக்கிப் போனாள். நடுங்கும் கரங்களால் விளக்கைத் தூண்டினாள். இறங்கி முற்றத்துக்கு வந்தாள். சேலையை இழுத்துப் போத்திக்கொண்டு குண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த்தாள். நாய் அம்மாவின் காலடியில் நின்றது. வாலைக் கால்களுக்கிடையில் நேராகத்தொங்கப் போட்டபடி செவிகளை வானோக்கி உயர்த்தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளையிட்டது. வீட்டைச் சுற்றிச்சுற்றி வேகமாக ஓடியது. அம்மாவின் காலடியில் நிற்பதும்…பிறகு ஓடுவதும்…கெட்ட சேதியன்றை அம்மாவுக்கு உணர்த்த அது துடித்ததும் போலும்!

செங்காரிப் பசு மீண்டும் கதறியது. சிள்வண்டின் பிலாக்கண ஓசை மிகைபடக் கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டுவாசனை எங்கும் நீக்கமற நிறைந்தது.

அம்மா சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ்சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வரண்டு விட்டது. தொண்டைக் குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்துவிட்டது போலத் திமிறித்திமிறி மூச்சுவிட்டாள்.

சீலனை நினைத்து நினைத்து ஏங்கினாள். குலம் இன்றாவது வருவான் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. இரவும் பகலும் முற்றி அம்மாவைச் சுற்றிக் கனமாகப் படிந்தது, துன்பம் தரும் குரலில் ஏதோ சொல்லிற்று.

சற்றுத் தூரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத்தம். ஆபத்தான நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாகச் சுமந்துகொணடு காப்பாற்ற ஓடிக் கொண்டிருப்பதாக….

எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.

கோழிஒன்று பா¢தாபமாகக் குழறுகிறது. மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான அந்தச் சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்ந்து தூரே போய், மறைகிறது. நாள் துரத்திக் கொண்டு ஓடிப்போய் இயலாமையுடன் திரும்பி வருகிறது.

விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு கண்டாள்.

வயல் வெளியில் அம்மா நிற்கிறாள், சூரியன் பயங்கரமாகக் காய்ச்சுகிறான். மழையும் பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலைப் பொசுக்கிற்று மழைநீர். அம்மா ஓடுகிறாள், ஒழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிறாள். ஒழுங்கைகளில் வெள்ளம் பாய்கிறது ஒரு சிவப்பு நூல்போல இரத்த ஓடை ஒன்று வெள்ளத்தில் கலக்கிறது. அம்மா அதன்வழி போனாள். வெகுதூரம்…வெ-கு-தூ-ர-ம்…கடையில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன் தலையைக் கவிழ்ந்தபடி இருக்கிறான். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டுகிறது; மழைநீரில் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். நாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது.

கனவில் இரத்தத்தைக் காண்பது கூடாதே! அம்மா வீரிட நினைத்தாள். இயலாமல் போயிற்று.

குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு வினாடியையும் வேதனையுடன் அனுபவித்தாள்.

கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று. காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில், விடிந்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்லின. கோழிகள் சிறகடித்துக் கொக்கா¢த்தன, கூவின. முதல் நாள் இரவில் பறிபோன தங்களது தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடிநிறையப் பால் சுரந்து கனக்கின்ற வேதனைதாளாமல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையைக் குனிந்து கொண்டுவரும் ஒருவனைப் போல, சூரியன் மெல்ல மெல்ல உதயமாகினான்.

புரியாத பேதையான மகள் சோம்பல் முறியடித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவைப், புரியாத பார்வையால் அளந்தாள். அம்மாவின் ஜீவன் எங்கே ஓடி ஓளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட அம்மாவின் பலகீனமாக தேகத்தைப் பூமியில் புரட்டி விடும்.

மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். யாராவது ஒரு வேலையற்ற பெண் அம்மாவைத்தேடி வரமாட்டாளா? கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஓயமாட்டாளா?

ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது. மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்குத் துரத்த வேண்டியிருந்தது. கோழிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அம்மா யந்திரகதியில், அவற்றைச் செய்தாள். மூளை வேலை செய்து மரத்துப் போயிற்று. கண்கள் காந்தின. அம்மாவுக்கு உட்காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்புக் காற்றுப்போல உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளைப் பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள் நடப்பதும்…பிறகு நெடுநேரம் ஒரேயிடத்தில் உட்கார்வதும்…தூரே அர்த்தமற்றுப் பார்வை பதித்து பெருமூச்சுக்கள் எறிவதும்…

சூரியன் யாருக்கும் பிரிவு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போரிட்டு தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை.

சீலன் என்ன ஆனான்?

குலம் ஏன் நாலைந்து நாட்களாக வரவில்லை?

அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன; ஒன்றை ஒன்று துரத்தின.

தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்லை அச்சமூட்டும் பேரமைதி ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட்களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே விக்கல்!

நாலாவது இரவு வேகமாக வந்தது.

ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.

அம்மா திண்ணைக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரஇலைகள் நடுநடுங்கிக் கொண்டிருக்க, காற்று அவற்றைச் சீண்டிவிட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலவு மேகங்களுக்குள் பயந்து போய் ஒளித்துக்கொண்டு அடிக்கொருதரம் எட்டிப்பார்த்து, ‘சடக்’ எனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஒழுங்கையில் யாரோ சுருட்டுப் பிடித்துக்கொண்டு போனான் போலும். ‘கும்’பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய் சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந்தது.

வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந்தாள். அளவான வேகம். கண்களைக் கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை உமிழ்ந்த படி வாசலில் நின்றது. ‘ஹோர்ன்’ ஐ ஒலித்து, வந்துவிட்டதாகச் சேதி சொல்லிற்று.

அம்மா ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

கடவுளுக்கு நன்றி! குலம் இன்று வீட்டுக்கு வந்திருக்கிறான்!

கதவுகளைத் திறந்து அறையுஞ் சத்தம். குலம் மட்டுமல்ல வேறும் சிலர் வந்திருக்கவேண்டும். குசுகுசுவெனக் கதைக்கின்ற சத்தம். படலையை மெல்லத் தள்ளித் திறந்தனர். கூட்டமாக வந்தனர்.

யாரோ ஒருவனைக் கைத் தாங்களில் கூட்டிக்கொண்டு வந்தனர். அம்மா பயந்தவளாய் விருட்டென எழுந்தாள். விளக்கை தூக்கி உயரப்பிடித்தாள்.

குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந்தான். அவனைத் தாங்கி அழைத்து வருகின்றனர். வலது கையை ஒருவன் மென்மையாகப் பற்றியபடி வந்தான் மணிக்கட்டுக்குக் கீழே இரத்தம் ஊறிப்போன ஒரு துணிப் பந்து!

ஐயோ! இந்த அம்மாவின் முரட்டுக் குழந்தைக்கு என்ன வாயிற்று?

அம்மா அலற நினைத்தாள், முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

அம்மா அசைய நினைத்தாள், முடியவில்லை பாதங்களை யாரோ ஆணியால் தரையுடன் சேர்த்து அறைந்ததுமாதிரி.

அவர்கள் ஓலைப்பாயை விரித்தனர். தலையணைகளைப் போட்டனர். குலம் பொறுக்க முடியாமல் முனகியபடி சா¢ந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து தோலுரிந்திருந்தன. மிகவும் தாகமாக இருந்தான். நாவால் உதடுகளை நீவினான்.

“அம்மா…..”

தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்கள் கிட்ட வந்தனர். தலையைக் குனிந்தபடி அம்மாவைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத் தொட்டசைத்தான் அம்ம இமைக்க மறுக்கும் விழிகளால் அவர்களைப் பார்த்தாள்.

அவர்களை அம்மா அடையாளங் கண்டாள்! நடு நிசிகளில் …யாருமற்ற வெளிகளில்….திரிகின்ற புதல்வர்கள்!!

ஓ! குலமுமா இந்த அப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்தான்?

“கோப்பி வச்சுக்குடுங்கோ….”

அம்மாவின் தோள்களைக் குலுக்கியபடி ஒருவன் சொன்னான்.

அவளுடைய முரட்டு மகன், புரியமுடியாத புதல்வன் கையைக் காவு கொடுத்து வந்திருக்கிறான்! தாகத்தால் தவிக்கிறான்!!

கடவுளே! அம்மாவுக்கு கொஞ்சம் பலமளிக்கமாட்டாயோ?

அம்மா எதுவோ கேட்க உன்னினாள். அர்த்தம் குலைந்த பலகீனமான ஒரு முனகல் மட்டுமே வந்தது.

அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசையுடன் கால்களைப் பெயர்ந்தாள். உடல் முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஓரடி எடுத்து வைத்தாள். ‘மொளக்’கென ஏதோ சுளுக்கிக் கொண்டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள்.

அவர்கள் அம்மாவைத் தூக்கினர். ஓலைப்பாயை விரித்தனர். தலையணைகளைப் போட்டனர். பாயில் அம்மாவை மெல்லச் சா¢த்தனர்.

ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்றோ?

அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ்வொருவராக ஊர்ப் பெண்கள் அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங்கினர்.

“கையிலையே வெடிச்சிடுத்தாம்…” ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத்ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள்.

குலத்தைத் திரும்பிப் பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டு சொட்டாக கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்திக் கொண்டிருந்தது.

முத்து முத்தாக சூடான கண்ணீர் அம்மாவின் கன்னங்களை நனைத்தபடி சிந்தத் தொடங்கிற்று.

3

முதுகுப் பிடிப்புடன் ஒரு முதியபெண். அவள் வெகுவேகமாகக் கிழவியாகிக் கொண்டிருந்தாள். ஊரில் ஒருவருடனும் அவள் இப்போ பேசிச் சிரிப்பதில்லை.

ஒரு அழகிய சிறுமொட்டு. புரியாத பேதை. வாடிக்கொண்டிருக்கும் பூமரம். அவளது வயதுக்கு மீறின குருட்டு யோசனைகள். கவலைகள், ஏக்கங்கள். தாயின் வேலையில் பாதிக்குமேல் இதன் பிஞ்சுத் தோள்களில் பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை. போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும். ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலைந்த கேசத்துடன், வாடிய முகத்துடன். கண்களில் பிந்திவிட்டதில் கலவரமும் பயமும் தெறிக்க, மார்பில் புத்தகக் கட்டுக்களை அணைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஓட்டமும் நடையுமாக விரையும்.

ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்குக் கீழே அவனது ஒரு கரத்தைத் துணித்து விட்டார்கள். அவனிடம் அடிக்கடி அவன் தோழர்கள் வருகின்றனர். அவன் ஒரு அருமையான மெக்கானிக் மிகவும் மூளைசாலி. அவசியமானவன். ஒற்றைக் கையால் கடுமையாக உழைக்கக்கூடிய அசகாய சூரன். நாலைந்து நாட்களுக்கொரு முறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும். எதோ ஒரு வெறியும் காண்போரைப் பிரமிக்கச் செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப்பான். உடனே ஓலைப்பாயை விரித்தபடி தலையனைகூட இன்றித் தூங்கிப்போவான்.

வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை கூரை மிகவும் உக்கிப் போய்விட்டது. முற்றத்தில் எங்கணும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும்.

ஒரு நாய். அதைக் கவனிப்பாரில்லை. எலும்பெடுத்துத் தொ¢ய மெலிந்துவிட்டது. சொறி பிடித்துவிட்டது. காதுகளில் உண்ணிகள் படையாகப் பெருகிவிட்டன. வளவின் ஒரு மூலையில் மண்ணைத் தோண்டிவிட்டுச், சோம்பிப் படுத்திருக்கும். அது குரைப்பதோ, ஓடுவதோ கிடையாது, விரைவில் இறந்துவிடும்.

அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர்கள் வருகின்றனர். கதறக் கதற ஒரு பசுவையோ, கன்றையோ இழுத்துப் போகின்றனர். கால்களைப் பரப்பிக் கொண்டு, போக மறுத்து அது கதறும். உதவிக்கு அம்மாவை அழைக்கும். தன் இனத்தை அழைக்கும். பா¢தாபமான குரலில் மாடுகள் எல்லாம் சேர்ந்து அழும்.

இரவு நேரங்களில் அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கும் மரநாய்கள் கோழிகளைக் குழறக் குழற தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத்தீனமான ஓலம் மெல்ல மெல்லத் தேய்ந்து தூரே போய் மறையும்.

அம்மா இப்போ குண்டுச் சத்தங்களைச் சட்டை செய்வதில்லை. அவள் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் பழக்கப்பட்டவள்.

குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக்கொண்டு பெயர் பெற்ற சாத்திரிமார்களைத் தேடிப் போகிறாள்.

சீலன் புனர்பூச நட்சத்திரம்! ராமன் கூடப் புனர்பூச நட்சத்திரம் தான்!!

அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது! கடலைக் கிடக்க நேர்ந்தது! அதர்மர்களுடன் நெடூகலும் போரிட்டுக் கொள்ள நேர்ந்தது.

வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங்கையில் மமதை கொண்டிருந்தவர்களை அவனும் வென்றான்!

சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவனும் விமோசனமளித்தான்!

அவனும் பேதங்களைக் கடந்தவன், குரங்கும் வேடனும் அவனது தோழர்கள்!

ஓ! ஆயினும் ராமன் போ¢ல் அன்பு கொண்டவர்கள் அவன் பா¢வால் துன்புற நேர்ந்தது.

தசரதன்!…கோசலை!…சீதை!

குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் என்றார்கள் சாத்திரிமார்.

அவன் ராஜத்துரோகமான காரியங்களில ஈடுபடுவான் என்றும்……

மிகப் பெரிய கண்டங்களில் மாட்டிக்கொள்ள நேரும் என்றும்…..

மறியல் வீட்டுக்குப் போகின்ற பலன் கூட அவனுக்கு உண்டென்றும்…..

கிரகங்கள் யாவும் நீசதிசை அடைந்திருக்கின்றனவென்றும்……

– மோகவாசல் – ரஞ்சகுமாரின் சிறுகதைகள் (நன்றி: http://www.projectmadurai.org/)

– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *