என் பெற்றோர்கள் எங்களைப் பார்க்க பெங்களூர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அதனால் தினமும் சீக்கிரமாக அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பிச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு. அதற்குக்காரணம் அவர்கள் மீதிருக்கும் அன்போ மரியாதையோ அல்ல.
ஏற்கனவே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கும் என் மனைவி சரஸ்வதியிடம் அவர்கள் வம்பு பேசி சண்டை வளர்த்துவிடக் கூடாது என்பதற்காக. என் பெற்றோர்கள் பெங்களூர் வந்து தங்கும்போதேல்லாம் அவர்களிடமிருந்து சரஸ்வதியை அடைகாத்து சண்டை சச்சரவு எதுவும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு.
அன்றும் அப்படித்தான். வீட்டிற்கு வந்தவுடன், டிராயிங் ரூமில் டி.வி. முன் அமர்ந்திருந்த என் பெற்றோர்களிடம் மையமாகப் புன்னகைத்துவிட்டு, முதல் மாடியில் உள்ள பெட்ரூமிற்கு சென்றால், அங்கு சரஸ்வதி சோகமாக காணப்பட்டாள்.
“என்ன சரசா, ஏன் டல்லாயிருக்க?”
“எல்லாம் உங்க அம்மாதான் காரணம். சமையல்காரி மல்லிகாகிட்ட உங்கம்மா இன்னிக்கு என்ன சொன்னான்னு தெரியுமா?”
“நீ சொன்னாத்தான தெரியும்..”
“நீங்க லட்ச லட்சமா சம்பாதிக்கிறீங்களாம், நான் கொழுப்பெடுத்துப்போய் வேலைக்குப் போகிறேனாம்…
நான் வீட்டுக்கு அடங்காதவளாம். ச்சே…. ஒரு சமையல்காரிகிட்ட எந்த மாமியாராவது தன் மருமகளைப் பற்றி இப்படி குறை சொல்லுவாங்களா?”
“சரி குட்டிம்மா, இத நீ பெரிசு பண்ணாத ப்ளீஸ்”
அவள் கண்கள் குளமாயின.
“சமையல்காரி நம்ம வீட்ல இருக்கிறவ. அவளுக்கு என் மீது என்ன மரியாதை இருக்கும் சொல்லுங்க?”
விசித்து அழுதாள். அவளை சமாதனப்படுத்த முயன்று தோற்றேன்.
எனக்கும் சரஸ்வதிக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களாகியும் சரஸ்வதியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. குற்றம் கண்டுபிடித்து எப்போதும் அவளை கரித்துக்கொண்டே இருப்பார்கள்.
திருமணமான புதிதில் நான் என் பெற்றோர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சரஸ்வதியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியிருக்கிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல தொடர்ந்து பதினான்கு வருடங்கள் அவளை துன்புறுத்தினேன். கடந்த ஆறு வருடங்களாகத்தான் அவளை அன்புடன், மரியாதையுடன் நடத்த ஆரம்பித்திருக்கிறேன். பகவான் ராமர் காட்டில் பதினான்கு வருடங்கள் பட்ட கஷ்டத்தைவிட இவள் எங்களிடம் அனுபவித்த வேதனைகள் அதிகம். இவள் வீட்டில், அவர் காட்டில் – அவ்வளவுதான் வேறுபாடு. அனுபவித்த கஷ்டங்களும், கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ஸ்ரீரங்கத்தில் பிரசவம் முடிந்து, கைக் குழந்தையுடன் சரஸ்வதி திருநெல்வேலி சென்றாள். என் ஒரே அன்பு மகனுக்கு, என் பெற்றோர்களின் பிள்ளை வயிற்றுப் பேரனுக்கு, ஒரு தூளிக்கயிறுகூட வாங்கித்தர துப்பில்லை. எதிர்வீட்டு நீலாவிடம் அவள் வீட்டில் அவள் குழந்தைக்கு உபயோகப் படுத்திய கயிறை இரவலாக வாங்கி என் மகனுக்கு பயன் படுத்தினர். தவிர, சரஸ்வதி என் அப்பாவிடம் நான்கு முறை கெஞ்சிய பிறகுதான், என் மகனுக்கு புதிய பால் டின் கிடைக்கும்.
பச்சை உடம்பு என்றுகூடப் பாராது, பதை பதைக்கிற வெய்யிலில், வீட்டின் கொல்லைப் புறத்தில் இருக்கும் கையடி பம்பில் தண்ணீர் அடித்து குழந்தையின் துணிகளையும், தன் துணிகளையும் தினமும் தோய்த்து முடித்து வரும்போது பத்து மணியாகிவிடும். அதன் பிறகு அவள் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும்போது, அவசர அவசரமாக இரண்டாவது டோஸ் காப்பியை என் தம்பிக்கும் அப்பாவுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விடுவாள் என் அம்மா.
சரஸ்வதிக்கு தினசரி காலை முதல் உணவே பதினோரு மணிக்குதான் கிடக்கும். அவள் பட்டினி கிடந்து சரியாக சாப்பிடாது பசியால் அவதிப்பட்ட நாட்கள்தான் அதிகம். .
இது எதுவும் எனக்குப் புரியாத முட்டாளாக நான் இருந்தேன். மனைவி மீதும் மகன் மீதும் சிறிதும் அக்கறையில்லாது, ‘எல்லாம் என் பெற்றோர்களுக்குத் தெரியும், எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது’ என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
திருநெல்வேலி ஜெயில் வாசத்திற்குப் பிறகு, குழந்தையுடன் சரஸ்வதி பெங்களூர் திரும்பியபோது
உடம்பு இளைத்து, கறுத்துப்போய் களையிழந்து காணப்பட்டாள். அவளிடம் “ஏன் இப்படி மெலிந்து விட்டாய்?” என்று கேட்டபோது நடந்த உண்மைகளைச் சொல்லி வெடித்து அழுதாள்.
அவள் இனிமேல் நான் இல்லாமல் தனியாக திருநெல்வேலி செல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் பெற்றோர்களின் சுயரூபம் எனக்குத் தெரிய வந்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்பது மிகவும் தாமதமாகப் புரிந்தபோது சரஸ்வதிக்கு முன் கூனிக்குறுகி நான் வெட்கிப்போனேன்.
ஒரு பாசக்கார கணவனாக இல்லாவிடினும், ஒரு சராசரி புரிதல்கூட இல்லாதவனாக என் பெற்றோர்களை மட்டுமே அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டு, என் அருமை மனைவியையும், செல்ல மகனையும் வதைத்துவிட்ட வேதனை என்னுள் கனன்று கொண்டேயிருந்தது.
இவ்வளவு நடந்த பிறகும், சில வருடங்களுக்கு முன் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது,
சரஸ்வதிதான் அவரை பெங்களூர் வரச்சொல்லி, போர்டிஸ் ஹாஸ்பிடலில் ஆஞ்சியோ செய்து அதைத் தொடர்ந்த பைபாஸ் சர்ஜரிக்காக தான் வேலை செய்யும் கம்பெனியில் லோன் போட்டு
மூன்று லட்சம் செலவழித்தாள்.
பணத்தால் மட்டுமின்றி தன் உடலாலும் என் அப்பாவுக்கு சேவை செய்தாள். சர்ஜரியினால் நரம்பு எடுக்கப்பட்ட அவர் வலதுகாலை, தினமும் பெட்டாடின் போட்டு கழுவி, மருந்து தடவி, பஞ்சு வைத்து, க்ரேப் பண்டேஜ் போட்டு கட்டி விடுவாள். நான்கு மாதங்களுக்குப் பிறகு என் அப்பா நன்கு குணமானார்.
இவ்வளவு செய்தும் என் பெற்றோர்களுக்கு சரஸ்வதியின் பெருந்தன்மையும், பரிவும் புரியவில்லை. அவர்கள் அவளை தன் மகளாக நினைத்து அன்பு பாராட்டாது, வெறுப்பையும், குற்றம் கடிதலையுமே சிரமேற்கொண்டு செய்தனர்.
ஆனால் நான் பெற்றோர்களையும், என் மனைவியை நன்றாக உணர்ந்து கொண்டேன். அவளைப் புரிந்துகொண்டதும் என்னுள் குற்ற உணர்வுதான் அதிகரித்தது. அவளிடம் பாசமாக, அணுசரனையாக இருக்கலானேன்.
அன்று வரலக்ஷ்மி பூஜை. சரஸ்வதி என் அம்மாவிடமிருந்து வெகு வருடங்களுக்குப்பின் நோன்பு எடுத்துக் கொண்டாள். அதற்கான வேண்டிய பூஜைகள் நடந்தேறின. பூஜையின்போது என் அம்மா வெள்ளிக் கும்ப கலசத்தில் தன்னுடைய தங்கச் செயினையும், தங்க மோதிரத்தையும் மஞ்சள் அரிசியுடன் கலந்து போட்டு, அதன் பிறகு கலசத்தின் மீது மஞ்சள் தடவிய முழுத் தேங்காயால் அலங்கரித்து, அரக்கு நிற ரவிக்கைத் துணியினால் போர்த்தி பூஜா ரூமில் வைத்தாள். அது குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது கலைக்கப்படாது அந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஆனால் அடுத்த நாள் மாலையே என் அம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டது. சமையல்காரி மல்லிகா தொடர்ந்து இரண்டு நாட்களாக வெண்டைக்காய் கறியும், அடுத்தநாள் வெண்டைக்காய் சாம்பாரும் செய்தாளாம்….அது என் அப்பாவுக்கு பிடிக்கவில்லையாம். இந்தச் சின்ன விஷயத்தை பெரிதுபண்ணி என் அம்மா சரஸ்வதியிடம் சண்டை போட்டாள்.
அடுத்த நாள் மாலை நாங்கள் அலுவலகம் விட்டு திரும்பியபோது, பூஜை ரூமில் வைக்கப் பட்டிருந்த கலசம் கலைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தங்கச் செயினையும், மோதிரத்தையும் என் அம்மா எடுத்து வைத்துக் கொண்டாள். அவைகள் என் அம்மாவின் தங்க அணிகலன்கள்தான் என்றாலும், மூன்று நாட்களுக்கு முன்பே அதை அவசரமாக கலைத்து எடுத்துக் கொண்டது ஒரு அபசகுனமான செயலாக எங்களுக்குத் தோன்றியது.
எனக்கு வெறுத்துப்போனது. வயதான என் பெற்றோர்கள் இப்படியும் நடந்து கொள்வார்களா என ஆச்சரியமாக இருந்தது. வயது ஏற, ஏற நம்மிடம் அன்பும், பாசமும், பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும் அதிகமாக வேண்டுமே தவிர, வெறுப்பும், கோபமும் இவர்களுக்கு எப்படி சாத்தியப் படுகிறது? என்று வெம்பினேன். சரஸ்வதியை பொறுமை காக்கச் செய்தேன்.
அடுத்த வாரத்தில் என் பெற்றோர்கள் திருநெல்வேலி சென்றனர். நாங்கள் நிம்மதியடைந்தோம்.
போய்ச் சேர்ந்ததும், என் அப்பா என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு, “இத பார்றா, உன் பொண்டாட்டி இருக்கிறவரையும், நாங்க அந்த வீட்டுக்கு இனி வரமாட்டோம். உனக்கு அம்மா, அப்பா வேணும்னா நீ தனியா இங்க வந்து எங்களைப் பார்த்துவிட்டுப்போ, இனிமே அவ மூஞ்சில நாங்க முழிக்க மாட்டோம்” என்றார்.
எனக்கு கோபம் தலைக்கேறியது.
“சரிப்பா உங்களுக்கு என் பொண்டாட்டி வேண்டாம்னா, எனக்கு நீங்களும் வேண்டாம்…என்னை நம்பி வந்தவள் அவள். என்னில் சரிபாதி அவள். அவளுடைய வசதிகளும், சந்தோஷங்களும்தான் எனக்கு
முக்கியம்” என்றேன்.
அதன் பிறகு இரண்டு மாதங்கள் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.
அன்று ஒரு சனிக்கிழம மாலை. என் தம்பி என்னை மொபைலில் தொடர்புகொண்டு பதட்டத்துடன்
“அப்பாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு. ஹார்ட் சர்ஜரி சரியா பண்ணலைன்னு டாக்டர் சொல்றாரு…ரெண்டு நாளைக்கு மேல தாங்காதுங்கறார். நீ உடனே கிளம்பி வா… அப்புறமா” என்று இழுத்தான்.
“என்னடா, அப்புறமா என்ன?”
“மன்னி வரவேண்டாம்னு அம்மா உன்கிட்டே சொல்லச் சொன்னா.”
“ஓஹோ… அப்படியா சங்கதி. மன்னி இல்லாம நான் அங்க வரல. எதுக்கு ரசாபாசம்? அப்பாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா கொள்ளியும் நீயே போட்டுட்டு எல்லா காரியங்களையும் நீயே பண்ணிடு.”
மொபைலை துண்டித்தேன்.