(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவள் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. அவர் உள்ளேயிருந்தார். வழக்கம்போல், ஈஸி சேரில் பேப்பர் பார்த்துக்கொண்டு. காலை வேளையில் தலைப்புகளைத் தவிர, விவரமாய்ப் படிக்க நேரமிருப்பதில்லை.
“எப்போ வந்தேள்? வந்து நேரமாச்சா?”
“என்ன சுண்டல் தண்டலா ? ஏது, அமர்க்களமாயிருக்கே அலங்காரம் ! Dressed to kill!”
“கொலு இல்லியா? தினப்படி போல் உடுத்திண்டு போமுடியுமா?”
“நல்லாத்தானிருக்கே, நேரே அம்பாளே கொலுப் பார்க்க வந்துட்ட மாதிரி!”
“கேலி பண்ணறேளே!” சந்தோஷம் முகத்தில் சிவப்பு குழுமியது. “No, no. ஏன் கேலி பண்ண னும்? நிஜமாத்தான், You are looking great.”
“போன இடத்திலேயும், எல்லாரும் அப்பிடித்தான் சொன்னா. ‘மாமி என்ன தேஜஸ்ஸாயிருக்கா பாருடி,’ன்னு.” தன்னை மேலிருந்து கீழ் நோட்டம் விட்டுக் கொண்டாள்.
“Yes, வயது உனக்குப் பிரியம் காட்டறது. என்னைப் பார், தலை தேங்காய்த் துருவல் மாதிரி. சொட்டை வேறே விழுந்துடுத்து. I can’t grow old gracefully. உனக்கு இன்னும் ஒரு வெள்ளி மயிர் கூடத் தெரியல்லே.”
“அதுக்கென்ன பண்ணறது. அதெல்லாம் குடும்ப ராசி. புருஷாளுக்கு ஆயிரம் கவலைகள், எங்கள் மாதிரியா? காப்பி கொண்டு வரவா?”
“இதென்ன கேள்வி?”
“இல்லே, மணி எட்டுக்கு மேலே ஆச்சே, ஒருவேளை நேரே சாப்பிட்டுட்டு, அப்புறம் குடிப்பேளோன்னு கேட்டேன்.”
“அதுக்கென்ன, அப்பவும் ஒரு டோஸ் அடிச்சாப் போச்சு. இதோ பார் பாலா, நாங்கள் காப்பிக்கு என்னிக்கும் அலுக்கமாட்டோம். T.V. விளம்பரத்துலே அந்தப் பெண் ஏமாத்தறதே BRUவை ஃபில்டர் காப்பின்னு, அதையும் குடிச்சு வைப்போம்.”
“அப்பிடி ஒரு காப்பி வெறியிருந்தால், தலை நரைக் காமல் என்ன செய்யும்?”
சமையலறைக்குள் சென்றாள். அவர்களிடையே ஒரு சுலபமான ஸ்னேகம் இருந்தது. பேப்பர் தாண்டி அவர் பார்வை, அவள் நடையில் இடையின் மிடுக்கைக் கவனித்துக் கொண்டிருந்தது. உடம்பில் ஒரு கிள்ளு சதைகூட அதிகப் படியில்லை. அவருக்கு லேசாப் பொறாமை. அடுத்துப் பெருமிதம் பொங்கிற்று. சொத்துப் பெருமிதம். இவள் என் மனைவி.
என்றுமே உருவி விட்டாற் போல் ஒரு துடிதுடிப்பு, அந்த உடலில். சோம்பலாயோ அலுப்பாயோ அவளைப் பார்த்ததேயில்லை. சதா எதையேனும் செய்து கொண் டிருப்பாள். இவளைச் சொல்வானேன், இவள் அம்மா யில்லியா. வயது எண்பதை எட்டறது, இன்றும் தானே சமைச்சுண்டு! தினம் ஒரு கறி, கூட்டு, கீரை, சாம்பார், ரஸம் இல்லாமல் அவளுக்குச் சாப்பிடத் தெரியாது. இத்தனைக்கும் gas, ஸுமீத் போன்ற வசதிகள் இல்லை. கிராமம்.
ஆனால் இவள் சொல்றாப்போல, சுறுசுறுப்பு, யயாதீயம் எல்லாம் குடும்ப ராசி.
அவருடைய காப்பியை அவரிடம் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு தம்ளருடன், எதிரே நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“இதென்ன எல்லாப் பொட்டலங்களிலும், சொல்லி வெச்சாப்போல ஒரே கொத்துக்கடலை சுண்டல்? மாறுத லுக்கு ஒரு மொச்சை, நல்லா கரம் மஸாலா சேர்த்து, தேங்காயையும் துருவிக் கொட்டி….?”
“அதுக்கென்ன, வெங்காயம் போட்டா இன்னும் பேஷாயிருக்கும். ஆனால் நவராத்திரி, வெங்காயம் சேர்க்க மாட்டா. இதோ பாருங்கோ ஸார், எல்லார் வீட்டிலும், நவராத்திரின்னு ஒன்பது நாளைக்கும் கொலுன்னு பேரே தவிர, கொலு dayன்னு அழைக்கறது ஒருநாள் தான்னு இப்போ ரொம்ப நாளையப் பழக்கமாப் போச்சு. அன்னிக்கு எல்லாராத்துலேயும் கொத்துக்கடலை சுண்டல் தான். அடுத்த வீட்டில் வேற பண்ணியிருப்பான்னு ஒருத்தரையொருத்தர் ஏமாத்திக்கிறது தன்னையே ஏமாத்திக்கிறது ஒரு பொரு ளாதார ட்ரிக்ஸ்.”
“ஏன் பாலா , நீ ஏன் நம்மாத்துலே கொலு வெக்கப் படாது? படியிறக்கி, புதுப்பொம்மைகளா வாங்கி, பெண்டு களை அழைச்சு, தினம் விதவிதமா நைவேத்யம் பண்ணி, அமர்க்க ளப்படுத்தேன் ! I am game for the expenses up to a thou.”
“நீங்கள் என்ன தெரிஞ்சுதான் பேசறேளா? இந்த வயசில் நானே போய், ‘என் வீட்டுலே கொலு, மஞ்சள் குங்குமம் வாங்கிக்கோங்கோ’ன்னு படிப்படியா ஏறி அழைக்கறதா? அதுக்கெல்லாம் வீட்டிலே கொழந்தைகள் இருக் கணும். உங்களுக்கே தெரியும் கொலு ஏன் வெக்கல் லேன்னு.”
பேச்சு, பொட்டென அவர்களிடையே சிப்பி போல் மூடிக் கொண்டது. உற்சாகம் குலைந்து, இம்சையான மௌனம் வந்துவிட்டது. பெருமூச்செறிந்து, எழுந்து, பேப்பரை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போய்விட்டார்.
அவள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்தாள்.
ஒரு கரப்பான் பூச்சி பறந்தது. சனியன்!
கொலுப்பெட்டி, பரணில் தான் தூங்கறது. அதனுள், இருவத்தி அஞ்சு வருஷமா, பொம்மைகள் உறங்குகின்றன. Sleeping Beauties. கையொடிஞ்சு, காலொடிஞ்சு , தலை போய், அழுக்கும் கறையும் ஏறி, எலிப்புழுக்கை, மக்கல் நாற்றம் வீசிண்டு , ஏதோ கல்வெட்டுக் கண்டுபிடிப்புகள் போல் ஆகியிருக்கும். காற்றாடுவதற்கேனும் அதை யார் எடுத்துப் பார்த்தது? இல்லை, அத்தனையும் தூக்கியே எறிஞ்சுடலாம். எதுக்கு மூடிவெச்சுண்டு இன்னும் காக்கணும்?
அன்னிக்குக் கலசத்துக்கு வெச்ச தேங்காய் உள்பட, கலசத்தின் மேல் சாத்தின அம்பாள் முகப்பு , வெள்ளியில், புன்சிரிப்புடன், அதில் தான் இருக்கும். ஏண்டியம்மா, இருவத்தி அஞ்சு வருஷமா, இன்னமும் சிரிச்சுண்டுதான் இருக்கையா ?
இப்ப நினைச்சால் கூட, கோபம் கன்னத்தில் குறுகுறுக் கறது. வெட்டிக் கோபம். நம்ம கர்மாவை நாம் அனுபவிக்கறதுக்கு, தேங்காயையும், முகப்பையும், பொம்மைகளை யும் கோவிச்சுண்டு என்ன பண்றது? ஆனால் அது தெரிய இருவத்தி அஞ்சு வருஷம் ஆகவேண்டியிருக்கு.
கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். விரல் நுனிகளடியில், நெற்றி மேட்டில் ஒரு தழும்பு நிரடிற்று. கவியும் மூட்டத்தினின்று தப்ப, மனம் இன்னொரு நினைவுக் குத் தாவிற்று. ஆனால் அதுவும் கொலு சம்பந்தப்பட்டதாவே யிருக்கே ! ஆனால் இப்போ சிரிப்பும் வரது.
கலியாணமான புதுசு. குடித்தனம் வெச்ச புதுசு. கலியாணம் போதே, அவளுக்கு மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், இக்குப் பிடுங்கள் கிடையாது. அங்கும் ஒரே பிள்ளை. வாலிபத்திலேயே பெற்றோரை இழந்து விட்டார். அவள் அம்மா கெட்டிக்காரி. (அப்பா கொஞ்சம் பூச்சிதான். ஆனால் பொன்வாத்து) அதெல்லாம் ப்ளானாப் பார்த்துத்தான் செஞ்சாள். ஒரே பெண். அதனால் அம்மாவுக்கு ஆத்தோடு மாப்பிளைதான் இஷ்டம். ஆனால் பலிக்கவில்லை. மாப்பிள்ளைக்கு உத்யோகம் வெளியூரில். அப்படியே உள்ளூரில் சேர்ந்து இருந்தால் தான் என்ன? எங்கேயும் அவள் தனிகாட்டு ராஜா – அல்லது ராணியா சரி, அது எப்பிடியானும் கிடக்கட்டும்.
அன்று மஹாளய அமாவாசை. நன்னா நினைவி லிருக்கு. மத்த நாளாயிருந்தால் மறந்திருக்கும். அன்னிக் கென்னவோ சுருக்கவே ஆபீசிலிருந்து வந்துட்டார்.
“ஃப்ளாஸ்கிலே காப்பி ஊத்தி வெச்சிருக்கேன் எடுத்துக் கோங்க.”
அவர்களிடையே அது ஒன்றும் புதிதல்ல. வேளை யில்லா வேளையில் காப்பிக் குடியர். கண்ணாடித் தம்ளரில் காப்பியைச் சரித்துக்கொண்டே (சீப்பிக் குடிச்சாத்தான் காப்பிக்கு ருஜி”) கூடத்தைச் சுற்றிப் பார்வைவிட்டு “என்ன பாலா கொலு வெக்க ஆரம்பிக் கல்லியா? பொம்மை நீ வேறே கொண்டு வந்திருக்கே முதல் கொலு!”
“நான்தான் கொலு! இன்னிலிருந்து மூணு ராத்திரி!” சிரித்தாள்.
புரியாமல் விழித்தார். அவள் சொன்னது உள்தோய்ந்த தும், புரிந்ததும் – அந்தக் கோவம் உண்மையிலேயே ஆச்சர்ய மாயிருந்தது; பயந்துவிட்டாள்.
“Damn–!” காப்பியுடன் தம்ளரைத் தரையில் வீசிய வேகத்தில், அது சுள் சுள்ளாயுடைந்து ஒரு சில் தெறித்து, அவள் நெற்றியில் பட்டு ரத்தம் மளமள –
“Oh God!”
அவள் மேல் பாய்ந்து அணைத்துக் கொண்டான். கையில் ரத்தத்தை அடைக்க முயன்றான்.
“என்னைத் தொடாதேங்கோ!” கத்தினாள்.
“Shut up! உன் ஆசாரத்தை உடைப்பில் போடு!”
டாக்டரிடம் போய், நல்ல வேளை ஒன்றும் சிக்கல் இல்லை. ஓர் ஊசி, இரண்டு தையல், மூணு நாளைக்குத் தலையில் கட்டு, அப்புறம் ஒரு வாரத்துக்கு நெற்றியில் ப்ளாஸ்திரியுடன் விட்டது. “பாலா, பாலா, என்னை மன்னிச்சுடு! மன்னிச்சுடு!” தவித்துப் போனார். “இதுவே கண்ணில் பட்டிருந்தால் என் கதி?”
“அதுசரி, அதென்ன அப்படி upset ஆயிட்டேள்? என்னவோ நடக்காதது நடந்துட்ட மாதிரி! இப்படி ஒரு கோவம் உங்களிடம் முதல் தடவை இப்பத்தான் பாக்கறேன். என்ன ஆச்சு உங்களுக்கு?”
“தெரியல்லியே!” “ரெண்டு நாள் நீங்களே சமைக்க வேண்டியிருக்கேன்ற ஆத்திரமா?”
“இதென்ன கலியாணம் ஆறதுக்கு முன் நான் சமைக்காத சமையலா?” முனகினான்.
“ஆபீஸில் டென்ஷனா?” புரியாமல் கைகளை விரித்தான்.
“இல்லே, வேறேதேனும் எதிர்பார்த்துண்டு வந்து ஏமாந்தேளா?” அவள் ஓரக்கண்ணில் குறும்பு கூத்தாடிற்று.
“தெரியல்லியே! எதுவுமே தெரியல்லியே!” மனுஷன் ஒரே அடியாய்க் குழம்பிப் போயிருந்தார். பார்க்கப் பரிதாப மாயிருந்தார்.
இனி சும்மா நோண்டி தோண்டிக் கேட்பதில் பிரயோசனமில்லை. தெரிஞ்சுதான் என்ன ஆகணும்? ஏதோ உருக்கூட மறந்துபோன பழைய ஏமாற்றம், நெடுநாள் அடக்கி வெச்சிருந்து, சோடாவில் கோலி பிடுங்கிண்ட மாதிரி, இன்னிக்கு நாள் பார்த்துடுத்து. இந்த மனோதத்துவ ஆராய்ச்சியெல்லாம் நம்மால் முடியாதம்மா!
அப்புறம் எல்லாம் சரியாப் போயிடுத்து என்றாலும், உள்ளூர அந்த அச்சம் உறுத்திக்கொண்டேயிருந்தது. க்ஷணச் சித்தம் க்ஷணப்பித்தம் மூர்க்கனிடம் மாட்டிண்டுட்டேனா?
அந்த பயம்தானோ என்னவோ எந்த ஆழத்துக்கு வேர் பாய்ந்து விட்டதோ அல்லது வேறெந்தக் காரணமோ, கலியாணமாகி ஏழு வருடங்களுக்கு அவள் கருத்தரிக்க வில்லை. ஒவ்வொரு தடவையும் கரு சுருங்கினதோ? அப்பிடியும் நினைச்சுக்கலாம் அல்லவா ? பிறகு உண்டாகி யும், சுமப்பது ரொம்ப சிரமமாயிருந்தது. அதாவது, சுமக்க அவள் தயாராயிருந்தாலும், சுமைக்கு மனமில்லை போல், உடம்பைப் படுத்திக் கொண்டேயிருந்தது. மனமில்லாத கரு.
பிரசவமும் கெடுபிடிதான். சிஸேரியன்.
ஆனால், குழந்தைப் பேறில், பெற்ற பின் தானே தெரிகிறது, இந்தப் பேறுக்கு இன்னும் எத்தனை வேணு மானாலும் படலாம். குழந்தையா அது? ஏதோ தெய்வப் பிறவி. இப்படி ஓர் அழகா? யார் ஜாடையாவுமில்லை . நாளடைவில், நினைவடியில் புதைந்துபோன எந்த முன்னோனோ?
தலைமயிர் அடையாய் நெற்றியில் விழுந்து, கண்ணை மறைத்தது. கண்கள் நீலக்கடல்கள். பிறந்தவுடன் எல்லாக் குழந்தைகளுமே சிவப்புத்தான். ஆனால் இது முழு ரோஸ். உடனேயே அழைச்சாச்சு . குலாப், என் அருமை குலாபீ!
உடல் ரத்தம் பூராவே அன்பாய் மாறிச் சுரந்த தாய்ப் பாலில் அந்த ஆறு மாதங்களுள் குழந்தை மொழு மொழு . பார்த்தவர் எல்லாரும் வாரிக்கொள்ளும்படி, தாங்கமுடியாத அந்த மொக்கு வாய் மோகனச் சிரிப்பு.
வியாழனும், ஞாயிறும் தவறாது, மாலை தாயின் மடியில், குழந்தையை உட்கார வைத்து, அம்மா சுற்றிப் போடுவாள்.
ஆனால் பிறந்த வீட்டில் உட்கார்ந்துண்டேயிருக்க முடியுமா? மனுஷன் எத்தனை நாள் ஓட்டலிலேயே சாப்பிட்டுண்டு இருப்பார்? அவளைக் குழந்தையுடன் வீட்டில் கொண்டுவந்து விட்டாச்சு. அம்மா ஊர் திரும்பியு மாச்சு . கையோடு நவராத்திரியும் வந்தாச்சு.
பாலாவுக்கு என்றுமே இது மாதிரி விஷயங்களில் ஆசை ஜாஸ்தி. இம்முறை அம்பாளே அவதாரமெடுத் திருக்கா, உத்ஸாகத்துக்குக் கேட்கணுமா?
ஒன்பது படிகளையும் கட்டியிறக்கி, அத்தனைக்கும் பொம்மைகளை வைத்து – திண்டு திண்டாய், கண்டு கண்டாய், பெரிசா, கனமா, அந்தக் காலத்து – (எந்தக் காலத்தோ?) வழிவழியா வந்த பொம்மைகள் – அலங்காரங் கள் பண்ணி-ஆள் உயரம் நிலைக் கண்ணாடி, கலர் பல்பு கள், தோரணங்கள், கிரிக்கெட் மாட்ச், கோயில் குளம் – (“அத்தனையும் நீங்கள் ஒருத்தியேவா, மாமி?’) பாலாவுக்குக் கண் கண்டது கை செய்யும்.
குழந்தைக்கு வேற்று முகமே கிடையாது. இடுப்புக்கு இடுப்பு தாவி, சிரித்து, கொலுவுக்கு வந்தோர் எல்லோர் நெஞ்சையும் அள்ளிக் கொண்டது. “பாலா மாமி, ஒரு அரை மணி நேரம் கொடுங்கோ மாமி, அவரிடம் போய்க் காட்டிட்டு வந்துடறேன். ப்ளீஸ், ப்ளீஸ்! மாமி, மாமி!” அதெல்லாம் முடியுமா? பாலாவுக்கு நெஞ்சு பொங்கிற்று. கொலு அடியில் குழந்தையையும் வைத்து ஆரத்தி எடுத்தாள்.
அஞ்சாம் நாள் ஜன்மத்துக்கும் மறக்க முடியாத நாள்.
கொலுவுக்கடியில் ‘பார்க் கிலிருந்து இரண்டு ஸெலு லாயிடுகளை எடுத்துக் குழந்தை விளையாடிக் கொண்டிருந் தாள். சமையலறையிலிருந்து தீய்ந்த நாற்றம். அடுப்பில் பாலை வெச்சு மறந்துட்டேனே! உள்ளே ஓடினாள். அவசரத் தில் வெறுங்கையால் பிடித்துப் பாத்திரத்தை இறக்குகையில், புறங்கையில் பால் கொட்டிவிட்டது.
“ஐயோ!” துடித்துப் போனாள். உடனேயே மாடியே இடிந்து விழுந்தாற்போல், கூடத்தில் பயங்கர சத்தம். தன் வலி மறந்து வெளியே ஓடினாள்.
ஒன்பது படிகளும் அத்தனை பொம்மைகளுடன் சரிந்து –
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து ஓடிவந்து விட்டார்கள்.
“என்ன ஆச்சு?”
“ஐயோ என் குழந்தை!” அலறினாள்.
பரபரப்பாய் எல்லாரும் தோண்டி, அந்த நாசத்தினடி யில்…..
“மாட்டேன்! நான் மாட்டேன்!” அலறிக்கொண்டே வெளியே ஓடினாள். நாலு பேர் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
“என்ன மாட்டாய்?” அவளுக்கு மட்டும் அந்தச் சிரிப்புக் கேட்டது. இன்றுவரை துரத்தும் சிரிப்பு.
இப்ப நினைச்சாக்கூட அந்த சத்தம் – செவிகளைப் பொத்திக் கொண்டு தலையை உதறிக் கொண்டாள்.
கொலு சரிஞ்சு இடி வயிற்றில் விழுந்துவிட்டது. ‘பாவி, என்னிடமிருந்து வலுவில் பிடுங்கிண்டையே, காப்பாத்தி வெச்சுக்க வக்கிருந்ததா ? மறுபடியுமா ? உனக்கா? வந்து கேட்டு நிக்கறியா? நிக்காதே, ஓடு, ஓடு!’
இருவத்தி அஞ்சு வருடம் ஓடிண்டிருக்கேன். பாலாவுக்கு மூச்சு இரைத்தது. உடம்பு ஜலகண்டமாய்க் கொட்டிற்று.
கர்ப்ப கோபம் என்ன லேசா?
இப்ப அடிக்கடியே தோணறது. ஒரு மாமியார், மாமனார், நாத்தனார், ஓரகத்தின்னு நாலு பேர் இருக்கிற இடமா வாழ்க்கைப்பட்டிருந்தால் இப்படி ஆயிருக்காதோ? குழந்தையைக் கொலு அடியில் தவழ்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள். யாரேனும் ஒருத்தர் கூடத்திலிருந்திருப்பர்.
என்ன கொலுப்படிகள்! உளுத்துப் போன பெட்டிகள்,
உடைந்த நாற்காலிகள், ஜாதிக்காய்ப் பலகைகள் எல்லாம் ஒண்ணுக்கொண்ணு முட்டுக் கொடுத்துப் படியெழுப்பி னால், அதுவும் ஒண்டியா – ‘பாப்ராஸ்’தான். ஒரு எலி உள்ளே ஓடினால் போதும் அடியோடு சரிய சாக்காச்சு.
காலத்தைப் போல் மருத்துவன் இல்லை, வாஸ்தவம் தான். ஆனால் அங்கே ஒரு வேடிக்கை – பின் வேறெப்படிச் சொல்வது? நோய் குணமானாலும் மருந்தின் கசப்பு விடுவ தில்லை ; தங்கி விடுகிறது. அது மாற மருந்தில்லை . அல்ல, அதுவேதான் மருந்தோ ?
பெருமூச்செறிந்து, எழுந்து போய், ஜன்னல்களைத் திறந்தாள். காற்று ‘சில்’ என்று மோதி, நெற்றியை ஒற்றியது.
முன் நிலா மறைந்து விட்டது. இருட்டு , ஆங்காங்கே வீடுகளின் அடையாளமாய் ‘மினுக் மினுக் கோடு சரி. ‘போஷ்’ ஏரியாவில் இதுதான் ட்ரபிள். ஜன நடமாட்டம் சுருக்கவே அடங்கிவிடும். ஆனால் வீட்டுள், இரவைப் பகலாக்கும் வெளிச்சம் போட்டு, கொலு அமர்க்களப்படும். ஆம், பாட்டுச் சத்தம் கூடக் கேக்கறது.
“பிருந்தாவன நிலையே” எங்கிருந்தோ காற்றில் மிதந்து வருகிறது. ரீதி கௌளை. ஊத்துக்காடு கீர்த்தனை. அவளுக்கு அவர் பாட்டில் நாலஞ்சு பாடம் உண்டு. பாட்டு வாத்தியார் வெச்சுப் பாட்டுக் கத்துண்டவளாச்சே!
உடனே இன்னொரு நினைவு வந்து, உடம்பு பரபரத்துப் போச்சு. ‘விர்’ரென்று மாடியேறிப் போய், அறையுள் நுழைந்தாள். விளக்கு இல்லை.
“தூங்கிட்டேளா?” “இல்லியே! ஸ்விட்சைப் போடு.”
“வெளிச்சம் வேண்டாம்” கட்டிலண்டை வந்து தரையில் அமர்ந்தாள்.
“உங்களிடம் ஒண்ணு சொல்லணும்.”
“சொல்லேன்.”
“இது ரொம்ப நாளைக்கு முன் நடந்தது. நமக்குக் கலியாணமான மூணாம் வருஷம் வெச்சுக்கோங்களேன்.”
“இதோ பார் பாலா, சினிமா பண்ணாதே. எப்பவோ ஏதோ நடந்ததுக்கு நீ இப்போ பிராயச்சித்தம் பண்ணிக்க வேண்டாம். அதுக்கெல்லாம் நமக்கு வயசு தாண்டியாச்சு.”
“அதனாலேதானே இப்ப சொல்றேன் ! அப்பவே சொல்லியிருந்தால், நீங்கள் ஏதேனும் கல்மிஷமா எடுத்துண் டிருக்கலாம்.” உடனே அவசரமா, “ஆனால் தப்பு ஏதேனும் நேர்ந்துடல்லே.” |
“அப்போ சொல்லாதே.”
“சொல்லித்தான் தீருவேன்.”
சிரித்துவிட்டார்.
“இப்ப எனக்கும் தான் வேடிக்கையாயிருக்கு. ஆனால் வேடிக்கையாவுமில்லே. அதில் ஏதோ ஸீரியஸ்னெஸ் ஒளிஞ் சிண்டிருக்கு. உறுத்தறது.”
“O.K. Shoot”
“அதுவும் கொலு சம்பந்தப்பட்டதுதான். இன்னிக்கு எனக்குக் கொலு’ day போல இருக்கு. அப்ப நான் பிறந்தாத் துலே இருந்தேன். நீங்களும் வந்திருந்தேள். ஆயுத பூஜை ரெண்டு நாள், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து மூணு நாள் சேர்ந்தாப்போல லீவு. ஆனால் கொலு சமயத்திலே நீங்கள் வீட்டில் இல்லை. ‘வாக்’ போயிட்டேள்.
என் பாட்டு வாத்தியாரும் வந்திருந்தார். ஊரிலிருந்து வந்திருக்கேனே, என்னைப் பார்க்கத்தான்.
ஒருவழியாப் பெண்டுகள் பாடி முடிச்சப்புறம் – காமா சோமான்னு நாங்கதான் பாடுவோமே, ஒருத்தி ‘கிரி ராஜ ஸுதா தனயா’ கொலையே பண்ணிப்பிட்டா. அம்மா, பாட்டு வாத்தியாரைப் பாடச் சொன்னாள்.
அவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் பாட்டு ஒண்ணை அடி எடுத்தார்.
ஸங்கீதத்தைப் பத்தி உங்களிடம் பேசறது எவ்வளவு அதிகப் பிரசங்கித்தனம்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் எனக்கு ஆசையாயிருக்கே!
ஊத்துக்காடு ஸாஹித்யங்கள், பெரும்பாலும் பேசறாப் போலவே, சவுக்கத்தில், ஸுலபமா, ஸஹஜமாயிருக்கும். ஏறக் குறைய proseதான். ஆனால் வர்ணத்தின் கடைசி வரிகள், திவ்ய மிடுக்கு அடுக்குகளுடன் ஸொகுஸ்வர ஒய்யாரமா, ஆடி அசைஞ்சு வருமே தவிர, வார்த்தைக்கு வார்த்தை முடுக்கில் மனுஷன் ஏதோ தங்கப் பொடி வெச்சு ஊதியிருப்பார்.
என்னப் பாட்டு பாடினார் ? முழுப்பாட்டும் நினை வில்லை எத்தனை வருஷமாயும். இருங்கோ சொல்றேன் ‘பால் வடியும் முகம் நினைந்து நினைந்து வசமாகுதே கண்ணா ‘ – பாட்டு மறந்தாலும் அதே வார்த்தைகள் ஓசை களின் மதப்பு மிதப்பில் என்னை இழந்தேன்.
ஆகவே, அவர் பல்லவி பாடி முடிச்சதும் பெண்கள் கூட்டத்திலிருந்து அனுபல்லவி எழுந்ததும், அது என் குரல்னு எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. அவர் ஒரு வரி பாடி, மறு வரி நான் பாட, எல்லாரும் எங்களை ஆச்சர்யத்தோடு பாக்கறா. கதவு மறைவிலிருந்து அம்மா பல்லைக் கடிச்சுண்டு, கண்ணாலும் கையாலும் தந்தி அடிக்கறா. ஆனால் என்னால் ஒண்ணும் செய்ய முடிய வில்லை . ஒரு மஹத்தான விசனம், ஏக்கம், அதன் போதை, தன்மெத்தான கவ்’வில் இரை போல் என்னை இழுத்துச் செல்ல, நானும் அத்துடன், என் மனமார்ந்து போறேன்.
பெண்டுகள் எங்களைப் பார்த்து, தோளுக்குத் தோள் இடிச்சுண்டு, கிசுகிசுத்துண்டு, திருட்டுத்தனமா சிரிக்கறா.
அந்தப் பாட்டு முடிஞ்சதும் அடுத்த பாட்டுக்கு நானே அடியெடுத்துட்டேன் அலைபாயுதே கண்ணா!
ஒரு சின்ன ‘கொல்!’
அதுக்குமேல் அம்மாவுக்குப் பொறுக்கல்லே. வெளியே வந்து என்னைக் கரகரன்னு இழுத்துண்டு போயிட்டா.
“என்னடி நெனச்சுண்டிருக்கே? மானம் போறது !” என் கன்னத்தைப் பிடிச்சு இழைக்கறா. நெற்றியில் நெத்தறா. “உன் ஆம்படையான் இங்கு வந்திருந்தால் நம் கதி என்ன ஆறது? உனக்கும் பாட்டு வாத்தியானுக்கும் என்னவோ முடிச்சுன்னு சந்தேகப்பட்டுட்டான்னா , ஆயுசுக்கும் உன் கொள்ளியை என் வயத்தில் கட்டிண்டு நான் வாழணுமா? டூயட் பாடறியா, டூயட்?”
அம்மா கோவத்துலே நான் பயந்து போய், மயக்கம் தெளிஞ்சு போச்சு வெச்சுக்கோங்கோ.
ஆனால் பாட்டின் போது எனக்கு வந்த அந்த ப்ரம்மாண்ட துக்கம் – “இப்ப நெனச்சாக்கூட-” தேம்பினாள். “அந்த துக்கம் யாருக்காகவுமில்லே. எதனாலேயுமில்லே. என்ன அது?” அவள் குரல் தவித்தது.
அவர் வார்த்தைகள் தாழ்ந்து, நகநகென, இருளினின்று பிரிந்து வந்து, கதகதப்பாய் அவளை அணைத்தன.
“அதன் பெயர்தான் விசுவப்ரேமை. அந்த சமயத்துக்கு நீ விசுவப்ரேமி ஆகிவிட்டாய். அந்தப் போதுக்கு உனக்கு , நீ பாடும் கண்ணன் மீதும் காதல் இல்லை. உன் பாட்டு வாத்யார் மேலும் தனிக் காதல் இல்லை. குறிப்பிட்டு யார் மேலும் தனிக்காதல் இல்லை . ஆனால் காதல் மீது காதல் கண்டு விட்டது.”
அசந்து போனாள். “Beautiful” அவள் விழிகள் ஸ்படிகத்தில் பளபளத்தன. அவர் கையைப் பற்றியிழுத்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
“அப்பாடி! நீங்கள் சொன்னது என்னுள் ஏதேதோ சிக்குப் பிரிஞ்ச மாதிரி , மனசே லேசாயிடுத்து. சந்தோஷ மாயிருக்கு. அதனாலேயே வயத்துலே குழி விழுந்தாப்போல பசிக்கிறது. வாங்கோ , சாப்பிடப் போவோம்.”
– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை.