கொரோனா சோகங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 5,626 
 
 

ராமரத்னம் மிகவும் மனமுடைந்து போனார்.

ஒரே மகள் சித்ராவின் சீமந்தக் கல்யாணம் நின்று போனது.

பத்திரிகை அடித்து சிலருக்கு அழைப்பும் விட்டாயிற்று. இப்போது அவளின் சீமந்தக் கல்யாணத்தை நடத்துவதற்கு இனி சந்தர்ப்பமே கிடையாது என்றால் அவருக்கு எப்படி இருக்கும்? கொடுத்தது போக மிச்சம் இருந்த சீமந்தப் பத்திரிக்கைகளை வெறித்துப் பார்த்தார். இனி அவரால் என்னதான் செய்ய முடியும்?

அவர் மனைவி கமலா, “நம்ம கையில எதுவுமே இல்லைங்க… எல்லாம் பகவத் சங்கல்பம்” என்றாள்.

இந்த வருடம் மார்கழி முடிந்து தை மாத ஆரம்பத்தில் சாஸ்திரிகளைப் போய்ப் பார்த்தபோது, ஏப்ரல் மாதத்தில் மூன்று நல்ல நாட்களை குறித்துக் கொடுத்தார். ஆசை ஆசையாக நாள் குறித்து பத்திரிகை அடித்தார்.

லண்டனில் இருந்து சித்ராவும் மாப்பிள்ளையும் ஒருவார லீவில் ஏப்ரல் முதல் வாரத்தில் வந்துவிட்டு, சீமந்தம் முடிந்ததும் சித்ராவைப் பிரசவத்திற்காக சென்னையிலேயே விட்டுவிட்டு, மாப்பிள்ளை மட்டும் லண்டன் திரும்புவதாக ஏற்பாடு. அவர் லண்டனில் கோல்ட்மேன் ஸ்மித் என்கிற பெரிய மல்டி நேஷனலில் சீனியர் ஆடிட்டர்.

ஆனால் கொரோனா பீதியினால் மார்ச் 25 முதல் எல்லா விமானங்களும் நிறுத்தப்பட்டன. பிரதமர் டிவி திரையில் தோன்றி லாக்டவுன் அறிவித்து விட்டார். இந்தியா ஸ்தம்பித்தது.

சித்ரா அப்பா அம்மாவுடன் வீடியோ காலில் பேசி, சென்னையில் தன்னுடைய சீமந்தம் நடத்த இயலாததால், அதே நாளில் லண்டனில் கோயிலுக்குச் சென்று வருவதாகவும், பிரசவத்தை லண்டனிலேயே வைத்துக் கொள்வதாகவும் சொல்லி அவர்களை தைரியமாக இருக்கச் சொன்னாள். மாப்பிள்ளையும் வீடியோவில் பிரசன்னமாகி “டோன்ட் வொரி, இட் ஹாப்பன்ஸ்” என்றார்.

வேறு வழியின்றி ராமரத்னம் மிகவும் பொறுமையாகக் காத்திருந்தார். சரி, சீமந்தம்தான் நடக்கவில்லை, மகளின் பிரசவத்தின் போதாவது மனைவியுடன் லண்டன் சென்றுவிடலாம் என்று நினைத்தாலும் அதுவும் சாத்தியப்படாது என்று புரிந்தபோது, துடித்துப்போனார். போதாதற்கு பதினைந்து நாளுக்கு ஒருமுறை மறுபடியும் மறுபடியும் லாக்டவுனை தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்.

ராமரத்னம் சென்னை ஏஜி ஆபீஸில் டெபுடி அக்கவுண்டன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி கமலா ஸ்டேட் பாங்கில் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றார். நல்ல வாழ்வியல் முறையில் சிக்கனமாக வாழுந்து நேர்மையாக ஏகப்பட்ட பணம் காசு சேர்த்து வைத்திருந்தார். மயிலாப்பூர் லஸ் கார்னரில் பன்னிரண்டு மாடி பிரம்மாண்ட அபார்ட்மெண்டில் எட்டாவது மாடியில் மூன்று பெட்ரூமுகளுடன் கூடிய வீட்டை வாங்கி வசதியாக செட்டில் ஆகிவிட்டார்.

அழகில் கிளி கொஞ்சும் ஒரே பெண் சித்ராவை நன்கு படிக்க வைத்து, கலாஷேத்ராவில் பரத நாட்டியம் கற்கவைத்து, அவளைப் பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்து, கை நிறைய சம்பளம் வாங்கும் லண்டன் மாப்பிள்ளை ஸ்ரீராமுக்கு 2018வருட இறுதியில் சென்னை குசலாம்பாள் கல்யாண மண்டபத்தில் அமர்க்களமாக கல்யாணத்தை நடத்தினார். அவள் கருவுற்ற செய்தி கேட்டு உற்சாகமானார்.

தற்போது ஏப்ரலில் மகளுக்கு சீமந்தம் பண்ண எண்ணியிருந்த அவருக்கு, லாக்டவுனால் அது முடியாமல் போனது மிகப்பெரிய கசப்பான அதிர்ச்சி….

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் சித்ரா அம்மா அப்பாவிடம் தினசரி வீடியோவில் பேசிக் கொண்டிருப்பதுதான். ரெகுலராக செக்கப் போய் வருவதாகவும், குழந்தை வயிற்றினுள் புரளுவதை நன்கு உணர்வதாகவும், ஆனால் ஹாஸ்பிடலில் குவியும் கொரோனா பேஷண்ட்ஸ்களுக்குத்தான் டாப் ப்ரையாரிட்டி என்றும் வருத்தத்துடன் சொன்னாள். டெலிவரிக்கு மே மாத இறுதியில் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றாள்.

மே மாத இறுதி வாரத்தில் வயிற்று வலி ஆரம்பித்ததும் ஸ்ரீராம் உடனே சித்ராவை பிரபல லண்டன் மருத்துவ மனையில் சேர்த்தான். பிரசவம் முடிந்து தாயும் சேயும் நல்லபடியாக வீடுவந்து சேர வேண்டுமே என்று பல தெய்வங்களிடம் வேண்டியபடி பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார் ராமரத்னம். ஒரு கோவிலுக்கு சென்று அவள் பெயரில் ஒரு அர்ச்சனை கூட செய்யமுடியாது என்கிற உண்மையை உணரத் தலைப் பட்டபோது மனிதகுலத்திற்கு ஏற்பட்ட அவமானங்களையும், சோகங்களையும் எண்ணி ராமரத்னம் அடச்சீ என்று நொந்துபோனார்.

பகல் நேரத்தில் ஹாலில் இரண்டு சீலிங் விசிறிகளையும் சுழலவிட்டு, கைகள் கால்களை நீட்டியபடி, வெறும் தரையில் மல்லாக்க படுத்து சீலிங் விசிறிகளையே வெறித்துப் பார்த்தார். கமலா அவரிடம் “ஏங்க இப்படி? எழுந்துபோய் பெட்ரூம்ல வசதியா படுத்துக்குங்க” என்றாலும் கேட்க மாட்டார். .

இரண்டு நாட்கள் சென்றதும் ஒரு விடிகாலையில் லண்டனில் இருந்து ஸ்ரீராம் அழைத்தான். ராமரத்னம் பரபரப்புடன் மொபைலை எடுத்தார்.

“சித்ரா நம்மை விட்டுப் போயிட்டாஆ…” என்று கதறினான்.

“என்னது… என்னது என் கோந்தை சித்ராவா… கமலா சித்த இங்க வாயேன்” என்று ஓலமிட்டு அழுதார்.

தாயும் சேயும் பலியாகிவிட்டனர். எல்லாம் முடிந்து விட்டது.

என்ன படித்து; என்ன வேலை பார்த்து, நேர்மையாக என்ன சேமித்துவைத்து என்ன பயன்? அருமையாக வளர்த்த ஒரே செல்ல மகளை இழந்துவிட்ட கொடுமையை என்னவென்று விவரிக்க? சரி போகட்டும்; இறந்துபோன அவளை நேரில் பார்த்துக்கூட கதறி அழமுடியாதபடி நான் என்ன பாவம் செய்தேன்…? விரக்தி, மன அழுத்தம், சுய பச்சாதாபம் ஆட்கொள்ள, ராமரத்னத்தின் புத்தி பேதலித்தது.

ஓடிச்சென்று பீரோவைத் திறந்தார். அதில் எமர்ஜென்ஸிக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தையும், அங்கிருந்த கமலாவின் நகைகளையும் அள்ளி அள்ளி எடுத்து பால்கனிக்கு நான்கு முறைகள் விரைந்து வந்து எல்லாவற்றையும் எட்டாவது மாடியிலிருந்து வெளியே தூக்கி எறிந்தார்.

அடுத்து விறுவிறுவென பூஜை அறைக்குச் சென்றார். அங்கிருந்த ஏராளமான சாமிப் படங்களை ஒரு எட்டுமுழ வேட்டியில் கட்டி அவைகளையும் பால்கனி வழியாக வெளியே தூக்கி எறிந்தார்.

அதன் பிறகு, வீட்டின் ஜன்னல்கள், கதவைச் சாத்தினார்.

சற்று நேரத்தில் பொழுது பொல பொலவென விடிந்தது.

அபார்ட்மெண்டை சுற்றி காலை நடைப் பயிற்சி மேற்கொண்ட பலர், சிதறிக் கிடந்த பணங்களையும், தெறித்துக் கிடந்த நகைகளையும், சாமிப் படங்களையும் பார்த்து வியந்து உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் போலீஸ் அங்கு வந்துவிட்டாலும், யார் இவைகளை வெளியே எறிந்தது என்பதை அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. சிலரை அந்த இடத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, அந்தப் பன்னிரண்டு மாடி அபார்ட்மெண்டில் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணையைத் துவங்கினர்.

எட்டாவது மாடியில், பக்கத்து வீடு மாணிக்லால் சேட்டின் மனைவி, கமலா மாமி இன்னமும் வீட்டு வாசலில் கோலம் போடாதது கண்டு துணுக்குற்றாள். உடனே “மாமி… மாமி” என்று ஜன்னல் கதவைத் தட்டிக் கூப்பிட்டாள். பதிலில்லை. எப்போதும் திறந்திருக்கும் ஜன்னலும் இன்று பூட்டி இருக்கிறதே என்று வியந்து நான்காவது மாடியில் விசாரணை செய்துகொண்டிருந்த போலீஸை உடனே வரச்சொன்னாள்.

அவர்கள் உடனே வந்து, காலிங் பெல் அடித்தனர். அது சத்தம் எழுப்பவில்லை. ஆனால் மற்ற வீடுகளில் கரண்ட் இருந்தது. மெயினை அணைத்து விட்டார்கள் போலும். கதவைப் பலமாக இடித்தனர். ராமரத்னம் வீட்டின் முன்னே பலர் கூடிவிட்டனர்.

வேறு வழியின்றி போலீஸ் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.

அங்கே, ஹாலில் உள்ள இரண்டு மின் விசிறிகளில் ஆளுக்கொரு விசிறியில் ராமரத்னமும், கமலாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

லாக்டவுனை மீறி அவர்களின் உடல் போஸ்ட்மார்ட்டத்திற்காக வெளியே சென்றது.

Print Friendly, PDF & Email

1 thought on “கொரோனா சோகங்கள்

  1. இரு முட்டாள்காளின் கதை இது. சாமிப் படங்களைத் தூக்கி வீசுகிறார்கள் என்றால் அவர்களுக்கு சாமியைப் பற்றியும் பிறவியைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தம். வெள்ளைக்கார கான்வென்ட் படிப்பினால் வரும் அவலம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *