கொரோனா காலம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 1,612 
 

கிராமத்திலிருந்த நான்கு ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஐம்பது லட்சத்துக்கு விற்று, ஐம்பது லட்சம் வங்கியில் கடன் பெற்று, சி.என்.சி மிஷின் வாங்கி,கோவையில் வாடகை கட்டிடம் மாதம் ஐம்பதாயிரம் வாடகையில் எடுத்து தொழில் ஆரம்பித்தான் ரகுவரன்.

வீடும் வாடகை தான். “உன்கிட்ட வேலைக்கு வரும் ஆட்களே காரில் போகும்போது, நீ கார் வாங்காமல் இருந்தால் எப்படி?” என நண்பர்கள் உசுப்ப, “தள்ளுபடி இருக்கு சார் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க ” என கார் டீலரிடமிருந்து அடிக்கடி அழைப்பும் வர,பத்து லட்சத்தில் காரை புக் செய்து, ஒன்பது லட்சம் தனியார் வங்கியில் லோனில் கார் வாங்க, ஆடையில் தரம் கூட,ஈஎம்ஐ யில் ஐ போன்,டி.வி,வாஷிங் மிசின்,வாக்யூம் கிளீனர்,குளிர்சாதன பெட்டி,ஏஸி,ஷோபா,மரக்கட்டில் என பூர்த்தி செய்து கொண்டான் ரகுவரன்!

“உனக்கென்னப்பா பெரிய கோடீஸ்வரனாகிட்டே. இனிமேல் எங்களையெல்லாம் மதிப்பியா?” என துண்டை உதறி தோலில் போட்டுக்கொண்டு வேலைக்காரி கொடுத்த புரூ காஃபியை சுவைத்த படி பேசினார் தனது பூர்வீக ஊரான கிராமத்திலிருந்து வந்த ரகுவரனின் சித்தப்பா!

வந்த உறவுக்கு கூட தன் கையில் காஃபி கொடுக்காமல்,வேலைக்காரியிடம் கொடுத்தனுப்பிய ரகுவரனின் மனைவி பிரியாவை எண்ணி வேதனைப்பட்டார் சித்தப்பா!

” உன் தங்கச்சி சகிதாவுக்கு ,அதான் என் ஒரே மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணிட்டோம். இந்த வருசம் போட்டிருந்த வாழையெல்லாம் சூறாவளி காத்துக்கு விழுந்திருச்சு. கையில காசும் அதிகமில்ல. கடன் வாங்கினா கட்டவும் வழியில்ல. அதனால தோட்டத்து வீட்லயே பந்தல் போட்டு சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிடலான்னு இருக்கேன். மாப்பிள்ளை வீட்லயும் சரின்னு சொல்லிட்டாங்க. குடும்பத்தோட ஒரு வாரம் லீவு போட்டிட்டு வந்துரோனும். என்ன நாஞ் சொல்லறது” என கூறிவிட்டு கிளம்ப முற்பட்டார் சித்தப்பா!

“அது வந்து சித்தப்பா… பிரியா நல்லா படிச்சிட்டு டவுன்ல வாழ்ந்த பொண்ணு. உங்களை மாதிரி பட்டிக்காட்டுத்தனமா வேட்டிய கட்டிட்டு வீட்டுக்கு வற்றவங்களையே அவளுக்கு பிடிக்கல. அப்படியிருக்கும் போது தோட்டத்துல பந்தல் போட்டு நடத்துற கல்யாணத்துக்கெல்லாம் அவ வரமாட்டா. என்னையும் வர விட மாட்டா… அதனால… எங்களை உங்க வீட்டு கல்யாணத்துக்கு எதிர்பார்க்காதீங்க.” என கூறி சித்தப்பாவை அனுப்பி விட்டான் ரகுவரன்!

நாட்கள் கடந்தன. உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கின. கடனாக கொடுத்த பொருட்களுக்கும் பணம் வரவில்லை. வாடகை கட்ட முடியவில்லை,ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அடமானம் வைத்த நகையை மீட்காமல் விசேசங்களுக்கு செல்லவே பிடிக்காமல் தினமும் கருத்து வேறுபாடுடன் கணவன்-மனைவி காலம் கடத்தினர். இந்த சமயம் கொரோனா பிரச்சினையால் தொழிலை மொத்தமாக இழுத்து மூட நேர, அதிர்ச்சியடைந்து ஆடிப்போய்விட்டான் ரகுவரன்!

‘அரசனை நம்பி புருசனைக்கைவிட்டு அரசனும் புருசனும் ஆத்தோட போன கதையாயிடுச்சு. கிராமத்து பூமிய அப்படியே வச்சுட்டு,வேலைக்கு வந்திருந்தா இன்னைக்கு விவசாயமாவது பார்த்து வாழ்ந்திருக்கலாம்.’ என எண்ணியவாறு தூக்கம் தொலைப்பதே வாடிக்கையாகிவிட்டது!

“ஏங்க,ஏங்க…”

“என்ன…?”

“உங்க தங்கச்சி…அதாங்க உங்க சித்தப்பா பொண்ணு கல்யாணம்…”

“அதுக்கென்ன இப்ப…?”

“இன்னும் ஒருவாரம் தான் இருக்கு…”

“இருக்கட்டும்….”

“நாம போகனமே…?”

“நீயா…? அது காட்டுல நடக்கிற கல்யாணம்…”

“இருக்கட்டுங்க. நம்ம முன்னோர்கள் அங்கிருந்து தானே நம்மை வளர்த்து காப்பாத்தினாங்க…”

“பேசறது நீதானா…?”

“நான் தாங்க. இப்பவே கிளம்பளாங்க. உங்க சித்தப்பா போன் பண்ணினாரு. பங்காளிங்க நம்ம மட்டும்,மாமா வகைல நாலு பேரு. மொத்தம் பத்தோ,பதினைஞ்சோ பேர் போதுன்னாரு…”

என மனைவி மனம் மாறி கூற கிராமம் வழியாக இருவரும் ஸ்கூட்டரில் ஊர் வந்து சேர்ந்தனர்!

“என்னம்மா பிரியா கழுத்துல ஒன்னையும் காணோம்….? வெறங்கழுத்தோட இருக்க வேண்டாம். சகிதா நீ போட்டிருக்கிற ஒரு சைன அண்ணிக்கு கழட்டி கொடு…”என உரிமையுடன் சொன்ன கணவரின் சித்தப்பாவை, பத்திரிக்கை வைத்து திருமணத்துக்கு அழைக்க வந்த போது தன் கையில் காஃபி கொடுக்காமல் ஆணவமாக வேலைக்காரியிடம் கொடுத்து அனுப்பியதை எண்ணி வருந்தினாள் பிரியா!

“சித்தப்பா பந்தல் போட யாரையும் கூப்பிட வேண்டாம். நானே போட்டுத்தாரேன். ஒரு வாரம்னு இல்லை,உன் மகனா இங்கேயே இருந்து விவசாயம் பார்க்க உங்களுக்கு உதவியா இருந்திடப்போறேன் . உங்களுக்கு பையன் இல்லேங்கிற கவலைய விடுங்க…” என்ற ரகுவரனை, ஆனந்தத்தில் ஆலிங்கனம் செய்ய வந்த சித்தப்பாவைப்பார்த்து ரகுவரன்.

“அதெல்லாம் ஆகாது… கட்டிப்பிடிக்க கூடாது. கும்பிட்டா போதும். இது கொரோனா காலம்” என்று ராகவன் சொன்னதும் கல்யாண வீட்டில் பெரிய சிரிப்பலை எழுந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *