கொடுத்த வாக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 5,996 
 
 

அலுவலகம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கையில் மழை நன்கு பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்பொழுதுதான் நாற்காலியை விட்டு எழுந்து முகம் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்த விமலா சலிப்புடன் “என்ன திடீருன்னு மழை வந்திடுச்சு சொல்லிவிட்டு பொத்தென மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தாள். மழைன்னா திடீருன்னுதான் வரும் பெரிதாக ஜோக் அடித்து விட்டதாக சிரித்த ஆனந்தனை பார்த்து முறைத்த விமலா உங்களுக்கென்ன சார்? வீட்டுக்கு போன உடனே எல்லாம் கிடைச்சுடணும். நாங்க அப்படி இல்லை, இங்கிருந்து பஸ் பிடிச்சு ஓடி, ஏதாவது செஞ்சாத்தான் குழந்தைகளுக்கும், வர்ற ஆம்பளைக்கும் ஏதாவது கொடுக்க முடியும், சோகத்துடன் சொன்னவளை பரிதாபமாக பார்த்த ஆனந்தன், அதுக்காக மழையே வேணான்னு சொல்ல முடியுமா? கொஞ்சம் பொறும்மா இப்ப நின்னுடும். சமாதானப்படுத்துவது போல் பேசி நிறுத்தினார்.

ஏதோ பைலில் மூழ்கி இருந்த கல்பனா இவர்கள் பேச்சை காதில் வாங்கினாலும் எந்த சலனமும் இல்லாமல் இருந்தாள். ஆன்ந்தன் கூட தங்கள் பேச்சில் கல்பனா கலந்து கொள்வாள் என் எதிர்பார்த்தவர், அவள் தன் வேலையிலேயே கவனமாக இருப்பதை கண்டு சற்று ஏமாற்றமானார்.மழை அரை மணி நேரமாகியும் விடவில்லை. சலிப்புடன் எழுந்த விமலா சரி சார் நான் கிளம்புறேன், பஸ் ஸ்டாபிங்க் வரைக்கும் நனைஞ்சாலும் பரவாயில்லை, பஸ் ஏறிட்டா அப்புறம் போயிடலாம், சொல்லிக்கொண்டே முகம் கழுவ செல்லும் எண்ணத்தை கூட விட்டு விட்டு வாசலை நோக்கி விரைந்தாள். இப்பொழுதாவது கல்பனா ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்த ஆன்ந்தன் அவள் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து அவளின் மன நிலையை ஓரளவு ஊகித்துக்கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல், தானும் கிளம்புவதற்கு தயார் ஆனார்.

கல்பனா மழையை பொருட்படுத்தாமல் தன் சீட்டில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.மழை சற்று கடுமையாக இருந்ததால், மாலை ஐந்து முப்பதுக்கே அலுவலகம் இருட்டி விட்டது போல தோன்றியது. அலுவலக உதவியாளன் மாரிமுத்து வந்து அனைத்து விளக்குகளையும் எரிய விட்டு போனார்.அவரும் சற்று பரிதாபமாக கல்பனாவை பார்த்துவிட்டே சென்றார். கல்பனாவுக்கு இவர்கள் தன்னை பரிதாபமாக பார்ப்பது சங்கடமாக தெரிந்தாலும், ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தாள்.அவள் நிலைமை அப்படி ஆகி விட்டது நான்கைந்து மாதத்திற்கு முன் அவள் இருந்த நிலைமை வேறு, பேச்சுக்கு பேச்சு என்று சுட சுட பதில் கொடுப்பாள்.அவள் இருந்தால் அந்த இடம் ஒரே கல கலப்புத்தான்.அப்படி இருந்தவளுக்கு கல்யாணம் என்று ஒன்றை அவர்கள் அப்பா ஏற்பாடு செய்தார். அவளும் சந்தோசமாக சரி என்று தலையாட்டினாள்.மாப்பிள்ளை இராணுவத்தில் இருக்கிறார் என்றவுடன் மகிழ்வுடன் சம்மதித்தாள்.

ஒரு மாதத்துக்குள் திருமணம் முடித்து பெண்ணையும்,அழைத்து சென்று விடலாம் என்று விடுமுறையில் வந்தவருக்கு திடீரென அழைப்பு வர எப்படியும் கல்யாணத்துக்கு வந்து விடுவதாக சொல்லி சென்றவர்தான். ஒரு மாதம் கழித்து மாப்பிள்ளையின் அப்பா வந்து நாட்டு எல்லையில் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அவரை “காணவில்லை” என்று தந்தி வந்திருப்பதை அழுகையுடன் காண்பித்தார். அதன் பின் மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இராணுவம் அவரை மறைந்து விட்டதாக அறிவித்து அவரின் பண பலன்களை பெற்று கொள்ளும்படியும் கடிதம் அனுப்பி விட்டது.இவளின் சந்தோசம் அப்பொழுது காணாமல் போனதுதான். அதன் பின் அவள் மெளனியாகி விட்டாள்.அலுவலகத்தில் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். ஒரு புன் சிரிப்பு மட்டும் சிரித்து வைப்பாள்.

கல்யாணமா நடந்து விட்டது? நிச்சயதார்த்தம் தானே முடிந்திருக்கிறது. இந்த காலத்தில் கல்யாணத்தன்றே எத்தனையோ திருமணம் நின்று போயிருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் வேறு கல்யாணமா நடக்காமல் போய் விட்டது?அவளின் அப்பா, அம்மா கூட சொல்லி பார்த்தார்கள். அவள் மனம் அந்த நிகழ்விலிருந்து வெளி வர மறுத்து விட்டது.

மழை ஓய்ந்து விட்டது, மெல்ல எழுந்தாள் கல்பனா, அலுவலகத்தில் அனைத்து நாற்காலிகளும் காலியாகி விட்டன. மாரிமுத்துவும் மழை பெய்யாமல் இருந்திருந்தால் அவளிடம் சொல்லி கிளப்பியிருப்பான். மழை வந்து விட்டதால் அவனும் தங்க வேண்டியதாகி விட்டது. மணி ஏழாகி இருக்கலாம். கல்பனா அலுவலகத்தை விட்டு வெளி வந்தவள் மெல்ல தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மழை ஓய்ந்த பின்னும் அதன் சாரல் மெலிதாக அடித்துக்கொண்டிருந்ததால், முகத்தில் தண்ணீர் படாமல் இருக்க குனிந்த படியே நடந்து கொண்டிருந்தாள். ‘காவ்யா’ ஓடாதே, ஓடாதே யாரோ குரல் கொடுத்துக்கொண்டிருக்க அதை பொருட்படுத்தாமல் ஒரு குழந்தை அந்த மழையிலும் வெளியே வந்து நனைந்து கொண்டே ஆட ஆரம்பித்து விட்டது.குரல் கொடுத்துக்கொண்டிருந்த பெண்ணும் அந்த மழையில் நனைந்து கொண்டே வெளியே வந்து அந்த குழந்தையின் முதுகில் இரண்டு அடி வைத்து வீட்டுக்குள் கூட்டிச்சென்றாள். இதை வேடிக்கையாக பார்த்துக்கொண்டு நின்ற கல்பனா, தனக்கு நிச்சயமான பின் தனக்கு கணவனாக வரப்போகிறவன் வெளியே கூப்பிட்டான் என்று அவனுடன் இதே போல் நல்ல மழையில் அவன் கூட வருகிற சந்தோசத்தில் மழையும் பொருட்படுத்தாமல் இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றது அவள் மனதில் நிழலாடியது. அப்பொழுது அவன் தன்னிடம் கேட்டுக்கொண்டது நினைவு வர “சட்டென பொங்கிய கண்ணீரை” துடைத்தவாறு வீட்டுக்கு விரைந்து நடை போட்டாள்.

அப்பா கவலையுடன் கல்பனாவின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.எப்படி கல்பனா அவங்க வீட்டுக்கு போய் கேப்பேன்? அப்பா எனக்காக இந்த உதவி?கேட்ட மகளின் முகத்தை பார்க்க சகிக்காமல் சரிம்மா நீயும் வா, என்று சொன்னவுடன் “தேங்க்ஸ்ப்பா” சொல்லியவுடன் அப்பாவுடன் கிளம்ப தயாரானாள். அம்மாவுக்கும் இது சரிப்பட்டு வருமா? என்ற கேள்வியுடன் அவர்கள் இருவரும் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு தன் மகனை இழந்த அந்த வீடு மிகுந்த சோகத்துடன் இருந்தது. கல்பனாவின் அப்பா கேட்ட குழந்தைகள் காப்பகத்திலிருந்து வந்த கடிதத்தை கொண்டு வந்த கொடுத்த இறந்து விட்ட மாப்பிள்ளையின் அப்பா? இது எதற்கு உங்களுக்கு? என்று கேட்டார். அதற்கு கல்பனா அளித்த பதிலால் அவர் அதிர்ந்து குலுங்கி குலுங்கி அழுதவாறு உன்னை கை பிடிச்சு வாழ வழியில்லாம போயிட்டானேம்மா என் மகன் ! அழுது கொண்டே இருந்த அவரை, சமாதானப்படுத்த முடியாமல் மெல்ல அவர் கையை பற்றி அழுத்தி விட்டு வெளியேறினர் கல்பனாவும், அவள் அப்பாவும்.

இவர்கள் இருவரும் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசியதில் ஓரளவு புரிந்து கொண்ட அந்த குழந்தைகள் விடுதி காப்பாளர் இரண்டு நாட்கள் தங்கி மற்ற பார்மாலிட்டிசை முடித்து குழந்தையை கூட்டி செல்லலாம், என்று ஹிந்தியில் சொன்னார். கல்பனாவுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஒரு வாரம் ஓடியிருந்தது. இப்பொழுது கல்பனாவின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சி படர ஆரம்பித்திருந்தது. இதுவே கல்பனாவின் பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவர்கள் வீட்டுக்கு புதிய வரவாக வந்திருந்த அந்த ஐந்து வயது பெண் குழந்தை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுடன் ஒட்டி பழக ஆரம்பித்து விட்டது. அதற்கு நல்ல தமிழ்ப்பெயரை சூட்ட ஒரு நல்ல நாள் பார்த்து தன் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தாள்.

திருமணம் நிச்சயம் செய்த பின் அவள் கணவனாக போகிறவன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, நானும் என் நண்பனும் ஒரு முறை தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு கொண்டிருந்த பொழுது தீவிரவாதிகள் என்னை பார்த்து சுட்ட குண்டை என் நண்பன் ஏற்று உயிர் விட்டான். அப்பொழுதுதான் ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டு அவன் மனைவி உயிர் துறந்து ஒரு வருடம் மேல் ஆகியிருந்த நேரம். இவன் தன் குழந்தையை ஒரு காப்பகத்தில் விட்டு பணம் அனுப்பி வந்தான். ஒவ்வொரு முறையும் தன் மகளை பார்த்து வந்து என்னிடம் அழுவான், அநாதையாய் அங்கு என் மகள் இருக்கிறாள், இங்கு அநாதையாய் நான் இருக்கிறேன் உன்னிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேட்பேன், எனக்கு ஏதேனும் ஆகி விட்டால், நீ என் குழந்தையை எடுத்து நீயும், உனக்கு வரப்போகிற மனைவியும் அப்பா, அம்மாவாக வளர்ப்பீர்களா? என்று அடிக்கடி கேட்பான்.அவன் இறந்த பின்னால் இந்த நான்கு வருடங்களாக நான் தான் அங்கு சென்று அந்த குழந்தைக்கு கார்டியனாக இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கல்பனா நானும் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். நமக்கு திருமணம் ஆன பின்னால் அந்த குழந்தையை தத்து எடுத்து நீயும் நானும் தாயும், தந்தையுமாய் இருப்போமா? இது உன்னிடம் நான் கேட்கும் வேண்டு கோள், என்றவனை அந்த மழையிலும் உற்று பார்த்த கல்பனா கண்டிப்பாய் செய்யலாம், நமது முதல் குழந்தையாய் அந்த குழந்தையை எடுத்து கொள்வோம் என்று அவனுக்கு உறுதி கூறினாள்.

ஆனால் விதி அவனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதே ! அவள் மனது அவனது இழப்பை விட அந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றியே இவ்வளவு நாளும் சிந்தித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த்து. தன் தந்தையிடம் இது பற்றி பேசும்போது அவளுக்காக, அவர்கள் பெற்றோர், அந்த குழந்தையை தாங்கள் எடுத்து, வளர்க்கிறோம் என்று சொல்லவும், கல்பனாவுக்கு ஏற்பட்ட பெரிய பாரம் சட சட வென குறைந்தது போலிருந்தது.கல்பனாவின் பெற்றோரும்,அவளது நண்பர்களும் இந்த நிகழ்ச்சியால் அவளுக்கு திருமணம் பாதித்துவிடுமோ என்ற பயம் இருந்தாலும் கட்டாயம் அவள் நல்ல மனதுக்கு தகுந்த மணமகன் வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *