கொஞ்சும் கனவுகளோடு நான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,323 
 
 

இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன. திருமணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாலே மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு பகுத்திக்கு நேரடியாக மானேஜராக பதவி பெற்று வந்தேன். இங்கேயே திருமணம் முடித்து கவிதா மற்றும் பீட்டர் ஆகிய குழந்தைகளோடு, இன்னும் அழகான மனைவி ஸ்டெல்லாவோடு ஊரை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஊரிலே மாதா கோவில் திருவிழா ஜாலியாக இருக்கும் என்று நினைக்கும் போதே உடம்பெல்லாம் மெய் மறந்து புல்லரித்துப் போனது.

கொடியேற்றம் அன்றைக்கே ஊரில் திருவிழா களை கட்ட ஆரம்பித்து விடும். காலையிலே சிறுவர்கள் சின்ன பாட்டில்களிலும் கண்ணாடி டம்ளர்களிலும் ஸாக்ரின் கலந்த சிவப்பு, பச்சை நிற சர்பத்தை விற்க ஒரு புறம் தொடங்கி விட ,கோவிலின் அருகில் சில பாயாசக் கடைகளும் தொடங்கி விடும்.

குச்சி மிட்டாயும், சவ்வு மிட்டாயும் ஈக்கள் குழும சீனிக்கார தாத்தா கடையில் உருவாகும். ஊருக்குத் திருவிழாவிற்கு வந்த மலையாளத்து பாட்டம்மையிடமும் மாமாவிடமும், அத்தானிடமும் மாறி மாறி பணம் வாங்கி சர்பத்தும், குச்சி மிட்டாயும் தின்ற நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன.

சாயங்காலம் ஊர்ப் பெரியவர்கள் எல்லோரும் கப்பி வழியாக நான்கு புறமும் பெரிய பெரிய வடக்கயிறும் கொடிமரத்தின் ஒருபக்கத்தை உயரே இழுத்து நிறுத்தி நான்கு பக்கமுள்ள பெரிய வேப்ப மரங்களில் கட்டி வைப்பார்கள்.

கொட்டு மேளத்தோடு மதிய நேரம் கழிந்த நேரத்திலிருந்து வீடு வீடாக கொடி எடுத்து வந்து திரும்ப மாதா கோயிலுக்கு கொண்டு செல்வார்கள்.

சாயங்காலம் பொழுது சாய ஊரே திரண்டு நிற்க வாண வேடிக்கைகள் முழங்க மக்களின் கரவொலி வானைப் பிளக்க பங்குத்தந்தை ஆலயக் கொடியை ஏற்றி வைத்து பின்னர் திருமறை உரை ஆற்றி ஆசீர்வாதம் பண்ணுவார்.

உடனே வீட்டிற்கு வந்து கோழிக்கறி உளுந்தஞ் சோறு சாப்பிட்டு விட்டு நடக்கப் போகும் சிறுவர்களின் நாடத்திற்காக ஓடும் போது வழியில் கட்டை உருட்டும் பகுதியில் கையில் இருந்த பத்து காசையும் ஆசையாக இழந்து விட்டு, ஆலய வளாகத்தில் நடக்கும் நாடகத்தை முன் வரிசையில் உட்கார்ந்து பார்க்க ஓடி வரும் ஆர்வம்.

ஒரு முறை நான் கூட பெண் வேடம் போட்டு முந்தானை விழுந்ததைக் கூட மறந்து வசனம் பேச, கூட்டம் முழுவதும் சிரிக்க, நான் பேந்த பேந்த விழிக்க இப்போதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றாள் ஸ்டெல்லா.

“பழைமைகளை நினைத்துப் பார்த்தேன்.”

“அத்தைப் பெண்ணை விரட்டிய ஞாபகமா?”

“சீ! ஏன் ஸ்டெல்லா சொந்தஊரில் வேறு விஷயமே கிடையாதா?”

என் முகத்தில் இருந்த எரிச்சலைப் பார்த்து “நான் சும்மா தானே கிண்டல் பண்ணினேன். ஏன் கோபப் படுகிறீர்கள்?” என்றாள் மனைவி.

“அப்பா… ஊர் எப்படி இருக்கும்? அங்கே ரயிலெல்லாம் கிடையாதாமே” என்றான் பீட்டர்.

“ஆமாண்டா கண்ணு. ஊரிலே நெல் வயலும் தென்னந் தோப்பும் தான் நெறைய இருக்கு.”

“தாத்தா பாட்டிக்கெல்லாம் உன்னை விட ரொம்ப வயசிருக்குமில்லே டாடி” என்றாள் மழலையில் கவிதா.

“ஆமாம் நீ போய் பிஸ்கட் சாப்பிடு” என்றேன்.

ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் திரும்பவும் பழைய நினைவுகளுக்குள் புகுந்தேன். நாடகம் முடிந்து தூங்கி எழுந்தால் இரண்டாம் திருநாள். பத்து நாளும் ஊரிலே பள்ளி விடுமுறை விட்டு விடுவார்கள். நாங்கள் கொண்ட குதுகலம் சொல்லி மாளாது. இரண்டாவது நாளிலிருந்து குடை ராட்டு அம்மாங்க (சிஸ்டர்) மடத்திற்கு வந்து விடும். பத்து காசு கொடுத்தால் குடை ராட்டில் அமர்த்தி இருபத்தைந்து முறைச் சுற்றுவான்.

கோயில் வாசலில் திரும்பவும் சர்பத்து பாயாசம் மிட்டாய் கடைகள் பிரசவமாகும். திரும்ப மாதா சபையார் இரண்டாம் நாள் நாடகம் போடுவார்கள். அக்கா நாடகத்தில் அடிக்கடி ஆண் வேஷம் கட்டி நடிப்பாள். அண்ணாவின் வேட்டியும் சட்டையும் போட்டுக் கொண்டு கண்மையை மூக்கிற்குக் கீழே மீசையாகப் போட்டுக் கொண்டு..இப்படி ஏழு நாள்கள் பறந்து போகும்.

தினம் வீட்டில் காலையில் ஆவி பறக்க இட்லி, தோசை, புட்டு, கொழுக்கட்டை, கருப்பட்டி காப்பி என ஒரே களேபரமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் சொந்தக்காரர்கள் நிறைந்திருப்பார்கள். அப்பா வாழைத் தோப்பில் தினமும் நிறைய வாழை இலை அறுத்துக் கொண்டு வந்து போடுவார்கள். அம்மா முழுக்க முழுக்க அடுப்படியிலே வாசம் செய்வார்கள். மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு தினமும் நாடகம் பார்த்து… ஐயோ என்ன மகிழ்ச்சி.!!!!

எட்டாம் திருநாள் வந்தாலே வெளியூரிலிருந்து ஆட்கள் வந்து குமிய ஆரம்பித்து விடுவார்கள். காலையிலே திவ்ய நற்கருணை, சுற்று பிரகாரத்திற்காக இரதம் ஜோடிக்கப்படும். ஊரிலுள்ள இளைஞர்கள் அனைவரும் கன்னியாஸ்திரிகளுக்கு உதவி செய்து இரதத்தை பிரமாதமாக ஜோடிப்பார்கள்.

சாயங்காலம் ஆலயத்தைச் சுற்றி தேன் குழல் மிட்டாய் கடைகளும், கண்ணாடி வளையல், விளையாட்டு சாமான் கடைகளும் நிறைய ஆரம்பித்துவிடும். ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் திவ்ய நற்கருணை பவனி, சுத்தம் செய்யப் பட்டு இலை தழைகளால் ஜோடிக்கப் பட்ட தெருக்களை சுற்றி நான்கு மணி நேரமாக ஊர்வலமாக வந்து முடியும். திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெறும்.

பின் ஊர்ப் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து தேவசகாயம் பிள்ளை சரித்திரத்தை நடித்துக் காட்டுவார்கள்.

ஒன்பதாம் திருநாள் காலையில் புது நன்மை கொடுக்கப்படும். எல்லா சிறு பிள்ளைகளும் வெண்ணுடை தரித்து புது நன்மை வாங்க சாயங்காலம் ஆலயத்திற்கு வெளியே பெரிய அளவில் ஆசீர்வாதமும் பாடல் பலியும் நடைபெறும். இரவில் தேர்ப் பவனி வர பலரும் கள் குடித்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக தேவ அன்னைக்கு புகழ் பாடல் பாடி விடிய விடிய ஊரைச் சுற்றி வந்து தேரை கோவிலின் அருகில் நிறுத்துவார்கள். உடனடியாக தேரில் தேரில் விடியற் காலை பாடல் பலி பூஜை நடைபெறும். தொடர்ந்து கோவிலின் வெளி பிரகாரத்தில் பெரிய பூஜை நடைபெறும்.

மத்தியானம் தேர்ப் பவனி சுற்றி வர, கோவிலின் முன்னால் ஊரிலுள்ள இளம் பெண்கள் அனைவரும் வளையல் பொட்டு குப்பி வாங்கவர, இளைஞர்கள் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டே போக, கிண்டலும் கேலியும் கொஞ்ச நேரம் ஊரே மகிழ்ச்சியில் திளைத்து மூழ்கும்.

இரவில் இளைஞர்கள் சேர்ந்து வழங்கும் ஒப்பற்ற சமூக நாடகக் காவியங்களை காண பக்கத்திலுள்ள ஊர் மக்கள் எல்லாம் திரண்டு வருவார்கள்.

ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் கழித்து திருநாள் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி இரத்தத்தின் ஒவ்வொரு செல்லிலும் ஓடிக் கொண்டிருந்தது.

“ராஜன் நாகர்கோவில் ஸ்டேசன் வரப் போகிறது. இறங்குவதற்கு தயாராக இருங்கள்” என்றாள் மனைவி ஸ்டெல்லா.

பீட்டரும் கவிதாவும் புது உடைக்கு மாறியிருந்தார்கள். நான் பெட்டி படுக்கைகளை தூக்கிக் கொண்டு ஸ்டேசனில் இறங்கி மனைவி மக்களோடு நடந்தேன்.

காரில் ஊருக்குள் நுழைந்த போது ஆலய வளாகத்தில் நின்றிருந்த வேப்ப மரங்கள் எல்லாம் காணாமற் போயிருந்தன. வெறுமையாகத் தோன்றிய அந்த ஆலயமும் புது வடிவம் பெற்றிருந்தது. மாதாவின் சொரூபம் மென்மையாக புன்னகைத்துக் கொண்டிருந்தாலும் மரங்கள் இல்லாத ஆலய வளாகம் என் மனதில் முதன் முதலாக வெறுமையை உருவாக்கியது.

அப்பா மிக மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். “இப்பவாவது ஊருக்கு வழி தெரிந்ததே” என்றவாறு. அம்மா என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார்கள். அக்காவும் குழந்தைகளும், அக்கா குழந்தைகளும் மகிழ்ச்சியடைய எங்களை வரவேற்று நாங்கள் என்ன வாங்கி வந்திருக்கிறோம் என்று ஆவலாய் காத்திருந்தார்கள்.

மறுநாள் காலை கோயில் வளாகத்தில் கொடியேற்று விழாவை கொண்டாட எந்த விஷேசமும் தெரியவில்லை. அக்கா பையன் ஜோசப் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். “ஏன்டா ஜோசப் இன்றைக்கும் லீவு கிடையாதா?” என்று கேட்டேன்.

“இல்லை மாமா. எங்களுக்கு பத்தாம் திருநாள் மட்டுந் தான் லீவு மாமா.” என்று சொல்லிக் கொண்டே ஓடினான். கொடியேற்று விழா ஆலய வளாகம் இன்னும் களை கட்டவில்லை. எனக்குள் வெறுமையும் எரிச்சலும் வளர ஆரம்பித்தன. சர்பத், பாயாசக் கடைகளை தேடித் தேடி என்க ண்கள் அலுத்து போயின.

சாயங்காலமும் யாரும் கொடி எடுத்து வைக்கவரவில்லை. திடீரென்று ராட்சஷ சைசில் ஒரு கிரேன் வர கொடி மரம் உயர்த்தப்பட்டது. கோயில் மணி அடிக்க ஒரு சிலரே ஆலயத்திற்கு வெளியில் நிற்க எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கொடியேற்று விழா நடந்து முடிந்தது.

இரவில் நாடகம் போடுவார்களா என்று விசாரிக்கும் போது திடீரென்று ஒரு வேன் வேகமாக வர இரண்டு இளைஞர்கள் குழிதோண்டி கம்பு களை நாட்டி திரை கட்டப்பட்டது. கோயிலுக்கு கொடியேற்று விழாவிற்கு வந்ததை விட பத்து மடங்கு கூட்டம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப் படம் பார்க்க கூடியிருந்தனர்.

மறுநாள், அடுத்த நாள், என நாட்கள் தான் திரும்ப வர பகல் வேளைகளில் ஆலய வளாகத்தில் ஈக்களை விரட்ட கூட ஒரு ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்க எனக்குள்ளே எரிச்சலும் கோபமும் வளர்ந்து கொண்டே போக தினமும் ஆலய வளாகத்தில் இரவில் ரஜினியும், கமலும், விஜயகாந்தும், கார்த்திக்கும், பிரபுவும் வந்து விட்டுப் போனார்கள்.

எட்டாம் திருநாள் திவ்ய நற்கருணை பவனி இரதத்தை இரண்டு கன்னியாஸ்திரிகள், மட்டுமே நின்று ஜோடித்துக் கொண்டிருந்தார்கள். தேர்ப்பவனியும் திவ்ய நற்கருணை பவனியைப் போல ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிய நான் வீட்டிற்குள்ளே இருக்க முடியாமல் ஒன்பதாம் திருநாள் இரவு ஆலயத்திற்கு முன்னால் வந்த போது என்னை அறியாமல் என் கண்களில் நீர் வடிந்தது. ஊரே தூங்கிக் கொண்டிருந்த வேளையில் நான் மட்டும் ஏன் அழுது கொண்டிருக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை.

பத்தாம் திருநாள் காலை….பலி பூசை முடியவில்லை. பெரிய அளவில் நடந்த திருப்பலி முடிந்த பத்து நிமிடத்தில் கோவில் மைதானம் களையிழந்து போனது.

மதியம் தேரை தள்ளிக் கொண்டு போக ஆளில்லாமல் போக, ஆலய வளாகத்தில் வளையல் வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களை வேண்டு மென்றே இடித்துக் கொண்டே இளைஞர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில பெரியவர்கள் வழியில் நின்ற மாதா அன்னையின் தேரை இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

இரவில் சில இளைஞர்கள் சேர்ந்து ‘ஒலியும் ஒளியும்’ அமைப்பில் நாடகம் போட அதைப் பிடிக்காத ஒரு சில நண்பர்கள் எதிர்ப்பாக திடீரென்று சிவாஜியின் ‘சிவந்தமண்’ திரைப்படம் போட ஊர் மக்கள் சிதறி இங்கு மங்கும் ஓடி திரைப்படத்திற்காக இடம் பிடிக்க என் கால்கள் திடீரென்று தளர்ந்து போய் வீடு திரும்பின.

“ஏண்டா வந்து பத்து நாள் கூட நிற்கவில்லை. கிளம்பி விட்டாய்.” என்றார் அப்பா.

“எவ்வளவு நாள் கழித்து ஊருக்கு வந்திருக்கிறாய் ராஜன். இன்னும் சில நாள் நின்று விட்டு போயேன்” என்றார்கள் அம்மா.

“இல்லை அம்மா எனக்கு வேலை இருக்கிறது. ஸ்டெல்லாவும் குழந்தைகளும் கொஞ்ச நாள் நின்று விட்டு டில்லிக்கு கிளம்புவார்கள்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்.

இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஊரில் திருவிழா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஓடி வந்த நான்…என்னைப் பார்த்தே சிரிக்க ஆரம்பித்தேன். இனி எனக்கு திருநாள் பார்க்க ஆசை வருமா? என்று மனதிடம் கேள்வி கேட்கிறேன்.

இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இம்முறை டில்லியை நோக்கி. நிலாவோடு டில்லி ஊரை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. நிலாவும், நினைவும் கூடவே பயணம் கொண்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *