கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 7,999 
 
 

சூரியன் உதிக்கத்தொடங்கியது… மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒலித்த
ஒப்பாரி ஓலம் சற்றே தணிந்திருந்தது… பெண்கள் தொண்டை வற்றியவர்களாக
எச்சிலை விழுங்கியபடி, வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தனர்…
வாசற்படியில் அமர்ந்திருந்த வைரவனும் கூட தன்னிலை மறந்தவனாய் வானத்தை
வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்….

வாசலில் புழுதியை கிளப்பியபடி வந்து நின்ற அம்பாசிடர் காரிலிருந்து,
வைரவனின் சின்ன தங்கச்சி இறங்கி, நடையும் ஓட்டமுமாக மார்பில் அடித்தபடி
வீட்டிற்குள் நுழைய, பழைய ஓலம் மீண்டும் ஒப்பாரி வடிவில் தொடங்கியது…

“ஐயா…. என்னப்பெத்த ராசா…. சித்திய பாக்க வரேன்னு சொன்னியே,
இப்புடியா உன்ன பாப்பேன்னு நெனச்சேன்…. பேச்சுக்கு நாலு தடவ சித்தின்னு
நீ கூப்பிடுற அந்த பேச்சை இனி நான் எங்கய்யா கேப்பேன்?….” இளையவளின்
குரல் வைரவனை இன்னும் அதிக வேதனையூட்டியது….

கையில் வைத்திருந்த குற்றால துண்டால் முகத்தை மூடி அழத்தொடங்கினார்….
வைரவனின் தங்கைகள் மூவருக்கு, அரை டசன் ஆண் குழந்தைகள்… ஆனாலும்,
அத்தனை பேரின் செல்லமாக வலம் வந்தவன் செந்தில் தான்… அதிலும் குறிப்பாக
வைரவனின் கூடுதல் பாசத்துக்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது…
செந்திலை தன் தங்கை மகளாக மட்டும் பார்த்திடாமல், தன் ஒற்றை மகளான
மேகலாவுக்கு மாப்பிள்ளையாகவும் பார்த்ததால்தான் இந்த கூடுதல் பாசம்…
சிறுவயது முதல் படுசுட்டியாகவும், எல்லோருடனும் பாசமாகவும், திருத்தமான
முகத்தோடும் மற்ற ஐவரை விட எல்லாவிதத்திலும் தன் மகளுக்கு பொருத்தமாகவும்
இருந்ததால், ஆறு வயது முதலே தன் மாப்பிள்ளையாக செந்திலை மனதில்
நிறுத்தத்தொடங்கிவிட்டார்…. திருவிழாவுக்கு மற்ற பிள்ளைகளுக்கு சாலையோர
கடையிலும், செந்திலுக்கு மட்டும் டவுன் ரெடிமேட் கடையில் துணி எடுப்பது
தொடங்கி மற்ற பிள்ளைகளுக்கு தெரியாமல் டவுனிலிருந்து பரோட்டா வாங்கி
வந்து, அதை யாருக்கும் தெரியாமல் செந்திலுக்கு ஊட்டிவிடுவது வரை கரிசனம்
கரை கடந்த கடலாக வெளிப்பட்டது…

மாப்பிள்ளைக்கு பிடிச்ச நகரை மீன் குழம்பு மட்டுமே வைரவனின் வீட்டில்
வாரத்திற்கு மூன்று நாட்கள் சமைக்கப்படும், செந்திலின் காதுகுத்து
விழாவிற்கு வைரவன் எடுத்த மாமன் சீர் இன்னும் அவர்கள் குடும்பத்தில்
புகைந்துகொண்டே இருக்கும் ஒரு பிரச்சினை…

“அது என்ன பெரியக்கா மவனுக்கு மட்டும் அம்புட்டு செறப்பா சீர் செஞ்சிய,
நாங்கல்லாம் மட்டுமென்ன புள்ளைய தவுட்டுக்கா வாங்குனோம்” நடுதங்கச்சி
நேரடியாகவே கேட்டுவிட்டாள்….

“நீ என்னப்பா பேசுற?… உம் மவனுகளுக்கு தேவை வச்சப்ப, ரொம்ப கஷ்டத்துல
இருந்தேன்பா… இப்ப கைல கொஞ்சம் பணம் பொரலுறதால செஞ்சேன்… இப்ப
செய்யலைன்னா என்ன, அடுத்த தேவைக்கு செறப்பா செய்யப்போறேன்…” சமாளிக்க
முடியாமல் தவிப்பார் வைரவன்….

இவ்வளவு பாசம் வைத்திருந்த மாப்பிள்ளை, சவமாக கிடப்பதை எவரால்தான்
தாங்கமுடியும்?…. இப்படி ஒவ்வொரு நிகழ்வாக எண்ணி, வைரவன் இன்னும்
தேம்பி அழுதுகொண்டே இருந்தார்….

அப்போது பின்னாலிருந்து ஒரு கை வைரவனை அழைக்க, திரும்பி பார்த்தார்….
மேல் சட்டை இல்லாமல், வேஷ்டியுடன் வந்து நின்ற வேளார், வைரவனின் இரு
கைகளையும் தழுவி துக்கம் விசாரித்தார்….

ஏனோ யாரை பார்த்தாலும், வைரவனுக்கு அழுகை அதிகமாகிக்கொண்டே இருந்தது…
இதே வேளாரிடமிருந்துதான், செந்திலின் கல்லூரி படிப்பிற்காக நிலத்தை
ஒத்திவைத்து கடன் வாங்கினார் வைரவன்….

“பேசாம ஐ.டி.ஐ ல சேர்த்துவிட்டு நம்ம மாப்பிள்ளை மெக்கானிக் கடையில
வேலைக்கி சேர்த்தூடலாம் மச்சான்…. இம்புட்டு செலவு பண்ணனுமா?”
செந்திலின் அப்பாவே தயங்கினாலும், மாப்பிள்ளைக்காக சோறு போட்ட நிலத்தை
ஒத்திவைத்தார் வைரவன்….

“வைரவா…. அழுவாதப்பா…. உன் மாமன்தான் பெத்த புள்ளைய இழந்துட்டு
அழுதுகிட்டு இருக்கான்… நீயும் இப்புடி உக்காந்துட்டா ஆகுற வேலையல்லாம்
யாரு பொறுப்பா பாக்குறது?… மொதல்ல கண்ணை தொடச்சுட்டு எந்திரி… ஏழு
மணி பஸ்’சுல நம்ம சாதி சனமல்லாம் வந்துரும்.. அவிக உக்கார கூட ஒன்னும்
ஏற்பாடு இல்ல….” வேளார் சொன்னபிறகுதான் வைரவனுக்கு சூழல் புரிந்தது…
திருப்பத்தூரிலிருந்து வரும் பேருந்து ஏழு மணிக்கு ஊருக்கு வந்திடும்,
சுற்றுவட்டார சொந்தங்கள் நிறையபேர் அதில்தான் வருவார்கள்… வீட்டு
திண்ணையில் சடலம் போடப்பட்டிருக்க, அக்கம் பக்கத்தினரும் முக்கிய
சொந்தங்களுமே முழு வீட்டையும் நிரப்பிவிட்டார்கள்… இனி வருபவர்களுக்கு
நிற்கக்கூட இடமிருக்காது….

துண்டால் முகத்தை துடைத்தபடி எழுந்தார் வைரவன்….

“ஏய் பழனிச்சாமி கீத்து பின்றவன வரசொல்லி வேகமா ஒரு காவணம் போட
சொல்லு…. ஆளுக உக்காருற மாதிரி தார்ப்பாய், சமுக்காலம் எல்லாம்
எடுத்துட்டு வா…” சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்து இரண்டு
பிளாஸ்டிக் குடங்களை எடுத்து, தண்ணீர் பிடித்துவர சொல்லி வாசலில்
வைத்தார்…. அதற்காகவே காத்திருந்தார்போல பலரும் குவளை குவளையாக தண்ணீரை வாய்க்குள் கவிழ்த்தனர்….

“எப்புடிப்பா ஆச்சு?” என்ற எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல
வேண்டிய மொத்த குத்தகைதாரர் ஆகிவிட்டார் வைரவன்…
“ஏதோ பரிச்ச எழுதுனானாம்… பெய்லா போய்ட்டோம்னு பாவிப்பய பூச்சி மருந்தை
குடிச்சுட்டான்…. விடியகாலம் நான்தான் பார்த்தேன், நொரை கக்கி கிடந்ததை
பார்த்தப்ப என் உசுரே போய்டுச்சு…. அப்பவே பேச்சு மூச்சு இல்ல,
நாடியும் இல்ல…” ஒவ்வொருமுறை சொல்லும்போதும் மனம் வலிக்க, தொண்டை
அடைக்க சொல்லிய வைரவனின் கண்கள் அனிச்சையாக கண்ணீரையும் தாரை தாரையாக வடித்தது…

ஒருவழியாக கீற்றால் கொட்டகை வேய்ந்துகொண்டிருக்கும்போதே ஆட்கள் நிறைய
வரத்தொடங்கிவிட்டனர்… ஆட்கள் வரத்து அதிகமாக, அங்கு ஒப்பாரியும்
மிகுதியானது…

“ஏய் தம்பி…. சின்ன புள்ளைகல்லாம் பசியா இருக்குங்க…. முக்கு கடைல
போய் டீத்தண்ணி வாங்கிட்டு வா…. சலவைக்கடைல போய் வண்ணான வரசொல்லு….”

தன் சட்டைப்பையிலிருந்து சில நூறுகளை கொடுக்கும்போது தன்னையும் மீறி
கண்ணீர் வழிந்தது வைரவனுக்கு…. முதன்முறையாக தன் மாப்பிள்ளைக்காக செலவு
செய்யும்போது மனம் கனத்து, கண்ணீராய் கரைந்தது இப்போதுதான், அநேகமாக
இதுவே அவனுக்கு செய்யும் கடைசி செலவாக இருப்பதாலோ என்னவோ….
வீட்டிற்குள் சென்று பாய் மற்றும் போர்வைகளை எடுத்துவந்து வீட்டு வாசலில்
கிளைபரப்பி நின்ற புங்கை மரத்து நிழலில் விரித்தார்…. கொட்டகையையும்
மீறி வழிந்த கூட்டத்தை கட்டுப்படுத்த மரநிழல்கள் தற்காலிக இளைப்பாறும்
இடமாக மாற்றப்பட்டது….

திடீரென வீட்டு வாசலில் ஒரே சலசலப்பு…. தன் மாமா, வேளார், மற்றைய
உறவினர்களுடன் வேறு யாரோ வாக்குவாதம் செய்வதைப்போல தெரிகிறது…
வாக்குவாதம் முற்றியதன் அடையாளமாக தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டு
இன்னும் அதிக உஷ்ணத்தை அங்கு உண்டாக்கியது….

நடையும் ஓட்டமுமாக அந்த இடத்தை அடைந்தார் வைரவன்…
“இங்க பாருங்க வேளாரே, நான் ஒத்துக்க முடியாது…எனக்கு இந்த சாவுல
சந்தேகம் இருக்கு…. அவன் தற்கொலைதான் பண்ணிகிட்டான்னா ஏன் போலிசுக்கு
போக பயப்படனும்?” சாமிக்கண்ணுதான் பிரச்சினை செய்கிறான்….
வழக்கமான பங்காளி தகராறால், வருடங்கள் கடந்தும் தீராத பகையின்
வெளிப்பாடுதான் இந்த வீண் பிரச்சினையும்… சுபகாரியங்களிலேயே “என்னடா
பிரச்சினை பண்ணலாம்?” னு காத்திருக்குற சாமிக்கண்ணுக்கு, வசமாய்
வாய்க்குள் சிக்கிய அவலாக கிடைத்த செந்திலின் மரணத்தை சும்மா விடுவாரா
என்ன?….

“எம்புள்ள செத்ததுல உனக்கென்னடா சந்தேகம்?… சனிப்பொணம் தனியா
போவாதுன்னு சொல்வாக, இன்னைக்கி எம்மவன் பொணத்துக்கு நீதான் தொணை பொணமா போவப்போறன்னு நெனக்கிறேன்” மாமாவும் பொறுமை இழந்து
பேசத்தொடங்கிவிட்டார்….

துக்கத்திற்கு வந்தவர்கள் அந்த இடத்தை சூழ்ந்து, நடப்பது புரியாமல்
வேடிக்கை பார்த்தனர்… அவர்களுக்குள்ளாக ஏதேதோ பேசிக்கொண்டு, தங்கள்
கற்பனைகளுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு நின்றனர்…

சூழலை உணர்ந்த வைரவன், சாமிக்கண்ணுவை தனியே அழைத்தபடி, “என்ன மச்சான்
இதல்லாம்?… பெத்த மகன் செத்த வேதனைல இருக்குற மனுஷன்கிட்ட வந்து
பிரச்சின பண்ணனுமா?… எதுவா இருந்தாலும் அடக்கம் பண்ணதுக்கு பொறவு
பேசிக்கலாம்…. இப்ப கெளம்புங்க மச்சான்…” பொறுமையாக பேசினார்….

“இல்ல வைரவா, அவன் ஏதோ தப்பு பண்ணிருக்கான்…. அந்த செந்திலு பயல ரெண்டு
நாளக்கி முன்னாடி கைநீட்டி அடிச்சத எம்மவன் பாத்திருக்கான்…. என்னமோ
பிரச்சினைலதான் மருந்து வச்சு கொன்னிருக்கான்…. வெளுத்ததெல்லாம்
பாலுன்னு நெனக்கிற ஆளு நீ… உம்மகள செந்திலுக்கு கல்யாணம் பண்ண பேசி
முடிச்சது எனக்கு தெரியும்… இப்ப உம்மவ வாழ்க்கையும் கஷ்டமா
போச்சுல்ல?… அதுக்கும் சேத்து நாம நியாயம் கேப்போம்… அவன் மேல தப்பு
இல்லைன்னா, என்னத்துக்கு போலிசுக்கு சொல்ல பயப்படுறான்?” கேள்விகளை
வரிசையாக அடுக்கினார் சாமிக்கண்ணு….

“ஐயோ மச்சான்…. போலிசுக்கு போனா, ஆஸ்பத்திரில உடம்ப கூறு போட்டு நாளை
கடத்துவாங்க…. ஏற்கனவே புள்ளைய எழந்து தவிக்குற அக்கா, மாமாவல்லாம் அதை
தாங்கமுடியாது… உங்க கால்ல வேணாலும் விழுகுறேன், தயவுசெஞ்சு பிரச்சினை
பண்ணாதிக….” காலை நோக்கி வைரவனின் கைகள் செல்ல, சில அடிகள் பின்னால்
விலகிய சாமிக்கண்ணு தடுத்து நிறுத்தியபடி, “ஏய் ஏய்…. சரி விடுப்பா….
இம்புட்டு ஏமாளியா நீ இருக்கியே!” என்று தலையில் அடித்தபடி வீதியில்
நடக்கத்தொடங்கினார் சாமிக்கண்ணு….

பெருமூச்சு விட்டபடி கூட்டத்தை சரிசெய்து, மேற்கொண்டு ஆகவேண்டிய
வேலைகளுக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டார் வைரவன்….

வீதியின் தொடக்கத்திலிருந்தே பெண்கள் பலர் தலையிலும், மார்பிலும்
அடித்தபடி வீட்டை நோக்கி நடந்து வந்தனர்… எல்லோர் கண்களிலும் எல்லையற்ற
சோகம், அதிர்ச்சி…

உடலை வணங்கி போடப்பட்ட மாலைகளை அவ்வப்போது அள்ளி வாசலில் இருந்த கூடையில் போட்டனர்… ரோஜாப்பூ இதழ் சிந்தி வாசலே பூக்கோலம் போட்டது போல
ஆகிவிட்டது…

“ஏம்பா தாரை தப்பட்டைக்கு சொல்லலையா?” ஒரு முதியவர் வைரவன் அருகில் வந்து கேட்டார்….

“இல்ல பெரியப்பா…. தாரை, தப்பட்டை, ஜோடிக்கப்பட்ட பாடை எதுவும்
இல்ல…. கல்யாண சாவுக்குத்தான் அதல்லாம் வைக்கணுமாம்….” பொறுமையாக
பதில் சொல்லியபடியே, தான் செய்யவேண்டிய சடங்கான நீர் பந்தல் எடுக்கும்
வேலைகளில் ஆயத்தமானார்….

“எம்மருமவனுக்கு இருக்குற வரை மட்டுமில்ல, இறந்த பிறகும் எந்த மொறையும்
கொறையில்லாம செஞ்சதா இருக்கணும்…” என்று கண்கள் கலங்க சொல்லியபடியே
சம்மந்திபுரத்து சடங்கை தானே முன்னின்று செய்தார்….

உடலை குளிப்பாட்டி, உறவுகள் எல்லாம் துணிகள் போர்த்தியபிறகு மீண்டும்
சடலம் வாசலில் போடப்பட்டு, விளக்கு ஏற்றி உறவுகளின் இறுதி பார்வைக்காக
வைக்கப்பட்டது…. அழுகை சத்தம் விண்ணை பிளந்தது… தொண்டை வற்றியவளாக,
கதரக்கூட திராணி அற்றவளாக செந்திலின் அம்மா விசும்பியபடி
அழுதுகொண்டிருக்கிறாள்….

“வைரவா…. வானம் சனி மூலை கருத்திருச்சு… மழை வரும்போல தெரியுது…
நேரத்தோட அடக்கம் பண்ணிடலாமே?” வேளார்தான் வைரவனின் காதருகே
கிசுகிசுத்தார்…

சனி மூலை கறுத்து, வடமேற்கில் வானம் மின்னிக்கொண்டு இருந்தது… அடைமழை
பெய்வதற்கான அத்தனை கூறுகளும் தென்பட்டது… இனியும் காலம் கடத்தினால்,
இறுதி சடங்கில் சிக்கல்கள் வரும் என்பதால் செந்திலின் உடல் மயானத்திற்கு
எடுத்துசெல்லப்பட்டது…

***

இறப்பு நிகழ்ந்து ஒருவாரமாகியும் இன்னும் வீடே துன்பக்கடலில்
நீந்திக்கொண்டுதான் இருக்கிறது…. அக்கா ஒருபக்கம், மாமா மறுபக்கம் என
வைரவனும் கடலுக்குள் கட்டுண்டு கிடந்தார்… மணிமேகலை தான் உலை வைத்து
சோறு வடித்தாள், கையை இரண்டு முறை சுட்டுக்கொண்டு புளிக்குழம்பும்
வைத்தாள்…

“சாப்புட வாங்க மாமா…” செந்திலின் அப்பாவிடம் பவ்யமாக பேசினாள் மணிமேகலை….

“நீ சாப்புடும்மா…. உங்க அத்தைய சாப்புட சொல்லு, நான் பொறவு
சாப்புடுறேன்…” மதியமும் இதேபோல சொல்லித்தான் சாப்பாட்டை
தவிர்த்தார்… அதனால், அங்கிருந்து விலக மனமில்லாமல் அப்படியே நின்றாள்
மணிமேகலை….

வைரவன்தான் எழுந்து, “மாமா, ஆகுற வேலையை பார்க்கனும்ல… இப்புடியே
இருந்து என்ன ஆவப்போவுது?” கண்கள் கலங்க சொல்லிவிட்டு, மேகலையை பார்த்து,
“நீ சாப்பாட்டை எடுத்து வையிம்மா வர்றோம்” என்றார்…

மின்னலாக ஓடிய மணிமேகலை பதார்த்தங்களை எடுத்து கடைபரப்பி வைக்க தொடங்கினாள்…

மாலையிடப்பட்ட தன் மகனின் புகைப்படத்தை பார்த்தவராக “மறக்குற விஷயமாப்பா
இது?… எதை பார்த்தாலும் அவன் நெனப்புதான் வருது மச்சான்…

எப்புடித்தான் அவனுக்கு தற்கொலை பண்ணிக்குற அளவுக்கு வேகம் வந்துச்சுன்னே
தெரியல…” பிள்ளையின் இழப்பு அப்பாவை இந்த அளவிற்கு வருத்துவது
ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்….

“அதையே புலம்பாதிய மாமா…. பேசப்பேச அந்த நெனப்பு கூடத்தான் வரும்…”
தொண்டையில் இறங்க மறுத்த எச்சிலை சிரமப்பட்டு விழுங்கியபடி பேசினார்
வைரவன்….

“எல்லாரும் உம்மவ வாழ்க்கை போச்சுன்னு கவலைப்படுறாக… ஆனா, ஆம்பளை
கூடத்தான் வாழ்வேன்னு சொன்ன அந்த பயகூட மேகலாவுக்கு கல்யாணம் பண்ணி
வச்சிருந்தா, அப்பதான் அது வாழ்க்கை பாவமாகிருக்கும்… அந்த வகையில தான்
தற்கொலை பண்ணி, உம்மவ வாழ்க்கையை காப்பாத்திட்டான் செந்திலு….”
சத்தமில்லாமல் மாமா சொன்ன இந்த ஆறுதல் யாரை தேற்றுவதற்கு? என்று
புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார் வைரவன்….

“சரி எழுந்திரு மச்சான்… போய் மூஞ்சி கழுவிட்டு வா, எதாவது சாப்டுட்டு
வேளார் வீட்டு வரைக்கும் ஒரு எட்டு போயிட்டு வருவோம்…” மாமா எழுந்து
செல்ல, வைரவனும் தண்ணீர் தொட்டியை நோக்கி நகர்ந்தார்….

கைகள் கொள்ளாத அளவிற்கு நீரை அள்ளி, முகத்தில் தெளித்தார்….

ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில் சாப்பிட்ட சாப்பாட்டில் தான் கலந்த
விஷத்தின் வாடை இன்னும் தன் விரல்களை விட்டு அகலாதது வெறும் பிரம்மைதான் என்று வைரவனால் நம்பமுடியவில்லை…

கண்களில் பெருகிய நீரோடு சோப் போட்டு அந்த வாடையை கழுவ முயன்றார்,
பாவத்தை எங்கு கழுவுவது? என்ற புரியாத சோகத்தோடு….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *