கூத்து மாமாவை சத்தியமாக அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. ‘ஸ்வர்ணபுரா’… எட்டு அடுக்குகளுடன் வட்ட வடிவில் மூன்று பிளாக்குகளுடன் கூடிய பிரமாண்டமான அபார்ட்மென்ட். நான்கு செக்யூரிட்டிகள், இரண்டு பக்க நுழைவாயில். இதற்கு முன்பு மூன்று முறை வந்திருக்கிறேன். கார், டூ வீலர் பார்க்கிங்கே மிக விஸ்தாரமாக இருக்கும். பைக்கை நிறுத்திவிட்டு, பிளாக்கை நெருங்குவதற்குள் கோதுமை நிறத்தில் டைட்டான ஜீன்ஸ், டி- ஷர்ட் போட்ட இரண்டு மூன்று யுவதிகளாவது நம்மைக் கடந்து போய், ஸ்கூட்டியையோ காரையோ எடுப்பார்கள். இந்த முறை அதிர்ஷ்டம் குறைவு. ஒரு பெண்தான் கடந்து சென்றாள்.
நடந்தவாறே செல்போனை எடுத்து, ”முத்து, நான் வந்துட்டேன். எங்கே இருக்கீங்க? கொஞ்சம் சீக்கிரம் வாங்க. அவர் பத்து மணிக்குக் கிளம்பிடுவாராம்” என்றேன். செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி நிமிர்ந்தபோது கவனித்தேன். இரண்டாவது நுழைவாயில் பக்கம் இருந்து நீல நிறச் சீருடையில் அவர் வந்துகொண்டு இருந்தார். பார்த்ததுமே பளிச் எனத் தெரிந்துவிட்டது. முறுக்கிய மீசை, திடகாத்திர உடல், கிடுகிடு உயரம்…
”கூத்து மாமா” என்று அழைத்தபோதே, என் குரல் பத்து வயதுச் சிறுவனாக மாறிவிட்ட உணர்வு. அந்தப் பெயரை அவரும் சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். சட்டென நின்றுவிட்டார். என்னையே சில நொடிகள் பார்த்துவிட்டு அருகே வந்தார்.
”யாரு தம்பி நீ… நம்ம ஊருக்காரனா?”
”ஆமா… மார்கய்யா பேரன்” என்று முடிக்கும் முன்பே…
”அடேய்… சின்னச் செட்டி! ஏமிரா… எட்ல உண்டாவு. வெல்லம் கொண்டு வரேன்னு சொல்லிட்டுப் போய், ஒரு மாசமா வயல் பக்கமே வராதவன்தானே நீ?” என்றவாறு உற்சாகமாக முதுகில் தட்டினார்.
சின்ன வயதில் பல முறை வாங்கிய அதே தட்டல். முதுகு நரம்புகளைச் சுண்டிவிட்டதுபோல் இருந்தது. வயது கூடினாலும், மனிதரின் பலம் குறையவில்லை.
”உன் பேரு… கோபிதானே? அப்பா, அம்மா சௌக்கியமாடா?”
”அப்பா தவறிட்டாரு மாமா. அம்மா மட்டும்தான்.”
”அடடா… அப்பாவுக்கு அப்பவே அடிக்கடி உடம்பு முடியாமப்போகும்ல. சரி, நீ என்ன பண்றே?”
”பத்திரிகை ரிப்போர்ட்டர்.”
”ஓ! இந்த சினிமாக்காரங்களைப் பார்த்துப் பேசற வேலையா? நான் இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. இந்த இடத்துல நிறைய சினிமாக்காரங்க இருக்காங்களாமே. யாருக்குத் தெரியுது. எல்லாருமே செக்கச் செவேல்னு இருக்காங்க. அதுலயும் பொண்ணுங்க எல்லாமே நடிகைங்க மாதிரிதான் துணி போட்டு இருக்காங்க. மத்த மூணு செக்யூரிட்டிகளும் பாம்பே பசங்க. பழகற
துக்குக் கொஞ்ச நாள் போகணும்” என்றார்.
அப்போது, போட்டோகிராஃபர் முத்து உள்ளே நுழைந்து, என் அருகே பைக்கை நிறுத்தினார்.
”கூத்து மாமா… இங்கே ஒருத்தரைப் பார்க்கணும். பேசி முடிச்சுட்டு வரேன். அப்புறம் நாம பேசலாம்” என்றேன்.
”மெதுவா வா… நான் இங்கதான் கிடப்பேன்” என்றார்.
பத்திரிகையாளன் என்றால், சினிமாக்காரர்களோடு மட்டுமே பேசும் வேலை என்று கூத்து மாமாவுக்கு யார் சொன்னார்களோ. இங்கே இதற்கு முன்பு நான் வந்ததெல்லாம் அப்படிப்பட்ட பேட்டிகளுக்குத்தான். ஆனால், இப்போது வந்திருப்பது வேறு ஒருவரைச் சந்திக்க. நாட்டையே உலுக்கி எடுத்த ஒரு ஊழலில் மூளையாகச் செயல்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் மனிதர். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டதால், விஷயத்தைக் கசியவிட்டு, இன்று பல அரசியல் தலைகளை அல்லாடவிடுவதாகச் சொல்லப்படுபவர். ஆனால், இதில் நமது மூளையைவிட பல நுணுக்கமான சிக்கல்கள் இருப்பதால், நிரூபிக்க ஆண்டுகள் பல ஆகலாம். அல்லது, அப்படியே அமுங்கியும் போய்விடலாம். இப்போது இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு சென்டி மீட்டர் புன்னகையும் குறையாமல் பதில் சொல்வார். அதைக் கொண்டுபோய் கம்போஸ் செய்ய வேண்டும்.
ஆறாவது மாடியில் ஒரு ஃப்ளாட்டின் வரவேற்பு அறையில் காத்திருந்தபோது, கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தேன். பாம்பே பசங்க என்று கூத்து மாமா சொன்ன, செக்யூரிட்டிகளில் ஒருவனான ராஜஸ்தான் இளைஞனிடம், இந்தி கற்கும் முயற்சியிலோ அல்லது தமிழ் கற்பிக்கும் முயற்சியிலோ ஈடுபட்டு இருந்தார்.
கொஞ்ச நேரம் யோசித்த பிறகுதான் நினைவுக்கு வருகிறது. கூத்து மாமாவின் உண்மையான பெயர் வெள்ளைச்சாமி. ஊரில் சில பெருசுகளைத் தவிர, எல்லோருமே அவரைக் கூத்து சாமி என்றுதான் அழைப்பார்கள். சிறுவர்களுக்கு கூத்து மாமா. ஊர்க் கூத்துகளில் ராவணன், துரியோதனன் என்று வில்லன் கெட்-அப் போட்டுப் பயமுறுத்துபவர். ஆனாலும் அவரை எல்லா வாண்டுகளுக்கும் பிடிக்கும். காரணம், மனிதர் எப்போதும் வாண்டுப் பட்டாளங்களுடன்தான் இருப்பார்.
கண்ணாமூச்சி ஆடும் இடங்களில் கண்களைப் பொத்துபவராக, ”ஏய் மீனாட்சி கழுத… அந்த புதர் பக்கம் போகாதேனு சொல்றேன்ல. இந்தப் பக்கம் போடி…”
பச்சைக் குதிரையில் வரிசை ஒழுங்குபடுத்துபவராக… ”டேய் சாய்பு, குறுக்கக் குறுக்க வந்து தாண்டுறே… உன் அப்பன் ஆட்டுத் தோலை உரிக்கிற மாதிரி, நான் உன் தோலை உரிக்கப்போறேன்.”
பல்லாங்குழி ஆடும் இடங்களிலும், ”அய்யர் பெத்த அம்சா… ஒரு கல்லை ஒளிச்சா நைஸா… அத பார்த்துப்புட்டான் நைஸா” என்று எச்சரிப்பார்.
எல்லோரையும் சாதி பேரைச் சேர்த்துதான் விளிப்பார். ஆனால், அதில் கொஞ்சம்கூடக் காயம் ஏற்படுத்தும் தோரணை இருக்காது. அவர் வீட்டில் எந்தத் தின்பண்டங்கள் செய்தாலும், அது கிலோ கணக்கில்தான். எல்லோருக்கும் கொடுப்பார். அதுபோல் அவருடன் கூத்து கட்டும் பலருக்கு பல நேரங்களில் அவர் வீட்டில்தான் சாப்பாடு. அவர்களில் பெரும்பாலோர் கூத்தைத் தவிர, வேறு நிரந்த வேலை எதுவும் செய்யாமல் சுற்றுகையில், கூத்து மாமா வயலும் வாழ்வுமாக யாரையும் சாராமல் இருப்பார். அவரது வயலை ஒட்டியுள்ள மோட்டார் ரூம், மற்ற மோட்டார் ரூம்களைப்போல் குறுகலாக இருண்டு இருக்காது. விஸ்தாரமாக இருக்கும். கூத்து ஒத்திகையும் நடக்கும். எங்களின் கலாட்டாவும் நடக்கும். ஒரு முறை அந்த மோட்டார் ரூமில் பொங்கல்வைத்தோம்.
”கூத்து மாமா, மீனாட்சி சொப்பு சாமான் கொண்டுவந்திருக்கா. பொங்கல் வைக்கப்போறாளாம். கொஞ்சம் அரிசி கொடுக்கறியா?”
”அதுக்கென்ன எடுத்துக்கோ… என்ன பொங்கல்?”
”உப்பு பொங்கல்தான்.”
”இனிப்பா சாப்பிடலாம். சக்கரப் பொங்கல் வைங்க.”
”வெல்லம் வேணுமே..?”
”செட்டியாரு இருக்கறப்ப என்ன கவலை? டேய் பயலே… போய் உன் கடையில இருந்து வெல்லம் கொண்டுவாடா” என்றார்.
”சரி மாமா” என்றபடி, நான் உற்சாகமாகக் கடைக்குச் சென்றேன். இதுபோல் அடிக்கடி நான் எடுத்து வருவது உண்டு. அப்பா இருந்தால், கவலையே இல்லை… அள்ளினாலும் பேசாமல் இருப்பார். அம்மா இருந்தால் கஷ்டம். கொஞ்ச நேரம் எதாவது எடுபிடி வேலை செய்த பிறகு, கோரிக்கைவைப்பேன்.
”நீ வந்து நிக்கறப்பவே தெரியும். இதே வேலையாப்போச்சு” என்றபடி கிள்ளிக் கொடுப்பதை வாங்கிச் செல்வேன். அன்று என்ன கோபமோ, யாருடைய கடன் வரவில்லையோ… ”எதையாவது தொட்டே… தோலை உரிச்சுடுவேன். போடா” என்று சொல்லிவிட்டாள்.
வெல்லம் இல்லாமல் போக அவமானமாக இருந்ததால், வீட்டுக்குப் போய்விட்டேன். ரொம்ப நாளைக்கு கூத்து மாமாவின் கண்களில் படாமல் பதுங்கியே இருந்தேன். ஒரு முறை அப்பாவுடன் கடையில் இருந்தபோது, எதையோ வாங்க வந்தார். ”என்னடா சின்னச் செட்டி… இன்னும் வெல்லம் லோடு வரலையா?” என்று கேட்டுச் சிரித்தார்.
கூத்துக்கும் குழந்தைகளுடன் விளையாட்
டுக்கும் மட்டுமல்ல, வீரத்துக்கும் பெயர்போனவர். ஊருக்குள் அடிக்கடி திருட்டு நடந்துகொண்டு இருந்தது. ஒரு நள்ளிரவில் வயல்வெளியில் காவலுக்கு இருந்தார். அங்கே பம்ப் செட்டைத் திருட வந்த நான்கு பேரை, ஒற்றை ஆளாகப் புரட்டி எடுத்தார். அதே நேரம், மக்கள் கூட்டம் கொலை வெறியுடன் கூடியபோது தடுத்தார். ”உடம்புல தெம்பு இருக்குல்ல… அதை உழைக்கறதுக்குப் பயன்படுத்துங்கடா. இந்தா ஆளுக்கு பத்து கிலோ அரிசி. இதுதான் நீங்க உழைக்காம சாப்பிடற கடைசி சோறா இருக்கணும். போங்கடா” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
”கோபி… சார் வர்றார்” என்று தோளைத் தொட்டார் முத்து.
”ஸாரி, முக்கியமான கால். பேசிட்டு வர லேட்டாயிடுச்சு. ஆரம்பிக்கலாமா” என்றார் மந்திரப் புன்னகையுடன்!
அடுத்த வாரத்தில் ஓர் இரவு. ”டேய் கோபி… போய் மாவு வாங்கி வாடா” என்றாள் அம்மா.
என்னைவிட அம்மா இன்றைய நகர வாழ்க்கைக்கு அழகாகப் பழகி இருந்தாள். இப்போதெல்லாம் வீட்டில் எல்லாமே இன்ஸ்டன்ட்தான். கிரைண்டர் இருந்தாலும் அது எப்போதாவதுதான் சுற்றும். ‘அதை வேற அரைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கணும். கடைக்குப் போனோமா, பதினஞ்சு ரூபா கொடுத்தோமா… வாங்கி வந்தோமா’ என்பாள். செல்போனில் மகளிடம் பேசிக்கொண்டே நான்ஸ்டிக் தவ்வாவில் தோசை சுடவும் பழகி இருந்தாள். எல்லாம் செய்துவிட்டு, ”முன்னாடி எல்லாம் எனக்குத் தலைவலிகூட வந்ததில்லே. இப்போ ஷ§கர், பிபின்னு மாத்திரையே சாப்பாடாயிடுச்சு. ஊர்லயே கிடைச்சதைத் தின்னுட்டு இருந்திருக்கலாம்” என்கிறாள்.
கூத்து மாமாவை சந்தித்ததைப்பற்றி அம்மாவிடம் சொன்னபோது, ‘எல்லாம் தலைவிதி’ என்று ஒற்றை வார்த்தையில் ஜீரணித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப்போனது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கூத்து மாமாவே எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டதைப் போல்தானே பேசினார்.
அன்று பேட்டியை முடித்துக்கொண்டு கீழே சென்றதும், ”என்னப்பா, வந்த வேலை முடிஞ்சுதா?” என்று கேட்டார்.
”வாங்க மாமா காபி சாப்பிடுவோம்” என்று அழைத்தேன். ”டூட்டி நேரம் தம்பி. ஒண்ணுக்குப் போனாலே ஓடிப் போய் ஓடி வரணும். அந்த நேரம் பார்த்து கம்பெனியில இருந்து ரவுண்ட்ஸ் வந்தாப்போச்சு” என்று பதறினார்.
”நீங்க எப்படி மாமா இங்கே… மனசுக்குக் கஷ்டமா இருக்கு” என்றபோது, முதுகில் தட்டிச் சிரித்தார்.
”சின்னப் பயல் இல்லியா, அதான். போகப் போகப் பழகிடும். காடு காய்ஞ்சு கட்டாந் தரையாயிடுச்சு. கூத்து நிலமை உலகத்துக்கே தெரியும். காடும் கலையும் சோறு போடாதுன்னு ஆன பிறகு என்ன செய்யறது? காவலுக்கு வந்துட்டேன். பையன் எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை செய்யறான். ஒண்ணைத் தின்னுதான் அடுத்தது. பூச்சியைத் தின்னு தவளை. தவளையைத் தின்னு பாம்பு. உடம்பைத் தின்னு மூளை. இந்த இடம் எனக்கு ரொம்பப் புடிச்சுப்போச்சு தெரியுமா? முதல்ல, பணம் எடுக்கறாங்களே… ஏ.டி.எம் அங்கே போட்டு இருந்தாங்க. இங்கே பாரு எவ்வளவு பெரிய இடம். இது சிமென்ட் தரை கிடையாது. நான் வயல் மாதிரிதான் நினைச்சுக்கறேன். இப்படி வரப்பு மாதிரி ஓரமாதான் நடப்பேன். அந்த காரெல்லாம் மாடுங்க. புல்லட் எல்லாம் ஆடுங்க. என்ன… அதுங்க எல்லாம் வயல் நடுவுல ஓடும். விரட்ட மாட்டேன். சிரிச்சுக்கிட்டே போகட்டும்னு விட்டுடுவேன். அதோ மேலே பாரு எத்தனை கிணறுங்க. எல்லாம் கறுப்புக் கிணறுங்க…”
தண்ணீர் டேங்குகளைச் சுட்டிக் காட்டிய அவரையே நான் பார்க்க… மெள்ள தலையைத் தாழ்த்தி என்னைப் பார்த்து பட் என முதுகில் தட்டிச் சிரித்தார் ”பயப்படாதே சின்னச் செட்டி. நான் சரியாதான் இருக்கேன். சாயங்காலத்துல பசங்க, பொண்ணுங்க எல்லாம் கிரிக்கெட், வலையைக் கட்டிட்டு ஆடுவாங்களே அந்த பந்து விளையாட்டு எல்லாம் ஆடுறாங்க. நானும் பந்து எடுத்துப் போடுவேன். புதுசு இல்லியா… இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் வந்து பாரு. எல்லாப் பசங்களையும் சிநேகம் புடிச்சுடுவேன். நேத்து ஒரு பத்து நிமிஷம் ராவணன், சீதையைக் கோட்டைத் தாண்டி வரச் சொல்வானே… அதை நடிச்சுக் காட்டினேன்” என்றார்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், ”என்ன ஒரு வருத்தம். கலப்பையைப் பிடிச்சுட்டு இருக்கும்போதோ, கூத்து மேடையில இருக்கும்போதோ, தலையைச் சாய்ச்சுடணும்னு முன்னாடி எல்லாம் நினைச்சுப்பேன்” என்றார்.
என் முகவரியை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து, ”நேரம் கிடைக்கறப்ப வீட்டுக்கு வாங்க மாமா” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இன்ஸ்டன்ட் மாவில் செய்த தோசையைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். விடியற்காலை 4 மணிக்கு செல்போன் அழைத்து, அந்த செய்தியைச் சொன்னது. வேகமாகக் கிளம்பினேன். ஸ்வர்ணபுரா வாசலில் போலீஸ் வாகனங்கள், பத்திரிகை கும்பல்.
”பாடியை இப்பதான் கொண்டுபோனாங்க” என்றார் முத்து.
”எப்படி ஆச்சாம்?”
”ராத்திரி 1 மணிக்கு நாலு பேர் உள்ளே நுழைஞ்சு இருக்காங்க. செக்யூரிட்டிங்க பிடிக்கப் போய் இருக்காங்க. வெள்ளைச்சாமி ஒருத்தனை மடக்கி இருக்கார். கத்தியால நாலு இடத்துல குத்தி இருக்கான். ஸ்பாட் அவுட்” என்றார். எட்டிப் பார்த்தேன். கை, கால்களை விரித்த நிலையில் போலீஸால் வரையப்பட்ட கூத்து மாமாவின் உடல் தரையில் கிடந்தது!
– டிசம்பர் 2010