குழாயடியும் குறுகுறுக்கும் நினைவுகளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 3,481 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறக்கம் கலைந்து வெகு நேரமாகியும், ஜன்னலினூடே தெரிந்த அதை, வெறித்துப் பார்த்து புன்முறுவல் பூத்தேன். மின்சாரம் செத்த இரவுகளிலும், காலை, மாலை, எப்போதுமே, அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுப்பேயில்லை. “எதை?” என்று நீங்கள் அறிந்துவிடத் துடிப்பதை என்னால் அனுமானிக்க முடிகிறது. உங்கள் சங்கடத்தைக் கலைத்து ஒரே போடாய் போட்டு உடைத்து விடலாம்தான்.

சற்றே பொறுமை காக்க!

இருளின் திட்டுக்குள்ளும், வெளிச்ச விகசிப்பிலும், காட்சிகள் மின்னலடிக்கும். இதைக் கண் இமைக்காது பார்த்து ரசிப்பதில், என் அலாதி கவனம். அந்தரங்கம் எங்கும் புனிதமில்லைத்தான். மார்புக் கட்டுடன் அரைகுறை ஆடையுடன், நீர்பட்டு பளபளக்கும் இளமேனித் திட்டுக்கள், பெண்பாலர் குளிக்கும் காட்சி, உற்சாகமூட்டும் இரசனைக்குரிய விடயம் தான்.

அதே போன்று, அவர்களைப் பொறுத்த மட்டில், சங்கடமான நிலையும்தான். பட்டுமேனி பிற ஆண்கள் கண்பட்டுவிடக்கூடாது என்பதில், இவர்கள் எச்சரிக்கை உடையவர்கள். கொழும்பு போன்ற நகரச் சூழலில், சாலையோரக் குழாயடிகளில், அங்கங்கள் பளபளக்க நின்று குளிப்பது பழகிப் போன சங்கதி.

மேனி மறைத்தல் என்பதெல்லாம் நாகரீக யுகத்தில் நிராகரிக்கப்பட்டவை. ஒழுக்கம், விழுமியம் என்பதெல்லாம் நாகரீகக் கறையான் அரித்த பழம் புடவைகள் என்றாகிவிட்டது. எங்கும் கவர்ச்சி, எதிலும் விரசம், ஆண்களை வெறிகொள்ளச் செய்யும், ஆபாச நடை உடை, நர்த்தனங்களால் மானபங்க செய்திகள் ஊடகங்களை நிறைக்கின்றன.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் பெண்கள் பேருந்துகளில் நெருங்கி முண்டியடித்துக் கொண்டு, ஆண்களோடு இரண்டறக் கலந்து, வௌவால்களாய் மூச்சுமுட்டும் கெடுபிடியில்தான், பயணிக்க வேண்டுமா? இதைப் பழக்க தோஷம் எனலாமா? எந்த ஒரு காரியமும் பழக்கத்தில் வர, பிரச்சினை, பெரிதாய் தோன்றுகிறது. சாராயத்தை முதலில் குடிக்கும் போதுதான், கசப்பு. பிறகு பழகப் பழக தேனாமிர்தமாகி விடும்.

பஸ் பிரயாணம் எப்பவும் எவருக்கும் சங்கடமானது தான். அதற்காக ஆண், பெண் பேதமின்றி பேருந்துகளில், ஒட்டிக் கொண்டு பிரயாணம் செய்ய வேண்டுமா? உரசற்கலை மன்னர்களின் வக்கிரங்களுக்கு, ஆடைத் தொழிற்சாலை பெண்கள் விலை போவதா? இதில் வேறு, இடம், பொருள், ஏவல் தெரியாமல் கண்ட இடத்திலெல்லாம் நெருக்கக் காதல் இவர்கள் பணி முடித்து இல்லம் திரும்புகையில்,

“என்ன இது! மார்பெல்லாம் இப்படி மோசமாய் கசங்கிப் போயிருக்கிறதே!” என்று எவராவது கேள்விக் கணையா தொடுக்கப் போகிறார்கள்? பிறரின் நடவடிக்கைகளை அறையிலிருந்தவாறு என்னால் துல்லியமாகப் பார்த்து ரசிக்க முடிகிறது. என்னை யாரும் இனங்காணாதவாறு கச்சிதமாக ஜன்னல் கதவுகள் பாதுகாக்கும். உணர்ச்சிகளை கிளர்ந்தெழ வைக்கும் காட்சிகள். இங்கு சென்சாரின்றி அற்புதமாக அரங்கேறும்.

அந்த அதை ஆளுகை புரிகிறவர்கள் பெரும்பாலும் இளவட்ட கதாநாயகிகள் தான். எத்தனை விதவிதமான வித்தியாசமான கால்கள்! பூப்போன்ற மிருதுவான மென்மையான கால்கள். கறுப்பு, வெள்ளை , சிகப்பு, நிறங்களில் மனதை ஈர்க்கும் வழவழப்பான கட்டுமஸ்தான பாதங்கள். பித்த வெடிப்பு கண்ட, இறுகிய தடித்த கால்கள். ஆளை, அச்சுறுத்தும் நீண்டு தடித்த விரல்களைக் கொண்ட அழகான கால்கள்.

பாத இலட்சணங்களை வைத்தே வைத்தீஸ்வரன் பாணியில் படிமக்கவிதை எழுதிவிடலாம். ஜனசந்தடி மிகுந்த கொழும்பு நகர, நெருக்கடி வாழ்வில், எல்லாமே சகஜமாகிப் போன நிலை. எனது சொந்த ஊரான, நாவல்நகரின் இயற்கை சூழலை எண்ணும் போது, நெஞ்சு இனிக்கிறது. அந்த இயற்கை எழிலை எத்தனை முறை பார்த்தாலும் ஆன்மா விகர்சிக்கும். அந்த வனப்புகளை பார்த்துப் பரவசமடைய இரு விழிகள் போதாது என்ற நினைவே மேலோங்கும்.

உத்தியோக நிமித்தமாக கொழும்பு வந்து இந்த சிறிய அறையில் தங்கி, வெப்பத்தில் புழுங்கி, வாசம் புரிவது சங்கடத்திற்கு உரியதுதான். அந்த அது, மட்டும் இல்லாதிருந்தால், உற்சாகம் இழந்திருப்பேன். இங்கு எங்கு பார்த்தாலும் இயந்திரத் தனத்தின் வேகமான மனித சுழற்சி. நகர மேனாமினுக்கி போலி வாழ்க்கை . எதனையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை . அதுசரி மறந்து தான் போனேன். அந்த அதை, அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள். நீட்டிக் கொண்டு போகாமல் முடிச்சவிழ்க்க விழைகிறேன்.

எனது அறைக்கு நேர் எதிரே எழுந்தருளியிருக்கும் நகர சபைப் பைப்படியைத்தான், பூடகமாக அது என நாமமிட்டேன். அங்கென்ன உலகின் பேரதிசயம் கொட்டிக் கிடக்கிறதா? கேள்வி நியாயமானதுதான். அப்படி எதுவும் இல்லை. தண்ணீருக்குப் பதிலாக பன்னீர் கொட்டும் அற்புதம் நிகழ்கிறதா? ஹு….ம், ஹு…..ம், அதுவுமில்லை . அப்படியென்றால் ஏனிந்த குழாயடி விரிவுரை? விஷயமே அங்குதான் இருக்கிறது. இரசக்குரிய நிகழ்வுகள் இனி மேல்தான் வரப்போகிறது.

மீண்டும் பொறுமை காக்க!

குழாயைத் திருகியதும் குபு, குபுவென நீர் வந்து பாயும். சில நேரங்களில் அதன் கழுத்து உடைக்கப்பட்டு, நீர்த்தடைப் பட்டு, வெறிச்சோடிப் போயிருக்கும். என் கற்பனை ஊற்று சுரக்க இந்தக் குழாயடிதான் காரணமாக அமைகிறது. ஓய்வாக இருக்கும் பொழுது, அது கவிதை எழுதும் உந்துதலை எனக்களிக்கிறது.

ஓ… கவிஞனா? அப்ப இது வித்தியாசமான கேஸ்தான்! என நீங்கள் தீர்மானித்துவிடவேண்டாம். மன உளைச்சல்களை வடிகட்டி கவிதையாக்கிவிடுகிறேன் நான். அது பிரமாதமாக இல்லாது இருந்த போதும், ஊடகங்களில் வெளிவந்து உயிர்ப்பு பெறுகிறது.

நான் கவிஞனா? என்பது குறித்து, என்னுள் தீர்க்கமான நிர்ணயம் எதுவுமில்லை. அப்படி என்னை பிறர் அழைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்துவிட இயலும்? எழுதுவதற்கு அமைதியான சூழலும், உந்தும் மனமும் வேண்டும் என்பார்கள். சிலருக்கு பேரிரைச்சலிலும், சிருஷ்டி சாத்தியம். தகழி என்ற உலகப் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், தன் மனைவி காத்தம்மாவின் கைகளினால் நீராகாரம் வாங்கி அருந்திவிட்டு நீண்ட நேரம் எழுதிக் கொண்டே இருப்பாராம். அவருக்கு மனைவியின் கைப்பட்ட நீர், தீர்த்தமாகவோ, அல்லது தேவர் அருந்தும் சோமபானமாகவோ இருந்திருக்கக்கூடும். அந்தத் தீர்த்தத்தின் மகிமையினால் தான், செம்மீன், கயிறு, தோட்டியின் மகன் போன்ற ஒப்பற்ற நாவல்களையெல்லாம் தகழி எழுதிக் குவித்தாரோ? எங்கள் பாரதி மட்டும் எவ்வகையில் குறைச்சல்?

பாட்டுக் கலந்திடவே
அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் – எங்கள்
கூட்டுக் களிப்பினிலே
கவிதைகள்
கொண்டு தர வேண்டும்!

என்று காதல் வயப்பட்டு கசிந்து உருகினான். பாரதிக்குத்தான், எத்தனை எளிமையான எதிர்பார்ப்பு.

அது ஒரு சோர்ந்து போன விடியற் காலைப் பொழுது. என் கவிதைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும், தெருக் குழாயடியை பிரியத்தோடு பார்த்தேன். மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. குழாயிலிருந்து சொட்டு சொட்டாய் நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த காகமொன்று, பைப்படி சீமந்து கட்டில் வந்தமர்ந்தது. கழுத்தை வளைத்து சுற்றுச்சூழலை நோட்டமிட்டபடி, கா, காவென்று குரல் எழுப்பியது. படியில் தேங்கி நின்ற நீரை, கூரிய அலகுகளால் மொண்டு குடித்தது. அதற்கு உற்சாகம் பிறந்திருக்க வேண்டும். பக்கவாட்டில் திரும்பி, உடலசைத்து தத்தி நடந்து, தேங்கி நின்ற நீர்விளிம்பில் சிறகு தாழ்த்தி, படபடவெனக் குளியல் நடத்தியது.

காகம் தினமும் குளிப்பதனால் தானோ அதன் மேனியும், நிறமும் துல்லியமாய் பளிச்சிடுகிறது. அடுக்கி வைத்த பிட்டுத் துண்டுகளாய் அடுத்தடுத்து நெருக்குதலாய் சிறுசிறு வீடுகள். பின்புறமாக ஒதுக்கத்திலிருக்கும் எனது அறை, சந்தடியும் பேச்சொலியும் சன்னமாக எப்போதும் கேட்டவண்ணமிருக்கும். ஒவ்வொரு இடுமுடுக்குக்குள்ளும் குருவிக் கூடு போன்ற சின்னச் சின்ன இல்லங்கள்.

நகரின் குடியிருப்பு நெருக்குதல்களை பறைசாற்றிக் கொண்டேயிருக்கும். தண்ணீர்த்தட்டுப்பாடு, மலசலக்கூட நெருக்கடி, அடிக்கடி வெடிக்கும் சண்டை, இத்தனை களேபாரத்திற்குள்ளும்தான், குடித்தனம், குடும்பம், திருமணம், மரணம் எல்லாம். இங்கு மூலை முடுக்குகளுக்கெல்லாம், காரணப் பெயர்கள் உண்டு. ஜாவாத் தோட்டம், பாய்தோட்டம், மரிக்கார் தோட்டம் என நாமமிட்டு அழைப்பார்கள். தோட்டத்திற்கு தோட்டம் சண்டியர்கள் இருப்பார்கள். எந்தப் பிரச்சினைகள் நிகழ்ந்தாலும், இவர்களே ஹீரோக்களாக முன் வந்து காரிய மாற்றுவார்கள். தோட்டமென்று இங்கு இடுகுறியிடுவது சற்றும் பொருத்தமில்லை. இங்கெல்லாம் தோட்டமும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது. இடிபாடுகள் நிறைந்த முடுக்கு ஜீவிதங்கள் தான் உண்டு. இயற்கைச் சூழலில் அமைந்த தோட்டங்களை கிராமங்களில் கண்ணாரக் கண்டு களிக்கலாம். கொழும்பு நகரின் கொரியாக்களில், பரபரப்பு நெருக்கித் தள்ளும் குடியிருப்புகளும், மிகுந்த ஜனசந்தடியுமே, காணப்படும். இங்கு உறவு, பிரச்சினை, காதல், சண்டை , வன்முறை எல்லாமே பழகிப் போன ஜீவித நியாயங்கள்.

பழக்கதோஷம் என்பது சூழலைப் பொறுத்தது மட்டுமல்ல. அட்டையைப் போல் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. இங்கு ஒருவித சேரிக் கலாசாரமே ஆட்சி செய்யும். இதுவே சாமானிய மக்களின் வாழ்வும், இருப்புமாக பரிமாணம் பெற்றுள்ளது. எனது அறைக்கு முன்புறத்தில் உள்ள இந்தக் குழாயடிப் பைப், குடியிருப்பாளருக்கு நிறையவே சேவை செய்கிறது என்ற வகையில், நகர சபையினரைப் புகழலாம். ஆனால், சில நேரங்களில் பைப்பை உடைத்துப் போட்டுவிட்டு, நீருக்குத் திண்டாடி நகர சபையை கெட்ட வார்த்தைகளால் தூஷிப்பவரும் இல்லாமலில்லை.

குளிப்பது, நீர் அள்ளுவது, துணி துவைப்பது, பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வது போன்ற கிரியைகளால், திருவாளர் பைப், எப்போதும் பிஸி. இந்தச் சந்தடியில் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள, எனது அறை ஒரு வரப்பிரசாதம் எனலாம். வரிசையாக நிற்கும் வீடுகளைத் தள்ளி, ஒரு ஓரத்தில் அமைந்திருப்பதால், பெரிய சங்கடங்கள் ஏதுமில்லை . உள், வெளி ஓசைகளைக் கேட்டவாறு, கவிதை எழுதுவது, சுகமாக இருக்கும்.

அறையிலிருந்து பார்க்கும் போது எல்லா நிகழ்வுகளும் துல்லியமாகத் தெரியும். இளம் பெண்கள் குடங்களில் தண்ணீர் ஏந்தி, வித்தியாசமாக இடுப்பை வளைத்து, பிருஷ்டம் குலுங்க, தத்தித் தத்தி நடந்து செல்வது ரசனைக்குரிய விடயம். மூக்குத்தி மின்ன, ஒரு கறுப்பு நிற தேவதை, குழாயடிக்கு அடிக்கடி வந்து போவது வழக்கம். அவள் கண்களில் மின்னும் காந்த சக்தியினால், எனது கவிதைகளுக்கு சிறகு முளைக்கும். நீராடும் பொழுதுகளில், அவள் மேனி வனப்பில் சித்தம் உருகிப் போவேன்.

பல சந்தர்ப்பங்களில் வாஞ்சை கலந்த பார்வை வீச்சுக்களை பிரியத்துடன் பரிமாறிக் கொள்வோம். அருகில் நின்று பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டாதா? என ஏங்கினேன். ஒரு நாள் அவள் நீரையள்ளி இடுப்பில் வைக்கும் போது கைதவறி மண்குடம் கீழே விழுந்து விட, சுக்கு நூறாய் உடைந்துவிட்டது. அந்நிலையில் அவளது ஏமாற்றத்தையும், அதிருப்தியான முக பாவத்தையும் பார்த்து அவள்பால் இரக்கம் கொண்டேன். நல்ல வேளை குழாயடியில் யாரும் இருக்க வில்லை. மின்னலாய் ஒரு யோசனை மூளையில் படர்ந்தது.

அறையில் கேட்பாரற்றுக் கிடந்த எவர்சில்வர் குடமொன்றினை எடுத்து, அவள் கையில் கொடுத்தேன். முதலில் நாணம் மேவ மறுத்துவிட்டு. பின்னர் அதைப் பெற்றுக் கொண்டாள். அந்த விழிகளுக்குத் தான் எத்தனை ஈர்ப்புச் சக்தி. நன்றி கூறி, பிருஷ்டம் குலுங்க நடந்து சென்றாள். அந்த மூக்குத்தி தேவதை பற்றிய தகவல்கடை அறிய பெரிதும் ஆவலுற்றேன்.

அவளைப் பற்றிய நினைவுகள் அலை ஓசையாக ஆர்ப்பரித்தவண்ணமிருந்தன. நான்காவது வீட்டுத் தொடரில் அவள் வாசம் செய்வதாகவும், மிக வறிய சூழலில் வாழ்வதாகவும், இரு பிள்ளைகளுக்குத் தாய் என்றும், கணவன் அவளை விட்டுப் போய், மூன்றாண்டுகள் ஆகிவிட்டதாகவும் தற்போது பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொண்டேன்.

காலைக் கருக்கலில் விடியலின் விகசிப்பு மண்ணில் கவியுமுன் – நாள்தோறும் விடிய ஐந்து மணிக்கு குழாயடியில், அவள் காட்சி தருவாள். நாளடைவில் பார்வை பரிமாறல்களின் பின், கடிதங்களை கைமாறிக் கொண்டோம். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நேசித்தோம். அடிக்கடி ஏற்படும் பொருளாதாரக் கஷ்டங்களுக்காய் நான் அவளுக்கு உதவி வந்தேன். நமக்குள் இறுகிப் போன வாஞ்சையும், காதலும் பிறர் கண்ணுக்குத் தெரியாதவாறு, சூட்சுமமாய் மறைத்து வந்தோம்.

அவளை ஒரு முறை என் அறைக்கு வருமாறு கனிவுடன் அழைத்தேன். பதிலேதும் கூறாமல் புன்னகை சிந்தி மறைந்துவிட்டாள். வருவாளா? வர மாட்டாளா? என்ற ஏக்கம் மனதிற்குள் நெருடலாயிற்று. அன்று கிழக்கு வெளிப்பதற்கு

முன், அதிகாலையில் சந்தோஷித்த முகத்துடன் காட்சி தந்தாள். கப்பியிருந்த விடியலிருளை மெல்லக் கலைத்துவிடுமாற் போல, சிறு தூறலும், லேசான மழையும் வீசவாரம்பித்தது. நான் அதிசயத்து மலைத்துப் போய் நின்றேன். வெட்கம் கவிய தலை குனிந்தவாறு தேவதைக் கவர்ச்சியுடன் என்னருகில் வந்து நின்றாள்.

என் தேகாந்திரமெல்லாம் மகிழ்ச்சிக் குவியலில் திளைத்துச் சிலிர்த்தது. குழாயடி ஓய்ந்து போயிருந்தது. விடிகாலைக் குளிர் காற்று உடலுக்கு இதமளித்தது. சேவலொன்று பெருங்குரலெடுத்து கூவித் தொலைத்தது. இருவரும் நெருக்கமான சுகத்தழுவலில் காலம் மறந்து, ஆன்மா களித்து குதூகலித்தோம் அனுபவ உலகின் ஆழங்களைத் தழுவி வெப்ப மூச்சுக்களைப் பரிமாறினோம்.

மூன்று நாட்களாக என் அன்பிற்குரியவள் குழாயடிப்பக்கமே வராமல் போனது, என்னுள் ஆச்சரிய அதிர்வுகளை எழுப்பின. நமது தொடர்பு பற்றி யாரும் அறிந்து ரகளைக்கு வரப் போகிறார்களா? அல்லது அவளுக்கு ஏதும் திடீர் சுகயீனமா?

நெஞ்சுக்குள் ஆதங்கம் பூதாகாரமாய் எழுந்தது. அவளது நினைவுகளை, எவ்வளவு முயன்றும் தவிர்க்க இயலாமல் இருந்தது. நெஞ்சு இனம் புரியாத நெருடலாய் இறுகிக் கனத்தது. அந்த எழில் பிம்பம் அடிக்கடி வந்து நினைவுகளை வருடியது. எட்டாமல் போய்விட்ட ஒன்றுக்காய், மனம் வெறுமையில் கிடந்து தவித்தது.

அவளுக்குப் பதிலாக குழாயடிக்கு பாட்டி, நீரள்ள வந்தாள். அவளைப் பற்றிய விபரங்களை பாட்டியிடம் சிநேகபூர்வமாகக் கேட்டறிந்தேன். ஆச்சி சொன்ன தகவல்கள் அதிர்ச்சி தருவனவாய் இருந்தன. நேற்று முன்தினம் நீண்டகால இடைவெளிக்குப் பின் அவளது கணவன் வந்தானாம். இருவரும் சமாதானமாகி பிள்ளைகளோடு நேற்று ஊருக்குப் போய் விட்டார்களாம். மீண்டும் இருப்புக்கு இங்கு வரும் சாத்தியம் இல்லையாம். இவ்வளவு நேசமாய் பழகி, என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இப்படிப் பறந்து போய் விட்டாளே! என்று துடியாய் துடித்து நின்றேன் நான். பெண்களின் நேசமெல்லாம், புல் இதழ் பனித்துளிதானா? கேள்விக் குறியாய் அதிர்ந்து நின்றேன். குழாயடி வெறுமை தட்டிய மயானமாய் காட்சி தந்தது.

அலுவலகம் விட்டு ஆயாசமாய் அறைக்குத் திரும்புகிறேன். பக்கத்து வீட்டுச் சிறுவன் கடிதமொன்றை நீட்டிவிட்டு விரைகிறான். கடிதம் என் அன்பிற்குரியவளிடமிருந்தா? ஆர்வத்தோடு பிரித்துப் படிக்கிறேன். இல்லை !

அன்பான கணவருக்கு,

எங்களை அடியோடு மறந்து தான் போனீர்களா? நீங்கள் ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் சென்றுவிட்டன. கொழும்பு வாழ்க்கை இப்போது உங்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை தருவதாய் இருக்கும். இங்கு சின்ன மகனுக்கு தொடர்ந்து கடுமையான காய்ச்சல். மருந்துக்கு கொஞ்சமும் குணமேயில்லை. இரவெல்லாம் உங்களைத் தேடி அரட்டுகிறான். உடன் புறப்பட்டு வரவும். அவசரம்.

இப்படிக்கு உங்கள் மனைவி.

துயரம் செறிந்த மனதுடன் ஊருக்குப் போக மினி பஸ்ஸில் இடம்பிடித்து அமர்கிறேன். மனைவியும் பிள்ளைகளும், இப்போது சோக பிம்பங்களாக நெஞ்சை அழுத்துகிறார்கள். பஸ் புறப்படுகிறது. கொழும்பு நகரின் பேய் வெப்பம் ஏ.ஸீக்குள் பெரிதாய் உறைக்கவில்லை.

– மல்லிகை, ஒக்டோபர் 2003 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

கடந்த வருடத்தில் மார்கழி 2002 முதல், கார்த்திகை 2003 வரை, 40 கதைகளை, மல்லிகை பிரசுரித்துள்ளது. மு. பஷீரின் குழாயடியும், குறுகுறுக்கும் நினைவுகளும் கதை மனதை ஈர்க்கும் எழுத்தோட்டம், எதிர்பாராத முடிவு என்பன கதையின் வெற்றியை நிலைநிறுத்துகின்றன. மு.பஷீரின் இக்கதை இவ்வருடம் வெளியான படைப்புகளில் முதன்மையாக நிற்கிறது. ஓராண்டு மல்லிகைச் சிறுகதைகள் ஆய்வு – பிரகலாத ஆனந்த் மல்லிகை ஆண்டு மலர், 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *