குழந்தையின் உயிர் – தங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 6,819 
 
 

ரவியும் பூர்ணிமாவும் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டு சம்சார பந்தத்தில் இணைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி விரைவிலேயே ஒரு குழந்தைச் செல்வமும் கிடைத்தது. குழந்தைக்கு தனுஷ் என்று பெயர் வைத்து சீராட்டிப் பாராட்டி கொஞ்சுவது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது.

அதன் மேல் அதிக பாசம் வைத்ததால் அதற்கு சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் கலவரமும் பதற்றமும் அடைந்தனர். அடிக்கடி வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். வைத்தியரும் பார்த்து விட்டு பயப்பட ஒன்றுமில்லை என்று கூறுவார். இருந்தாலும் குழந்தை அழும்போதெல்லாம் அவர்கள் கலக்கமடைந்தனர்.

இப்படி ஒரு ஐந்து ஆறு மாதம் கழிந்தது. ரவி வேலைக்குப் போனபின் பூர்ணிமா வீட்டு வேலைகளையும் செய்து குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். வீட்டில் ரவியும் இல்லாத நிலையில் குழந்தை சிறு உபாதை ஏற்பட்டு அழும் போதும் பூர்ணிமாவுக்கு என்ன செய்வதென்று குழப்பம் ஏற்படும். அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களிடம் தன் பிரச்சினைகளைக் கூறினாள். அவர்களும் வழக்கம் போல் குழந்தையின் பிறந்த நேரம் நல்லதா கெட்டதா என ஒரு ஜோதிடரிடம் காட்டி கேட்டுவிடுவது நல்லதென ஆலோசனை கூறினார்கள்.

பூர்ணிமா ரவியை நச்சரிக்க, குழந்தை விடயம் என்பதால் வேறு வழியின்றி ஜோதிடரிடம் அழைத்துச் சென்றான். ஜோதிடரும் அப்பியாசக் கொப்பியில் நவக்கிரக படம் வரைந்து கிரக நிலையை பார்த்து குறிப்பை எழுதி கிரக நிலை போதாது என்று கூறி நேர்த்திக்கடன் வைத்து விநாயகர் கோயிலுக்குச் சென்று ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் விரதமிருந்து 108 வாரங்களுக்கு பூஜை செய்ய சொல்லி விட்டார்.

ரவிக்கு அடிக்கடி லீவு எடுக்க முடியாததால் அவன் முதல் நாள் மட்டுமே பூர்ணிமாவுடன் கோயிலுக்குச் சென்றான். அடுத்தடுத்த நாட்களில் பூர்ணிமா மட்டுமே தனியாக குழந்தையையும் தூக்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றாள். அங்கே கோயிலில் ஒரு நிழலான இடத்தில் துணி விரித்து குழந்தையைக் கிடத்திவிட்டு தனது நேர்த்திக் கடன் மற்றும் பூஜை வேலைகளைக் கவனித்தாள். குழந்தை தனுசும் அதிகம் அடம்பிடிக்காமல் அமைதியாக இருந்து ஒத்துழைத்ததால் பூர்ணிமாவுக்கு தன் வேலைகளை இடையூறின்றி செய்யக் கூடியதாக இருந்தது.
இப்படிச் சில வாரங்கள் பூர்ணிமா எதுவித தடங்களுமின்றி குழந்தையை எடுத்துச் சென்று கோயிலில் கிடத்திவிட்டு தன் வேலைகளை செவ்வனே செய்து வந்தாள். ஒருநாள் வெள்ளிக்கிழமையன்று பூர்ணிமா வழமை போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்று குழந்தையை உரிய இடத்தில் கிடத்திவிட்டு தன் காரியத்தில் கவனமாக இருந்தாள்.

அப்போது திடீரென குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. பூர்ணிமா திடுக்கிட்டு என்னவென்று பார்த்தாள். ஒரு திருடன் குழந்தையின் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கச் சங்கிலியை இறுக்கிப் பிடித்து அறுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. பூர்ணிமாவும் அவலறினாள். அதைக் கேட்ட ஒரு சிலர் விரைந்து ஓடி வந்தனர். அதற்கிடையில் திருடன் பாய்ந்து ஓடி சங்கிலியுடன் மறைந்து விட்டான். குழந்தையின் அருகில் வந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சற்றுக் காணப்பட்டது. கழுத்தில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

பூர்ணிமா கடுமையான அதிர்ச்சிக்குள்ளானாள். ஆபத்துக்கு உதவ வந்த இரு பெண்களுடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். பூர்ணிமா ஒருவாறு குழந்தை காப்பாற்றப்பட்டாலும் குழந்தை மரணத்தின் மிக அருகில் இருந்து தப்பியிருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு பூர்ணிமாவுக்கு நீண்ட நாட்கள் பிடித்தன.

பெற்றோர் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த தங்கமாலை அணிவித்து அழகுபார்க்கும் போது அதனால் தேடி வரும் ஆபத்தை சிந்தித்துப் பார்ப்பதில்லை. இன்று தங்கம் விற்கும் விலையில் பெரியோரே தங்கம் அணிவது ஆபத்தானது. விலைமதிப்புள்ள தங்கம் பறிபோனாலும் உயிருக்கு விலை மதிப்புண்டா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *