கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 1,514 
 

புக்ககம் போன பெண், முதல்முறையாகப் பிறந்தகம் வருவதை, மறுவீடு என்று குறிப்பிட்டு வழங்குவது நமது சம்பிரதாயங்களில் ஒன்று.

அந்தச் சம்பிரதாயப்படி இன்று சுந்தா பிறந்தகம் வந்திருக்கிறாள். கமலா அவளுடைய பிராண சிநேகிதை. அவளுடைய புக்கக அனுபவங்களை அறிய ஆவலுள்ளவளாய் சுந்தாவைக் காண்பதற்காக வந்தாள்.

சாயங்காலம் நாலுமணி. முதல் நாளிரவு துக்கமின்றி வந்த பிரயாண அலுப்பால் சுந்தா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். ஆவலோடு வந்த கமலா அவள் தூங்குவதைக் கண்டாள். ‘தூக்கத்தைக் கலைத்தா அவளை எழுப்புவது?’ என்று எண்ணி, பக்கத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள். வியப்போடு அவளையே உற்றுப் பார்த்தாள்.

கமலாவும் சுந்தாவும் பத்தாவது வகுப்பில் சேர்ந்து படித்த மாணவிகள். கமலா இப்போது ‘இண்டர்மீடியட்’ வகுப்பு மாணவி. சுந்தா கலியாணம் ஆகிப் புக்ககம் சென்றாள். இப்போதுதான் வந்தாள். இருவரும் பிரிந்து மூன்றே மாதமாகியிருந்தும் அது ஒரு யுகம்போல் இருந்தது கமலாவுக்கு. சுந்தா வந்ததைக் கேட்டதும் ஓடிவந்தாள். ஆனால் சுந்தா இப்போது பழைய கலாசாலை மாணவிபோல இல்லை! ‘பட்டணத்து சுந்தா’வுமல்ல. அதாவது, முன்பு இருந்த கோணல் வகிடு இல்லை. ‘மாம்பழக் கொசுவம்’ வைத்த ‘வாயில்’ புடவையைக் காணோம். பட்டுப்புடவை ஒன்றைப் புடவையாக உடுத்துக்கொண்டிருந்தாள். கைக் கெடியாரத்தைக்கூடக் காணவில்லை! தன்னோடு படித்த சுந்தாதானா இவள்! ஐய!

அரைமணி சென்று மெதுவாகக் கண்விழித்தாள் சுந்தா. முகமலர்ச்சியோடு எழுந்து கமலாவிடம் வந்து, “எப்போ வந்தே கமலா! ரொம்ப நாழியாச்சோ?” என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் பெஞ்சியில் உட்கார்ந்தார்கள். “என்ன சுந்தா, ‘அம்மாமி’யாய் விட்டாயாக்கும்! உன் கல்யாணத்திலேயே நான் அறிந்துகொண்டேன். இருந்தாலும் மூன்று மாசத்துக்குள் இப்படி மாறிவிட வேண்டாம்!

சுந்தா பதில் சொல்லவில்லை. கமலாவின் தோளில் கை கொடுத்துக்கொண்டு, “அசட்டுக் கமலாவா நீ! மாறாமல் எப்படி வாழ்க்கையைக் கடப்பதம்மா?” என்று சிரித்தாள் ஆச்சரியம்! சுந்தாவின் கண்களிலிருந்து பிரேமையின் அறிகுறியாக இரண்டே துளி நீர் முத்துப்போல் உதிர்ந்தன.

“எழுதப் படிக்கவாவது தெரியுமா… அதுவும் மறந்து போச்சோ?” என்று நீட்டி முழக்கிப் பரிகாசம் செய்தாள்.

“அடி அதிகப்பிரசங்கி, சத்தம் போடாதே! அடுத்த ரூமில் அவர் தூங்குகிறார்” என்றாள்.

“அடே! அகத்துக்காரரும் வந்திருக்கிறாரா? ஆமாம், புதுப்பெண்டாட்டியல்லவா? பிரிய மனம்…! வந்திருக்கிறார். அது கிடக்கு. உன் புக்கக நிலை உன் தன்மைக்கு ஒத்திருக்கிறதா? பொய் சொல்லாமல் சொல்லு.”

“ஒவ்வாமலென்ன? ஆனால் பயந்துகொண்டேதான் போனேன் அங்கே போனதும் ஒன்றும் சிரமமாக இல்லை. நீ கவலைப்பட்டாயோ, கமலா?” என்று அருமையாகக் கேட்டாள்.

“சந்தேகமில்லாமல். புத்தகப் புழுவாக சதா படித்துக்கொண்டு கிடப்பாயே – என்ன செய்கிறாயோ என்று ஓயாத நினைப்பு. உன் வழக்கத்திற்கு பொழுதும் அனுமதியும் கிடைக்கிறதோ?”

“கமலா, சொல்லுகிறேன் கேள். ஆணோ பெண்ணோ ஒரே ரீதியாக மாறுதலில்லாமல் வாழ நினைப்பது நடக்காத காரியம். மாறுதல்தான் நியதி. என் மாறுதல் இப்போது சத்தியமாக எனக்குத் திருப்திதான்.”

அவளை நெருங்கித் தணிந்த குரலில், “உன் அகத்துக்காரர் எப்படி?” என்று கேட்டாள் கமலா.

சுந்தா தலை குனிந்தாள். உடனே நிமிர்ந்து “அவரைப் பார்த்தால் உனக்கு எப்படித் தோன்றுகிறது?” என்று கேட்டாள். –

“வெளிப்பார்வையில் என்ன தெரியும் சுந்தா?”

“அப்படியில்லை. நீ மறைக்கிறாய். வெளிப்பார்வையில் – ஒரே தடவையில்தான் நான் அவரைக் கண்டுபிடித்தேன். வாழ்க்கையில் எனக்கு ஒருவிதச் சிரமும் தோற்றுவிக்காமல் என்னை நடத்துவாரென்பதைக் கண்டுகொண்டேன். அவ்வளவு போதும் எனக்கு. நான் அதிக ஆசைப்படவில்லை, படவும் மாட்டேன்!”

“என்னமோம்மா, நீ ரொம்பச் சுலபமாக உன்னைத் திருத்திக்கொண்டுவிட்டாய். என்னால் அப்படி முடியாதுபோல எனக்குத் தோன்றுகிறது. அதனாலேயே இந்த வருஷம் கலியாணம் நின்று போய்விட்டது.”

“ஏன்?” என்று சுந்தா ஆவலுடன் கேட்டாள்.

“மாயவரத்தருகில் கதிராமங்கலமாமே, அந்தக் கிராமத்திலே வரன்; மிராசுதாராம். பெரிய குடும்பம். கலியாணப்பிள்ளை தான் மூத்தது. இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, என் மனச்சாட்சிக்கு மாறாக இருக்கும்போல இருந்தது, எல்லாம் அவர்களைப் பார்த்தால். வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். அப்பாவுக்குக்கூட என்மேல் கோபம்தான்.”

“மாப்பிள்ளை படித்தவரா?”

“ஆமாம், அதுக்கென்ன. பி.ஏ. இந்த நாளில் ரொம்ப அதிசயமா! அந்தப் பிள்ளையிடம் படிச்ச அறிகுறியே காணோம். ‘படித்த முட்டாள்’ என்பார்களே.”

சுந்தா குறுக்கிட்டாள். “இதோ பார் கமலா, நான் சொல்லுகிறேனே என்று ஆயாசப்படாதே! உன்னை எனக்குத் தெரியும். உன் கனவு நாவலாக எழுதலாமே தவிர, வாழ்க்கையில் சுலபமாக லபித்துவிடாது! படித்தவர் ஒருநாளும் நியாயத்திலிருந்து கூடியமட்டும் பிரளமாட்டார். முக்கியமாக நாம், பொறுமைசாலியா என்பதை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். முதல் முதலாக என்னைப் பார்க்க வந்தாரே…”

“ஊம், சொல்லடியம்மா இப்போதாவது! அப்போதான் மாட்டேனென்று பிகு பண்ணிக்கொண்டாய்..”

“சமயம் வரும்போது – தானே சொல்லிவிடுகிறேன். திருச்சியிலே என் இளைய சித்தப்பாவோடு படித்தவராம் இவர். அவர்தான் இந்த வரனை நிச்சயம் செய்தார் பிடிவாதமாக. இப்போதான் தெரிகிறது எனக்கு, என்பேரில் சித்தப்பா வைத்திருக்கும் வாஞ்சை. பிள்ளையுடன் பெண் பார்க்க மாமியாரும் வந்ததுதான் உனக்குத் தெரியுமே! – நாங்கள் ஒரே பார்வையில் ஒருவரையொருவர்…”

“கண்டதும் காதலாக்கும்!”

“சை – பேத்தாதே! அதெல்லாம் கதையில்தான் – நிமிஷ நேரத்தில் நாங்கள் ஒருவரை மற்றவர் கண்டுகொண்டோம். பாவம் என் மாமியார் பயப்பட்டாளாம். ‘படித்த பெண் வீட்டு வேலை செய்யாது! திமிர்தண்டியாகத் திரியும்’ என்றெல்லாம் ஆட்சேபித்து மறுத்தாளாம்! அவள் மறுத்ததையும், இவர் அவளைச் . சமாதானப்படுத்தி இசையச் செய்ததையும் ஒரு கதைபோல சுவாரஸ்யமாகச் சொல்லுவார் இரவுகளில். வாஸ்தவமாக அவர் பேசத் தொடங்கிவிட்டால் தூக்கமும் வராது; நேரம் போவதும் தெரியாது. அவ்வளவு நயமான புத்தி போதனை! மாமியாரின் பயமும் மறைந்தது. என் நிலையும் தாழவில்லை யென்றே எனக்குத் தோன்றும்படி நடந்துகொள்ளுகிறார்.”

“ஆமாம், ‘வீட்டு வேலை’ வகையறா?”

இதைச் சொன்னதும் சுந்தா கலகலவென்று சிரித்தாள்.

“என்னடி சிரிக்கிறாய்? சொன்னால் நானும் சேர்ந்து சிரிப்பேன்!”

“இதென்ன கேள்வி கமலா? ஆமாம். வேலை செய்யாமல் முடியுமா? தவிர மாமியாரும் நாத்தனார்கள் இருவரும் பாய்ந்து பாய்ந்து காரியம் செய்யும்போது நானென்ன ஜடமா! எனக்கு வெட்கமாயிராதா? இல்லை, படித்துக்கொண்டு உட்காருவதா? நாத்தனார்கள் இருவரும் காரியத்திலும், கிராமிய விளையாட்டிலும் கெட்டிக்காரிகள். அவர்களோடு சேர்ந்து நானும் செய்வேன். படிப்பெல்லாம் ராத்திரியில்,

“ஆனால் அவர்களுக்குப் படிப்பேயில்லையா?”

“சாதாரணமாகத் தெரியும், கிராமத்து மனப்பான்மை. அடக்கம் ஜாஸ்தி. அகம்பாவம் கிடையாது. முக்கியமாக, பம்பரமாக எவ்வளவு வேலையானாலும் சளைக்காமல் செய்வார்கள். பார்க்கும்போது எனக்கே வெட்கமாக இருக்கும். என்னதான் படித்தாலும் – பெண்களுக்கு வீட்டு வேலை தெரியாவிட்டால் அதைப்போல அவமானம் வேறு கிடையாது கமலா!”

“சரி, இனி புத்தகமெல்லாம் தூங்கவேண்டியதுதான்” என்றாள் கேலியாக.

“தூங்குவானேன்? இரவு இல்லையா? படிப்பது. கொஞ்சநாள் போனால் மத்தியானமும் படிக்கலாம். மத்தியானப் பொழுது ரொம்ப சுவாரஸ்யம் கிராம வாழ்க்கையில்! கிராமாந்தர விளையாட்டுகளில்தான் நம் புராதனப் பெருமை நமக்கு விளங்குகிறது! – நான்கூடக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.”

“எதை? புளியம் விரை கொந்துவதையா?”

“ஏன், இளப்பமோ அது? நம்ம டவுன் நாகரீக மூளைக்கு அது பிடிக்கவில்லை, அவ்வளவுதான். ‘தாயக்கட்டான்’ என்பதைப் போன்றதை – நூதனப் பெயராக ‘கேரம் போர்ட்’ என்றால் ஒசத்தி. மயங்கிப்போய் ஆடுகிறோம், கிளப்பைத் தேடிக்கொண்டு போய்! சர்க்கஸில் மூணு தாம்பாளத்தை மாற்றி மாற்றிப் பிடித்ததைப் பார்த்து வியப்படைகிறோம்; ‘அம்மானை’ என்ற நம் பண்டை நாளைய விளையாட்டு அது. நம்ம தேச விளையாட்டை நம்மிடம் காட்ட வருகிறார்கள். எவ்வளவு நன்றாக என் மாமியார் அம்மானை ஆடுகிறாள்! அதற்குப் பாட்டுக்கூட இருக்கிறது. நானும் என் சிறிய நாத்தனாரும் இப்போது கற்றுக்கொள்ளுகிறோமே!”

“ஊம், அப்புறம்?”

“காலையில் எழுந்ததும் ஆற்று நீரில் ஸ்நானம் செய்துவிட்டு அடுப்பை மூட்டுவேன். காபி பலகாரம் செய்துகொண்டே சுவாமி பூஜைக்குக் கோலம் போட்டு, விளக்கேற்றி வைத்து, சந்தனம் அரைத்து வைத்தால், மாமனார் ஸ்நானம் செய்து விட்டு பூஜைக்கு வருவார். பூஜையான பிறகுதான் ஆகாரம். இதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப ரம்மியமாயிருக்கிறது கமலா! அப்புறம் சமையல், மாமியார் கிட்ட இருந்து சொல்லிக் கொடுப்பாள். சாதம் மட்டும் என்னை வடிக்கச் சொல்லமாட்டார்கள், வழக்கமில்லையென்று! அவர்களிலே யாராவதுதான் வடிப்பார்கள். அதிலும் என் சின்ன நாத்தனார் ரொம்ப வேடிக்கை மனுஷி, சதா கேலிதான். சமையலில், ஏதும் தெரியாவிட்டால் அவளைத்தான் கேட்பேன். எனக்கு ஒத்தாசையாகப் பரிமாறுவாள். பிற்பாடு நாங்களிருவரும் சாப்பாடு.”

“சாப்பாடு இரண்டு மணிக்கா?”

“இல்லையில்லை, பன்னிரண்டு மணிக்கு ஆகிவிடும். வீட்டுக்குப் பின்புறம் – கொல்லைத் தாழ்வாரம். அடுத்தாற்போல நிறைய வாழை மரங்கள்… வெக்கையே தெரியாமல் சிலுசிலுவென்று காற்று வரும். அங்கே உட்கார்ந்துதான் மத்தியானப் போதுபோக்குக்கு நாலு பேருமாகக் கட்டமோ, பல்லாங்குழியோ, பதினைஞ்சாம் புலியோ…”

“பதினைஞ்சாம் புலியா!”

“அதென்ன தெரியுமா? நீள வாட்டத்தில் முக்கோணமாக ஐந்து கோடு. குறுக்கு வாட்டத்தில் நடுவிலே இப்படி மூணு கோடு, ஓரத்தை மூடிவிடவேண்டும். மூணு புலி. பதினைஞ்சோ, பனிரெண்டோ ஆடு-“

“புலி யென்றால்…?”

“புலியென்றால் புலியில்லை, மூன்று சோழியோ கழக்கோடியோ புலியென்ற காய்கள். ஆடுகளுக்கு பதினைந்து புளியம் விதை அல்லது சோழியாவிரை வைத்துக்கொள்ளுவது. ஆட்டக்காரர்களின் சாமர்த்தியம்தான் இதில் சுவாரஸ்யம். மேல் கூர்ப்பில் ஒரு புலி, நடுவில் இரண்டு. ஆடுகளால் புலி பாய இடங்கொடாமல் புலியைக் கட்டுவது. கோடுகள் சேரும் சந்தி ஆடுகளும் புலியும் இருக்கவேண்டும். புலி இருக்கும் இடத்திற்கடுத்தாற்போல் ஆடு இருந்து, அடுத்த இடம் காலியாயிருந்தா மட்டுமே புலி பாயும். ஆடு அடிபடும். ஆட்டைப் பலி கொடுக்காமல் நகர்த்துவதே இதில் சாமர்த்தியம். மூணு ஆடுகள் போச்சோ அவ்வளவுதான். அப்புறம் எல்லாம் போய்விடும்! இதெல்லாம் புது விளையாட்டாயும் – புது மனிதர்களின் அன்பும் எனக்கு சந்தோஷமாய்த்தான் இருக்கிறது! மொத்தத்திலே பார்க்கும்போது கிராமவாசத்தில்தான் பூரா அமைதியிருக்கிறது கமலா!”

“எல்லாருக்கும் உன் போலவே, புக்ககத்தார்கள் வாய்ப்பார்களா? கிராமவாசம் நரகமாகத் தோன்றக்கூடிய காட்டான்களாக இருந்தால் என்ன செய்வது? மாற்றக்கூடிய காரியமா இது?”

சுந்தா சற்று யோசித்தாள் சட்டென்று நினைவடைந்தவளாக, “கமலா, உன் பிறந்தகத்து கோத்திரமென்ன, தெரியுமா உனக்கு?”

“அதாரு கண்டா? தெரியாதம்மா, ஏன்?”

“எனக்கொரு மைத்துனன் இருக்கிறான் கலியாணத்திற்கு-“

சுந்தாவின் தாயார் அங்கே வந்தாள். “யாரது, கமலாவா? வழி தெரிஞ்சதாம்மா. சுந்தா, மாப்பிள்ளை எழுந்துட்டாப் போலிருக்கு. காபி கொடுக்க வேண்டாமா?” என்று சொன்னாள்.

சுந்தா எழுந்துகொண்டே “ஐந்து நிமிஷம் இருக்கிறாயா கமலா, இதோ வந்துவிடுகிறேன்?”

“போ… நான் இருக்கிறேன். காபி கொடுத்துவிட்டு வா.”

ரேழி உள்ளில் மேஜைப்புறம் நின்றுகொண்டு, தலைவாரிக்கொண்டு இருந்தான் செல்லப்பா. டிபனும் காபியும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள் சுந்தா.

“யாரது சுந்தா. சகபாடியோ?” என்று சிரித்துக்கொண்டே அவள் கையிலிருந்த ஹல்வாத் தட்டை வாங்கிக்கொண்டான்.

“ஆமாம் வாய் கொஞ்சம் ‘லொடலொட.’ அதுதான் சீக்கிரம் விழித்துக்கொண்டீர்களோ?”

“என்ன கேட்கிறாள் உன்னை?”

“ஒன்றுமில்லை. என் மாறுதலிலே அவள் பிரமித்துப் போய்விட்டாள். என்னென்னவோ கேள்விகளைப் போட்டு…”

“திணற அடிக்கிறாளோ?”

“என்னவோ வீணாசைப்படுகிறாள் பாவம்! ஒரு மாசத்துக்கு முன்னாலே கதிராமங்கலத்திலேயிருந்து நல்ல வரன் வந்ததை – பட்டிக்காடுன்னு வேண்டாம்னு சொல்லி விட்டாளாம்”

“அது யார் தெரியுமா? நம்ம விசுவம்தான்!”

“நிஜமாகவா? உங்களுக்கெப்படி?..”

“சிரஸ்தார் சந்தானமைய்யர் பெண்தானே இவள்?”

“ஆமாம்”

“சந்தேகமேயில்லை. ‘பட்டிக்காட்டானுக்கு வாழ்க்கைப்பட மாட்டே’னென்ற புத்திசாலி இந்தப் பெண்தான்! சரி, அவளை உட்கார வைத்துவிட்டு வந்திருக்கிறாயே, போ” என்றான்.

கமலாவுக்கும் தனக்குமாக இரண்டு டம்ளர் காபி யெடுத்துக்கொண்டே “கமலா, அடுத்த மாசத்துக்குள் உனக்குக் கலியாணம்” என்றாள்.

“அப்பாடா, யாரடியம்மா?”

“அதே வரன்தான், என் மைத்துனன். இப்போதான் சொன்னார். அசடே, வாய்க்கு வாய் பரிகாசம் செய்ய இடம் வைத்துக்கொண்டாயே! ஆனால் நீதான் அது என்று எனக்குத் தெரியாது அப்பொழுது. எல்லாரும் இதைப்பற்றிக் கேலி செய்தார்கள் எங்கள் புக்ககத்தில். நீதானா அது! சமயம் வாய்த்தபோதெல்லாம் மாமியார் என்னிடம், ‘நல்ல வேளை நீ இந்தமாதிரி சொல்லியிருந்தால் நான் என்ன பண்றதடியம்மா! எங்க செல்லப்பா கட்டிச்சமத்துன்னா’ என்று சந்தோஷம் தாங்காமல் சொல்லுவாள். அவர் சொல்றாப் போலே அடங்காப்பிடாரியாக ஒரு நாட்டுப்பெண் வந்துவிட்டால் அப்புறம் குடித்தனம் சின்னா பின்னாமாகவல்லவா சிதறி நாசமாகிவிடும்? எழவு, ‘பெண்கள்தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம்’னு பட்டம் வேறே! நான் பார் இப்போ! கலைந்த குடும்பத்தைச் சேர்க்கப் போகிறேனே! நீயும் நானும் ஒன்று!”

“இதொரு பரிகாசமா சுந்தா?”

“பரிகாசமே இல்லை. நிஜம்தான். என் மாமனார் அண்ணன்-தம்பிகளுக்கு ‘பாகஸ்த’ விஷயமாக ரகளையாகி, பேச்சு வார்த்தை கிடையாதாம் பத்து வருஷமா. இப்போ என்னாலே அவாள் கூடப்போறா. வேணாப் பாரேன், அடுத்த வருஷம் நீயும் நானும் ஒரு பானைச் சோற்றிலே சாப்பாடு. மாப்பிள்ளை பிடிக்கவில்லை யென்பதில்லையே உனக்கு? ஒளிக்காமல் சொல்லு!

“………………”

“சரி, மௌனம் சம்மதம்!”

“அவர்கள் சேர்வார்களென்று என்ன நிச்சயம்?”

“அது எங்களிருவரின் வேலை. அந்தக் கவலை உனக்கு வேண்டாம். என் மாமியவர்களும் தங்கமான குணம் இதைச் சொல்லவில்லையே உன்னிடம்! அவா இரண்டு பேரும்தான் பேசறதில்லையே ஒழிய இவா அண்ணன் தம்பிகள் ரொம்ப நேசம்: பெண்களில் இரு வீட்டுக்கும் போக்குவரத்து உண்டு! அவாள் என் கலியாணத்துக்குக்கூட வந்தார்களே! ஒரு விஷயம், நீ மட்டும் என் உண்மை சிநேகிதியானால் நான் சொன்னபடி கேட்க வேண்டும். நீயும் நானும் ஒன்றாயிருக்கவேதான் இவ்வளவு பாசம் நம்மிடம் குடி கொண்டுவிட்டது. போ. கவலை விட்டது! எல்லாம் நடக்கும்! இந்த சமயத்தைத் தவறவிடமாட்டேன்.”

“சரி, ரொம்ப நாழியாச்சு. போய்வரட்டுமா சுந்தா? நாளைக்கு ஆத்துக்கு வரயா?”

“ஆகட்டும்” என்று அவளைப் பின்பற்றி ரேழி மட்டும் சென்றாள். வாசலிலிருந்த பெஞ்சியில் உட்கார்ந்திருந்தான் செல்லப்பா. அவனைப் பார்த்ததும் சட்டென்று பின்வாங்கினாள் கமலா.

சந்தடி சாக்கில், “இப்பொழுதென்னடீ வெட்கம்? படிச்ச பெண்ணாய் லட்சணமாய் நீ பாட்டில் போவையா? கலியாணமான பின் கிரமமாக மைத்துனர் மரியாதை வரட்டும்” என்று கணீரென்று சொன்னாள் சுந்தா. பளிச்சென்று சிரித்துவிட்டான் செல்லப்பா. சுந்தாவும் சிரித்தாள். ஒரு லஜ்ஜை கலந்த உவகையுடன் கமலா விர்ரென்று நடந்து சென்றுவிட்டாள்.

சுந்தாவின் மனோரதம் கைகூடி வந்தது. கலியாணமாகி கமலா புக்ககமும் வந்துவிட்டாள். கோகுலம் போன்ற விஸ்தாரமான குடும்பத்திற்குத் திலகம்போல விளங்கினாள் சுந்தா. அவளுக்கு வலது கைபோல கமலா. அண்ணா தம்பிகள் கூடியதைப்பற்றி யெல்லாரும் புகழுவது கேட்டுச் சந்தோஷப்பட்டாள் சுந்தா. செல்லப்பாவின் பெருமுயற்சியால் மறுபடி குடும்பம் ஒன்றாகியது.

“குலவதியாட்டமா நாட்டுப்பெண் வந்தா, பெண்களும் பிள்ளைகளும் நாட்டுப்பெண்களும் பெரிய சுமங்கலியா மாமி மருமா குடுத்தனம் கோகுலமாட்டம் இருக்கு, கொட்டில் நிறைஞ்ச மாடுகளும், தொட்டில் குழந்தைகளுமா கிளி கொஞ்சறது பார்த்தால்..” இதே பேச்சு – இதே ஒரு உபமானமாகக்கூடப் பிரசித்தி பெற்றது. சிவராமய்யர் குடும்பம் போவோரும் வருவோரும் வாழ்த்துவது பொருத்தம்தான், ஆமாம். குலவதிதான் சுந்தா. ஊருக்கு உயர்ந்த குடியாகப் பிரபலமடைந்தது அவளால்தானே?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *