(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாம் எதிர்பாராத சமயங்களில், எதிர்பாராத சம்பவங்கள் நடந்து நம்மைக் குலுக்கி எடுத்துவிடுகின்றன என்பதற்கு வரதராஜனை உதாரணமாக எடுத்துக்கொள்ளவே வேண்டியதில்லை. அற்புதங்கள் நடக்கத்தான் நடக்கின்றன. கடவுளைப் பார்க்கக் காலமெல்லாம் தவங்கிடந்தவர்கள் இன்று அவரைக் கண்டுவிட்டனர் – அவர் இருப்பதாகச் சொல்லப்படு மிடத்தில் போய்! மதுவிலக்கும் ஒரு வெற்றி! இவ்வளவிற்கும் நடுவில் வரதராஜனின் மாறுதல்தானா ஒரு பெரிய ஆச்சரியம்! இல்லை. ஒருக்காலுமில்லை. அதுவும், அந்த மாறுதல் மஹத்தானதொரு தியாக வாழ்க்கையில் பிறந்ததென்று தெரிந்த உடனே நமக்கு ஒரு உள்ளக் கிளர்ச்சியுண்டாகிறது.
தம்பிபோய்விட்டான். கோர்டில் அவனுக்களிக்கப்பட்ட மரண தண்டனையை அவன் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டானாம். வரதராஜன் அப்போது அங்கில்லை. இருந்து என்ன உபயோகம் ? ‘பரவி இருக்கும் சட்டத்தில் நியாயமே இல்லை’ என்பதற்கு மற்றொரு உதாரணம்! அவன் எவ்வளவு சொன்னால் என்ன? எவ்வளவு வேண்டினால் என்ன? ‘தம்பியைக் காப்பாற்றுவதற்காக ஒரு பொய்யைக் கற்பனை செய்து சொல்லுகிறான்’ என்றுதான் அவர்கள்-கோர்ட்டார் சொல்லு வார்கள்/ சட்டம், சாட்சியத்தைத் தேடுகிறது.
அதற்கு, அவன் எங்கே போவான்? உண்மையை உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டால், இதைக் காட்டிலும், ‘உலகம் பைத்தியம் பிடித்து ஓடுகிறது’ என்பதற்கு என்ன உதாரணம் வேண்டும்?
அதனால்.வரதராஜன் இன்று உயிரோடு இருக்கிறான் இல்லா விட்டால் அவன் போயிருப்பான். இதே இடத்தில் அவன் தம்பி நின்றுகொண்டு யோசித்துக் கொண்டிருக்கலாம்!
முழுவதும் நியாயம். சட்டம் என்று சொல்லி நடந்ததற்குக் காரணம் கற்பித்துவிட முடியாது. அவன் தம்பியும் கூட அவ்வளவு பிடிவாதமாக இருந்தான். அவனுக்கு இவ்வளவு தைரியமும் தியாக புத்தியும் எங்கிருந்து வந்தது? அவன் இருந்து வாழ்வதைவிட, வரதராஜன் இருப்பதுமேல் என்று எதனால் அவன் நினைத்தான்? அது அவனுடைய அந்தராத்மாவின் கட்டளை-உள்ளத்தின் ரகஸியமாகவே போய்விட்டது! கடைசி நிமிஷம் வரையில் எவ்வளவு தூரம் கெஞ்சினான் வரதராஜன்! ‘நான் செய்த அநியாய குற்றத்தை, நீ ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? நான் செய்ததற்கு, நான் தண்டனையை அனுபவிப்பதல்லவா நியாயம்? தகப்பனர் இறந்த துக்கத்தோடு, உன்னையும் அக்கிரமமாகக் கொன்றேன் என்ற எண்ணம் வேறு என்னைச் சூழ்ந்து கொண்டு வருத்த வேண்டுமா? வாண்டாம். நீ இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துவிடு. நான் அதை ஒப்புக்கொள்ளுகிறேன்’ என்று தம்பியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவன் கேட்கவில்லை. ‘நீ தான் அதைச் செய்தாய் என்பதற்கு என்ன அத்தாட்சி?’ என்று சட்டம் பேசிவிட்டுச் சிரித்தான்! அந்தச் சிரிப்பு!
மறுநாள் காலை, அகண்டாகாரத்தில் ஜீவன் ஐக்கியமாய்விட்டது! சூரியோதயமாகும் போது, ஆஹா-என்ன சாந்தி.
***
கொட்டும் மழையில் நின்றுகொண்டு வரதராஜன், கள்ளுக் கடைக் குள்ளே போவோர்களை, ‘போகவேண்டாம்-குடிக்க வேண்டாம்’ என்று காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான். அக்காலத்தில் மது விலக்கு, சத்யாக்கிரஹத்தின் மூலம் மறியல் செய்யப்பட்டதே ஒழிய, சட்டத்தைக் கொண்டு தடுக்கப்படவில்லை? கெட்டவன் கெடட்டும்; நான் வாழ்கிறேன்’ என்ற நினைத்த காலம் அது.
ஆனால் அவனுடைய விரதமே வேறாகப் போய்விட்டது! முதல் நாள் கொஞ்சம் தயக்கமாகத் தானிருந்தது! ஊரில் எவனுக்குத்தான் தெரியாது, வரதராஜன் குடிக்காரன், என்று? ஆகையால், அவனே வந்து குடித்தலுக்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தால் யாருக்குத் தான் ஆச்சிரியமாக இருக்காது?
ஆனால், எவர் என்ன நினைத்தால் அவனுக்கென்ன? உண்மை யாகவே மதுவிலக்கிற்காகவே பாடுபடுபவனாக அவர்கள் நினைத்துக் கொண்டால் நினைத்துக் கொள்ளட்டும், அல்லது அவன் வெளிவேஷம் போடுகிறான் என்று அவர்கள் எண்ணிக்கொண்டாலும், வரதராஜனுக்கு அதைப்பற்றி அக்கரை இல்லை. அவன் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையை, அவன் நிறைவேற்றத்தான் போகிறான். உடலுக்கு உடல்: ரத்தத்திற்கு ரத்தம் – இப்படிக் கொடுத்து தன் பாவத்தை நிவர்த்தித்துக் கொள்ள வேண்டும் என்பது அவன் பிரதிக்ஞை. அவனுடைய தொண்டுக்கு அரசாங்கம் கொடுக்கும் பரிசு, போலிஸ்காரர்கள் கையில் இருக்கும் குண்டாந்தடிப் பிரயோகம் என்பது அவனுக்கு நன்றாய் தெரியும். அதுதான் அவன் வேண்டிப் பெற்ற பரிசு! அது அவனுக்குக் கிடைத்தால் அவனுடைய தவம் பூர்த்தியாகி விடும்! உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் ஆசை, நிறைவு பெற்றுவிடும்.
உள்ளமுருகி, உணர்ச்சி மிகுந்து சொல்லும் எதுவும் மனித வர்க்கத்தின் மனதில் பதியாமல் போகாது. சொல்லும் முறையில் ஏதாவது தவறு இருக்க வேண்டும். அல்லது அவன் சொல்லுவதை அவனே சரியாகத் தெரிந்து கொள்ளாமல், நம்பாமல், இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் சொல்லுவதைப் பிறர் நம்பும்படியும், ஏற்றுக் கொள்ளும் படியும் செய்வது கடினம். அரைகுறையாகச் செய்யப்படும் எந்தக் காரியமும் அரைகுறையான பலனைத்தான் கொடுக்கும்! சந்தேகமென்ன?
ஆனால் வரதராஜன் அப்படியல்ல அனுபவித்துச் சொல்லுகிறான். அதைவிட உருக்கமும், சோகமும் நிறைந்த வேண்டுகோள் வேறொன்று இருக்க முடியாது என்பது நிச்சயம், குடியால் தகப்பனை இழந்து விட்டான்; தம்பியை இழந்துவிட்டான். எவ்வளவோ உன்னதமான ஸ்திதியிலிருந்த வீடு பாழடைந்து கிடக்கிறது. இன்னும் என்ன வேண்டும்?
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது அதை அவன் பொருட்படுத்த வில்லை. பிரித்து; அழகாய், வார்த்தை வார்த்தையாக, எவ்வோருக்கும் புரியும்படி அவன் பாடுகிறான் இயற்கை இனிமையோடு, குடியால் வந்த கனமும் சேர்ந்து கொண்டு அந்தக் கடையின் செங்கல் சுவரி லிருந்து எதிரொலிக்கிறது. அதில் உள்ள உண்மையும், அர்த்தத்தையும் அவர்கள் எவ்வளவு சீக்கிரமாக அறிந்து கொள்ளுகிறார்கள்!
***
தகப்பனார் இறப்பதற்கு முதல்நாள். குடித்துவிட்டு அந்த வெறியில் நிலை குலைந்திருக்கும் போது, யாரோ பின்னாலிருந்து தோளில் கையை அழுத்தி இழுத்ததும் அவன் திரும்பிப் பார்த்தான்.
‘யாரது?’ என்றான், நெருப்பைக் கக்கும் குரலில் உயர்தர சாராயத்தின் நாற்றம் அவன் வாயிலிருந்து அடித்தது.
இழுந்தது தம்பிதான். அவனுக்கு அங்கே வர எவ்வளவோ தைரியம் வேண்டும். புலியைக் குகைக்குள் போய் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாலும் வந்துவிடலாம். வரதராஜனை அவனுடைய சினேகிதர்களிடமிருந்து பிரித்துக்கொண்டு வருவது முடியாத காரியம். எல்லோரும் தடுமாற்றத்தில் தானே இருப்பார்கள்? ஒருவருக்காவது தான் சித்த ஸ்வாதீனமிருக்காதே! ஆகையால் அங்கே போக வேண்டியவன் எதை மட்டும் எதிர்பார்க்க முடியும் என்பதைச் சொல்லுவது கஷ்டம்.
அவனுடைய தம்பி தைரியத்தோடேயே வந்திருந்தான். எப்படியும் வரதராஜனை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டுமென்று, அதற்கு இரண்டு நாள் முந்தி, நிலைகெட்டு, உயிரில்லாதவனைக் கொண்டு வருவதுபோல், வரதராஜனைக் கொண்டு வந்து யாரோ இரண்டுபேர் வீட்டில் போட்டுவிட்டுப் போனார்கள். அன்று முதல் அவனுடைய தாயார், தகப்பனார், தம்பி எல்லோரும் பட்ட வேதனை சொல்லில் அடங்காதது. வார்த்தைகளைத் தாண்டி நின்றது.
இரவின் அந்த நேரத்தில், அப்பா வரதராஜனைத் தேடப் புறப்பட்ட போது, தம்பிக்குச் சொல்ல முடியாத பயம் உண்டாயிற்று. அவர் அவனைப் பார்த்துவிட்டால்…
அவருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால்…
வரதராஜன் இருக்குமிடம், தம்பிக்குத் தெரியும். ஆகையால் வரதராஜனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டால், தகப்பனாரையும், அண்ணனையும் எப்படியாவது சமாதானப்படுத்தி. வீட்டின் அமைதியை திரும்பவும் சீர்திருத்தி விடலாம் என்பது தம்பியின் எண்ணம். அதனாலேயே அப்பாவை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு தம்பி புறப்பட்டான்.
வரதராஜனைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட பாடு தெய்வமறிந்துவிட்டது. ஆனால் தெய்வம் அவனுக்கு இரங்கவில்லை?
அப்பாவுக்கும் வரதராஜனுக்கும் பேச்சு வலுக்கவே. காரியம் மிஞ்சி விட்டது. இரத்த வெள்ளத்தில் அப்பா கிடந்தார். கொஞ்சநேரம் தாள் நினைவுடன் இருந்தார். பிறகு இறந்துவிட்டார்.
இதற்குள் வாசலில் ஊர் கூடிவிட்டது. வெளியில் வரக்கூடாத விஷயம், வரவேண்டாமென்று நாம் எண்ணும்போது எவ்வளவு சீக்கிரமாக வந்துவிடுகிறது என்பதற்கு உதாரணமாக வாசவ் கதவை’டக் ‘டக்’ என்று யாரோ இடிக்கும் சத்தம் கேட்டது.
வேறு யார்? போலிஸ்காரன் தான்?
தயங்கவில்லை. ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கவுமில்லை.தம்பி வேகமாக கீழே இறங்கிப்போய். அவனிடம், ‘அப்பாவை நான் கொன்றுவிட்டேன். போலிஸ் ஸ்டேஷனுக்குச் சொல்லியனுப்பு!’ என்றாள்.
– பாரததேவி 30.07.1939