தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,088 
 
 

பஞ்சாட்சரம் வீடு திரும்பும் போது, மதியத்துக்கு மேல் மணித்துளிகள் கூடவே ஆகி இருக்க வேண்டும். வீட்டுக் கூடத்தில் உடைந்த கூரை ஓடுகள் வழியே பிறைச்சந்திர வடிவாய் விழுந்த சூரியனின் ஒளி கிரணங்கள் ,வீட்டுத்
தரையின் மேற்புரம் பல்லிளித்தபடி வியாபித்திருந்தன. அது, சூரிய கடிகாரம் – இப்போது, 3:00 மணி.
குருவி மூலைபஞ்சாட்சரம் – ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒடிசலான தேகம்; சற்றே கூன்… போதுமே அவரைப் பற்றிய விவரம். அது தான் ஏற்கனவே சொன்னேனே… ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தரும நியாய சிந்தனைகளை தன்னுள்ளே தேக்கி, தற்கால நிலவரத்துக்கு ஒத்து வராத தனிப்பிறவி.
“”கையை, காலை கழுவறேன்னு தண்ணியை மொண்டு வீணாக்காதீங்க… இன்னிக்கி பைப் தண்ணி வரல்லே; பைப் லைன்லே ஏதோ கோளாறாம்…” மனைவியின் அறிவுரையை துல்லியமாய் கடைபிடித்து, சாப்பிட உட்கார்ந்தார்.
“”இன்னிக்கி வெறும் புளிக்குழம்பும், மோரும் தான்.”
நித்தமும், ஏதோ கூட்டு, பொரியல், சாம்பார் செய்வது போலவும், இன்று மட்டும் புளிக்குழம்பு என்ற தொனியில் மனைவி சொன்னதை, அவர் கண்டு கொள்ளவில்லை; இது, நித்தியப்படி – அங்கலாய்ப்பு.
“”காக்காய்க்கு சோறு வெச்சிட்டீல்லே?” என்ற வழக்கமான கேள்வியை கேட்டுக் கொண்டே, சோற்றில் கை வைத்த உடனே, மனைவி நித்திய வாசிப்பு; சாராம்சம்…
“”கூரை ஓடு மாத்தணும், பெண் இரண்டாம் பிரசவத்துக்கு பணம் அனுப்பணும், பையன் மொபட் வாங்குவதற்கு, 3,000 ரூபாய் முன்பணம், வீடு தரை ரிப்பேர் செய்யணும்.”
இந்த மாதிரி கோரிக்கைகள் வந்தால், பஞ்சாட்சரம் மார்பில் தொங்கிய ருத்திராட்ச கொட்டையை தடவிக் கொண்டே, “நமசிவாய…’ என்பார். இன்று, கூடுதலாக மார்பை தடவிக் கொண்டார்.
அவர் பார்வை, தன்னிச்சையாக வீட்டுக் கூரையின் ஈசான மூலையில் பதிந்தது.
ஒரு காலத்தில், இரு குருவிகள் ஒவ்வொரு வைக்கோலாய் கொண்டு வந்து அமைத்த வீடு. கடந்த நான்கு ஆண்டுகளாய் குருவிகளைக் காணவில்லை; கூண்டு மட்டும் காற்றில் அல்லாடிக் கொண்டிருத்தது.
அந்தக் கூட்டைப் பார்க்கும் போது, அவர் மனதில் தீர்க்கமான ஒரு உணர்வு பரவும், மூதாதையர்களின் சமாதி முன் நின்று மவுனிப்பது போல…
இன்று காலை நடந்து விட்ட சம்பவம், அவர் மனதில் திரை விரித்தது…
நாட்டு மருத்துவரைக் காண, பொடி நடையாய் கிளம்பியவர் திறந்து வைத்திருந்த சாக்கடை மூடி… அதன் விளைவாய் சாலையை அபிஷேகம் செய்த கழிவுநீர்… இவற்றைத் தவிர்க்க நடைபாதையிலிருந்து சாலைக்கு மாறினார்.
பனிரெண்டு பள்ளிச் சிறார்களையும், அவர்களின் புத்தகச் சுமை, உணவுப்பை, தண்ணீர் பாட்டில் இத்தியாதிகளைச் சுமந்து, ஒரு வழிப்பாதை வழியே வந்த அதிவேக ஆட்டோ, அவர் மேல் உரசியது. தார் ரோடை அவர் முத்தமிட சாக்கடை மூடி அவர் நெஞ்சை தழுவ, மொக்கை அடி. ஆட்டோ ஓட்டுனர் தன் பயணிகள் மாணவ, மாணவியர் என்பதைப் பொருட்படுத்தாமல், கெட்ட வார்த்தையால் இவரைத் திட்டி விட்டு, தன் வண்டியை விரட்டினார்.
பஞ்சாட்சரத்துக்கு ஆட்டோக்கள் சரிப்படுவதில்லை, வாழ்நாளில் அவர் ஆட்டோ பயணம் செய்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மீட்டர் இயக்கத்தை நிறுத்தி, வாய்க்கு வந்த தொகையை, ஆளுக்கு தகுந்தபடி வசூலிப்பது, இவையாவது பரவாயில்லை, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை வண்டியில் அடைத்துக் கொண்டு, சாலை விதிமுறைகளுக்கு புறம்பாய் விரைவதைக் கண்டு அவர் மனம் அல்லாடும். சிறுவர்கள் மனதிலே இன்று படியும் சாலை விதிமீறல் ஒரு சம்பிரதாயம் என்ற விஷ வித்து விதைக் கப்படுகிறதே…
சாலையில் இருந்து பஞ்சாட்சரத்தை மீட்டு, ஒரு ஆட்டோவில் வைத்து அனுப்பினர் தெரு அனுதாபிகள். அவருக்கு அது விருப்பமே இல்லாவிடினும், உடம்பு ஒத்துழைக்காததால், வலுவில் ஒரு ஆட்டோ பயணம், 2 கி.மீ., கூட, இல்லாத தன் வீட்டுக்குச் செல்ல, 60 ரூபாய் கறந்து விட்டார் ஆட்டோக்காரர்.
அதுபற்றி இப்போது நினைக்கையில், நெஞ்சு வலி கொஞ்சம் அதிகமாவதை உணர்ந்த அவர், சற்றே ஓய்வெடுக்க சாய்வு நாற்காலியை விரிக்கும் போது, பின்னணியில் அவர் மனைவி பார்வதி…
“”என்ன நமச்சிவாய வாத்யாரே…”
(அவள் தொனியில் கிண்டல், அடிக்கடி நமசிவாய என்று உச்சரிப்பதால், பள்ளியில் அவருக்கு நமச்சிவாய வாத்தியார் என்ற பட்டப் பெயர்).
“”நானும், 10 நாளா சொல்லிட்டிருக்கேன். சும்மா, “நமசிவாயா…’ன்னு சொல்லிவிட்டு குருவிமூலையைப் பார்த்துக்கிட்டு இருந்தா, என்ன அர்த்தம், கேக்கறேன்ல?”
அவளுக்கு தெரியும்… அவரது இயலாமை குறித்து; இருப்பினும், குத்திப் பார்ப்பதில் ஒரு குரூர சந்தோஷம்.
“”நம்ம கோமதி வீட்டுக்காரர்கிட்டே ஒரு நடைபோய் சொல்லலாமில்லை… ரொம்ப அந்தஸ்தா இருக்கிறாராம். நமக்கு கொடுக்க வேண்டியதை ஞாபகப்படுத்திட்டு, அப்படியே நம்ம சரவணனுக்கு, ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்யச் சொல்லி கேட்டிருங்களேன். கொஞ்ச வருஷப் பழக்கமா என்ன… கண்டிப்பா நல்லபடி ஏதாவது செய்வாரு?”
கோமதி வீட்டுக்காரர், சிவசாமி, பார்வதிக்கு ஏதோ தூரத்து உறவு. முப்பது வருடத்துக்கு முன், ஒரு டிரங்கு பெட்டி, சாக்கு பை சகிதம் இந்த ஊருக்கு தம்பதி சமேதராய் வந்து இவர் வீட்டில் தங்கி, இதே ஊர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தவர். பஞ்சாட்சரம் கேள்விப்பட்ட அளவில், அப்போது ஆட்சியில் இருந்த ஒரு அரசியல் கட்சிக்கு, கணிசமான ஒரு தொகை கொடுத்து, இந்தப் பணிக்கான பணி ஆணை பெற்றவர்.
தூரத்து சொந்தம் என்ற காரணத்தால், அடிக்கடி பஞ்சாட்சரத்தைக் காண வருவார். அவ்வப்போது, 50 -100 கடன் வாங்கிச் செல்வார். “அவருக்கு நம்மை விட அப்படி என்ன கூடுதல் செலவு?’ காரணங்களைக் கேட்டு பழக்கமில்லை அவருக்கு. தேவை என்று யாராவது கேட்டால், கையில் இருந்தால் கொடுத்து விடுவார். தயவு வேண்டும் போது, தாமாகவே காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஆசிரியர் சமுதாயத்தை முன்னேற்றுவதில் முனைப்பாக உள்ள ஒரு அரசியல் கட்சியில் சிவசாமி சேர்ந்திருந்தார். கட்சி நிதி, தலைவர் வரவேற்பு தோரணம், மாநாடு போக வேண்டும், இத்தியாதி.
கட்சி வேலைகள், சிவசாமியை அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட வைத்தன; பள்ளி நிர்வாகம் அதைக் கண்டு கொள்ளவில்லை. பள்ளியில் ஏதாவது பிரச்னை என்றால், அதை சரி செய்ய, அரசியல் கட்சிக்கு தூது போக சிவசாமி பயன்பட்டார்.
நாள்பட, சிவசாமியின் நடை, உடை பாவனையில் மாற்றம் தெரிந்தது. கரைவேட்டி, கசங்காத சட்டை… மூச்சுக்காற்றில் மிதந்து வரும் லேசான சாராய வாடை, பள்ளி நேரம் உட்பட.
சிவசாமியைத் தவிர்க்க முயன்று தோற்றார் பஞ்சாட்சரம். கடன் வாங்குவது தொடர்ந்தது. சங்கத் தலைவர், வட்டச் செயலர் என்ற பதவிகள், சிவசாமியை அணைத்த போது, அவர் ஆசிரியர் பதவிக்கு முழுக்குப் போட்டு, முழு நேர அரசியல்வாதி ஆனார்.
அதன் பிறகு, ஏறுமுகம் தான். கால்நடையாகச் சென்றவர், மோட்டார் சைக்கிளுக்கு மாறி, ஒரு வருடத்திலேயே கார் வாங்கி விட்டார்.
“அந்தஸ்து காரணமாகவும், அதிகப்படியான வேலைப்பளுவின் டென்ஷனைக் குறைக்கவும், பிற பெண்கள் சகவாசத்தையும், பெற்றுப் பேறடைந்தார் சிவசாமி…’ என்று, ஊரிலே பேசிக் கொண்டனர்.
அரசியலில், ஒரு பதவி கிடைத்தவுடன், பஞ்சாட்சரத்தையும், அவரிடமிருந்து தான் பெற்ற கடனையும் மறந்தார். தன்னையே மறந்து, மப்பு நிலையில் மிதந்தார் சிவசாமி.
பஞ்சாட்சரத்தின் கணக்குப்படி, சிவசாமியிடமிருந்து வர வேண்டியது, 5,000 ரூபாய். மனைவியின் அறிவுரைக்கு செவி சாய்த்து, சிவசாமியை சந்திக்கச் சென்றார் பஞ்சாட்சரம்.
ஆட்டோவில் ஏறக் கூடாது என்ற வைராக்கியம், இன்று காலை தூளாகியது. ஊழல் அரசியல்வாதிகளை சந்திக்கக் கூடாது என்ற வைராக்கியமும், இப்போது தகர்ந்திடப் போகிறது. ஆக, இன்றைய தினம் வைராக்கியங்களுக்கு வைரி ஆனது… நமசிவாய!
வெளிப்புற காலனியில், சிவசாமியின் பங்களா அட்டகாசமாய் இருந்தது. இரண்டு கார்களை மேலும், பளபளப்பாக்கும் முயற்சியில் ஓட்டுனர்கள். புறக்கடையில் மாடுகள் கத்தும் சத்தம். இரண்டு ஓநாய் சைஸ் நாய்கள், பலத்த சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன.
பத்தோடு பதினொன்றாய், பார்வையாளராக பஞ்சாட்சரம்.
“காலம் எப்படியெல்லாம் மனிதனை உயர்த்துகிறது, தாழ்த்துகிறது – நமசிவாய…’
இரண்டு மணி நேர காத்திருப்புக்குப்பின், ஏராளமான கவர்ச்சியை, தாராளமாய் காட்டிய ஒரு நடுத்தர வயது மாது, உள்ளிருந்து வெராண்டாவில் பிரசன்னமானாள். ஒவ்வொரு பார்வையாளரையும் விசாரித்து, கடைசியில் பஞ்சாட்சரத்திடம் வந்து, தேவை என்னவென்று வினவினாள்.
அவள் பேச்சில் அண்டை மாநில வாடை வீசியது.
“”ரொம்ப கால சினேகிதம்… தூரத்து சொந்தம்… மரியாதை நிமித்தமாய்…” தன் மகனுக்கு வேலை, கடன் வசூல் இது பற்றியெல்லாம் இந்த மாதுவிடம் கூறுவது, உசிதமில்லை என்று கருதினார் பஞ்சாட்சரம்.
“”தலைவருக்கு வேலை நிறைய… தேர்தல் வருதில்லே. வேட்பாளர் தேர்வுக்காக, சென்னை தலைமையகத்துக்கு போறதுக்கு, தயார் பண்ணிட்டிருக்காரு… இப்ப பார்க்க முடியாது. எலக்ஷன் முடிஞ்ச பிறகு முன்னதாய் தகவல் கொடுத்திட்டு வந்து பாருங்க…”
“”உங்க தலைவரோட சம்சாரம், எனக்கு தங்கச்சி முறை. அவங்களையாவது பார்த்திட்டு போயிடறேனே…”
அவள் இடைமறித்தாள்…
“”அவங்க, இப்பல்லாம் இங்கே இல்லை… நீங்க புறப்படுறீங்களா?” வீட்டுக்குள் சென்று மறைந்தாள். பஞ்சாட்சரம் திரும்ப யத்தனித்த போது, மெயின் ஹால் திரைச்சிலை, காற்றின் உபயத்தால் சற்றே விலகி, சிவசாமியை ஒட்டியபடி, சோபாலில் உட்கார்ந்திருந்த, அந்த தாராள கவர்ச்சி பெண்மணி, அவர்களின் லேசான அணைப்பு ஆகியவை, ஒரு நொடி படம் காட்டி மறைந்தது.
“நமசிவாயா… கட்டிய மனைவியைக் கை கழுவி, ஒட்டியவளுடன் பட்டப்பகலில் சல்லாபிக்க நிறையவே தைரியம் வேண்டும். தைரியம் எப்படி வந்தது… பணத்தால், பணம் அறுவடையாவது, தரும நியாயங்களுக்கு சமன்படாத அரசியல் நடவடிக்கையால்… எத்தனை காலம் இந்தக் கொடுமை நீடிக்குமென்று பார்ப்போமே…’
இனியும், சிவசாமி வீட்டுப்படியை மிதிப்பதில்லை என்ற புது வைராக்கியத்தை மனதில் ஏற்றித் திரும்பிய போது, மாலைச் சூரியன் ஆரஞ்சுப் பழமாய், மேற்கு வானில் முழுகும் சமயம் சற்று காற்றாட நடக்கலாம் என பார்த்தால், வழிநெடுக நடைபாதை கடைகள்.
நடைபாதை, தடைபாதை ஆகிவிட்டபடியால், தெருவில் நடக்க வேண்டிய கட்டாயம்.
பஸ்கள், ஏர் ஆரன்களுடனும், கண்கூசும் விளக்குகளுடனும் மிரட்டல் விடுத்தன.
“கேள்வி கேட்பாரில்லையா… இது யார் தந்த சுதந்திரம்… அதிகாரிகளுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கிறது… எல்லாரிடமிருந்தும் மாமூல் சென்று விடுகிறது. அது, படிப்படியாய் மேலிடத்தை அடைகிறது. ஒன்று, இரண்டு எண்ணிக்கையில் அல்ல… கோடிக்கணக்கில், அதில் ஒரு சிறுபங்கு தான் சிவசாமி முதலியவர்களுக்கு. அந்த சிறு பங்கே கோடிக்கணக்கில் என்றால், மொத்தமாக எத்தனை வசூல்… எந்தெந்த வழிமுறைகளில். நமசிவாய!’
இரண்டு வாரம் போல் ஓடியது. ஊர் அல்லோகல்லோலப்பட்டது. தேர்தல் அறிவித்து விட்டனர். அந்த ஊர் வேட்பாளராக சிவசாமியை நியமித்திருந்தது கட்சி.
பட்டாசு கொளுத்தி, தோரணம் கட்டி, குத்துபாட்டு போட்டு, ஊரை நாற அடித்தது. அனல் கக்கும் அரசியல் பிரசாரம். தொண்டர்களுக்கு சாராயம், பிரியாணி மேற்கொண்டு, ஒரு நாளுக்கு, முன்னூறு ரூபாய்… கேட்க வேண்டுமா கும்மாளத்துக்கு…
எதிர்க்கட்சிகளை ஏகமாய் திட்டி தீர்த்தனர். ஜாதிக்கும், ஜாதிக்கும், மதத்துக்கும், மதத்துக்கும் சிண்டு முடிந்தனர். புடவை, வேட்டி, குடம் இந்தியாதிகள் வரிசையாக வழங்கப்பட வாக்காளப் பெருமக்கள் திருவிழா கூட்டம் போல் திரிந்தனர். பங்காளிகள் பகையினர். ஊர் இரண்டு பட்டது.
ஓட்டுப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன், மாலையில் கோவிலுக்கு போய்விட்டு வந்த பஞ்சாட்சரத்தை வீட்டுக்கதவு நிலையில் வைக்கப்பட்டிருந்த காகித உறை வரவேற்றது.
ரூபாய், ஆறாயிரத்துக்கு சலவை நோட்டுகள், கட்சிச் சின்னம், வேட்பாளர் பட்டியல் வரிசை, வேட்பாளர் பெயர் இன்ன பிற அச்சடித்த சீட்டு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. வேட்பாளர் பெயர் சிவசாமி என்று, கொட்டை எழுத்தில் குறிப்பிட்டு இருந்தது.
பஞ்சாட்சரத்தின் மனைவி பார்வதிக்கு, தலைகால் புரியவில்லை. அதனால் அவள், “பல்லெல்லாம் வாயாகி’ நின்றாள். மனதுக்குள் பலவிதமான கணக்குகளைப் போட்டாள்.
“”நமசிவாய வாத்யாரே… நியாயம், தருமம், அது இதுன்னு பேசிட்டு, திருப்பிக் கொண்டு போய் கொடுத்திடாதீங்க. இங்கே வீட்டிலே ஏகத்துக்கு செலவு இருக்கு. ஆமா… சொல்லிட்டேன்!”
“பஞ்சாட்சரம் மனது அல்லல்பட்டது, ஜனநாயக கடமையை செய்வதற்கு, கையூட்டு வாங்குவதா…’ இருப்பினும் நிகழ்கால எதார்த்தம் அவரை பின்னுக்கு இழுத்தது. சிவசாமி தனக்கு கடன்பட்டவர்தான். இருப்பினும் கடன் கழிப்பதற்கு இது ஏற்புடைய செயல் அல்லவே…
“”இப்ப எடுத்து வை… காலைலே பார்த்துக்கலாம்!”
மறுநாள் காலையில் தபால் ஆபீஸ் சென்று மணியார்டர் பாரம் வாங்கி, 1,000 ரூபாயை, சிவசாமிக்கு அனுப்பி, பாரத்தில் உள்ள தகவல் இடத்தில், “அன்புள்ள ஐயா… தாங்கள் நேற்று கொடுத்தனுப்பிய தொகை என்னிடம் வாங்கிய கடனைத் திருப்புவதற்காக என்று எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு பெற்ற, 1,000 ரூபாயை இத்துடன் அனுப்பியுள்ளேன். நீங்கள் என்னை அறிவீர்கள். என் மனசாட்சிப்படி நடந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஆசிகளுடன்… பஞ்சாட்சரம்!’
பஞ்சாட்சரம், ஒரு தற்காலிக நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார். குருவி மூலையை மற்ற எப்போதும் போல் இல்லாமல், அதிக நேரம் நோக்கினார். காணப்படாத இனம்… ஒழிந்து போன பறவைகள்.
மொபைல்போன் ஒளிக்கற்றையின் கதிர் வீச்சு காரணமாய் மரித்துப் போன பறவை இனம், அந்த கூட்டில் இருந்து ஏதோ சொல்வதை போல உ<ணர்ந்தார்.
“லட்சம், லட்சமாக கொட்டிக் கொடுத்தாலும், எங்கள் இனத்தை மீண்டும் உருவாக்கி பறக்க வைக்க முடியுமா மானிடர்களே… மானிடமே… மண், பெண், பொன் ஆசையால் அனுபவிக்கும் நோக்குடனே காடுகளைக் களைகிறாய்… யானை வழித்தடங்களை ஆக்ரமிக்கிறாய், தந்தத்துக்காக யானை, தோலுக்காக பாம்பு, அதிர்ஷ்டத்துக்காக முள்ளிப் பாம்பு, இறகுக்காக மயில் என அனைத்து ஜீவராசிகளையும் அழிக்க முற்படும் உனக்கு, நாங்கள் உளமாற கொடுக்கும் சாபம்! மானிடர்களே… நீங்களே உங்கள் அழிவைத் தேடிக் கொள்வீர்கள். உங்களாலேயே குடிநீர் மாசுபடும். அதை அருந்தி மெல்லச் சாவீர். இயற்கையோடு இணைந்த ஜீவராசிகளைக் கொன்று, எத்தனை காலம் தான் வாழ்வீர்… நீங்கள் சுமக்கும் லஞ்ச லாவண்யம், மத வேறுபாடு இத்தியாதிகளால் நீங்களே முடக்கப்பட்டவர் ஆவிர்கள்…’
பஞ்சாட்சரம் சிலிர்த்துக் கொண்டார்.
மகாபாரதத்தில் கிருஷ்ணன் வம்சாவளியினர் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாண்டது போல, இந்த யுகத்திலும் சம்பவிக்கப் போகிறதா!
பஞ்சாட்சரத்துக்கு என்னமோ விளங்கிய மாதிரி இருந்தது. இங்கு இப்போது நடப்பவை எல்லாம் ஒரு ஆரம்பம் தான். ஒரு ஊழித் தாண்டவத்துக்கு சுருதி சேர்க்கப்படும் படலம். மனித ஜாதி, இப்போதாவது விழித்துக் கொள்ளாவிடில் – இந்த அகில உலகமே, ஒரு குருவி மூலையாக மாறுவதற்கு நம் பேரன், பேத்தி காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை.

– பராசரம் நீலகண்டன் (நவம்பர் 2011)

இயற்பெயர் : பி.எஸ்.நீலகண்டன்
வயது: 73
பணி: சார்ட்டர்டு இன்ஜினியர்.
இவர் எழுதிய சில சிறுகதைகள் பல்வேறு தமிழ் வார,
மாத இதழ்களில் வெளியாகி
உள்ளன. நகைச்சவை கலந்த
சமூக விழிப்புணர்வு தொடர்பான கதைகள் எழுதுவதில் விருப்பம் ­உள்ளவர். பொறியாளர் பணி
மற்றும் இதர பணிகள் நிமித்தமாக எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது
இவரது குறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *