எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து… இதோ இன்னும் அதே விதமாய்…! எதிரணியினர் எனும் நிஜத்தையும் மீறிய மெய்யான பாராட்டுணர்வுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் இந்திரா. அவ்வளவு அற்புதமாய் ஆடிக்கொண்டிருந்தார்கள் அயர்லாந்துக்காரர்கள். வேர்ல்ட் கப்… கிரிக்கெட்டின் மகாபாரத யுத்தம்…! பயமோ பதற்றமோ கொஞ்சமும் இன்றி… துணிந்தவனுக்கு எதுவுமே துரும்புதான் போலும். ஆடட்டும், பரவாயில்லை. “நீ வீரன் என்றால் நான் மாவீரன்…’ – தோனி டீம்னா சும்மாவா…!
வியந்து வியந்து ரசித்துக் கொண்டிருந்தபோது பாத்திரம் உருளும் சத்தம். அவ்வளவாய் மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை அவள். பிரமை என இருந்துவிட்டாள். அடுத்து ஏதோ கீழே விழும் சத்தம். எழுந்து சமையலறை பக்கம் ஓடி… அதிர்ச்சியாய் நின்றுவிட்டாள்.
குரங்குகள்… ஒன்றல்ல… இரண்டல்ல… மூன்று குரங்குகள்… பெரியது இரண்டும் குட்டியுமாய். ஒரு குடும்பமே அவள் சமையலறை சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தது. மூன்றும் மூன்று வேலைகளில் படு மும்மரம். உள்ளே வைத்தால் பழுக்காதென அரைப் பழமாய் இருந்த மேலேயே வைத்த தக்காளியை ஃப்ரிஜ் மீதே ஏறி உட்கார்ந்து “லபக் லபக்’ என வாயில் போட்டபடி பெரிய குரங்கு. அது வாயில் அடைத்துக் கொண்ட வேகத்தில் தவறிக் கீழே விழுந்த பழங்களை எடுத்து மென்றபடி குட்டிக் குரங்கு. கத்திரிக்காய் கூட்டு இருந்த கிண்ணத்தைக் கீழே தள்ளி அதிலிருந்த வேர்க்கடலைகளை சப்புகொட்டித் தின்றபடி மூன்றாவது…!
அத்தனை அதகளத்தையும் பார்த்து உறைந்தது உறைந்தபடி அவள். அங்கு ஒரு மனிதப் பிறவி நிற்பதையே லட்சியம் செய்யாமல் மூன்றும் வயிறே பிரதானமாய் இருந்தன.
ஒருவாறு சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழையாமலே “ச்சூ.. ச்சூ’ என்று கையை ஆட்டி விரட்ட முயன்றாள். அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. தொண்டையை விட்டு வெளிவந்தால்தானே…
மீண்டும் முயற்சித்தாள் கொஞ்சம் சத்தமாக. ப்ரிஜ் மேலிருந்த குரங்கு நிதானமாய் திரும்பிப் பார்த்துவிட்டு “நீதானா?’ எனும் விதமாய் சர்வ அலட்சியமாய் தலையைத் திருப்பிக்கொண்டு வெகு லாகவமாய் ப்ரிஜ் கதவைத் திறந்து ப்ரெட் பாக்கெட்டை இழுத்துப் போட்டு அத்துடன் விடாது தேங்காய் மூடியை “லபக்’ எனக் கவ்விக் கொண்டது. மற்ற இரண்டும் தன் வேலையில்… தக்காளிப் பழமும் கத்தரிக்காய் கூட்டுமாய். என்ன தைரியம் இதுகளுக்கு..! ஆத்திரம் ஆத்திரமாய் வர… அவை அவற்றின் தைரியத்தில் துளி வரவழைத்துக்கொண்டு அடி மேல் அடி வைத்து ஓரமாய் நுழைந்து தேய்க்கப் போட்டிருந்த மத்தை எடுத்துக்கொண்டு பெரிய குரங்கை நோக்கி ஓங்க… சற்றே மிரண்டு போனவையாய் ஒன்றன் பின் ஒன்றாய் வெளியே வந்தன.
கையிலிருந்த மத்தை அக்கால வீராங்கனை புலியை விரட்டியடித்த முறமாய்ப் பாவித்து நன்றியுடன் பார்த்து, “அம்மாடா’ என்றபடி தலையை உயர்த்தியபோது அப்படியே பழையபடி… மரமாகி… ஜடமாகி…
அந்த மூன்றும் ஹாலில் வெளிக்கதவருகில் உட்கார்ந்து அவளைப் பார்த்து “உர் உர்’ரென முறைத்தன.
சப்த நாடியும் ஒடுங்கிப்போய்… என்ன செய்ய… அவற்றை எப்படி விரட்டியடிக்க…? மண்டைக்குள் எப்பொறியும் சிக்கவில்லை… மூளையே மரத்துப் போனதுபோல்…! செய்வதறியாது மறுபடியும் “ச்சூ… ச்சூ…’ ஊஹும்… அசரவில்லை… அசையவில்லை அவை. அவளை மிகவும் கேவலமாய்ப் பார்ப்பதுபோல் பரிகசிப்பதுபோல்… சுய பச்சாதாபம் வேறு.
இருந்தாற்போலிருந்து டி.வி.யிலிருந்து ஏகத்துக்கு உற்சாக ஆரவாரம். அயர்லாந்து சிக்ஸர் வரவு வைத்திருக்கும். அவளுக்கு முன் அந்த மூன்றும் தலை திருப்பி டி.வி. பார்த்து… கண் கொட்டாமல் பார்த்தபடி.. டி.வி.யில் ஒருசேர அவ்வளவு ஜனங்களைக் கண்ட அதிசயமா… இல்லை குழப்பமா? எது வேணும்னாலும் இருந்து தொலைக்கட்டும்… இத்தனை குரங்குகள் ஒட்டுமொத்தமாய் எப்படி உள்ளே நுழைந்தன… பூனைபோல் சத்தமே இல்லாமல்? இதுவரை இப்படி நடந்ததே கிடையாதே…! காடு கழனியெல்லாம், மரங்களெல்லாம் வெட்டித் தள்ளப்படுவதால் ஆயிரக்கணக்கில் படை திரண்டு ஊருக்குள் புகுந்து கொண்டிருப்பதாய் நான்கு நாள்கள் முன் பேப்பரில் படித்த ஞாபகம். அவை அணிஅணியாய்ப் பிரிந்து வீடுகளுக்குள்ளும்…? ஸ்ரீராமநவமி அனுமன் ஜெயந்தி சீசனிலும் குரங்குகள் வருகை அதிகமாக இருக்குமாம். ஆனாலும் இப்படி வீட்டுக்கூடம் வரை? வானர சேனை வரிசை கட்டி மிரட்டும்போது ஆய்வு என்ன வேண்டிக்கிடக்கு… அவற்றை நோக்கி மறுபடியும் மத்தை ஆவேசமாய் ஆட்டினாள். அது என்ன பீமன் கதையா அஞ்சி நடுங்கி ஓட்டம் பிடிக்க…? பெரிய குரங்கு ஆக்ரோஷமாய் முறைத்தபடி அவளை நோக்கி வர… மற்றது இரண்டும் தலை திருப்பி திருப்பி அங்குமிங்கும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன, எதைக் கவ்வலாம் என்றா… டி.வி. போரடித்துவிட்டதா…
என்ன செய்வதெனத் தெரியாமல் இவள் மத்தை மத்தை ஓங்கிக் கொண்டிருக்க… அந்தப் பெரிசு குபீரெனப் பாய்ந்து முழங்காலுக்குக் கீழாய் அவள் புடவையை கொத்தாய்க் கவ்வி… அவள் முகம் பார்த்து கிறீச்சிட்டது.
“”ஐயோ… ஐயோ” எனக் கத்தினாள். பெருங்குரலில் அலறினாள்… வலுவெல்லாம் திரட்டிக் கூச்சலிட்டாள். சட்டையே செய்யவில்லை அது. “”விடு… விடு… விடு… இப்ப விடலன்னா…” விடவில்லையென்றால் என்ன செய்யப் போகிறாள் எனத் தெரியாமலே உளறினாள். அவள் சொல்வது அதற்குப் புரியாவிட்டாலும் அதட்டுகிறாள், மிரட்டுகிறாள் என்றளவில் தெரிந்ததுபோல் முன்னங்கால் உயர்த்தி மேலெழுந்து அவளை உறுத்துப் பார்த்து உறுமியது. புடவை நுனி மட்டும் இன்னும் அதன் பிடியிலேயே. முகத்திற்கு அவ்வளவு கிட்டத்தில் ஓர் அடி இடைவெளியில் குரங்கைப் பார்ப்பது ஜன்னியே வந்தாற்போலாகி விட்டது அவளுக்கு. முடி அடர்ந்து… சிகப்பாய் முகவாயும்… துறு துறு கண்களும்… துருத்திய நாக்குமாய் அந்த முரட்டு முகம்… வியர்வை உடம்பைத் தெப்பமாய் நனைத்து… நா உலர்ந்து கால்கள் வெலவெலத்து… கண்கள் இருட்டிக்கொண்டு வர… தலைசுற்றுவதுபோல்… செத்தே போய்விடுவோமா… ஐயோ, என் பிள்ளை… அவர்…
வெளிக் கதவைத் திறந்துகொண்டு ஓடலாம் என்றால் மற்ற இரண்டையும் தாண்டிக் கொண்டுதானே ஓட வேண்டும்… புடவை வேறு இன்னும் அதன் கையிலேயே…! அக் கணத்தை வாழ்வின் அதி பயங்கர நேரமாய் உணர்ந்து, ஆனது ஆகட்டும் என… நல்லவேளை, பீதியில் நழுவவிட்டு விடாத மத்தால் அதன் தலைமேல் ஓங்கி ஓர் அடி போட்டாள். என்ன தோன்றியதோ என்னவோ அது புடவையை விட்டு விட்டு ஹாலைத் தாண்டிக் கொண்டு ஓட… சுபாவத்திற்கு மாறாய் வெகு அமைதியாய் அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த மற்ற இரண்டும் பின் தொடர்ந்தன.
ஹாலினின்று படுக்கையறை தாண்டித்தான் பால்கனி… அவை படுக்கையறைக்குள் நுழைந்ததோ இல்லையோ பாய்ந்து சென்று கதவை இழுத்துத் தாளிட்டுவிட்டு சோபாவில் விழுந்தாள். படபடப்பு இன்னும் அடங்கவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. சமையலறைப் பக்கம் செல்லவே பயமாக இருந்தது… அது அவ்வளவு அசிங்கமாய் குப்பைக் கூடையே தேவலைபோல்.
டி.வி.யில் மேட்ச் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதன் பக்கமே திரும்பவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தாள். சட்டென பொறி தட்டி… பட்டதெல்லாம் போதும்… இனியாவது ஜாக்கிரதைப்படலாம் என பால்கனி கதவை மூட நினைத்து பெட்ரூம் கதவைத் திறந்தபோது… வந்த மூச்சு மறுபடியும் போயேவிட்டாற்போல்… சவமாகிவிட்டதுபோல்…
அந்த மூன்றும் படுக்கையில் ஏறி உட்கார்ந்து கொட்டமடித்துக் கொண்டிருந்தன. இவளைப் பார்த்து குதித்து ஓடி வர… டமாலெனக் கதவை மூடினாள்.
அழுகையே வந்துவிட்டது. இதென்ன கண்ணாமூச்சி ஆட்டம்…? பால்கனி கதவு திறந்துதானே இருக்கிறது… சனியன்கள், வந்த வழியே போய்த் தொலைக்கலாமில்லே…!
செயலற்று சிந்தனையற்று பத்து நிமிடம்போல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்… எதையுமே நினைக்காமல்… பயப்படாமல்… பதட்டப்படாமல்… சலனமே இன்றி அப்படி உட்கார்ந்திருப்பது ஒரு தப்பித்தல் ஆசுவாசமாக இருந்தது.
கொஞ்ச நேரம்தான். மூலையில் அலாரம் அடித்தாற்போல் புலன்கள் விழித்துக்கொள்ள… “”போய்விட்டிருக்கும் பீடைங்க” என ஒரு இன்ச் இடைவெளிக்கு கதவைத் திறந்து பார்க்க…
சந்தை முடிந்து சிதறிக் கிடக்கும் கூளங்கள்போல் பெட்ரூம். தலையணை… படுக்கை விரிப்பு… போர்வை எல்லாம் மூலைக்கு ஒன்றாக… பால்கனியிலிருந்து இழுத்து வந்து கவிழ்த்த குப்பைக் கூடையின் மிச்சங்கள்… குரங்குக் கைப் படுக்கையறையாய் சின்னாபின்னமாய் பெட்ரூம்…! எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெகு சாதுவாய் ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்து ஒன்றுக்கொன்று பேன் பார்த்துக் கொண்டிருந்தன. இவளைப் பார்த்து உறுமிக் கொண்டு வந்தது பெரிசு. அக் கதவுக்கே எரிச்சலும் சலிப்பும் ஏற்படும் வகையில் இழுத்துத் தாளிட்டு ஹாலுக்கு வந்து ஆத்திரத்துடன் டி.வி.யை அணைத்தாள்.
“கடவுளே… கடவுளே… என்ன செய்வேன் நான்… உதவிக்கு எவருமே இல்லையே…! கதவைப் பூட்டிக்கொண்டு பக்கத்து ப்ளாட், எதிர் வீட்டுக்காரர்களெல்லாம் ஆபீஸ் போய்த் தொலைந்திருக்கிறார்களே… இப்போது என்ன செய்ய… இந்நேரம் மெத்தை தலையணைப் பஞ்செல்லாம் கூடப் பிய்த்துப் போட்டிருக்குமோ? செய்தாலும் செய்யும். இதெல்லாம் அதுகளுக்கு பிரம்ம வித்தையா என்ன… சேஷ்டைகளுக்கென்றே அவதாரம் எடுத்திருக்கே? காசியில் டெலிபோன், இன்டர்நெட் ஒயரெல்லாம் துவம்சம் செய்து… எதுவுமே சரிவர வேலை செய்யாம தவிக்கிறாங்களாம் ஜனங்க… ஐயோ… எப்படி… எப்படி…’ தவியாய்த் தவித்து… நெஞ்சு உலர்ந்துபோய்… களேபரத்தைச் சகித்துதான் ஆக வேண்டும்… சமையலறை சென்று பாட்டில் தண்ணீரையும் கபகபவென விழுங்கியபோது…
டுமீலென பட்டாஸ் ஓசை… எங்கிருந்தோ? இந்தியா விக்கெட் எடுத்திருக்க வேண்டும்… அச் சங்கட நேரத்திலும் நினைத்துக்கொண்ட கணத்தில்… பளீரென யாரோ சொன்னது மனதில் வந்தது. எதற்குமே அஞ்சாத குரங்கு பட்டாஸ் சத்தத்திற்குப் பயந்து நடுங்குமாம். இந்தியாவின் வெற்றிகளுக்காக பையன் வாங்கி வைத்திருந்த பட்டாசுக் கட்டிலிருந்து ஊசி வெடிச் சரத்தினின்று உதிரி உதிரியாய் நான்கைந்து உருவிக்கொண்டு மெதுவாக மிக மெதுவாகக் கதவைத் திறந்து… ஒன்றின் மேல் ஒன்று உருண்டு உருண்டு விளையாடிக் கொண்டிருந்தது குரங்குப் பட்டாளம்.
அச் சுவாரசியத்தில் இவளைக் கவனிக்கவில்லை அவை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஓசைப்படாது கதவு மூடி… மூன்று ஊசி வெடிகளை ஒன்றாய்க் குவித்துக் கொளுத்தி சரேலெனக் கதவிடுக்கில் தரையில் வீசி… கதவை மூடினாள். நல்ல வேளை… அவை நமுத்துப் போகவில்லை. படபடவென சத்தம் வெளிப்பட்டு வந்த வேகத்தில் அடங்கியும் விட்டது. இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டபடி ஊசிப்பட்டாஸ் இடைவெளிக்குக் கதவைத் திறந்து பார்த்தாள்.
குபீரென ஒரு மகிழ்ச்சி உடம்பெங்கும் பரவியது. அந்த மூன்றும் அங்கு இல்லை. சற்றே தைரியமாய் கதவை முழுக்கத் திறந்துகொண்டு உள்ளே சென்று கட்டிலடியில் பார்த்தாள். அங்கும் இல்லை. அறை முழுக்கத் திரும்பத் திரும்பக் கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டு… பால்கனிப் பக்கம் எட்டிப் பார்க்க… அவற்றின் ஜாடையே தென்படவில்லை. மறக்காமல் பால்கனியை மூடினாள். ஏற்கெனவே இருந்த அலங்கோலத்துடன் புதிதாய் பட்டாஸ் காகிதங்கள்…! இப்போது அக் குப்பை ஒரு பெரிய விஷயமாய்ப்படவில்லை. அப்படியே விட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டாள். உலகத்தையே ஜெயித்துவிட்ட பெருமிதம்… குதூகலம்….! நாற்பது நிமிடங்களுக்கும் மேலாய் பட்ட பிராண அவஸ்தை விலகிப்போன ஆசுவாசம்.
பெட்ரூம், சமையலறை சமாச்சாரங்களைச் சுத்தம் செய்து முடித்தபோது களைப்பே தெரியவில்லை. மனம் முழுக்க வியாபித்திருந்த வீராங்கனை உணர்வு அளித்த சுறுசுறுப்பு…!
நடந்ததையெல்லாம் எவரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் பரபரப்பாக இருந்தது. அக்காவுக்கு ஃபோன் செய்யலாமா? வேண்டாம்… ஆபீஸ் வேலையில் மும்முரமாக இருப்பாள். இதோ, நாலு மணிக்கெல்லாம் ஸ்கூலிலிருந்து வந்து விடுவான் கோகுல்.
உடை மாற்றிக்கொண்டு வந்ததும் கோகுல் முதலில் கேட்டது… “”இந்தியாதானே வின் பண்ணது?”
“”தெரியாதுடா. நான் பார்க்கலே. ஏன்னு கேளுடா” டிபன் பிளேட்டை அவன் முன் வைத்து அவன் கேட்காமலே மளமளவென அத்தனையும் சொன்னாள்… கதை சொல்லும் கோர்வையுடன்.
பொறுமையாய் கேட்ட பையன் “”பால்கனி கதவு திறந்து வச்சிருப்பே. அதான்…” சர்வ சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு விளையாட ஓடியே விட்டான்.
எட்டு வயசுப் பையனுக்கு இவ்வளவு அசட்டையா…? அவள் உற்சாகப் பலூனில் ஊசி முனை இறங்கியது. ஆறு மணிக்கு எதிர் பிளாட் பூட்டு திறக்கும் சத்தம். அவசரமாய் வெளியே வந்தவளைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள் சுமதி. உடன் டியூஷன் முடித்து வந்த அவள் இரு குழந்தைகள். அலுவலகத்திலிருந்து வரும்போது அழைத்து வந்திருக்கிறாள். “”உங்களுக்கு விஷயம் தெரியுமா சுமதி…?” … நா நுனியை மடக்கி, வரத் துடித்த வார்த்தைகளை வந்த வழி அனுப்பி வைத்தாள்.. அந்தக் களைத்த முகம் பார்த்து. விடியற்காலையிலேயே எழுந்திருப்பாள். அது முதல் இந்நிமிடம் வரை ஓட்டம்தான் பாவம். இக் கடிகாரத் துரத்தல் இன்னும் சில பல வேலைகளுடன் படுக்கையில் விழும் வரை நீளும். இதெல்லாம் நினைக்கையில் குரங்குடனான சாதனைப் பெருமிதம் அற்பமாய்ப்பட்டது. அச்சமூட்டிய ஒரு புது அனுபவம்… அவ்வளவுதான்.
இப்போது பெருமித உணர்வு அற்றுப் போயிருந்தாலும் அக் கலவர நிமிடங்களின் தாக்கம் நினைவுகளினின்று அகல மறுத்தது.
“”மார்ச் முதல் தேதின்னாலே குடும்பஸ்தனுக்கு அஸ்தியில் ஜுரம்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க. இன்கம்டாக்ஸ் பிடுங்கல் எப்பவும் இருக்கறதுதான்னாலும் இந்த வருஷம் கணக்குப் போட்டு வச்சிருந்ததைவிட அதிக கட் பண்ணியிருக்காங்க. வர்றது கைக்கு வாய்க்குமான டக் அப் வார்னு இருக்கறப்ப இது வேற புது டென்ஷன். எவ்வளவுன்னு சமாளிப்பான் ஒருத்தன்…” அலுவலகத்தினின்று வரும்போதே கவலையும் விரக்தியும் எரிச்சலுமாய் கண்ணன்.
அந் நேரத்திற்கு தன் கவலையை மறந்தாள் அவள். மாறாய் குற்ற உணர்வு குடைந்தெடுத்தது. கோகுல் பிறப்பதற்கு இரண்டு மாதம் முன் உத்தியோகத்தை விட்டு… சிசேரியன் என ஆறு மாதம் வரை வேலைக்குப் போகாமல்… பிறகு ஒருநாள் கண்ணன் வேலை குறித்து பேச்செடுத்தபோது, “”இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே” என்றாள். அந்தக் கொஞ்ச நாள் மாதங்களானதும் ஏறக்குறைய ஒரு வருடம் வீட்டிலிருந்த சுகம் சோம்பேறித்தனமாகி அவளைப் பின் வாங்கச் செய்தது. அது அப்படியே நீடித்து… நீடித்து… புரிந்து கொண்ட கண்ணன் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் விட்டு விட்டான். மிகச் சமீபமாய் ஒரே ஒருமுறை அதுபற்றிப் பேசினாள். அவள் தகுதிக்கேற்ற வேலை இருப்பதாகவும் முயற்சி செய்து பார்ப்பதாக நண்பன் கூறியதை நம்பிக்கையுடனே அவளிடம் தெரிவித்தபோது கறாராய் மறுத்துவிட்டாள். இப்போது எல்லாமே சொல்லிக்கொள்ளாமல் அழையா விருந்தாளியாய் மனதில் வரிசை வரிசையாக வந்து நிற்க…. “இன்னிக்கு எழுந்த நேரமே சரியில்லை…’
“”என்ன சொன்னே… சரியாக் கேட்கலே. ஏன் இப்படி முகத்தைத் தொங்கப் போட்டுட்டிருக்கே? எப்படியோ சமாளிச்சுக்கலாம் விடு. சமாளிச்சுத்தானே ஆகணும்?”
“”இல்லே… வந்து… ஏற்கெனவே மனசே சரியில்லே. இப்ப நீங்க சொன்னது வேற இன்னும் அதிகமா…” பிற்பகல் சித்ரவதை இரண்டாம் முறையாய் பகிரப்பட்டது.
“”உம்… டென்ஷன் வச்சுக்காதே. திரும்ப வராது அதுங்க…”
“”இல்லே… ஒரு தடவை வந்தா திரும்பத் திரும்ப வருமாம்…”
“”வந்தா வரட்டும். வீட்ல பட்டாஸ் ஸ்டாக் வச்சிட்டா போச்சு…”
ஆளையே புரட்டிப்போட்ட அந் நிகழ்வை அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே என எரிச்சல் ஏற்பட்டாலும் பாவம், அதைவிடப் பெரிய கவலையில் இருக்கிறான் என்று சுய சமாதானப்பட்டு அவன் கவலைக்காகக் கவலைப்பட்டு… தன் முதல் கவலையைப் புறந்தள்ள முயன்றபோது… முகத்திற்கு மிக நெருக்கமாய்… புடவையைப் பிடித்தபடி… அவளைப் பார்த்து உறுமிய குரங்கு விடாப் பிடியாய் மனதில் குதி போட்டது.
“”ஒரு ஐடியா… பால்கனி, ஜன்னல் எல்லாத்துக்கும் மெஷ் போட்டுட்டா…? ஜன்னல் வழியா புறாத் தொல்லை வேற. மெஷ் போடத்தான் போறோம். போட்டாகணும். அதுக எப்ப வருமோ என்ன செய்யுமோங்கற பயம் இல்லாம நான் நிம்மதியா இருக்கணும்னா அது ஒண்ணுதான் வழி…” தீர்மானமாய்க் கூறினாள்.
“”நாளெல்லாம் வீட்ல ஜெயிலாட்டம் அடைஞ்சு கிடக்கறே. இப்ப மெஷ் வேற போட்டு உன்னை இன்னும் அடைச்சுக்கணுமா?”
அவளுக்கு எதையாவது உணர்த்த முயல்கிறானா அவன்? அகத்தின் அழகு முகத்தில்… அதற்கும் வாய்ப்பின்றி அவள் பக்கம் பார்க்காமலே நகர்ந்து விட்டானே… நிஜமான கரிசனத்துடன்தான் சொன்னானா… ஆனால் அப்படித் தெரியவில்லையே… ஒருவேளை உள்ளர்த்தம் இருந்தாலும் அது நியாயமாய்த்தான் படுகிறது… ஆனால்…
ஆட்டம் போடுவதில் ஆட்டுவிப்பதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லைபோல… ஆயாசத்துடன் நினைத்துக் கொண்டாள். மதிய ஆட்டம் இரவுக் காட்சியாய் தொடர்ந்து… காட்சிகளாக நீட்சியடைந்து…
பட்டாசு பற்ற வைக்கப்பட்டுவிட்டது. “புஸ் புஸ்’ எனப் புகையுடன் நின்றுவிடுமா? இல்லை வெடிக்குமா?… எனும் நிலையில் அவள்…
– சாந்தா தத் (மே 2015)