குடும்பப் புகைப்படம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,380 
 
 

அப்போது பிச்சைக்கனிக்கு ஆறேழு வயதிருக்கும். பாட்டையா இறந்துபோய் வாசல் நிரம்பி வழிந்தது. பெஞ்சுகளில் திண்ணைகளில் மரத்தடியில் என சாதிசனம் நண்டு சிண்டு பரிவாரங்களுடன் திரண்டிருந்ததில் அவனுக்கு ஒரே கிறுகிறுப்பு. ஆனந்த போதை. மூக்கை உறிஞ்சியபடி பரபரப்புடன் சுற்றி வந்தான். குமாரசாமியைக் குனியச்சொல்லி பச்சைக்குதிரை தாண்டினான். கிளியந்தட்டு, கல்லா-மண்ணா, செதுக்குமுத்து என ஆட்டம் மாறிக்கொண்டே வந்தது. ஐஸ்பாய் ஆரம்பிக்கும்போது செட்டியூரணி பெரிய பொட்டு அத்தை வந்து ‘ஏல இங்கன வாங்க’ன்னு எல்லாத்தையும் பொதுப்படையா கூப்ட்டா.

‘என்னத்தை, சோறாயிருச்சா?’

‘இல்லடே போட்டா புடிக்கப் போறாக!’

‘ஐ’ என உள்ளே ஓடினான். புழுதிப்படை பின் தொடர்ந்தது. கொல்லைப்புறம் சாக்கடைப் பக்க வெயில். ஓசிக்குக் கேட்டு வரவழைக்கப்பட்டிருந்த யாரோ வீட்டு நாற்காலியில் பாட்டையா. வாயைப் பொளந்தாக்ல மூச்சு திணறிக் கொண்டிருந்த பாட்டையா வாயைப் பொளந்தாக்லயே போயிச் சேர்ந்திட்டாரு. இறுக்கித் துணியால் கட்டியிருந்தார்கள். துணி உள்ளாற குழி தெரிஞ்சது. வாயில் கோவணங் கட்டினாப்ல.

ஆயுசில் அவர் நாற்காலியில் உட்கார்ந்ததே இல்லை. தீயதைப் பேசாதே, குரங்குபோல வாய்கட்டிய பாட்டையா. சரிந்து விழுந்து விடாமல் இருக்க அவரைச் சேரோடு கட்டியிருந்தார்கள். யாரும் பெரிய மனுஷன் சாவுக்கு வந்தால் பதறி அவர் எழுந்துருவாருன்னு பயந்துட்டாகளா?… ஒரு படத்தில் ஜெய்சங்கரின் அப்பாவை அசோகன் இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் பெரிசாய்ச் சிரிப்பான்.

ருவ்வா நாணயம் பதித்த இத்தனாம் பெரிய பொட்டு அவருக்கு வைத்தது செட்டியூரணி அத்தையாத்தான் இருக்கும்.

ஃபோட்டோ!

ஞாயிறுகளிலும் யூனிபார்ம் மாட்டித் திரிகிற மணி என்கிற நீளக்காதான் அவசரமா தலைக்குத் தண்ணி போட்டுச் சீவினான். நாடக ஜோடனைத் தூண் போல டவுசர் ஒருபக்கம் தொங்கும் கால்சூம்பிய சேது நாற்காலி தொட்டு நிற்கிறான். அம்சவேணி மூதேவிக்குத் தலை அரிக்கிறது. அம்மாசி, தங்கம், ரமணிபாய், அவன், கோகிலான்னு குந்தியிருக்கும் முன்வரிசை. தாத்தாவோடு ஒரு வரிசை. பின்வரிசை. பெஞ்சுமேலும் பெஞ்சுமேசை மேலுமாய் வரிசைகள். பள்ளிக்கூட பசங்களும் வாத்திமார்களுமாய் வருசக் கடைசியில் இப்படி எடுப்பார்கள்.

‘நீரு முன்ன வாரும்… டே அங்கன போ’ – போட்டாக்காரன் ஆளுங்களை மாத்தி மாத்தி நிக்க வைக்கிறான். அவன் மாத்தாத ஒரே ஆளு பாட்டையாதான். தூங்கறாப்ல அவரைப் பாக்க குறட்டை கேக்குறாப்லயே இருக்கு. மூச்சை ஒசரத்லேர்ந்து உருட்டி விடும் மனுசன். எவனெவனோ வந்து நிற்கிறான். அவங்க அத்தனை பேர்ல பாட்டையா மாத்திரம் குளிச்சிருக்காரு. துன்னீரு பூசி புதுவேட்டி. கழுத்துல மாலை.

‘ரெடி!’

அவன் அவசர அவசரமாய் மூக்கை உறிஞ் – க்ளிக்!

இன்னிக்கும் வீட்ல அந்தப்படம் கெடக்கு. தாத்தா மூஞ்சியே பரவால்லன்றாப்ல பூராப் பேர்த்துக்கும் முகத்ல ஒரு சவக்களை. அருக்காணி மாடுங்க பின்னாடி ஓடி ஓடி அள்ளிக் குமிச்ச சாணியை அப்டியே போட்டுவிட்டு ஓடிவந்தாள். ஊர்ல திருட்டு பயம் சாஸ்தின்னு அவ கவலை. குலசேகரன் சின்னப்பயலை நம்பி கடையை விட்ட்டு வந்திருக்காரு. பய காசெடுக்க மாட்டான். ஆனா என்ன, மிட்டாய் ஒண்ணொண்ணா ருசி பாத்திட்டிருப்பான். ஐயாவைப் பார், அவர் கவலை வேற. பாட்டையா சாவுக்கு பண்டு பிரிச்ச பணம் பாதிதான், அதும் சாராயக்கடைல மறிச்சி வாங்கிட்டு வர வேண்டியதாயிட்டு. சாராயப்பார்ட்டி பின் வரிசைல நிக்குது. தவசீலன், உத்தமபுத்திரன், ஞானஒளின்னு பேருக்குக் கொறைச்சல் இல்லை.

பெரியமீசை கிருட்னையா முதல் ஞாயித்துக்கிழமை கசாப்பு போட விட்டுப்போன எரிச்சல்ல நிக்கிறான். சித்தாள் பரமசிவம், ஒருநாள்ச் சம்பளம் போச்சு அவனுக்கு. கூட யாரு, செல்வராஜ். பாவம் வார்னிஷ் அடிச்சி வயிறு அரிச்சிச் செத்துப் போனான். கொத்துக்கறி மாஸ்டர் தங்கப்பன், வண்டித்தண்ணி எடுக்கும் துரைராஜ் எல்லாம் அப்ப சின்னப் பயகளா நிக்கறாங்க. வடிவேலு ரெண்டாந்தாரம் கெட்டிட்டாரு. ஐயோ மாமால்ல அது. பாம்பு கடிச்சி அவரு செத்துப் போயி, செட்டியூரணி அத்த இப்ப பொட்டு வைக்கிறதில்ல. அம்சவேணி கட்டிக்குடுத்த எடத்ல ஸ்டவ் வெடிச்சி எறந்து போனா. கொலையா தற்கொலையா விபத்தா இன்னிவர தெரியல. ரமணிபாய்க்கு வேற ஜாதிப் பையனோட லவ்வு. அது அமையலன்னு அப்புறமா அவ கல்யாணங் கட்டவே இல்ல. இப்ப அவளுக்கு அலங்காரமே ஒட்டாமப் போச்சு.

அவங்க தலைமுறைன்னு பாத்தா ஓரளவு தலையெடுத்தது அவன்தான். சேது பஸ் ஸ்டான்டில் போன் பூத் வெச்சிருக்கான். அம்மாசி டீ கிளாஸ் களுவுறான். குமாரசாமி லாட்டரிச் சீட்ட விசிறிட்டே பஸ் பஸ்ஸா ஏறி இறங்குறான்… அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது. எலேய் அதிர்ஷ்டம் உன்னிய எப்ப அழைக்கும்?

பிச்சைக்கனி படிச்சவன்லா. அவங்கப்பா மூணாவது பெயில்னா அவன் எட்டாப்பு ஃபெயில். என்ன, கார் ஓட்டக் கத்துக்கிட்டான். இப்ப அவன் நடராஜ முதலியார்ட்ட கார் டிரைவர். டிராஃபிக் சிக்னல் மாதிரி பெரிய குங்குமம் வெச்ச முதலியார். முன்பல் ஒருபல் தங்கப்பல். எவன் கோவத்ல அந்தப் பல்லக் கழட்டி விட்டானோ யார் கண்டா. முதலியார் ஷோக் பேர்வழி. கண்ணுக்கு மை அடிப்பாரு. இவனுக்கும் தொப்பி வெள்ளை யூனிஃபார்ம் எல்லாம் உண்டு. அப்பப்ப இங்கிலீஷ் பேசற வேலை. என்ன பேசிறப் போறான். எஸ் சார், எஸ் சார்-தான். நோ…ன்னா வேலை போயிரும்ல?

நல்ல வேலைதான். சோத்து டயத்துக்கு கூட இருந்தா சாப்பாட்டு பிராப்ளம் நோ. நல்ல சாப்பாடே மாட்டும். அது சரி, வீட்டுக்குப் போகவே பிரியப்படாத டிரைவர்னு அவருக்கும் அவனைப் பிடிச்சிப் போச்சு. என்ன ஒரு இதுன்னா, சிலப்ப தூரமா முதலியார் எங்கியாச்சும் வெளியூர் போனா சங்கீதம் கேப்பார். டேப்ல ஒரு கம்னாட்டி ந ந…ன்னு ஒரே எழுத்துலயே அரை மணி நப்பித் தள்ளீருவான். அப்றம் பாட்டு. அதும் புரியாத பாஷைதான். மண்டைய மண்டைய ஆட்டிட்டு இந்த மனுஷன் ரசிச்சாறது. இட்லிக்கு அரைக்குறாப்ல!

கருவேலம்பட்டி முத்துப் பேச்சிக்கும் பிச்சைக்கனிக்கும் கல்யாணம். மாப்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லன்னதும் பொண்ணூட்டுக்காரங்க, சரிங்க, எல்லார் வூட்லயும் இது சொல்றதுதானேன்றாப்ல சிரிக்காக. முத்துப்பேச்சி கடும் உழைப்பாளி. கறு கறு உடம்பு. எண்ணெய் போல வியர்வை. ஒரு பல்லு எடுப்பாப் போயி சின்ன வயசுல அவ விரல் சூப்புவான்னு சொல்லிட்டது.

அவனுக்கும் அவளுக்கும் முதலாளி புதுத்துணி எடுத்து கையிலயும் நூறு ருவ்வா குடுத்தாரு. எவ்ளவு? ருவ்வா நூறு! மனுசன் சொக்கத் தங்கம்லா. மச்சான் அந்தாக்ல அவரு கால்லியே வுளுந்துட்டான். ‘ஏம்ல அளுகற? ஏல ஆம்பளப்புள்ள அளுகலாமால?’-ன்னு தட்டிக் குடுத்திட்டே சட்டைப் பையில திருப்பியும் கை வெச்சாருல்ல, சர்த்தான். இன்னூர் நூர்-ருவ்வா தரப் போறாகளாக்கும் பாத்தான். கர்ச்சீப்பை எடுத்து வாயைத் தொடைச்சிட்டே ‘சரில, சீக்கிரம் வேலைக்கு வந்துரு’ன்னாரு.

நம்ப கல்யாணத்தப் பாக்க ஐயாவுக்குக் கொடுப்பினை இல்லியேன்னு வாரபோது நெனைச்சிக்கிட்டான். திரும்பியும் அளுக வந்திட்டது. அவனும் அம்மாவும் போயி எல்லார்த்துக்கும் ஒரு வெத்தல ஒரு பாக்கு வெச்சி அழச்சாங்க. பத்திரிக அடிக்கல. சொக்கநாதர் கோவில் இல்ல, கருவேலம்பட்டில? அங்கதான். காலைல டாண்ணு ஒம்பது மணிக்கு. ஐய அது தோதுப்டாது. ஒராளு வரணும், ஒராளு வரணும்னு தொட்டுத் தொட்டு லேட்மார்க்காயிரும். எல்லாரும் ஸ்ட்ரெய்ட்டா ஸ்பாட்ல ஜாயின்ட் ஆயிக்குவம். பேபியையும் அழச்சிட்டு யூ கம். ஸ்வீட் பேபி – கொஞ்சம் அழுத்திக் கிள்ளிட்டாம் போல. வீல்னு ஒரு எடுப்பு எடுத்திட்டது.

டர்ட்டி பேபி.

ராகு காலம், சகுனம்லாம் யாரோ பார்த்துச் சொன்னாங்க. அப்புறம் கிளம்பினார்கள். தாத்தாவைக் கும்பிட்டான். சட்னு ஒரு யோசனை. அதான, நம்ப கல்யாணத்துல எல்லாரோடயும் ஒரு படம் எடுத்தா என்ன! வீட்ல என்ன படம்டா இது. பொழுதன்னிக்கும் எளவை ஞாபகப் படுத்திக்கிட்டு. ஐயா எறந்தப்ப அவரை மட்டும் படம் பிடிச்சி மாட்டினான். வாய்ல கோமணம். ஐயா சாவுக்கு பண்டுப் பணம் கலெக்ஷனுக்கு வசம்மா ஆளு அமையல.

என்னா விசயம்னா… படம் எடுக்கறதே அங்க சரித்திர நிகழ்ச்சியால்ல ஆயிட்டது. ஒண்ணில்ல, இந்தச் செருப்பு. புதுசு வாங்கணும் வாங்கணும்னு மனசுல எண்ணம்தான். தேயத் தேய எருக்க இலையா வாழைப்பழத் தோலா நையிற வரை விடுறதில்ல. ஊக்கு குத்திக் குத்திப் போட்டுக்கிறது. கடோசில சாமி ஆள விடுன்னு ரெண்டு துண்டா பிய்யும். பிறகு பட்ஜெட் போடணும்…. கடைக்குப் போகணும். அண்ணாச்சி, பாத்து வெலை கொறஞ்சதா எடுங்க – அண்ணாச்சி இதைவிட மலிவா இல்லீங்களா – வெலை தாண்ணாச்சி நம்பளுக்குப் பாத்து போடணும்… நல்லா ஒழைக்குங்களா? பிஞ்சி கிஞ்சி போவாதே – கடைக்காரன் ‘நான் இன்னிக்கு முளிச்ச முளி சரியில்ல’ன்னு நொந்துக்குவான்!… அந்த மாதிரிதான் எல்லாமே. போட்டா புடிக்கறதும் இறந்தவங்க நியாபகமா மட்டுந்தான். வேற வழியில்லன்னுதான்னு ஆய்ப்போச்சு. தாத்தாவையும் ஐயாவையும் இருட்டுல பாக்க நமக்கே பயந்து கெடக்கு.

கலியாணத்தில் குருப் போட்டோன்னு நினைக்கவே சந்தோசமா இருந்தது. கருவேலம்பட்டில டெய்லர் கடை மேல வேல்முருகன் ஸ்டூடியோ. ல் – ன் – எழுத்துல புள்ளிக்கு பதில் வேல் போட்ருப்பான். சரோஜாதேவி, கேயார் விஜயா, கரகாட்ட டிரஸ்போட்டு வாள்கம்பிய நீட்டும் எம்ஜியார் – படம் அரசிளங்குமரி. ஆம்பளைப்படம் போட்டு பொம்பளையாள்ப் பேர் போட்ட போஸ்டர்னு கூட்டுக்காரன்கிட்ட சந்தேகங்கூட கேட்ட நியாபகம். தீயணைப்பு ஆபிஸ்ல சிவப்பு வாளில மண்ணைக் கொட்டி, முட்டாப் பயக /தீ/ன்னு எழுதியிருப்பாங்க. அது போல.

நடிகர் திலகம் தூக்கின ரெண்டு கை மட்டும் தெரியும். கீளேர்ந்து ஆள்த் தெரியாது. சோகப்பாட்டுக்கு மனுசனை அடிக்க ஆளில்லை.

சாதா படம் எடுத்தாலும் கேட்டா கலர்ல டச் அப் பண்ணித் தருவாக. பூவராகன் பெஞ்சாதி குளியாமயிருந்தா. சாதாரணமாவே அவ குளிக்கிறதே இல்லைன்னாலும் இது வேற குளியல். ஜடை பின்னி பூச்சூடி வேல்முருகன்லதா படம் புடிச்சது. புல்தரை – புதர் – குட்டை – கொக்கு – வானம் – நிலான்னு ஒரு பின்னணிப் படம். வயித்துவலிக்காரி ஒதுங்கற முள்க்காட்டுக்கும் இதுக்கும் வித்தியாசமா இருந்தது… இடுப்பு உசரம் கண்ணாடி ஒரு சைடு வெச்சி, பின்பக்க பூவும் ஜடை அலங்காரமும் பலூன் வயிறும் தெரியிறாப்ல ட்ரிக் ஷாட்! முன்னியும் பின்னியுமா சலூன்ல தன்னைப் பார்த்திருக்கிறான். இது போட்டால்லா!

கருவேலம்பட்டிக்கு சாராரணமா நடந்து போறதுதான். சரி கல்யாணமாச்சேன்னு மாப்ள டவுண் பஸ்ல போயிறலாம்னு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தா… பேசி வெச்சிக்கிட்டாப்ல நிக்குது பாரு ஒரு படை. ‘வாடே மாப்ளே’ன்னு ஒரு வரவேற்பு. மாட்டிக்கிட்டியான்றாப்ல. ‘ஆமாஞ் சித்தப்பா’ன்னு அசட்டுச் சிரிப்பு சிரிச்சான். நேரா எல்லாவரும் வீட்டுக்கே வந்து ஜாயின்ட் பண்ணீர்ந்தா ஒருத்தன் லேட்டா வருவான். ஒருத்தன் முந்தின்னாள் ராத்திரியே வந்து டேரா போடுவான்…. அவசர அவசரமா எல்லாரும் வண்டில ஏறினாங்க. ‘ஏம்ல மூதி பறக்கே, பேதில போவான். ஒன்னிய விட்ட்டுப் போவாகளா?’ன்னு ஒரு பயலுக்கு முதுகுல வெச்சான். குளியாம பல்லு வெளக்காம கல்யாணத்துக்கு வார மொகரைகளைப் பாத்தாலும்…

ஏற்கனவே புதுத்துணி போட்டதும் அவனுக்கு எழவு நியாபகம் வந்திட்டது. தீவாளிக்குக் கூட இல்ல. எழவுக்குத்தான் அதும்போய்ச் சேர்ந்தவனுக்குத்தான் புதுத்துணி, அதும் பண்டு பிரிச்சி எடுக்கறதுன்னு ஆயிட்டது. கஷ்டப்பட்டு மனசைத் தேத்திக்கிட்டான். அட பைத்தாரப்புள்ள, ஒனக்கு இன்னிக்குக் கல்யாணம்டா. நீ சந்தோசமா இருக்கணும்… ‘மாப்பிள்ளன்னா மாப்பிள்ள மண்ணாங்கட்டி தோப்புல’ன்னது மீனாட்சி. சேதுவோட நாலாமத்த மவ. ஒடம்பு சூட்டுக்குத் தலைல புண்ணு வெடிச்சி மொட்டை போட்டிருக்கு. அவ பொறந்தப்ப நாலாவதும் பொண்ணாயிட்டேன்னு சேது ஒருமாசமாப் பாக்கவே போவல… மீனாச்சியப் பாத்து அவன் ஒரு சிரிப்பு சிரிச்சான்.

‘டிக்கெட்?’ என்று பின்னால் குரல். காஜா மாணிக்கம் ‘மாப்ள டீய்ட் எடு. பதினேளு முழுசு. ஆறு அரை – நான் எண்ணிட்டேன்’ என்று குரல் கொடுத்தான்.

‘அட எடுடே என்ட்ட சில்ர இல்ல…’

‘ஐந்நுறா ஆயிரமா… நீ நோட்ட நீட்டுடே. அவரு தர்றாரு சில்ர… முன்னாடி வாங்குவாக. அங்கிட்டுப் போவீக…’

பிச்சைக்கனி உள்ப்பைலேர்ந்து நூறு ருவ்வாத்தாளை எடுத்தான். சிப்ஸ் கோபாலும் சலூன் பழனியும், ‘தபாருடே, மாப்ள சாய்ந்தரம் ஒம்பாடுதான் பாத்துக்க’ என்று கண்ணில் போதையுடன் சொன்னார்கள்.

‘பதினாறு முழுசு. நாலு அரை – கருவேலம்பட்டி’

‘ஆறு அரைன்னாகளே?’

‘சரி குடுங்க’

ஊர்க்கோடி ஆத்துப்பாலம் தாண்டி சொக்கநாதர் கோவில். முத்துப்பேச்சி மெருகுபோட்ட வெந்நீர்த் தவலைக்கும் அண்டாவுக்கும் நடுப்புற உக்காந்திருந்தா. உடம்பு சூட்டுல அவ தலைப்பூவு ஒரு மணி நேரத்தில் வாடிட்டது. பவுடர் போட்டிருந்தா, சாக்கடைல கொசுமருந்து அடிச்சாப்ல. அவ மொகம் சந்தோசத்தில் வீங்கியிருந்தது. அவன் பாத்ததும் அவளுக்கு வெக்கம் தாங்கல! கூட அவள் தங்கச்சிக்கு ஐயோ அதைவிட! தங்கச்சி மனசுல தனக்கு வரப்போற மாப்ளை எப்டியிருப்பாருன்னு ஒரு குருட்டு யோசனை. அங்க எல்லார்த்தையும் விட சந்தோசமா இருந்தது தங்கச்சிதான்.

முத்துப்பேச்சியப் பார்த்ததும் அவனுக்குள்ள ஒரு கிறுகிறுப்பு. எல்லாப் பிரச்னையும் இனி தன்னைப்போல தீர்ந்துரும்னு ஒரு கோட்டிக்கார யோசனை. அவ அப்பா அவனுக்குப் பொட்டு வெச்சாரு. ராசையாவோட மவன் அப்பதான் தரைல ஒரு வாதாங் கொட்டையப் பார்த்து ‘ஐ’ன்னு எடுக்கப் போனான். அவங்கப்பன் வெச்சான் முதுகுல. ‘சனியன் எங்கிட்டுப் போனாலும் இதுகளுக்குப் பொறக்கித் திங்கிற புத்தி போவுதா பாரு. எழவெடுத்த சவம்.’

அவன் மறந்த வார்த்தை. பிச்சைக்கனி திரும்பிப் பார்த்தான். ‘தம்பி கோளாறா வலதுகால முன்ன வெச்சிப் போவே’ என்றான் ராசையா. சேதுவும் தங்கப்பனும் கோவில் வாசல்ல நின்னு பீடி குடிக்காங்க. ஏம்ல ஒரு அஞ்சி நிமிசம் இந்த கட்டப்பீடி இளுக்காட்டி செத்தால போவீக? – பிச்சைக்கனி கேக்க நினைச்சான். சேது அவனைப் பார்த்துச் சிரிச்சி ‘மாப்ள இன்னிக்கு நம்மளக் கவனிச்சிறணும்’னான்.

‘அத்தான் ஒன்னிய கார்ல கூட்ட்டுப் போவாகளாக்கா?’

‘… … …’

‘நீ போகச்சில நானும் வாரேங்க்கா’

முத்துப்பேச்சி ஓரக்கண்ணால மாப்ளைய பார்த்தா. ஒட்ட வெட்டிய தலைமயிர். நெத்தில மஞ்சக்கயிறு கட்டி மாப்ளைப் பட்டம். தொண்டை எலும்பு கோலிக்குண்டாட்டம் முட்டிக்கிட்டு நிக்குது. ‘அக்காவ் கெண்டையும் கெளுத்தியுமா சமைச்சிப் போட்டு நீதான் அத்தானைத் தேத்தணும்.’ முத்துப்பேச்சி வெக்கப்பட்டா. அதைப் பாக்கவே இவனுக்கு மிதக்கிறாப் போல இருந்தது.

ஐயர் மாலை எடுத்துக் குடுத்தார். மாலையப் போட்டுக்கிட்டதும் அவனுக்கு திருப்பியும் சாவு நியாபகம் குமட்டியது. ச்சை ஈ போல என்னாடா இது வெரட்ட வெரட்ட போவாம…. அவளைப் பார்த்தான்… இவளுக்குத்தான் எவ்ளோ சந்தேசம்டா. ஏல இனி நீ ஒண்ணுங் கவலைப் படண்டாம். எல்லா அவ பாத்துக்குவா. மாலைய மாத்தி மஞ்சத்தாலி கட்டினப்ப, அப்பாடான்னு எதோ மலையவே பெறட்டிட்டாப்ல ஒரு ரிலாக்ஸ்! ஆசையா அவ கையப் புடிச்சான். அந்த சொரசொரப்பத் தொட்டதும் அழுக வந்திட்டது. எதுக்கெடுத்தாலும் அளுவாதடா முண்டம். விட்டா நாள்ப்பூரா அளுவாம் போல. உழவு மாடுங்க போல ரெண்டு பேருமா சாமியச் சுத்தி வந்தாங்க. நீர்மாலை சுத்தறாப்ல திடீர்னு ஒரு எண்ணம். பானை ஒடைச்சி பட்டினத்தார் பாடி… சை என்ன கருமாந்திரம்டா இது.

‘ஸ்வாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடலாமா?’

‘வேணா. அதுக்கு வேணா தனியா காசு வாங்கிக்கிடுங்க.’

ஒர்ருவ்வா ரெண்டுருவ்வான்னு மொய் எழுதி முடிஞ்சதும் அவங்கவங்களுக்குச் சாப்பாட்டு அவசரம். பாவம் யாருமே காலைல சாப்பிட்டிருக்க மாட்டாகன்னு நினைச்சிக்கிட்டான். பையைத் தொட்டுப் பார்த்தான். ‘வாங்க போவம். மயினி வாங்க. அத்த வாங்க. மச்சான் பேபி தூங்கிட்டதா. தூக்கிக்க.’ முனியாண்டி விலாஸ்ல இடம் காலியாக ஆக ஆளாளாப் போயி சாப்ட்டு வந்தாங்க. காச எண்ணியெண்ணிக் குடுத்திட்டே அவன் முத்துப் பேச்சியப் பாத்து சந்தோசமா சிரிச்சான். தங்கச்சிக்கு வெக்கம்! அவனும் முத்துப் பேச்சியுமா உள்ள போனப்ப மணி ரெண்டு.

‘மூளைப் பொரியலு வெச்சிக்கறியா?’

ஊகூம்னு அவ தலையாட்டினா அவன் விட்ருவானா? ‘சும்மா சாப்டு. அண்ணே ஒரு மூளைப் பொரியலு எஸ்ட்ரா!’

‘பணங் குடுங்க’

‘ஏன் போம்போது தரப்டாதா?’

‘அப்டியே மறந்தாக்ல அந்தாக்ல போயிட்டா?’

சண்டைபோட யோசனையாய் இருந்தது. ‘இந்தா பிடி’ என்றான்.

வெளிய வந்தான். மீந்த பணத்தை எண்ணிப் பார்த்தான். ச் படம் எடுக்க சங்கதியத்தான் தள்ளிப்போட வேண்டியதாயிட்டு. அந்த எளவுபயமும் ராத்திரி பயமும் கன்டினியூடி ஆகவேண்டிதான்… பஸ்ல இப்ப பொண்ணு வீட்டுக்கார ஜனங்க வேறயில்லா? கண்டக்டர்னு அவனே கூப்ட்டான். ‘அண்டாவ அப்டி முன்னாடி வைக்கலாமில்ல. ஆரு தூக்கிட்டு ஓடப் போறாக?’ன்னுக்கிட்டே கண்டக்டர் வந்தான்.

பஜார் வழியா வண்டி போச்சு. டெய்லர் கடை வந்ததும் குனிஞ்சி மேல பார்த்தான். இப்பவும் நடிகர் திலகத்தோட தூக்கின கைதான் தெரிஞ்சது. உருவம் தெரியல. – முத்துப்பேச்சி முழுகாம இருக்கச்சில வளைகாப்புக்கு படம் எடுத்திருவோம். ட்ரிக் ஷாட்னு நினைக்கவே சிரிப்பு வந்திட்டது. பஸ்ல ஆரும் பாத்திட்டாகளோன்னு பதறி சுத்துமுத்தும் பாத்துக்கிட்டான். கூடவே நெஸ்ட் குரூப் போட்டோ எப்போன்னு ஒரு யோசனை. ஒருவேளை ஆத்தா செத்து…. சை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *