வேலைக்கு போய்வருவதற்கு சௌகரியமாயிருக்கும் என்றுதான் வீடுபார்க்க வேண்டியிருந்தது என்றாலும், பார்த்த முகங்களையே பார்த்து… பேசிய விஷயங்களையே பேசி என்பதிலிருந்து விடுபட்டு, புது இடத்திற்கு போனால் நன்றாக இருக்கும் என்பதும் காரணமாக இருந்ததினால், சித்தப்பாவிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று சொல்லியாகிவிட்டது.
ஒவ்வொரு சந்தர்பத்திலும், ஒவ்வொரு காரணத்திற்காகவும், சித்தப்பாவிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று சொல்வது வழக்கமாகத்தான் இருக்கிறது. சொந்தவீடு என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் பொருளாதாரத்தில், ஒரு நல்ல வீட்டில் நிம்மதியாகவும், சௌகரியமாகவும் குடியிருப்பதற்கு கூட வாய்ப்பற்ற நாட்கள் இதுமாதிரி சமயங்களில் ஞாபகத்திற்கு வரும்.
சிமெண்ட் ரோடு போட்டதால் வீடு பள்ளமாகி, மழைநீர் உள்ளே வந்ததால் ஒரு தடவையும் … நல்ல தண்ணீருக்கு சிரமம் ஏற்பட்டு சமாளிக்கமுடியாமல் போனதால் ஒரு தடவையும் … வீட்டுக்காரர் வீட்டை வேறொருவருக்கு விற்றுவிட்டதால் ஒரு தடவையும் … வீட்டுக்காரரின் மகள் தூக்குபோட்டு இறந்து போனதால் ஒரு தடவையும் என்று இதற்கு முன்பு வாடகைக்கு வீடு மாறியதைப்போல் இல்லை இந்த தடவை.
திருமலை என்கிற சித்தப்பாவின் நண்பர் ஒருவர் புதுவீடு ஒன்று கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதன் மேல் தளத்தினை வாடகைக்கு விட இருப்பதாகவும் “கேட்டுச்சொல்கிறேன்” என்று சித்தப்பா சொன்னதும், வீடு பார்க்கும் வேலை அலைச்சல் இன்றி முடிந்துவிடும் போல் தெரிந்தது.
திடீரென சித்தப்பா போன் செய்து, திருமலையிடம் பேசிவிட்டதாகவும் உடனடியாக போய் சாவியை பெற்றுக்கொள்ளும்படியும் சொல்லவே, வாடகை மற்ற விபரங்களை பேசாமல் எப்படி சாவியை பெற்றுக்கொள்வது என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. நேரில் போய் பார்த்துவிட்டு பேசிக்கொள்ளலாம் என்று திருமலையை பார்க்கபோனபோது அவரது புது வீடு வேறொரு பகுதியில் இருப்பது தெரியவந்தது.
வீட்டின் கட்டுமானப்பணிகளை கவனித்து வந்த அவரது உதவியாளர் கருப்பையா என்பவருக்கு போன் செய்து, நான் வருவதாகவும், சாவியைக் கொடுக்குமாறும் சொல்லிவிட்டு, எனக்கு கருப்பையாவின் முகவரியை தந்தார். வேறெந்த விபரங்களும் அப்போது அவரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத நேர நெருக்கடியில் அவர் இருந்தது எனக்கு சிரமமானதாகப் போயிற்று.
திருமலையின் உபரிச்சொத்தாக அந்த வீடு இருக்கவேண்டும் என்று பட்டது. தான்தோன்றித்தனமாக நான் ஏதாவது அவரிடம் கேட்கப்போய், சித்தப்பா கோபித்துக்கொள்வாரோ என்பதும்கூட திருமலையிடம் ஒன்றும் பேசாமல் வந்ததற்கான காரணங்களில் ஒன்றாகவும் இருந்தது.
சித்தப்பாவிடம் திருமலையை போய் பார்த்த விபரத்தை சொன்னபோது, உடனே போய் வீட்டை பார்த்துவிட்டு வரச்சொன்னார். வாடகை உள்ளிட்ட எந்த விபரங்களையும் பேசவில்லையே என்று நான் சொன்னபோது “அதெல்லாம் நான் பேசிட்டேன் பத்தாயிரம் ரூபாய் வாடகை” என்று சித்தப்பா சொல்ல நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
“அவ்வளவு அதிகப்படியான வாடகை நமக்கு கட்டுப்படியாகாது. வேற வேணும்னா பார்த்துக்கலாம்” என்று நான் உடனடியாக மறுத்தபோது சித்தப்பா திட்ட ஆரம்பித்தார்.
“எதையுமே போய் பார்க்காமயோ விசாரிக்காமயோ முடிவு பண்ணாத. திருமலை நம்மள அந்த வீட்டை எடுத்துக்கச்சொன்னது ஏதோ ஆள் கிடைக்காம இல்லை. அவரோட வீட்டுக்கு நம்பிக்கையானவங்களும், பிரச்சனையில்லாதவங்களும் வரணும்னுதான் நமக்குன்ன உடனே சரின்னு சொன்னார். அவ்வளவு பெரிய மனுசன் சொல்றார். போய் பார்த்துட்டு வந்து விபரத்தை சொல்லு. என்ன பண்றதுன்னு நான் சொல்றேன்” என்று சித்தப்பா சமாதானப்படுத்தினார்.
எனக்கென்னவோ கிளம்பிப்போவதற்கே விருப்பமில்லை. முப்பது நாட்கள் என்பது கண்மூடி கண் திறப்பதற்குள் கடந்து விடும். மாதம் பிறந்தால் சுளையாக பத்தாயிரம் ரூபாய் வேண்டும். போய்பார்த்து என்ன செய்யப்போகிறோம் என்று தோன்றியது.
திருமலையின் புதுவீடு இருப்பதாகச்சொன்ன நகர்ப்புற பகுதி எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானதும், பிரசித்திபெற்ற பஞ்சாலைபகுதியுமாகும். பத்திரிக்கைத் துறையின் பயிற்சிக்காக நூலகத்திற்கு செல்ல வேண்டி சில வருடங்களுக்கு முன்பு அந்த பஞ்சாலையை நான் கடந்து போவது வழக்கம்.
கருங்கற்களாலான மிக நீளமான காம்ப்பௌண்டு சுவரின் இரும்பு கதவில் யானைகள் அணிவகுப்பது போன்று பித்தளையில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். நிர்வாக அலுவலகத்தின் முகப்பில் மேலாடை சரிந்த நிலையில் விளக்கினை கையில் ஏந்தி நிற்கும் பெண்களின் சிலைகள் இரண்டு பக்கமும் வரிசையாக இருந்து நடை பாதைக்கு அழகூட்டும். அருகிலேயே சிறிதாக ஆலைநிர்வாகத்திற்குட்பட்ட விநாயகர் கோயில் மற்றும் அடர்த்தியான மரங்கள் என்று முகப்பு அற்புதமானதாக இருக்கும். நான் முன்பு இந்த பகுதியினை கடக்க நேரிடும்போது பஞ்சாலைத்தொழிலாளர்கள் தங்களது வேலை முடிந்து, வரிசையாக சைக்கிளை நிறுத்தி வாசலில் இருக்கும் பழ வண்டியின் அருகில் பழங்களை சாப்பிட்டுக்கொண்டும், பக்கத்திலுள்ள பலகாரக்கடையில் பலகாரங்களை சாப்பிட்டபடியும், தேனீர் அருந்தியபடியும் கூட்டமாய் நிரம்பியிருப்பதுண்டு.
அது, பஞ்சாலை வேலைகிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம். அங்கு வேலை செய்பவர்களுக்கு மரியாதையும், இறுமாப்பும் இரண்டறக்கலந்திருக்கும். சில வருடங்கள் வேறு பகுதியில் குடியிருந்து விட்டு தற்பொழுது வந்து பார்க்கும் பொழுது எல்லாமே மாறிவிட்டிருந்தது. தொழில் நசிவு, தொழிலாளர்களின் கூலி பிரச்சினை, விலையுயர்வு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளால் கடன்பட்ட பஞ்சாலை நிர்வாகம், கடனுக்கு ஈடாக ஒரு தேசிய வங்கியிடம் இந்த ஆலையை இழக்க, இப்போதைய நிலையில் ஆலைப்பகுதி நவீன அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டிருந்தது. கதவருகே வந்து “கருப்பையா சாரை பார்க்கணும்” என்று நான் சொன்னதும்
“எங்கிருந்து வர்றீங்க?” என்ற கேள்விக்கு, “திருமலைசார் வீட்டு விசயமாய்” என்று நான் சொல்ல அலுவலகத்திற்கு செல்வதற்கான வழியைக் காட்டினர்.
பஞ்சாலை நிர்வாக அலுவலக கருங்கல் கட்டிடமே அடுக்குமாடிக்குடியிருப்பு நிர்வாக அலுவலகமாகவும் பழமை மாறாமல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. பழையனவற்றின் அடையாளமாய் விளங்கேந்திய பெண்ணின் சிலையில் ஒன்று மட்டும் இருந்தது. பஞ்சாலை கோடவுன் தற்போதைய நிர்வாக வசதிக்கென வேறு பயன்பாட்டில் இருந்தது. பிள்ளையார் கோவில் பொலிவுமாறாமல் வழிபாட்டு உபயோகத்தில் இருந்தது.
பஞ்சாலையின் மற்ற அத்தனை அடையாளமும் தொலைந்து போய், எண்ணிக்கையில் அடங்காத தொழிலாளர் குடும்பங்களின் நசிந்து போன வாழ்க்கைச் சுவடுகளை துடைத்து எறிந்து விட்டு நவீனங்களுடனான புதுக்கலாச்சார குடியிருப்பினை பார்ப்பதற்கு கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது எனக்கு.
கருப்பையாவை நான் பார்க்க அனுமதி கிடைத்ததாக அழைப்பு வந்ததும் உள்ளே சென்றேன்.
“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சு உங்ககிட்ட சாவி குடுத்திடறேன். அவசரமா, அரைகுறையா முடிச்சுகுடுத்திடக்கூடாதுன்னு தான் உங்ககிட்ட டயம் கேக்கிறேன். ஏற்கனவே சொன்னபடி முடிச்சுக்குடுக்க முடியலைங்கிறது வாஸ்தவம்தான். இந்த தடவை கண்டிப்பா சொன்னமாதிரி வேலையை முடிச்சுகுடுத்திடறேன். திருமலை சார்கிட்ட திரும்பத்திரும்ப வேலை முடியலைன்னு சொல்றதுக்கு கஷ்டமாயிருக்கு. நீங்களே அவர்கிட்ட சொல்லிட்டீங்கன்னா கொஞ்சம் உதவியாயிருக்கும்”.
கருப்பையா தொடர்ச்சியாக சொன்ன விஷயங்களால் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிந்தது. சித்தப்பாவிற்கு போன் செய்து விபரத்தை சொன்னபோது “வீட்டப்பாத்தியா? புடிச்சிருக்கா” என்று கேட்டார். “இல்ல. வீட்டை இன்னும் பாக்கல. அதான் ஒருவாரத்தில சாவி கைக்கு வந்திடுமே. பாத்துட்டுச்சொல்றேன்” என்று சொன்னேன்.
இப்படியே இரண்டு மூன்று தடவை போய் வந்தபோதும் வேலையும் முடியவில்லை. சாவியும் கைக்கு வரவில்லை. நான் வீட்டையும் பார்க்கவில்லை. நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சமாக இருந்தது. மறுபடியும் சித்தப்பாவிடம் விபரங்களைச்சொன்னபோது “இத்தனதடவ போயிருக்க. வீட்ட பாத்தியா? இல்லயா?” என்று கேட்டதையே திரும்பகேட்டபோது வெளியிலிருந்து பார்த்ததாக சமாளிக்க வேண்டியதாயிற்று.
“நாளைக்கு போய் என்னென்ன வேலை முடியாம இருக்குன்னு பாரு. வீடு எப்படி இருக்கு? நமக்கு சரியா வருமான்னு சொல்லு. திருமலையும் எங்கிட்ட கேட்டார். நான் அவருக்கு மழுப்பலாவே பதில் சொல்லும்படியா இருக்கு” என்று சித்தப்பா கண்டிப்பாக கூறியபோது, நாளைக்கு வேலை முடியாவிட்டாலும் வீட்டையாவது போய் எப்படி இருக்கிறதென்று பார்த்துவிட்டு வந்து சித்தப்பாவிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. எப்படியிருக்கப்போகிறது? எல்லாமே பெரிய பெரிய வீடுகளாகவே இருக்கின்றது. நல்ல காற்றோட்டமும் நல்ல வசதியான நிறைய அறைகளும் இருப்பதும் உறுதி. இவ்வளவு பெரிய வாடகை கேட்கிறபோது அதற்குத்தகுந்த வீடாக இல்லாமலா இருக்கும்? என்கிற அசாதாரணம் எனக்குள் தோன்றியது.
மறுநாள் நான் அங்கு போனதும் கருப்பையாவே முன்வந்து “நீங்களே ஒருதடவ வீட்டவந்து பார்த்துட்டு சூழ்நிலையை திருமலைசார்கிட்ட சொல்லிருங்க” என்றதும் “ஆமா நானும் இத்தனதடவ வந்துட்டேன். இன்னும் வீடு எப்படி இருக்குன்னு பாக்காமலே இருக்கேன். இன்னைக்கு, கண்டிப்பா பாக்கணும்னுதான் வந்தேன்” என்று சொன்னதும் கருப்பையாவின் முகத்தில் லேசான சிரிப்பு தெரிந்தது.
வேலை முடியாத புது வீடு என்பதால் சிராய்த்தூளும், தூசியுமாக கிடந்தது.
சன்னல்களெல்லாம் பொருத்தப்படாமல் கீழே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. “வீட்ட முழுசா பாக்கலாமா?” என்று நான் கருப்பையாவிடம் கேட்டபோது, “வீடே இவ்வளவுதான்” என்று இரண்டு சிறிய நீளமான அறைகளை மட்டும் காட்டினார். தூக்கிவாரிப்போட்டது எனக்கு.
இரண்டு ரூமிற்கு இவ்வளவு பெரிய வாடகை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கருப்பையாவிடம் எதுவும் பேச முடியாமல் நான் வெளியேற, சித்தப்பாவிடமிருந்து சொல்லி வைத்ததுபோல் போன் வந்தது. வீட்டின் சூழ்நிலையையும், அமைப்பையும், அவ்வளவு பெரிய வாடகைக்கு பொருத்தமான வீடே அது இல்லை என்பதையும் நான் கூறவும் சற்று கோபமானார்.
“மொதல்லயே போய் பார்த்திருக்க வேண்டியதுதானே. திருமலை கேட்டதுக்கு உனக்கு அந்த வீடு பிடிச்சிருக்கறதாவேற சொல்லிட்டேன்” என்று சித்தப்பா சொன்னதும் எனக்கு என்ன சொல்வதென்று தோன்றவில்லை. “சரி வாடகையை கொஞ்சம் குறச்சு பேசலாமா” என்று நான் கேட்டபோது அவசரமாக மறுத்தார்.
“டேய், அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அந்த அளவுக்கு பழக்கம் கிடைக்கிறதே நமக்கெல்லாம் பெரிசு. அவர்கிட்ட போய் பேரமெல்லாம் பேசிட்டிருக்க முடியாது. நமக்குன்னு சொன்னதும் அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார்னு தெரியுமா? எப்படியிருந்தாலும் எடுத்துதான் ஆகணும். இல்லேன்னா அசிங்கமாயிடும்” என்று அவர் நிர்பந்திக்கவும் எரிச்சலாக வந்தது எனக்கு. நான் ஒன்றும் பதில் பேச முடியாதவனாக அமைதியாக இருக்க பிறகு பேசுவதாக அவர் போனை கட் செய்துவிட்டார்.
வீட்டிற்கு வந்து பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்டுவிட்டோமோ என்று தோன்றுவதாக நடந்ததை அம்மாவிடம் சொன்னபோது …
“நீ மொதல்லயே பாத்துட்டு அவர்கிட்ட வேணும், வேணாம்னு சொல்லிருக்கணும். சும்மா, சும்மா போயிட்டுவந்துட்டு இப்ப அவர்மேல வருத்தப்படறதுல நியாயமில்ல. அவர்கிட்ட நேர்ல பார்த்து புரியும்படியா எடுத்துச்சொல்லு. போன்லையே பேசிட்டிருந்தா சரியாகாது. முடிவும் எடுக்கமுடியாது. உனக்கு வயசுக்குத்தகுந்த அனுபவமும் இல்ல. கூறும் இல்ல” என்று அம்மா கடிந்துகொண்டது நியாயமாகவே பட்டது எனக்கு.
“சித்தப்பாகிட்ட எதுவுமே பேசமுடியலைம்மா. யாரோ திருமலையாம். முக்கியமானவராம். சித்தப்பாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவராம். அதனால நான் சொல்றதை அவர் காதுலபோட்டுக்கவே மாட்டேங்கிறாரு”.
“என்னடா பேர் சொன்ன?”
“திருமலையாம்”
“சரியாபோச்சுப் போ”
“ஏம்மா. உனக்கு அவர தெரியுமா?”
“தெரியுமாவாவது. உங்கையில கல் வச்ச மோதிரம் போட்டிருக்கியே. அத செஞ்சு கொடுத்தது அவரோட பையன்தான். அப்பாவோட பழைய மோதிரம் ரெண்டு இருந்தது. அதை சித்தப்பா மூலமா நீ சொல்ற திருமலைங்கிறவரோட பையன்கிட்ட கொடுத்து ஒரே மோதிரமாக்கி பச்சக்கல் வைச்சு தரச்சொன்னேன். கூடுதலா ரெண்டு கிராம் சேத்துப்போட்டுதான் பண்ணமுடிஞ்சதுன்னு உங்க சித்தப்பா பில்லையும் கொடுத்துட்டு, காசையும் வாங்கிட்டுப்போனாரு. எப்படி பத்தாமபோகும்னு எனக்கு சந்தேகம் வந்ததும், மத்தியஸ்த்தக்கடைக்குபோய் நிறுத்துப்பாத்தப்ப, அதிகமா இருக்கவேண்டியதுமில்லாம நம்ம குடுத்ததே குறைச்சலாத்தான் நம்ம கைக்கு வந்து சேர்ந்திருக்கின்னு தெரிஞ்சது. நம்ம மோதிரத்தில இருந்து தங்கத்தையும் எடுத்துக்கிட்டு, கூடுதலா வேற தங்கத்தையும் சேர்த்திருக்கேன்னு அந்த பையன் ஏமாத்திட்டான்”.
“இது சித்தப்பாவுக்கு தெரியுமாம்மா?”
“தெரியும். இப்படி ஏமாத்திட்டாங்கன்னு விவரம் சொன்னதும், அவங்கக்கிட்ட இத பத்தியெல்லாம் பேச முடியாது. அவங்க ரொம்ப பெரிய இடம். இருக்குறது இருக்கட்டும். பின்னாடி பாத்துக்கலாம்னு உங்க சித்தப்பா சொல்லிட்டாரு”.
“இது என்னம்மா அநியாயமா இருக்கு?”
“அநியாயந்தான். ஆனா கேக்கமுடியல. இன்னைக்கு தப்புப்பண்றதே பெரியவுங்கதாம்ப்பா. அதயாரும் கேட்க முடியலைங்கிறது அவங்களோட பலமாப் போயிருது. பத்தாததுக்கு நீ வேற இப்படி பிரச்சனைய கொண்டுவந்துட்டு நிக்கிற” என்று அம்மா புலம்பியதும் சித்தப்பாவின் மீதும் திருமலையின் மீதும் ஆத்திரமாக வந்தது எனக்கு.
பிறகு, சித்தப்பாவே போன் செய்து “அப்படி என்னதான் உனக்கு பிரச்சனை? வா அந்த வீட்ட போய் பார்த்திடலாம்” என்று சொன்னதும் மறுப்பு சொல்லாமல் அவருடன் கிளம்பிப்போனேன்.
சாவியை வாங்கி சித்தப்பா வீட்டைத்திறந்து பார்ப்பதற்காக உள்ளே சென்றார். நான் உள்ளே நுழையாமல் படியில் நின்றவாறே, அங்கிருந்து தூரத்தில் தெரியும் அங்கையற்கண்ணி கோயிலின் கோபுரத்தை வெறித்து பார்த்தபடி நின்றுகொண்டேன்.
உள்ளே போய்விட்டு வந்த சித்தப்பா நான் உள்ளே வராததைக் கவனித்து
“என்னடா இங்கேயே நின்னுட்ட? அப்படி அங்க என்னதான் பார்க்கற?”
“கோயில் கோபுரம் தெரியுது. பார்த்துட்டிருந்தேன்”.
“கொடுத்துவச்சிருக்கணும்டா. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சொல்வாங்க. எப்பேர்பட்ட இடம்னு பாரு?”
“எத்தனையோ இடத்தில இருந்து பார்த்தாலும் இந்த கோபுரம் தெரியும் சித்தப்பா. இந்த சக்திக்குமீறிய இடத்துல இருந்துதான் பார்க்கணும்னு இல்ல”.
“என்னடா? குதர்க்கமா பதில் சொல்ற?”
“இல்ல சித்தப்பா. நியாயம்னு பட்டதை சொல்றேன்”.
“என்ன உன்னோட நியாயம்?”
“இந்த இடம் ரொம்பச் சின்னது. இதுக்கு இவ்வளவு பெரிய வாடகை நம்மால குடுக்க முடியுமா, குடுக்க முடியாதாங்கிறது இருக்கட்டும். ஆனா மனசாட்சியே இல்லாம இந்த சின்ன இடத்துக்கு இவ்வளவு பெரிய வாடகை சொல்ல அவங்களுக்கு எப்படி மனசு வருதுன்னு தெரியல?”.
“இது அவங்க சொந்த இடம்டா. அவங்களுக்கு தோன்ற வாடகையை அவங்க சொல்றாங்க. இதுல மனசாட்சி எங்கஇருந்து வந்தது?”
“சரி கிளம்பலாமா?”
“என்னடா. பட்டும்படாம பேசுற. உனக்காக நான் திருமலைக்கிட்ட எவ்வளவு பேசியிருப்பேன் தெரியுமா? இப்படி ஒரு இடத்துல இருந்தாதான் நம்ம சாதிசனம் நாலுபேர் நம்மள மதிப்பாங்க. நமக்கும் நாலு பெரியவங்களோடவும், நல்ல அந்தஸ்துள்ளவங்களோடவும் பழக்கவழக்கம் கிடைக்கும். அவ்வளவுதான் சொல்லிட்டேன்”.
“இல்ல சித்தப்பா. அந்தஸ்துள்ளவங்ககிட்ட நேர்மையில்லை. பெரியவங்ககிட்ட நாணயம் இல்லை. இவங்களோட பழகி பெரிசா என்ன பண்ணப்போறோம்? இந்த புத்தியெல்லாம் நமக்கும் வர்றதுக்கா? வேண்டவே வேண்டாம் சித்தப்பா. நாம இப்படியே இருந்திடலாம்”.
“முடிவா என்னதாண்டா சொல்ற?”
“இந்த இடம் நமக்கு வேண்டாம். வீடு விசயத்தில உங்களை சிரமப்படுத்தியிருந்தேன்னா நீங்க தப்பா நெனச்சுக்க வேண்டாம்”.
“எல்லா சக்தியும் நமக்கும் வரும்டா. நாம தேவைகளை அதிகப்படுத்திக்கிட்டோம்னா அதுக்காக ஓட ஆரம்பிப்போம். அப்போ எல்லா சக்தியும் நமக்கும் வரும். நம்பிக்கையோட இறங்கு. நல்லது நடக்கும்”.
“இல்ல சித்தப்பா. அவங்க பேராசைக்காரங்கன்னு நல்லா தெரியுது. அவங்களோட பேராசைக்கு நம்மளால தீணிபோட முடியாதுன்னும் தோணுது. வேற வீடு பாத்துக்கலாம். மோதிரம் செஞ்ச விசயத்துலேயே அவங்க நம்மளை ஏமாத்துனது என்னால ஜீரணிக்க முடியல. நேர போய் திருமலைக்கிட்ட கேட்கணும்னு தோணுது. ஆனா உங்களுக்காக விட்டுக்கொடுக்கணும்னும் தோணுது. இவ்வளவுக்கு அப்புறமும் அவங்ககிட்ட நாம நெருக்கமானோம்னா அவங்க செஞ்சது சரின்னு ஆயிடும்”.
“மோதிரம் பத்தி அம்மா சொன்னாங்களா?”
“ஆமாம். நீங்கதான் நம்பிக்கையானவங்கன்னு கொண்டுபோய் குடுத்திருக்கீங்க. இப்படி ஏமாத்துனது உங்களுக்கும் தெரியும். ஆனா அவங்ககிட்ட உங்களாலகூட கேட்க முடியல. நீங்க அவங்க மேல நல்ல மரியாத வெச்சிருக்கீங்க. அதுக்கு அவங்க பண்ணினது பெரிய நம்பிக்கை துரோகம். ஆனா நம்ம தலையெழுத்து பாருங்க. அவங்க செஞ்ச திருட்டுத்தனத்தையும் மீறி நாம அவங்கள தலையில தூக்கி வச்சு கொண்டாடவேண்டியிருக்கு. அது போக இந்த இடம் ஆயிரக்கணக்கான குடும்பங்களோட வாழ்க்கை அழிஞ்சு போன இடம் வேற. இந்த வயித்தெரிச்சல் பிடிச்ச இடத்துல நாம என்ன பெரிசா வாழ்ந்திடப்போறோம்? இன்னைக்கு வாழ்ந்திடறமாதிரி இருந்தாலும் நிரந்தரமான நிம்மதி நமக்கு இந்த இடத்துல கிடைக்கும்னு தோணலை எனக்கு”.
நான் பேசிக்கொண்டிருக்கும்போதே சித்தப்பா விடுவிடுவென்று பதில் பேசாமல் கிளம்பிப் போனார். அவரது நடையில் கோபம் தெரிந்தது. அது எந்த விதத்திலும் என்னை பாதிப்பதாய் இல்லை. மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டதால் மனம் லேசானது மாதிரி இருந்தது. நடந்து போய் பிள்ளையார் கோயில் மரத்தடியில் அமர்ந்து கொண்டேன்.
குடியிருப்பின் பிரதான சாலையில் உள்ளேயிருந்து வரிசையாக விலையுயர்ந்த கார்கள் ஒலியெழுப்பியபடி வெளியேறிக்கொண்டிருந்தன. ஒவ்வொன்றிற்குள்ளும் அமர்ந்திருக்கும் செல்வச்செழிப்பான நபர்களுக்கு வாசலருகில் நின்றிருந்த செக்யூரிட்டிகள் கதவை திறந்து சல்யூட் அடித்து அனுப்பி வைத்தார்கள். காசு செலவழித்து கௌரவம் பெற நினைப்பவர்களை பார்த்ததும் எனக்குள் சிரிப்பு வந்தது.
காலை நீட்டியபடி கண்களை மூடி மரத்தின் மீது தலை சாய்த்தேன். காட்சிகள் விரிந்தன.
பஞ்சாலையின் சங்கு பலமாக ஒலித்தது. உள்ளே இருந்து உடம்பிலும், தலையிலும் ஆங்காங்கே பஞ்சு தூசி ஒட்டிய தொழிலாளர்கள் சைக்கிளில் சாப்பாட்டுக் கூடையோடு உள்ளே நுழைவதாயும், வேலை முடிந்து வெளியேறுவதாயும் போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருந்தனர். வாசலில், பழக்கடையில் பழ வியாபாரம் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அருகிலிருந்த லாலா மிட்டாய்க்கடையில் பலகாரங்களும், தேனீரும் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்தது. நூலகம் போகும் வழியில் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நான் பஞ்சாலையை கடந்து கொண்டிருந்தேன்.
திடீரென்று உணர்வு திரும்பி கண் திறந்து பார்த்தபோது, காட்சிகள் மறைந்து போயின. எண்ணற்ற குடும்பங்களின் கனவுகள் சிதைந்துபோன இந்த இடம் இடுகாடாகவும் … இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் கல்லறைகளாகவும் தோன்றியது எனக்கு.
– தாமரை மாத இதழில் ஏற்கனவே பிரசுரமானது