“நாளைக்கு பொண்ணு பார்க்க வரோம்! ஆமாம். என் பையனுக்கு தெரியாது. அவனுக்கு தெரிஞ்ச கண்டிப்பா வரமாட்டான். பொண்ண நேர்ல பார்த்த, அவனுக்கு பிடிச்சிடும். நீ எல்லாம் ஏற்பாட்டையும் செய். பொண்ணு வீட்டிலையும் சொல்லிரு. நாளைக்கு வரோம்” என அலைபேசியை துண்டித்தாள் மரகதம்.
அந்நேரம் விஜய் வீட்டினுள் நுழைந்தவுடன் “டே… நாளைக்கு நீ லீவ் போடு. பொள்ளாச்சில நம்ம உறவு கார பொண்ணுக்கு மாப்ள பார்க்க வராங்க. அங்க போகணும்”
“அங்க யாரு நம்ம உறவுகார பொண்ணு?” “உனக்கு தெரியாது. என் பேச்சை கேளு. நாளைக்கு கண்டிப்பா போறோம்” அம்மா பேச்சிக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதித்தான் விஜய்.
மறுநாள் தனுக்குதான் பொண்ணு பார்க்க போறோம் என்ற விஷயம் தெரியாமலே விஜய் அம்மாவுடன், பெண்ணின் வீட்டிற்கு சென்றான். அங்கு விஜய்க்கு நல்ல வரவேற்பு. கலகலப்பாக இருந்த வீட்டில், தான் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், விஜய் “எனக்கு இந்த பொண்ண பிடிக்கலை. கல்யாணத்தில இஷ்டம் இல்ல” என கூற, அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. பெண் வீட்டார் சிலர் மரகதத்தை வசை பாட, விஜய் மரகதத்தை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
வீடு திரும்பியவுடன் மரகதம் மனவருத்தத்துடன் இருந்தால், விஜயுடன் பேசவில்லை. அவனுடன் கோபத்தில் இருந்த அவளுக்கு, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சென்ற விஜய், அன்று மாலை “ராணி” என்ற விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்தான். அவர்களை மணக்கோலத்தில் கண்ட மரகதம், கோபத்துடன்
“இந்த சிறுக்கியை நினைச்சி தான், நீ கல்யாணம் வேண்டாமுன்னு சொன்னயா. ஏன் இவளை கல்யாணம் பண்ணுறதுக்கு, நீ என்ன அநாதையா. இப்படி ஒட்டு மொத்தமா, என் கனவுல கல்ல போட வா… இப்படியொரு காரியத்தை செஞ்ச. என் கண் முண்ணாடி நிற்காதிங்க. வெளிய போங்க” என பொரிந்தாள். விஜய் சொல்லும் எந்தவொரு சமாதானத்தையும், அவள் ஏற்கவில்லை. அத்துடன் வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியதால், அவர்களும் வெளியேறி, அதே தெருவில் வேறொரு வீட்டில் வாடகைக்கு இருந்தனர்.
ராணி நன்றாக விஜயை கவனித்து கொண்டாள். ஆனாலும் அவனுக்கு மரகதத்தை தனியாக விட்டு விட்டு வந்து விட்டோமே என்ற மனவருத்தம் வாட்டியது. இப்படியே சில மாதங்கள் ஓடியது.
ராணி கர்ப்பம் தரித்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் பேசிகொண்டிருக்க, அதை கேட்ட மரகதம், பழங்கள், சத்தான ஆகாரங்கள் என வாங்கி கொண்டு, ராணியை காண சென்றாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியில் வந்த ராணிக்கு இன்ப அதிர்ச்சி. மரகதத்தை கண்ட அவளுக்கு, கை கால் புரியாமல் அலை மோதினாள்.
“வாங்க அத்தை.. உள்ள வாங்க….. உட்காருங்க…” என வரவேற்று பருக தேனீர் கொடுத்தாள்.
“என்னமா… நீ மாசமா இருக்கியா”
“ஆமாம் அத்தை”
“நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டிற்கே வந்துடுங்கம்மா” என்று மரகதம் கேட்க
“நான் இப்படி கேட்குறேன்னு தப்பா நினைக்காதிங்க அத்தை. ஏன் திடீர்ன்னு இந்த கரிசனம்”
“திடீர் கரிசனமெல்லாம் இல்லாம்மா. உனக்கு இந்த மாதிரி நேரத்தில, நான் உதவியா இல்லனா, நான் ஒருமனுசியே இல்லாம்மா. எனக்கு வயசான காலத்துல உதவ, உனக்கு நிறைய சந்தர்ப்பம் இருக்கு. ஆனா நான் இப்போ உனக்கு உதவலேன்னா, வேற எப்போ உதவ போறேன். விஜய் மூணு மாசம் என் வயித்தில் இருக்கும் போது, என் வீட்டுக்காரர் இறந்து போயிட்டாரு. யாருடைய உதவியும் இல்லாம அவன பெத்ததுக்க, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. என் மருமகளை மட்டும் எப்படி கஷ்டப்பட விடுவேன்.” என மரகதம் கூற ராணியின் கண்கள் கண்ணீரில் நிரம்பியது.
இதை வெளியில் நின்றபடி கேட்டுகொண்டிருந்த விஜய் “அம்மா…..” என்று காலில் விழுந்து அழுதான்.
“நான் செய்தது தவறுதான். உங்க சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ணியது தப்புதான். நீங்க அப்பா இல்லாமல் என்னை கஷ்டப்பட்டு எப்படி வளர்த்திங்கன்னு எனக்கு தெரியும். அதான் ஒரு விதவைக்கு வாழ்க்கை குடுக்கணும் நினைச்சேன். என்னோட இந்த செயலுக்கு அச்சாணியாக இருந்தது நீங்கதான் ம்மா…. அதான் ராணியை கல்யாணம் செஞ்சிட்டேன்ம்மா” என்று அழுத அவனை, தூக்கி தழுவிக்கொண்டாள் மரகதம்…..