(1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம்
சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள்
நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம்
நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக
தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே.
இவை
பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம சத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சந்தம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ. மாதவையர் இயற்றியன.
சென்னை
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் – புஸ்தகசாலை,
எட்வர்டு எலியட் ரோடு–மயிலாப்பூர்
1924
குகைச் சாமியார்
குன்றின் பக்கத்தில் இருந்தமையால் அவ்வூருக்கு மலைப்பாளையம் என்றுப பெயர். அவ்வூர் வாசிகள், தாயாதிகளும் பரம்பரை விரோதிகளுமான தொண்டைமண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தாரும், அவர்கள் உட்குடிகளுமே. மலை மிகப் பெரிதல்ல; எலியூரிலே பூனை ராஜா என்பது போல, எங்கும் சமதலமான அப்பிரதேசத்திலே, அச்சிறிய பொற்றை, மலையென்னும் பெயரால் வழங்கப்பட்டு வந்தது. அதில் ஒரு குகையுண்டு. அக்குகையின் அந்தத்தை யாரும் கண்டதில்லை. ஐங்காதவழிக் கப்பாலுள்ள செங்கூருக்கு, அக்குகை வழியே சுரங்கப்பாதை யுண்டென்று சொல்வார் சிலர். மலைப்பாளயத்தில் வாழும் மூத்தோர் அறிந்த மட்டில், சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்வரை, நெற்பயிரை யும் கொடிக்காற் பயிர்களையும் அழிக்கும் காட்டுப் பன்றிகளையும், வேறு சில்லரை மிருகங்களையும் தவிர்த்து, அக் குன்றில் விசேஷம் ஒன்றுமில்லை. பதினைந்து வருஷத்துக்கு முன்னர் திடீரென்று ஒருநாள், பெரியவர் ஒருவர், கம்பீரமான தோற்றமும் முகமலர்ச்சியு முடையவர், அக் குன்றிலுள்ள குகைக்கு வந்து, அதில் வசிக்கலானார். அவர் எங்கிருந்து வந்தனர் என்பதும், அவரது பூர்வ விருந்தாந்தமும் எவருக்கும் தெரியாது. அவர், தம்மொடு ஒரு சிறு பெண் குழந்தையையும் கொண்டுவந்திருந்தார். அவர் வந்தது முதல் அக்குகை ஒரு பூசை மடமாக, நாளாவட்டத்தில், குகைச் சாமியாரின் பேரும் பெருமை யும் அந்தப் பிராந்திய மெங்கும் பாவலாயின. சாமியாரை “ஐயா!” என்றழைக்கும் அப்பெண்ணும், அவர் கியாதி யுடன் வளர்ந்தேறி, இப்பொழுது ஓர் அழகிய யுவதியா யிருந்தாள். அவளே அவருக்குச் சகல பணிவிடைகளும் செய்து வந்தாள். அவர் குகை மடத்தில், வெள்ளிக்கிழமை ஒரு தினமட்டும், வாரந்தோறும் அந்நியர் உட்சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். வெள்ளிதோறும், குன்றின் சிகரத்திலுள்ள ஒரு மரத்தின் உச்சியின் மீது, ஒரு மஞ் சள் கொடி பறக்கும். அன்று சுற்றூர்களிலிருந்தும், தூரப் பிரதேசங்களிலிருந்தும் கூட, திரளான ஜனங்கள், நடந் தும் வண்டிகளிலும், சுவாமி தரிசனஞ் செய்யக் குகைக்கு வருவார்கள். குகைக்குள் கோயில் கிடையாது. குகைச் சுவரில் தோண்டப்பட்டுள்ள ஒரு புழையில், மூடப்பட்ட ஒரு சிறு பித்தளைப் பெட்டி வைத்திருந்தது. அதற்குத் தான் பூசையெல்லாம். அதைத் திறக்க யாரும் கண்டி லர்; அதற்குள் இருப்பதென் னென்று எவரும் அறியார். சந்தனம் குங்குமம் புஷ்பங்களால் அலங்கரிக்கப் பெற்ற அப்பெட்டியை, ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்து, தரி சித்து வணங்கிச் சென்றனர். குகைச் சாமியாரின் அபார சக்திகளெல்லாம் அடங்கி யிருப்பது அப் பெட்டியில் தான் என்பது, பொது நம்பிக்கை. அவர் சச்திகள் இன்ன இன்ன வென்பதும் எவர்க்கும் தெரியாது. சிலர், தன் தலையில் ஒப்புயர்வற்றதோர் இரத்தினத்தை யுடைய சர்ப்ப மொன்று, அப்பெட்டிக்குள் இருப்பதாகக் கூறினர்; அது சீறும் சத்தத்தைத் தாம் கேட்டுள்ளதாகவும் சிலர் கூறினர்; வேறு சிலர், மகா பலமுள்ள துஷ்ட தேவதை யொன்று, ஆணோ பெண்ணோ நிச்சயமில்லை, சாமியாரின் மந்திர சக்தியினால், அப்பெட்டிக்குள் அடைபட்டிருப்ப தாயும், பெட்டியைத் திறந்தால் சாமியாரை அது கொன்று விடு மென்றும் நம்பினர். அப்பெட்டியின் உள்ளுறையைப் பற்றிப் பலர் பலவாறு நம்பி வாதாடுவ துண்டு; உட் பொருள் எதுவாயினும், அப்பெட்டி சர்வவலிமையுள்ளது, யாவராலும் பக்தியுடன் வணங்கத் தக்கது, அபார வர சக்தி யுடையது, என்பதைப்பற்றி எவரும் சந்தேகிக்கவில்லை. சாமியார் குகைக்கு முதல் முதல் வந்தபொழுது, முன் கூறிய பெண் சிசுவையும் அப்பெட்டியையும் தவிர வேறொன்றும் அவர் கொணர்ந்திலர்; ஆயினும் அதி சீக் கிரத்தில், பால், பழங்கள் தின்பண்டங்கள் முதலியனவும், ஆடை ஆபரணங்களும் ஏராளமாக வரத்தொடங்கி, ஊர் விளையினும் காயினும், சாமியாருக்கு ஒருநாளும் எவ்விதத் தாழ்வுமே நேரவில்லை. யார் என்ன கேள்வி கேட்கினும், அவர் அதிகம் பேசுவதில்லை; தனக்கு விடைகூற இஷ்டமில்லாத பொழுதெல்லாம், சுமுகத்துடன் புன்னகை செய் வார். அவர் போஜனத்தைக் குறித்தும் பலர் பலவித மாகக் கூறினர் ; தினம் மூன்று பச்சிலை மட்டுமே அருந்து வர் என்று சிலரும் ; நள்ளிரவில் ஒரு வாழைப்பழமும் சிறங்கை பாலுமே உண்பசென்று சிலரும் சொல்லுவ துண்டு. கல்விப்பயிற்சியிலும் செல்வத்திலும் செழித்த கனவான் ஒருவர் ஒருமுறை தாம் ஐந்நூறு சிறு மலைப் பழம் தருவித்திருந்ததாகவும், குகைச் சாமியாரைச் சில பழங்கள் உண்ணும்படி மன்றாடி வேண்டியதாகவும், அவர், அதன் மேல், ஐந்நூறு பழங்களையும் உடனே தின்று விட்டுப் பின்னும் பழங்கள் வேண்டவே, தாம் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டியதாகவும், கூறினார். மற்றொரு கனவான், முன்ன வரினும் அதிகம் படித்தவர், தம் வீட்டில் பிக்ஷை செய்யும்படி சாமியாரை ஒருமுறை பிரார்த்தித்த தாகவும், சுமார் பதினைந்து பேர் களுக்குச் சமைத்து வைந்திருந்த சாதம் , கறிகள், பக்ஷ ணங்கள் முதலிய விருந்தனை த்தையும் சாமியார் ஒருவரே புசித்து விட்டதாகவும் உரைத்தனர். பித்தளைப் பெட்டி யின் உள்ளடக்கத்தைப் பற்றிய விருத்தாந்தங்கள் பேதப் பட்டவாறே, சாமியாரின் சீரண சக்தியைப் பற்றிய செய்தி களும் பலவாறு மாறுபட்டன. ஆயின் அந்தப் பெண்மட் டும். மற்றப் பெண்களைப் போலவே உண்டு, உடுத்து, உறங்க வளர்ந்து வந்தாள். சாமியாரின் பக்தர்களின் சிரத்தை யினால், ஆகாரம், ஆடை, ஆபரணங்கள் எதிலும், அவள், எப்பொழுதும் எவ்விதக் குறைவையும் உணரவேயில்லை.
நோய், வயோ திகம், அங்கக்குறை, பொறிக்குறை முதலிய காரணங்களால், மெய்யாகவே பிறர் உதவிக்குப் பாத்திரமான துர்ப்பாக்கியர்களுக்கும், வரி தண்டுவோர் போல விடாது அலட்டி வலிந்து கொள்ள முயலும் தடி யர்களுக்குமே பிச்சை யிடாதார் பலர், அறியாமை, மூட பக்தி, பேராசை முதலிய காரணங்களால், தேகி என்று கேளாமலும், கொடுத்தாலும் மறுத்தும், கொடுப்போரை அவமதித்தும், பலவிதமாக ஆச்சரியப்படத்தக்க வண்ணம் நடந்து கொள்ளும் சாமியார் வகுப்பினர்க்கு, வலியக் கொ ண்டுபோய்க் கொடுத்து, அவமானத்தைப் பாராட்டாமே எப்படியாவது அவர்களைத் திருப்திசெய்வித்து, அவர்கள் தயவைச் சம்பாதிக்க முயலுவதை, நாம் பலவிடங்களிலும் காணலாம். குகைச் சாமியார், பிறரை இகழ்ந்து விரட்டுவதில்லை; பக்தர்கள் உதவும் பொருள்களில், தம் சொற்பத் தேவைகளுக்குப் போக மிகுந்தவற்றை எல்லாம், அன்ன தானத்திலேயே செலவிடுவார். அவர் மௌன விரதியும் இல்லை. ஆயின், அதிகம் பேசுவது வழக்கமில்லை. தன் குலம், குடும்பம், பூர்வாச்சிரமம் முதலியவற்றைக்குறித்து, எப்பொழுதும் யாரிடத்தும் அவர் பேசினதே யில்லை. தனக்கு அபாரயோக சக்திகள் உண்டென்று கூறுவதில்லை. அப்படி வேறு யாராவது சொன்னால் மறுப்பது மில்லை. சில வேளைகளில், நோயால் வருந்தும் சிலருக்கு, கைகண்ட மூலிகைகள் உதவின துண்டு. அவரது தொண்டர்களில் வயது மூத்தகனவான்களான இரண்டொருத்தர், “அன்பு” என்ற பேரினாலேயே அழைக்கப்படும் அப்பெண், விவாகத் துக்குத் தக்க பருவம் அடைந்து விட்டதைப்பற்றி அவரி டம் பிரஸ்தாபிக்க, அவர் முகம் சிறிது கவலையைக் குறிப் பதைத் தவிர, அவர் ஒன்றும் பதில் உரைத்திலர். இவ் வாறாக, அன்பு’ என்னும் பெண்மணியுடனும், பித்தளைப் பெட்டியுடனும், வெகு கௌரவமாக வாழ்ந்து வந்தார் குகைச்சாமியார். -தைமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, அதிகாலை முதல் பல ஜனங்கள் வந்து கூடினர். பக்கத்திலுள்ள சுனையில் நீராடி, மர நீழல்களில் உலைவைத்துச் சமைக்கலாயினர். குகை மடத்துக்குள் பூசைநடக்கப் பகல் இரண்டு மணியாகும். அதற்குள் சமைத்து வைத்திருந்து, பூசை யானவுடன் தரிசனஞ் செய்துவிட்டு ஊண்கழித்து, தத்தம் ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். ஏழைகள், பூசைச்குப் பின் சாமியார் உதவும் ஊணையே உண்பார்கள். பக்கத்தூர் களிலிருந்து வருவோர், நண்பகலுக்குப்பின் பூசை சமயத்துக்கே வருவது வழக்கம். சுமார் ஒரு மணிக்கு, குகை மடத்து மணி அடிக்கப்பட்டது. உடனே ஜனங்கள் உள்ளே சென்றார்கள். குகையின் முன்பு ஒரு திறந்த வெளியுண்டு. அதில் இரு நூறு ஜனங்கள் வரை வெளியில் நின்று, சாமியார் செய்யும் பூசையை, கூப்பிய காங்க ளுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். குகையின் கற்சுவரி லுள்ள புழைக்குள், குங்கும சந்தன புஷ்பங்களால் அலங் கரிக்கப்பட்ட பெட்டகம் வைக்கப்பட்டிருந்தது. அதன் இருபுறமும் இரண்டு நெய் விளக்குக்கள் எரிந்து கொண் டிருந்தன. பெட்டகத்தின் மேல் ஒரு சிறு வெள்ளி வேலாயுதம் சாத்தப்பட் டிருந்தது. குகைச் சாமியாருக்கு ஐம்பது வயதிருக்கலாம்; ஆயினும், ஒரு ரோமம் கூட இன்னும் நரைக்க வில்லை ; பாலியத்தில் அவர் வெகு திடகாத்திராகவே இருந்திருக்க வேண்டுமென்று தோற்று கிறது. அங்கமெங்கும் திரு நீறணிந்து, அரையில் ஒரு சிறு காவி வஸ்திர மட்டும் தரித்திருக்கிறார் : தலை மயிர் சடை சடையாகத் தொங்குகிறது. அப்பெட்டியின் முன் பாக, ஒரு புலித்தோலின் மேல் வீற்றிருந்து, கண்மூடி, உதடுகள் மட்டும் மெதுவாய் அசைய, தியானஞ்செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு பொழுதும் வாய்விட்டு ஸ்தோத்தரிப்பதில்லை. அன்பு பக்கத்தில் நின்று, தூபா பாதனை தீபாராதனை முதலிய உபசாரங்களுக்கு வேண்டிய சாமான்களை எடுத்து தவ, சாமியார், பூசையை நடத்து கிறார். இவ்வாறு இரண்டு நாழிகைப் பொழுது, மணியோ சையைத் தவிர மற்றோசையின்றிப், பூசை நடக்கிறது. முடிவில் கற்பூர ஆரத்தி செய்யும் பொழுது மட்டும், ஜனங்கள் எல்லாம் வாயார முருகக்கடவுளைப் பலவாறு புகழ்ந்து, கரங்களை உச்சிமேல் தூக்கி, முழக்கஞ் செய்கிறார்கள். பின்பு, ஒவ்வொருவராய்ச் சாமியாரை அணுகி, அவர் ஆசீர்வாதத்தையும் பிரசாதத்தையும் பெறுகின்றனர். இப் பொழுது தான் சிலர் தமது வேண்டுகோள்களையும் குறைப் பாடுகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர். சிறிது விபூதி, ஒரு பழம், ஒரு மூடி தேங்காய், ஒரு புஷ்பம், வில்வதளம், ஏதாவது கைக்கு அகப்பட்டதைச் சாமியார் பிரசாதமாக உதவுகிறார். யார் என்ன வேண்டினும், கூறினும், புன்ன கையைத் தவிர வேறு விடை யளிப்பது அரிது. சில வேளைகளில், “கடவுள் அருளுவார்,” அல்லது, “முருகன் கேட்கும்,” அல்லது, “ஸ்வாமி இருக்கிறார்” என்று பதில் உரைக்கிறார். அதன் பின் கூட்டம் கலைந்து, ஜனங்கள் சீக்கிரமாகப் புசித்துவிட்டுத், தத்தம் ஊர்களுக்குப் புறப்பட்டு விடுவது வழக்கம்.
நாம் மேலே குறிப்பிட்ட தை வெள்ளிக்கிழமை யன்று, பூசை முடிந்தவுடன், திடீரென்று, சாமியாருக்கு உடம்பு அசௌக்கியப்படவே, அவர் யாவரையும் சீக்கிரம் வெளியே போகும்படி சொன்னார். பலர் பலவாறு அநு தாபப்பட்டு உதவிசெய்ய முயன்றும், அவர் ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாமல் தம்மைத் தனியே விட்டுப்போகும் படி வேண்டினவராக, யாவரும் மனக்கவலையுடன்குகைக்கு வெளியே வந்து, தத்தம் இருப்பிடம் சென்றனர். யாவ ரும் வெளியேறிய பின்பு, சாமியார், தாம் வழக்கமாய் இளைப்பாறும் கல்லின் மேற் சாய்ந்துகொண்டு, ‘ அன்பு’ வைத் தம் அருகே இருக்கச்சொன்னார். அவள் மனம் பதைத்து, களைப்பாற்றும்படி பாலும் பழமும் கொணர்ந் ததையும் மறுத்து விட்டு, பக்கத்தில் உட்காரச் சொல்ல, அவளும் அப்படியே உட்கார்ந்தாள். தன் மனத்தில் உள்ளதை உள்ளபடி, தன் தாயொருத்தி இருந்தால் அவ ளிடத்தில் சொல்வது போலத் தம்மிடத்தில் சொல்லவேண்டுமென்று அவர் முதலிற் கூறியது, அவள் மனப்பதற்றத் தை அதிகரிக்கவே செய்தது. பின்பு இச்சம்பாஷணை நடந்தது :
சாமியார் :- அன்பு! உனக்கு, சண்முகத்தை அதி கம் பிடித்திருக்கிறதா, சுந்தரத்தை அதிகம் பிடித்திருக்கிறதா?
அன்பு, ” அண்ணன் சண்முகத்தைத்தான்” என்று சொல்லிவிட்டு, நாணித் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
சாமியார் : – நானும் அப்படித்தான் நினைத்தேன்.
அன்பு:- சுந்தா அண்ணன் சில வேளைகளில் என்னை வெறித்துப் பார்க்கும்பொழுது, எனக்குப் பயமாயிருக்கி றது. அவர் அவ்வளவு சாதாரணமாய் இருக்கிறதில்லை. ஏன் கேட்கிறீர்கள், ஐயா?
சாமி :- ஆனால், சண்முகத்தைத் தான் உனக்கு நன்றா கப் பிடித்திருக்கிறது. அவனுக்கு வாழ்க்கைப்படவே உனக்குப் பிரியம் என்பது, நிச்சயந்தானா?
அன்பு:- வாழ்க்கைப்படவா?
இது வரையும் சகோதரபாவமாக அவர்களைப்பற்றி நினைத்திருந்தாளே அன்றி, அன்பு, வேறுவி தமாக நினைத் திலள். ஆகவே, இப்பொழுது சண்முகத்துக்கு வாழ்க் கைப்படுகிறதென்று கேட்டவுடன், அவள் மனம் பூரித்து, முகத்தில் ஒரு வித நாணத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டது. ” அதுதான் சரி; இவன் தான் அவளைச் சுனையில் முழுகிப்போகாமல் காப்பாற்றினான், விஷக்காய்ச் சல் வந்தபொழுதும் இடைவிடாது பேணி ரக்ஷித்தான். இது கிரமம்தான். இது தான் சரி. ஆனால் இவன் ஏழை; அவனோ பணக்காரன்; துஷ்டன் ; துணிந்தவன்” என்று, சாமியார் தமக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார். “யார் பணக்காரன்? துஷ்டன்; துணிந்தவன்; என்ன சொல்கிறீர்கள், ஐயா?” என்று, அன்பு வினவினாள்.
அன்புவின் கேள்வியைக் கவனிக்காமல், சாமியார் : “இவளைத் தனக்குக் கட்டிக்கொடுக்கும்படி அவன் என்னைப் பலமுறை கேட்டுமிருக்கிறான். ஆனால் அவன் முட்டாள், எனக்கு ரஸவாதம் தெரியும், தனக்கு அதைக் கற் றுக் கொடுக்க வேண்டும் என்பது, அவன் எண்ணம், பண ஆசையே ஒழிய, பெண் ஆசை அவ்வளவில்லை ; அவன் குணத்தை அறிவேன் ; ‘பணம்’ பணம்’ என்று பதைக்கிறது அவன் மனது,” என்று முன்போல் சொல்லிக் கொண்டார்.
“என்ன சொல்கிறீர்கள். ஐயா? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?’ என்று, அன்பு, பயந்தகுரலில் கேட்டாள். “ஒன்றுமில்லை, அன்பு; நீ யொன்றும் கவலைப்பட வேண்டியதில்லை ; ஏழையாயினும், சண்முகம் யோக்கியன். அவனையே நீ மணம் புரியலாம்.” என்றார் சாமியார்.
அன்பு :- அண்ணன் சண்முகம மேல்சாதியாயிற்றே? தொண்டமண்டல முதலியார் குலம் ஆயிற்றே?
சாமி :- நாம் என்ன பறையரென்று நினைத்திருக் கிறாயா, அன்பு? நாமும் தொண்டமண்டல முதலி களே ; அவர்களுக்கு ஒருபடி மேலன்றிக் கீழில்லை. யார் அங்கே, போய்ப்பார், அன்பு, யார் தலையோ தெரிந்தது வாசலில்.
அன்பு எழுந்து செல்லுமுன், சண்முகம் உள்ளே வந்து, சாஷ்டாங்கமாய் நமஸ்காரஞ் செய்தான். அவ னுக்கு இருபது வயதிருக்கலாம். லக்ஷணமுள்ள புருஷன். அவன் எழுந்தவுடன் “ஸ்வாமிகளுக்கு உடம்பு ஒரு படியா யிருக்கையில் என்னால் வீட்டுக்குப்போக முடிய வில்லை. ஸ்வாமிகள் உத்தரவுப்படி நடக்க மனது ஒட்ட வில்லை. அதனால் திரும்பிவந்து விட்டேன். ஸ்வாமிகள் பொறுத்தருள வேண்டும்” என்று, கைகூப்பி விநயமாய்ச் சொன்னான்.
சாமி –நல்லது, மகனே, உடகாரு.
சண்முகம் :- (கீழே இருந்துகொண்டு) இப்பொழுது ஸ்வாமிகள் உடம்பு எப்படியிருக்கிறது?
சாமி:- உடம்பு சரியாயில்லை ; இப்பொழுதே உன் னைப்பற்றி நினைத்தேன். நீ எழுந்திருக்க வேண்டாம்; நீ இரு. எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. நான் கேட்பதற்குமட்டும் பதில் சொல் : உனக்கு அன்புவின் மேல் காதலுண்டா? அவளும் உன் சாதியே; நீ அவளை மணஞ் செய்து கொண்டு, பேணிக் காப்பாற்றுவையா? நீ யோக்கியன்; பொய் சொல்வதில்லை ; நான் அறிவேன். அப்படியே இப்பொழுதும் சத்தியமாய்ப் பதிற் சொல்.
சண்முகம் :- அவள் இங்கே வந்தது முதல் நானும் அவளும் தோழர்களே ; நான் அவள் மேல் அளவில்லாத காதல் கொண்டிருக்கிறேன். என் காதல் என் மனத்தில் எவ்வளவு வேரூன்றி யிருக்கிறதெனில், நான் குலத்தை யேனும் மற்றெதையேனும் பெரிதாக மதிக்கவில்லை. ஸ்வாமிகள் எனக்கு அவளைக்கொடுத்தால், என் உயிருள்ள வரையும், கண்ணுள் மணிபோல அவளை நேசித்துப் பேணிக் காப்பாற்றுவேன். இது சத்தியமே.
அன்பு இதைக் கேட்டவுடன், அடக்க முடியாத மனமகிழ்ச்சியினால் ஆனந்த பாஷ்பம் சொரியலானாள்.
சாமி :– உன் குடும்பத்தார் எவரும் ஆக்ஷேபிக்க மாட்டார்களா?
சண்முகம் :- என் ஏழைக் குடும்பத்தில் இப்பொ ழுது நான் தான் பெரியவன். என் தாய் ஒரு பொழுதும் தடுக்க மாட்டாள். மற்றெவரையும் நான் பாராட்டவில்லை நான் பரம ஏழை ; எங்கள் பூர்வ சொத்தெல்லாம் போய் விட்டது , என் பங்காளி சுந்தர முதலியார் பெரிய பணக்காரர் ஆயினும், எனக்குக் கடவுள் அருளிய கையும் காலும் தேக ஆரோக்கியமும் உள்ளவரை, அன்புவுக்கு ஒரு குறைவும் இன்றி, நான் அவளைப் பேணுவேன் ; என் னால் ஏலா ததை என் அன்பினால் நிரப்புவேன்.
வாUED
சகைச் சாமியார்
205
சாமி :- போதும் ; என் மனம் திருப்தியாய்விட்டது. சண்முகம்! அன்புவும் உன்மேல் காதல் கொண்டிருக் கிறாள். ஒரு வேளை உங்கள் பாஸ்பர வாஞ்சை உங்களுக் குள் தெரிந்திருக்கலாம். முருகக் கடவுள் அருளினால் நீங்கள் இருவரும் சந்தோஷமாய் நீடூழி வாழ்வீர்களாக!
சண்முகம் :- எல்லாம் ஸ்வாமிகள் கிருபையும் ஆசீர் வாதமுமே.
சாமி :- ஆயினும், நீங்கள் இருவரும் இப்பொழுது நான் சொல்லும் விருத்தாந்தத்தைக் கவன மாய்க் கேட்க வேண்டும். என் காலம் நெருங்கிவிட்டது ; அதனால் சுருக்கிச் சொல்லுகிறேன். சுமார் இருபத்தைந்து வரு ஷங்களுக்கு முன்–நீங்கள் ஒருவரும் அப்பொழுது பிறக்கவே யில்லை–காஞ்சிபுரத்துக் கடுத்த ஒரு கிராமத் தில், உன்னையும் சுந்தரத்தையும் போல, தாயாதிகள் இரு வர் யொளவன புருஷர் இருந்தார்கள். அவர்கள் பந்து ஒரு வருக்கு மகாரூபவதியும் குணவதியுமான ஒரு மகள் இருந்தாள். அவள் தந்தை ஏழை; ஆயினும் அவள் தாய் செல்வவான் வீட்டிற் பிறந்தவள்; சாகும் பொழுது தன் விலையுயர்ந்த ஆபரணங்களைத் தன் மகளுக்கென்று விட்டுப்போனாள். அப் பங்காளிகள் இருவரும், ஒருவன் உண்மைக் காதலினாலும், மற்றவன் நகையின்மே லாசை கொண்டும், அப் பெண்ணை மணஞ்செய்ய விரும்பினர். அவர்களுக்குள் அதனால் சண்டை விளைந்து, கிரிமினல் கேஸ் நடந்து, இருவரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட் டனர். காதல் கொண்டவனுக்கு நாலு வருஷமும், மற்றவ னுக்கு ஒன்பது மாத காலமும் சிறை விதிக்கப்பட்டது. காதல் கொண்டவன் சிறைமீண்டு வெளிவருமுன், மற்றவன் பெண்ணை மணம்புரிந்து, அவர்களுக்கு ஒரு பெண் குழந் தையும் பிறந்திருந்தது. அவனுக்குக் கோபமும் தாப மும் பொறுக்க முடியவில்லை. அன்றியும், புருஷனும் மனைவியும் ஒத்துச் சந்தோஷமாக வாழவில்லை யென்றும், புருஷன் மனைவியின் நகைகளை ஒன்று ஒன்றாக விற்றுத்
கையை
206) குசிகர் குட்டிக் கதைகள் தனக்குப் பணமாக்கிக் கொள்ளப் பார்க்கிறானென்றும், அவன் அறிந்தான். ஆகவே, ஒருநாளிரவு, அவன் பதுங்கி உள்சென்று, தன் எதிரியைக் குத்திக் கொன்று விட்டான். ஆனால், நான் – இல்லை, காதல் கொண்டவன், ஒரு தப்பெண்ணம் கொண்டிருந்தான்; அப் பெண்ணுக்கு ஆதி தொட்டுத் தன்மேலேயே ஆசையென்பது அவனுக் குத் தெரியும்; ஆனால் கற்பின் திண்மை இத்தன்மைய தென்று அவனுக்குத் தெரியாது. அவள் சிறந்த பதி விரதை; ஒப்பில்லாத அழகு போலவே, உயர்குணமும் தீர மும் வாய்ந்தவள் ” சாமியாருக்கு மேற்பேச முடிய வில்லை; மார்பின் இடப்புறத்தின் மேல் கையை வைத்துக் கொண்டு, பெருமூச்சு விடலானார். கதையில் ஆழ்ந்திருந்த அன்பு, அதைக் கவனிக்கவில்லை. சண்முகம் ஓடிப்போய்த் தண்ணீர் கொணர்ந்து, அவர் முகத்தில் தெளித்து, சிறிது குடிக்கவும் கொடுத்தான். பின்பு களைப்பாறி குறைக் கதையையும் அவர் மிகுவேகமாய்ச் சொல்லலானார் : ” அவள் தன் குழந்தையையும் நகைகளையும் அவனிடம் ஒப்புவித்து, தன் சொந்த மகள் போலவே அக்குழந்தை யைப் பேணி வளர்க்கும்படியும், நகைகளைத் தன் இஷ்டம் போலச் செய்யும்படியும், தன் மீது அவன் கொண்டுள்ள காதலின் மேல் ஆணை வைத்துக் கூறிவிட்டு, அவள் திடீ ரெனத் தன்னைக் குத்திக்கொண்டு இறந்து விட்டாள். ”
இத்தறுவாயில் மற்றொருவன் உள்ளே வந்து சேர்ந்த தால் கதை சிறிது தடைப்பட்டது. வந்தவன் சண்முகத் தைக் கோபமாய் வெறித்து நோக்கி, பின்பு சாமியாரை யும் அன்புவையும், சாமியாரின் தேக சௌக்கியத்தைப் பற்றி விசாரிக்கலானான்.
சாமி :- இரு, சுந்தரம் ; இருந்து குறைக்கதையையும் கேள். இப்பொழுது தான் உன் வரவை வேண்டி னேன். முருகக் கடவுள் உன்னை வரும்படி செய்து
சுந்தரம் :- நான் முன்பே வந்தேன். ஸ்வாமிகள் கோபப்படும் என்று உள்ளே வரவில்லை. தம்பி சண்முகம் இங்கே வந்திருப்பது தெரிந்தவுடன், நானும் விரைவாய் உள்ளே வந்தேன். சுவாமிகள் ஏன் என் வரவை வேண்டினது? என் மனத்தின் முக்கிய ஆசைதான் ஸ்வாமிகளுக்குத் தெரியுமே.
சாமியார் : – தெரியும்; தெரிந்ததனால் தான் உன் வாவை வேண்டினேன் ; ஊடே பேசாமல், நான் சொல் வதை முழுதும் கேள். அன்புவைத் தான் கலியாணஞ் செய்துகொண்டு பேணிக் காப்பாற்றும்படி, இப்பொழுது தான் சண்முகத்துக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன், ஊடே பேசாதே, என்கிறேனே ; நான் சொல்வதைக் கேள் : உனக்குப் பெண்டாட்டி இருக்கிறாள் ; நீ தனவான்; குழந்தையில்லை என்றாலும், எங்கிருந்தோ வந்த அனாதை யான அன்புவை நீ மணஞ்செய்வது தகாது. முருகக் கடவுள் கிருபையினால் உனக்கு சீக்கிரம் குழந்தை பிறக் கும்; நீ அவசரப்பட்டு வேறொரு பெண்டாட்டி கலி யாணஞ் செய்துகொள்ளக் கூடாது. அன்றியும், நீ என் னிடம் உண்மையில் விரும்புவது, அன்புவை இல்லை ; மற் றொன்று என்பதை நான் அறிவேன். நீ ஒரு விஷயம் ஒப்புக்கொண்டால், உன் ஆசையை என்னாலியன்ற மட் டும் திருப்தி செய்கிறேன். அன்பு! அந்தப் பெட்டியையும் வேலாயுதத்தையும் எடுத்துவா.
அன்பு:- ஐயா! நான் தொடலாமா?
சாமி :– தொடலாம்; பாதகமில்லை; முருகன் பெயரை உச்சரித்துக்கொண்டு எடுத்துவா.
அன்பு, அப்படியே, “முருகா! முருகா!” என்று சொல்லிக்கொண்டு, பித்தளைப் பெட்டியையும் வேலாயுதத் தையும் புழையினின்றும் பத்திரமாய் எடுத்துவந்து சாமியார் கையில் கொடுத்தாள்.
சாமி :- நான் வேஷக்காரனல்ல; பொய் சொல்ல மாட்டேன் ; எனக்கு ரஸவாதம் தெரியாது ; அதனால், சுந்தரம், உனக்கு அதைச் சொல்லிக்கொடுக்க என்னால் முடியாது. ஆயினும், இந்தப் பெட்டிக்குள் அதற்குச் சமமான ஒரு விலையுயர்ந்த பொருள் இருக்கிறது. சுந் தரம்! இந்த வேலாயுதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, முருகக்கடவுள் மேல் ஆணை வைத்து, “நான் ஒரு நாளும் சண்முகத்தின்மேல் பகை பாராட்டுகிறதில்லை; அவனும் அன்புவும் கூடி வாழும் வாழ்க்கைக்கு நான் எவ்வித இடை யூறும் இழைக்கமாட்டேன்” என்று பிரமாணஞ் செய். சாகுந் தறுவாயில் நான் இடும் ஆக்ஞை இது ; அப்படிச் சத்தியம் செய்து கொடுத்தால், இந்தப் பெட்டிக்குள் இருக்கும் விலைமதிப்பற்ற திரவியமெல்லாம் உனக்கே கொடுத்துவிடுகிறேன். செய் பிரமாணம்!”
சுந்தரம் அப்படியே வேலைக் கையில் வைத்துக் கொண்டு, திகிலினால் நடுநடுங்கி, பிரமாணஞ் செய்தான்.
சாமி :- குழந்தைகளே! என் கிட்ட வாருங்கள்; நான் போகுமுன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இந்தக் குகைக்குள்ளேயே என்னை அடக்கம் செய்து, என் சமாதி யின் மேல் இந்த வேலாயுதத்தை நட்டு, வெள்ளிக்கிழமை தோறும் பூசை நடக்கட்டும்; சுந்தரம், அது உன் பொறுப்பு : அதற்கு வேண்டிய ஏற்பாட்டை நீ நியமிக்க வேண்டியது.
சுந்த:- உத்தரவுப்படி நடக்கிறேன்.
சாமி :- நான் இறந்த பிறகு, மூன்றாவது நாள் இராத் திரியில், இந்தப் பெட்டியை நீ திறந்து பார்த்து, அதில் உள்ளதை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளே! முருகக் கடவுள் உங்களுக்கு அநுக்கிரகம் செய்வாராக! என் அன்பு! நான் போய்வருகிறேன்; ஷண்முகம்! அன்பு புவைப் பேணிக் காப்பாற்று! சுந்தரம்! உன் பிரதிக் கினையை மறந்து விடாதே. இதோ வருகிறேன், என் கண்ணாட்டி, இதோ வருகிறேன்! உன் ஆணைப்படி நிறை வேற்றிவிட்டேன். முருகா!” திடீரென்று குகைச்சாமி யார் எழுந்திருந்து, உடனே தேகவியோகமாகிப் பிரேதமாகக் கீழே விழுந்து விட்டார்.
இப்பொழுது அன்புவும் சண்முகமும் ஏழைகளேயெனினும், ஆனந்தமாய் வாழ்ந்து வருகின்றனர்; சுந்தர முதலியாரின் சொத்து, திடீரென்று இரட்டித்து விட்டது; குகைச்சாமியார் சாகுமுன் அவர்க்கு ரஸவாத ரகசியத்தைக் கூறிப் போனதாக ஊர்வதந்தி. குகைக்குள் சமாதி மேலுள்ள வெள்ளி வேலுக்கு, வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பண்டாரம் பூசை செய்கிறான். சுக்கிரவாரம் தவறாமல் தரிசனத்துக்குச் செல்பவர், அன்புவும் சண்முகமுமே.
– குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம், 1924, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, மயிலாப்பூர்