கிளைகளில்லா பறவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,861 
 
 

அந்த கிராமம் அவ்வளவு அழகானது அல்ல. ஒரே ஒரு பெரிய ஆலமரம் அதை சுற்றி முப்பது முதல் நாற்பது வீடுகளே இருக்கும். அதிலும் பாதிக்கு மேல் குடிசை வீடுகள்.

அந்த ஊரில் நாய்கள் அதிகம். அந்த நாய்கள் எதுவும் பார்ப்பதற்கு தெரு நாய்கள் போல இருக்காது.

அன்று காலை செல்வத்தின் கண்களில் சூரிய ஒளி பட்டு அவனது தூக்கத்தை கெடுத்தது. சிறு சிறு ஓட்டை விழுந்த அந்த போர்வையை எப்படி போர்த்தி கொண்டாலும் ஏதாவது ஒரு ஓட்டை வழியே ஒளி வந்து இம்சை செய்தது. அவனது தாத்தா காளிமுத்துவும் அவனை எழுப்ப விருட்டென எழுந்து சரட்டென திரும்பி படுத்து கொண்டான்.

நீ வெளங்க மாட்டா… வெக்காலி காலையில சீக்கிரமா எந்திரி எந்திரின்னு எத்தன தடவ சொன்னாலும் கேக்குற மாதிரி இல்ல. என்று தனது பத்து வயது பேரன் செல்வனை திட்டி விட்டு அந்த அழுக்கான சட்டையை மாட்டி கொண்டு அந்த ஆலமரத்தை நோக்கி கிளம்பினார்.

அவனுக்கு இனி தூக்கம் வருவதாக தெரியவில்லை. எழுந்து வந்து தன் குடிசைக்கு முன் குத்த வைத்து உட்கார்ந்தான்.

தூரத்தில் ஆறேழு சிறுவர்கள் டயர் ஒட்டியபடி வந்து கொண்டிருந்தனர்.

இவன் குடிசைக்குள் சென்று டயர் எடுத்து வெளியே வந்து நின்றான். அவனை கண்டதும் மற்ற சிறார்கள் நின்றனர்.

செல்வம் போலாம் டா என்றான் வேகமாக.

டேய் செலுவா, தேனு மிட்டாய் வாங்குறதுக்கு காசு வச்சிருக்கிய டா?

தேனு மிட்டாய் வேணாம் டா. உங்க கூட டயர் மட்டும் ஓட்டுறேன் என்றான் செல்வம்.

அதெல்லாம் முடியாது, எல்லோரும் காசு வச்சிருக்கோம். நாங்க பங்கு எல்லாம் தர மாட்டோம். ஒத்த ரூபா கூட இல்லையா டா செலுவா. என்னட நீ.? உங்க தாத்தா கிட்ட கேளு டா. என்று சொல்லி விட்டு டயரை ஒட்டியபடி கிளம்பினர்.

பெட்டி கடையில் ஒரு ரூபாய் கொடுத்து ரெண்டு பீடி வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்து கொண்டு திரும்பி ஆலமரத்து திண்ணைக்கு நடந்து கொண்டிருந்த போது அவருடனே செல்வமும் ஒட்டி கொண்டு நடந்து வந்தான்.

தாத்தா ஒத்த ரூவா இருந்தா தாங்க.

போடா அப்டியே அடிக்க போறே. நேத்து கொடுத்த காசு எங்க டா.

தாத்தா நேத்தே செலவு ஆய்டுச்சுத்தா.

என்ட்ட இல்ல போய் தொல. உங்கப்பே ஓடுகாலிய கட்டி கிட்டு தூக்குல தொங்கிபுட்டான். உன்ன என் கழுத்துல தொங்க விட்டான் என்று முனங்கிய படி பீடியை ஒரு இழு இழுத்தான்.

டயரை ஓட்ட ஆவலாக இருந்த செல்வத்தின் முகம் வாடி போனது. தலையை கிழே தொங்க போட்டு மண்தரையை பார்த்தபடி இருந்தான்.

காளிமுத்து புகையை வெளியே ஊத்திவிட்டு பொறு, முத்தையா வரட்டும் என்றான்.

ஆலமரத்தில் இருந்து ஒரு ஐந்து வீடு தள்ளி உள்ள ஒரு சந்தில் முகப்பில் நான்கு தூணும், இரு பக்க திண்ணையும், ஒரு மேல் மாடியும் கொண்ட ஒரு சிறு வீடு தான் முத்தையாவின் வீடு. அவர் காளிமுத்துவின் நெருங்கிய நண்பர். சிறுது வசதிகள், நல்ல குடும்பமாக இருந்தும் தாமரை இழை தண்ணீர் போல அந்த குடும்பத்திற்கு ஒவ்வாத மருமகள்.

என்னங்க உங்க அப்பா இப்பிடி செல்லுராறு என்று இலுத்தாலே.. போதும் என்னடி சொன்னான் எங்கப்பே என்று அவளிடம் கேட்டு கொண்டே வேகமாக நடந்து வந்து முத்தையா முன்பு நின்று, பட படவென பேசி இறுதியாக நாலு அடி கொடுத்து விட்டு தான் கிளம்புவான். முத்தையா அடி வாங்குவதை சகிக்காத அவளது மனைவி அழுவதை தவிர வேறு வழியின்று சிலை போல திண்ணையில் கிடப்பாள். மீறி கேட்டு பல முறை அவளும் அடி வாங்கி இருக்கிறாள். வத்தலும் தொத்தலுமான இந்த உடம்பை வைத்து கொண்டு அந்த காட்டு மனிதனிடம் அடி வாங்க சத்தில்லை. அதனால் தான் இந்த மௌன அழுகை.

அன்றும் முத்தையா ஏதோ சொல்லிவிட்டார் என்று அவரது மகன் கொதித்த படி முத்தையா முன் வந்து நின்றான். ஏன்டா சோத்த அமுக்கி கிட்டு சும்மா உக்கார முடியலைய என்று கண்டபடி திட்டி அடித்தான்.

அடிவாங்கி கண்ணீருடன் வழக்கமாக இதே நேரத்தில் சந்திக்கும் தன் நண்பனை சந்திக்க கிளம்பினான்.

செல்வம் அதே இடத்தில தலை குனிந்த படியே நின்று இருந்தான். அடுத்த பீடியை இப்போவே பற்ற வைக்கலாமா? இல்லை கொஞ்ச நேரம் போகட்டுமா என்ற ஆழ்ந்த யோசனையில் காளிமுத்து.

இருவரது மனபோக்கையும் முத்தையா குறுக்கிட்டு கலைத்தார். திண்ணையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

டேய் முத்தையா ஒரு ஒத்த ரூவா இருந்த தாடா இந்த பயலுக்கு கொடுத்து அனுபிடலாம் என்றான் காளிமுத்து.

டேய் காளி நாம நம்ம பொண்டடிங்க பேச்ச கேட்டு என்னகாவது நம்ம அப்பன ஆதல ஒரு வார்த்தையாவது பேசி இருகோமாட?

இல்ல.

எ மகே அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டு இப்டி கொடும பண்றானே டா. எ பொண்டாட்டிய நான் கூட அடிச்சதில்ல அவன் அப்படி அடிக்கிறான். என்று கண்கலங்கியவர் அழ ஆரம்பித்து விட்டார்.

விடப்ப விடப்ப இத போல நெறய பாத்தாச்சு என்று கூறிய காளி முத்து, அவசரம் தாங்க முடியாமல் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் பேரனை கலட்டி விடவே அவ்வளவு அவசரமாக முத்தையா அருகில் சென்று கேட்டார், முத்தையா பேச்சு வாக்குல அந்த ஒத்த ரூவாய மறந்துடாதே.

மெதுவாக திரும்பி பார்த்த முத்தையா கண்களை துடைத்து கொண்டு தனது பையில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து கொடுத்தான்.

அன்று நடுஇரவு, ஒரு ஆட்டோ அந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து நின்றது. உள்ளே இருந்து ஒரு நாய் இறக்க பட்டு அதற்க்கு விரும்பிய உணவுகளை எல்லாம் அந்த நாயை சுற்றி வைத்தனர்.

ஒரு சிறுவன் தேம்பி தேம்பி அழுத படி ஆட்டோ குள் இருந்தான். அப்பா கூட்டி போய்டலாம் என்றான். சும்மா இருடா இது கொளாச்சி கிட்டே இருக்குது, அக்கம் பக்கத்துக்கு வீடு காரங்க நம்மள கேக்குரங்கள்ள. சும்மா இரு உனக்கு வேறு நாய் வாங்கி தரேன் என்றார் அப்பா.

அந்த அப்பாவின் பேச்சு ஒரு கேலி பொருளை பற்றியதாக இருந்தது. அந்த சிறுவனின் நெஞ்சம் தன் நெருங்கிய ஜீவனை பிரியும் அழுகையில் இருந்தது.

அந்த நாய் அங்கு வைக்க பட்ட உணவு பொருள் மீது கவனம் போகவே, இவர்கள் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தனர். நாய் உஷாரானது. இவர்கள் வேகமாக செல்ல நாய் பின்னால் துரத்தி கொண்டே வந்தது. ஆட்டோவின் வேகத்திற்கு ஈடு கொடுத்தது, ஆனால் ஆட்டோ வேகமாக சென்று விட்டது.

காலை ஆலமரத்திற்கு அடியில் பீடி பிடித்த படி காளிமுத்து அமர்ந்து இருந்தான். டயருடன் செல்வம்.

அங்கு நாய் குறைக்கும் சத்தம் கேட்கவே சற்று தலையை திருப்பினார். பீடி பிடித்து புகை விட்ட படி உன்னிப்பாக நாய்களை நோட்டமிட்டான் காளி முத்து. அந்த புது நாய் கண்ணில் தட்டுபட்டது. வெக்காளி அப்புறம் என்ன மயித்துக்கு நாயா வாங்குறாங்க. இந்த ஊர்ல வந்து கொண்டு விடுறதுக்கா? என்று முனகியபடி திரும்பினால், செல்வம் சுடு சுடுவென நின்றுந்தான். அவனை கண்டதும் மீண்டும் முகம் இறுகி கொண்டது காளிமுத்துவிற்கு.

அங்கிருந்து முத்தையா நடந்து வந்து கொண்டிருந்தான்…

அவரது முதுகை பார்த்தவர்கள் எல்லோரும் அச்சச்சோ என்று திகைத்தனர்.

செல்வத்தை நோக்கி நடந்து வந்தார். பையில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து கொடுத்தார். அதை கண்ட காளிமுத்துவிற்கு ஆச்சரியம். செல்வம் குடு குடுவென டயரை ஓட்டியபடி பறந்து விட்டான்.

டேய் முத்தையா என்னட..!? என்றான் காளிமுத்து.

என்ன டா செல்வத்துக்கு காசு கொடுத்ததே இல்லையா என்ன?

இல்ல, உன் கிட்ட காசு வாங்குறதே பெரிய விஷயம் ஆச்சே, கேக்காம தர்ற? அதான் ஆச்சிரிய பட்டேன்.

ஒத்த ரூவா தான டா அதுக்கு ஏ இவ்வளவு திகைப்பு.

என்னமோப்பா எனக்கு என்னவோ நீ இன்னக்கி பண்ணது ஆச்சிரியமா இருந்துச்சு. எப்போவும் பண்ணாதது இன்னக்கி பண்ணது போல இருந்துச்சு.

டேய் காளி அப்போப்போ என் வீட்டுக்கு வாடா… மனசே சரி இல்ல.

நா வந்தா தான் உன் மகே அப்படி அசிங்கமாபேசுறானே.

நா அவசர பட்டுட்டேன், வீட்ட அவனுக்கு எழுதி கொடுத்திருக்க கூடாது. எல்லாம் போச்சு ஏ காலத்துக்கு அப்புறம் என் பொண்டாட்டி சுப்புக்கு என்ன ஆதரவோ தெரியல.

சரி விடப்ப முத்தையா வேற ஏதாவது பேசுவோம் என்று சொல்லி கொண்டே பீடியை எடுத்து பற்ற வைத்தான் காளி.பொத்தென காளியின் மடியில் விழுந்தார் முத்தையா.

பயங்கரமாக பெல்ட்ஆல் அடித்து இருக்கிறான் அவரது மகன். முதுகு முழுவதும் அடிவாங்கிய அச்சு பதிந்திருந்தது..

தட்டி எழுப்பினார் காளி அவன் எழவில்லை. பேச்சும் இல்லை மூச்சும் இல்லை.

இரண்டு நாள் போனது. ஆலமரத்தடியில் காளி அமர்ந்து கையை பிசைந்து கொண்டிருந்தார். முகம் முழுவது இறுகி போய் இருந்தது. டயருடன் செல்வம் தரையை பார்த்த படி.

நாட்கள் உருண்டோடியது……. ஐந்தாறு மாதம் சென்றது.

காளியின் முகம் முழுவது எலும்புகள் பீரிட்டு தெரிந்தது. வாயின் இரு புறமும் அகலமான குழி விழுந்திருந்தது. மூச்சி விடுவதற்கே சிரமம். பீடியை பற்ற வைத்தார். அந்த ஒரு இழுவை இழுப்பதர்க்கே மிகவும் சிரம பட்டார். புகையை கஷ்ட பட்டு இழுத்து தொண்டைகுழிக்குள் போகும் பொழுது புரை ஏறி இருமல் வந்தது. இரு தடவை இருமி விட்டு மூணாவது முறை பெரு மூச்சுடன் இரும்ப தொடங்கினார்.

சிறுது நேரம் பிறகு.

ஆலமரத்தில் இருந்து காய்ந்து போன இழை ஒன்று அவர் மார்பு மேல் வந்து விழுந்தது. காளியை பிடித்து உசுப்பி கொண்டிருந்தான் செல்வம். அருகில் சோடா பாட்டிலுடன் பக்கத்து கடைகாரர். அப்போது மட்டும் காளிமுத்துவை சுற்றி எத்தனை கூட்டம். அங்கு கேட்டு கொண்டிருந்தது ஒரே அழு குரல் செல்வதினுடயது மட்டும்.

எல்லா காரியமும் முடிந்தது.

சமுதாயம் குழந்தை குப்பை தொட்டியில் கிடந்தால் எடுத்து கொடுக்கும். அனாதை பிணம் என்றால் எடுத்து எரிக்கும்.

செல்வம் தனி மரம் ஆக்க பட்டான்.

அன்று பயங்கர பசி, தாங்க முடியவில்லை. நேராக முத்தையாவின் வீட்ற்கு சென்றான். வெளியே முத்தையாவின் மகன் தனது வண்டியை துடைத்து கொண்டிருந்தான்.

அவன் வந்ததை பார்த்து என்ன என்று கேட்டான். செல்வம் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு. எனக்கு பத்து ரூபா வேணும். சாப்ட்டு ஒரு வாரமாகுது என்றான்.

மேலும் கீழும் பார்த்த அவன் சிறுது வினாடிக்கு பிறகு. அவனது தலையை பிடித்து வலிக்கும் படி ஆட்டினான். இந்தா என்று பத்து ரூபாய் நீட்டி இனி இந்த பக்கம் வந்தன்ன கொன்னுருவேன் என்று முறைப்புடன் திட்டி அனுப்பினான்.

அவனும் சரி என்று தலை அசைத்து விட்டு முத்தையா வீட்டு திண்ணையை பார்த்தான். முத்தையாவின் மனைவி முன்பு இருந்ததை விட கல்லாகி போய் இருந்தாள்.

வேகமாக பெட்டி கடையை நோக்கி ஓடினான்.

அங்கு ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு விட்டு போன நாய் தீனி கிடைக்குமா என்று கடைகாரனையே நாக்கை தொங்க போட்டு பார்த்து கொண்டிருந்தது.

அங்கு வந்த செல்வம் ரெண்டு பன்னை வாங்கி உண்ண ஆரம்பித்தான். சாப்ட்டு கொண்டே நாயை பார்த்தான். நாய், வாலை ஆட்டி கொண்டே தலை சாய்த்து பார்த்தது.

பன்னை சிறுதாக பீய்த்து நாய்க்கு போட்டான்.

நாட்கள் சென்றது. இவனது பசிக்கு உணவு கொடுக்க யாருமில்லை. தினம் மாலை பொழுதில் அந்த பாழடைந்து போன கோவிலில் தரும் சிறுது பிரசாதம் மட்டுமே இவனுக்கு உணவு.

மெட்ரோ சிட்டி போன்ற பெரும் நகரங்களை போல இவன் கிராமத்தருகில் அப்படி எந்த நகரமும் இல்லை. எந்த ஒரு வேலை வாய்ப்பு உள்ள ஊர்களும் இல்லை. ஒரு வேலை அப்படி இருந்திருந்தால் இவன் உணவுக்காக பலரது கையை எதிர் பாத்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இவன் வாழ்வதோ அந்த அழகில்லா கிராமத்தில்.

அன்று அவனுக்கு காது அடைத்து போய், கண்கள் இருண்டு போய், வயிறு உள்ளே தள்ளி போய் இருந்தது. பசி மயக்கம்.

அவன் காதுகளில் அமுங்கிய சத்தத்துடன் சிறுவர்கள் பேசுவது கேட்டது. உன்னிப்பாக கேட்க்கும் அளவுக்கு அவனிடம் சக்தி இல்லை. இருப்பினும் ஏதோ சிறுதளவு கேட்க முடிந்தது. டயர் டயர் என்று காதில் விழுந்தது.

பசி மயக்கத்திலும் அந்த சிறு வயது விளையாட்டு தனம் அவனை சுண்டி இழுத்தது. கஷ்டபட்டு எழுந்து அவனது குடிசைக்குள் சென்றான். அங்கு நால்வர் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அதில் ஒருவன் என்ன என்றான்.

செல்வம் டயர் எடுத்துக்குறேன் என்றான்.

நால்வரில் ஒருவனுக்கு பக்கத்தில் அந்த டயர் இருந்தது அங்கிருந்த படியே அதை தூக்கி எறிந்தான்.

செல்வம் அதை எடுத்து கொண்டு அந்த சிறுவர்கள் கூட்டத்தை பார்த்தான்.

அவர்கள் அந்த நாயை துரத்திய படி டயர் ஒட்டி கொண்டிருந்தனர். இவனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டான். இரண்டடி ஓடினால் கொஞ்சம் கிறு கிறுவென வந்தது. அதையும் பொருட்படுத்தாமல் ஓடினான்.

அந்த சிறுவர்களில் ஒருவனின் அம்மா ஓடி கொண்டிருந்த தனது மகனை கத்தி குப்பிட்ட படியே ஓடிவந்து அவனை இரண்டடி அடித்து விட்டு சொன்னாள் அந்த செல்வம் கூட சேர கூடாதுன்னு சொல்லி இருகேன்ல்ல டா என்று சொல்லி விட்டு மற்ற சிறுவர்களையும் போகாதீங்க என்று கூறினாள் அந்த சிறுவர்கள் கூட்டம் அப்படியே நிற்க்க. செல்வம் அந்த நாயை துரத்திய படி ஓடி கொண்டே இருந்தான்………

சமுதாயம், குழந்தை குப்பை தொட்டியில் கிடந்தால் எடுத்து கொடுக்கும். அனாதை பிணம் என்றால் எடுத்து எரிக்கும். சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சி மனிதனின் பிறப்புக்கும், இறப்புக்கும் மட்டுமே. கிளைகள் இன்றி வாழும் செல்வம் போன்ற பறவைகளுக்கு அல்ல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *