கிராமத்து வாசனை

13
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 8,117 
 
 

பகுதி_1

அந்த 29ஆம்நம்பர் பேருந்து பட்டணத்தில் இருந்து உள்ளூர் நோக்கி போய் கொண்டு இருந்தது. அதிகாலையில் கிளம்பியதால், சிலர் வாயை பிளந்து கொண்டு தூங்கி கொண்டு இருந்தனர். சிலரின் குறட்டை ஒலியும், சிலர் மற்றவர்களின் தோளில் சாய்ந்தபடியும், தூங்கிக் கொண்டு இருந்தனர். சிலர் நடு நடுவே கண்களை திறந்தும், மூடியும் தூக்க கலக்கத்தில் இருந்தனர். நடு நடுவே வரும் கிராமத்தில் பேருந்தை நிறுத்தி டிக்கெட் வாங்கியவர்களை, இறக்கி விட்டு கொண்டு இருந்தார் கண்டக்டர்.

“சுக்கிராம்பட்டி டிக்கெட் எடுத்தவங்க இறங்குங்க”,.கண்டக்டரின் குரல் கேட்டு எல்லோரும் விழித்தனர்.

வயதானவர் எழுந்து நின்றார். பக்கத்தில் இருந்த ஜோல்னா பையை எடுத்துக் கொண்டவர், “ஏம்பா,சாயங்காலம் எப்போ இந்த பஸ் திரும்பி பட்டணத்துக்கு போகும்?” எங்கே வந்து நிற்கும்?”என கேட்டார். “என்னையா இன்னிக்கே திரும்பனுமா? அதோ எதிரில் இருக்கிற ஹோட்டல் பக்கம் ஐந்து மணிக்கு வந்துடும்,ஒரு ஐந்து நிமிஷம் கூட நின்னு பார்த்துட்டு கிளம்பறேன்”, என்று சொன்னான். “ரொம்ப சந்தோஷம்” என்றவர், ஒவ்வொரு படியாக காலை வைத்து இறங்கினார். அவர் இறங்கியதும் பேருந்து கிளம்பியது. இறங்கியவர்க்கு ,எழுபது வயது இருக்கும்.வெள்ளை வேஷ்டியும், ஜிப்பாவும் போட்டு இருந்தார். காந்தியின் கண்ணாடிகள். வழுக்கை மண்டை பின்னால் சற்று வெள்ளை மயிர் அவரின் வயதினை எடுத்துக் காட்டிக் கொண்டு இருந்தது.கையில் கட்டி இருந்த கடிகாரம் மணி 7.30யைக் காட்டியது. சூரியனின் கதிர்கள் நேராக அடிக்க தொடங்கின.

சிறிது நேரம் அந்த பேருந்து நிலையத்தில் போட்டு இருந்த பெஞ்சில் அமர்ந்தார். ஒரு முறை கிராமத்தின் சுத்தமான காற்றை மூச்சை விட்டு இழுத்தார்.அங்கு பக்கத்தில் மாங்காய் விற்று கொண்டிருந்த கிழவி அவரை உற்று நோக்கிக் கொண்டு இருப்பதை அவர் கவனிக்கவில்லை. பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்து விட்டு கிராமத்துக்குள் செல்ல எண்ணினார்.

பெஞ்சில் சென்று அமர்ந்தவர், “ஒரு டீ குடுப்பா” என்றார். “வரேனுங்க சாமி”, என்றான் உள்ளே இருந்து அந்த பையன். பழைய சினிமா தமிழ்ப் பாட்டு பாடி கொண்டு இருந்தது.பையில் இருந்த பிஸ்கட் பாக்கட்டில்ருந்து பிஸ்கட்டை எடுத்தார். அங்கு படுத்து இருந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டு வர, அதற்கு ஒன்றை போட்டவர் கிராமத்தை சுற்றிப் பார்த்தார்.

ஐந்து வருடம் போனதே தெரியவில்லை. மனைவி பர்வதத்தின் மறைவுக்கு பின்னும், அவர் ரிடையர் ஆகும் வரை இந்த கிராமம் தான் அவர் உலகம். அதற்கு பின் பிள்ளையுடன் பட்டணத்துக்கு போனவர் இப்பொழுது தான் வந்தார். மறுபடியும் அவர் அந்த சுத்தமான காற்றை அனுபவித்தார். என்ன ஒரு நிம்மதி.

டீயை போட்டுக் கொண்டு வந்த பையன் ,சற்று உற்று பார்த்தவன், “ஐயா, வாத்தியார்ய்யா சோமசுந்தரம் தானே?” என்று கேட்டவன் பதில் சொல்வதற்கு முன் அவர் காலில் விழுந்து எழுந்தான். “என்னப்பா இது,”? யார்னு தெரியலை என்றார். “ஐயா, நான் சூடாமணி, எனக்கு கணக்கு வாத்யார் நீங்க தான் உங்களை நினக்காத நாள் இல்லை சார்” என்றவன் கண்ணில் கண்ணீர் வந்தது.

அப்பொழுது அந்த பக்கம் வந்த பையனை கூப்பிட்டவன், “டேய், டயரை ஒட்டிக்கிட்டு திரியாதேனு எத்தனை தடவை சொல்றது, ஐயா,கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்குடா”, என்று கத்தினான். டீக்கான பைசாவை வாங்க மறுத்தான்.

அரை நிக்கருடன் கையில்லாத பனியனும் போட்டு இருந்தான். டயரை ஒட்டி வந்தவன், கையை விட்டு விட, டயர் சாலையில் சுற்றி கடைபக்கம் வந்து விழுந்தது.கைகுச்சியை பெஞ்சில் வைத்தவன், பெரியவர் காலில் விழுந்து எழுந்தான்.

“பெயர் என்னப்பா? உன் பிள்ளையா?”, சூடாமணியைப் பார்த்துக் கேட்டார்.

“ஆமாங்க, பேரு சொல்லுடா” சத்தமாக சொன்னான்.

“மாணிக்கம்”, என்றவன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“நல்ல பெயர், நன்றாக படிக்க்னும்”, என்று அவன் கையில் ஒரு 50ரூபாய் கொடுத்தார்.

“ஊருக்குள்ளே போயிட்டு வரேன்ப்பா”, என்றவரிடம் “ஐயா, குடை எடுத்துக்கிட்டு போங்க,வெய்யில் அதிகமாக இருக்கு”, என்றான்.

“பட்டணத்து வெய்யில் விட இங்கு குறைவாகவே இருக்கு. மரங்களும், காற்றும் மனதுக்கு இதமாக இருக்கு. நான் வரேன், குடை வேண்டாம்”, என்றவர் எழுந்தார். பிஸ்கட் சாப்பிட நாய் வாலை ஆட்டிக் கொண்டு பின்னால் வந்தது.

மாங்காய் விற்று கொண்டிருந்த கிழவி, எழுந்து நின்றாள். “வாத்யார் ஐயா, தானே? நல்லா இருக்கீங்களா?என்று கேட்டவளை அச்சிரியத்துடன் பார்த்தார். “எம் மக உங்க கிட்ட தானே படிச்சுது. இப்ப அந்த ஹோட்டலில் வேலை பார்க்குது. ஊருக்குள்ளே போறீங்களா? இந்தாக இந்த மாங்காய் எடுத்துக் கிட்டு போங்க என்றாள். “இந்தாம்மா காலைல போணி சமயம் இதை வைச்சுக்கோ,என்றவரிடம் “ஐயா, நீங்க எங்க குடும்பத்தை வாழ வைத்தவங்க மகராசரா இருக்கணும்”, என்று வாழ்த்திய போது அவருக்கு மெய் சிலிர்த்தது. பட்டணத்தில் காய்கறி தொட்டு வாங்காமல் போனால் போணி சமயத்தில் “வாங்காமல் போறிங்க” என்று கத்தும் ஜனங்கள்.

அங்கிருந்தே பெருமாள் கோவிலின் கோபுரம் தெரிந்தது.முதலில் கோவிலுக்குச் செல்ல எண்ணினார். வெய்யிலின் தட்பம். அவ்வளவாக தெரியவில்லை. நடந்து வந்ததில் இரு பக்கமும் மரங்களின் காற்றும், அரசமரம்,ஆல மரங்களின் நிழல்களும்,சுகமாக இருந்தது. பட்டணத்தில் மனிதர்களே அசைந்து கொடுக்காதது போல மரங்களும் அசைவதில்லை. காற்றும் வருவதில்லை. யாவரும் குளிர் சாதனம் தேடி ஒடும் வாழ்க்கை.

பகுதி_2

அக்ரஹாரத்தின் வழியாக கோவிலுக்கு போக வேண்டும். பெரிய பெரிய திண்ணைகள், பெரிய பெரிய பொட்டு வைத்த கோலங்கள், சாம்பாரின் நறுமணம், சின்ன பையன்கள் குடுமியும், விபூதியும், வேஷ்டியும் கட்டிக் கொண்டு வேத பாட சாலைக்கு போகும் காட்சி,அக்ரஹாரத்தின் விவரிக்க முடியாத சிறப்பு அம்சங்கள். இரண்டு மூன்று மாமிகள் மடிசார் புடவையும்,அர்ச்சனை பூக் கூடையுமாய்,கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

கோவில் கோபுரத்தில் எந்த மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போல் பூஜை சாமான்கள் கடைகள் இருந்தன பூ மாலைகள், கற்பூரம், ஊதுபத்திகளின் வாசனைகள் நன்றாக இருந்தது. ஒவ்வொன்றையும், ஒவ்வொரு அசைவையும் அவர் ரசித்தார். ஒரே ஒரு பெரிய அரச மரம் கூடவே அதனுடன் வேப்ப மரமும் இருந்தது.கிராமத்தில் அவை இரண்டும் இணைந்து இருப்பது மிக விசேஷம் ஆகும்.அதை சுற்றி சிமெண்ட் தரையும், அதில் ஏறிப் போக வழியும் இருந்தது.சி லர் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.ஒரு சிலர் கையில் தினசரி செய்திதாள் இருந்தது.

பக்கத்தில் அம்மா ஆடு கரு கருவென,அதன் பக்கத்தில் ஒரு கருப்பு ஆட்டுகுட்டியும்,வெள்ளை ஆட்டுகுட்டியும்,இருப்பதற்குஅடையாளமாக மே மே என கத்திக் கொண்டு இருந்தன.ஒரு சில பெண்மணிகள், குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றனர்.மாடுகளை கூட்டிக் கொண்டு விவசாயி,வயலை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். காணக் கிடைக்காத காட்சிகள். கக்கோ, கக்கோ என சேவல் சத்தமிட்டுக் கொண்டு மண்ணில் எதையோ தேடிக் கொண்டு இருந்தது. .கூடவே அதன் குஞ்சுகள் ஓடிக் கொண்டிருந்தன.இதை எதையுமே பார்த்து ரசிக்க முடியாத பட்டணம்.

வாத்தியார் தானே?, பட்டணத்தில் இல்ல இருக்கறதா சொன்னாங்க?” ‘ குரல் வரும் திசை நோக்கி திரும்பி பார்த்து, கிராமத்து ஜமீன்தார்,என பார்த்ததும், வணக்கம் சொல்லி சிறிது நேரம் பேசி விட்டு கோவிலுக்குள் நுழைய சென்றவரை, “ஐயா, பூஜை சமான் வாங்கிக் கிட்டு போங்க” முதல் கடையில் இருந்த பையன் கூப்பிட்டான். செருப்பை அவிழ்த்து கை கால்களை அலம்பிய பின், ஜோல்னா பையில் இருந்து வேண்டிய சில்லறைகளை கொடுத்து அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைத்தார்.

“வாங்கோ, வாத்தியாரவாள், எப்படி இருக்க்கேள்? ரொம்ப நாள் ஆச்சு” கோபாலன் குருக்கள் பேச ஆரம்பித்தார். “ஆமாம், நம்ம கிராமத்தைப் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன், கோவில் ரொம்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு “,என்றார்.

“என்ன சார், பட்டணத்தில் இல்லாத கோவிலா?, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், எத்தனை இருக்கு? நீங்க என்னடன்னா இதை ப் பெரிசா சொல்றேள்!” என்றர். அங்கிருந்த இருவர் அவர்களின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டு இருந்தனர். “அதெல்லாம் சரி தான் குருக்களே,அங்க ஒவ்வொன்றும் ஒவ்வொரு தூரம், தனியாக போக முடியாது. அதைத் தவிர வாகனங்கள் எக்கச்சக்கம். ஜனங்களின் நெரிசில் வேறு. கடவுளைப் பார்ப்பதற்குள், நகருங்க, நகருங்க என தள்ளி விடுகின்றனர். ஒரு மெஷின் போல, எதையும் எதிர் பார்க்க முடியாது”, என சோமசுந்தரம் சொல்ல எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

“அதெல்லாம் போகட்டும், நீங்க பெருமாளை தரிசிக்க வாங்கோ, அர்ச்சனை தட்டை உள்ளே எடுத்து கொண்டு உள்ளே போனவர், “டேய், வாத்தியார் ஐயா, அவருக்கு வெண் பொங்கல் பிரசாதம் எடுத்து வை” என்றார். பிள்ளையாரை தரிசித்து விட்டு, பெருமாளிடம் வந்தவர், கண்மூடி நிம்மதியாக தரிசித்தார். கற்பூரம் காட்டி, பிரசாதத்தை கையில் கொடுத்தார் கோபாலன். சிறிது நேரம் பேசி விட்டு, பிரகாரத்தை விட்டு வெளியே வந்தவர், வெண் பொங்கலை எடுத்து ஒரு சொட்டு வாயில் போட்டுக் கொண்டார். பெருமாள் கோவில் பொங்கல் வேறு யாராலும் செய்ய முடியாது ஒன்று. எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாத பிரசாதம். வெளியில் வந்தவர் பூ கடையில் நண்பனுக்காக வெற்றிலையும், அகர்பத்தியும், வாங்கிக் கொண்டு ஜோல்ன்னா பையில் போட்ட போது அந்த கைப்பேசி (mobile) கையில் பட்டது.

பகுதி_3

“சுவாமிநாதன்” முழு பெயரையும் கூப்பிடும் ஒரே ஆள் சோமசுசுந்தரர் தான்.

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

“என்னப்பா” தலையை தூக்கி பார்த்தவன் பக்கத்தில் அவன் மனைவி ,நர்மதாவும் நிமிர்ந்தாள்.

“உங்க கிட்ட சொல்லிட்டு நாளைக்கு கிராமத்துக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்.”என்றார்.

“எதுக்குப்பா, இப்ப தான் அங்கு யாரும் இல்லை என்று ஆயாச்சு, எதுக்கு தனியா போயி கஷ்டப்படனும் “,சுவாமிநாதன் கேட்டான்.

“இல்லப்பா, ரொம்ப நாளாக போய் வர எண்ணம். காலைல போற பஸ் சாயங்காலம் திரும்பும் போது வந்து விடலாம் என நினைக்கிறேன்”,. என்றார்.

“காலைல பஸ்னு, நீங்க சீக்கரம் எழுந்து, எதுக்கு இதெல்லாம் அப்பா, கஷ்டபடவேண்டாம்”நர்மதா கூறினாள்.

“ஒன்றும் கஷ்டம் இல்லம்மா, வாழ்ந்த இடம், மறுபடியும் ஒரு முறை போயிட்டு வந்துடலாம்னு ஆசையா இருக்கு. காலைல ஆட்டோக்காரன் சந்தோஷ் வரேன் என சொல்லி இருக்கான்.பஸ் ஸ்டாப்பில் விட சொல்லி இருக்கேன்”,. என்றார்.

“சரி, அப்பா, நீங்க போகணும்னு தீர்மானம் எடுத்தாச்சு, எதற்கும் மொபைல் சார்ஜ் பண்ணி எடுத்துகொண்டு போங்கோ. நாங்க போன் செய்து விசாரிக்க முடியும்”என்றான்.

அவருக்கு தெரியும் வேலை பளுவில் கணவன் மனைவி பேசிக் கொள்வதே அபூர்வமாக இருக்கும் இந்த காலத்தில் தனக்கு போன் செய்து பேசினால் அபூர்வம் என்று. அதே போல் ஆயிற்று. கொண்டு வந்தது தான் இது வரை போன் எதுவும் இல்லை. மறுபடியும் ஜோல்னா பையில் போட்டார்.

பகுதி_4

“ஐயா, பள்ளிக்கூடம் போகனுங்களா? பஸ் வருது, அதுல போயிடுங்க” என்றான் கடைக்காரன். “வேண்டாம், வயக்காட்டு வழியாக நடந்து வெகு நாட்கள் ஆயிற்று. நடந்தே போறேன்”, என்றார். கடிகாரத்தில் மணி 10.30 காண்பித்தது. வயல் பக்கமாக நடந்து போனவருக்கு, வயல் பச்சை பசேலென தெரிந்தது, கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. ஆங்காங்ககே விரட்டும் பொம்மைகள் (scare crow) இருந்தன. இரு விவசாயிகள் மாட்டை பூட்டி உழன்று கொண்டு இருந்தனர். வயக்காலில் தண்ணீர் பீச்சி அடித்து கொண்டு இருந்தது ஒரு புறம் கரும்பை அறுவடை செய்து கொண்டு இருந்தனர். மற்றொரு பக்கம் பெண்கள் விதைகளை பாட்டு பாடி நட்டுக் கொண்டு இருந்தனர்.

“சின்னஞ்சிறு விதையை கையில் எடுத்து, சீராக நட்டு வைத்தேன். சின்னஞ்சிறு இலை வந்ததிலே சிரித்தடி என் மனசு” (பின்னாடி அதே பாட்டை மற்றவர்கள் பாட), ஆஹா, அமிர்தம்,அமிர்தம் மனம் மிகவும் நிறைந்தது. எத்தனை ஆழ்ந்த மனதில் இருந்து வரும் வார்த்தைகள். பட்டணத்தில் இதை விட்டு, கொல வெறி, கொல வெறி எனப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் வருத்தம்.

“சின்னஞ்சிறு செடி கண்டதும், சிறகடித்தது என் மனசு சின்னஞ்சிறு பூ வந்ததிலே சிரித்தடி என் மனசு” ரம்யமான பாட்டை கேட்டுக் கொண்டே கரும்பு இருக்கும் பக்கம் போனார். “வாத்தியார் ஐயா கும்பிடறேனுங்க, பட்டணத்தில் இருந்து எப்ப வந்தீங்க?” என்றவன், கரும்பை சிறிது சிறிதாக நறுக்கி ஊருக்கு எடுத்து கிட்டு போங்க” என்று சொன்னான் சிங்காரம். சிறு சிறு கரும்பில் ஒன்றை எடுத்து கடித்தவர்,”சிங்காரம் உன் மனசு போல நம்ம கிராமத்து போல இனிப்பாய் இனிக்குது”, என்றார்.

வயலைத் தாண்டி பள்ளிக் கூடம் பக்கம் போகப் போனார்.

பகுதி _5

பள்ளியை சேரும் போது மணி 12யைக் காட்டியது.பள்ளிக்கூடத்தில் எந்த மாற்றமும் இல்லை. வாத்தியார்கள் புதிதாக வந்திருந்தனர். பிள்ளைகள் சிலர் விளையாடிக் கொண்ருந்தனர்.அவர்களின் உடைகளின் வண்ணங்கள் மாற்றப் பட்டு எல்லோரும் காலணி அணிந்து இருந்தனர் மகாதேவன் ஒருவர் தான் அவருடன் வேலை செய்த பழைய மனிதர். மகாதேவன் உள்ளே நுழைய “வாங்க சார், வெகு நேரமாக உங்களை தனியாக உட்கார வைச்சுட்ட்டேன். காலைல கிளம்பியது, களைப்பாக இருக்கீங்க,”, என்றுசொல்ல. இருவருக்கும் இளநீர் கொண்டு வந்து கொடுத்தான் பையன். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். அதற்குள் மதியமாக, இருவரும் வீட்டுக்குச் சென்றனர். மகாதேவனின் மனைவியின் வரவேற்பும், சாப்பாடும் அமிர்தம் போல் இருந்தது. “சார், நீங்க கொஞ்சம் இளைப்பாறுங்க, நான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்திடறேன் அப்புறம் காபி குடித்து விட்டு பஸ் ஸ்டாப்பிற்கு போகாலம் என்றார் மகாதேவன்.

படுத்தவர் நன்றாக தூங்கி 3மணிக்கு எழுந்து வர,மகாதேவன் வரவும் சரியாக இருந்தது. எத்தனை மறுத்தும் மகாதேவனின் மனைவி,”நம்ம ஊர்ல வளர்ந்த காய்கறிகள், என் கையாலே செய்த பலகாரம், கண்டிப்பா எடுத்துக்கிட்டு தான் போகணும்.” என்று சொல்ல, நன்றி கூறி வெளியில் வந்தனர். திரும்பி பஸ் ஸ்டாப்பிற்கு நடந்தே செல்ல, தெரிந்த சிலர் வணக்கம் கூறி விசாரித்து சென்றனர். ஹோட்டல் பக்கம் போய் நிற்கவும்,பஸ் வரவும் சரியாக இருந்தது. மகாதேவனுக்கு நன்றி சொல்லி வண்டியில் ஏறி அமர்ந்தார்.கிராமத்தின் வாசனையை மனமார நுகர்ந்தார். அவர் பையில், கரும்பும், மாங்காயும், பலகாரங்களும், நிரம்பியது போல அவர் மனதும்,நிரம்பி வழிந்தது. இனித்தது.

கிராமத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். மக்களின் அன்பும் அழகும் நேர்மையும், , என்றென்றும் வாழ்த்த வேண்டிய ஒன்று. பட்டணத்தில் வாழத்தெரியாமல் வேலை பின்னால் ஓடுகின்றனர்,. என்று மாறுமோ இந் நிலை என எண்ணியபடி சோமசுந்தரம் அமர்ந்திருக்க,பஸ் கிளம்பி சிறிது நேரம் செல்ல, அச் சில்லென்ற காற்று கன்னத்தில் பட, கண்களை மூடினார்.

Print Friendly, PDF & Email

13 thoughts on “கிராமத்து வாசனை

  1. அழகான நடை. எளிதான தமிழ். ஒரு கிராமத்தை மீண்டும் பார்த்தது போல இருந்தது

  2. வித்யா விஜயகுமார் அவர்களின் “கிராமத்து வாசனை” கதை அருமை. ஒரு கிராமத்து சூழலை மிக அழகாக விவரித்திருக்கிறார்.
    அங்கு பணியாற்றிய பள்ளி ஆசிரியருக்கு கொடுக்கப்படும் மரியாதை பற்றி அருமையாக சொல்லியிருக்கிறார் வித்யா அவர்கள்.
    அருமை. 👌👌

    1. We feel in that situation and it makes as natural please give amazing story and thank to u

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *