(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார்.
நான் போகவில்லை; என் கணவர் மிகவும் வற்புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்பலாக எதிர் இருக்கும் ‘பார்க்’ புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற கண்ணாடியின் ஊடாக மேல்நோக்கி பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
நான் பார்க்காத கிரகணமா? ஒரு முறை பார்த்தால் போதாதா? இருபது வருடங்களாக அல்லவா பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவத்தை நான் மறக்க முயன்று வருகிறேன்.
பஸ்மினாவை அப்பா முதன்முதலாக எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தது ஞாபகம் வந்தது. அப்போது பஸ்மினாவுக்கு எட்டுவயது இருக்கும்; என்னிலும் ஒரு வயது குறைவு. எலும்பும் தோலுமாகத்தான் இருந்தாள். கண்கள் மாத்திரம் பச்சை நிறத்தில் பெரிதாக இருந்தன. அவள் உடுத்தியிருந்த உடையில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வந்தது. தலை மயிர் சடைபிடித்துப் போய் ஒட்டிக்கொண்டு கிடந்தது.
எங்களையும் வீட்டையும் பார்த்து பிரமித்துப் போய் நின்றாள் பிஸ்மினா. நேரே பார்க்கக் கூசி கீழேயே பார்த்த வண்ணம் இருந்தாள்.
அம்மா செய்த முதல் வேலை அவளுடைய தலை மயிரை ஒட்ட வழித்து வெட்டியதுதான். அடுத்து அவளுக்கு குளிக்க வார்த்து புது சல்வார் கமிஸ்போட்டு விட்டாள். எனக்கு அவளைப் பார்க்க புதினமாக இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
அவளுக்கு புஸ்து பாஷைதான் தெரியும்; எனக்கோ தமிழும் ஆங்கிலமும். அவளிடம் கதைக்கப்போன போதெல்லாம் மற்றபக்கம் திரும்பிக்கொண்டாள்.
அப்போது அப்பா மனித உரிமைச் சங்கம் தொடர்பாக பாகிஸ்தானில் ‘மர்தான்’ என்னும் ஊரில் வேலை பார்த்து வந்தார். போலீசாரின் உதவியோடு நடத்திய திடீர் சோதனையில் ஆறு சிறுமிகள் மீட்கப்பட்டனர். அதில் பஸ்மினாவும் ஒருத்தி. மூன்று வருடங்களாக ஒரு வீட்டிலே பூட்டி வைக்கப்பட்டு மற்றப் பெண்களுடன் சேர்ந்து கம்பளம் நெய்து கொண்டு இருந்தாளாம் அவள்.
அந்தப் பெண்களிலே இவளுடைய கண்களைப் பார்த்து அப்பா மயங்கி எங்கள் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். அவளை மற்றப் பெண்களைப்போல் ‘டாருல் அமானில்’ கொண்டுபோய் விடுவதற்கு அப்பா விரும்பவில்லை. மறுபடியும் அவள் தகப்பனார் இப்ராஹ’மிடம் ஒப்படைக்கவும் தயங்கினார்கள். இப்ராஹ’மிக்கு ஒன்பது பிள்ளைகள். அவர் மறுபடியும் பணத்துக்கு ஆசைப்பட்டு பஸ்மினாவை விற்று விடுவாரோ என்று பயந்தார் எங்கள் அப்பா.
அதனால் அப்பா ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன்படி இப்ராஹ’ம் எங்கள்வீட்டு ‘மாலியாக’ மாறினார். மாதாமாதம் சம்பளம் அவருக்கு கிடைக்கும். தினமும் வரும்போது பஸ்மினாவைக் கூட்டி வரவேண்டும்; பின்னேரம் போகும்போது கூட்டிப் போகலாம். பஸ்மினா என் ஐந்து வயதுத் தம்பியுடன் விளையாடுவது என்றுதான் ஏற்பாடு.
இன்னுமொரு அநுகூலம். அப்பா என்னிடம் சொன்னார்: “சுகன்யா, நீ பஸ்மினாவுடன் புஸ்துவிலேயே பேசிப் பழகிக்கொள். நீயும் ஒரு புதிய பாஷை சுலபத்தில் கற்றுவிடலாம்” என்றார். இந்த ஏற்பாடு எவ்வளவு விபரீதமானது என்று பின்னாலே தான் எங்களுக்கு தெரிந்தது.
பஸ்மினா வந்த புதிதில் எங்கள் வீட்டில் சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்தாள். அச்சப்படும் கண்களை அகல விரித்து, சைகையினாலேயே பேசினாள்: மிகவும் வெட்கப்பட்டாள். எல்லாப் பொருள்களையும் ஆச்சரியத்தோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்.
இரண்டு வாரத்திலேயே பஸ்மினாவில் பெரிய மாற்றம் தெரிந்தது. கண்களில் உயிர் வந்தது. உடம்பின் கலர் பொன்னிறமாக மாறியது. தம்பியிடமும் என்னிமும் கூச்சத்தை விட்டு பேச முற்பட்டாள். புஸ்துவில் அல்ல ; தமிழ் அல்லது ஆங்கிலத்தில்.
அவளுடைய திடீர் கண்டுபிடிப்பு புத்தகம்தான்; அடுத்து வீடியோவில் படம் பார்ப்பது. தம்பியுடன் சேர்ந்து அவனுடைய நர்ஸரி ரைம் எல்லாம் கரைத்து பாடமாக்கி விட்டாள்; படத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டே இருப்பாள். புத்தகத்தில் அப்படி ஒரு மோகம். ஒருமுறை வீடியோவில் படம் பார்த்தால் அவள் நினைவில் ஒவ்வொரு ப்ரேமும் அசையாது நிற்கும். மறப்பதென்பதே கிடையாது.
ஆறு மாதத்தில் ஆங்கிலமும் தமிழும் சரளமாகப் பேசப் பழகிக் கொண்டாள். என்னுடைய புஸ்து இருப்பிடத்தை விட்டு புறப்படவே இல்லை. பஸ்மினாவின் அறிவுத்தாகம் எல்லையில்லாமல் விரிந்துகொண்டே போனது. ஓயாமல் என்னைக் கேள்விகள் கேட்டு துளைத்துக் கொண்டே இருப்பாள். ஒரு படம் பார்க்கும்போது விளங்காத சம்பவங்களையும் சொற்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். தம்பிக்கு வாங்கும் புதுப் புத்தகங்களை ஆவலுடன் வாசித்து முடித்து விடுவாள். தம்பியுடன் சேர்ந்து மெள்ள மெள்ள ஆங்கிலமும் தமிழும் தானாகவே எழுதவும் கற்றுக்கொண்டு விட்டாள்.
ஒரு நாள் நான் பள்ளியில் இருந்து வந்து இவளைத் தேடிப் போனேன். இவள் என்னுடைய ஒரு ஆங்கிலக் கதைப் புத்தகத்தை தம்பிக்கு வாசித்துக் காட்டிக்கொண்டு இருந்தாள். அது மாத்திரமல்ல; அதைத் தமிழிலும் தம்பிக்கு அப்பப்ப மொழி பெயர்த்தபடியே வந்தாள். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். நான் மெதுவாக ஓடி அம்மாவைக் கூட்டி வந்து இந்த அசியத்தைக் காட்டினேன். அம்மாவும் திகைத்து நின்று விட்டாள்.
அவள் பஸ்மினாவிடம் “நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டாய்” என்று கேட்டாள். அதற்கு பஸ்மினா “தம்பியும், சுகன்யாவும் படிக்கும்போதெல்லாம் பக்கத்திலேயே நிற்பேன்; பார்த்துப் பார்த்து பழகிவிட்டது” என்றாள் சர்வ சாதாரணமாக. என்னால் நம்பவே முடியவில்லை.
இந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் அப்பா பஸ்மினாவை விரைவிலேயே ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அவளை எந்த வகுப்பில் சேர்ப்பது என்பதுதான் பிரச்சனை. அவள்தான் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு கிளாஸாக மேலே ஏறிக் கொண்டிருந்தாளே!
நான் என்னுடைய புத்தகங்களை அவளுக்கு படிக்கக் கொடுத்ததோடு பள்ளிக்கூட லைப்ரரியிலிருந்தும் புத்தகங்களை அள்ளிவரலானேன். அவளும் அசுர வேகத்தோடு அவற்றை வாசித்து முடித்து விடுவாள்.
ஒரு நாள் நான் சிறுவர்களுக்கான பைபிளைக் கொண்டு வந்தேன். அதிலே வண்ணப் படங்களுடன் கதைகளை அழகாகச் சொல்லியிருந்தார்கள். அதை வாசித்துவிட்டு அவள் அப்பாவிடம் கேட்டாள்; “பைபிள் வேகத்தில் கூறியதன்படி கடவுள் ஒளியை முதன் நாள் படைத்தார்; ஆனால் சூரியனையும் சந்திரனையும் நாலாம் நாள் தானே படைத்தார், இது எப்படி சாத்தியம்?” என்றாள்.
அப்பா முதலில் கொஞ்சம் ஆடிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பிறகு சமாளித்துக் கொண்டே கூறினார்: “பைபிளைப் பற்றி விமர்சிக்க எங்களுக்கு என்ன தகுதி? பைபிளை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது; அதில் சொல்லியிருக்கும் தத்துவத்தைத்தான் யோசிக்க வேண்டும். ஒளிதான் ஜ“வன். அதனால்தான் ஒளி முதலில் வந்தது; சூரியனுக்கே ஒளியைக் கொடுத்தவர் கடவுள் அல்லவா? அதனால்தான் சூரியனுடைய படைப்பு பின்னால் வந்தது.”
பைபிளை நான் எத்தனை தரம் படித்திருப்பேன்? எனக்கு அந்த முரண்பாடு தெரியவில்லையே! பஸ்மினா எப்படி அதை ஓரு கணத்தில் கண்டுகொண்டாள்?
பின்னேரம் ஆனதும் பஸ்மினா வழக்கம்போல் தகப்பன் இப்ராஹ’முடன் வீட்டுக்குபோய் விடுவாள். தூக்கிலிடப் போகும் கைதிபோல கால்களை இழுத்தபடியே விருப்பமின்றி போவாள். அவள் போனாலும் அவளுடைய நினைவெல்லாம் எங்கள் வீட்டைச் சுற்றியபடியே இருந்திருக்கும். அவளுடைய புத்தகங்களை விட்டு அவள் எப்படிப் பிரிவாள்?
அந்த சமயத்தில்தான் ஒரு சூரியகிரகணம் பாகிஸ்தானில் தெரியப் போவதாகப் பேப்பர்களில் செய்தி வந்தது. அதைப் பார்ப்பதற்காக நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் வெளிக்கிட்டோம். என் மனம் மட்டும் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது; காரணம் தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும் தம்பியும் முன் சீட்டில்; நானும் பஸ்மினாவும் காரின் பின் சீட்டில் உட்கார்ந்து ‘ரக்ஸ்பாய்’ என்னும் சிறு மலையின் உச்சியை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். அங்கே ஏற்கனவே சனங்கள் நிறைந்து விட்டார்கள்.
மறக்க முடியாத நிகழ்ச்சி அது. ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பூமி கண நேரத்தில் இருண்டுவிட்டது. பஸ்மினா ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும் ஒரு விஞ்ஞானியின் புத்தி சாதுர்யத்துடனும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள். அப்பாவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தார். திரும்பி வரும்போது ‘சர்சதா’ என்னும் இடத்தில் ஆற்றின் கரையோரமாக இருந்து ‘சப்ளி கெபாப்பும்’ ‘நான்’ ரொட்டியும் சாப்பிட்டு பின்னேரம் ஆறுமணி போல வீடு திரும்பினோம்.
வீடு வந்து கேட் முன்னால் நின்று ஹார்ன் அடித்தும் மாலி இப்ராஹ’ம் கதவைத் திறக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து அப்பா கேட் மேல் ஏறிப் பாய்ந்து குதித்து உள்ளே போனார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எப்படி இருந்திருக்குமென்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.
இப்ராஹ’ம் கொலை செய்யப்பட்டு ‘சார் போயில்’ குப்புறக் கிடந்தார். கத்தியால் மூன்று நான்கு இடங்களில் படு காயம். அம்மாவும் அப்பாவும் என்னையும் தம்பியையும் பஸ்மினாவையும் அதைப் பார்க்கவிடாமல் மறைத்தார்கள். பஸ்மினா கதறிக் கதறி அழுதாள்; அம்மாவும் அழுதாள்; நானும் அழுதேன், பஸ்மினா அழுவதைப் பார்த்து.
இரண்டு நாட்களாக போலீஸ் வந்த விசாரணை எல்லாம் நடந்தது. மூன்று தலைமுறையாக இப்ராஹ’ம் குடும்பத்திற்கும், இன்னொரு குடும்பத்திற்கும் இடையில் தொடரும் இரத்தப்பகைதான் (blood feud) இதற்கு காரணம். சாப்பிட வழியில்லை; ஆனால் கொலை செய்வதற்க மாத்திரம் தயங்க மாட்டார்கள். கொலை செய்த குடும்பம் பிராய்ச்சித்தமாக இரத்தக் காசு (Blood money) கொடுத்தாலொழிய இந்தச் சண்டை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்பா இதை எங்களுக்கு அப்போது விளக்கியது ஞாபகம் இருக்கிறது.
இப்பொழுது அப்பாவின் தலையில் பஸ்மினாவுக்கு ஒரு வழிசெய்ய வேண்டிய பொறுப்பு வந்துசேர்ந்தது. அப்பா இப்ராஹ’மின் தம்பியைக் கூப்பிட்டு கதைத்தார். அப்பா தொடர்ந்து மாதம் மாதம் இப்ராஹ’முக்கு கொடுத்த சம்பளத்தை இப்ராஹ’மின் குடும்பத்துக்கு கொடுப்பதாகவும் பஸ்மினா எங்களுடன் நிரந்தரமாக தங்குவதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இது எல்லோருக்கும் நல்ல தீர்வாகப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் பஸ்மினா அடிக்கடி மயங்கி விழத் தொடங்கினாள். அம்மா அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து மருந்துகள் வாங்கிக் கொடுத்தாள். பஸ்மினாவும் கிரமமாக அவற்றை சாப்பிட்டு குணமாகி வந்தாள். ஆனால் வைத்தியர் அவளுடைய இருதயத்தில் ஒரு பிசகு இருப்பது போலப் படுவதாகவும், அவள் கொஞ்சம் பெரியவளானதும் இதை இன்னொரு முறை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அம்மா வழக்கம்போல் இதைப் பெரிது படுத்தி கவலைப்பட ஆரம்பித்தாள். அப்பாவோ “அவளுக்குத்தான் இப்ப எல்லாம் சரியாகி விட்டதே, பயப்படுவதற்கு இனி ஒன்றுமில்லை” என்று கூறி அம்மாவை அடக்கிவிட்டார்.
இப்பொழுது பஸ்மினா எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள். நல்ல வசதியும் நேரத்திற்கு சாப்பாடும் அமைதியும் சேர்த்து அவள் உடம்பில் ஒரு வனப்பை ஏற்படுத்தியது. கூந்தல் கருகருவென்று வளர்ந்து விட்டது. கண்களில் அறிவு ஒளி மின்னியது. அவள் வடிவை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
நான் பள்ளியில் இருந்து வரும் வரத்தை பார்த்த படி வாசலிலேயே நிற்பாள் பஸ்மினா. நான் வந்ததும் எங்களுக்குப் பிடித்தமான பீபள் மரத்தின்கீழ் இருந்து விளையாடுவோம். மணிக்கணக்காக விளையாடுவோம். விளையாட்டு என்பதை முதலில் அவள் அறிந்ததே எங்கள் வீட்டில்தான். “மொனபொலி” அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதில் அவளைத் தோற்கடிக்கவே முடியாது. அப்பாகூட எத்தனையோ முறை அவளிடம் தோற்றிருக்கிறார்.
ஒரு முறை இப்படித்தான் நாங்கள் எங்கள் வழக்கப்படி பீபள் மரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தபோது பஸ்மினா திடீரென்று என் கையிரண்டையும் பிடத்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்து, “சுகன்யா, நீ என்னை மறக்கமாட்டாயே?” என்று கேட்டாள்.
நான் “உன்னை எப்படி நான் மறப்பேன். உயிர்போகும்வரை மறக்க மாட்டேன்” என்றேன்.
“யாருடைய உயிர்?” என்றாள் அவள்; சொல்லி விட்டு அழத் தொடங்கினாள்.
அப்போது நான் கூறினேன், “பஸ்மி, நீ எனக்கு கூடப்பிறக்காத சகோதரி. உன்னை நான் என் உயிராகவல்லவா நினைக்கிறேன்.
பளீரென்று அவள் முகத்திலே ஒரு பிரகாசம் வந்தது. அந்த பச்சை நிறக் கண்களிலே நிரந்தரமாகக் குடியிருந்த அச்சம் கொஞ்சம் விலகியது போலத்தான் எனக்குப் பட்டது.
எங்களுடைய படுக்கை அறையில் பஸ்மினாவின் கட்டில் கிழக்குப் பார்த்து இருக்கும்; என்னுடையது எதிர்ப்புறம். பஸ்மினாவின் கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு சின்னப் பெட்டகம். அதிலே அவள் தன்னுடைய சாமான்களை போட்டு வைத்திருப்பாள்.
ஒருநாள் ஏதோ தேடும்போது தற்செயலாக அவளுடைய பெட்டகத்தை திறக்கவேண்டி வந்தது. திறந்த நான் அதிர்ந்து போய் சில நிமிடங்கள் நின்றேன். ஒருவிதமான துர்நாற்றம் வந்தபடியே இருந்தது. அந்தப் பெட்டகத்துக்குள் பாதி சாப்பிட்ட கொய்யாக்காய், பத்துப் பதினைந்து காய்த்து போன பாண் துண்டுகள், கடலை, முறுக்கு, பிஸ்கட் என்று பலவிதிமான உணவுப் பொருட்கள் அடைந்து கிடந்தன. நான் ஓடிப் போய் அம்மாவைக் கூட்டி வந்து காட்டினேன்.
அம்மாவும் நம்ப முடியாமல் கொஞ்ச நேரம் அதைப் பார்த்தபடியே நின்றாள். பஸ்மினா இப்படி சாப்பாட்டை யாராவது வைப்பார்களா? பஸ்மினா அப்போது எங்களுடன் நாலுமாத காலம் இருந்து விட்டாள். எதற்காக சாப்பாடு களவெடுக்க வேண்டும்? போதிய சாப்பாடு அவளுக்கு கிடைக்கவில்லையா? அல்லது சேர்த்து வைத்து வீட்டுககு களவாக அனுப்புகிறாளா? ஏன் இந்த புத்தி?
இது பற்றி அம்மா தீர யோசித்துவிட்டு பஸ்மினாவை கூப்பிட்டு விசாரித்தாள். பஸ்மினா இதை எதிர்பார்க்கவில்லை. நிலத்தையே பார்த்தபடி கொஞ்சநேரம் இருந்துவிட்டு விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டாள். எவ்வளவு கேட்டும் அழுகை தான் பதிலாக வந்தது.
கடைசியில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது அப்பாதான். “பஸ்மினா, பயப்படாதே. நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். உனக்கு இங்கே சாப்பாடு போதியது கிடைக்கவில்லையா? சொல்” என்றார். அடுத்து பஸ்மினா சொன்ன வாசகங்கள் எங்கள் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது.
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் நினைப்பதெல்லாம் சாப்பாட்டைப் பற்றித்தான். இருட்டறையில் பூட்டி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை செய்து வந்தேன். ஒருநாளா, இரண்டு நாளா? மூன்று நான்கு வருடங்கள். பகலும் தெரியாது, இரவும் தெரியாது. கைவிரல்கள் எல்லாம் வலியெடுத்துவிடும்; கண்கள் குத்திக்கொண்டே இருக்கும்: சாப்பிடக் கிடைப்பதுவோ உலர்ந்த ரொட்டியும் தேநீரும்தான். அதுவும் சீனி போடாத தேநீர். அதுகூட போதியது கிடைக்காது. விடிய சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மத்தியானச் சாப்பாட்டுக் கவலை வந்துவிடும். சாப்பாட்டு கிடைக்குமா என்ற கவலை. எவ்வளவு கிடைக்கும் என்ற கவலை. மத்தியானம் மனுபடியும் காய்ந்த ரொட்டித் துண்டும் பருப்பும் கொடுப்பார்கள்; வேலையில் பிழைவிட்டால் அதுவும் கிடையாது. இரவு ஒன்றுமே இல்லை; தேநீர் மாத்திரம்தான்.
“உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது. அந்த நரகத்தில் இருந்து என்னை மீட்டீர்கள்; ஆனால் பசியிலிருந்து மீட்கவில்லை.
“என் தகப்பனாருடன் நான் இரவு வீட்டுக்குப் போவேன். அங்கே என் தகப்பனாரும், மூன்று அண்ணன்மாரும், காக்காவும் (தகப்பனாரின் தம்பி) இருப்பார்கள். அம்மா சமைத்த உணவை அவர்களுக்கு போட்டு ஹுஸ்ராவுக்கு அனுப்பி விடுவாள். தானும் மற்ற அக்காமாரும்-எங்களில் எல்லாமாக ஆறு பெண் குழந்தைகள்-அம்மாவைச் சுற்றி உட்கார்ந்தபடியே காத்துக்கொண்டு இருப்போம். அவர்கள் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை நாங்கள் பங்குபோட்டுக் கொள்வோம். கால் வயிற்றுக்கும் காணாது.
“சில வேளைகளில் எங்கள் தகப்பனார் சாப்பிட உட்காரும்போது யாராவது விருந்தினர்கள் வந்து விடுவார்கள். அவர்களும் சாப்பிட்டால் எங்களுக்கு மீதமிருக்காது. அன்று நாங்கள் எல்லாம் பட்டினிதான். தண்ரைக் குடித்துவிட்டு படுத்து விடுவோம். அவர்கள் சாப்பிடக் குந்தியவுடன் நானும் என் அக்காமாரும் அல்லாவைப் பிரார்த்தித்தபடியே இருப்போம், யாராவது விருந்தினர்கள் அன்று வந்து விடக் கூடாதென்று.
“முதன்முறையாக என் வாழ்க்கையில் இப்பொழுதுதான் நான் பசியில்லாமல் இருக்கிறேன்; நம்ப முடியவில்லை, என்றாலும் எனக்கு பயமாயிருக்கு. மேசையில் குவித்து சாப்பாட்டைக் காணும் போதெல்லாம் ‘நாளைக்கு கிடைக்குமா?’ என்ற பயம் பிடித்துவிடும். எவ்வளவுதான் துரத்தினாலும் இந்தப் பயம் போவதில்லை. எப்படியும் சாப்பாட்டைத் திருடிக் கொண்டு வந்து வைத்து விடுகிறேன். நான் என்ன செய்வேன்” என்று விக்கினாள்.
அம்மா அவளுடைய கண்களைத் துடைத்து “அதற்கென்ன, நீ செய்தது பிழையில்லை, இன்றிலிருந்து நீ மேசையிலிருந்து திருடத் தேவையில்லை. நானே நிறைய பழங்களும், பிஸ்கட்டும், கடலையும், முறுக்குமாக உன் பெட்டியை நிறைத்து விடுகிறேன்.
நீ வேண்டும்போது சாப்பிடலாம். நீயாகவே வேண்டியதை எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்; ஆனால் களவெடுக்கத் தேவையில்லை” என்று சொல்லி பஸ்மினாவைத் தேற்றினாள்.
அதன்பிறகு பஸ்மினா உணவு திருடுவதில்லை. அவளுடைய பெட்டியில் எப்பவும் சாப்பாடு இருக்கும். இருந்தாலும் பஸ்மினா இறுதிவரை அந்தப் பயத்தில் இருந்து விடுபட்டாளா என்பது ஐயம்தான்.
ஒரு நாள் இரவு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பஸ்மினா “அப்பா” என்றாள். இப்போதெல்லாம் பஸ்மினா என்னுடைய அப்பாவை “அப்பா” என்றே அழைக்கத் தொடங்கி இருந்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மாவும் என்னைப் பார்த்தாள். சாப்பிடும் நேரங்களில் இப்படி பஸ்மினா அழைத்தால் ஏதோ குண்டு விழப் போகிறது என்றுதான் அர்த்தம். அன்று பகல் முழுவதும் அவள் ஏதோவொரு புத்தகத்தை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா, தேவர்களும் அசுரர்களம் பாற்கடலைக் கடைந்தபோது மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் இழுத்தார்கள் அல்லவா? கடைசியில் ஆலகால விஷம் தோன்றிய போது எல்லோரும் அதன் உக்கிரம் தாங்காமல் பயத்தில் ஓடிவிட்டார்கள். அப்பொழுது சிவபெருமான் தேவர்களின் கஷ்டம் நீங்குவதற்காக அந்த விஷத்தை கையிலே எடுத்து உண்டார். அந்த விஷமும் சிவபெருமானுடைய கண்டத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டது; அவரும் நீலகண்டன் என்று பெயர் பெற்றார். சகல ஜ“வராசிகளும் ரட்சிக்கப்பெற்றன.”
“ஆமாம், அப்படித்தான் சொல்லியிருக்கிறது.”
“சிவபெருமான் அப்படி உண்ணும்போது ஒரு சிறுதுளி விஷம் தவறி பூமியிலே வந்து விழுந்தது. அதன் பிறகுதான் பாம்புகளுக்கு வாயிலே விஷம் வந்தது, இல்லையா?”
“அதெற்கென்ன?”
“அப்படியானால் பாற்கடலை கடைந்தபோது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷம் கக்கியது என்று வருகிறதே! அது எப்படி?’ என்றாள்.
எங்கள் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அப்பா அப்படியே ஸ்தம்பித்து விட்டார். அம்மா சாப்பிட வாயைத் திறந்தவள் அப்படியே மூடாமல் பஸ்மினாவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
எனக்கு பஸ்மினா கேட்டதன் அர்த்தம் அப்போது பூரணமாக விளங்கவில்லை. அப்போது அவளுக்கு வயது பத்து இருக்கும். முறையாகப் படித்ததென்பது கிடையாது. ஆனால் அவளுடைய புத்திக் கூர்மையானது கட்டுக்கடங்காத குதிரையைப் போல திமிறிக்கொண்டு ஓடியது.
அன்றிரவு அப்பா அம்மாவுக்கு தனிமையில் சொன்னார்: “நான் என் தொழில்முறையிலும் சரி மற்றும்படியும் சரி எத்தனையோ குழந்தைகளைப் பாத்திருக்கிறேன். ஆனால் பஸ்மினா போன்ற ஒரு அறிவுத் தாகமுள்ள குழந்தையை நான் இதுவரை பார்த்ததே இல்லை.
அம்மா “இது கடவுளாகப் பார்த்து அவளுக்கு கொடுத்தது. நாங்கள் எங்களால் முடிந்தமட்டும் பஸ்மினாவை ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றாள்.
“மேலைநாடுகளில் exceptionally gifted children என்று ஒரு பிரிவு இருக்கிறது. பஸ்மினா இதிலே அடங்குவாள். இவள் வந்து இங்கே பிறந்து இருக்கிறாளே? அதுவும் ஐந்து வயதிலேயே பெற்றோர் கேவலம் நூற்றிஐம்பது ரூபாய்க்கு கம்பளம் நெய்ய விற்று விட்டாளே! அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்கென்று பிரத்தியேகமான பள்ளிகள் எல்லாம் உண்டு. ஸ்பெஷல் ஆசிரியர்களும் பயிற்சிகளும் கூட இருக்கின்றன. என்ன துரதிர்ஷ்டம்.” என்றார் அப்பா.
“அப்ப நீங்கள் இவளுக்கு ஏதாவது செய்ய முடியாதா?”
“முயற்சி செய்து பார்ப்போம். அதுவரையில் எங்களால் இயன்ற வசதிகளை இங்கேயே செய்து கொடுப்போம்” என்றார் அப்பா.
இப்பொழுதெல்லாம் அப்பா புத்தகம் புத்தகமாகக் கொண்டுவந்து குவித்தார். ஆங்கிலப் புத்தகமும் தமிழ் புத்தகமுமாக பஸ்மினா வாசித்து தள்ளினாள். முழுப்பட்டினி கிடந்த ஒருத்தி ஆவலுடன் சாப்பிடுவதுபோல அவசர அவசரமாக வாசித்து முடித்தாள். படிப்பதென்றால் நுனிப்புல் மேய்வதுபோல் அல்ல. ஆழமாகக் கிரகித்துத்தான் படித்தான். அடிக்கடி அப்பாவுடன் படித்ததைப் பற்றி விவாதம் செய்வதிலிருந்து அதை நான் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
அவளுடைய ஞாபகசக்தி அசாதாரணமானது. ஒன்றைப் படித்தால் அது அவளுடைய மனத்தில் படம்போல ஒட்டிக்கொள்ளும். இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். ஒரு புத்தகத்தை இன்னொரு தடவை படிப்பது என்பதே கிடையாது. தேவையில்லை. எனக்குத் தெரிந்து கேக்ஸ்பியருடைய கிங் லியர் என்ற கதையை மாத்திரம் இரண்டு தரம் படித்தாள். அவளுக்கு அந்தக் கதையில் அமோகமான பிடிப்பு.
கம்புயூட்டர் விஷயமும் அப்படித்தான். அப்பாவுடைய கம்புயூட்டரில் அடிக்கடி தான் நினைப்பவற்றை டைப் பண்ணி வைத்துக் கொள்வாள். அவளுடைய கைவிரல்கள், கம்பளம் நெய்த அதே விரல்கள், கம்புயூட்டர் விரல் கட்டைகள் மீது அதீத விசையுடன் நர்த்தனமாடும். பள்ளிக்கூடத்து வாசலையே மிதிக்காத அவளுடைய மனத்திலிருந்து சிந்தனைக் கோவைகள் அழகிய ஆங்கிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வெளியே வந்தவண்ணம் இருக்கும்.
ஒரு முறை அப்பா ஆபீஸ’ல் இருந்து வரும்போது தமிழ் கம்புயூட்டர் ப்ரோகிராம் ஒன்று கொண்டு வந்தார். அதை எங்கள் வீட்டுக் கம்புயூட்டரில் மாட்டி எப்படிச் செயல்படுத்துவது என்று எனக்கும் பஸ்மினாவுக்கும் விளக்கினார். இருபது நிமிடங்களில் எங்களுக்கு அது வேலை செய்யும் விதம் புரிந்துவிட்டது.
அப்பா என்னிடம் “எங்கே ஒரு வசனம் தமிழில் டைப் செய் பார்ப்போம்” என்றார். நானும் “இது ஒரு தமிழ் கம்புயூட்டர் ப்ரோகிராம்” என்று எழுதிக் காட்டினேன். இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து பஸ்மினாவை எழுதச்சொன்னார் அப்பா. அவள் எழுதிய வாசகம் கிட்டத்தட்ட பின் வருமாறு இருந்தது.
“மரம் மனிதனுடைய மிகச் சிறந்த நண்பன்; கடவுளுக்குச் சமானம். உலகிலேயே உயிர் வாழ்வனவற்றில் எல்லாம் மிகவும் பெரியது மரம்தான்; மிக அதிக காலம் உயிர் வாழ்வதுவும் அதுதான்; ஐயாயிரம் வருடங்கள்கூட சில மரங்கள் உயிர்வாழும். மரம் இல்லாவிட்டால் மனிதனுக்கு உணவு ஏது? மனிதனுடைய உயிர்நாடியே மரம்தான். பெய்யும் மழைகூட மரம் கொடுத்த வரம்தானே! ஒரு மரத்தை வெட்டும்போது மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். மரம் போனால் அவனும் போய்விடுவான்.”
இதை ஒரு நிமிடத்தில் ஒரு பிழையுமில்லாமல் எழுதி முடித்தாள். அப்பா என்னைப் பார்த்தார். “பஸ்மினா வேறு எப்படி எழுதுவாள்?” என்பது போல இருந்தது அந்தப் பார்வை.
அப்பாவின் வேலை ஒப்பந்தம் முடிய இன்னும் ஆறே மாதங்கள்தான் இருந்தன. அப்பா முழு வேலையாக பஸ்மினாவை தத்து எடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானார். இத்துடன் அமெரிக்காவில் அவளை ஒரு பிரதிதியேகமான பாடசாலையில் சேர்ப்பதற்கும் பல கடிதங்களை எழுதியபடியே இருந்தார்.
ஆனால் இது மிகவும் கடினமான வேலை. பாகிஸ்தானில் ஓர் இளம் முஸ்லிம் பெண்ணை தத்து எடுப்பதென்றால் அது அப்படி ஒன்றும் லேசான காரியமல்ல. எத்தனையோ பேரைப் போய் பார்க்க வேண்டும்; பேப்பருக்கு மேல் பேப்பராக நிரப்பிக் கொடுக்க வேண்டும் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி நினைவூட்ட வேண்டும்.
இந்த வேலைகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. எனக்கு பஸ்மினாவை விட்டு போக வேண்டி வந்துவிடுமோ என்ற கவலை பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது.
பஸ்மினாவுக்கு இந்தக் கவலை இல்லை. பகல் முழுக்க அவள் படித்துக் கொண்டிருப்பாள்; அல்லது கம்புயூட்டருடன் விளையாடிக் கொண்டிருப்பாள். சில வேளைகளில் தம்பிக்கு நீண்ட நீண்ட கதைகள் சொல்லி விளையாட்டுக் காட்டுவாள்.
அப்படித்தான் ஒரு நாள் சனிக்கிழமை. மஸ்பாஹ’ன் தொழுகை அழைப்பு தூரத்தில் கேட்டது. மத்தியான உணவு முடிந்து சற்று ஓய்வாக இருந்த நேரம். ஆனி மாதத்து வெய்யில் அனலாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. விளையாட்டுக்களைப்பு. வழக்கமாக நான் அந்த நேரம் தூங்குவதேயில்லை. படுத்தபடி என்னையறியாமல் சிறிது கண்ணயர்ந்து விட்டேன். யாரோ உலுக்குவதுபோல இருந்தது. திடுக்கிட்டு விழித்தேன். ஏதோ இனம் தெரியாத பயம் என்னைச் சூழ்ந்து கொண்டது.
“பஸ்மி, பஸ்மி” என்று கூப்பிட்டுக் கொண்டே வெளியே வந்தேன். பஸ்மினாவைக் காணவில்லை. கம்புயூட்டர் அறைக்கு ஓடினேன். அங்கே பஸ்மினா தலையை மேசைமேல் வைத்து சுருண்டு போய்கிடந்தாள். அவள அப்படித் தூங்கி நான் கண்டதேயில்லை.
“பஸ்மி” என்று மெள்ளத் தொட்டு எழுப்பினேன். அவன் தலை துவண்டு விழுந்தது. உடம்பெல்லாம் பதற “பஸ்மி” என்று கத்திக்கொண்டே அம்மாவிடம் நான் உள்ளே ஓடினேன்.
பிறகு நடந்தது எனக்கு முழுவதும் ஞாபகமில்லை. கனவுபோல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. என் உயிருக்குயிரான பஸ்மினா சடுதியில் என்னைவிட்டுப் போய்விட்டாள். வந்த மாதிரியே போயும் விட்டாள்.
பஸ்மினாவின் உடலை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்தார்கள். அப்பா அவளுடைய ஜனாஸாவில் எந்தவிதமான குறையும் வைக்கவில்லை. எல்லாம் முடிந்தபிறகு பிற்பாடு என் தம்பிதான் அதை எனக்கு சுட்டிக் காட்டினான்.
கம்ப்யூட்டர் ஒடிக் கொண்டிருந்தது. பஸ்மினா இறப்பதற்கு சில வினாடிகள் முன்பு எழுதிய வாசகங்கள் அதில் மின்னிக் கொண்டு இருந்தன.
“சூரிய கிரகணம் எனக்குப் பிடிப்பதில்லை. சில நிமிடங்கள் பூமியை அந்தகாரம் சூழ்ந்து கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் புகுந்து சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டிருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக்கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங்கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்.
“உஃகாப் பறவையை எனக்குப் பிடிக்கும். அதன் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதன் நீண்ட சிறகுகளம், வளைந்த மூக்கும், கம்பீரமும் வேறு எந்தப் பறவைக்கும் வரும்? ஆகாயத்தில் புள்ளிபோல வட்டமிட்டுக் கொண்டு நின்று இரையைக் கண்டதும் இறாஞ்சிக் கொண்டு சிறகைக் குவித்துக் கீழே விழுந்து, கூரிய நகங்களால் அதைப் பற்றி மேலெழும்பும் லாவகம் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் என்னைப் போலத்தால் அதற்கும் சூரியகிரகணம் பிடிப்பதில்லை. ஏனெனில்….”
நான் கம்ப்யூட்டரை பரபரப்பாகத் தட்டி மேலும் கீழும் தேடிப் பார்த்தேன். பஸ்மினா எழுதிய கடைசி வாசகங்கள் அவைதான்.
விஞ்ஞானிகள் பலரும் சூரியகிரகணத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட இந்த சக்தியிழப்பைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே! பஸ்மினாவுக்கு என்ன அது பற்றி அவ்வளவு கவலை, அந்த வயதில்? போகட்டும். உஃகாப் பறவைக்கும் சூரிய கிரகணத்துக்கும் என்ன சம்பந்தம்?
நானும் பின்னால் மேற்படிப்பு படித்தபோது இதுபற்றி ஆராய்ச்சிசெய்ததுண்டு. எல்லாப் புத்தகங்களையும் துருவித் துருவி படித்துவிட்டேன். பஸ்மினா விட்டுப்போன புதிர் அவிழ்க்காமலே கிடக்கிறது.
சூரிய கிரகணங்கள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. பஸ்மினாவை நான் மறக்கமுடியுமா? சிறுபிள்ளைத்தனமாக நானும் அவளும் அவசரமாக பீபள் மரத்தின் கீழ் செய்துகொண்ட பிரதிக்ஞையின்படி அவளை நான் மறக்காமலிருக்க பஸ்மினா செய்த சூழ்ச்சியா இது?
வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் சூரியகிரகணத்தின் நிழல் போல பக ஸ்மினா என்னுடம் சிறிது தூரம் நடந்து வந்தாள்; பிறகு மறைந்து விட்டாள். பஸ்மினா முடிக்காமல் விட்ட வாசகத்தின் தாத்பரியம் என்ன? இருபது வருடங்களாக எனக்கு நிம்மதியில்லை.
இதற்கு யார் விடை கூறுவார்கள்?
– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.