காவல் காசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 2,298 
 
 

அந்தப் பாட்டி தினமும் காலையில் மல்லிகை பூ பறிக்க செல்வது வழக்கம். ஒரு கிலோ மல்லிகைப்பூ பறித்தால் 40 ரூபாய் கொடுப்பார்கள். அந்த பாட்டியால் எவ்வளவு பறிக்க முடியுமோ ?அவ்வளவு பறித்து, அவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு குழைகளை பறித்து கட்டாக கட்டி தலையில் வைத்துக் கொண்டு வருவாங்க.

வீட்டிற்கு வருவதற்கு சாயங்காலம் ஆகிவிடும். வீட்டுக்கு வந்த உடனே குழைகட்டுகளை வாசலில் போட்டுவிட்டு ஆடுகளுக்கு குழைகளை கட்டிவிட்டு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு

“குமார் தண்ணி கொண்டாப்பா ரொம்ப தாகமா இருக்கு” என்றார்.

“இந்தா பாட்டி தண்ணி நல்லா குடி”

“என் ராசா……”

“பாட்டி எனக்கு ரொட்டி வாங்க காசு குடு”

“இந்தாடா பத்து ரூபா வச்சுக்க”

என்று தன் சுருக்குப் பையில் இருந்த காசை எடுத்து குமாருக்கு கொடுத்தார்.

“ பாட்டி எனக்கு அந்த சில்லறை காசும் சேர்த்து கொடு வேணும்”என்றான்

“ போடா அது சுருக்கு பைக்கு காவல் காசா கிடக்கனும் டா பேராண்டி “

“போ பாட்டி எப்ப கேட்டாலும் காவல் காசு காவல் காசுனே சொல்லு” என்று கடையை நோக்கி சென்றான்.

இரவு நேரம் பாட்டி சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு இடித்து அசை போட்டுக் கொண்டிருந்தார். தூக்கம் வந்தவுடன் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் வழக்கம் போல சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விட்டு தூக்குவாளியில் கஞ்சியை எடுத்துக் கொண்டு பூப்பறிக்க தோட்டத்தை நோக்கி விரைந்தார். பூக்களை பறித்து போட்டுவிட்டு பணத்தை வாங்கி சுருக்குப் பையில் வைத்துக்கொண்டு மாலை வேலை வந்ததும் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். வரும் வழியில் மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். வரும் வழியிலேயே மாரடைப்பால் பாட்டியின் உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

பாட்டியினுடைய சடலத்தை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து அவருடைய நாற்காலியில் வீட்டின் முற்றத்தில் அமர வைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கினை செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு பெரியவர் பாட்டியினுடைய தலையில் துணியை கிழித்து நாடி உடன் சேர்த்து கட்டினார். நெற்றியில் சந்தனத்தை வைத்து

“யாராவது காசு இருந்தா குடுங்கப்பா நெத்தில வைக்கணும்” என்று அந்த பெரியவர் கேட்டார்.

பாட்டியினுடைய சுருக்கு பையில் இருந்து ஒருவர் அந்த காவல் காசை எடுத்து அவரிடம் கொடுத்தார். அதை பாட்டியின் நெத்தியில் வைத்தார்கள்.

பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த குமார் இந்த நிகழ்வைப்பார்த்து கண்கள் இரண்டும் கண்ணீர் குளங்கள் ஆகிப்போயின…

சுருக்கு பையில் மட்டுமே கிடந்த காவல் காசு பாட்டியின் சோகநிகழ்விலும் கூட நின்று கொண்டிருக்கிறது…

பெயர்: பெ.சிவக்குமார் கலைஞர்: நாட்டுப்புற பாடல்கலைஞர் ஈமெயில்: sivakumarpandi049@gmail.com முகவரி: குலசேகரநல்லூர், விருதுநகர் மாவட்டம். சாதனைகள் : மாநில அளவிலான நாட்டுப்புற பாடல் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு. மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் பரிசு. மண்டல அளவில் முதல் பரிசு. பெற்ற விருதுகள் : இளம் கலைஞர், கலைச்சுடர், நாட்டுப்புறக் கவிஞர், கலைரத்னா, சிறந்த மாணவர் விருது, இளம் ஆராய்ச்சியாளர் விருது, தமிழ்க்கலைமணி, நல்இசைத்திலகம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *