கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 9,239 
 
 

பின் மாலையில் நகரமெங்கும் பனித் தூற்றலடிக்க, கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் மணியோசை ஒரு மெல்லிய இசையாய் படர்ந்தது. சாலை முழுதுமாய், விலத்தமுடியாதபடி நிறைக்கப்பட்ட வாகனங்கள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமாய், கிணற்றுக் கட்டிலில் பிள்ளையை கிடத்தி வந்த அவசரத்தோடு விரைந்தன. தோளிலொரு ஆட்டுக்குட்டி. சட்டை முழுவதும் குருதி. ஒரு சின்ன இடைவெளியெடுத்து, சைக்கிளை சாலையில் நுழைத்தான் மணியரசன்.

வேகமெடுத்து விளக்கொன்று எரிந்தணைவதுபோல், பொழுது பட்டுச் செல்கிறது. ஏன் இந்த அவசரம்? எனுமாற் போல் மரங்களுக்குப் பின்னால் ஒளித்திருக்கும் சூரியனை ஒருமுறை பார்த்துக் கொண்டான். வைத்தியசாலை மூடுவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. வேலை விட்டு வீடு திரும்புபவர்களின் கால்களால் நிறைந்திருந்தது தெருக்கரை. உருள மறுக்கும் சைக்கிளை ஒற்றைக் காலால் நெம்பி உழக்கினான். இறப்பர் படல்கள் மூட்டை சுமக்கும் நாட்டாமையின் முதுகு போல் வளைந்து நெளிந்தன.

புறப்படுவதற்காக கதவைப் பூட்டிக் கொண்டிருந்த வைத்தியர், மணியரசன் அடித்த பிரேக்கில், திடுக்கிட்டுப்போய், பூட்டுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தார். சைக்கிள் சரிந்து விழுந்திட்டு.

“அய்யோ டொக்டர்.. சிவப்பிற்கு காயம்… ஒருக்கால், மருந்து கட்டவேணும்… கிடங்கிலை விழுந்து காலிலை காயம்…”

பதற்றத்தில் அவனது செயற்கை கால் படபடத்தது. வைத்தியரின் கண்கள் மணியரசனின் கால்களைத்தான் நோக்கின. அவர் ஆட்டுக் குட்டியை வாங்கிக் கொண்டார். அதனை உள்ளே ஒரு மேசையில் கிடத்தி விட்டு மருந்து கட்டுவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார். ஆட்டுக்குட்டியின் காயப்பட்ட காலை பிடித்து திருப்பித் திருப்பிப் பார்த்தான். “கால் ஏதும் முறிஞ்சிட்டுதோ டொக்டர்…” தலைப் பிரசவத்திற்கு மனைவியை அனுமதித்தவன் போல பதற்றத்துடன் கேட்டான். சிவப்பியோ நடப்பறியாது மிரட்சியுடன் அங்குமிங்கும் தலையை அசைத்தது. ஊசியால் தைத்து மருந்தை அப்பி துணியால் கால்களை சுற்றிக் கொண்டிருந்தார் மருத்துவர். “யோசிக்கப்படாது. பிள்ளைக்கு டொக்டர் மருந்து கட்டுறார் தானே… வளர்றதுக்குடையில உது மாறிரும்..” தலையை தடவியடி ஒரு ஆட்டுக் குட்டியைப் போல சிவப்பியுடன் பேசினான்.

மிருக வைத்தியசாலையின் முன்பாயிருந்த வாய்க்காலில் பூத்திருந்த பாம்புப் பூக்களை பிடுங்கி நீரில் எறிந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். வாய்க்கால் தண்ணீரில் ஒரு சிறுவன் நீச்சலடித்தான். “ஆட்டுக் குட்டிக்கு மருந்துகட்டீங்களா? பாவம்… அழுகுது என..” அதிலொரு சிறுவன் ஆட்டுக் குட்டியின் நாடியை தொட்டபடி பேசினான். “சரி.. பொழுது படுது… பனியும் பெய்யுது… இப்பிடி குளிச்சால் காய்ச்சல் எல்லோ வரும்… வீட்டை போங்கோ எல்லாரும்…” சைக்கிளை கந்தசாமி கோயில் முன் வீதியில் விட்டான் மணியரசன்.

ஒரு குழந்தையைப் போல ஏந்திக் கொண்ட ஆட்டுக் குட்டியை மெல்ல இறக்கி கோயில் மண்டபத்தில் இருந்தினான். கோயில் எங்கும் கற்பூர வாசனை பரவியிருந்தது. “ஐய்யா சிவப்பிக்கும் ஒருக்கால் கற்பூரம் காட்டுங்கோ…” அதற்கு திருநீறு பூசி தானும் வைத்துக் கொண்டான். ஆலய உள் மணியோசை ஒரு பாடலைப் போல மெல்லிதாய் அதிர்ந்தது. கோயில் மண்டபமெங்கும் இறைஞ்சும் பெண்தெய்வங்களைப் போன்ற தாய்மாரின் விழிகளில் இவனின் செயல்களைப் பார்க்க உருக்கம் பிறண்டன.

“சிவப்பியை விறாந்தையிலை கிடத்தி விடுங்கோ… தமிழினி! சிவப்பி பாவம். வடிவா பாத்துக்கொள்ளோனும்…”

மளமளவென காவலுடையை மாற்றினான். தொப்பியை அணிந்து கொண்டான். சாப்பாட்டு பெட்டியை எடுத்து சைக்கிளில் மாட்டினான். படலை மின் குமிழை ஒளிரச் செய்துவிட்டு சைக்கிளை திருப்பி மிதிக்கத் தொடங்கினான். அந்தக் காவலுடைய அவனுக்கொரு மிடுக்கை கொடுத்தது. வீதியே அமானுஷ இருளில் மண்டியிருந்தது. அவசரத்திற்கு சைக்கிளும் உருள மறுத்தது. மணல் வீதியில் சைக்கிள் தடுமாற இறங்கிக் கொண்டான். செல்லையா வீதியில் மாடுகளை சாய்த்துக் கொண்டு வந்தான். “என்ன இண்டைக்கு நல்லா லேட்டாய் போறியள்…” கேட்டுக் கொண்டே மாடுகளின் முதுகில் பிரம்பால் அவன் அடிக்க இவனுக்கு தேகம் சுள்ளிட்டது. “ஓமண்ணை… நல்லாய்த்தான் நேரம் போச்சுது..” இருட்டிலிருந்து கேட்ட மணியரசனின் குரல் தூரமாகிச் சென்றது.

எப்போதாவது இரவில் அலுவலகத்திற்கு வரும் டிரைக்டர், அன்றைக்கு வாசலில் விசாரணைக்கு தோரணையிற் காத்திருந்தார். “என்ன இண்டைக்குத்தான் லேட்டோ? இல்ல ஒவ்வொரு நாளும் இப்பிடித்தான் நடக்குதோ?” மணியரசன், காவல் அறையை திறந்தபடி நுழைந்தான். மளமளவென மின் குமிழ்களை ஒளிரச் செய்தான். “ஆட்டுக் குட்டி கிடங்கிலை விழுந்து காயம்… அதான் மருந்து கட்டப் போனனான்….” தயக்கத்துடன் சொல்லியடி விளக்குமாற்றால் வாசலைக் கூட்டினான். “நல்லாய்த்தான் இருக்குது… ஆட்டுக் குட்டியை கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருமன்.. வேலை வேண்டாம்…” மணியரசன் தலையை குனிந்து கொண்டான். “இனிமேல் இப்படி எப்பவாச்சும் நடந்தால், உம்மடை கம்பனியிட்டை சொல்லிப்போடுவன். எனக்கு வேற ஆளை மாத்தி தரச் சொல்லி…” தலையாட்டியபடி, டிரைக்கடர் தண்ணீர் அருந்தும் போத்தலில் தண்ணீர் பிடித்து நீட்டினான். “ஆட்டுக்குட்டிக்கு காயம் எண்டு ஹொஸ்பிட்டல் போனவராம்.. பேசாமல் வீட்டிலை நிண்டு ஆடு மாட்டை மேய்க்கலாமே..” சொல்லிக் கொண்டே தனது மகிழுந்தில் ஏறி அதைத் திருப்பினார் டிரைக்டர்.

ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் காவலாளி மணியரசன். வனவளத் திணைக்களத்தின் இரவு காவல் அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு. போராளிகள் தடுப்பு முகாமிலிருந்து வந்தவன், வேலைக்காக எத்தனையோ இடங்களுக்கு ஏறி அலைந்தான். “ஒரு கால் இல்லை… கையிலை இரண்டு விரல் இல்லை… எப்படி உமக்கு வேலை தாரது?” எல்லா இடங்களிலும் கதவு சாத்தப்பட்டது. எப்படியோ இரங்கிப் போய் இந்தப் பாதுகாப்பு நிறுவனம் இவனுக்கு வேலையை வழங்கியது.

அதுவும் பின் கதவுகளிலை நிற்க வேண்டும் என்றே இந்த வேலை வழங்கப்பட்டது. அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தில் பின் கதவில் நின்று காலத்தை ஓட்டியவனுக்கு இப்போது வனவளத் திணைக்களத்தின் முன் கதவில் நிற்பது கொஞ்சம் சோதனைதான். நான் இருக்கிற வரை உமக்குப் பிரச்சினை இல்லை என்று அந்த பாதுகாப்பு நிறுவனத்தில் முன்னர் தலைவராக இருந்த சண்முகரத்தினம் சொல்லியிருந்தார். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து இவனுக்கு கஷ்ட காலம் துவங்கியது. புதிதாய் வந்த நிஷாந்த ரணசிங்க, இவனை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார்.

“படிப்பு ஒண்டும் இல்லாமல், செக்குரிட்டி காட் வேலைதான் இப்ப எடுக்கலாம். எங்கடை நிறையப் பொடியள் இப்ப இந்த வேலைதான் செய்யிறாங்கள்… எனக்கு கால் இல்லாத நிலையிலை இந்த வேலை கிடைச்சதே பெரிய விசயமப்பா…” மனைவி ஆனதிக்குச் சொல்லி ஆறுதலடைந்தான் மணியரசன். “அண்டைக்கு நாட்டுக்கு காவல் காத்தவையள் இண்டைக்கு….” ஆனதிக்கு வார்த்தைகள் வந்து தொண்டைக்குள் உடைந்து கொண்டன.

பகல் பொழுது முழுவதும் ஆடுகளுடன்தான் இவன் பொழுது கழியும். கொஞ்சம் கொஞ்சமாக உழைத்துச் சேர்த்த பணத்தில் வெள்ளச்சியை வாங்கினான். அவள் இரண்டு குட்டிகளை ஈன்றிருந்தாள். ஒருத்தி சிவப்பி. மற்றையவள் கறுப்பி. பகலில் இவர்களுக்கு இரை தேடுவதே இவனுக்குப் பெரிய பிரச்சினை. கருங்கோடைக் காலம். ஒரு துளி மழையுமின்றி பூமித் தரை காயந்து புழுதி எழுப்பிக் கிடந்தது. எங்காவது திரிந்து குலைகளை வெட்டி சைக்கிளிலில் கட்டிக் கொண்டு வருவான். அல்லது, கனகாம்பிகை காடுகளுக்குள் சென்று மேய்த்துவிட்டு சாய்த்துக் கொண்டு வருவான்.

“உந்த ஆலிலை கொஞ்சம் கொப்பு முறியுங்கோவன்.. இதுகளுக்கு சரியான பசி..” சிவப்பியையும் கறுப்பியையும் அணைத்துக் கொண்டபடி சொன்னாள் ஆனதி. கையிற்கு எட்டக்கூடிய விதமாக தொங்கிய அந்தக் கொப்பை எம்பி முறித்தான். செயற்கை கால் படபடக்க தள்ளாடியவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ஆனதி. “கவனமப்பா…” அவள் நடுநடுங்கிப் போனாள். “ஒரு கொக்கத் தடி இருந்தால் வடிவாய் முறிச்சுப் போடலாம்…” முறித்துப் போட்ட குலைகளை வெள்ளச்சியும் குட்டிகளும் மளமளவென மேய்ந்தனர். தமிழினி ஒவ்வொரு இலைகளையும் பிடிங்கி சிவப்பிற்கு ‘தித்திக்’ கொண்டிருந்தாள். இன்னும் கொப்புக்களை எப்படி முறிப்பது என ஆல மரத்தை பார்க்கும் மணியரசனின் மெல்லிய வாக்குக் கண்களை குலைகளை மேயும் ஆடுகளைப் போல ஆனதி மேய்ந்தாள்.

மணியரசனை முதன் முதலில் ஆனதி கண்டது, காக்கைகடை சந்தி புதிய போராளிகள் இணையும் இடத்தில்தான். ஆனதி நெடிதாய் வளர்ந்தவள். நீண்ட சாம்பல் விழிகள். புன்னகை விலகாத முகம். பதிநோரம் வகுப்பு படிக்கும்போதே உயர் தரத்தில் படிப்பதைப் போன்ற தோற்றம். “ஒருக்கால் கதைக்கலாமே…” புதிய போராளிகள் இணையுமிடத்தில் ஆனதியை மறித்தான் மணியரசன். சைக்கிளை நிறுத்திக் கொண்டாள் ஆனதி.

பிரச்சாரம் தொடங்கியது. “வீட்டிலை எத்தினை பேர்? ஆர் இயக்கத்திலை இருக்கினம்? என்ற கேள்விகளுடன் சிங்கள அரசு ஏன் எங்கள்மீது குண்டுகளை வீசுகிறது? இந்தப்போராட்டத்தை ஏன் நாங்கள் நடத்தோனும்…” என்றெல்லாம் கடும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

“சரி நீர் எத்தினையாம் வகுப்பு எண்டனீர்?”

“இப்பதான் ஓ.எல் படிக்கிறன்”

முதலே சொல்லியிருக்கலாமே? அடித்து துரத்தாத குறையாய் விரட்டினான். தலையை குனிந்து சிரித்தபடி சைக்கிளை மிதித்தாள்.

மருதநகரிலில் இருக்கும் வீட்டிலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு செல்பவள், பாடசாலையை தாண்டி தினமும் கந்தசுவாமி போயிலுக்குச் செல்லத் தொடங்கினாள். அந்தப் புதிய போராளிகள் இணையுமிடத்தை நெருங்கினால், இவள் பார்வை அந்தக் கொட்டகையை மேயும். மணியரசன் நிற்கிறானா? என்று கண்களை எறிவாள். அடர்ந்த மீசை. பக்க உச்சி பிரிக்கப்பட்ட தலைமுடி. கம்பீரமான அந்த கறுத்த இயக்கப் பொடியனில் அப்பிடியொரு காதல் அவளுக்கு.

புதிய போராளிகள் இணையுமிடத்தை சுற்றியே இவளது பார்வை சுழன்றமையால் தோழிகளுக்கும் சந்தேகம். “என்னடி இந்த இடத்துக்கு வந்தால், செக்கு மாடு சுத்தின மாதிரி ஒரே இடத்தை சுத்திக் கொண்டு நிக்கிறாய்… இப்பவெல்லாம் நெடுக கந்தசாமி கோயிலுக்கும் போறாய்? ஏதும் நேத்தியோ”. இயக்கத்துக்குப் போகப் போறனடி.. அதான் ஆரும் அக்காமார் நிக்கினமோ எண்டு பாத்தனான்… இல்லை… வாங்க போவம்…” இவள் சமாளிப்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்தக் காதல் வீட்டுக்குத் தெரிய வந்தது. ஆனதியின் அப்பா, வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தார். “கழுதை தேய்ச்சு கட்டெறும்பானதாம்.. நீ செல்லம் குடுத்தாய்… அவாவுக்கு இப்ப காதல் கேக்குது…” வெளித் திண்ணையில் குளறியபடியிருந்தார் சிவபாதம். ஆனதி வருகிறாளாவென வழியை வழியை பார்த்தபடி இருப்பதும் எழும்புவதும் நடப்பதுமாக புருபுருத்தார். “இண்டைக்கு அவா வரட்டும்…” திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவருக்கு அருகில் தேத்தண்ணியை வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள் பாக்கியம்.

“அது வலு திறமான பொடியனாம். சொந்த இடம் திருகோணமலை. தாய் தேப்பனை ஆமி வெட்டிப் போட்டாங்கள் எண்டு இயக்கத்துக்கு போனவனாம்.. பேசிப் பறைஞ்சு வைப்பம். படிப்பு முடியட்டும்…” என்ன கோபத்தில் இருந்தாலும் சிவபாதத்தை வழிக்கு கொண்டு வரும் வித்தை பாக்கியத்திற்கு கைவந்த கலை.. நல்ல பிள்ளையாய் குனிந்த தலையுடன் வீட்டுக்குள் நுழைந்த ஆனதியை கோபம் கலைந்த முகத்துடன் பார்த்த சிவபாக்கியம், சிவ.. சிவ… என கண்களை மூடி சொல்லிக் கொண்டார்.

“இயக்கத்திலை இருக்கிறான்.. எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது… காலும் இல்லாத பொடியன்…” என்று ஊருக்குள் சிலர் சிவபாத்தின் காதுக்குள் குசுகுசுத்தனர். “எங்களுக்காகத்தான் காவல் இருக்கிறான். எங்களுக்காகத்தானே காலைக் குடுத்தவன்..” எனுமளவில் சிவபாத்திற்கும் இயக்க மாப்பிள்ளையில் விருப்பம் மேவியது.

ஆனதியின் உயர்தரப் படிப்பு முடிந்த காலம். சொந்தவூரான நெடுந்தீவைச் சேர்ந்த பாலகுமாரன் விமானக் குண்டு வீச்சல் இறந்துவிட்டதால், அவனின் செத்த வீட்டிற்கு மல்லாவிக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் வவுனிக்குளத்தில் ஆழ ஊடுருவும் இலங்கை இராணுவம் நடத்திய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் சிவபாதமும் பாக்கியமும் கொல்லப்பட்டனர். ஆனதி தனித்துப் போனாள். மணியரசனும் மன்னார் சண்டையில் நின்கிறான் என்று கேள்வி. ஆசிரியர் பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரியில் இருந்து வந்த அட்மிஷனை கிழித்தெறிந்து விட்டாள் ஆனதி. தன் அன்றாட பிழைப்புக்காக தமிழீழப் போக்குவரத்துப் பிரிவில் தட்டெழுத்துப் பணியாளராய் இணைந்து கொண்டாள்.

பிறகு சண்டையும் தீவிரமானது. யுத்தம் முழுவதும் மணியரசனைத் தேடிக் கொண்டிருந்தாள் ஆனதி. காணும் போராளிகளை எல்லாம் விசாரித்தாள். இருக்கிறானா இல்லையா என்பதுகூட தெரியாது. அவனுக்காக அனுப்பிய கடிதங்கள் திரும்பவும் அவளுக்கே வந்தன. அவனைக் காணவே இல்லை. முள்ளிவாய்க்காலில் இறந்து கிடந்த போராளிகளின் முகங்களை எல்லாம் இவனா என்று தேடிப் பார்த்து ஏமாந்து கொண்டே போனாள்.

எங்கு? யாருடன் செல்வதென்றே தெரியாமல் நடந்தவளின் கால்களை செல் தூண்டு ஒன்று கிழித்தது. வீழ்ந்து கிடந்தவளின் நினைவு முழுவம் மணியரசன். அவன் என்ன ஆனான்? எங்கு நிற்கிறான்? தவிப்பில் உயிரும் பிரிய மறுத்தது. மூடியிருந்த விழி மடல்களுக்குள் அவனின் முகங்கள் வந்து மறைந்தன. மணியரசனை அழைத்தபடி அனுங்கினாள்.

குற்றுயிராய் கிடந்தவளைக் கண்டு திகைத்துப் போனான் மணியரசன்.

அவனுக்காகத்தான் உயிரைப் பிடித்தபடி காத்திருந்தாளா?

அவளை தூக்கி தோள்களில் சுமந்தான்.

தனது தோளில் கிடப்பவளை ஆனதி மணியரசன்… என்று இராணுவத்திற்கு சொன்னான்.

“நீங்க… புருசன்.. பொண்டி தானே….” சிவத்தக் கண்களை கொண்ட தடித்த ஆமியொருவன் கேட்க, இவன் தலையசைத்தான். இருவருடைய பெயர்களையும் கணவன் மனைவியாக பதிந்து கொண்டான் அவன்.

இலேசாக கண்களை திறந்தாள்.

நடப்பது உணமைதானா? அவனை ஒருமுறை தொட்டுப் பார்த்தாள். அவன்தான். காழுத்தில் மாலையைப் போல கைகளைப் போட்டுக் கொண்டாள். அப்போதுதான் பிரிந்த அவளுயிர் மெல்ல மெல்ல மீண்டது.

இப்படித்தான் இவர்களின் திருமணப்பதிவு எழுதப்பட்டது.

சாவு தின்று தீர்த்த மண்ணில் அவளை அவன் ஏந்திக் கொண்டிருந்தான். யாரோ பூக்களை வீசுவதுபோலொரு பிரமை. வெடி குண்டுகளின் புகை இன்னும் அடங்கவில்லை. மேளச் சத்தத்திற்குப் பதிலாக மரணங்களின், சித்திரவதைகளின் ஓலம். தொலைவில் ஒரு வெடி ஓசை.

மணியரசனை இறுகப் பற்றிக் கொள்ள வறண்ட விழிகளிலிருந்து துளி நீர் கசிந்தது. உடலெங்கும் காயங்களிலிருந்து குருதியின் நிணம். அணிகலன்களாய் மருந்து கட்டிய துணிகள். மணியரசனின் தலையிலொரு பெரும் காயம். அவள் விழிகளால் காயத்தை நீவினாள்…

முள்வேலிச் சிறையில் சனங்கள் இறக்கப்பட்டனர்.

ஊரே திரண்டிருக்க, திருமணப் பந்தலிட்டு, புலித் தாலி அணிந்து கைகளைப் பற்றி மணவறையிலிருந்து தம் வாழ்வை அறிவிக்க விரும்பியவள், முள்வேலிகளால் தாறுமாறாக பின்னப்பட்ட பெருச்சிறையினுள் முதற் காலடியை எடுத்து வைத்தாள்.

தோரணங்களுக்குப் பதிலாக முள்வேலிகள் தொங்கின. எங்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவம். எங்கும் ஏக்கம் நிரம்பி வழியும் முகங்கள்.

ஊரோ, உறவோ இன்றி ஒரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். மயக்கத்தில் இருந்தவளுக்கு தேநீரை பருக கொடுத்தான் மணியரசன். ஒரு பனீஸ் துண்டை தேநீரில் நனைந்து ஊட்டினான். இலேசாக மயக்கம் தெளியவும், புலம்பி ஓ… என அழுதாள். காய்ந்து போன வழிகளிலிருந்து நதியுடைத்ததுபோல் கண்ணீர். உடைந்து கொட்டும் விழிகளை துடைத்து கன்னங்களை வருடி அணைத்துக் கொண்டான் அவன்.

குழந்தைகள் கூடாரங்களின் சிறிய முற்றங்களில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். வரிசையில் நிவாரணத்திற்கு நின்றான் மணியரசன். இரண்டு மாத கர்ப்பணியான ஆனதி, சுகாதார நிலையத்திற்குச் சென்றிருந்தாள். அவள் கூடாரத்திற்குத் திரும்புகையில், மணிசரன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தான் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டான். கூடாரம் வெளித்துக் கிடந்தது. நிலத்தில் வீழ்ந்து அழுதாள். கூடார வாசலுக்கு ஒடி வருவதற்குள் அவனை இராணுவ ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

ஒன்றரை ஆண்டுகளும் ஒரு யுகம் போலத்தான் கடந்தது. அவனில்லாமல் குழந்தையையும் தூக்கியபடி தனியாளாய் ஊர் திரும்பினாள். “அந்தக் கூடாரத்திலை, பச்சைக் குழந்தையையும் வைச்சுக் கொண்டு என்ன பாடுபடுறாளோ?” மணியரசனின் தூக்கத்தை கலைத்தன நினைவுகள்.

தடுப்புச் சிறையிலிருந்து வந்தவனை வரவேற்றாள் தமிழினி.

ஆடுகள் பட்டியில் இருந்து அசைபோட்டபடியிருக்க, நிலவை காட்டி மணிசரன் தமிழினிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒரு கிண்ணத்தில் மூன்று ரொட்டித் துண்டுகளையும் பருப்புக் கறியையும் எடுத்துக் கொண்டு வந்தாள் ஆனதி. “தமிழினி சாப்பிடுங்கோ…” ரொட்டியை சின்னச் சின்னத் துண்டுகளை பிய்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் கறியை ஊற்றி கொடுத்தாள் அவள். ரொட்டிக் கிண்ணத்தை முகத்தை கோணியபடி தள்ளிவிட்டு சினுங்கினாள் தமிழினி. “நாளைக்கு சாந்தாக்க வீட்டை இடிப்ப உரல் வாங்கியந்து என்ரை பிள்ளைக்கு அம்மா இடியப்பம் அவிச்சு தாறன்.. சாப்புடனை என்ரை கண்மணியெல்லோ…” சில ரொட்டித்து துண்டுகளை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டு பசி தீர்க்க முயன்றாள் தமிழினி.

“சிவப்பியையும் கறுப்பியையும் விற்பமே? நேசரிக்கு வார வெள்ளிக்கிடையிலை காசு கட்டவேணுமாம்..”

ஆனதி சொன்னது காதில் விழுந்ததைப்போல் வெள்ளச்சி ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த கறுப்புப் புள்ளிகள் வழமையைக் காட்டிலும் இன்னும் அழகு கொடுத்தன.

“அவளுகள் நிக்கட்டும்…”

“நீங்கள் ஒரு ஆட்டையும் விற்க விடமாட்டியள்…”

சிவப்பியும் கறுப்பியும் ஒருவரை ஒருவர் முட்டி விளையாடுவதை பார்த்து கைகொட்டி சிரித்தாள் தமிழினி.

நள்ளிரவு பன்னிரண்டு மணியிருக்கும். மணியரசனின் மார்பில் அயர்ந்த, ஆனதி திடுக்கிட்டெழும்பினாள். “அப்பா வெள்ளச்சி கத்துறாள்…. குட்டி போடப்போறாள் கிடக்குது…” மணியரசனை தட்டினாள். இருவரும் பட்டிக்குள் நுழைய வேதனையால் வெள்ளச்சி துடிப்பதை பார்க்க செய்வதறியாது நின்ற மணியரசன் தலையை தடவினான். “கொஞ்சம் பொறனை… ஆனதி மூண்டு குட்டிபோல… அதான் துடிக்கிறாள்…”. “அப்பிடித்தான் கிடக்குது… முதுகை தடவுங்கோ… ஆனதியும் வெள்ளச்சியை ஆசுவாசப்படுத்தினாள். “இண்டைக்கு இரவிரவாக சிவராத்திரிதான்…” வெள்ளச்சி இரண்டு கிடாய்களையும் ஒரு மறிக்குட்டியையும் ஈன்றுவிட்டு களைப்பில் படுத்திருந்தாள்.

ஆடுகளை சாய்த்துக் கொண்டு பொட்டல் காடுகளுக்குச் சென்றான் மணியரசன். தூரத்தில் பெருங்காடுகள் தெரிந்தன. அக் காடுகள் அவனை நினைவுகளால் இழுத்துச் சென்றன. மன்னார் காடுகளை ஒருபோதும் அவனால் மறக்க இயலாது. அந்தக் காடுகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். விமானமொன்று குண்டுகளை கொட்டியதும் காடே சிவப்பாய் மாறிற்று. கிளைகள் எல்லாம் உடைந்து மரங்கள் முறிந்து கடந்த கோரக் காட்சி. எங்கும் குருதி தெறித்திருப்பதைப் போலுணர்ந்தான்.

இராணுவம் எதிர்பாராமல் சண்டையை துவக்கியது. வெள்ளாங்குளத்தில் நடந்த அந்த சண்டையில்தான், ஒற்றைக் காலையும் இரண்டு கைவிரல்களையும் அவன் இழுந்தான். அந்தக் காடுகளின் மரங்களின் கிளைகள் அறுபட்டதுபோல, முறிபட்டதுபோல இவன் காலும் விரல்களும் முறிந்துபோயின. காயமுற்றுக் கிடந்தவனை போராளித் தோழன் மதுரன் தோள்களில் தூக்கிக் கொண்டு வந்தான். காயம் ஆறி எழுந்து வந்தவைக் காட்டி, அந்தச் சண்டையில் முழுமையாக நிற்கவில்லை என்பதுதான் தனக்குச் சரியான கவலை என்று தலைவருக்கு கடிதம் எழுதியதாக மதுரன் போராளிகளுக்கு சொல்லி கண்சாடை காட்டினான்.

“ஒரு கால் இல்லை.. கையிலை விரல் இல்லை என்று மோட்டார் சைக்கிளுக்கு லைசன்ஸ் தரேல்லை..”. காடுகளுடன் அவன் பேசிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு நிறையக் கால்கள். நிறைய விரல்கள். ஊன்று கோலைப் பிடிச்சால் மூண்டு கால். பொய்க்கால் நாலாவது கால். “கடவுளுக்குத்தான் நிறையக் கையள் காலுகள் இருக்குது.” காடுகள் சொல்லிக் கொண்டன போலும். ஊரில் ஏதுமொன்றால் அவன் செய்யும் வேலையை எவரும் செய்துவிட இயலாது. மருதநகரில் புயலடித்தபோது தனி ஆளாய் நின்று மணியரசன் சனங்களுக்கு ஒத்தாசை செய்தான். “எங்கடை ராசா…” முதுதாய்மார்கள் அவன் கன்னங்களை தடவினர்.

சப்பாட்டு பெட்டியை எடுத்து சைக்கிளிலில் கொழுவியபடி வானொலிக்கு காது குடுத்தான். ஒட்டுசுட்டானில் முச்சக்கர வண்டி ஒன்றினுள், ஆயுதங்களும் புலிக்கொடிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறும் செயற்பாட்டை அரச படைகள் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் செய்தி ஒன்று காற்றில் விசத்தைப் போல பரவியது. “எங்கடை கையில துப்பாக்கியளை திணிச்சு, புலிச் சீருடையை போட்டு விடாட்டி இவங்களுக்கு ஆட்சி நடத்த ஏலாது…” அவனுக்கு சிரிப்பும் சினமும் முகத்தில் மினுமினுத்தது. சிவப்பி வந்து ஒருமுறை கைகளை மணந்து வழியனுப்பி வைத்தாள். அவளுக்கொரு முத்தமிட்டு புறப்பட, அவள் துள்ளியபடி வெள்ளச்சியிடம் ஓடினாள்.

மணியரசன் கதவை திறந்தான். டிரைக்டரின் மகிழுந்து திணைக்களத்தில் நுழைந்தது. கண்டிப்பான ஒரு பார்வையை இவன் மேலே எறிந்துவிட்டு டையை சரிசெய்தபடி இறங்கினார். அன்றைக்கு அலுவலகம் பரபரப்பாக இருந்தது. “போரஸ்ட் டெவலப்மன்ட் மினிஸ்டரின்டை செக்ரட்ரரி வாறார். எல்லாரும் வடிவாய் வேலை செய்யுங்கோ.. இண்டைக்கு ஆரும் பதினொரு மணிக்கு வீட்டை சமைச்சுப் போட்டு, மூண்டரைக்கு வாற விளையாட்டு காட்டுறேல்லை…” ஊழியர்களின் முகங்கள் சட்டென விறைத்துப் போயின.. “பைல்களை எல்லாம் இருக்க வேண்டிய இடங்களிலை வைங்கோ… எல்லாம் குப்பையாய் கிடக்குது…” ஆணை பிறப்பித்தார் டிரைக்டர்.

செயலாளருக்கு மாலை, மரியாதைகள் எல்லாம் தயார் செய்யப்பட்டன. அவரை பற்றி எப்படி எல்லாம் பேசுவது என்று டிரைக்டர் ஒரு தாளில் குறிப்பெடுத்தார். அடிக்கடி வியர்க்கும் தன் நெற்றியை துடைத்தபடி பதிவேடுகளையும் பத்திரிகைத் துண்டுகளையும் பார்த்து ஏதேதோ எழுதினார். “ட்ரான்ஸர் பற்றி இஞ்சை கதைக்கலாமே… எனக்கு இங்கிரிமென்ட் கூட்டேல்லை.. அதையும் ஒருக்கால் கேக்கவேணும்… ” சில உத்தியோகத்தர்கள் மாறி மாறி ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டனர். “உங்கை ஒருத்தரும் தேவையில்லாமல் அவரோடை வாய் திறக்கிறேல்லை…” கட்டளையில் அமைதியானது அலுவலகம்.

செயலாளரின் வாகனம் உறுமிக் கொண்டு வரும் சத்தம் கேட்கவும் கதவை நோக்கி ஓடினான் மணியரசன். பாதுகாப்பாய் வந்த போலிஸ் உறுப்பினர்கள் இறங்கி வந்து அங்குமிங்கும் நிலையெடுத்தனர். மணியரசன் கதவை திறக்க ஓடினான். இலேசாக கழறுவதைப் போலிருந்த ஒற்றைக் காலைப் பிடித்தபடி கதவை திறந்தான். டிரைக்டர் ஓடிச் சென்று கைகளை கூப்பி வணக்கம் செலுத்திவிட்டு கைலாகு குடுத்து வரவேற்றார். ஊழியர்கள் சிலர் மாலைகளை கொண்டு வந்து போட்டார்கள். சிலர் பூக்களை துவினர்.

கதவை திறந்துவிட்டு ஓரமாய் நின்ற மணியரசனையும் அவனின் காலையும் உற்றுப் பார்த்தார் செயலாளர். “என்ன டிரைக்டர்? ஒற்றைக் கால் இல்லாதவரை செக்குரிட்டிக் காட்டாய் வைச்சிருக்கிறியள்? உவர் ஓடிப் போய் என்னண்டு கள்ளனைப் பிடிப்பார்? கேலியாகச் துவங்கிய செயலாளரின் முகம் மாறியது. “கெதியாய் அங்காலை போ…” என்பதுபோல சிவந்த விழிகளைப் பிரட்டினார் டிரைக்டர்.

“…”

இராணுவ டாங்கிகள் திபுதிபுவென வீதியில் சென்றன. பீரங்கிகள் வாயைப் பிளந்தபடியிருக்க, முன் பக்கத்தில் சிங்கக் கொடி அசைந்தது. மிரண்டு, சுருங்கும் விழிகளோடு ஒரு குழந்தையை தூக்கி வைத்திருந்த தாய் அதிர்வுற்று வீதிக் கரையில் நின்றாள். இவன் சைக்கிளை வீடு நோக்கி மிதிக்கத்துக்கத் துவங்கினான்.. இராணுவ ஹெலிகப்டர் ஒன்று தலைக்கு மேல் இறக்கைகளை அடித்துக் கொண்டு சென்றது.

சைக்கிளை கிணற்றடியில் நிறுத்திவிட்டு, குளிர்ந்த நீரை அள்ளி முகத்தைக் கழுவினான்.

அன்றைக்கும் நிலவு சிரித்தபடி முகம் விரித்திருந்தது. தமிழினி கதை ஒன்று கேட்பதற்காய் அப்பாவின் மடியில் வந்திருந்தாள். கறுப்பி தன் புதிய சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வேலை இழந்து வீடு திரும்பியவனின் விழிகளை முகர்ந்து முத்தமிட்டாள் சிவப்பி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *