கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2023
பார்வையிட்டோர்: 4,899 
 
 

இரயில் ஒரு மணி நேரம் தாமதம்னு சொன்னாங்க, நானும் என் மனைவியும் காத்திட்டிருக்கோம். எனக்கு எழுபது வயசு. எழுபது வருஷம் காத்திருந்தேன். ஒரு மணி நேரம் காத்திருக்கலாம். என் பெயர் சக்கரவர்த்தி. சாதாரண சக்கரவர்த்தி அல்ல. ஒரு காலத்தில் என் பெயர் சென்னை புகழ் சக்கரவர்த்தி. பார்ப்பதற்கு தமிழ்நாட்டு ஜேம்ஸ் பாண்டு ஜெய்சங்கர் சாயலில் இருந்தேன். கொஞ்சம் மெலிந்த ஜெய்சங்கர். நல்ல சாப்பாடு சாப்பிட்டாதானே குண்டாக முடியும்? கிராமத்து மேடைகளில் ஆடிப் பாடுவது சோற்றுக்கான தொழில். என் மனைவி சிவகாமி சுந்தரியும் என்னுடன் ஆடுவாள்.

அவளுக்கு பாம்பே புகழ் சிவகாமசுந்தரி என்பது பெயர். அவள் சரோஜாதேவி போன்று இருப்பாள். ஆனால், சிஐடி சகுந்தலா போல் ஆடுவாள். நானும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போல் நடிப்பேன். “பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்…” பாட்டிற்கு இருவரும் மேடையை அதிர வைப்போம். மற்றபடி நாங்களிருவரும் சென்னையையோ, மும்பையையோ நேரில் பார்த்ததில்லை… சினிமாவில் பார்த்ததோடு சரி. ‘என் அண்ணன்’ படத்தில் தலைவரின் ஓப்பனிங் ஸாங்கே சென்னை மவுண்ட் ரோடில்தான்.

அப்போது எல்ஐசி பற்றி பட்டி தொட்டி எல்லாம் பேச்சாக இருந்தது. ஜோலார்பேட்டையில் தொப்பிக்கார ராமரெட்டி மாடி வீடு கட்டினதையே எல்லா ஊர் ஜனங்களும் ஆச்சர்யமாய் வண்டி கட்டி போய்ப் பார்த்தோம். வீட்டுக்கு மேல வீடா, எப்படி சாத்தியம்? எப்படி சாத்தி யம்? எப்படி தாங்கும்? எப்படி நிற்கும்? எங்களுக்குள் பயந்தோம். பணக் கொழுப்புல கட்டி யிருக்காங்க; ஆறு மாசத்துல சரிஞ்சிடும் என்றோம். ஆனால், அறுபது வருடங்களா ரெட்டி பங்களா நிற்கிறது. எல்ஐசி பதினாலு அடுக்காமே… பழனிமலை உசரம் இருக்குமா? பதினாலு அடுக்கு சும்மா பேருக்குதான்.

யாரும் அதுக்குள்ள இருக்க மாட்டாங்க. சீரங்கம் கோபுரம் கூடத்தான் பல அடுக்குல இருக்கு. எந்த அடுக்குலயாவது யாராவது குடித்தனம் இருக்காங்களா? ஆனாலும் எல்ஐசியைப் பார்க்கணும்ங்கிற ஆசை, மலை மாதிரி மனசுக்குள்ள இருந்தது. கடைசி வரைக்கும் வாத்தியார் படத்துலதான் திரும்பத் திரும்ப பார்க்க முடிஞ்சது. சொன்னா நம்புவீங்களோ, நம்ப மாட்டீங்களோ, ‘என் அண்ணன்’ படத்தை நூறு தடவைக்கு மேல பார்த்திருக்கேன். அதுக்கப்புறம்தான் மேடையில கட்டுவதற்காக எல்ஐசி மாளிகை வரைந்தது ஒன்றும், மெரினா கடற்கரை வரைந்தது ஒன்றுமாக இரண்டு திரைச் சீலைகள் தயார் செய்தேன்.

அதன்பிறகு சிவாஜிகணேசன் பாடல்களுக்கு மட்டுமில்ல, எம்ஜிஆரின் பாடல்களுக்கும் ஆட ஆரம்பித்தேன். முகத்தில் பெங்களூர் ரோஸ் பவுடர் அப்பிக் கொண்டு, கழுத்தில் பெரிய சைஸ் கர்ச்சீப் ஒன்றைக் கட்டிக் கொண்டு “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…” என்ற பாட்டிற்கு நடித்தால் விசில் பறக்கும்.‘கடலோரம் வாங்கிய காற்று, குளிராக இருந்தது நேற்று…’ பாட்டுக்கு நான், சிவகாமசுந்தரி இருவருமே ஆடுவோம். சூடு பறக்கும். மேடையில் காசு வீசுவார்கள். கிராமத்து ஜனங்களுக்கு நாங்க பெரிய விஐபிங்க. சின்னப் பசங்க எங்களைத் தொட்டுப் பார்த்து சந்தோசமடைவாங்க.

பணக்கார வீடுகள்ல இருந்து சாப்பிட அழைப்பாங்க. யார் வீட்டுக்குப் போறதுன்னு குழப்பம் வரும். “இல்லைங்க, நைட்ல சாப்பிடறதில்லை, சிவாஜி அண்ணன்தான் ஒரு நாள் அட்வைஸ் பண்ணார். ‘நைட்ல சாப்பிடாதடா… உடம்ப கெடுத்துக்காத, ரெண்டு வாழைப்பழமும் ஒரு டம்ளர் பாலும் எடுத்துக்கோ போதும்’னு சொன்னார். அதுல இருந்து நைட்ல சாப்பிடறதில்லை…” என்பேன். விட்டா ஒரு குண்டா சோறு சாப்பிடுவேன். ஆனா கவுரவமா இருந்து டுவேன். எம்ஜிஆரை நேர்ல பார்த்திருக்கீங்களா? “என்ன அப்படி கேக்கறீங்க..? அவர் சூட்டிங் போகாம மெட்ராஸ்ல இருந்தார்னா, நான்தான் அவருக்கு எல்லாமே!

விடவே மாட்டார். கூடவே இருக்கணும். என்னை ஆடச் சொல்லி பார்த்துட்டே இருப்பார். நாகேஷ் என் வீட்டுக்கே வந்துடுவார். தூங்கிட்டு இருக்கிற என்னை அவர்தான் எழுப்பி அழைச்சிட்டுப் போவார்…” என்பேன் அப்படியே நம்புவார்கள். எல்ஐசி பில்டிங் பார்த்திருக்கீங்களா? எந்த ஊர்லயும் யாராவது ஒருத்தர் இந்தக் கேள்வியை கேட்டு விடுவார்கள். “எல்ஐசி பக்கத்துலதான் நம்ம வீடு. எந்த நேரமும் பார்த்துட்டேதான் இருப்பேன். கீழே நின்னுட்டு அண்ணாந்து பார்த்தா கழுத்து உடைஞ்சிடற மாதிரி இருக்கும், அவ்ளோ உசரம். வானத்தை முட்டிட்டு நிற்கும்…”மேல ஏறிப் போயிருக்கீங்களா?

“ஒரே ஒரு முறை ஏறிப் போயிருக்கேன். அந்த படியில ஏறிப்போறதை விட, பழனிக்கே ஏறிப் போயிடலாம். மேலருந்து எட்டிப் பார்த்தா மயக்கமே வந்துடும். கெட்டி தைரியம் இல்லேன்னா, ஆள் காலியாயிடுவாங்க… மேலருந்து பார்த்தா காரும் வண்டியும் தீப்பெட்டிங்க மாதிரி தெரியும். ஆளுங்க, ஈ. எறும்பு மாதிரி தெரிவாங்க…”இப்படி நிறைய பொய். சென்னை பற்றிய பொய். எல்ஐசி பற்றிய கேள்விகள் கொஞ்ச வருசங்கள்லயே குறைஞ்சிபோச்சு. எப்பவுமே நடிகர், நடிகைகளைப்பத்திதான் அதிகமாக் கேட்பாங்க. ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு நடிகர் ஃபேமஸா இருப்பாங்க. விஞ்ஞான வளர்ச்சியை சும்மா சொல்லக் கூடாது.

அதுதான் எங்களை ரொம்ப காப்பாத்துச்சு. நடிகர்களோட சேர்ந்து எடுத்த மாதிரி ஃபோட்டோக்கள் தயார் செஞ்சி ஆல்பமா வைச்சிட்டோம். டி.ராஜேந்தர், பாக்யராஜ், ரஜினிகாந்த், கமலஹாசன், சிலுக்கு, சிவகுமார்னு எல்லோரோடவும் நின்னு எடுத்த மாதிரி போட்டோக்கள். அந்த ஆல்பத்துக்கு ரொம்ப மரியாதை இருந்தது. பல வருஷம் பலரோட கைகள்ல அந்த ஆல்பம் தேய்ஞ்சது. ஒருத்தரும் அது ஒட்டு வேலைன்னு கண்டு பிடிக்கலை. அது கண்டுபிடிக்கிறதுக்குள்ள ரிக்கார்ட் டேன்ஸ் அழிஞ்சிபோச்சு. பாட்டுக் கச்சேரியும், பட்டிமன்றமும் திருவிழா, பண்டிகைகளை ஆக்கிரமிப்பு செஞ்சிருச்சு. கொஞ்ச நாள் கச்சேரிக்காரங்களும் சென்னை புகழ்னு போட்டுட்டு வந்தாங்க, அப்புறம் அதை மாத்தி சினிமா புகழ், டிவி புகழ்னு போட்டாங்க.

எல்லாப் புகழும் எப்பேற்பட்டதுன்னு எனக்குத்தானே தெரியும்? பாட்டுக் கச்சேரி முக்கியமானதா ஆகிப்போனது. எங்களை ரிக்கார்ட் டேன்ஸ் ஆட யாரும் கூப்பிடல… சோறு முக்கியம் இல்லையா? சோத்துக் கடை வைச்சோம். நாங்களும் சாப்பிடலாம், மத்தவங்களும் சாப்பிடலாம். அதுக்கும் மெட்ராஸ் மெஸ்னு பேரை வைச்சோம். நாங்களும் எங்களுக்குப் பொறந்த நாலு பசங்களும் மெஸ்ல சாப்பிட்டோம். நாங்க சாப்பிட்டது போக கஸ்டமர்கள் சாப்பிடுவாங்க. கஸ்டமர்கள் சாப்பிட்டது போக நாங்க சாப்பிடுவோம். அடிச்சி, உதைச்சி பள்ளிக் கூடம் அனுப்பினோம்.

பசங்களுக்கு படிப்பு ஏறல. கொஞ்சம், கொஞ்சம் படிப்புலயே நின்னு போச்சுங்க… பசங்க வளர்ந்ததும், நாங்க ரிக்கார்டு டேன்ஸ் ஆடுனவங்கன்னு அவங்களுக்கு காட்டிக்கல. பசங்க யாரும் இல்லாதப்போ டிவில பழைய பாட்டு போட்டா, சிவகாமசுந்தரி கதவை சாத்திட்டு ஆடுவா. நல்லாதான் ஆடுவா. ஆனா, அவ உடம்பு சதையும் டிங் டிங்குன்னு ஆடும். அப்புறம் கால் வலிக்குதுன்னு சொல்வா. சுடுதண்ணி ஒத்தடம் தருவேன். அவளோட காலைப் புடிச்சி ஒத்தடம் தரும்போது அவ ஆடின மேடை எல்லாம் ஞாபகத்துக்கு வரும். அவ மேல ஆசைப்பட்ட பல கிராமத்து பெரிய மனுஷன்கள் ஞாபகத்துக்கு வருவாங்க.

சோலையூர் நாட்டாமையை இந்தக் காலால எட்டி உதைச்சாளே, அது ஞாபகத்துக்கு வரும். “என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ’’ என்று அவளே தான் கேட்டாள். எனக்கு பதில் சொல்லத் தெரியல. ஆனா அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சது. “கூட ஆடற அத்தனை பேரும் என்னை தப்பா பாக்கறாங்க. தப்பா கூப்பிடறாங்க. தப்பா தடவறாங்க. நீ ஒருத்தன்தான் நல்லவனா இருக்கே…’’ன்னா. எனக்கு கண் கலங்கிருச்சு. ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு சொல்ற மாதிரி நானும் அவ சொன்னதையே திருப்பிச் சொன்னேன்.

அன்னைக்கு மேடையில நெருக்கமா ஆடினா. ஒரு நொடி கட்டிப் பிடிச்சா. இப்போ நினைச்சா கூட உடம்பு சிலிர்க்குது. நான் எந்த ஜாதின்னு அவளுக்குத் தெரியாது, அவ எந்த ஜாதின்னு எனக்குத் தெரியாது. அவசியம் ஏற்படல. புராதன காலத்துல இருந்து இப்ப வரைக்கும் ஜாதி பார்க்காம கல்யாணம் பண்ணிக்கிறவங்க எங்களை மாதிரி கலைஞர்கள்களாத்தான் இருக்கணும். இதையெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேன்னா முதன் முதலா சென்னைக்குப் போறான் இந்த சென்னை புகழ் சக்கரவர்த்தி. பெரிய மகன் சென்னையில்தான் இருக்கான். தவுசண்ட் லைட்ல பிரியாணிக்கடை வைச்சிருக்கான்.

ஆம்பூர் பிரியாணின்னு கடையோட பேரு, சத்தியமா அவன் ஆம்பூரைப் பார்த்ததில்லை. அவன்தான் எங்களை வரச்சொல்லி கூப்பிட்டிருக்கான். ஏழு வருசத்துக்கு முன்னே சண்டை போட்டுட்டு ஓடிட்டான். அழுது அழுது கண்ணீர் வத்திப் போச்சு. ஆறு மாசத்துக்கு முன்னே அவனே வந்தான், பொண்டாட்டியோட… முதலாளி பொண்ணு. அவரே கல்யாணம் பண்ணி வைச்சிட்டாருன்னு சொன்னான். ஆள் நல்லா இருந்தான். எங்களுக்கு செல்போன் தந்துட்டு போனான். சின்னவனை கூடவே அழைச்சிட்டு போனான். இன்னொருத்தனைப் பத்தி முக்கியமா சொல்லணும்.

மறுபடியும் ரிக்கார்டு டேன்சுக்கு மவுசு வந்துருச்சு. நாட்டியாலயா ஆடலும், பாடலும்ங்கிற பேருல… எங்க ரத்தமாச்சே… நடு ஆள் அதுக்கு தயாராயிட்டான். சிறப்புச் செய்தி என்னன்னா அவன் பேரு மலேசியா புகழ் கார்த்தி. ஒரே ஒரு பொண்ணு குடிகாரனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. குடிச்சி குடிச்சி போயிட்டான். சின்ன வயசுல விதவையா நிக்கிறா. அவளுக்குத் துணையா யாரும் இல்லை. இந்த சென்னை புகழ் சக்கரவர்த்தி நாலு நாள் சென்னையைச் சுத்திப் பாத்துட்டு ஊருக்கு திரும்பிடுவேன். சென்னை மண்ணுல ஒரு தடவையாவது காலை வைச்சிட்டு செத்துடணும்ங்கறது ஆசை, பேராசை. அந்தக் காலத்துல என்னை சக்கரவர்த்தின்னே கூப்பிட மாட்டாங்க…

மெட்ராஸ்காரன்னுதான் கூப்பிடுவாங்க. முதல்ல மெட்ராஸ் புகழ் சக்கரவர்த்திதான். மெட்ராஸ், சென்னைன்னு மாறும் போது, நானும் சென்னை புகழ் சக்கரவர்த்தின்னு வைச்சுகிட்டேன். கூப்பிடறவங்க பழையபடி மெட்ராஸ்காரன்னுதான் கூப்பிடறாங்க… நல்ல வேளை யாரும் என் சென்னை முகவரி கேட்கலை. சினிமாவுல வேணும்னா சொல்லலாம் சென்னை தெரு, சென்னை குறுக்கு சந்து, சென்னை போஸ்ட்டுன்னு, நிஜத்துல சொல்ல முடியுமா? ஐம்பது வருஷ கனவு இன்னைக்குதான் நனவாகப் போகுது. நினைச்சாலே சிலிர்ப்பாவும், இதமாவும், சொல்ல முடியாத சந்தோசமாவும் இருக்கு.

“சென்னைல நீ என்னென்ன பார்க்கணும் சொல்லுப்பா…” போன்லயே கேட்டான் என் மகன். எனக்கு முதல்ல ஞாபகம் வந்தது எல்ஐசி மாளிகை, அப்புறம் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, எம்ஜிஆர் வீடு, கூவம் ஆறு, கடற்கரை, வள்ளுவர் கோட்டம், சாந்தி தியேட்டர். ஏவிஎம் உலக உருண்டை, ஜெமினி பாலம். “கால் டாக்ஸி ஏற்பாடு பண்றேம்பா” என்றான். “அதெல்லாம் வேணாம்பா, ரிக்‌ஷாவுல போறோம்…”“ரிக்‌ஷா போய் பல வருஷம் ஆகுதுப்பா… உன் மனசுல, உன் கனவுல, உன் காலத்து சினிமாவுல இருந்த சென்னை வேறப்பா. இப்ப சென்னை வேற…” என்றான்.

எல்லா ஊரும்தான் மாறி யிருக்கு. அப்படியேவா இருக்கு? அதே சென்னையோ, வேற சென்னையோ… பார்க்கணும். இரயில் இன்னும் வரலை. எப்போ சரியாக நேரத்துக்கு வருது? எது சரியான நேரத்துக்கு நடக்குது? யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தப்போ, சிவகாமசுந்தரி “ஏம்பா…” என்றழைத்தாள். “என்ன? காபி சாப்பிடறியா?”“இல்லைப்பா… ஒண்ணு கேட்கட்டுமா?”“கேளேன்…” “அம்பது வருஷமா சென்னையைப் பார்க்கணும், சென்னையைப் பார்க்கணும்னு உன் ஆசையைத்தான் புலம்பிட்டு இருந்தே. எனக்கு பாம்பே பார்க்கணும்னு ஆசை இருக்காதா?

ஒரு நாளாவது கேட்டியா? உன் பிள்ளைகளாவது கேட்டாங்களா?” என்றவள் “சும்மா பேச்சுக்குதான் கேட்டேன்… தப்பா எடுத்துக்காதே…” என்றாள். சுறுக்கென்று தைத்தது. மௌனமாக இருந்தேன். இரயில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. “நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு சுந்தரி, பயமா இருக்கு. சென்னை வேணாம். வீட்டுக்கு போலாம்…”என்றேன் “வாழ்க்கையில சென்னையைப் பத்தி எவ்வளவோ பொய் சொல்லிட்டோம். சென்னைக்கு போகக் கூடாதுன்னு இந்த ஒரு பொய் சொல்றதால ஒண்ணும் ஆகாது.

– 21 செப்டம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *