காலம் மாறினால் காதலும் மாறுமோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 977 
 
 

அன்றிரவு எட்டு மணி. மல்லிகை கல்யாண மண்டபம். பருமனான தேகம் கொண்ட அழகான இளம்பெண் கண்ணம்மா, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்தாள். தன்னுடைய கார் அருகில் சென்றாள். அங்கே அவளுடைய உதவியாளன், ஒல்லியான இளைஞன் அருண் நின்று கொண்டிருந்தான். கண்ணம்மா, காரில் ஏறப் போகும் போது, வாட்டசாட்டமான நடுத்தர வயது நபர் ஒருவர் அவள் அருகில் வந்தார். கண்ணம்மா பேசினாள் ‘ராஜா அண்ணே எப்படி இருக்கீங்க உள்ள தான் இருந்தீங்களா சாரி கவனிக்கல’

‘பரவால்ல அதான் நான் ஒங்கள பார்க்க வந்தேன்…’ என்றார் ராஜா. ‘என்ன புதுசா நீங்க… நீன்னு கூப்பிடுங்க’

‘சரிம்மா ஒன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா? இல்ல அப்புறம்…’

‘ஏன் தள்ளிப் போடணும் இப்பவே பேசிடலாம் ‘

‘சரிம்மா இங்க மண்டபத்தில் பேச முடியாது. பக்கத்தில் நம்ம இடம் இருக்கு நடக்கிற தூரம் தான்’

‘சரி வாங்க ‘ ராஜாவின் பின்னால் சென்றாள் கண்ணம்மா. அருண், காரைப் பூட்டிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.

‘இந்த தம்பி…. ‘

‘தம்பி இல்லாமல் நான் எந்த மீட்டிங்க்குக்கும் போறது இல்ல அண்ணே ‘

அவர்கள் மூவரும் ஒரு கிடங்குக்குள் நுழைந்தனர். அங்கு கட்டுடல் கொண்ட உயரமான ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். ‘ வந்துட்டீங்களா’ என்ற ராஜா, அங்கு இருந்த ஆடம்பரமான இரண்டு ஆசனங்கள் ஒன்றில் அமர்ந்தார். மற்றொரு ஆடம்பரமான ஆசனத்தில் அந்த இளைஞன் அமர்ந்தான். பதின் பருவ சிறுவன் ஒருவன், கண்ணம்மா உட்கார சிறிய நாற்காலியைக் கொண்டு வந்து வைத்தான். கண்ணம்மா உட்கார்ந்தாள். ‘தம்பிக்கு ஒரு நாற்காலி’ என்றாள். சிறுவன் உள்ளே போய் மற்றொரு சிறிய நாற்காலியை எடுத்து வந்தான். அருண் அதில் அமர்ந்தான்.

‘பானங்கள் ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா?’ ராஜா கேட்டார். ‘ரெண்டு பேரும் கல்யாண விருந்து சாப்பிட்டோம் நீங்க விஷயத்துக்கு வாங்க’ என்றாள் கண்ணம்மா.

ராஜா பேசினார் : ‘இந்த இளைஞர் பாபுராஜ். நம்ம ஏரியா பிரமுகர் அசோக்கின் மகன்.. அது என்ன ன்னா.. வக்கீல் பொண்ணு வக்கீல் ஆகலாம். டாக்டர் பொண்ணு டாக்டர் ஆகலாம் ஆனா, தாதா பொண்ணு தாதா ஆவது பெண் தாதா ங்கற கான்செப்ட் ஏத்துக்க முடியல ம்மா’

கண்ணம்மா புன்னகை பூத்தாள்.

‘ஜீரணிக்க முடியலையா அதுக்கு என்ன செய்யணும். நான் எல்லாவற்றையும் விட்டு விடணும் சொல்ல கூப்பிட்டியா? ‘

‘அது…. ஒங்க அப்பா வீர முத்து அண்ணன் போனப்புறம் கட்டப் பஞ்சாயத்து உன் கைக்கு வரும் நீ இதுல இறங்குவ ன்னு யாரும் எதிர்பார்க்கலை. உன் அத்தான் மாணிக்கம், இதெல்லாம் விட்டு வந்தா சேர்ந்து வாழலாம் ன்னு சொன்னப்ப நீ கேம்ல இருந்து போயிடுவேன்னு நெனச்சோம்.. ‘

‘சும்மா இழுக்காமல் நேரா சொல்லு அண்ணே ‘

‘அதான் ம்மா நீ இந்த பாபுராஜ் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்ப குத்துவிளக்கு ஆகிடணும் உன் கிளையன்ட்ஸ் எங்கேயும் போகாது . இவரு பார்த்துப்பாரு.. ஒங்க மம்மி மாதிரி நீ குடும்ப வாழ்க்கையில ஹவுஸ் ஒய்பா செட்டில் ஆயிடலாம். இந்த….

‘இந்த திட்டத்தை நான் ஏத்துக்கல்லைன்னா என்ன ஆகும்?’

‘வீர முத்துவின் மகள், பெண் ங்கறதால இவ்ளோ நாள் ஒன்ன விட்டுப் பிடிச்சோம். உன் அத்தை பிள்ளை உன்னை வேண்டாம் ன்னு சொல்லிட்டான் இல்ல.. அதுவும் நல்லதுதான் அவனுக்கும் உனக்கும் வயசு வித்தியாசம் அதிகம் ஆனா இவரு கட்டான இளைஞரு.. இதுக்கு ஒத்துக்க இந்த திட்டத்தை ஏத்துக்கல்லைன்னா மோசமான விளைவு உனக்கு தான்…’

கண்ணம்மா சிரித்தாள்..

‘என்ன என்னை பயமுறுத்திப் பார்க்கறியா? நீ பழைய சினிமா பாட்டு எல்லாம் விரும்பி கேட்கற ஆளுன்னு நைனா சொல்லி இருக்கு பட்டினத்தில் பூதம் படத்தில் கண்ணதாசன் ஐயா வோட அந்த சிவகாமியின் மகனிடம் ன்னு ஒரு பாட்டு அதுல காலம் மாறினால் காதலும் மாறுமோ மாறாது மாறாது இறைவன் ஆணை ன்னு ஒரு வரி. மாணிக்கம் அத்தானை நான் டீன் ஏஜ் பருவத்திலேயிருந்து மனசுல வரிச்சிட்டேன், மனசுல வெச்சிருக்கேன். காலம் மாறினா சூழ்நிலை மாறினா காதல் மாறாது. அத்தான் என்னை விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் கட்டிக் கொண்டு வாழ்ந்தாலும் அவர் தான் என் மனசுல இருப்பாரு.. எங்க நைனாவோட கஷ்ட காலத்தில் நீ கூட இருந்த ஆளுங்கறதுனால உன்ன மதிச்சு பேச வந்தேன்.

இன்னொரு தடவை எனக்கு மாப்பிள்ளை காட்றது அச்சம் ஏற்படுத்தற வேலையை எல்லாம் வெச்சுக்காதே ‘

பேசி விட்டு கண்ணம்மா எழுந்து நின்றாள். வாப்பா அருண் என்றாள். திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென வேகமாக வெளியேறினாள்.அருண் அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடி வந்தான்.

தென்றல் மருத்துவமனையில் ஓர் அறையில் கட்டிலில் கண்ணம்மா படுத்திருந்தாள். சுயநினைவு வந்து கண்களைத் திறந்து பார்த்த போது மருத்துவமனை அறையில் இருப்பதை உணர்ந்தாள். வெளியே தெரிந்த சூரிய ஒளியைப் பார்த்து காலை நேரம் என்பதை அறிந்தாள். பேராசிரியர் ஜெகன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். அவரைப் பார்த்து முகம் மலர்ந்த கண்ணம்மா ‘ அத்தான் நீ தான் என்னை இங்க சேர்த்தியா? எனக்கு என்ன ஆச்சு?’

‘மேம், மாணிக்கம் உங்க அத்தானா? நான் அவரை மாதிரி உருவம் கொண்ட ஜெகன், கல்லூரி பேராசிரியர். ஒங்க அத்தானுக்கு தகவல் அனுப்பறேன். நேத்து ராத்திரி, மல்லிகை கல்யாண மண்டபத்திற்கு போற மைய சாலையில் ஒங்க காருக்கு ஆக்சிடன்ட்.. அந்த பக்கம் பைக்ல வந்த நான் தான் ஆம்புலன்ஸ் வரவழைத்து ஒங்க ரெண்டு பேரையும் இங்க அட்மிட் பண்ணேன் ‘ என்றார் ஜெகன்.’ விபத்தை ஏற்படுத்தி இருக்காங்க ‘ என்று மனதிற்குள் எண்ணமிட்டாள் கண்ணம்மா. ‘ ஐயா அந்த தம்பி.’ ‘ அவர் லாவகமாக வண்டி ஓட்டினதால ரெண்டு பேரும் லேசான காயங்கள் உடன் பிழைச்சுட்டீங்க. அவர் இன்னொரு வார்டுல இருக்காரு…இது கார்ல இருந்த ஒங்க கைப்பை’ என்றார். அவருடைய கைபேசி ஒலித்தது. வெளியே சென்றார். சற்று நேரத்தில், மாணிக்கம் அறைக்குள் நுழைந்தார். கண்ணம்மா எழுந்து உட்கார்ந்தாள். மாணிக்கம் பேசினார் ‘ அவங்க வேலைய காட்டிட்டாங்க இதுக்கு தான் மாமா போன வழி உனக்கு வேண்டாம் ன்னு சொன்னேன். அருணை பார்த்து விட்டு வரேன். காலம் மாறினால் காதலும் மாறுமோ ன்னு பேசினியாமே என் மேல் அவ்வளவு காதல் இருந்தா இந்த பாதை வேண்டாம் ன்னு நான் சொன்னா ஏன் கேட்கல’

பேராசிரியர் ஜெகன், மாணிக்கம் பின்னால் வந்து நின்றார்.’இனிமே நீ சொல்றபடி எல்லாம் கேட்கறேன் அத்தான் என்னை ஏத்துப்பியா ‘ என்ற கண்ணம்மா, கஷ்டப்பட்டு எழுந்து நின்று மாணிக்கத்தை ஆரத் தழுவிக் கொண்டாள்.’ சரி ஏத்துக்கறேன்.. விடு என்ன இது புரபசர் இருக்காரு ‘என்றார் மாணிக்கம்.’ நான் ஏன் இங்க நிக்கணும் வரேன் வாழ்த்துக்கள்’ என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் பேராசிரியர் ஜெகன்.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *