காலம் மாறவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 7,302 
 

ஏற்கெனவே பஞ்சடைந்திருந்த கண்கள் பசியிலும், தாகத்திலும் இன்னும் மங்கலானது போலிருந்தன. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அம்மா சுசீலா!” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள் முதியவள்.

உரக்க அழைத்தாலே வராத மருமகள் இப்போது மட்டும் காதில் வாங்கிக்கொள்வாளா, என்ன!

“குடிக்க கொஞ்சம்..,” அதற்குமேல் பேச முடியாது இருமல் அவளை அலைக்கழைத்தது.

தனது பெரிய உடலைத் தூக்கமுடியாது தூக்கிக்கொண்டு வந்த சுசீலாவுக்கு ஏக எரிச்சல். “அதான் கொஞ்சம் பேசினலே இருமுதில்ல? வாயை மூடிக்கிட்டு இருக்கிறது!”

“என்னோட..!” மீண்டும் இருமல்.

“என்ன?” உறுமல்.

`என்னோட பென்சனுக்காக என்னை ஒன் வீட்டிலே வெச்சுக்கிட்டு இருக்காம, மகள் வீட்டுக்கு அனுப்பிடேன்!’ என்று கேட்கத்தான் நினைத்தாள் முதியவள்.

ஆனால் பயத்தில் சொல்லவந்தது மறந்தே போயிற்று.

மகள் வீடுதான் சிறியது. மனமோ விசாலமானது. அங்கு போனால், சாப்பாட்டுக்கும், குடிநீருக்கும் காசு கேட்கமாட்டாள். பணம் கொடுத்தாலும் வாங்கமாட்டாள். `நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்போ, எங்கிட்ட காசு வாங்கிட்டா சோறு போட்டீங்க?’ என்று முகத்தைச் சுருக்கி, செல்லமாய் முறைப்பாள். வாய் திறந்து தாய் எதுவும் கேட்பதற்குமுன், பக்திப் புத்தகங்கள் வாங்கி, அதை பேரப்பிள்ளைகளை விட்டுப் படிக்கவும் வைப்பாள்.

ஆனால், அவளை நெருங்கவிடாது செய்து, `நடமாட முடியாத மாமியாரை வைத்துக் காப்பாற்றுகிறேன்!’ என்று தன் பெருந்தன்மையை நான்குபேரிடம் மருமகள் பெருமை பேச, தான் அங்குதான் அல்லல்பட்டாக வேண்டும் என்பது முதியவளுக்குப் புரியவில்லை.

35 ஆண்டுகளுக்குப்பின்

“அம்மா எங்கே, சாரு?”

அலட்சியமாக வந்தது பதில். “அவங்க ரூமில ஒக்காந்து, ஏதாவது குருட்டு யோசனை செய்துக்கிட்டிருப்பாங்க!”

“டி.விதான் ஓடுதில்ல? கூப்பிடேன். பாத்துட்டுப் போகட்டும், பாவம்!”

“பாவமென்ன பாவம்! பிள்ளைங்க ஆசையா கார்ட்டூன் பாக்கறாங்க. இவங்க விடுவாங்களா! தமிழிலே இருக்கிற கண்ராவி தொடரையெல்லாம் ஒண்ணு விடாம பாத்தாகணும்!”

“அவங்களுக்கு அதானே புரியுது!”

“இப்ப வர்றதெல்லாம் சின்னப்பிள்ளைங்க பாக்கறமாதிரியா இருக்கு? பெரியவங்க – சின்னவங்க மரியாதை இல்லாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறாங்க, வாயில வந்தபடி கெட்ட வார்த்தை பேசறாங்க. அதையெல்லாம் பாத்து தானும் கத்துக்கிட்டு, அத்தையும் இதுங்களோட சண்டைக்கு நிப்பாங்க, `எனக்குப் பிடிச்சதைப் போடுங்கடா’ன்னு!”

மனைவியின் புகாரைக் கேட்டதும், மகனுக்கும் தாயின்மேல் ஆத்திரம் வந்தது. “இவங்களோட பெரிய தொல்லையாப் போச்சு. வயசானா, ராமாயணம், மகாபாரதம்னு எதையாவது படிச்சு, போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கணும். அம்மாவுக்கோ புத்தகங்களைக் கையால் தொடவே பிடிக்கல. அட, அவங்ககிட்ட காசு பணமா இல்ல? சொந்தத்திலே ஒரு டி.வி வாங்கி, ரூமில வெச்சுக்கறதுக்கு என்ன!”

சாரு உதட்டைச் சுழித்தாள். “ஒங்கம்மாதானே? கேக்காம இருப்பாங்களா? நான்தான் கூடவே கூடாதுன்னுட்டேன்”.

“ஏன் சாரு?”
“புரியாம பேசறீங்களே! இந்தப் பசங்க பாட்டி ரூமூக்குப்போய் கண்டதையும் பாத்து, இளிச்சுக்கிட்டு நிக்கறதுக்கா? இப்பவே வீட்டுப்பாடம் ஒழுங்காப் பண்ணறதில்லே!”

கணவன் அடங்கிப்போனான்.

“அதான் நான் கண்டிப்பா சொல்லிட்டேன், `பேசாம ஒங்க ரூமிலேயே ஓய்வா இருங்கத்தை. சாப்பாட்டையும் அங்கேயே அனுப்பறேன்’னு!”

“அதுவும் சரிதான்!” என்று ஒத்துப்பாடினான் சுசீலாவின் மகன்.

தனது அ(சி)றையில் சுவற்றையே வெறித்தபடி அமர்ந்திருந்த பாட்டிக்கு, “அம்மா சுசீலா! குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்!” என்று எங்கிருந்தோ மாமியாரின் குரல் கேட்டது.

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *