காலத்துயர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 4,885 
 
 

காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது… உலகின் ஏதோ ஒரு மூலையில்… எங்கோ ஒரு நாட்டில்… தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை.

ஒரு காகத்தின் கரைதல்… சேவலின் கூவல்… குருவிகளின் சங்கீத ஓசை… குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு…

வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட… மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு…

இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்று நாட்டுச் சூழலில் தனக்குத் தெரிந்த ஆங்கில பாசையில் பேசி… கொடுப்பதை உண்டு… குடித்து… உறங்கி… கண்ணீர் வடித்து காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

வாழ்க்கையைப் பல கோணங்களினூடாக பார்த்த அவனுக்கு இது ஒன்றும் புதிய விடயமில்லைத்தான் ஆனாலும் இதுவரை நிகழ்ந்த எல்லாத் துன்ப துயரங்களுக்கும் அருகிலிருந்து பங்கெடுத்த … தோழ் கொடுத்த அவன் குடும்பம் இப்போது அவனுடன் இல்லை என்பதும் அவன் எந்தக் குடும்பத்துக்காக இத்தனை காலம் படாத துன்பமெல்லாம் பட்டானோ அவர்களை ஆளாக்க முடியவில்லையே என்ற கவலையும் அவன் மனதைக் கனமூட்டிக்கொண்டிருக்க இதய சுமை தாங்காது பாரம் தலைக்கேறியது.

***

இடம்பெயர்ந்து சிறு குடிசையில் வசித்த போதும் விறகு வெட்டி குடும்பத்தை பொன்போல் காத்து வந்தார் கணேஸ். மூத்த மகன் நன்றாகப் படித்த போதும் இளையவன் சீலனும் மகள் செல்லாவும் நன்றாகப் படிக்கவேண்டுமென்று படாத பாடெல்லாம் பட்டு உழைத்து வந்தார்.

காலச்சுழற்சியில் மகள் செல்லாவும் போராட்டத்தில் இணைந்துவிட ஆடிப்போன கணேஸ் மூத்தமகன் சுயனை உடனடியாக வௌிநாடொன்றுக்கு அனுப்பும் விருப்பம் கொண்டவராய்… உறவுகளிடம் உதவி கேட்டு கூடவே தான் சேமித்த பணத்தையும் முதலிட்டு கொழும்புக்கு அனுப்பினார்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. இன்று போகலாம் நாளை போகலாம் என ஏஜன்ஜி சொல்லி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்…

இரவு பத்தைத் தாண்டியிருந்தது… தாய் தொலைபேசி அழைப்பில் இருப்பதாக வந்த செய்தி கேட்டு ஓடியவன் திகைப்புடன்

‘அம்மா… என்ன இந்த நேரத்திலை’

என்றான். மகனின் குரலைக் கேட்டதும் மறுமுனையில் தாய் விமலா.

‘ஐயோ மகனே…’ அழத்தொடங்கினாள்.

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விக்கிப்போய் வாயடைத்து நின்றான்.

‘அப்பா விறகு வெட்ட போன இடத்தில…’

‘இடத்தில… என்னம்மா சொல்லு…’

‘மிதிவெடிலை கால் ஒண்டு…’

‘கடவுளே……………………’

கண்கள் இருண்டு அவனுக்குள் ஏதோவெல்லாம் செய்யத் தொடங்கியது. இனம் புரியாத பீதி விரட்டியது.

‘அம்மா அப்ப உடன நான் வாறன்…’

‘இல்லையப்பன் நீ வரவேண்டாம் … இனி எங்கடை வாழ்க்கை உன்ரை கையிலைதான்….’ அவளால் எதுவுமே அதற்கு மேல் பேச முடியவில்லை.

அவனுக்கு இரவு முழுவதும் நரகமாக விளங்கியது. அதிகாலையில் இருளுடன் இருளாக ஏஜன்ஜி வந்தான். எல்லோரும் அவனுடன் போகத் தொடங்கினர். அத்தனையும் இளைஞர்கள்…
‘களவாக இத்தாலி போக கப்பல்தான் சிறந்தவழி’ என்ற ஏஜன்ஜியின் பேச்சினை நம்பி வௌிக்கிட்டு விட்டனர்.

கப்பல் தள்ளாடித் தள்ளாடி பயணத்தைத் தொடர்ந்தது. ஒருநாள்… இரண்டாம் நாள்… இப்படி இடைநடுவில் பிடிபட்டு அந்நிய நாட்டுச் சிறையில் இப்படி தன்னுடைய வாழ்வு அடைபட்டு போகுமென்று அவன் எப்படி நினைத்திருப்பான்.

***

இப்போது அவனுடைய கனவில் அடிக்கடி அம்மா வந்து போகிறாள். அப்பா ஊன்று கோலுடன் நடக்க… அம்மா விறகு வெட்டி குடும்பத்தைக் கொண்டு நடத்துகிறாள். தம்பி சீலன் படிப்பை இடைநடுவில் விட்டுவிட்டு அவளுடைய வலது கையாக…

தங்கை செல்லாவும் எங்கே… எப்படி இருக்கிறாளோ… நீளிருள் பொழுதுகளில் கூட இதுவே சிந்தனையாகச் சோர்ந்திருப்பான்.

காலம் உருண்டோடியது தன்மீதே அவனுக்கு வெறுப்பாக… எல்லாவற்றையும் மறக்க படாத பாடெல்லாம் பட்டுக்கொண்டிருந்தான்…தனக்கு பயித்தியம் பிடித்து விட்டதோ என்றுகூட சிலவேளையில் எண்ணுவான்…

அன்றும் வழமைபோல விடிந்தது. நீண்ட நாட்களின் பின்னர் சிறை அதிகாரியின் வாகனக் கண்ணாடியில் முகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது அவனுக்கு… அவனால் நம்பவே முடியவில்லை கண்களை வெட்டி மீண்டும் பார்த்தான்…

பெரிய மீசை… நீண்ட தாடி… சோர்ந்து போன உடம்புடன்… நீண்ட முடியில் அழுக்குப்படிந்து பிசுபிசுத்துப்போய்… சிறுவயதில் அவன் சாப்பிட மறுக்கும் போது அம்மா பயமுறுத்தும் ‘உம்மாண்டி’ கண்ணாடிக்குள் இருந்து பயமுறுத்த மறுபடியும் அவனுக்குள் அம்மாவின் நினைவு எட்டிப்பார்த்தது.

– ஆகஸ்ட் 04, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *