காலங்கள் ஓடிய பின்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 5,477 
 

பேருந்தை விட்டு இறங்கி பார்க்கிறேன், ஊர் அப்படியேதான் இருக்கிறது.அதே ஆலமரம், சற்று தள்ளி ஆரம்ப பள்ளிக்கூடம் நடந்துகொண்டிருப்பதற்கு சாட்சியாய் குழந்தைகள் சத்தம். வாத்தியார் சாமிநாதன் இருக்கிறாரா என்று தெரியவில்லை, நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போது இருந்தார்.அதற்கு பிறகு வழியில் பார்த்து வணக்கம் வைப்பேன், சிரித்துக்கொண்டே வணக்கம் வைப்பார். அதற்கு பின் வெளியூரில் தங்கி படிப்பு. விடுமுறையில் இந்த ஊர் வாசம். அப்படியே டிகிரி வரை முடித்து வந்திருக்கிறேன் மெல்ல நடக்க தொடங்கினேன், கடை வீதிகளில் அதே சத்தங்கள். தெரிந்த முகங்கள், ஆனால் அவரவர்கள் தங்களுடைய வேலைகளை பார்த்து கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

சற்று தொலைவில் வீடு தெரிகிறது. மனசு பர பரக்கிறது. வீடு என்பது நாம் ஒண்டிக்கொள்ளும் கூடு என்பது மட்டுமல்ல, நம் உண்ர்வுகளோடு ஒட்டி உறவாடும் ஒரு வாயில்லா ஜீவன். அதற்கு மட்டும் வாயிருந்தால் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் காரியங்களை உலகத்துக்கு சொல்லி நம்மை சந்தி சிரிக்க வைத்து விடும். நினைத்து பார்த்து சிரித்து கொள்கிறேன்.

எத்தனை திருட்டுத்தனங்கள், தவறான செயல்களை செய்திருக்கிறேன்,அந்த பருவங்களில்.வீடு சகித்துக்கொண்டுதானே இருந்திருக்கிறது.

இப்பொழுது பட்டப்படிப்பு முடித்து விட்டேன். அடுத்து என்ன செய்வது? அப்பா, இனி புத்தி சொல்லியே போரடித்து விடுவார், நினைத்துக்கொண்டே வாசலில் செருப்பை கழட்டி விட்டு விட்டு உள்ளே நுழைகிறேன். அப்பா நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். வாடா வா..அதே அழைப்பு. நான் கையில் கொண்டு வந்த கைப்பைகளை வைத்து விட்டு, பின்புறமாக சென்று அங்கிருந்த தொட்டியில் கை கால்களை கழுவி விட்டு அப்பாவிடம் வருகிறேன்.

நல்லா எக்ஸாம் எல்லாம் எழுதியிருக்கியா? ம்..என்று தலையாட்டினேன்.அடுத்து என்ன செய்யலாமுன்னு நினைக்கிறே? தெரியலை பாக்கலாம், ரிசல்ட் வரட்டும். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடி ஒரு ஐடியா வச்சிருந்தா உனக்கு வசதியாயிருக்கும். கவர்ன்ட்மெண்ட் எக்ஸாம் எழுதறியா? அப்பாவின் தொண தொணப்பு எரிச்சலாக இருந்தது.

அவரை தவிர்க்க விரும்பி உள் புறம் சென்று சமையல் அறைக்குள் நுழைகிறேன். அம்மா உட்கார்ந்து எதையோ நறுக்கி கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்டு திரும்பியவள், என்னை பார்த்ததும் டேய் சபரி எப்ப வந்தே?

முகத்தில் ஒரு புன்னகையுடன் கேட்டாள். இப்பத்தாமா வந்தேன். முதல்ல குடிக்கறதுக்கு ஒரு காப்பி கொடுக்கறியா? வீட்டுக்குள்ள வந்தவுடனே அப்பா புடுச்சிட்டாரு. வந்திருக்கானே, முதல்ல ஏதாவது சாப்பிட்டு வரட்டும் அப்படீங்கற நினைப்பு இருக்கா? கொஞ்சம் சத்தமாக சொன்னவன்,அப்படியே ஆயாசமாய் கீழேயே உட்கார்ந்தேன். அம்மா மெல்ல எழுந்தாள். எழும்போதே சிரமப்பட்டு எழுவது தெரிந்தது. ஏம்மா, எழறதுக்கு இவளோ கஷ்டப்படறே?

இப்பவெல்லாம் உட்கார்ந்தா எந்திருக்க முடியறதில்லை, முழங்கால் வலி வேற உயிரை எடுக்குது. சொல்லிக்கொண்டே அடுப்பின் பக்கம் சென்றாள்.

அம்மா கொடுத்த்தை சாப்பிட்டு விட்டு வெளி அறைக்கு வந்தவன், அப்பா அதே நிலையில் உட்கார்ந்திருந்த்தை சட்டை செய்யாமல், வேகமாக வெளியில் வந்து கழட்டி விட்ட செருப்பை மாட்டிக்கொண்டு வேகமாக நண்பர்களை பார்க்க கிளம்புகிறேன்…..

சட்டென கனவு கலைந்து எழுந்து உட்காருகிறேன். இதென்ன கனவு?

எனது வீடும் ஊரும், அப்பா, அம்மா, அனைவரும் வந்திருக்கிறார்கள். நாற்பது வருடங்கள் ஆயிற்றா அவர்கள் இறந்து? அதற்கப்புறம் அந்த ஊரை விட்டு வந்து எத்தனை வருடங்கள் ஆயிற்று? திடீரென்று ஊரும், இவர்களும் கனவில வந்திருக்கிறார்கள். நடு இரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.

அப்பா உன்னிடம் இன்னும் கொஞ்சம் தன்மையாய் பேசி இருக்கலாம் !

அம்மா உன் மூட்டு வலிக்கு டாக்டரை வைத்து வைத்தியம் பார்த்திருக்கலாம் எனது ஊருக்காவது என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள ஏதாவது செய்திருக்கலாம்? எதுவும் செய்யாமல், நானும் எனது சுய நலம், இவைகளை மட்டும் கருத்தில் கொண்டு விட்டு இப்பொழுது முதியோர் இல்லத்தில் நான் மட்டும் உட்கார்ந்து கொண்டு நடு இரவில் உங்களை நினைக்கும்படி செய்து விட்டீர்களே !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *