காய்ச்சல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 1,734 
 
 

ஏழு வயசுப் பையனுக்கு திடீரென தலைவலியும் குளிரும் என்றால் எந்த அப்பாவுக்குத்தான் நிம்மதியாக இருக்கும்? அதுவோ ஒரு சாதாரண குக் கிராமம். நாட்டு வைத்தியர் கூடக் கிடையாது. நாளை காலை பத்து மணிக்குத்தான் டாக்டர் வந்து போவார். அதுவும் ஒரு மைலுக்கு அப்பால் உள்ள வேறொரு கிராமத்திற்கு.

அவர் என்னதான் செய்வார், நிலை கொள்ளாமல் தவித்தார்.

‘ஏன்தான் இப்படிப் பண்றியகளோ? குழந்தைன்னா நாலும் இருக்கத்தான் செய்யும். ஒரு வேப்பங்கொட்டையை உறைச்சுப் பத்துப் போட்டு, கஞ்சி குடிச்சிட்டுத் தூங்கினா சரியாப் போவுது. நல்லாத்தான் பாடு படுத்தறீக, அவன் கூடத் தேவலை போல இருக்கே.”

முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள் மனைவி.

குறுக்கும் நெடுக்கும் அலைவதை விட்டு நேராக சுவாமி படத்தண்டை போய் – விபூதியை எடுத்து வந்து “சுவாமிநாதா! ஜுரஹரேசா!! குழந்தைக்கு உடம்பு வியாதி வெக்கயில்லாம காப்பாத்துடாப்பா” என்று கூறி விபூதியை இட்டு, கஞ்சி கொடுத்துத் தூங்கப் பண்ணினார்.

சற்றுக் கண்ணயர்ந்ததும் தானும் ஒரு வாய் சாப்பிட்டு அவன் பக்கத்திலேயேப் படுத்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்தார். தலையைக் கோதிவிட்டார். மூடி மூடிப் போர்த்தினார். பாவம். பாசம் பொல்லாததல்லவா..!

“போதுமே கரிசனம். வாங்க இந்தப் பக்கம் நீங்க படுத்தற பாட்டுலே அவன் முளிச்சிண்டுடுவான் போலிருக்கே. நல்லாத்தான் இருக்கு.”

இரவு பூரா அவருக்குத் தூக்கமா வரும்? ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. பாவம். அவர் ஒரு வாயில்லாப் பூச்சி.

எப்படா விடியும் என்று காத்திருந்தது போல் – 10 மணி ஆஸ்பத்திரிக்கு 8 மணிக்கே போய்விட்டார். நல்ல காலம். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவர் பள்ளிக்கூடம் லீவு. டாக்டரும் சீக்கரம் வந்து போய்விடுவார்.

“ஐயனாரப்பா, மகமாயித் தாயி- குழந்தைக்கு ஜுரம் நல்லா ஆயிடணுமம்மா. ரொம்ப சோதிக்காதீங்கப்பா, உங்களைத்தான் நம்பியிருக்கேன்.” முணுமுணுத்துக்கொண்டே பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

டாக்டரும் அறிமுகமானவர்தான். குறுக்கு நெடுக்கே பார்த்தால் கும்பிடு பரிமாறிக்கொள்ளும் பசிச்சயம். அவர் ஆசிரியர் என்பதும் தெரியும். அவர் அப்பாவித் தனத்தினால், அவரிடத்தில் ஒரு அனுதாபம். தொந்தரவு கொடுக்காத ஜன்மம். ஆகவே அது அபிமானமாகவே மாறிவிட்டது.

“என்னய்யா யோசனை பலம் போலிருக்கு?”

குரல் கேட்டு விழித்தெழுந்தவர் போல் திடுக்கிட்டார்.

“நமஸ்காரங்க… ஒன்றுமில்லே வீட்டிலே குழந்தைக்கு நேத்தி ராத்திரிலேருந்து…” விஷயத்தை உளரிக் கொட்டி ஒருவாறு விளக்கினார்.

கவலைப் படாம போங்க. வீட்டுக்குப் போற வழியிலே நானே வரேன். வந்து மருந்து தரேன்.”

“நமஸ்காரங்க…”

“நமஸ்காரம்…”

வாத்யாருக்கு இப்போதே டாக்டர் வந்துவிட வேண்டுமென்ற துடிப்பு.

இவரோடு கிளம்பிவிட்டால் – வந்து காத்திருக்கும் மற்றவர்களை எப்போது கவனிப்பது?

அர்த்தமில்லாம் அந்த ஊரைச் சுற்றி வளைத்துக்கொண்டு நடக்கலானார். ஏதோ ஞாபகம் வந்தவர் போல் மறுபடி ஊருக்குள் நடந்தார்.

“கடக்காரய்யா – அருமையான திராட்சையா 10 பைசாவுக்குக் கொடுங்க. நம்ம பயலுக்குக் காச்சல்.”

அவரும் இவர் பேரில் அனுதாபம் கொண்டவர் போலும். “ வாங்க தரச் சொல்றேன்..தம்பி, அய்யாவுக்கு திராட்சை குடு.”

பொட்டலத்தை வாங்கிக் கொண்டார். “பாருங்க அந்தக் காலத்துல ஓரணா தந்தா ஒரு பலம் கிடைக்கும். இப்ப பாருங்க காசுதான் பெரிசு. !” செயற்கரிய காரியம் ஒன்று செய்த பெருமிதம். ரவி இதைப் பார்த்து எப்படி மகிழ்வான்.! நடை வேகமாகவே போயிற்று.

நல்ல வேளை. சமயத்தில் ஞாபகம் வந்ததே. ஊருக்குப் போன பிறகு ஞாபகம் வந்தா, மறுபடியுமில்லே வரணும். ஊரா அது, குப்பம். உப்பு தட்டினா கூட வாங்க முடியாது. இதுக்கு பள்ளிக்கூடம் வேறே கேடு.

“எட்டு மணிலேர்ந்து தேடறேன். எங்கே போனீங்க? நல்லாத்தான் இருக்கு. உள்ளே காப்பியிருக்கு சாப்பிடுங்க.” இடி இடித்தது.

அப்போதான் ஞாபகம் வந்தது. காபி கூட சாப்பிடவில்லை யென்று பாவம், அவர் கவலை அவருக்கு.. அரிசி வாங்கியாகணும். கடன் கொடுக்கற கடைக்காரன் விலையேறிப் போச்சூனு அரிசி வாங்கறதை நிறுத்திட்டான்.

காசு கொடுத்து வாங்க வாரா வாரம் பணத்துக்கு அவதி. இந்த லட்சணத்துலே டாக்டர் செலவு வேறே. கவலை! கவலை!! ஓயாத கவலை!!

குழந்தைக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

“அப்பா”

“ஏண்டா கண்ணு. என்னப்பா செய்யறது?

ஏதோ சொல்ல நினைத்து … ஆனால் சொல்லவில்லை.

“மறுபடியும இங்கே வந்து உட்காந்துட்டீங்களா?” மேலும் ஏதோ ஆரம்பிப்பதற்குள்………..

வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது.

“டாக்டர் சார் வாங்க” என்று இங்கிருந்தே கூவிக் கொண்டு ஓட………

வந்தது இன்னொரு ஆசிரியர்.! அதாவது இவருக்கு ஹெட்மாஸ்டர்.

சும்மா எப்போதாவது வருவார். கவலையற்ற மனிதர். அதே ஊர்க்காரர். வீடு – நிலமெல்லாம் உண்டு. உத்யோகம் ஒரு பொழுது போக்கு. இவர் எண்ணப்படி ‘அவருக்கென்ன குடுத்துவெச்ச மனுசன்! சுகவாசி!!

ஆனால் கேட்டுப் பாருங்கள்.

“அட நீ ரொண்ணு. சுவவாசியாவது. நான் லோலு படறது எனக்குன்னா தெரியும். ஒரு முன்னூறு வேணும், பெறட்ட முடியலை. கெடச்சா ஒரு அருமையான நாத்தங்கால் வறது. ரெண்டாயிரத்துக்கு முடிச்சிடுவேன்.” என்பார். அவர் பேச்செல்லாம் இந்த மாதிரிதான்.

“சாமிநாதா – பழய பரமசிவம், டாக்டர் வர நேரத்துலே இவரும் வந்திருக்கார். விஷயத்தைச் சொல்லிப் பணம் கேட்டா இல்லேனு சொல்லாம இவர் மனசுலே புகுந்து வாங்கிக் கொடப்பா…” என வேண்டிக் கொண்டார்.

‘கடச்சுட்டா 1 வாரம் அரிசி – டாக்டருக்கு 2 ருவா போக கய்யிலேயே பணம் இருக்கும் கவலையே இல்லை..’

அய்யோ பாவம்! திருப்பித் தருவதை எண்ணிப் பார்க்கவே யில்லை.  ‘ஈசுவரா! டாக்டர் சீக்கிரம் வரணுமே!’

தைவம் இவர் பக்கம்தான் போலும். டாக்டரே சைகிளில் வந்து இறங்கினார்.

உள்ளே குழந்தை இருமும் சத்தம் கேட்டது.

“என்ன சார், சொல்லவேயில்லையே, டாக்டர் வரார். யாருக்கு என்ன?” எல்லோரும் உள்ளே போனார்கள்.

டாக்டர் பரிசோதித்தார். குழந்தை பயந்தான்.

“பயப்படாதேப்பா. ஒண்ணும் செய்ய மாட்டேன். என்ன செய்யறது? ‘குட் பாய்..’ !”

“குளிர்றது – தலையெ வலிக்கறது காய்ச்சல்…… சாதம் புடிக்கலை………”

காத்திருந்தால் இன்னும் வர்ணிப்பான் போல் தோன்றியது. எல்லோரும் சிரிக்கவே… நிறுத்திவிட்டுக் குனிந்து கொண்டான். கண்களில் பீதி. வெட்கம் வேறு.

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. மாத்திரை தரேன், தின்னுட்டு சமத்தாப் படுத்துக்கா, சரியாயிடும், ஊ…ம்..”

“ரவீ… சமத்தாப் படுத்துக்கோ. வீட்டுக்குப் போயி ராஜுவை அனுப்பறேன். ரெண்டு பேரும் பாடப் புஸ்தகம் பாருங்கோ. ஊம் அனுப்பட்டுமா..?”

சொல்லிவிட்டு வெளியே வந்தார் ஹெட்மாஸ்டர்.

டாக்டர் போயாயிற்று.

ஹெட்மாஸ்டர் சைகிளை எடுத்தபடியே “வரட்டுமா…” என்று கேட்டுவிட்டுக் கிளம்பினார். இவரும் கூடவே சற்று நடந்து விஷயத்தை ஆரம்பித்தார். சுற்றி வளைத்து சொல்லி முடிப்பதற்குள்…

காரியம் பழம்தான். 15 ருபா அப்போதே கிடைத்த மாதிரி. பரம சந்தோஷம்.

“நீங்க போங்கோ, ராஜுகிட்டே அனுப்பறேன்.”

“குழந்தெ கீழே எங்கயாவது போட்டுட்டா… அதனா…லே..”

“சரி வாங்களேன்.”

இருவரும் நடந்தார்கள்.

தகவல் தெரிந்து கொண்ட ராஜு பாடப் புத்தகத்துடன் குதி போட்டுக் கொண்டு தோழன் வீட்டுக்கு ஓடினான்.

பணத்துடன் கூட ஒரு தெம்பான நடையுடன் வீட்டுக்கு வந்தார் ஆசிரியர்.

‘பையைத் தூக்கிக் கொண்டு, மறுபடியும் அடுத்த ஊருக்குப் போகணும். இன்னிக்கு விட்டா அடுத்த வாரம் தானே!’

உள்ளே குழந்தைகளின் பேச்சு, இவரை வாசல் நடையிலேயே நிறுத்திவிட்டது.

“ ஏண்டா ரவி – உனக்கு எப்போலேந்துடா காச்சல்?”

“கிட்டே வாயேன்.” (குசு குசுவென்று பேசுகிறார்கள்). வாத்யார் காதில் விழவில்லை.

“நிஜம்மாவாடா!”

“ஆமாம்டான்னா, நம்ப மாட்டேங்கறயே!”

“ஏண்டா அப்படிச் சொன்னே?”

“அன்னிக்கு ஒனக்கு ஜொரம் வந்ததோல்லியோ…?”

“ஆமாம்… அது நிஜம்மாவே வந்ததுடா, டாக்டர் வந்து ஊசி கூடப் போட்டார்டா!”

“…அப்ப உனக்கு நெரய்யா ஆரஞ்சுப் பழமெல்லாம் குடுத்தாளே…”

“நான்கூட உனக்குத் தந்தேனோல்லியோ”

“அதனாலேதான் நானும் ஜுரம்னுட்டு படுத்துண்டுட்டேன்.”

“ஆனா எங்கப்பா பாரு – துளியூண்டு திராட்சைப் பழம்தான் வாங்கிண்டு வந்தா. கேக்கலாம்னு பாத்தேன். அம்மா திட்டுவான்னு சும்மா இருந்துட்டேன்.”

“நிஜம் காய்ச்சல்னாதான் ஆரஞ்சு தருவா. உனக்குத்தான் பொய்க் காய்ச்சலாச்சே. டாக்டர் மருந்து தந்தா என்னடா பண்ணுவே?”

“ஜொரமில்லேன்னா மருந்து திங்கப்படாதுன்னு தெரியும். நான் என்ன தெரியுமா பண்ணினேன். மருந்தே பைக்குள்ளே போட்டுண்டு வெறும் தண்ணியெக் குடிச்சுட்டேன்.”

“ஆனா எங்கப்பா பாரு துளியூண்டு…” இதற்கு மேல் அந்தப் பாசத் தந்தையின் காதில் விழவில்லை. பை கூட இல்லாமல் அரிசியும் ஆரஞ்சும் வாங்க அடுத்த ஊருக்குப் போய்விட்டார்.

“எங்கேடா உங்கப்பா. மறுபடியும் போயிட்டாரா? இவர் கிட்ட எப்படித்தான் சொல்லறதோ. என்னதான் சொல்லறதோ…”

தொடர்ந்து பிரலாபித்துக் கொண்டே இருந்தாள். அந்தத் தாயின் இடி இடிக்கும் குரல் குழந்தைகளுக்குப் பழக்கமானதோ என்னமோ! அவர்கள் லட்சியமே செய்யவில்லை.

– குடியரசு – 20-09-1965

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *