காயப்பட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 5,458 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்றிரவு அவன் மிகவும் சிரமப் பட்டு விட்டான். மேசைமீது பரத்திக் கிடந்த மாத்திரைகளை எடுத்து, போத்தலில் உள்ள தண்ணீரைக் கிளாசில் ஊற்றிக் குடிக்க அவன் பட்ட அவஸ்தைகள்!

இந்த இடத்தில் தான் மானுட உதவி தேவை. ஆனால், அது அவனுக்குக் கிடைக்காமல் தொலைந்து விட்டிருந்தது. அடுத்த அடுத்த அறைகளில் மனைவி மக்கள் என்னும் ஜடங்களின் குறட்டை ஒலிகள் உரத்துக் கேட்கின்றன.

மனைவி மக்களின் அனுசரணைகள் கிடைக்காமல் போனதற்கு ஒரு நியாயம் இல்லாமல் இல்லை . ஊர் உலகம் நம்பக் கூடிய விடயமா? அது இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி உதவி ஒத்தாசைகள் கிடைக்க வேண்டுமானால்…

அதற்கெல்லாம் ஒரு பக்குவப் பட்ட பரந்த உள்ளம் வேண்டுமே!

பேசாமல் அரசாங்க மருத்துவ மனையில் படுத்துக் கிடக்கத்தான் முடிவு செய்துவிட்டான். வைத்திய சாலை ஊழியர்களின் கடமை சார்ந்த கவனிப்புகளும் நோயாளிகளைப் பார்க்க வந்து போவோரின் ஜனரஞ்சக ஆறுதல் பார்வைகளுமே மனதிற்கு இதமாக இருக்குந் தானே!

தனது கதையின் இறுதி அத்தியாயம் மருத்துவ வார்டில் முடிய வேண்டும் என்பது தான் அவன் விருப்பம். அப்பொழுது தான் சொந்த பந்தங்களுக்குக் காரியங்கள் மிகவும் இலகுவாக இருக்கும். ‘தொலைந்து விட்டான்’ என்ற நிம்மதி அவர்களுக்குப் பிறக்கும். ஆனால், அதற்கு எவ்வளவு காலம் போகும். உடம்பு நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றாக இழந்த பின்பு தானே அது நடக்கும்.

அவனது ஆழ்ந்த சிந்தனை நித்திரையை முற்றாக எங்கோ துரத்தி விட்டாது.

மனம் குழம்பிப் போய் மணிக் கூட்டை அடிக்கடி பார்த்தான். அது அவனுக்காகத் தன் வேகத்தைக் கூட்டி விடியலை அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து விடுமா…?

வாழ்வு நியதியின் சோக வடிவங்களில் ஒன்றைத் தான் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

நியதியை அமானுஷ்யம் என்று வர்ணித்தார்கள். இறைவனின் சோதனை’ என்றும் சொன்னார்கள்.

சோதனை என்ற பெயரில் இன்னும் கடுமையாகத் தண்டித்திருந்தாலும் அதனை அவன் மனப்பூர்வமாக ஏற்கத் தயார். ஆனால், சமூகத்தில் தனக்கென இருந்த மரியாதையையும் அந்தஸ்தையும் கொடூரமாகப் பாதித்து ஒரு தலை குனிவை’ ஏற்படுத்தி விட்டதே! அந்த அளவுக்கு விதி அமையக் கூடாது. என்று தர்க்கித்தாலும் ‘அதுதானே விதி, அமானுஷ்யம்’ என்றார்கள். விதியைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்றார்கள்.

அவன் ஒரு நல்ல ஒழுக்க சீலன் என்பதனாலோ – இப்படி ஒரு யோசனை…?

இப்படியெல்லாம் தத்தம் அறிவுக்கேற்ப அபிப்பிராயங்கள் மொழிந்தார்கள்.

ஒரு நல்லவனுக்கு விதி இப்படி அமைந்து தனது பொல்லாச் சிறகைக் காட்டிவிட்டதே!

இப்படியெல்லாம் கேட்க அவனுக்குத் திருப்தி தான். ஆனால் – “யாருக்குத் தெரியும் நல்லவன்’ என்ற போர்வையில் வெளிநாட்டு மண்ணை மிதித்தவுடன் என்னென்ன கூத்து ஆடுகிறார்களோ?”

இது தான் அவனைக் கொல்ல வந்த வைரஸ் கிருமியை விட கொடியதாக இருந்தது.

தீர விசாரித்து பகுத்ததறிவுக்கு எட்டிய மட்டும் ஆய்ந்து, ‘இது இப்படித் தான் நடந்தது’ என்ற நிரூபித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவப் பட்ட நல்ல உள்ளங்கள் இல்லாவிட்டால் என்ன செய்வது…..?

மௌனித்து இருப்பது தான் மருந்தாகுமா?

‘இருபதாம் நூற்றாண்டின் மருத்துவத் துறையையே கலங்க வைத்துள்ளது. இந்த நோய்……. என்று மருத்துவர்கள் மதிப்பிடுகின்றனர்.

கீழைத் தேய கலாசாரத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு பெரும் சவாலாகத் தான் பட்டது அவனுக்கு.

நியதியின் கொடூரத்தை எண்ணியெண்ணி அவன் மிகவும் மனச் சஞ்சலப் பட்டு விட்டான்.

ஓயாத சிந்தனையும், மனக்கிலேசமும் ஒழுங்கான நித்திரையின் விரோதிகளாயின. அவன் எடுத்த முடிவுதான் சரி. சமூகம் எப்படித்தான் தன்னை மதிப்பீடு செய்தாலும், அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

‘மௌனமாய் சும்மாயிரு’

அவனைப் பொறுத்த வரையில் இது ஒரு சிறந்த தத்துவம். அதைத் தான் அவன் கடைப் பிடித்தான்.

இனி எதைப் பேசினாலும் பிரயோசனம் இல்லைத் தானே!

அவனுக்கு உண்மையில் இந்த நோயைப் பற்றிய ஆழமான அறிவு இருந்திருந்தால்? எல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. பொதுவாக ஒரு சராசரி மனிதனுக்குத் தெரிய வேண்டிய விபரங்களை மட்டுந்தானே அவனும் அறிந்திருந்தான். அதற்குமேல் ஆழமாக அறிய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை அவனுக்கு. ஆனால் –

அது தன்னைத் தேடி வந்து சுட்ட போது தான் இந்த நோயைப் பற்றி பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஞனோதயம் பிறந்தது.

அரை நூற்றாண்டை நிறைவு செய்யப் போகும் வயதில் இளமைத் துடிப்போடு இயங்கிய அந்த இனிமையான நாட்களை மீட்டி பூரித்துப் போகின்றான். ஒரு கௌரவமான தொழிலுடன், வாடகை வீட்டில் என்றாலும் வாழ்க்கையின் வசந்த காலம் அதுதான்.

காலம் கனிந்துவந்த போது, அவனுக்கும் புரோக்கர் மூலம் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அனைத்துக் கோணங்களில் இருந்தும் பொருளாதார வசதிகளை மட்டுந் தான் நச்சி அணுகினார்கள்.

வயது, கல்வி இவற்றைப் பற்றியும் அலசப் பட்டது. ஆனால், ஒரு சந்தர்ப்பத்திலும் மனப் பொருத்தங்கள், இலட்சியங்கள், விருப்பு வெறுப்புக்கள், குணவியல்புகள்… இவற்றைப் பற்றி சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை.

சொல்லப் போனால்

முன் பின் அறியாத ஒரு பெண்ணும் ஒரு ஆண் மகனும் திருமணம் என்னும் பந்தத்தால் இணைந்தார்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்கள். உண்மையில் அவன் அவளுடன் அல்லது அவள் அவனுடன் மனந்திறந்து கருத்துக்கள் பரிமாறக் கூட வாய்ப்புக் கிடைக்க வில்லையே! இந்நிலையில் – –

அவர்களும் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

‘திருமணம் முடித்து வாழவேண்டும்’ என்று வெறுமனே ஒரு சம்பிரதாயத்திற்காக ஒருவகை இயந்திர வாழ்க்கை தான் அது!

பெண் வீட்டாரைப் பொறுத்தவரையில் ‘அப்பாடா’ என்று குமரிப் பாரம் கழிகிறது.

அவனை முடித்த அவளது இலட்சியங்கள் எல்லாம் பணம், வசதி, சொத்து இவைதான் சொகுசான வாழ்க்கை.

கணவன் என்ற ஸ்தானத்திலிருந்து அவனும் ஒரு குறையும் வைக்கவில்லை. வாழ்க்கைப் பிரச்சினைகள் எதுவுமின்றிச் சுமுகமாகத் தான் ஓடிக் கொண்டிருந்தது. திருப்தியாக

‘டாம்பீகம் எதுவுமின்றிப் போதும் என்ற மனப்பாங்குடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அதுதான் உன்னத வாழ்க்கை…’

வாழ்க்கையைப் பற்றி அவனது வரைவிலக்கணம் அது.

பெற்றெடுத்த குழந்தைச் செல்வங்கள் வளர வளர, அதனை ஒரு சாட்டாக தூக்கிப் பிடித்து அவள் பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கி வளர்த்துக் கொண்டதால் மெள்ள மெள்ள முரண்பாடுகள் வளர்ந்தன.

“எவ்வளவு பேர் போறாங்க…ஒங்களுக்கு மட்டுந்தான் வெளிநாட்டு மண்ணில் வேலை இல்லை”

“எதையுமே மனசுக்கு எடுக்கணும்.”

“குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கணும்…”

“முயற்சி இருக்கணும்.”

மனைவியின் ஓயாத நச்சரிப்புகள் சக்தி வாய்ந்த ஏவுகணைகளாகின.

அவற்றைத் தாங்கும் சக்தியை அவன் முற்றாக இழந்து விட்டான்.

முயற்சி என்ற பெயரில் அவன் இராப் பகலாக முகவர் நிலையங்களைச் சுற்றி வந்தான்.

வெளிநாட்டு மண்ணை மிதிக்கும் பாக்கியம் அவனுக்குக் கிட்டியது.

அவனுக்கு அது ஒரு சர்வ சாதாரணமான விடயமாக இருந்தாலும், மனைவியின் ஏவுகணைகளிலிருந்து தப்பிவிட்டோம், என்ற மகிழ்வும் திருப்தியும் அவனில் இழையோடியது.

அவளுக்குத் தான் ஒரே குஷியாக இருந்தது. அவளில் பல மாற்றங்கள். அவளது இலட்சியம் நிறைவேறப் போகிறது.

காலச் சக்கரத்திற்கு எப்படி இந்த வேகம் வந்தது?

அவன் பயணமாகிப் போய் இவ்வளவு விரைவில் ஆண்டுகள் உருண்டோடி விட்டனவா…?

அவளுக்குப் புதினமாக இருந்தது. அவளுக்கு அதிர்ஷ்ட அலை!

வாடகை வீடு சொந்த வீடாக மாறி, மாடி வீடாக உயர்ந்ததைப் பார்க்கும் போது, காலம் வேகமாகத் தான் ஓடியிருக்கு.

‘செல்வம் அது தேடினால் தான் வரும் மூன்று மக்கள் செல்வங்களுக்கும் பிக்ஸ் டிப்பொசிற்கள்’ போட்டாயிற்று. கிட்டிய அவளது உறவினர்களுக்கு இப்படியும் அப்படியுமாகச் சில உதவிகள்.

ஐந்து வருடங்களுக்குள் இவ்வளவு மாற்றமா…? அவள் மலைத்துப் போய் விட்டாள். கூடவே அவளுக்கு ஒரு வகைத் திமிரும் சேர்ந்து விட்டது. அதுவும் புதினமல்ல. அவளுக்கே உரிய குணாம்சத்திற்கு அது வரத்தான் வேண்டும்.

இறக்கத்திலிருந்து ஒரு ஏற்றம். ஏற்றத்திலிருந்து ஓர் உச்சக்கட்டம்… உச்சக் கட்டத்திலிருந்து…இன்னும் மேலே… மேலே போகத் தாராளமாக இடமுண்டு. ஆனால் பரிதாபம் – அலை மாறிவிட்டது.

அவன் அப்பாவி பாதிக்கப் பட்டு விட்டான்.

வருடா வருடம் விடுமுறையில் தாய் நாடு வந்து விட்டுப் போனவனுக்கு ஆறாம் வருடம் நடுப்பகுதியில் என்னவாயிற்று…? வெளி நாட்டில் ஒரேயொரு முறை தான் காய்ச்சலுக்கு ஒரு மருத்துவமனையில் இன்ஜெக்ஷன் போட்டார்கள். சில நாட்களில் குணமாகி நல்ல சுகதேகியாக வாழ்ந்து வந்த அவனது ஆரோக்கிய வாழ்விற்கு என்னவாயிற்று…?

ஆரம்பத்தில் உடல் உழைவு ஏற்பட்ட போது அது கடின வேலை நிமித்தம் என்று அவன் பொருட்படுத்தாது இருந்தான். ஓயாத தலையிடி, பசியின்மை, இரவில் வியர்வை, இருமல்…இப்படியாக ஒவ்வொன்றிற்கும் தானே ஒவ்வொரு காரணத்தைக் கற்பித்துக் கவனியாது இருந்து விட்டான்.

இருந்தாற் போல் அவனது எடை குறையத் தொடங்கியது. அடிக்கடி தொடர்ச்சியான காய்ச்சல்.

‘வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இப்படி அசட்டையாக இருந்து விடக் கூடாது’ என்று ஒரு சகபாடி ஆலோசனை கூறியதற்குப் பிறகு தான் அவனுக்கும் ஞானோதயம் பிறந்தது. உடனடியாக ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துப் பரிசோதித்தான்.

டாக்டருக்குச் சந்தேகம் வந்து விட்டது.

‘எதற்கும் இரத்தப் பரிசோதனை செய்து விட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்…’ என்று அதற்கான ஒழுங்குகளைச் செய்தார்.

அவர் சந்தேகித்தது உண்மையாகிவிட்டது.

இரத்தப் பரிசோதனைக் மிகத் தெளிவாகக் காட்டிவிட்டது.

“உங்கள் இரத்தத்தில் HIV வைரஸ் கிருமிகள் தொற்றியிருக்கு…”

“அப்படியென்றால்…!”

உண்மையில் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“இந்தக் கிருமிகள் எப்படித் தொற்றுகிறது?” என்பதற்கு டாக்டர் ஒரு நீண்ட விளக்கம் கூறிய போது அவனுக்குப் பொறி தட்டிவிட்டது. உடலும் உள்ளமும் வெலவெலத்துப் புல்லரித்து விட்டது.

“சத்தியமாகச் சொல்கிறேன் டாக்டர் எனக்கு இங்கே…எவ்விதமான பாலியல் தொடர்பும் இல்லையே…!”

அவன் கதிகலங்கிப் போய் நின்றான்.

“உங்களைப் பார்த்தால் எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது, எச்சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு முன் பின் அறியாதவர்களிடமிருந்து இரத்த தானம் செய்யப் படவில்லை என்று சொல்கிறீர்கள்… அப்படியானால் கிருமிகள் அகற்றப் படாத ஊசி மூலம் மருந்து ஏற்றியிருக்க வேண்டும். சலூன்களில் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யப் படாத சவரக் கத்திகள். அல்லது பிளேடுகள் காயப்படுத்தியிருந்தாலும் உங்கள் இரத்தத்தில் கிருமிகள் தொற்ற வாய்ப்பிருக்கிறது. இப்படி ஏதாவது ஒரு வழியில்…”

அவனுக்கு ஒன்றுமே ஞாபகத்திற்கு வரவில்லை.

அவசரம் காரணமாக அடிக்கடி பல சலூன்களில் ‘ஷேவ்’ பண்ணியிருக்கிறான். ஆனால் காயங்கள் ஏற்பட்டனவா…? அவனுக்கு ஞாபகம் இல்லை.

இந்த வைரஸ் கிருமிகள் மூலம் பரவும் நோய் சம்பந்தமாக மருத்துவர் கொடுத்த விளக்கக் குறிப்புகள் அடங்கிய ஒரு சிறு நூலை ஒரே மூச்சில் படித்துத் தெளிந்து மிகவும் சஞ்சலப் பட்டான்.

அறியப் படாத விடயங்கள் அனைத்தும் அவனுக்கு அதிர்ச்சியாகவும் புதினமாகவும் இருந்தது. கடைசியில் இந்த வைரஸ் கிருமிகளா கழுத்தறுக்க வேண்டும். ஆண்டிறுதியில் நிரந்தரமாகத் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தவன் இப்பொழுது ஒரே மாத அவகாசத்தில் ராஜினாமாவைச் சமர்ப்பித்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, மனைவி மக்கள் உறவினர்கள் அனைவருமே திகைத்துப் போய் நின்றனர்.

‘ஒரு வித அறிவித்தலுமின்றி என்ன இப்படித் திடீரென்று…?’

அவனைப் பொறுத்தவரையில் ஒரு சங்கடமான நிலை. இந்த நோயைப் பற்றி எப்படிச் சொல்வது…? பரவாயில்லை.

அவனது மனசாட்சிக்கு விரோதமாக எதுவுமே நடக்காததால் மிகுந்த துணிச்சலுடன் தனக்கு ஏற்பட்டிருக்கிற ‘நோயைப் பகிரங்கப் படுத்தினான். நீதிக்கு முன் அல்லது விசாரணைக்கு முன் அவன் நிரபராதி தானே!’ என்ற தைரியத்தில்.

அவன் முற்றிலும் எதிர்பார்த்தது போல் –

குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது.

அவனுடைய விளக்கங்கள் ஒன்றும் எடுபடவில்லை. அவர்களுடைய ஏகோபித்த முடிவு – அவன் ஒழுக்கம் தவறியவன்.

இப்படியான ஒரு கட்டத்தில் குடும்ப அங்கத்தவர்கள். உறவினர்கள் போன்றவர்களின் உதவி தேவை. உதவி என்றால், அள்ளிக் கொடுப்பது மட்டுமா..? அன்புடன் பழகி உற்சாகம் தரும் நல்வார்த்தைகள் பேசி மிகவும் அந்நியோன்யமாக நடந்து கொள்ள வேண்டும். அவன் தன்னை ஒரு பயங்கர நோயாளி என்று எண்ணியெண்ணி மனம் வருந்தச் சந்தர்ப்பம் இல்லாமல் மிகக் கவனமாக அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், அது அவர்களால் முடியுமா…?

அவள் அவசர அவசரமாக ஓடி இரத்தப் பரிசோதனை செய்து, தனக்கு ‘ஒன்றுமில்லை’ என்று அறிந்த பிறகு தான் ‘அப்பாடா’ என்று நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

அனைவரும் ஒன்று கூடி பேசித்தீர்த்து ஒரு முடிவு எடுத்தார்கள்.

அவனுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் முற்றிலும் தனிமைப் படுத்தி ஒதுக்கி விட்டார்கள். அள்ளிக் கொடுத்தவனுக்கு ஒரு சிற்றறை தஞ்சம்.

நோய்க் கிருமிகள் பெருகித் தன்னை மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், இந்தப் பொல்லாத தனிமை தன்னைக் கொன்று விடுமோ என்று அஞ்சினான். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்தான்.

வைத்தியர்களைச் சந்திப்பதிலும் ஆலோசனைகள் பெறுவதிலும் நாட்கள் தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தன. இந்த ஓரங்கட்டிய நிலையில் தான்.

அன்று ‘எப்படா விடியும்’ என்று காத்துக் கொண்டிருந்தான். எங்கோ நாயும் பூனையும் சண்டை பிடிக்கும் போர் உறுமல்! காகங்கள் கரைதல், பறவை பட்சிகளின் விழிப்பு. இரைச்சல். இவை அனைத்தையும் மீறிச் சாலையின் அமைதியைக் குலைக்கவென ஒரு வாகனம். அதைத் தொடர்ந்து ஆட்டா வண்டிகள் கிளம்பத் தொடங்கியிருந்தன. தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினான். சிரமப் பட்டு வெற்று. முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து ஆங்கிலத்தில் ஹொஸ்பிட்டல்’ என்று மட்டும் சிக்கனமான சில வார்த்தைகளை உதிர்த்து ஏறிக் கொண்டான்.

ஐந்து வருட காலம் கடுமையான உழைப்பு. வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து, மீண்டும் பழைய மாதிரியே காலத்தை ஓட்டலாம் என்று தான் திட்டமிட்டிருந்தான். ஆனால், அவன் வாழ்வின் நியதி வேறுமாதிரியாக அமைந்து விட்டது.

நோயைச் சுமந்து வந்து, மருத்துவ மனையும் வீடுமாக ஓடியோடிக் களைத்துப் போய்…… வீடும் கிட்டத்தட்ட கவனிப்பாரற்ற ஒரு மருத்துவ மனையாகி, கடைசியில் வீட்டை விட்டே கிளம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டாயிற்று.

அவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டான். அங்கே அவனுக்கு ஆரோக்கியமான மாற்றம்.

வைத்திய சாலையில் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் அவனைத் தனிமைப் படுத்தி ஒதுக்காமல் வைத்தியர்கள், தாதிகள் முதல் அனைத்து ஊழியர்கள் வரைக்கும் அனைவருமே அன்புடன் பராமரித்தார்கள். அது அவனுக்குச் சொர்க்கமாக இருந்தது.

நோயாளரைப் பார்க்க வரும் பார்வையாளரின் புன் முறுவலும் ஓரிரு அன்பான விசாரிப்புகளும் அவன் உள்ளத்திற்கு எவ்வளவோ இதமாக இருந்தது.

அவனது இவ்வுலக வாழ்க்கை இன்னும் அவனால் நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவனால் ஊகித்துக் கொள்ள முடிகிறது.

அவனைப் போல் அறியாமை காரணமாக, பாலியல் தொடர்பற்ற முறையில் கிருமிகளால் பாதிக்கப் படுபவர்களுக்காகப் பரிதாபப் படுகிறான்.

இந்த நோய்க்கு எதிரா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று அவன் ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கின்றான்.

ஒரு நாள் இரவு மருத்துவ மனை மிகவும் அமைதியாக உறங்கிக் கிடப்பது போல் ஓர் உணர்வு. திடீரென்று விழிப்படைந்து சுற்று முற்றும் பார்த்து தான் ‘ஐசி ரூமுக்கு’ இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதை இலேசாக உணர்ந்தான். உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. பார்வையாளருக்கு அழைப்பு மணி அடித்த நேரம் அவனுக்குத் தெரியாது. ஆனால், புதினமாக மனைவியும் மக்களும் இரண்டொரு உறவினருடன் வந்து தலைமாட்டில் நின்று கொண்டிருந்து விட்டுச் சற்று வெளியேறியது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தக் கட்டத்திலும் உயர்ந்த பண்பாடுகளை உள்ளடக்கிய கீழைத் தேய கலாசாரத்தின் பிரதி நிதிகளாக வெளிநாடுகள் செல்லும் ஒவ்வொரு நல்ல பண்பாளனையும் மானசீகமாக எண்ணிப் பார்க்கின்றான். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் அவன் கண்முன்னே தோற்றமளிக்கிறார்கள். அவன் கண்கள் கலங்குகின்றன.

‘மது, மாமிசம், மங்கை’ ஆகிய மூன்றையும் தொடமாட்டேன்…என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுச் சென்ற இந்தியாவின் மகாத்மாவைக் கூட அவன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கத் தவறவில்லை.

இதனைப் பின்பற்றி எத்தனை எத்தனை பேர் செல்வார்கள்…!

ஒருவகைப் பதட்டமும், பச்சாதாபமும், பரிதாபமும் அவனில் இழையோடுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு வகைப் புலம்பல்.

“வெளிநாடுகள் செல்லும் ஒவ்வொருவரும் இந்த எயிட்ஸ் நோயைப் பற்றி தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அறிவு நிச்சயமாக அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும்”

இது வெறுமனே புலம்பல் மட்டுமல்ல, அறியாமையால் காயப்பட்ட ஒருவனின் கடைசி விருப்பமாகும்.

– ஜனவரி 2003.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *