(1958 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கண்ணப்பர்
திருச்செல்வம் நல்லபையன். நேர்மையானவன் முயற்சியும் சுறுசுறுப்பும் உடையவன். விரைவில் முன்னுக்கு வரக்கூடியவன் என்பதை அவனைப் பார்த்தவுடனேயே கண்டு கொண்டேன். “ஐயா, நான் ஓர் அனாதை. இளம் வயதிலேயே தாய்தந்தையரை இழந்தவன். என்னை இதுகாறும் அன்புடன் ஆதரித்த என் மாமனும் திடீரென்று மாரடைப்பால் மாண்டுவிட்டார். மாமனைப் போலல்ல மாமி. அவள் கொடுமை தாங்காது,. ஓரிரவு யாருக்குந்தெரியாமல் ஓடி வந்துவிட்டேன். இனி, இவ்வுலகில் எனக்கு உற்றார் உறவினர் என்போர் யாருமில்லை. தாங்கள்தான் எனக்குப் புகலிடம் தந்து காப்பாற்றவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டான் சோகமான வரலாறுதான். ஆனால், அவன் பேச்சில் உறுதி இருந்தது. ஊக்கமளித்தால் எறும்புபோல் சலியாது உழைக்கக்கூடியவன். “நாளுக்கு நாள் நகர்ந்ததடி அம்மானை” என்பதுபோல் என் கடை வியாபாரம் படுமோசமாகிக்கொண்டு வந்ததே! கடைச்சிப்பந்திகள் சோம்பேறிகளாக இருந்தார்கள். திறமையற்றவர்களாக இருந்தார்கள். ஓரிரு திறமைசாலிகளையோ நம்ப முடியவில்லை. என் வியாபாரத்தைக் கவிழ்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள் போலிருந்தது. நல்லவேளை! திருச்செல்வம் வந்ததும் அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கழித்துக் கட்டிவிட்டேன். இப்போது செல்வம் பரிந்துரைத்த ஆட்களே வேலை பார்க்கிறார்கள். என்ன விந்தை. அவன் வேலையேற்ற ஓராண்டுக் காலத்தில் எவ்வளவு முன்னேற்றம்! எப்படித்தான் இத்தனை வாடிக்கைக்காரர்களைச் சேர்த்தானோ? எந்தத் தந்திரத்தைக் கையாண்டு எப்போதும் என் கடையில் “ஜே! ஜே!” என்று மக்களைக் கூட்டுகிறானோ? இவனை என்னுடையவனாக ஆக்கிக் கொள்ள எண்ணுவதாகவும், என் மகள் மல்லிகாவை அவனுக்கு மணமுடித்து வைக்கப் போவதாகவும் சொன்னேன். அவன் அதை முதலில் நம்பவில்லை. பிறகு நான் உறுதியாகச் சொன்ன பிறகுதான் நம்பினான். இந்த “டானிக்” நல்லவேலை செய்திருக்கிறது. அதிலிருந்து பையனுக்குப் புது உற்சாகம் பிறந்திருக்கிறது. இப்போது என் வியாபாரம் முன்னைவிட மேலும் நன்றாகநடைபெறுகிறது. ஹ! ஹ! ஹ! ஹா! என் முயற்சி வெற்றி.
திருச்செல்வம்
மல்லிகாவை எனக்குமணமுடித்து வைப்பதாக முதலாளி கண்ணப்பர் சொல்கிறார். இது எனக்குக் கிட்டும் பாக்யமா? அவர் நிலை எங்கே? என் நிலை எங்கே? “முடவன் கொம்புத்தேனுக்குஆசைப்படலாமா?” இந்த ஓராண்டுக் காலத்தில் என் வாழ்க்கையில்தான் எவ்வளவு பெரிய மாறுதல்? என் மாமி என்னைப் படுத்திவைத்த பாடு! அப்பப்பா! இப்போது நினைத்தாலும் எவ்வளவு மன வேதனையாக இருக்கிறது! எவ்வளவு இழிவான வேலைகளையெல்லாம் என்னைச்செய்யவிட்டாள்? 21 வயது நிரம்பிய என்னைத் தினந்தோறும் தான் உடுத்திய புடவைகளைத் துவைத்து உலர்த்தும்படிக் கட்டளையிட்டளே! அவளுக்கு உடல் நலமில்லாமலிருந்து, வேறு எவரும் துணைக்கு இல்லாமலிருந்தால், இதனை அன்புப் பணியாக ஏற்று மகிழ்ச்சியுடன் செய்திருப்பேன். ஆனால், 18 வயதுள்ள அவள் மகள் பர்வதகுமாரி பர்வதம் போலவே இருக்க, அவளைக் குந்த வைத்துவிட்டு, என்னைச் சமைக்கவும், புடவை துவைக்கவும் வைத்துவிட்டாளே! அதுதான் போகட்டும். என் மாமா என்னை அரைகுறைப் படிப்பிலேயே நிறுத்திவிட்டார். நானே தனியாக என் முயற்சியில் படித்து முன்னேறுவதற்குத்தான் விட்டாளா? தப்பு தப்பு! படிப்பதற்கு எனக்கு ஏது நேரம்? இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் எனக்கு ஏதாவது வேலை இருந்துகொண்டிருக்குமே? எப்படி படிப்பது? இப்போது எவ்வளவு மாற்றம்! கடை வேலை இரவு 8 மணியுடன் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு எனக்கு ஓய்வு தான். இரவுப் பள்ளியில் சேர்ந்துவிட்டேன். அடுத்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வு. நான் அதில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும். அப்போதுதான் மல்லிகா என்னை மதிப்பாள்.
மல்லிகா
இது என்ன கூத்து! என்னைத் திருச்செல்வத்திற்கு மணமுடித்து வைக்கப்போவதாகச்சொல்கிறாரே, அப்பா! அவருக்கு என்ன, பைத்தியம் பிடித்துவிட்டாதா? லட்சாதிபதியும் கண்ணப்பர் கம்பெனி உரிமையாளருமான அவர் மகளா ஊர் பேர் தெரியாத ஒருநாடோடி ஏழையை மணக்கவேண்டும்? அந்தக் “கனவா”னிடம் இவர் என்ன சிறப்புத் தகுதியைக்கண்டார்? “மன்மதக் குரங்கே மரத்தை விட்டுக் கீழிறங்கே” என்னும்படியான குரங்கு முகம். தேர்ந்த கறுப்பு. சித்திரக் குள்ளன். இவன் என்னோடு வந்தால் என் தோழிகள், “இவன் யாரடி புது வேலைக்காரன்?” என்றுதான் கேட்பார்கள். குப்பையில் கிடப்பவனைக் கோபுரத்தில் ஏற்றிவைக்கப் பார்க்கிறார் அப்பா. ஐயோ! கர்மம்! கர்மம்! இவனை என் கணவனாக ஏற்றுக்கொள்வதா? அதை விடத் தற்கொலை செய்து கொண்டு சாவதுமேல். அப்பாவின் இந்த விசித்திர யோசனையை அம்மாவும் எதிர்க்கிறாள். “அவருக்காச்சு, நமக்காச்சு. இம்மியளவேனும் விட்டுக்கொடுக்காதே” என்று சீற்றம்பொங்க எச்சரித்தாள். தன் தம்பி தங்கராசுக்கு மோசம் செய்யவே இந்த ஏற்பாடு என்று கருவுகிறாள். உண்மையில் என் மாமா தங்கராசே எனக்கு ஏற்ற கணவர். வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழுத கதைபோல் என் அருமை மாமா அருகிருக்க, எங்கோ இருந்து வந்த ஒரு அனாதைக்கு என்னை மணம் பேசுகிறாறே, அப்பா! இந்தக் கலியாணம் நடந்தால் ஊரில் உள்ளவர்கள் அவரை அரைக்காசுக்கு மதிப்பார்களா? அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? முடியாது! முடியாது! ஒருகாலும் முடியாது இன்றிரவு என் சம்மதத்தைக் கேட்கப் போகிறாராம். கேட்கட்டும். நான் ஒன்றுக்கும் அஞ்சப் போவதில்லை! அந்தத் திருச்செல்வத்தை மணக்க முடியாது என்பதைத் தீர்மானமாகச் சொல்லிவிடுகிறேன்.
திருச்செல்வம்
அப்பா! புயலடித்து ஓய்ந்ததுபோலிருக்கிறது. மல்லிகாவின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியது. அவள் விருப்பப்படியே அவள் தாய்மாமன் தங்கராசையே மணந்தாள். விருப்பு வெறுப்பின்றிச் சொல்வ தென்றால் இதுதான் சரியாகும். காதலரிருவர் கருத்தொருமித்துக் கடிமணம் புரிந்துகொண்டதை யாரும் குறை கூற முடியாது. என்னை அவள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டாள் என்பது எனக்கு முன்னமேயே தெரியும். என்னிடம் என்ன சிறப்பு இருக்கிறது? அழகுண்டா? பணமுண்டா? உயர் கல்வியறிவுண்டா? இந்தக் காலத்தில் குணநலத்தை யார் மதிக்கிறார்கள்? அதுவும் இளம் பெண்களிடத்தில் இதனை எதிர்பார்க்கலாமா? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கண்நிறைந்த கணவர்கள் தாம். அத்துடன் அழகும் பணமும் இருந்துவிட்டால், எந்தப் பெண்ணும் எந்தச் சிறு எதிர்ப்புமின்றிச் சம்மதித்து விடுவாள். தங்கராசுக்கு இந்த எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. அவன் மல்லிகாவைக் கைப்பிடிக்க ஏற்றவனே… ஆனால்…ஆனால்…கண்ணப்பர் எனக்கு ஏன் ஆசை வார்த்தைகள் கூறினார்? மல்லிகாவை உனக்குத்தான் மணமுடித்து வைக்கப்போகிறேன். உன்னால் தான் என் வியாபாரமும் முன்னுக்கு வந்தது. உன்னை இழக்க என் மனம் துணியவில்லை! உன்னை எங்கள் குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்வதென்று தீர்மானித்துவிட்டேன். எனக்கு என்மகள் மல்லிகாவைத் தவிர வேறு வாரிசு இல்லை. நீயே எனக்கு மகனும், மருமகனும்.” என்று சொன்னாரே! எதற்காக இப்படிச் சொன்னார்? இப்போது மனம்மாறி எப்படித் தம் மகளை அந்தத் தங்கராசுக்கு மணமுடித்துக் கொடுக்கத் துணிந்தார்? இது வடிகட்டின சூழ்ச்சியாக இருக்குமோ? இருந்தாலும், நான் அவர்மீது ஆத்திரப்படக்கூடாது. எனக்கு வாழ்வளித்தவர் அவர்தாம். அவரால்தான் நான் முன்னுக்கு வந்தேன். அவரிடம் நான் அதிகம் எதிர்பார்ப்பது என் பேராசையே.
கண்ணப்பர்
ஒருவகையாக மல்லிகாவின் திருமணம் முடிந்துவிட டது. என் நண்பர்கள் நாராயணசாமியும் ஏகாம்பரமும் என்னைக் குறை கூறுகிறார்கள். “என்னையா! இப்படிச் செய்துவிட்டீர்? திருச்செல்வத்திற்குத்தான் என் மல்லிகாவை மணமுடித்து வைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, இறுதியில் தங்கராசுக்கே கொடுத்துவிட்டீரே?” என்று கேட்டார்கள். நான் சொன்ன பதிலைக் கேட்டு அசந்து போய்விட்டார்கள். “அது சரிதான்! நண்பர்களே திருச்செல்வம் நாணயமானவன். நன்றாக உழைக்கக் கூடியவன். அவனுக்கும் இல்லற இன்பம் பெறவேண்டுமென்ற ஆசை இருக்குமல்லவா? அதற்காகத்தான் அவனுக்கு எதிர்கால இன்பம் காத்துக்கிடப்பதாக ஒரு கற்பனை எண்ணத்தைப் புகுத்தினேன். அவனும் அதை நம்பி, பன்மடங்கு ஊக்கத்துடன் நன்கு பணியாற்றிச் சீரழிந்துபோன என் வியாபாரத்தை முன்னுக்குக் கொண்டுவந்துவிட்டான் இனி, அது அவன் உதவியில்லாமலேயே சீராக நடக்கும். என் நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆகவே, என் மகள் விரும்பிய வரனை அவளுக்கு மணமுடித்தேன். என் வாக்குப் பொய்க்காதபடி அவனுக்கும் அவன் தகுதிக்கேற்ற ஒரு பெண்ணைப்பார்த்து மணமுடித்து வைக்கத்தான் போகிறேன்” என்று சொன்னேன். எப்படி என் திட்டம்?…
– 1958, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.
– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.