காதல் தேவதைக்கு ஒரு கை விலங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,851 
 
 

அக்கா மனோகரி அன்றைக்குத் தன்னுடன் கூடவே கல்லூரிக்கு வராமல் போனது சசிக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது காரிலே போவதாக இருந்தாலும் அக்கா கூட வரும் போது சகோதர பாசத்தையும் மீறி நெருக்கமான நட்பு உணர்வுடன் காற்றில் மிதப்பது போல் மிகவும் ஜாலியாக இருக்கும் அந்தப் பயணம் அவளுக்கு என்ன மனமாற்றம் வந்ததோ தெரியவில்லை தான் இனிமேல் மல்லாகம் பள்ளிக்கூடத்தில் தான் படிக்கப் போவேன் என்று கூறிச் சரித்திரத்தையே மாற்றி விட்டாள் அப்பாவுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை பருவப் பெண்களுக்கு இப்படியான சுதந்திரம் ஆபத்தில் முடியுமென்பது அவர் நம்பிக்கை அக்கா மல்லாகத்துக்குப் படிக்கப் போவதாக இருந்தால் அவள் திரும்பி வரும் வரை மடியில் நெருப்புத் தான் அவளைப் பார்வை கொண்டு மேய்வதற்கு ரெளடிப் பயல்ககள் இல்லாமலா போய் விடுவார்கள் அதிலும் அக்கா நல்ல அழகு. எனினும் கொஞ்சம் அறிவு கண் திறக்காத அப்பாவி தான் அவள் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகின்ற வெகுளி அவள்

அழகுக்கும் அப்பாவித்தனத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியுமென்று சசிக்கு யோசனை வந்தது அவள் அப்பா மாதிரி எதிலும் ஒட்டாத ஞானப் போக்கும் அன்பு மேலோங்கிய மிதவாத குணமும் கொண்டிருப்பதால் அக்காவின் நிலை தளும்பிய கடினப் போக்குக்கு ஈடு கொடுத்து அவளோடு உறவு கொண்டாடுவதில் அவளைப் பொறுத்தவரை எந்தச் சிக்கலும் இருந்ததில்லை

மனோ என்று தான் அவளைச் சுருக்கமாக அழைப்பார்கள் அவளுக்கு நேரே பெரியக்கா பவானி படிப்பு முடிந்து வீட்டிலே அம்மாவுக்கு ஒத்தாசையாகச் சமையலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் அவள் ஒரு கலா ரசிகை கலைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தாலும் அவளின் பொழுது போக்குக்குத் தீனி போடுகிறது புத்தகங்கள் தான். தமிழ் நாவலென்றால் சமையலையும் மறந்து அவள் படிப்பாள் அதற்காக அவள் அம்மாவிடம் திட்டு வாங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு

நல்ல வேளை சசி இதற்கெல்லாம் விதி விலக்கு சின்ன வயதிலேயே வாழ்க்கையோடு ஒட்டாத ஆன்மீக தேடலே அவளின் வழியாக இருந்தது அப்பாவே அதற்கு உரமூட்டியிருக்கலாம் மெய்ஞ்ஞான சிந்தனை ஒன்றே அவரின் குறிக்கோளாக இருந்தது அவர் ஒரு ஆசிரிய திலகம் என்பதாலும் அது இருக்கலாம் அடிக்கடி அவர் கூறும் தத்துவக் கருத்துக்களைச் சிரத்தையோடு கேட்பவள் சசி மட்டும் தான். அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் அவை காதில் ஏறுவதேயில்லை. அவர்களுடைய உலகம் வேறு. அம்மா சமையலறையே கதியென்று கிடப்பவள் ருசி பார்த்துச் சமைப்பதிலேயே அவள் பொழுது மந்த கதியில் கரைந்து போகும். அப்பாவின் பேச்சைக் கேட்குமளவுக்கு அவளுக்குப் பொறுமை கிடையாது .அக்காவோ ஒரு புத்தகப் புழு. புழு மண்ணுக்குள் தலையைக் கொடுத்து மீண்டு வராத கணக்கில் அவள் நிலை கல்யாணமான பிறகு இது மாறுமா என்பதே கேள்விக் குறி தான்

மனோவக்கா இன்னும் படு மோசம். அழகு பற்றியே அவளின் விழிப்பு நிலையெல்லாம். ஒரு சினிமா நடிகை போலத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காக அவள் அதீத கவனத்துடன் செயல்படுவது வேடிக்கையாகத் தோன்றும் ஒரு காட்சி மயக்கமாக நிழல் தட்டி நின்றாலும் அவள் அதை விடுவதாக இல்லை. அவள் அப்படி நினைத்துக் கொண்டு படிக்கப் போவது கூட வெறும் உள் மாயையான நிழல் தோற்றம் தான் என்று சொன்னால் அவள் நம்ப வேண்டுமே

அவள் அப்பாவிடம் அடம் பிடித்துச் சாதித்துப் பெற்றுக் கொண்ட வரம் அந்த மல்லாகம் பள்ளிக்கூட நடை பவனி ஊர்வலம் தான் ஏழாலையிலிருந்து நடை பவனியாகப் போவதற்கே ஒரு கால் மணித்தியாலத்திற்கு மேலாகும் அதிலும் நாலைந்து தோழிகளோடு கூட்டுச் சேர்ந்து போவதென்றால் அதுவே தனிக் குஷி பக்கத்து வீட்டுக் கலாவும் அவளோடுதான் போகிறாள் இருவருக்கும் சம வயது ஒரே வகுப்பென்பதால் இன்னும் நெருக்கம்

மனோகரி மாதிரி நல்ல நிறமோ அழகோ இல்லாமல் மாநிறத்திலும் சற்றுக் குறைவாகத் தான் இருப்பது குறித்து ஏற்கெனவே மனதில் சிறு கடுப்பு அவளுக்கு அவர்களோடு திருப்பதி என்ற பெண்ணும் கூட்டுச் சேர்ந்து போகும் போது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் திருப்பதி காட்சிமயமான புற அழகில் கொடி கட்டிப் பறப்பதாக ஊரே கதை சொல்லும் அப்படியொரு பேரழகி அவளைத் துரத்தாத இளைஞர்களேயில்லை

அவளுக்கொரு காதலன் இருப்பதாக ஊரே அறியும் அவன் யூனியன் கல்லூரியில் படிக்கப் போகும் போது திருப்பதிக்குப் பின்னால் வந்து எல்லோரும் அறியப் பகிரங்கமாகப் பேசிச் சல்லாபித்து விட்டுப் போவதைக் காணும் போதெல்லாம் மனோகரி மனம் ஏங்கி நினைப்பதுண்டு “எனக்கு இப்படியொரு காதலன் கிடைக்க மாட்டானா? என் அழகுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்த மாதிரியுமிருக்கும்” தன் அழகை வெளிச்சம் போட்டுப் பிரகடனப்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பு என அவள் நம்பினாள் இடையிடையே ரெளடிப் பயல்கள் வந்து வழி மறித்துத் தொந்தரவு செய்வது பற்றி அவளுக்கு மனம் நிறைந்த பாரம் இருப்பதாக எந்த அறிகுறியுமே தென்படவில்லை தனக்கொரு காதலனைத் தேடி வலை விரித்துத் தவமிருக்கிற நிலையில் எதையுமே அவள் கணக்கில் எடுப்பதில்லை படிப்புக் கூட இரண்டாம் பட்சம் தான். சசிக்கும் இது சாடை மாடையாகத் தெரியும் இது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மனோ வாய் திறந்து தன்னிடம் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் அவள் நினைப்பதுண்டு “இது எங்கே போய் முடியுமோ ?

இராமநாதன் கல்லூரிக்குத் தன்னோடு காரில் அவள் பயணிக்கும் போதெல்லாம் அவள் அதை வெறுத்ததற்கு இது தான் காரணமென்று இப்போது அவள் நம்பினாள் உடல் மாயையைக்குள் விழுகிற இந்தக் கூத்தை எப்படித் தடுப்பது என்று புரியாமல் அவள் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் தான் அந்த விபரீதம் நடந்தேறியது

ஒரு சமயம் ஓர் அழகான வாலிபன் தன்னைப் பார்ப்பதாக சசியிடம் அவள் வந்து சொன்ன போது சசி வீட்டுப் பாடம் படித்துக் கொண்டிருந்தாள்.

“எழும்பு சசி எப்ப பாத்தாலும் உனக்குப் படிப்புத் தான் நான் சொல்லப் போற புதினத்தைக் கேள்”

அவள் குரல் கேட்டுப் பிரக்ஞை மீண்டு நிஜ உலகுக்கு வந்த சசி கேட்டாள்

“அப்படியென்ன பெரிய புதினமக்கா எனக்குத் தெரியாமலா?”

“சீ வாயை மூடு உன்ரை உலகம் வேறு படிப்பிலே கோட்டை கட்டுற எண்ணம் தான் உனக்கு. நான் அதைச் சொல்ல வரேலை சர்வானந்தனைத் தெரியுமல்லே உனக்கு. அவன் தான் “…………..மேலே பேச வராமல் வெட்கத்தில் அவள் முகம் சிவந்து நிற்பதை பார்த்து விட்டுச் சசி சொன்னாள்

“நினச்சேன் நீ சொல்லுற அந்தச் சர்வானந்தனை நானும் அறிவேன் ஒரு என்ஜினியரின் மகன் தானே அவன். கே. கே எஸ் வீதியிலை தானே அவன்ரை வீடு இருக்கு மாளிகை போல பெரிய வீட்டுக்கு முன்னாலை சுமை தாங்கியாக ஒரு சிறிய வராந்தா கூட இருக்கு சந்தைக்கு மரக்கறிச் சுமை கொண்டு போற ஆக்கள் தங்கி இளைப்பாறத்தானே அந்த மேடை”

“ஓம் சசி நான் போகேக்கை எப்ப பார்த்தாலும் அதிலேயே இருந்து கொண்டு வைச்ச கண் வாங்காமல் என்னையே அவன் பாக்கிறதை நினைச்சால் எனக்குப் புல்லரிக்குது நான் அவ்வளவு வடிவே?

சீ வாயை மூடு ஓர் அழகான வாலிபன் தான் அவன் அவன் பார்த்தால் உன்ரை அழகுக்கே அது ஒரு பெருமை மகுடம் தான் அதை நான் மறுக்கேலை ஆனால் இது நல்லபடி முடிய வேண்டுமே காதலென்றாலே அப்பா எரிந்து விழுவார் அதோடு நீ படிக்கிறதை விட்டிட்டு இதிலை இறங்கினால் அவர் உன்னைக் கொன்றே போடுவார் தயவு செய்து வாயை மூடு நான் படிக்க வேணும் “

“உனக்கு அது ஒன்று தானே தெரியும் சரி நான் போறன் இதைப் பற்றிப் பிறகு கதைப்பம்”

அவள் சொன்ன அந்தச் சொரணை கெட்ட காதல் கதையைக் கேட்டுச் சிரிப்பு வந்தாலும் அதையும் மீறிச் சசிக்கு அவள் மீது பரிதாபம் தான் மிஞ்சியது ஒருவன் பார்த்ததும் அதைக் காதலென்று நம்பி விடுவதா? சர்வானந்தனை அப்படி எடை போடுவது தவறு என்று பட்டது அவனைப் போல ஒரு பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளைக்கு இப்படியான பார்வை மேய்தல் போன்ற விஷயங்கள் வெறும் பொழுது போக்குக்காக மட்டும் தான் அவனைப் போல வாட்டசாட்டமான ஓர் அழகான இளைஞனின் உண்மையான காதலைப் பெறக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அது கிடைத்தால் அக்கா அதிர்ஷ்டசாலி. தான் பார்ப்போம்

சர்வானந்தனைக் கல்லூரிக்குக் காரில் போகும் போது கண்ட ஞாபகம் சசிக்கு அவன் எப்போதும் கண்களில் அபூர்வமான உயிர்க் களை மின்னப் பளிச்சென்று சிரித்த முகத்துடன் தோன்றுவது கண்களில் இன்னும் நிழலாடுகிறது அது வெறும் நிழல் தானென்று நம்பவும் முடியவில்லை அவன் உயிர் தரிசனமான ஒளி வெளியில் கலப்பவனாக உண்மையில் இருந்தால் மனோவக்கா பெரும் பாக்கியசாலி தான். இது நடக்க வேண்டுமே.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வெகு நாட்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் அழுது கலங்கிய முகத்துடன் மனோகரி அவளிடம் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் பெரும் திடுக்கீடாக இருந்தது தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவள் கேட்கப் போகிற கேள்விக் கணையின் கனத்தை உள் வாங்கியவாறே நிலை சரிந்து மனோகரி நிற்கிற போது அவள் மிகவும் மன வருத்தத்தோடு கேட்டாள்

“அக்கா! என்ன ஏமாத்தி விட்டானா அவன் சரி ஒன்றும் விபரீதமாய் நடக்காமல் இருந்தால் அது உன்ரை அதிர்ஷ்டம் “

“போடி பைத்தியக்காரி அவர் அந்தளவுக்கு மோசமான ஆளில்லை. நான் அவரை நம்புறன் இப்ப அதல்ல பிரச்சனை வேறொரு பூதம் கிளம்பியிருக்கு அது தான் எனக்கு மன வருத்தமாக இருக்கு “

“என்ன குழப்புகிறாய் உன்ரை காதல் கோட்டையைத் தகர்க்க ஒரு பூதமா? எனக்கு விளங்க்கேலை’

“அந்தப் பூதம் வேறு யாருமில்லை பக்கத்து வீட்டுக் கலாதான்”

“ அவள் எப்படிப் பூதமானாள்”

அவளுக்கும் என்ரை கதை தெரியும் என்னைச் சர்வானந்தம் பாக்கிறதை இண்டைக்கு வேலிக்காலை தலையை நீட்டி உண்மையோ என்று அவள் கேட்டதைக் கேட்டு நான் அப்படியே நொறுங்கிப் போனன் இதைக் கேட்க அவள் ஆரக்கா? என்ரை வடிவுக்கு கிடைச்ச ஓர் அங்கீகாரமாய் இதை நான் நம்புறன். இதைப் புரட்டிப் போடுற மாதிரி என்ன கேள்வி கேட்டிட்டாள் அவள். ஏன் சசி? நான் தெரியாமல் தான் கேக்கிறன் திருப்பதியின்ரை வால் பிடியள் இவையள். அவளை ஒருத்தன் பின்னாலை வந்து துரத்துறதை உண்மையென்று கைகுலுக்கி விட்டுப் போற இந்தக் கலாவுக்கு என்னைச் சர்வானந்தன் பாக்கிறது எதுக்குப் போய்க் கண்ணைக் குத்த வேணும்? இது கொடுமையில்லையா?”

“அக்கா நான் சொல்லுறேனென்று நீ வருத்தப்படாமல் இதைக் கேள். நீ என்ன தான் அழகாயிருந்தாலும் உன்ரை அப்பாவித்தனமான வெள்ளை மனசை எடை போடுற பார்வைக்கு முன்னாலை இதை நம்புறது கடினம் தான் அதோடு கலாவுக்கு உன் மீது சின்னப் பொறமையும் இருக்கு. அதைத் தாங்க முடியாமல் தான் அவள் இதைக் கேட்டிருக்கக் கூடும் அதுக்கு நீ என்ன சொன்னனி?

”உண்மை தான் என்று சொல்லிப் போட்டன் “

“அது பிழைக்காமல் இருக்க வேணும் அப்ப தான் உண்மையில் அவள் தலையிலை இடி விழும் நடக்குதா என்று பாப்பம்”

“நடக்கும் என்றாள் மனோகரி மனதில் வேரூன்றிய நம்பிக்கை விருட்சத்தோடு அதைச் சொல்லி விட்டு அவள் போய் விட்டாள் அந்த விருட்சம் தன் கண்களிலும் பிடிபட்ட மாதிரி அந்த ஒரு கணப் பொழுதில் ஏகமாய்க் குவியும் பொய்க் கறைகளுக்கு நடுவே ஓர் உயிரின் தரிசனமாய் அதைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் சசியும் மனம் குளிர்ந்து நின்றது வெறும் கனவல்ல சர்வானந்தனால் காதல் மலர் தூவி ஆராதிக்கப்படும் அக்கா அதிர்ஷ்ட தேவதை மட்டுமல்ல கண்களில் உயிர்க் களை ஒளி விட்டு மின்னுகின்ற ஒரு காதல் தேவதையும் கூட அவள். இந்தத் தேவதையையே காட்சி தரிசனமாகக் கண்டு கொள்ள வக்கின்றி அவள் மீது கல்லெறிந்து தூற்றுகின்ற இந்தக் கலாவுக்கு அப்படியென்ன கோபம் அக்கா மீது? திருப்பதியின் காதலை மலர் மேடை போட்டு வழிபடத் தெரிந்த அவளுக்கு அக்காவின் நிஜ தரிசனமான காதலை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிற அளவுக்கு அவள் மனம் இப்படிக் கறை குடித்து நிற்பதற்கான காரணம் அக்கா ஓர் அசடு என்பதாலும் இருக்கலாம். சமூகப் பார்வை கொண்டு அதைக் கண்டு கொள்ளத் தவறிய சர்வானந்தனின் அக்காவையே மனசளவில் ஒரு பங்கமும் நேராமல் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு விட்ட மிகப் பெரிய அளவிலான பெருந்தன்மைக்கு முன் கலாவின் மன விகற்பமான இத்தகைய கல்லெறிகள் கூடக் காணாமல் தான் போய் விடுமென்பதை மனோவக்கா முன்னிலையில் சொல்ல மறந்து விட்ட குற்றத்தை எண்ணிச் சிலுவை சுமந்து தன்னையே தண்டிக்கிற மாதிரி அவள் வாய் விட்டுத் தேம்பி அழுதது கலா பேசித் தீர்த்த பாவக்கறைக்கே பரிகாரம் தேடுகிற மாதிரி அந்த அகால வேளையில் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாய்க் கேட்டது.

கனதியான விஷயங்களை ஆழ்ந்து கிரகிக்கும் அளவுக்கு அக்கா ஒன்றும் பெரிய அறிவாளி இல்லையென்பது சமூக நாற்றம் பிடித்த உண்மையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காகக் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு அவள் காதலையே கொச்சைப்படுத்துகிற மாதிரி அக் கேள்விக் கணையின் ரணத்தையே சுமக்க நேர்ந்த பரிதாபத்தோடு அக்காவை எதிர் கொள்ள நேர்ந்த துயரத்திலிருந்து மீண்டு வரவே சசிக்கு ஒரு யுகம் பிடித்தது.கலா சிக்கியிருக்கும் அந்தச் சகதி அக்காவின் காதலையே நம்பிக்கையீனம் கொள்ள வைத்து அவளைத் தலை கொய்து போட்ட மாதிரிக் கனமான பூட்டோடு அவள் கரங்களை இறுகிப் பிணைத்திருக்கும் அந்தக் கை விலங்கு அவள் காதலுக்கு முற்றுப் புள்ளியாகிவிட்ட கதைத் தோல்வியில் வாழ்க்கை பற்றிய நம்பிக்கையொளியே காற்றில் கரைந்து போன கனவு மாதிரித் தான் சசியைப் பொறுத்தவரை இப்போதெல்லாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *