கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 2,834 
 
 

(1928ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்)

அத்தியாயம் 11-14 | அத்தியாயம் 15-18

15 – தியாகச் செல்வனும் அன்புச் செல்வியும் 

கருப்புமாளிகையை அடுத்துள்ள அரசர் இளைப்பாறும் விடுதி, வெண்மையான சலவைக் கற்களினாற் கட்டப்பட்டது. பார்ப்போருக்கு பரமானந்தத்தை விளைவிக்கும் முறையில் அம்மாளிகை அமைக்கப்பட்டிருந்தது. தூய வெண்மையாயிருந்ததுபற்றி அம்மாளிகை வெள்ளைமாளிகை எனவுங் குறிக்கப்பட்டது. இனி, நாமும் அம்மாளிகையை வெள்ளைமாளிகை’ என்றே அழைப்போம். 

அம்மாளிகைக்கு சுரேந்திரன் முதலியோர் சென்று ஐந்து நாட்காளாய்விட்டன. அரசர் வேட்டையாடும் பொருட்டு வெள்ளை மாளிகையில் வந்து தங்கியிருக்கின்றோர் என்பதை யறிந்த பிரபு இராகுலன், தனது பிரதிநிதி யொருவரை அரசரைக் காண்பான் வேண்டி அனுப்பி வைத்தான். செம்மல் சுரேந்திரனும் அப்பிரதிநிதியை எதிர் சென்றழைத்து அன்போடு பேசிக்கொண்டிருந்தான். இருவரும் பலபொது விஷயங்களைப்பற்றி உரையாடி சிற்றுண்டியருந்துவான் பிரிந்தனர். 

மக்களின் மனத்தடத்தே மகிழ்வூட்டுகின்ற மங்காத மாலை வேளை. அம்மாலை வேளையில், வெள்ளி மாளிகையைச் சுற்றியுள்ள காட்டின் ஊடே சுரேந்திரன் தனியே சென்று கொண்டிருந்தான். அம்மாளை வேளையில் அவ்விடம் கண்ணுக்கினிமையாயிருந்தது. எங்கு நோக்கினும் மலைகளும் மலைத்தொடர்களும், குன்றுகளும், அவைகளின் மேல் படர்ந்திருக்கும் செடி கொடிகளின் செழுமையும் பார்ப்போர்க்கு பரமானந்தத்தை விளைவித்தன. அவ்வடர்ந்த காட்டின் ஊடே ஒடிய மலையருவிகளில், அந்திவெய்யிலின் இனிய கிரணங்கள் பட்டு பொன்மயமாய்ப் ஒளிர்ந்தன. 

அவ்வியற்கை காட்சிகளைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் சுரேந்திரன் சென்று கொண்டிருந்தான். திடீரென எதையோ கண்டு உற்றி நோக்கினான்.ஆம் அவனைநோக்கி யாரோ ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான், கிட்ட நெருங்கியதும் அவன் யாரென உற்று நோக்க, அம்மனிதன் இராகுலனது பிரதிநியெனக் கண்டான். அம்மனிதன் சுரேந்திரனை அன்மியதும் தலை வணங்கினான். 

“எங்கு இவ்வளவு தூரம்” என்றான் சுரேந்திரன். 

“தங்களிடம் தனியே சில விஷயங்கள் கூற வேண்டியிருக்கின்றன. தங்களை தனியே சந்தித்தற்கியலாமையான் சாயங்கால நேரத்தில் இங்கு தனியே உலாவ 

வருகின்றீர்களென்பதை பணிமகன் மூலமாய் அறிந்து இங்கு வந்தேன்’ என்றான், அப்பிரதிநிதி. 

“எம்மிடம் தாங்கள் அத்துணை மர்மமாய் அறிவிக்க வேண்டிய விஷயம் யாதுளது?” என்று வினாவினான் சுரேந்திரன். 

சிறிது நேரம் ஏதுங்கூற வாளாயிருந்த அப்பிரதிநிதி சுரேந்திரனது முகத்தை உற்று நோக்கிக்கொண்டே, யான் இப்பொழுது தங்களிடம் கூறப்போகும் விஷயங்களைப் பிறரிடஞ்சொல்வதில்லையென வாக்களிப்பின். யான் தங்களிடம் உரைத்தற்கு விரும்பியவைகளைக் கூறுகின்றேன். என்றான். 

உமது இரகசியம் காப்பாற்றப்படும். அச்சமின்றி உரைக்கலாம், என்றான் நமது இளவல். 

நான் கூறப்போவது தங்கட்கு நன்மை பயக்கக் கூடியதே; இளவரசி தங்களைப் பெரிதும் விரும்புகின்றாரன்றோ? என்றான் பிரதிநிதி. 

‘அதைப்பற்றி இப்போதென்ன?” என்று சற்று அதிகார தொனியில் வினாவினான் சுரேந்திரன். 

‘தாங்கள் வெள்ளை மாளிகைக்கு வேட்டையாடும் பொருட்டு வரவில்லை யென்பதும், வேறொரு முக்கிய காரணத்தை முன்னிட்டே வந்திருக்கின்றீர்களென்பதும் எனக்குத் தெரியும் ஏன்? யான் கூறுவது உண்மை தானே?” என்றான் பிரதிநிதி. 

உம்மிடம் யாம் எதையும் ஒப்புக்கொள்ள வேண்டுமென்னும் அவசியம் ஏதேனும் உண்டோ?” என்றான் சுரேந்திரன். 

“தாங்கள் ஒப்புக்கொண்டாலும், கொள்ளாவிடினும் தாங்கள் உண்மையில் அரசரல்லவென்பதும். இம்மாயாபுரியின் உண்மையான அரசர் பிரதாபன், கருப்பு மாளிகையிலேயே இதுகாலை இருந்துவருகின்றாரென்பதும், அவரை விடுவிக்க வேண்டிய தாங்களும் ஏனையோரும் இங்கு வந்திருக்கின்றீர்களென்பதும் எனக்குத் தெரியும். அத்துடன்-‘ என்று அப்பிரதிநிதி கூறிவருகையில் சுரேந்திரன் இடைமறித்து. 

“ஐயா! நீர் ஏதேதோ உளறுகின்றீர்; நீர் கூறுவது ஒன்றையும் எம்மால் புரிந்துகொள்ளுதற்கியலவில்லை. உம்மோடு வீண் பேச்சு பேசுதற்கிலாது. நாம் போகவேண்டும்’ என்று கடுத்து அறைந்தான் சுரேந்திரன். 

“தாங்கள் காரணமின்றி என்னிடத்து கோபங்கொள்ள வேண்டாம். யான் கூறும் மாற்றம் முழுவதையுங் கவனித்து பிறகு பதிலளியுங்கள். இளவரசி தம்மை நேசிக்குமளவு பிரதாபனை நேசிக்கவில்லை. தாங்களோ வலியவரும் சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவதையொப்ப,’கடமை கடமை’ எனக் கூறிக்கொண்டு பிரதாபனைத் தேடியலைகின்றீர்கள். கிழட்டு சேனாதிபதியின். பேச்சைக் கேட்டு கெட்டுப்போக வேண்டாம். மாயாபுரியின் மணி முடியும் அரசிளஞ் செல்வியும் தானே உம்மை வந்தடையும் பொழுது, வீணே மறுத்து ஏதேதோ புராணக் கதைகளை படிக்கின்றீர். ஆழ்ந்து சிந்திப்பின், யான் கூறுவதின் உண்மை தெற்றென உமக்கு விளங்கலாம்’ என்றான் அப்பிரதிநிதி. 

“நீர் ஏதோ கனவு காண்கின்றீர் போலிருக்கின்றது. நீர் கூறுவதை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லையென்று முன்னரே கூறிவிட்டேன். மீட்டும் மீட்டும் ஏதேதோ கூறுகின்றீர். என்ன ஐயா! நாம் இன்னாரென்பதை மறந்துவிட்டீரா?” என்று சினத்தோடு கூறினான் சுரேந்திரன். 

“ஐயா, இங்ஙனம் என்னை மிரட்டினால் நான் ஏமாறிப் போவேனென்றெண்ண வேண்டாம் இவ்வுலகினில் எல்லாவிதமான சுகபோகங்களுடனுமிருக்க உமக்கு சந்தர்ப்பங்கள் பல இருந்தும், அவைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உமது பழைய தரித்திரத்தை விரும்பி வரவழைப்பதைப் பார்ப்பின், எனக்கு மிக்க மனவருத்தமாயிருக்கின்றது, வீணே மறுப்பதை விட்டு, யான் கூறுவதை தயவுசெய்து பொறுமையாய்க் கேளும். காதல் ஒன்றிற்காக எத்தகைய இழிகாரியங்களையும் மனங் கூசாது எத்தனையோபேர் செய்து விடுவிதை புத்தகங்களில் நீர் படித்ததில்லையா? தூய்மையான காதலைப் பெறுதற்காக முடிதுறந்த மன்னரும் இந் நிலவுலகில் இல்லாமலில்லை. காதலை விடுத்து அரசாட்சியை கவனிக்கப் புகுவோமாயின், தான் அரசாட்சியைப் பெறுதற்பொருட்டு தன் சொந்த சகோதரர்களைக் கொன்றவர் எத்தனைபேர்? தந்தையைக் கொலைபுரிந்தார் எத்தனைபேர்? இவைகளை தேச சரித்திரங்கூட உமக்கு எடுத்துகாட்டவில்லையா? அவர்களெல்லாம் உம்மைப்போன்று கடமையைப் கடைப்பிடித்தொழுகின், தம் வாழ்நாள் முற்றும் ஏழ்நிலையில் வருந்திக்கொண் டிருக்கவேண்டியதே” என்றான் பிரதிநிதி. 

சுரேந்திரன் ஏதோ ஆழ்ந்து சிந்தித்தான். அதற்கு மேல் அப் பிரதிநிதியிடத்து உண்மையை மறைப்பது வீண் எனக் கண்டான். பிறகு அவனை நோக்கி, “நீர் கூறுவது உண்மையே. ஆயினும் அவர்களெல்லாம் இவ்வுலகினில் நீடு நின்று இன்பமனுபவித்துவிட்டனரா? இல்லையே?”முடிசார்ந்த மன்னரும் ஓர்நாள் பிடி சாம்பராவ’ துண்மையன்றோ? நிலையற்ற தன்மையையுடைய இந் நிலவுகின் நலத்தை நச்சி, இங்ஙனம் தாம் விரும்புபவைகளைப் பெறுதற்காக பிறர்க்குத் தீங்கு செய்தேனும் வாழவேண்டுமா? ஐயா, வீண் பேச்சு பேசிக் கொண்டிருக்க நேரமில்லை; எனக்கு விருப்பமுமில்லை. நீர் என் உள்ளத்தை நன்குணர்ந்திருப்பின். இங்ஙனம் பேசத்துணியமாட்டீர். இம்மாதிரி இழிகுணங்கட்கு யான் இடங்கொடுப்பவனல்லன் என்பதை இனியாயினும் அறிந்துகொள்ளும். கடமையின் வழிநின்று ஒழுகுவதே என் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். பிறரைக் கொலை செய்தோ, பிறர்க்கு இன்னல் விளைவித்தோ பெறும் அரசாட்சியையோ, காதலையோ யான் விரும்பவில்லை, நானும் விஜயாளும் ஒருவரை ஒருவர் நேசிப்பது உண்மையேயாயினும், அந்த உண்மைக் காதலாகிய பெறுதற்கரிய பேரின்பத்தைப் பெறுதல் வேண்டிக்கூட, பிறர்க்குத் தீங்கு செய்ய ஒருக்காலும் சம்மதியேன்” என்றான் சுரேந்திரன். 

சிறிது நேரம் அப்பிரதிநிதி ஏதும் பேசத் தெரியாமல் தயங்கி நின்றான். பிறகு மீண்டும் சுரேந்திரனை நோக்கி,உமதுவரையில் நீர் கூறிக்கொண்டது சரியென வைத்துக்கொண்டபோதிலும், கவலை இன்னதென் றிதுகாறும் அறிந்திராத அக் கோமகட்கு, அவள்தன் வாழ்நாள் முற்றும் துயரத்தைக் கொடுப்பது நியாயமாகுமா? உம்மைப் பிரிந்தால். அவள் அதிகநாள் உயிர்தரியாள். எல்லா நியாயமும் தெரிந்த உமக்கு, இது தெரியாது போனதேன்? முடிவாய்க் கூறுகின்றேன். என் பேச்சைக் கேளும். நீர் விரும்பினால் இராகுலப் பிரபுவையும், அரசர்பிரதாபனையும் ஒருவருமறியாமல் கொன்று ஆற்றில் எறிந்துவிடுகின்றேன். பிறகு எவ்வித அச்சமுமின்றி, மாயாபுரியின் மணிமுடி புனைந்து எப்பொழுதும் மன்னராகத் திகழலாம். இளவரசியின் மனமகிழ்வுங் குலையாது. யான் உமக்கு செய்யும் அப்பேருதவிக்கு பிரதிபலனாக என்னை முதன் மந்திரியாக்கி-‘ என்று கூறி பேச்சை முடிப்பதற்குள் சுரேந்திரன் தன்னிரு செவிகளையும் கைகளாற் பொத்திக்கொண்டு, ‘உண்ட வீட்டிற்கு இரண்டகஞ் செய்யும் துரோகி! என்னிடம் இனி நீ ஏதுங்கூற வேண்டாம். சீக்கிரம் போய் விடு. சீச்சீ. இராகுலனது சோற்றைத் தின்று கொண்டே அவனை கெடுக்க நினைக்கும் கொடிய துரோகி, உன் முகத்தில் விழிப்பதே பெரும் பாவம். மீண்டும் நீ இங்கேயே நின்று கொண்டிருப்பாயாயின், கொடிய தண்டளைக்குள்ளாக்கப்படுவாய்’ என்று சீறினான். அதற்குமேல் அங்கு நிற்க அஞ்சிய பிரதிநிதி கருப்பு மாளிகையை நோக்கி விரைந்து சென்றான். 

சுரேந்திரனும் கமலாகரரும் பிரதாபனை அதிகமான உயிர்ச்சேதமின்றி எங்ஙனம் விடுவிக்க வேண்டுமென் பதைப்பற்றியும் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளவேண்டும் முறைமையைப்பற்றியும் ஆழ்ந்து யோசித்து, தம் வீரர்கட்கு உசிதம் போல் சொல்லி, ஒவ்வொருவரையும் திறமையாக நடந்துகொள்ளுபடி கற்பித்தனர். கருப்பு மாளிகையில், எப்பக்கமுள்ள அறையில் பிரதாபன் வைக்கப்பட்டிருக்கின்றானென்ற விஷயம் தெரிந்துகொள்ள முடியாமை யான், அவர்களிருவரும் தயங்கித் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அந்நிலையில் அவர்கட்கு தகுந்ததோர் உதவி கிடைத்தது. 

சுரேந்திரன் மாயாபுரியின் எல்லைக்குள் சென்றஞான்று, ஆங்குள்ள சிற்றுண்டிச் சாலை சொந்தக்காரனது இளம் மகளொருத்தி எதிர்ப்பட்டு சுரேந்திரனை வரவேற்றாளென்று முன்னர் கூறியது வாசகர்கட்கு ஞாபகமிருக்கலாம். அச்சிறுமி சுசீலை யென்பாள் இராகுலனது கருப்பு மாளிகையில் ஒரு பணிமகளாய் அமர்த்தப்பட்டிருந்தாள். அழகிய மகளிரெல்லாம் தனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாய் நினைந்துகொண்டிருக்கும் பிரபு இராகுலன் அவளது அழகிய வதனத்தையும் பணிவையும் பலமுறைக் கண்டு மகிழ்ந்து அவளை தன் வேலைக்காரிகளில் ஒருத்தியாக அமர்த்திக்கொண்டான். 

கூரிய அறிவு வாய்ந்த அச்சிறுமி, அரசர் பிரதாபன் அம்மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை எங்ஙனமோ அறிந்து கொண்டாள். அங்ஙனம் அறிந்து கொண்டதும், எப்படியாயினும் முயன்று அவனைக் காப்பாற்றிவிட வேண்டுமென்றெண்ணி, தன்னால் எப்படி அப்பெருங்காரியம் சித்திக்குமென்பதைப்பற்றி அடிக்கடி வருந்திக்கொண்டிருந்தாள். 

அந்நிலையில் ஒரு நாள் இராகுலனும் மற்றொரு பிரபுவும் மிக்க மர்மமாய் உரையாடிக் கொண்டிருந்ததை அச்சிறுமி உற்று கேட்டதில், மாயாபுரியின் இப்போதைய அரசன் வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பதாயும், பிரதாபன் கருப்புமாளிகையில் கடுங்காவலில் வைக்கப்பட்டிருப்பதாய் அவன் சிறிதும் அறிந்து கொள்ளக் கூடாதென்றும், ஏதேனும் தந்திரத்தாலேயோ நயவஞ்சகத்தாலேயோ அவனையும் சேனைத் தலைவரையும் ஒழித்து விட்டால் தான், தான் நிம்மதியாயிருக்க முடியுமென்றும் பேசிக்கொண்டிருந்தது. அவள் காதுக்கெட்டியது. 

இம்மாதிரியான கொடியவர்களிடம் தான் வேலைக் கமர்ந்ததைப்பற்றி சிறிது வருந்தினாள். அங்ஙனம் அமர்ந்திருப்பதினாலேயே அக்கொடியவர்களின் கருத்தை சிறிதாகிலும் உணர்ந்து,. பிறர்க்கு உதவிசெய்யக் கூடிய சந்தர்ப்பங்கிடைக்கிறதென்ற எண்ணம் அவள் மனத்தே உண்டாக சிறிது சமாதானமுற்றாள். 

அன்றுமுதல் அவ்விளஞ் சிறுமி, தான் எங்ஙனம் அப்புது அரசரிடஞ் சென்று இவ்விஷயங்களைத் தெரிவிப்பதென்பதை எண்ணி எண்ணி மனம் நொந்தாள். அதிலேயே அவளது மனஞ் சென்றுகொண்டிருந்தது. கைம்மாறு கருதாது, பிறர்க்கு உதவி செய்யவேண்டுமென்னும் எண்ணமே அவள் மனத்தில் போராடிக் கொண்டிருந்தமையான் ஊணை மறந்தாள்; உறக்கத்தை நீத்தாள். புது அரசர் எம்மாதிரி எம்மாதிரி இயல்புடையவரோ? உண்மையில் அரசுரிமைக் குரியரான பிரதாபன் உயிருடனிருப்பதை புதிய அரசர் அறியின்.அதனால் பிரதாபுக்கு இன்னும் அதிகப்படியான தீங்கு ஏதேனும் நேரிடக்கூடுமோ? என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் புண்ணாகினாள். ஆயினும். பிரதாபன் இங்கிருப்பதை இப்போதைய அரசன் அறியக்கூடாதென்று இராகுலனும், இன்னொரு பிரபுவும் பேசிக்கொண்டிருந்தது அவள் ஞாபகத்துக்கு வந்தமையான், புதிய அரசர் பிரதாபுக்கு தீங்கிழைப்பவரல்லர் என்ற எண்ணமே அவள் மனத்தில் உறுதிப்பட்டது. அன்றியும், இப்போதைய அரசரை பிரதாபென்றே எல்லாரும் எண்ணிக்கொண்டிருப்பதாலும், அவர் பிரதாபல்லாத வேற்று மனிதன் என்பது எவருமே அறியமுடியாத பரம இரகசியமாக யிருப்பதாலும் இருவரும் உருவில் ஒன்றாயிருக்கக் கூடுமென்றெண்ணினாள். அங்ஙனம் அவள் எண்ணியபொழுதே சில மாதங்கட்கு முன்னர் தன் தந்தையின் விடுதியில் தான் சந்தித்த மனிதராயிருக்குமோ என்ற ஐயமும் இடையிடையே எழுந்து அவள் மனத்தை உலப்பியது. நன்மை ஏற்படினும், தீமை ஏற்படினும் வெள்ளை மாளிகைக்குச் சென்று அரசரைக் கண்டுவரவேண்டுமென்னும் முடிவுக்கு வந்தாள். 

அன்றைக்கு மறுநாள், கருமமே கண்ணாயிருந்த சிறுமி சுசீலை, தான் எண்ணியவாறு, ஓர் போர்வையால் உடம்பு முழுவதையும் மறைத்துக்கொண்டு மெல்ல மெல்ல, வெள்ளை மாளிகையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். அப்போது ஆங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த காவலன் ஒருவன் அவளை இடைமறித்து “நீ யார்? எங்கு செல்கிறாய்?” என்று உசாவினான்?. நான் அரசரைப் பார்க்க வேண்டும். என்னை அவ்விடத்திற் கழைத்துச் செல்லுகின்றாயா?” என்றாள் சுசீலை. அக் காவலனும் உள்ளே சென்று அனுமதிபெற்றுவர, இருவரும் அரசரிருப்பிடஞ் சென்று, அரசரைக் கண்டு வணங்கினர். 

அச்சமயத்தில் அரசர் முகத்தைக் கூர்ந்து கவனித்த அச் சிறுமி, “ஆ, இஃதென்ன ஆச்சரியம்!” என்று கூவி அரசர் முகத்தை மீண்டும் உற்று நோக்கினாள். 

இங்ஙனம் தன்னை உற்றுநோக்கிய சிறுமியைச் சுரேந்திரன் கவனித்தான். அப்பொழுது அவள் இன்னாரென்பதை உடனே உணர்ந்துகொண்ட நமது கதாநாயகன். காவலனை விளித்து வெளியே போகும்படி கட்டளையிட, அவனும் உடனே அவ்விடத்தை விட்டகன்றான். 

எதற்காக அச்சிறுமி தன்னை அங்கு வந்து காண விரும்பினாளென்பதைப்பற்றி சுரேந்திரன் யோசித்துக் கொண்டிருக்கும்போது. அச் சிறுமி “ஆம், அந்த முகந்தான்! ஒருமுறை பார்த்தால் மனதிற் பதியக்கூடிய அம்முகத்தை மறக்க முடியுமா? எந்த இடத்தில், எந்த வேடத்திலிருந்தாலும் அந்த முகத்தை எளிதில் அறிந்து கொள்வேன” என்றாள். 

“குழந்தாய், அதிருக்கட்டும், இப்போது நீ என்னைப் பார்க்க விரும்பிய காரணம் யாது?” என்று வினாவினான் சுரேந்திரன். 

உடனே சுசீலை, தான் இராகுலப் பிரபுவிடம் வேலைக்கம்ர்ந்திருப்பது பற்றியும், அக் கருப்பு மாளிகையிலேயே பிரதாபனை சிறை வைத்திருப்பதைத் தான் அறிந்தது முதல் தன் மனம் பட்ட பாட்டையும், இராகுலனும் மற்றொரு பிரபுவும் பேசிக்கொண்டிருந்ததைத் தான் அறிந்ததுமுதல், தன்னால்இயன்ற அளவு முயன்று எங்ஙனமாயினும் அச்சதியாலோசனை நிறைவேறவொட்டாமற் தடுப்பதோடு, பிரதாபையும் ஏதேனும் முயற்சிசெய்து விடுவிக்க வேண்டுமென்று தான் கொண்ட தீர்மானத்தையும் சுரேந்திரனிடந் தெரிவித்ததன்றி, அதற்காகவே அவனைப் பார்க்க விரும்பியதாகவுங் கூறினார். 

“கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த” தனைய கருப்பு மாளிகையிலேயே தற்போதிருக்கும் சிறுமி சுசீலையின் உதவி கிடைத்ததானது சுரேந்திரனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்தது. அவன் அவளை நோக்கி, ‘என்னை எங்ஙனமறிந்துகொண்டாய்?” என்று உசாவினான். 

யான் தங்களை அறிந்து கொண்டது ஓர் வியப்பல்ல. தங்களை அறிதற்கு முன்னிருந்த, என் மனக் குழப்பமெல்லாம் தங்களைக் கண்ட வினாடியே தீர்ந்துவிட்டது. அச்சமொழிந்து ஆனந்தமடைந்தேன்’ என விடையிறுத்தாள் சுசீலை. 

அப்பால் சுரேந்திரன் கமலாகரரை அழைப்பித்து சுசீலை மொழிந்த மாற்றத்தைத் தெரிவிக்க, அவர் அதற்கு மேல், செய்ய வேண்டுவனவற்றை விவரமாய்த் தெரிவித்து, அச்சிறுமியை கருப்பு மாளிகையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஆங்கு வந்து தெரிவிக்குமாறு ஆக்ஞாபித்தார். 

இராகுலனின் சோற்றைத் தின்றுகொண்டு அவனுக்கே துரோகஞ்செய்வது கேவலம், இழிந்தோர்செய்கையென்று சுசீலை முதன் முதல் நினைந்தாளாயினும், அவன் செய்வது முற்றும் அட்டூழியமும், அநியாயமுமாய் இருத்தலினால் தான் அவனுக்கு மாற்றஞ்செய்வது குற்றமாகதென்ற முடிவுக்கு வந்ததும், அவர் கூறியவண்ணமே செய்வதாய் சுரேந்திரனிடத்தும் கமலாகரரிடத்தும், வாக்குறுதி செய்துவிட்டு, அவ்விருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவனிமிருந்தகன்றாள். 

அன்றுமாலை மணி ஐந்திருக்கலாம். இனிமையான காற்று சில்லென்று மேல்வீசியது. சுரேந்திரன் குன்றுகளின் ஊடே உலாவிக்கொண்டிருந்தான். இவன் மனம் பற்பல விஷயங்களைச் சுற்றிச் சுழன்று சோதித்துக் கொண்டிருந்தது. தன் சிந்தனையிலேயே மனதைச் செலுத்தி தன்னையும் உலகையும் மறந்து உலாவிக்கொண்டிருந்த சுரேந்திரனுக்கு, பொழுதுபோனதே தெரியவில்லை. பகலவன் மேற்றிசையில் மறைந்தான். சிறுகச் சிறுக இருள் எங்கும் பரவிக்கொண்டிருந்தது. 

திடீரெனத் திரும்பிப் பார்த்தான்.எங்கணும் இருள் சூழ்ந்துவிட்டதையறிந்த சுரேந்திரன், மாளிகையை நோக்கி விரைவாக நடக்கலுற்றான். அப்பொழுது அயலிலிருந்த மரப்பொதும்பில் யாரோ சிலர் பேசும் அரவம் அவன் காதுக்கெட்டியது. உடனே தலை நிமிர்ந்து தன் மனப் பிராந்தியென நினைத்து மறுபடியும் மாளிகையை நோக்கி நடந்தான். 

அப்போது அவனது வலது கையில் யாரோ பின்புறமாய் நின்று ஒதுங்கிக் குத்தியதாய்த் தெரிந்தது. வீரிட்டலறிக் கொண«¢ட திரும்பிப் பார்த்தான். அவனால்பார்க்க முடியவில்லை. அதிகமான இரத்தம் அவனது உடலினின்றும் வெளிப் போந்தமையான் மயக்கம் வந்து கீழேசாய்ந்தான். அந்நிலையில், அவன் கீழே விழுந்துவிடாதபடி யாரோ ஒருவர் அவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார். 

சுரேந்திரன் மயக்கம் நீங்கிக் கண் விழித்தபோது இராவாகிவிட்டது. அவன் வெள்ளை மாளிகையில் தன் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.அவன் படுக்கைக்குச் சமீபத்திற் கிடந்த மேசை ஒன்றின் மீது ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. 

சேனைத் தலைவர் -தியாகத்தினும் குணத்தினும் ஒப்புயர்வற்ற கமலாகரர் சுரேந்திரனருகே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். சுரேந்திரன் கண் விழித்தவுடன், தான் உலாவிட்டுத் திரும்பி வருங்காலையில் தன் வலதுகைத்தோளில் யாரோ குத்திவிட்டு ஒடியதும். தான் மயக்கம் வந்து கீழே விழப்போகும் அமயத்து தன்னைக்கீழ்ந்து விடாது ஒருவர் தாங்கிப் பிடித்துக்கொண்டதும் அவனது நினைவில் தோன்றின. அதுவன்றி பல்வேறு பட்ட நினைவுகளும் அவன் மனத்தில் தோன்றின. இங்ஙனம் தன் மனத்தில் தோன்றிய நினைவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தமையால் இவையெல்லாம் நினைவோ அல்லது கனவோ என்று அவன் ஐயுற்றான். 

சுரேந்திரனது மனக்கலக்கத்தை யறிந்த சேனைத் தலைவர் அவனை நோக்கி அன்பாக, “அரசே, தனியே உலாவ வெளியிற் போக வேண்டாமென்று எத்தனை முறைக் கூறியும் கேட்கவில்லை. தாங்கள் உயிரைப் போக்க பல விரோதிகள் காத்திருக்கின்றனர். வெட்ட வெளியில் அகப்பட்டு கொண்டபோது பதுமினிப் பெருமாட்டியாலன்றோ காப்பாற்றப்பட்டீர்கள்? அப்பெருமாட்டியும் அவர்தங் கணவரும் தங்களை அரண்மனைக்குக் கொண்டு வந்துசேர்த்தபோது, அவர்கள் தங்களிடத்துக் கூறிய எச்சரிக்கை மொழிகளை மறந்துவிட்டீர்களா? சுசீலைக் கூறிய மொழிகளையாயினும் கவனிக்க வேண்டாமா? ஒன்றையுங் கவனிக்காததினாலேயே தங்கட்கு இத்தகைய இடுக்கண் நேர்ந்தது’ என்றார். 

பெரியீர், தாங்கள் கூறுவது உண்மையே. என்னை இங்ஙனம் கொலை செய்ய முயன்றவர் யாவர்? நான் இங்கு யாரால் கொண்டுவரப்பட்டேன்.” என்றான் சுரேந்திரன். 

“இன்னாரென்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, ஏனெனில் அப்பாதகர்கள் ஒடிவிட்டனர்.ஆயினும், அவர்கள் இராகுலனது ஆட்களாய் தான் இருக்க வேண்டுமென யூகித்தேன்” என்றார் கமலாகரர். 

“நீங்கள் அங்கு எதற்காக வந்தீர்கள்” என்று வினாவினான் சுரேந்திரன். 

“அதிக நேரமாகிவிட்டமை யான்,நான் தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன். தாங்கள் தனியே செல்லுந்தோறும் எனக்கு மனக்கலக்கமாயிருப்பது வழக்கம். ஆகவே, இன்று தங்களை வெகு நேரம் எதிர்பார்த்தும் வாராமையான் எங்கும் தேடிக்கொண்டு அங்கு வந்தேன், அப்பொழுது அங்கு நேர்ந்த கொடிய காட்சியைக் கண்டு மனங்கலங்கி, தங்களைக் கீழ் வீழ்ந்துவிடாது தூக்கிக் கொண்டு இவண் வந்தடைந்தேன்” என்று விடையிறுத்தார் பெரியவர். 

“அன்பார்ந்த பெரியீர்! நான் உங்கள் மாட்டு எத்துணை நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்! எத்தனையோ முறை தாங்கள் எனக்கு புத்தி போதித்தும் யான் கவனிக்காமையான் எனக்கு இத்தகைய துன்பம் நேர்ந்தது. தாங்கள் என்னிடத்துக் காட்டும் இத்தகைய பேரன்பிற்கு கைம்மாறேதுஞ் செய்ய வகையறிகிலேன்” என்று சுரேந்திரன் அன்போடு கூறினான். 

கமலாகரர் ஒருவர் காதுக்கும் எட்டாத மெல்லிய குரலில் அவனை நோக்கி, “குழந்தாய்! நான் 

உனக்குச் செய்ததாய்க் கூறும் இச்சிறு உதவி, ஜீவகாருண்யமுள்ள ஒவ்வொரு மனிதனும் செய்யக் கூடியதே. ஆனால், நீ எனக்குச் செய்துள்ள பேருபகாரங்கள் – எத்துணை மடங்கு சிறந்ததென்பதை எண்ணிப்பார்! எனக்குமட்டுமா? தேசத்திற்கு, தேச மக்கட்கு, அரசர் பிரதாபுக்கு-இன்னும் எத்தனையோ கூறலாம். இம்மாயபுரியின் அதன் அரசரும் உனக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றனர். இவைகளைப்பற்றி பேசுதற்கு இது ஏற்ற சமயமல்ல. உனது புயத்தில் பலமான காயம் பட்டு அதிகமான இரத்தம் வெளிப்பட்டுவிட்டது. இந்நிலையில் நாம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கலாகாது. 

சற்று அமைதியாய் நித்திரை செய் நான் போகிறேன்” என்று அன்பொழுகக் கூறினார். 

பிறகு சேனைத் தலைவரின் உத்திரவைப்பெற்ற பணிமகனொருவன், சுரேந்திரனுக்கென்று சித்தப்படுத்தித் தயாராக வைத்திருந்த ஆகாரத்தை அவனுக்குக் கொடுத்து அதை உண்ணும்படி வேண்டினான். அவனும் அதற்கிசைந்து ஆகாரத்தை உட்கொண்டான், பின்பு கமலாகரர், உற்சாகமூட்டும் சில மருந்துகளை அவனுக்குக் கொடுத்தார். இச்சமயத்தில் மருத்துவர் வந்து அவனுக்குத் தூக்கம் வரும்படி மருந்து கொடுத்துத் தூங்க வைத்து விட்டார். 

மறுநாள் பொழுது புலர்ந்தது. முந்திய நாள் மாலை மலைகளின் ஊடே அரசர் உலாவிக்கொண்டிருந்தபொழுது யாரோ ஒருவன் அரசரின் வலதுகை புயத்தில் குத்திவிட்டு ஒடிவிட்டதாயும், அதனால் பலவீனமுற்ற அரசர் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமலிருப்பதாயும் எங்கணும் பரவிய செய்தி இளவரசி விஜயாளின் காதுக்கும் எட்டியது. 

அதைக் கேள்வியுற்றது முதல் அவள் ஓர் உயிரற்ற பதுமை போலானாள். அவளது மனது எதிலுஞ் செல்லவில்லை. அவள் அடைந்த வேதனையும் சங்கடமும் கூறத்திறமன்று, அவனை உடனே சென்று பார்க்காவிடின் தன் உயிரே போய்விடுமென்றுணர்ந்தாள். அவளை வெள்ளை மாளிகைக்குச் செல்ல வேண்டாமென்று பலர் தடுத்தனர் ஆயினும், அவள் கேட்டாளில்லை. ஆகவே அவ்வன்புச் செல்வி வருதற்குரிய ஏற்பாடுகள் தாமதமின்றி நடைபெற்றன. அவளைப் பின் தொடர்ந்து செல்லுதற்கு பலர் ஆயத்தமாயினர். 

அன்று பிற்பகல் மணி மூன்றிருக்கும், கமலாகாரர் சுரேந்திரனது படுக்கையறைக்குள் வாடிய முகத்தோடு நுழைந்தார். அவர் சுரேந்திரனை அண்மி “மெதுவாக, இளவரசி உங்கட்குக் காயம்பட்டதைக் கேள்வியுற்று இவண் நோக்கி வருகின்றார். நான் எதிர் சென்றழைத்து வருகின்றேன்” என்றார். 

“விஜயசுந்தரி இங்கு வந்துவிடின், நமது காரியங்கள் நடைபெறுதற்கு ஏதும் இடைஞ்சல் ஏற்படுமே” என்றான் சுரேந்திரன். 

“என்ன செய்கிறது! நம்மால் ஆகக்கூடிய ஒன்று மில்லை. எல்லாம் தெய்வச் செயல். உனக்கும் உடம்பு நலமாகி, நல்ல நிலைமைக்கு வரவேண்டாமா? அது வரையிலும் இளவரசி இங்கிருக்கட்டும்” என்றார் கமலாகரர். 

“ஐயோ! விஜயாளின் மாசற்ற அன்புப் பெருக்கைத் தடுக்கயான் விரும்பவில்லை. ஆயினும் கூடிய சீக்கிரம் அரசரை விடுவிக்க வேண்டியது நமது கடமையன்றோ? இன்னுஞ் சிறிது நாட்கள் பிரதாபை விடுவியாதிருப்பின் அவரது உயிர்க்கே அபாயம் நேரக்குடுமென்று சுசீலைக் கூறினாளன்றோ?” என்றான் சுரேந்திரன். 

கமலாகரர் துக்கத்தோடு பெருமூச்சு விட்டு “உண்மையே. நாம் என்ன செய்கிறது? வருவது வந்தே தீரும். இளவரசி இங்கிருந்து எவ்வளவு சடுதியிற் செல்லுகின்றாரோ அவ்வளவுக்கு நல்லது. சரி, நேரமாகிறது. நான் போய் விஜயாளை வரவேற்கவேண்டும்” என்றுக்கூறி விட்டு அவ்விடத்தினின்றும் வெளியே சென்றார். 

சாயங்காலம் மணி ஐந்தடித்தது. அரசிளஞ்செல்வி விஜயாள், மாந்தர் பலர் பின்தொடர்ந்துவர வெகு பரபரப்போடு வெள்ளை மாளிகையினுள் நுழைந்தாள். 

சுரேந்திரன், விஜயாள் கவலையடையக் கூடுமென்றெண்ணி படுக்கையிற் படுத்திராமல் எழுந்து உட்கார்ந்திருந்தான். விஜயாளின் உயர்ந்த குணங்களும், தன்னிடத்து அவள் கொண்டுள்ள மாசுமறுவற்ற அன்பும் அவன் மனத்தைக் கவர்ந்தன. அவனும் அவளைத் தன் உயிரினும் மேலாகப் பாவித்தாளகள்; அவள் கண்களில் மனத்துயரால் ஒரு துளி நீர் தோன்றுமாயின், அதைக் காண அவன் சகியான். 

திடீரென அறைக் கதவு திறக்கப்பட்டது. விஜயாள் பரபரப்போடு ஒடிவந்து சுரேந்திரனது இரு கைகளையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள். அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. 

“என் அன்பிற்குரியாய்! கண்ணீர் உகுக்கின்றாயே? என் உடம்பு நலமாகவேயிருக்கிறது. வீண் வதந்தியை உண்மையென்று நம்பி வருந்துகின்றாய்போலும்,எவனோ ஒருவன் என் தோளில் குத்திவிட்டுச் சென்றது உண்மையே. ஆயினும் அஃதொரு பலமான காயமன்று” என்று சுரேந்திரன் அன்பொழுகக் கூறினான். அவளைப் பார்க்கவும் சுரேந்திரனுக்கு அவனையுமறியாமல் துக்கம் பொங்கியது. தன் கண்களில் அரும்பிய இரண்டொரு நீர்த்துளிகளை எத்துணை அடக்கமுயன்றும், அவனால் அடக்க முடியவில்லை. 

சற்றுநேரஞ் சென்று சமாதானம் அடைந்தவளாய்க் காணப்பட்ட விஜயாள், சுரேந்திரனை நோக்கி ‘எங்ஙனமாயினும் ஆகுக., முற்றிலும் உடல்நலமடையும் வரையில் யான் தங்களைத் தனியே விட்டுச் செல்லேன். நான் அங்ஙனம் செல்வேனாயின் மனச்சலிப்பே என் உயிரைப் போக்கிவிடும். ஆதலால் அரசே! நான் தங்களோடு தான் ஊர்க்குத் திரும்புவேன். அப்பொழுதுதான் என் மனம் சாந்தியடையும்” என்று உருக்கமாய்க் கூறினாள். 

சுரேந்திரன் சிறிதுநேரம் சிந்தனையிலாழ்ந்திருந்து பிறகு விஜயசுந்தரியை அன்போடு பார்த்து, “நல்லது இனி என்னைவிட்டுச் செல்லவேண்டாம்” என்றான். 

அதே சமயத்தில் அறைக்கதவு திறக்கப்பட்டது. சேனாபதி உள் நுழைந்தார். 

16 – கருப்பு மாளிகை 

செம்மல் சுரேந்திரன் அரசாட்சியை மந்திரிவசம் ஒப்புவித்துவிட்டு வெள்ளை மாளிகைக்குவந்து ஆறுவாரங்களாய் விட்டன. சுரேந்திரன் இப்போது நல்ல உடல்வன்மையைப் பெற்றான். இளவரசியும் சுரேந்திரனோடு அம்மாளிகையிலேயே தங்கிவிட்டாள். அதிக நாட்கள் ஆய்விட்டமையான், வெகு சீக்கிரத்தில் பிரதாபை விடுவிக்கக் கூடிய முயற்சியை மிக்க மர்மமாய் சேனைத் தலைவரும் சுரேந்திரனும் செய்துகொண்டிருந்தனர். 

கருப்பு மாளிகையில் இராகுலன் உட்பட மற்றெல்லோரும் சிறுமி சுசீலையின் பேரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆகவே, அவள் அக்கருப்பு மாளிகையில் உள்ள எவ்விடத்திற்கும் போகவர அனுமதிக்கப்பட்டிருந்தது. அவள் கருதிய கருமத்தை இனிது முடித்தற்கு ஏதுவாய் அமைந்திருந்தது. 

அவள் பணிவும் அன்பும் இயல்பிலேயே வாய்க்கப் பெற்ற அழகிய சிறுமியாதலின், பொதுவாய் அம் மாளிகையிலுள்ளார் எல்லாரும் அவளை நேசித்து வந்தனர். அங்ஙனமே பிரதாபைக் காவல் புரியும் காவலரிருவரும் அவளிடத்து அன்பு பாராட்டிவந்தனர். நாட் செல்லச் செல்ல, அக் காவலரில் ஒருவன், சுசீலையிடத்துக் கொண்டிருந்த சாதாரண அன்பு காதலாய் மாறியது. அவள் அவனை நேசித்தாளோ இல்லையோ, அவன் அவளை அளவு கடந்து நேசித்தான். அங்ஙனம் அவள் அக்காவல் வீரனது நட்பைச் சம்பாதித்துக்கொண்டது, பெரிதும் அனுகூலத்தைத் தந்தது, 

நாள்தோறும் சுசீலை, அக்காவல் வீரனோடு நகைச்சுவை ததும்ப பேசிக்கொண்டிருப்பாள், அவனும் அவள் கூறுவனவற்றை மகிழ்ச்சியோடு கேட்டு ஆனந்தமடைவான். அவள் அவனோடு விளையாட்டாக பேசிக்கொண்டே சிற்சில சமயங்களில், பிரதாபைச் சிறை வைத்திருக்கும் அறைக்குள்ளேயும் போவதுண்டு. அங்ஙனம் அவள் போகுந்தோறும் அக்கம்பியில்லா சாளரத்தின் மேலேறி ஆற்றில் ஒடும் வெள்ளத்தை உற்று நோக்குவாள். அங்ஙனம் அவன் செய்வதை பிரபு அறிவாராயின், தன்னை மிகவுங் கோபித்துக்கொள்ளக் கூடுமென்று அக் காவல் வீரன் அஞ்சினானாயினும், அவளது விருப்பத்தைக் கெடுக்க மனமின்றி பேசாதிருந்துவிடுவான். மற்றவனும் அவள் மாட்டு அன்புடையவனாதலின் ,முன்னவனைப் போலவே யிருந்துவிடுவான். 

இவைகளையெல்லாம் அப்பொழுதைக்கப்பொழுது சுசீலை வெள்ளை மாளிகைக்கு வந்து சுரேந்திரனிடம் தெரிவித்துவிடுவாள். அவனும் கமலாகரரோடு ஆலோசித்துக் கொண்டு அவள் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றித் தெரிவிப்பான்.

இஃதிங்ஙனமிருக்க, சுரேந்திரனும் கமலாகரரும் அரசர் பிரதாபை விடுவிக்கக்கூடிய முயற்சியைத் துரிதமாக செய்ய ஆரம்பித்தனர். சேனைத் தலைவரும், பொறுக்கி யெடுத்த ஐம்பது சிறந்த வீரர்களும் கருப்பு மாளிகையை இரவில் யாருமறியாவண்ணம் முற்றுகையிட்டுக் கொள்ளுவதென்றும், சுரேந்திரன் ஆற்றின் பிரவாகத்தில் நீந்திக்கொண்டு பிரதாபை சிறை வைத்திருக்கும் அறையின் ஆற்றின்பக்கமுள்ள கம்பியில்லா சன்னலருகிற் செல்லுவதென்றும், அதற்கிடையில் சுசீலை, பிறர் ஐயுறாவண்ணம் எப்போதும் செய்வதைப்போலவே அக் கம்பியில்லா சாளரத்திலேறி அதன்மேல் ஒரு நூலேணியைக் கட்டித் தொங்கவிட்டு வைப்பதென்றும், அதன்மேலேறி சுரேந்திரன் அவ்வறையில் மெதுவாய்க் குதித்து, பிரதாபின் தளைகளைக் களைந்தெறிவதென்றும், காவல் வீரர் விழித்துக் கொண்டு சுரேந்திரனைத் தாக்கினால், அவனும் அவர்களோடு பொருவதென்றும், அதற்குள் மாளிகையைச் சுற்றி மற்ற வீரர் முற்றுகையிட்டிருக்க, சுசிலையின் உதவியினால், கமலாகரரும் 20 வீரர்களும் மாளிகையினுட்புகுந்து, அச்சிறுமி வழிகாட்ட பிரதாபின் அறைக்கருகில் வந்து வாயிற் காவலனைக் கட்டிப்போட்டுவிட்டு, அறைக் கதவை திறந்துகொண்டு உட்புகுவதென்றும் தீர்மானித்துக் கொண்டனர். யாரும் எதிர்த்தால், யுத்தம் புரிவது இன்றியமையாதது, என்று ஏற்பட்டதவறி ஒருவரையும் தாக்குவதில்லை யென்றும், கூடுமான வரையில் உயிர்ச்சேதமின்றி பிரதாபை விடுவிக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு வீரர்கட்கும் சுரேந்திரன் கடுமையான உத்திரவிட்டான். இவ்வேற்பாடுகளெல்லாம் மிக்க இரகசியமாகவே நடைபெற்றமையால், அன்புச் செல்வி விஜயம் இவைகளில் ஒன்றையும் அறிந்துகொள்ளவில்லை. நிற்க. 

அரசர் பிரதாபை விடுவிக்க குறிப்பிடப்பட்டிருந்த இரவும் வந்தடுத்தது. முன்னரே ஏற்படுத்தியிருந்த ஏற்பாட்டின்படி, வீரர்கள் ஐம்பதின்மரும், ஆயுதபாணிகளாய்ச் சென்று கருப்பு மாளிகையை முற்று கையிட்டுக் கொண்டனர். காரிருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கருப்பு மாளிகையிருள்ளார் ஏதுமறியாமல் நன்றாய் அயர்ந்து நித்திரை போயினர். சிறுமி சுசீலை அங்குமிங்கும் ஒடிஎன்னென்னவோ செய்து கொண்டிருந்தாள். அவளது நெஞ்சு பட பட என்றடித்துக் கொண்டிருந்தது. 

சுரேந்திரன் இளவரசியிடஞ் சென்று, அவளை நோக்கி “எஞ்சியுள்ள பகைவரைக் கெடுத்ததற்குரிய சிறந்த ஆலோசனை யொன்றுண்டு; அதனையாம் தனித்துச் செய்யவேண்டும். ஆதலால், கருப்பு மாளிகைக்குச் சென்று வரவேண்டும். எல்லா பிரபுக்களும் அங்கு வந்து கூடியிருக்கின்றனர்; சேனைத் தலைவரும் அவ்விடத்திற்குத் தான் சென்றிருக்கிறார். நான் போய், பிரபுக்கள் சபைக் கலைந்ததும் உடனே திரும்பி வந்து விடுகின்றேன்” என்றான். துக்கம் அவனது தொண்டையை அடைத்தது. அவளைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாகுமோ வென்ற எண்ணம் அவனைப் பைத்தியங்கொள்ளும்படி செய்தது. ஆயினும் பெரிதும் முயன்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு விஜயாளிடம், போக விடையளிக்குமாறு கேட்டான். 

அந் நாள்ளிரவில் சுரேந்திரன், கருப்பு மாளிகைக்குச் செல்ல விடை கேட்டதானது, விஜயாளுக்குச் சொல்லொணா சஞ்சலத்தை விளைவித்தது. அங்ஙனம் அந்த அர்த்த இராத்திரியில் போவது ஒருவிதமான துர்க்குறி என்று அவள் மனத்துள்ளிருந்து ஏதோ ஒன்று 

கூறினது. அவள் அவனைக் கருப்பு மாளிகைக்குள் அனுப்பவிரும்பவில்லையாயினும், எஞ்சியுள்ள பகைவரைக் கெடுத்தற்குரிய ஆலோசனை யொன்று செய்யப்போவதாகச் சுரேந்திரன் தெரிவித்தமையான், தான் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாதென்றெண்ணி, துயரத்தோடு அவன் போகுமாறு விடையளித்தாள். 

அவளது அனுமதியைப் பெற்ற சுரேந்திரன், அவ்விடத்தினின்றும் விரைவாக வெளியில் வந்தான். வாசலில் அவனுக்காகக் குதிரை யொன்று காத்திருந்தது. அப்புரவியிலமர்ந்து கருப்பு மாளிகையை நோக்கிச் செல்வானாயினன். 

மாளிகையருகிற் சென்றதும் குதிரையின் வேகத்தைச் சிறிது தளர்ததி மெதுவாக நடத்தினான். அதற்குள் சேனாதிபதி அவனை நெருங்கி அவனது கையைப் பிடித்துக் கீழே இறக்கினார். இருவரும் ஏதும் பேசவில்லை. ஆற்றங்கரையை நோக்கிச் சென்றனர். 

அவர்கட்கு சற்று தூரத்தில், இராகுலனது வேவுகாரன் ஒருவன், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே உலாவிக்கொண்டிருந்தான். ஆற்றுநீர் வெகு வேகமாய் 

ஒடிக்கொண்டிருந்தது. ஆற்றின் பிரவாகத்துக் கண்ட கமலாகரர், சுரேந்திரனது காதில் மிக்க இரகசியமாக, ஆற்றில் இறங்க வேண்டாமென்றும், மாளிகையினுள்ளே நுழைந்து பிரதாபை விடுவிக்கலாமென்றும் கூற அவர் கூற்றைக் கேட்ட சுரேந்திரன், தனக்கு நன்றாய் நீந்தத் தெரியுமெனக் கூறி, அவர் தம் மறுமொழிக்குக் காத்திராமல் திடீரென ஆற்றில் குதித்துவிட்டான். வெகு நேரம் ஆற்றோரத்திலேயே நின்று, சுரேந்திரனது தலை தண்ணீர் மட்டத்துக்குமேல் வருகின்றதாவென சேனைத் தலைவர் உற்று நோக்கினார். ஆனால், அவனது சிரம் அவரது கண்கட்குப் புலப்படவில்லை. 

ஆற்றில் நீந்திக்கொண்டு சென்ற சுரேந்திரன் பலமுறைத் தண்ணீரில் மூழ்கி எழுந்தான். ஆயினும் குறிப்பிட்டசாளரம் அவன் கண்கட்குத் தெரியவில்லை. ஊக்கத்தைத் தளரவிடாமல் பின்னும் பின்னும் சென்று கொண்டேயிருக்க, திடீரென்று ஒரு படுகுழியில் வீழ்ந்து விட்டான். அதிலிருந்து அவன் எழுதற்குப் பெரிதும் துன்புற்று, ஓர் ஆச்சரியமான சாமர்த்தியத்தினால் அப்படுகுழியிலிருந்து மீண்டான். பின்னும் நீந்திக்கொண்டே செல்ல, பலகணியொன்றுத் தென்பட்டது. அதனை யண்மியதும் அப்பலகணியில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த நூலேணி கண்கட்குத் தோன்றியது. அந் நூலேணியைக் கண்டதும், குறிப்பிட்ட சாளரம் அதுதான் என நிட்சயப்படுத்திக்கொண்டு ஆனந்தத்தோடு கிட்ட நெருங்கினான். நெருங்கியதும், அந் நூலேணியைப் பற்றிப் பிடித்து, அஃது பலமாகக் கட்டப்பட்டிருக்கின்றதா என்றுய்த் துணர்ந்துகொண்டு, அதன்பேரில் விரைவாக ஏறினான். மேலேறியதும் உள்ளே நோக்க, மிக மங்கலாய் ஒருவிளக்கெரிந்து கொண்டிருந்தது. 

அவ்வறையில் காவலரிருவன் உட்கார்ந்தவண்ணம் தூங்கி விழுந்துகொண்டிருந்தனர். இதுதான் தகுந்த சமயமெனக் கண்ட சுரேந்திரன், மெதுவாகக் கீழே குதித்தான். அவ்வறையின் அமைப்பைக் கூர்ந்து நோக்கினான். கருங்கற்களினால் மிக்க உறுதியாய் அவ்வறைக் கட்டப்பட்டிருந்தது. அலங்காரமான எவ்வித சாமான்களும் அவ்வறையில் காணப்படவில்லை. இரண்டு பழைய நாற்காலிகளும், ஒரு உடைந்த மேசையும் ஒரு கயிற்றுக் கட்டிலுந்தான் அவ்வறையில் காணப்பட்டன. அக் கட்டிலின் மீதே பிரதாப்,மிக்க பரிதாபகரமான நிலைமையில் கைகால்களில் விலங்கிடப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவன் உடல் மிகவும் பலவீனமுற்றிருந்தது. சரேலென அவனருகில் நெருங்கிய நமது கதாநாயகன், ஏற்கனவே சுசீலை தந்திரத்தால் பாதிகளையப் பட்டிருந்த அவனது தளைகளைக் களைதான். பிரதாப் சுரேந்திரனை வியப்போடு உற்று நோக்கவும், சுரேந்திரன் இன்னானென்பதை உடனே விளங்கிக்கொண்டான். 

ஆ! அப்பொழுது அவன் மனத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றிய நினைவுகளை என்னென்பேம்! தான் வனமாளிகையில் சுரேந்திரனைக் கண்டு தன்னோடிருத்திக் கொண்டதும் அன்றிரவு அம் மாளிகையில் எல்லாரும் மிக்க ஆனந்தமாய் உணவருந்தியதும், பிறகு பச்சைநிற ஸ்படிகம் போன்ற ஒருவிதமான லாகிரியை, கமலாகரர் 

குடிக்கவேண்டாமென மறுத்துங் கேளாமல் தான் பருகியதும் சிறிது நேரத்திற்கெல்லாம் தனக்கு மயக்கம் வந்து விட்டதும், விழித்துப் பார்க்குங்கால், தான் ஒர் கைதியைப்போல இவ்வறையில் அடைப்பட்டிருப்பதும்- ஆகிய இவைகளெல்லாம் பிரதாபின் மனத்தில் விவரமாகவும் விளக்கமாகவும் ஒன்றன்பின் ஒன்றாய் முறைமுறையே தோன்றின. 

இங்ஙனம் தோன்றின நினைவுகளால் எழுந்த பிரமையும், அவற்றுட் சிலவற்றால் ஏற்பட்ட விசனகரமான உணர்ச்சியும் ஒருபுறத்தே யிருக்க, பிரதாபின் மனத்தில் தான் தற்போதிருக்குமிடத்திற்கு சுரேந்திரன் எப்படி வந்தான்? தான் இதுகாறும் அனுபவித்துவரும் துன்பத்தைப்பற்றி சுரேந்திரனிடம் அறிவித்தவர் யார்? அங்ஙனம் அறிவித்தபோதிலும், மாயிருஞாலத்து மன்னுயிருண்ணுங் கூற்றைப்போன்றவராகிய எம்முடைய வீரர் இருக்க, அவ் வீரர்களின் தலைவரான கமலாகரரிருக்க உறுதிச் சுற்றத்தாரிருக்க, தன்னைக் காப்பாற்றுவதில் அவர்களனைவர்க்கும் அக்கரை, இளஞ்சிறானான இவனுக் கேற்பட்டதென்ன? என்ற இவைபோன்ற கேள்விகள் எழுந்தன. 

இதற்கிடையில். சுரேந்திரன் தளைகளைக் களைந்த சத்தத்தினால் விழித்துக்கொண்ட காவலன் ஒருவன், பிறன் ஒருவன் பரிதாபின் விலங்கைக் தறித்துக்கொண்டிருப்பதைப் கண்டதும் சிறிதுநேரம் வியப்பினால் வாய்பேசாது திகைத்து நின்றான். மறு வினாடியே சுரேந்திரன் மீது பாய்ந்து அவனைத் தாக்கினான். அவனும் அதை எதிர்பார்த்திருந்தமையான் அக் காவலனோடு யுத்தம் புரிந்தான். இங்ஙனம் இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளியும் தாக்கியும் அடித்தும் பொருதனர். சந்தடி அதிகமாகவே, மற்றவனும் விழித்துக்கொண்டான். நெருக்கடியான நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட மற்றொரு காவலன், சுரேந்திரனை மறுபுறம் தாக்கினான். 

தன்னை விடுவிக்கும்பொருட்டு தேவதூதனே போன்று வந்து தோன்றிய அச்சுந்தர வாலிபனை காவலரிருவரும் தாக்குவதைக்கண்ட பிரதாப், தனது பலவீனமான நிலைமையை முற்றும் மறந்து, எழுந்து, காவலரில் ஒருவனை பின்புறமாய்ச் சென்று தாக்கினான். திரும்பிப் பார்த்த அக் காவலன், சுரேந்திரனை விடுத்து, பிரதாபை வாளின் பிடியினால் ஒங்கி மண்டையில் ஓர் அடி அடித்தான். அப்போதைய அவனது உடல்நிலையில், அக் காவல் வீரன் அடித்த அடியைப் பொறாமல் கீழே விழுந்து விட்டான். அவனது மூளை சுழன்றது. 

பிரதாபனது நிலைமை இங்ஙனமிருக்க, சுரேந்திரன் தன்னோடு முதலில் யுத்தம்புரிந்த காவலனை அடித்து வீழ்த்திவிட்டு மற்றவனோடு போர்புரிந்தான். ஒருவரை ஒருவர் அடித்தும், தாக்கியும் குத்தியும் கடுமையான போர் செய்தனர். வரவர சுரேந்திரன் பலங்குன்றினான். அர்த்த இராத்திரியில் ஆற்றில் இறங்கிக் குளிரில் மிகுந்த பிரயாசைசோடு நீந்திக்கொண்டு வந்தமையானும், முதலில் எதிர்த்த காவலனோடு சண்டையிட்டு அவனை தோற்கடித்தமையானும் சுரேந்திரன் சிறிது தளர்ச்சியடைந்தான். 

அதே சமயத்தில் கதவு திறக்கப்பட்டது. சுசீலை முன்னே வர, சேனாதிபதியும் 20 சிறந்த வீரர்களும் முன் ஏற்பாட்டினபடி அறைக்குள் நுழைந்தனர். உடனே காவல் வீரன் கைதுசெய்யப்பட்டான். சுரேந்திரன் ஆற்றின் பிரவாகத்தை நீந்திக்கொண்டு எவ்வித அபாயமுமின்றி வந்ததைப்பற்றி கமலாகரர் இறைவனுக்கு நன்றி செலுத்தினார். எனினும் பிரதாபின் அபாயகரமான நிலைமைக்கு வருந்தி அவனருகிற்சென்றார். பிரதாப் தந்நிலையிழந்து உணர்வற்றுக் கிடந்தான். 

கதையின் இப்பகுதியை எவ்வளவு விரைவாகக் கடந்து செல்லக்கூடுமோ அவ்வளவு விரைவாகக் செல்ல வேண்டுமாதலால், ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பித்து மேற்செல்லுவோம். சுரேந்திரன் அரசர் பிரதாபல்லவென்று மிகமுக்கியமான சிலர்க்குமட்டும் தெரியுமன்றி ஏனையோர்க்குத் தெரியாது. ஆகவே, பிரதாப் விடுவிக்கப்பட்டதும், சுரேந்திரன் மறைவிடமொன்றில் தனியே விடப்பட்டான். 

அதற்குமேல், எல்லாக்காரியங்களும் வெகுவிரைவாயும் மந்தணமாயும் நடந்தேறின. அம்மாளிகையிலுள்ளார் எல்லாரும் இராஜ துரோகத்திற்காக கைது செய்யப் பட்டனர். இராகுலப் பிரபுமட்டும் ஒருவர் கையிலும் அகப்படாமல் தப்பிக்கொண்டார். ஆயினும் அவர் அதற்குமேல் உலகினில் உயிர் வாழ விரும்பினாரில்லை. ” மானமழிந்தபின் வாழாமை முன்னினிதே” என்றதற் கொப்ப ஆற்றில் குதித்து உயிர்நீத்தார். 

அரசன் பிரதாப், வசதியான படுக்கையொன்றில் விடப்பட்டான். அவனருகில் சிறந்த டாக்டர் ஒருவர் உட்கார்ந்து மணி தவறாமல் மருந்தும் ஆகாரமும் உட் செலுத்திவந்தார். 

எல்லாக் காரியங்களும் மேற்கூறியவண்ணம் விரைவாகவும் மந்தணமாகவும் நடந்தேறினவாயினும், எங்கணும் உண்மைக்கு மாறுபட்ட ஒர் வதந்தி பரவியது. கருப்புமாளிகையில் எதோ அரசியல் விஷயமாய்ப் பேசுதற்காக அரசர், இராகுலப்பிரபு, மற்றும் பிரபுக்கள் எல்லாம் ஒன்று கூடியிருந்ததாயும், ஆங்கு அரசர் ஏதோ பேசிக்கொண்டிருந்தபொழுது, திடீரென ஆங்குள்ளார் எல்லாரும் அரசர்பேரில் பாய்ந்து அவரைக்கொலை செய்ய முயன்றதாயும், தகுந்த சமயத்தில் அரசரது சேனைத்தலைவர் வந்து அரசரைக்காப்பாற்றியதாயும், அயினும் அரசரது தலையில்பட்ட அடியினால் உணர்வுகலங்கி, மரண மூர்ச்சையில் கிடப்பதாயும், அப்பால் தப்பியோடியவர் போக மிச்சம்பேர் கைது செய்யப்பட்டதாயும் வதந்தி பரவியது. 

மறுநாள் பொழுது புலர்ந்தது மக்கள் கூட்டங்கூட்டமாய், அரசரைப் பார்க்க வேண்டி கருப்புமாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஆயினும், அரசரைப்பார்க்க எவரும் அனுமதிக்கப்படவில்லை. இவ்விஷயங்களெல்லாம் மறுநாட் காலையிலேயே இளவரசி விஜயாளுக்குத் தெரியவந்தன. 

17 – எதிர்பாராத நிகழ்ச்சி 

பகலவன் பேரொளியுடன் கீழ்த்திசையில் எழுந்தான்; வானம் முழுவதும் மாசுமறுவற்ற நீல நிறத்துடன் விளங்கியது. மன்னர் பெருமான் பிரதாபன் மரண மூர்சசையில் கிடப்பதாக ஏற்பட்ட வதந்தி, மறுநாட் காலையிலேயே இளவரசி விஜயத்துக்குத் தெரியவந்தது. கருப்புமாளிகைக்கு தன்காதலன் விடைபெற்றுச் சென்ற வினாடியிலிருந்தே இன்னதென்று கூறிவியலாத, பெருங்கவலையும், திகிலும் அரசிளங்குமரி விஜயத்தைப் பிடித்திருந்தன. இறுதிநாள்வரையில் தன் மனமகிழ்வை குலைக்கக்கூடிய எதிர்நோக்காத ஒரு பெருநிகழ்ச்சி நிகழக்கூடுமென்று அவளது அன்பு வழிந்த நெஞ்சத்தில் ஏதோ ஒன்று கூறிக்கொண்டே இருந்தது. பல்வேறு எண்ணங்களாலும் உலப்பப்பட்டு, கவல்கடலில் ஆழ்ந்து தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்த அக்கோமகட்கு, திடீரென்று வந்துதாக்கிய அவ்வதந்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. பல்லக்கேறி பவணிசெல்லாது, கால்கள் தள்ளாட கருப்பு மாளிகைக்கு காற்றாய்ப் பறந்தோடினாள், அவ்வரசிளஞ் சிறுமி. 

அளப்பரிய அன்புவெள்ளம் பெருக்கெடுத்தோடும் போது அணைபோடுவது அறமன்று என்பதை உணர்ந்திருந்த சேனைத்தலைவர், சுரேந்திரனுக்கு ஒழுக்கநெறியை உணர்த்தி, மக்கள் தம்கடமையை அறிவுறுத்தி, விஜயாளிடத்தில் இறுதி விடைபெறாமற் போய்விடுமாறும் அதற்குப் பிரதியாகவும், அரசர் பிரதாபனுக்குச் செய்த பேருதவிக்காகவும், பெருத்தபணத்தொகை அவனுக்கு பரிசளிக்கப்படுமென்றுங் கூறினார். அறநெறிபிறழாத அந்நம்பியும் தந்நலங்கருதாது பிறர் நலங்கருதி, அவ்வுடன் பாட்டிற்கு இணங்கி அக்கணமே வெளிப்போந்தான். விஜயாள் எதிர்நோக்கி வரக்கூடுமென்று எதிர்பார்த்த கமலாகரர், சுரேந்திரனை அரச பாட்டைவழியே செல்லவிடாது. அடுத்துசென்ற ஒரு உந்தின் வழியாக புகைவண்டிச் சாவடிக்குச்செல்லுமாறு விடுத்து, தான் அரசிளஞ்செல்வியை வரவேற்குமாறு சென்றார். 

எங்ஙனும் நோக்காது, எதையும் எண்ணாது, சுரேந்திரனது திருமுகதரிசனமே தனது இருலோக வாழ்க்கையினது இன்பசாரம் என்றுண்ணி, கண்ணீர் விடாது கவல்கொண்ட முகத்தோடு கருப்புமிளிகைக்கு ஏக, திடீரென்று வெளிப்போந்து ஒடின அவ்வரசகுலச் சிறுமியை இரண்டொரு பணியாட்களே பின்தொடர்ந்து செல்ல முடிந்தது. 

சிலவினாடிக்குப்பின்பு, இந்நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற தாதிப்பெண்கள் பலர், அரசபாட்டைவழியே நெடுந்துரஞ்சென்றுவிட்ட அவ்வன்புச் செல்வியை, விரைவிற் சென்றடைவான் வேண்டி, பலகுறுக்கு வழிகளின் மூலமாயும் விழுந்து ஓடினர். அவர்களில் வனஜா என்ற பணிப்பெண், அரசபாட்டைக்கு அடுத்துள்ள ஒர் சந்தின் வழியாக விழுந்து ஒடினாள். ஆங்கு ஆச்சரியகரமான ஒர் காட்சியைக் கண்ணுற்றாள். மாட்சிமை மிக்க மன்னர் கோமான், மண்டலம் புகழும் மாயாபுரியின் மணிமுடி வேந்தன், எண்டிசையும் புகழ்கொண்ட அரசர்பிரதாபன், தனியனாய், கவலுற்ற வதனத்தோடு ஏவலாள் எவருமின்றி, புரவியிலமராது எளிய உடையில் எதிர்நோக்கி வரக்கண்ட காட்சியே அது, மரணமூர்ச்சையில் கிடப்பதாக கூறப்பட்ட அரசன், எவ்விதகாயமுமின்றி, குனிந்த தலையோடு எதிர்நோக்கி வருவதைக்கண்டு அப்பணிமகள்திப்பிரமை அடைந்தாள். இறும்பூதெய்தும் இம்மங்கல மாற்றத்தை அரசகுமரி விஜயாளிடந் தெரிவிக்க நினைத்து “மகாராஜ், இன்னே வந்து தங்களைக் காண்பார்கள்” என்று சுரேந்திரனை நோக்கிக் கூவினாள், அடுத்தகணமே அடுத்தபாட்டைக்குச் செல்ல குறுக்கே முறித்துக்கொண்டு செடிகளை விலக்கி கல்லும் முள்ளும் காலில் கடிந்துறுத்த கடுகிச் சென்றாள். 

உடல் முழுதும் வியர்வை வெள்ளம் பொழிய வனஜா அரசபாட்டைச் சென்றடைந்தபொழுதுதான் இளவரசி விஜயாள் அங்கு வந்துகொண்டிருந்தாள். இரண்டொரு மொழிகளில் எல்லாம் விளக்கப்பட்டன. அதற்குள் கமலாகலரரே அவ்விடம் வந்துசேர்ந்தார். அனைவரும் வனஜா வழிகாட்ட, அவள் வந்தவழியாகவேசென்று சுரேந்திரனையடைந்தனர். இளவரசி தலைவிரி கோலத்துடன், பாய்ந்து சுரேந்திரனது இருகைகளையும் பற்றிக் கொண்டு “எம்பெருமானே! வாட்டமுற்றிருப்பதேன்? மரணமூர்ச்சையில் கிடப்பதாகக்கேட்டு திகில்கொண்ட அடியாளுக்கு தேற்றமொழி பகராததென்னை?” என்றறைந்து, ஒ வெனக்கதறி யழுதாள். கண்கள் நீர்சொரிய செம்மல் சுரேந்திரன் ஏதும் மறுமொழியளியாது, சேனாதிபதியை ஏறிட்டு நோக்கினான், கடமையே தன்வாழ்க்கையின்பம் எனக்கொண்ட அப்பெருமகனும் கீழ்கண்டவாறு கூறினார். 

“பெருமாட்டியே மாறிமாறிச் சுழலும் இப்பிரபஞ்சத்தகப்பட்டு, தாறுமாறாய் அலையும் உயிர்கட்கெல்லாம், தனிக்கருணைப் பெருமானாகிய இறைவன், பல ஒழுங்கு முறைகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்திருக்கிறான். அவைகளை மாற்றவோ, கூட்டவோ, குறைக்கவோ மக்களால் முடியாது. மாற்றவியலா அச்சட்டதிட்டங்கட்குத்தான் ‘விதி’ என்று பெயர். அவ்விதிக்கு உட்பட்டவர்கள் தான் தாங்களும் என்பதை மறந்துவிட முடியாது. விதியின் ஆக்ஞைக்கு உட்பட்டவர்களாகிய நமக்கு, அதுவே சில சமயங்களில் சதி செய்வதாகவும் படும், அவ்வாறு உங்கள் கண்கட்கு சதியொன்று படக்கூடிய ஒன்றைத்தான் விதி உங்கட்குச் செய்துவிட்டது. எனவே, “நிதியுங் கணவனும் நேர்படினுந் தத்தம் விதியின் பயனே பயன்” என்ற ஆன்றோர் வாக்கை நினைந்து, அனுமதியோடு கருப்பு மாளிகைக்கு வரின் உண்மை விளக்கப்படும்” 

18 – உடைந்த நெஞ்சத்தின் உன்னத நோக்கம் 

அன்று மாலை மணி ஆறிருக்கும். நிகழப்போகும் நிகழ்ச்சி கட்கு நான் சாட்சியாயிருக்கமாட்டேன் என்று கூறுவதைப்போல் கதிரவன் தன் கதிர்களை ஒடுக்கி, உலக மாயையில் அகப்பட்டு செய்வதின்னதென அறியாது, ஏன் வந்தோம், யாது செய்யவேண்டும், என்பதை முற்றிலும் மறந்து, கேவலம் உண்பதும் உடுப்பதும் மாக்களைப் போல இருத்தலுந்தான் வாழ்க்கையின் இன்பம் என்றெண்ணும் ‘மனிதர்கள்’ என்று சொல்லும் இத்தகைய பிராணிகளின் கண்கட்கு கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்னை மறைத்துக்கொண்டிருந்தான். உடைந்துபோன இரு நெஞ்சங்களின் இருளோடு பேரிருளும் வந்து உறவாடிற்று. 

கொடிய எண்ணங்களென்னும் பெரும் பூதங்களான பயமுறுத்தப்பட்ட சுரேந்திரன், கருப்பு மாளிகையின் வரவேற்பு மண்டபத்தில், ஆழ்ந்த யோசனையுடன் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான். திடீரென கதவு திறக்கப்பட்டது. சேனாதிபதி உள்ளே நுழைந்தார். 

“விஜயாளுக்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டு விட்டதா?” என்று சுரேந்திரன் மெதுவான தொனியில் கமலாகரரை நோக்கிக்கேட்டான். 

“ஆம், அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்டது; இரண்டாவது மாடியின் வட பாரிசத்தறையில் உன்னை எதிர் நோக்கிக் காத்திருக்கிறாள். ஆங்கு சென்று அவளிடம் இறுதிவிடை பெற்றுக்கொள்ளுவாயாக” என்று கூறிய சேனாதிபதியின் வார்த்தைக்கிணங்கி, சுரேந்திரன் மேன் மாடியை நோக்கிச் சென்றான். 

விஜயாள் இருந்த அறையின் கதவை மெதுவாகத் திறந்தான். பலகணி வழியே மீன்களின் துள்ளு விளையாட்டை உற்று நோக்கிக்கொண்டு, துயரமே வடிவாய் வீற்றிருந்த செல்வி விஜயாள் திரும்பினாளில்லை. அவள் முகம் இரத்தமே இல்லாததுபோல் வெளுத்திருந்தது. ஆனால் அவள் கண்களில் பிரகாசம் குறையவில்லை; சுருண்டு, இருண்டு அடர்ந்து வளர்ந்திருந்த அவள் கூந்தலின் அழகும் மாறவில்லை. மினுமினுவென்றிருந்த அவளுடைய நீலநிற பட்டாடை, உருக்கிவார்த்த தங்கச் சிலை போன்ற அவளது உடலுக்கு மிகுந்த அழகைக்கொடுத்தது. ஆயினும், அவள் முகத்தில் விசனக்குறி தௌ-வாயிருந்தது. 

மெதுவாக அவனை அண்மினான். நாத்தழுதழுக்க இன்குரலில் “விஜயா” என்றழைத்தான், மெதுவாகத் திரும்பினாள். 

“என்னை மன்னி, அறியாது யான் செய்த பெரும் பிழை பொறு. செய்வதின்னதென் றறிகிலேன். நான் ஏகுமாறு-” என்று சுரேந்திரன் கூறிப் பின்புறமாகத் திரும்பினான். 

ஏனெனில், அதற்குமேல் அவன் கூற விரும்பியது அவன் வாயினின்றும் புறப்படவில்லை, அவன் உள்ளழுத்திவிட முயன்ற பெருமூச்சு, அவனையும் மீறி வெளிப்பட்டு அவன் உடல் முழுதையும் குலுக்கிற்று அவன் தன் அழகிய கை விரல்களால், தன் ஒரு கரத்தால் அவர்களது கரத்தைப் பற்றி முத்தமிட்டு, அவளை சிறிது நேரம் அமைதியுடன் நோக்கி, “விஜயா! சென்று வரட்டுமா?” என்றான் 

“அன்பே, இவ்வளவு சீக்கிரத்திலா?” என்றாள் விஜயாள், அவள் குரல் கம்மியது. தன் முகத்தைப் பின்புற மாகத்திருப்பி தன் அம்பனையவரி நெடுங் கண்களின்று துளித்த இரண்டொரு நீர்த்துளிகளைத் துடைத்து முகத்தை சாந்தப்படுத்திக்கொண்டு, பிறகே சுரேந்திரன் புறமாய்த் திருப்பினாள். 

சுரேந்திரனுக்கும் உள்ளம் உருகிக் கண்களில் நீர் சுரந்தது. அவன் செயலற்று அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். 

சில நிமிடங்கட்கெல்லாம், விஜயா சுந்தரி சிறிது மனோதிடத்துடன் தன்பேச்சைத் தொடர்ந்து,” அன்புடைய அறத்தாறு அறிந்து ஒழுகும் வழி தெரிகிலேன், ஆயின் மாட்சிமை மிக்க மாயாபுரியின் மணிமுடி வேந்தர் பிரதாபனிடம் என் மனம் எக்காலும் சென்றறிகிலேன். வேற்றுருபுனைந்து, மாயாபுரியின் மாயோனாகத் திகழ்ந்த சுரேந்திரனே என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டவன். சுரேந்திரா! ஏழ் நிலையிலுள்ள உன்னையே விரும்புகின்றேன்,. நான் முன்னொருமுறை பூஞ்சோலையில் உன்னிடம் தெரிவித்தவாறு, பூ உருண்டையின் இறுதிவரைக்கும் உன்னைப் பின் தொடர்வேன். என்னையும் உன்னோடழைத்துச் செல்வாயா?” என்று துயரத்தோடு மொழிந்தாள். 

“செல்வி, கடமையாற்றலின் இன்பமே வாழ்க்கையின் இன்பம், மக்களை நிறைமுதலாக்குவதும் அதுதான். என் ஒருவனுக்காக மாயாபுரியின் பல்லாயிரக் கணக்கான மக்கள், ஏமாற்றப்படுவதை நான் விரும்புகின்றேனில்லை. பெரியதோர் மனிதசமூகம், நீ அரசியாகத் திகழ்வதைக் கண் குளிரக் காண்பான் வேண்டி, விழைவுடன் எதிர் நோக்குகின்றது. அவர்கட்காக நம்முடைய வாழ்க்கையை தியாகஞ்செய்தலே மேல்நோக்கு, பிறர்க்காக தனது இன்பத்தை தத்தஞ்செய்தலே மேல்நோக்கு. பிறர்க்காக தனது இன்பத்தை தத்தஞ்செய்யும் அத்தகைய பெரியதோர் தியாகமே மனித வாழ்க்கையின் இலட்சியம்; நமது காதல் தூய்மையானது; நிர்மலமானது. பொங்கும் மலநீர் புழுக்கூடாம் இம்மாமிச பிண்டத்தின் பேரில் இச்சைவைத்த தன்று. மாயாபுரியின் அரசியாக நீ திகழ்வாய். யான் செல்வன்” என்றான் சுரேந்திரன். 

“அன்பிற்குகந்த சுரேந்திர, நீ கூறுவது முற்றும் உன்னையன்றி என்னால் உயிர்வாழ முடியாது. ஐயோ! நான் என்செய்வேன்! என் வாழ்நாளில் உன்னைவிட உயர்ந்தபொருள் வேறு ஒன்றுமே இல்லை என்று உறுதி கூறுகிறேன். உன்னைவிட்டு என்னால் பிரியமுடியாது. அரசர் பிரதாபை, அத்தான் என்ற முறையில் மட்டும் அன்பு பாராட்டுகின்றேனேயன்றி, அவரை மணக்க என் உள்ளம் ஒருபோதும் சம்மதியாது. நீ என்னை விட்டுச் செல்வாயாயின், நான் தற்கொலை புரிந்து கொள்ளுவேன். காதல் இன்றி வாழ்வதைவிடச் சாதல் சாலச் சிறந்ததன்றோ? 

“பல்லார் புகழப் பெருஞ் சிறப்பும் 
பாக்யம் பலவும் படைத் தென்ன? 
அல்லார் நெஞ்சத் திருள கற்றி 
அன்பின் உருவா யதைத் திருத்தி 
எல்லா நலனும் ஒருங் களிக்கும் 
இன்பக் காதல் அடையா ரேல் 
நல்லா ரல்லர் அவரெல்லாம் 
நாற்கா லில்லா விலங்கினமே” 

ஆகவே, நான் மாயாபுரியின் அரசு கட்டிலில் வீற்றிருந்து மணமுடி தரித்து ஆட்சி புரிவதைவிட, நெடியதோர் காட்டில், வேய்ந்த குடிசையில் குடியான சுரேந்திரனுடன் குடும்பம் நடத்துவதே எனக்கு பேரின்பம் பயப்பதாகும். சுரேந்திர, மீட்டும் என்னைத் தடுக்காதே” என்று உருக்கத்தோடு கூறினாள் இளவரசி. 

சுரேந்திரன் பதில்கூற அறியாது சிறிது நேரம் தயங்கினான். பிறகு அவள் கரத்தைப்பற்றி, அமைதியுடன் அவள் முகத்தை நோக்கி “என் அருமை விஜயா! உண்மையே. ஆயினும், தந்நலத்திற்காக பல்லாயிரக் கணக்கான மாந்தரின் ஆர்வத்தையும், ஆவலையும் பாழ்படுத்துவது ஏற்புடைத்தன்று. மரணப்படுக்கையில் படுத்திருந்த உன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நீ தவறுவதும் பீடுடைத்தன்று. அளப்பிரிய அன்பு வயப்பட்டு, மறுதளிக்கப்பட்ட எனக்கு, இனி இவ்வுலகம் எத்தகைய நன்மை பயத்தல் சாலும்? எனக்கென உஞற்றுதல் என்பது ஒன்றில்லை. மக்கட்கு யான் ஆற்றவேண்டிய கடமை யொன்றுளது. அதையே இனி உஞற்றுவன். நெஞ்சம் உன்னை விரும்புகின்றது; கடமையோடு போராடுகின்றது’ தோல்வியும் உறுகின்றது. விஜயா! சீர் தூக்கிப்பார். கடமையை மறக்காதே” என்றான். 

சுரேந்திரன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் செல்வி விஜயாள் மிக்க பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள். அவ்வமயம் அவள் தன் மனத்திலெழுந்த உணர்ச்சிகளை விவரிப்பது சாத்தியமன்று. அவளது சிரம்சுழன்றது. தனது தந்தையார் மரணப்படுக்கையிலிருந்த பொழுது நடந்த நிகழ்ச்சிகள் முற்றும் அப்படியே அகக்கண் முன்பு காட்சிகொடுக்க வாரம்பித்தன. சுரேந்திரன் கூறிய ஒவ்வொரு மொழியிலும் சிறந்த உண்மை பொதிந்திருக்கக் கண்டாள். தான் கடமையை முற்றும் புறக்கணித்து, காதலே பெரிதென்றெண்ணி, சுரேந்திரனைப் பின் பற்றிச் சென்று அவனை மணந்துவிடினும் 
எத்துணை காலந்தான் இவ்வுலகினில் நீடு நின்று இன்பநுகர்தல்கூடும்? முடிசார்ந்த மன்னரும் ஓர் நாள் பிடிசாம்பராவது உண்மையன்றோ! 

இவ்வகையான எண்ணங்களான் அவள் அறிவு குழம்பியது. சிறிது நேரம் அமைதி நிலவியது. விஜயாள் ஏதும் மறுமொழி யளியாததைக் கண்ட சுரேந்திரன் மீட்டும் அவளை நோக்கி,”விஜயா, அறியாதவனென்று என்னை இகழற்க; யான் சொல்லுதலை ஊன்றிக்கேட்டிடுக. இனி, இவ்வுலகம் முழுதும் வெறும் பாழாகவும், சாரமற்ற சக்கையாகவுமே எனக்குத் தோன்றும், உன்காதல் பலன் பெறும் என்ற நம்பிக்கை இனி எனக்கிருக்க நியாயமில்லை ஆதலின், வேறேதேனும் உயர்ந்த நோக்கம் ஒன்றில் என்மனம் பற்றினாலொழிய, உயிர் வாழ்க்கையாற் பயனில்லை ஆதலின், இனி நாட்டின் நன்மைக்காக உழைப்பேன். என் தாய் நாடு, தமிழ்க்கோர் தாயகமாய் ஒரு காலத்தில் சிப்புற்றோங்கிய மதுராபுரி, பிற ஆட்சிக் குட்பட்டிக்கின்றது, அதை மீட்பதற்காக தம் உடல், பொருள், ஆவியையெல்லாம் தத்தஞ்செய்த பெரியாரை பின்பற்றுவேன். என்னைபோன்ற மனிதர்களை – மனித சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவருவதாகிய உயர் நிலையில் என் நோக்கம் சென்றிருக்கிறது. ஏழைகளை அற்பப் புழுக்களாகக் கருதி, அவர்களைத் தாங்கள் காலின் கீழிட்டு நசுக்கும் சிலர். பணம் பதவிக் காசையுற்று, தேயநலத்திற் குழைப்பதைப் போன்று நடிக்கின்றனர். பிறர் நலங்கருதாது தந்நலத்தையே கருதும் அவ்வித தந்தலப் புலிகளைப் பின் பற்றாமல் உண்மையான தியாகிகளைப் பின்பற்றி, எனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வேன். நாட்டை பிற ஆட்சியினின்றும் மீட்பதற்கு பல இடையூறுகள் – அளப்பரிய இடையூறுகள் -உள்ளன. ஆனால் தந்நலம் அற்ற தியாகிகள் பலர் உண்மையாய் உழைக்கக் கங்கணங் கட்டிக்கொண்டு முயல்வார்களாயின், நாளடைவில் அவ்விடையூறுகள் முற்றும் நீங்கிவிடும், அங்ஙனம் முயல்பவருள் நானும் ஒருவனா யிருக்கவேண்டுமென்பது என் விருப்பம், காதல் என்ற கவசம் எனக்குக் கிடைத்திருக்குமானால், இவ்வுலகினில் உண்டாம் எவ்வகையான இடுக்கண்களையும் பொருட்படுத்தாது எதிர்த்து நிற்பேன், ஆனால், ஐயோ ! விஜயா, அக்காதற்கவசத்தை அளிக்கவல்ல நீ, பிறனொருவனுக்கு வாழ்க்கைப் படப்போகின்றாய். இனி, நான் அதைப்பெற எண்ணக்கூடாது நடந்தேதீரும். விஜயா, நேரமாகிறது இனி நான்செல்ல விடைகொடு” என்று அளப்பரிய துயரத்தோடு கூறினான். 

“சுரேந்திரன்! தந்தலத்திற்காக பெரியாரின் விருப்பத்தையும், தேயமக்களின் ஆர்வத்தையும், என்கடமையையும் மீறிவிடத் துணிவுகொண்ட எனக்கு, அறிவு கொழுத்திய அண்ணலே! நீ கூறுவது முற்றும் உண்மையே, ஊழ்வினையை நிர்ணயித்துவிட்ட இறைவன், என்னை சோதிப்பதுபோல உன்னிடத்து எனக்கு இத்தகைய பேரன்பை புகுத்தி, என்னை ஏன் வருத்தவேண்டும்? என் மனத்தை எத்துணைதான் கட்டுப்படுத்திக் கொண்ட போதினும், இவ்வளவு சீக்கிரத்தில் நாம் பிரிந்துவிட வேண்டியிருப்பதை உன்னுந்தொறும் என் உள்ளம் உருகுகின்றது. அன்பா நாம் மீண்டும் ஒருவரை யொருவர் சந்திக்க முடியாதா?” என்று வினாவினாள் இளவரசி. 

சுரேந்திரன் மிகவும் மெல்லிய, சோகமான குரலில் அவளைநோக்கி “விஜயா, எண்ணிப்பார் – நன்றாய் சிந்தித்துப்பார். நீ ஒருவர்க்கு வாழ்க்கைப் படப்போகின்றாய், நானோ இத்தேயத்தைவிட்டே செல்கின்றேன். நாம் இனி ஒருவரையொருவர் சந்திப்பதினால் நம்மிருவர்க்கும் தீங்கு நேருமேயன்றி நன்மையுண்டாகாது. வேண்டாம், வேண்டாம் – அந்த நினைவே வேண்டாம், இதுவரையில் நீ என்னைக்கண்டதினால் பட்ட துன்பம்போதும், இனியும் வேண்டாம், விஜயா, இனி எனக்கு: விடைகொடு, நான் சென்று – தெய்வத்துக்குத் திருவுளமிருக்குமாயின் – வருகிறேன். இல்லாவிட்டால் மேலுலகத்தில் சந்தித்துக்கொள்வோம்” என்றான். 

“சுரேந்திரா, நீ இப்பொழுது எங்கே செல்கிறாய்? உன்னுடைய தீர்மானமென்ன? எவ்வகையில் வாழ்க்கையை செலுத்துவதாக நீ உத்தேசித்திருக்கிறாய்?” என்று மிகவுங் கவலையோடு கேட்டாள் விஜயசுந்தரி. 

“அவைகளைப்பற்றி நான் இன்னும் ஒருவகையான தீர்மானத்திற்கும் வரவில்லை. எங்கே, எவ்விடத்திற்கு என்ற உண்மை எம்பெருமானுக்குத்தான் தெரியும் அதிருக்கட்டும் சிறுமி சுசீலையை உன்பணிப்பெண்களில் ஒருத்தியாக அமர்த்திக்கொள். அன்பும் அழகும் ஒருங்கமைந்த அவ்விளஞ்சிறுமி, பிரதாபை மீட்பதற்கு சிறந்த ஒர் கருவியாய் உபயோகப்பட்டாள்” என்றான் சுரேந்திரன். 

அதிகநேரங்கடந்து விட்டமைபற்றி சுரேந்திரன் எழுந்துநின்றான். அதற்குள் கமலாகரர் ஆங்குவந்து, நேரமாகிவிட்ட தென்பதைக் குறிப்பித்து வெளிச்சென்றார். கடைசியாக சுரேந்திரன் விஜயாளை அண்மி அவளது இரண்டு கரத்தையும் ஆர்வத்தோடு பற்றி, அவளை அமைதியோடு நோக்கி, “விஜயச்செல்வி! போய்வருகிறேன்” என்று கூறி பொருக்கென அவ்விடம் விட்டு நீங்கினான். மெதுவாகத் தேம்பித் தேம்பியழும் குரல் கேட்டது.உடனே அவன் மாளிகை வாயிலில் தனக்காகக் காத்துக்கொண்டிருந்த வண்டியிலேறினான். முதன் மந்திரியும்,சேனைத்தலைவரும் சுரேந்திரனை வழியனுப்ப கூடவே அவ்வண்டியி லேறிக்கொண்டார். சுரேந்திரன் கண்களில் நீர் ஆறாய்ப்பெருகியது. 

மூவரும் புகைவண்டித்தொடர் நிலையத்திற்குச் சென்றனர். இரயிலும் நிலையத்தை அண்மியது. சுரேந்திரன் உலகமே இருண்ட நிலையில். துயரமே ஒருருவெடுத்ததோவென்னும் படி, முகத்தைப் பிறர்பார்க்க முடியாமல் மூடிக் கொண்டவண்ணம் இரயிலிலேறி அமர்ந்து கொண்டான். 

சேனைத்தலைவர் அவனை அண்மி, மிக்கதுயரத்தோடு “யார்க்கு தகுதியுடையதோ, அவர்க்கு இவ்வுலகிர் அரசபதவி அளிக்கப்படுவதில்லை” எல்லாம்வல்ல இறைவனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்றே” என்றார். 

முதன் மந்திரி சுரேந்திரனது கைகளை ஆர்வத்தோடு பிடித்துக்கொண்டு, “சுரேந்திரா, மாட்சிமை மிக்க மாயாபுரியின் முடிமன்னர்Çக்கு ளெல்லாம் உன்னைப்போன்று சீரிய முறையில், நெறிபிறழாது ஆட்சிபுரிந்தவர்களன்று. மன்னர் பெருமான் பிரதாபன், உன்னைப் பின்பற்றி ஆட்சி புரிவாராக” என்று மெதுவாய்க் கூறினார். 

புகைவண்டியும் சிறுகச்சிறுக ஸ்டேஷனை விட்டும் நகர்ந்தது, முதன்மந்திரியும், சேனைத்தலைவரும் சுரேந்திரனை மிக்கமரியாதையோடும் பயபக்தியோடும் வழியனுப்பியதைக்கண்ட பொதுமக்கள், அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒர் பெரிய உத்தியோகஸ்தர், எங்கோ வேற்றுருபுனைந்து பிரயாணஞ் செய்வதாய் நினைந்துகொண்டனர். 

சுரேந்திரன் கண்கள் நீரைகக்கின! மாயாபுரியின் எல்லையைவிட்டு அவன் நீங்கியபோது செங்கதிர்ச் செல்வன் கருங்கடல் புக்கொளித்தான். நகரெல்லையைக் கடந்ததும், தான் விட்டு வந்த அந்நகரை உற்றுநோக்கினான். மாடமாளிகைகளிலும், கூடகோபுரங்களிலும் ஏற்றப்பட்டிருந்த விளக்குகள், ஞாலத்தின் உதடுகளைப்போன்று ஒளிவீசின. ஆனால், சுரேந்திரனின் கண்கள் கண்ணீரால் மறைப்புண்டிருந்தமையான், அவ்விளக்குகளின் பிரகாசம் முற்றும் அவனுக்கு தோற்றவில்லை. அவன் தன் சோகமான குரலில், மெதுவாக அந்நகரை நோக்கி, “மாயாபுரியே உனக்கு வந்தனம்! நான் செல்கிறேன் – இஞ்ஞாலத்து ஆண்மகனாய்ப்பிறந்து நான்காதலித்த-காதலிக்கும் பெண்மணி ஒருத்தியே, அவ்வொருத்தியைத் தவிர வேறொருவர் மட்டும் என் சிந்தை சென்றதில்லை, இனி எஞ்ஞான்றும் செல்லப்போவதுமில்லை, அந்த ஒருத்தியை-என்மனங்கவர்ந்த அந்த மங்கையை-ஏ, மாயாபுரியே! உன்னிடத்து விட்டு விட்டு, யான் தனியே- தௌர்பாக்கியனாய்ச் செல்கின்றேன்” என்று கூறிவிட்டு முகத்தைக் கையினால் மூடிக்கொண்டான், அக்கையை அவன் கண்ணீர் நனைத்தது; அவன்விட்ட பெருமூச்சால் அவனது உடல் குலுங்கி விசாலமான மார்பகம் விம்மியது. 

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக 

முற்றிற்று

– முதற் பதிப்பு: பெப்ரவரி 1928, மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com 

2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *