காட்சிப் பொம்மைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 15,378 
 
 

காலைத் தினசரியை ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் அவசரமாய் வந்து நின்ற வேதவல்லி அனுசரணையாய் சொன்னாள்: “”இன்னிக்கு மதியம் மாப்பிள்ள வீட்டுக்காரங்க வர்றாங்கம்மா… “நீட்’டா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு இருந்துக்க”.

காட்சிப் பொம்மைகள்வாசிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டாள் நந்தினி. அவளின் இதயமும் தற்காலிகமாக சுவாசத்தை நிறுத்தியிருந்தது. பார்வை மட்டும் தொடர்ந்து தெறிப்பாய் நின்றது. அம்மாவை நேர்கோட்டில் பார்த்தாள். மனசுக்குள் குடம் உடைந்தது போலிருந்தது அவளுக்கு. “கவலை’ என்கிற குடம். வார்த்தைகள் வெள்ளமாக வெளிவந்து விழுந்தன. வெள்ளத்தின் வேகத்தில் கோபம் நுரைவிட்டுக் கொப்பளித்தது.

“”எத்தனத் தடவம்மா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஷோக்கேஸ் பொம்மை மாதிரிப் போய் நிக்கிறது? எனக்குக் கஷ்டமா இருக்கும்மா. ராமனோ பீமனோ… திடுதிப்புன்னு ஒரு ஆளக்காட்டி என்னயக் கழுத்த நீட்டச் சொல்லுங்க. அவன்கிட்ட என் கழுத்த நீட்ட நான் தயாராயிருக்கென். இப்படி அடிக்கடி என்னைய அவமானப்படுத்தாதீங்கம்மா? ப்ளீஸ்ம்மா” விரக்தியுடன் முகம் சுளித்துக்கொண்டாள் அவள். அக்கினிக் குழம்பைச் சிந்திய விழிகளிலிருந்து அமிலச் சொட்டுகளாய் நீர்த் திவலைகள் தெறித்து விழுந்தன.

வேதவல்லி வெலவெலத்துப் போனாள். சந்தோசப் பெருவெளியில் காலாற நடந்து வந்திருந்தவள், மகளின் தடங்கலான வார்த்தைகளில் தடுமாறி நின்றாள். ரொம்பவும் சங்கடமாக இருந்தது அவளுக்கு. நந்தினிமேல் கோபப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

“”நா என்னடிச் செய்யறது? வர்றவன்களுக்கு ஒன்னயப் பிடிக்கணுமில்லா? எல்லானுவளும் ஏதாவது ஒரு குறையச் சொல்லிட்டுப் போய் நின்னுக்கிருதானுங்க. உனக்கும் காலாகாலத்துல கல்யாணம் ஆகலேன்னுதான் எங்களுக்குக் கவலையா இருக்கு. எங்களுக்கென்ன ஒன்னையக் கொண்டுபோய் அவனுங்க முன்னால எல்லாம் ஆட்டக்காரிக் கெணக்கா நிப்பாட்டணுமின்னு ஆசையா என்ன? கல்யாணமிங்கறது நாங்களோ நீயோ மட்டும் முடிவு பண்ணுற விசயமாடி? வர்றவனும் முடிவு பண்ணணுமில்ல? புரியாமப் பேசுறியே”.

ஆத்திரத்தில் மூச்சுவிடாமல் பொரிந்து தள்ளினாள் வேதவல்லி. நந்தினியின் கண்களைப்போல இப்போது வேதவல்லியின் கண்களும் வேர்க்கத் துவங்கியிருந்தது. கண்ணீர் வேர்வை.

“”நானா புரியாமப் பேசுறேம்மா? நீங்கதான் என்னையப் புரிஞ்சுக்கிட மாட்டங்கறீங்க. நானும் உங்கள மாதிரி ஒரு பொண்ணுதானேம்மா? ஒங்களுக்குக் கல்யாணம் ஆகுறதுக்காக இப்படித்தான் அடிக்கடி ஆம்பளைங்க முன்னால போய் நின்னு மொகத்தக் காட்டிக்கிட்டு வந்தீங்களா? ஒவ்வொரு தடவையும் உடம்பெல்லாம் கூசிப் போகுதம்மா”.

“”பொண்ணாப் பொறந்தா எல்லாருக்கும் இதே கதிதான் நந்தினி. நானும் ஒன்னைய மாதிரிதான் முகத்தைக் காட்டிக்கிட்டுக் காட்டிக்கிட்டு வந்து மூலையில் ஒக்காந்து அழுது கொமஞ்சென். இப்பமே சலிச்சிக்கிடாதே நீ. இந்த மாப்பிள்ளையாவது அமையுதான்னுப் பாப்போம். டிரஸ் பண்ணிக்கிட்டு ரெடியா இரு”.

அதற்குள்ளாக குளியலறையிலிருந்து ராஜகோபாலன் தன் ஈரத் தலையைத் துவட்டிக்கொண்டே முன்னறைக்கு வந்தார். “”என்ன… என்ன சொல்றா?” என்று சுதாரிப்பின்றிக் கேட்டுக் கொண்டு மின்விசிறிக்குக் கீழே கிடந்திருந்த சேரின் மத்திக்கு வந்து நிதானமாக உட்கார்ந்து கொண்டார். விசிறிக் காற்றில் அவரின் ஈரத்தலை சன்னமாய் உலர்ந்து கொண்டிருந்தது. உச்சந்தலையில் அடர்ந்து கிடந்த முடிகளின் ஈரத்தை இன்னும் அழுத்தித் துவட்டினார். மேலுக்குச் சட்டை இல்லை. தொந்தி விழுந்த தேகம். அரையில் கட்டியிருந்த வெள்ளை வேட்டியிலும் சிதறலாய் ஈரம் தெரிந்தது.

எதிரில் உட்கார்ந்திருந்த நந்தினி “விசுக்’கென்று எழுந்துகொண்டு வேகமாய் உள்ளே போனாள். அப்பாவின் முகத்தில் விழிக்க மகளுக்கு விருப்பமில்லைபோல. வேதவல்லி மட்டும் ராஜகோபாலனின் தனிமையைப் போக்கிக்கொண்டு அவரின் எதிரில் நின்றிருந்தாள்.

“”பாவம், பொண்ணு அழுதுங்க.”

“”என்னவாம்?”

“”எத்தனத் தடவத்தான் வேசம் கட்டிக்கிட்டு ஆம்பளைங்க முன்ன வந்து நிக்கறதுன்னுக் கேக்கறா. அவளுக்கும் எரிச்சலாத்தான இருக்கும்?”

“”நாம என்ன, வேணுமின்னாப் பண்ணுறொம்? இதுவரைக்கும் அஞ்சு வீட்டுலயிருந்து வந்து பாத்துட்டுப் போயிட்டானுங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கொறயச் சொல்றான். “படிப்பு மட்டும் இருந்தாப் போதுமா, பணமும் வேணுங்’கறானுங்க. அவனுங்க கேக்கற தொகைக்கும் நகைக்கும் நாம் எங்கப் போவோம்? நந்தினி என்ன அழகில கொறச்சலா? “இன்னும் செவப்பா பொண்ணு இல்லையே’ங்கறானுங்க. பாப்போம். இன்னிக்கு வர்றவனாவது திருப்திப்படுறானான்னுப் பாப்போம்”.

நந்தினி பி.ஏ.யில் ஆங்கிலம் லிட்ரேச்சரை எடுத்துப் படித்து முடித்து விட்டிருந்தாள். தேர்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகியிருந்தன. மேற்கொண்டு படிப்பதற்கு அப்பாவின் ஓய்வுப்பணம் போதுமானதாக இல்லை. இரண்டு தம்பிகளை பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்து கரை சேர்ப்பதற்கும் அந்த ஓய்வுப் பணந்தான் முட்டுக் கொடுத்தது. அவர்களுக்கும் இன்னும் வேலை கிடைத்த மாதிரி இல்லை. பெண் பிள்ளையாயிற்றே என்று நந்தினிக்காக வங்கியில் கொஞ்சமாகப் பணத்தைப் போட்டு “தம்’ பிடித்துக் காப்பாற்றிக்கொண்டு வந்திருந்தார் அப்பா. அவளின் கல்யாணச் செலவுக்கு அதுதான் கைகொடுத்தாக வேண்டும். அவளுக்கும் இருபத்தேழு வயது கடந்துவிட்டிருந்தது. முகத்தில் முதிர்ச்சி பரவத் தொடங்கியிருந்தது. சீக்கிரமாய் அவளுக்கொரு கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டால் தேவலை என்று பெற்றோர்களுக்குத் தோன்றியது. தரகர் மூலம் இதுவரை ஐந்து இடங்களிலிருந்து மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பார்த்து விட்டுப் போயிருந்தனர். ஒருவரும் திரும்பி வந்திருக்கவில்லை. கொடுக்கல் வாங்கலில் குறை விழுந்தோ அல்லது எதிர்பார்த்தபடி பெண் நல்லாயில்லை என்று குறை சொல்லியோ தடங்கல்கள் விழுந்துகொண்டிருந்தன. இது ஆறாவது இடம். காலையில்தான் தரகர், ராஜகோபாலனைத் தொலைபேசியில் அழைத்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆட்கள் வருவதாகச் சொல்லியிருந்தார். ராஜகோபாலன் அதை வேதவல்லியிடம் போட்டு வைத்திருந்தார்.

மதிய வெயிலில் “நனைந்துகொண்டு’ அவர்கள் வந்தார்கள். அவர்களின் தேகமெங்கும் வேர்வை வெள்ளம். வெள்ளைவேட்டி வெள்ளைச் சட்டையில் தரகர் மினுங்கினார். இப்போதே தரகுப் பணத்தை வாங்கிப் பையை நிரப்பிக்கொண்டு போகவிருப்பதைப்போல தடித்தக் கருப்பு நிறத் தோல்பை ஒன்றை தன் கக்கத்தில் அமுக்கி வைத்திருந்தார். சாம்பல்நிறப் பேண்டும் வெள்ளைச் சட்டையுமாய் நடுவயதில் ஒரு தடியர். மீண்டும் வெள்ளைவேட்டி, ரோஸ் கலர்ச் சட்டையில், அறுபது வயதில் ஒரு ஒல்லியானவர். மாப்பிள்ளைப் பையன் வந்திருக்கவில்லைபோல.

வழக்கம்போல தரகரின் வாய் மாப்பிள்ளை வீட்டாரின் செல்வச்செழிப்பை வானளாவப் புகழ்ந்து தள்ளியது. பையன் பட்டதாரி ஆசிரியனாக ஒரு தனியார் பள்ளியில் பணிசெய்து கொண்டிருந்தான். மாதம் இருபதாயிரத்துக்கும் மேல் சம்பளம். பெற்றோருக்கு ஒற்றைக்கொருவன். அப்பாவுக்கு வத்தல் வியாபாரம். வருமானம் அதிகம். ஏகப்பட்ட நிலபுலன்கள். கைவிரல் எண்ணிக்கை முடிய வீடுகள். அவற்றின் வாடகைப் பணத்தொகையே ஓர் அரசு ஊழியனின் சம்பளத்திற்கு ஈடாக இருந்தது. அவர்கள் எதிர்பார்ப்பது, படிப்புள்ள அழகான ஒரு பெண். அவ்வளவுதான்.

மாப்பிள்ளை வீட்டார் அதிகமாக எதிர்பார்க்காததால் அது “நல்ல இடமாகவே’ தோன்றியது, ராஜகோபாலனுக்கும் வேதவல்லிக்கும்.

நறுவிசாய் சேலை உடுத்தி, நளினமாய் நடந்து வந்து, அவர்கள் முன் நெளிந்து கொண்டு நின்றாள் நந்தினி. தடிமனாக இருந்தவர்கள் பையனின் தகப்பனார் என்று தரகர் சுட்டிக் காட்டினார். அவருக்கு மட்டுமல்லாது அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவருக்கும் சேர்த்தே – விருப்பமில்லாமல் – கைகூப்பி வணக்கம் போட்டுக் கொண்டாள் நந்தினி.

“”என்னம்மா படிச்சிருக்க?'”

நிதானமாகக் கேட்டார் தடிமனானவர். பெண் பேசுகிறதா, பேச்சின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் முனைப்பில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை நாசூக்காகச் சோதித்துப் பார்க்கும் தந்திர உபாயமே இதுவென்று தெளிவாகத் தெரிந்தது நந்தினிக்கு. ஏற்கெனவே ஐந்து முறைகள் வந்துநின்ற அனுபவமிருந்தது அவளுக்கு.

“”பி.ஏ., இங்கிலீஸ் லிட்ரேச்சர்” தணிவான குரலில் சொன்னாள்.

“”எல்லாம் பாஸ் பண்ணிட்டல்ல?”

நந்தினிக்குத் தடுமாற்றமாய் இருந்தது. “என்ன, இந்த மனுசன் இப்படியெல்லாம் கேட்கிறார்? வேலை எதுவும் வாங்கித் தரப் போகிறாரா?’ என்று விகற்பமாய் நினைத்து விசனப்பட்டுக்கொண்டாள் – மனசுக்குள்ளே. பெண்ணுக்குப் பொறுமை இருக்கிறதா என்றுகூட சோதித்துப் பார்க்கலாம் அவர். நிதானமாக, “”ஆமா. பாஸ் பண்ணிட்டேன்” என்று சுரத்தில்லாமல் சொல்லிக் கொண்டாள் அவள்.

மேலும் நின்றுகொண்டிருப்பதற்கு அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தன் தேகத்தை அவர்கள் ரகசியமாய் ஊடுருவிப் பார்ப்பதுபோல அருவருப்புத் தோன்றியது. எத்தனை முறைகள்தான் அவள் நிர்வாணமாக்கப்பட்டுக் கொண்டிருப்பது! அவளுக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. நல்லவேளை, உள்ளிருந்து அம்மா கைக்காட்டிக் கூப்பிடுவது தெரிந்ததும், “அப்பாடா…’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு விரைவாய் உள்ளே ஓடிப்போனாள்.

மாப்பிள்ளையையும், மாப்பிள்ளை வீட்டையும் பெண் வீட்டார் வந்து பார்க்க வேண்டும் என்று முடிவாயிற்று. அதற்குப் பிறகே கல்யாணப் பேச்சைத் துவக்குவதும்…

ராஜகோபாலனும் அவரின் அண்ணனும் – பரம விவசாயி. அவர்கள் வெள்ளை உடைகள் தரித்து விரைவுப் பேருந்தில் ஏறி, திருச்செந்தூரில்போய் இறங்கினார்கள். கிராமத்துக்கு நகரப் பேருந்தில் பயணிக்க வேண்டியதிருந்தது. மாப்பிள்ளையின் வீடுபோய் சேரும்போது சூரியன் உச்சிக்கு ஏறியிருந்தது. வீட்டில், நேற்று வந்திருந்த ஆடவர்கள் இருவரும், கூடவே ஒரு பெரிய மனுசியும் இருந்தார்கள். பெரிய மனுசிக்கு ஐம்பது சொச்சம் வயதிருக்கும். நாகரிகமாய் உடை அணிந்திருந்தாள் அவள்.

அவர்கள் கைகூப்பி வரவேற்றார்கள் இவர்களை. ஆனந்தமாய் புன்னகைத்துக் கொண்டே, இருக்கைகளில் அமரச் சொன்னார்கள். சோபாசெட் இருக்கைகள். வெல்வெட் துணி உறைகளில் பளபளப்பாய் மினுங்கின அவை. குடிப்பதற்கு குளிர்பானங்கள் கொண்டுவந்து கொடுத்தாள் பெரிய மனுசி.

வீடு ரொம்பவும் விஸ்தாரமாகத்தான் இருந்தது. டிவியும், ஃப்ரிட்ஜும், கட்டிலும், சோபாவுமாகக் கிடந்து பணக்காரக் களையை பகட்டாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. மாடி வீடு. அகலமாய்த் தெரிந்த காம்பவுண்டுக்குள் இன்னும் நாலு, ஐந்து வீடுகள் விமரிசையாகத் தெரிந்தன. அவற்றிலிருந்து வாடகை கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். சுற்றிலும் தென்னந்தோப்புகளும், நஞ்சை வயல்களும் நின்று கண்களைக் குளிர வைத்தன. இத்தனை சொத்துகளும் மாப்பிள்ளை ஒருவனுக்கே சொந்தமாகப் போகிறது என்பதில் மறுப்பேதும் இருக்காது என்று தோன்றியது.

“”பையனக் காணல?” உட்கார்ந்தமேனிக்கே தலையை முன்னால் நீட்டி, இடப்பக்கம் வளைத்து, பார்வையை உள்ளறைக்குள் செலுத்தினார் ராஜகோபாலன்.

“”உள்ள படிச்சிக்கிட்டிருக்கான். இதோ கூட்டிக்கிட்டு வர்றென்”

ஓடும் வேகத்தில் நடந்துபோனாள் அந்தப் பெண். பையனின் தாயாக இருக்க வேண்டும் அவள். அடுத்த அறைதான். தாயும் மகனும் தணிவாகப் பேசிக் கொண்டாலும் தெளிவாகக் கேட்கும் தூரம்.

“”ஒன்னயப் பாக்கணுமிங்கறடா. வாடா”

“”நா வரலம்மா.”

“”எதுக்குடா?”

“”எத்தனை பேர்கிட்டத்தாம்மா என் மொகத்தைத்கொண்டு காட்டறது? அதுவும் எத்தனத் தடவை? எனக்கு வெறுப்பா இருக்கு. பார்த்தப் பெண்களை எல்லாம் ஒவ்வொரு குறையாச் சொல்லி கல்யாணத்தத் தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தீங்க. அதனால எனக்கு இப்போ முப்பது வயசு ஆனது தான் மிச்சம். வயசான காலத்துல மொகத்தப் போயிக் காட்ட எனக்கு வெக்கமா இருக்கும்மா?.”

“”டேய். முப்பது வயசானா கெழவனாயிட்டன்னு அர்த்தமாடா? நெறையப் பேரு இந்த வயசுலதான்டா கல்யாணமே பண்ணிக்கிறாங்க. வாடா. எல்லாரும் ஒனக்காகவே காத்துக்கிட்டு இருக்காங்க.”

“”அப்போ இந்தத் தடவ உறுதியா “இந்தப் பெண்ணத்தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்’னு சொல்லுங்க…, இப்போ அவுங்க முன்னாலப் போயி நிக்கறென். இல்லன்னா ஆளவிடுங்க”

சிறிது நேரம் அமைதி நிலவியது அங்கே. இறுக்கமான அமைதி. ராஜகோபாலனுக்கு சமயோசிதமாய் நந்தினியின் நினைவு வந்தது. அவளும் இவனைப் போலத்தானே ஆண்களின் முன்னால் வந்து நிற்பதற்குத் தயங்கினாள்.

“”கொஞ்சம் இருங்க… இதோ வந்திர்றென்”. அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அவசரமாய் எழுந்து உள்ளே போனார் தாட்டியமானவர்.

“”ஏன், என்னச் சொல்றான்?”

“”அங்க வந்து நிக்கிறதுக்கு அவனுக்கு வெக்கமா இருக்குங்கறான். இந்த சம்பந்தத்த ஒத்துக்கிருவீங்கன்னா சொல்லுங்க, அங்க வரேங்கறான்.”

மீண்டும் அமைதி நிலவியது அங்கே. கணப்பொழுதுதான். “சட்’டென்று தாட்டியமானவரிடமிருந்து திடமான வார்த்தைகள் வெளிப்பட்டது கேட்டது.

“”சரிடா. ஒத்துக்கிறோம்டா. நீ வாடா மொதல்ல.”

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *