கழுதை சாய்ந்திருக்கும் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 8,508 
 
 

இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும். மெட்ராஸிலிருந்து 25 மைல் தொலைவிலிருக்கும் திருவள்ளூர் என் தந்தை பிறந்து வளர்ந்த ஊர். அங்கு நடக்கும் ‘குரு பூஜை’யில் கலந்து கொள்ள அம்மாவையும், 2 வயது தம்பியுடன் என்னையும் அப்பா இரயிலில் அழைத்துச் சென்றார். நான் குழந்தையாக இருந்தபோது ஊருக்குக் கூட்டிக்கொண்டு போனார்களாம். எனக்கு அது நினைவில்லை.

காலை 7 மணிக்கு இரயில் கிளம்பியது. என் நினைவிற்குத் தெரிந்து இது என் முதல் இரயில் பயணம். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் நின்று ஊர்ந்து சென்ற அந்த பாசன்ஜெர் இரயில் வண்டிப் பயணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வண்டிக்குள்ளேயே வந்து விற்ற வேர்க்கடலை, பலாப்பழம், கைமுறுக்கு எல்லாம் வாங்கித் தந்தார் அப்பா. அம்மாவும் நானும் ஆசையாக சாப்பிட்டோம். தம்பிக்கு புட்டிப்பால் மட்டும் தான். பலாப்பழத்தை சிறியதாக உறித்து அவனுக்குக் கொடுத்தேன். “அவனுக்கு ஒத்துக்காது, வேண்டாம்” என்றார் அம்மா. அப்பா வெற்றிலைப்பாக்கை மென்று கொண்டிருந்தார்.

“கையை வெளியில் நீட்டாதே, தள்ளி உட்கார்” என்று அம்மா என்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அம்மாவும் தம்பியும் தூங்கி விட்டார்கள். அப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ‘அப்பா, குரு பூஜை என்றால் என்னப்பா?’ என்று கேட்டேன். “ரொம்ப வருடங்களுக்கு முன் ஒரு சாமியார் அந்த கிராமத்தில் வசித்து வந்தார். அங்கு அவர் ஒரு அம்மன் கோவில் கட்டி வணங்கி வந்தார். கோவிலருகே இருக்கும் கிணறு கூட அவர் வெட்டியது தான். ஊரில் மழை இல்லாமல் போனாலும், அந்தக் கிணறு மட்டும் வற்றாமல் இருக்கும். அந்த சாமியார் கிராமத்து ஜனங்களுக்கு நல் வழி சொல்லி, வைத்தியம் எல்லாம் செய்து உதவினார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒரு மண்டபம் கட்டி அதில் அவருக்கு சமாதி எழுப்பி, ஒவ்வொரு ஆண்டும் அவர் நினைவு நாளை குரு பூஜையாக வழிபட்டு வருகிறார்கள்” அப்பா சொன்னார்.

பிறகு நான் ஜன்னல் வழியாக ஒவ்வொரு இரயில் நிலையம் வரும் போதும், அதன் பெயர்ப் பலகையைத் தேடிக் கண்டு சத்தமாகப் படித்தேன். திருவள்ளூர் வந்ததும் ‘அதுக்குள்ளே, ஊர் வந்திடுச்சாப்பா?’ என்று வருத்தத்தோடு கேட்டேன். அப்பா சிரித்தபடியே எங்களை வண்டியிலிருந்து இறங்கச் சொன்னார்.

திருவள்ளூர் இரயில்நிலயத்திலிருந்து ஊருக்குள் போவதற்கு பஸ் இருந்தது. அதில் பெருங்கூட்டம் ஏறிக் கொண்டிருந்தது. ஓரத்தில் குதிரை வண்டிகள் வரிசையாக இருந்தன. சிலர் அதில் ஏறிச் சென்றார்கள். ‘அப்பா, நம்பளும் குதிரை வண்டியில் போலாம்ப்பா’ என்றேன். அம்மாவும் ‘ஆமாங்க, வெய்யில்லே இங்கே நிக்க முடியாது. குழந்தை அழுவான். பஸ்லே உட்கார இடம் கிடைக்குமான்னு தெரியலே’ என்றார். ‘சரி வாங்க’ என்று ஒரு குதிரை வண்டியை பேரம் பேசி ஏற்பாடு செய்தார். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார்ந்து கொண்டேன். அம்மா மத்தியில் உட்கார்ந்தார். வண்டியின் பின்புறம் கம்பியிட்டு அப்பா உட்கார்ந்து கொண்டார். குதிரை வண்டி மெதுவாகப் போனது. ‘வண்டிக்கார், வேகமா ஓட்டுங்க’ என்றேன். ‘போலாம், போலாம்’ என்றாரே தவிர அந்த மண்சாலையில் வண்டியை மெதுவாகத்தான் ஓட்டினார். ‘எம்ஜியார் படத்தில் குதிரை எவ்ளோ வேகமா ஓடும், அப்படி இந்த குதிரை ஓடாதா?’ என்றேன். ‘இப்போ பார்’ என்று சொல்லிவிட்டு, ஒருவித ஒலி எழுப்பி குதிரையின் பின்னால் காலால் நிமிண்டினார். குதிரை வேகமெடுத்து ஓடியது. ‘ஹைய்யா’ என்று சந்தோஷமாக கைகளைத் தட்டி சிரித்தேன். ‘கண்ணு, அந்தக் கம்பியைப் புடிச்சிக்கோ, விழுந்திடப்போற’ என்றார் அம்மா.

ஊருக்குள் சென்று ஒரு குறுகலான தெருவில் ஒரு வீட்டின் முன் குதிரை வண்டியை நிறுத்தச் சொன்னார் அப்பா. அந்த வீட்டைப் பற்றியோ, அதில் இருக்கும் உறவினர்கள் பற்றியோ எனக்கு அதிகம் தெரியாது. திருவள்ளூரில் பெரியப்பா பெரியம்மா இருக்கிறார்கள் என்று மட்டும் தான் எனக்கு அம்மா சொல்லித் தெரியும். அப்பா பிறந்து வளர்ந்த அந்த வீட்டில் இப்போது பெரியப்பா இருக்கிறார். மெட்ராஸ்க்கு எப்போதாவது விசேஷத்துக்கு வரும்போது பெரியப்பாவும் பெரியம்மாவும் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு.

அந்தத் தெருவில் எல்லா வீடுகளும் ஒரே மாதிரி ஓடு வேயப்பட்ட வீடுகளாக இருந்தன. பெரியப்பா வீட்டின் வெளிச்சுவற்றின் மீது ஒரு கழுதை சாய்ந்து கொண்டிருந்தது. அதிசயமாக அதைப் பார்த்துக் கொண்டே நான் அம்மாவின் கையைப் பிடித்தபடி வீட்டினுள் சென்றேன். திண்ணையில் அமர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருந்த பெரியப்பா, எழுந்து நின்று எங்களை வரவேற்றார், ‘வாங்க, வாங்க, நேத்தே வந்திருக்கலாமே, குரு பூஜைக்கு ஒரு நாள் முன்னாடியே வரக்கூடாதா?’ என்றார். அப்பா அங்கேயே நின்று அவருடன் பேசிக்கொண்டிருக்க, அம்மா என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அது இரண்டு கட்டு வீடு. முதல் முற்றத்திலிருந்த அறையில் தம்பியைப் படுக்க வைத்துவிட்டு, பின்கட்டுக்குச் சென்றோம். அங்கிருந்த சமையலறையில் இருந்து பெரியம்மா வந்து, ‘வா சரோஜா, எப்படி இருக்கே? வாடா மகனே, தம்பி எங்கே?’ என்று என்னை அணைத்து முத்தமிட்டார். நான் கூச்சப்பட்டு விலகினேன். ‘நேரமாவுது, கைகால் கழுவிட்டு வாங்க. இட்லி அவிச்சிருக்கேன். சாப்டுட்டு குருபூஜைக்கு போலாம்.. பொங்கல் வெக்கறதுக்கு எல்லாம் தயார் பண்ணிட்டேன். வெள்ளென கெளம்பணும்’. என்றார் பெரியம்மா.

சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியில் வந்தோம். அந்தக் கழுதை சுவரின் மீது சாய்ந்து கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்து சென்று தெரு முனையில் திரும்பியதும் இருந்த பெரிய சாலையிலிருந்து பஸ் பிடித்து குருபூஜை நடக்கும் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டோம். பஸ்ஸில் எக்கச்சக்கக் கூட்டம். பஸ்சின் முன்பாதியில் பெண்கள்கூட்டம். கிடைத்த ஒரு இருக்கையில் அம்மா உட்கார்ந்தார். அம்மா மடியில் நான். என் மடியில் தம்பி. பெரியம்மா நின்று கொண்டு வந்தார். அப்பாவும் பெரியப்பாவும் பஸ்ஸின் பின்பகுதியில் பைகளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். ஊரை விட்டு வெளியே வந்து மண்சாலையில் பஸ் ஆடிக்கொண்டே சென்றது. சாலையின் இருபுறமும் வயல்கள், மரங்கள், தோப்புக்கள். வயல்களில் அங்கங்கே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தார்கள். புத்தகத்திலும், சினிமாவிலும் பார்த்ததை நேரில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தூரத்தில் ஒரு கோவிலும், அதன் அருகில் ஒரு கிணறும், ஒரு சின்ன மண்டபமும் தெரிந்தன. பயங்கரக் கூட்டமாக இருந்தது. ரங்கராட்டினம், பயாஸ்கோப் பெட்டி, குச்சி ஐஸ் வண்டி, பலகாரக் கடைகள், வளையல், பொட்டு, சோப்பு சீப்புக் கடைகள் எல்லாம் நிறைய இருந்தன. பெண்களும், சிறுவர் சிறுமியர்களும் அந்தக் கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தனர்.

பஸ்ஸை விட்டிறங்கி, முதலில் கோவிலுக்கு அழைத்துப்போனார் அப்பா. அந்த பெரிய கூட்டத்தைப் பார்த்து பயந்துபோன நான் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டேன். அம்மா தம்பியைத் தூக்கிக்கொண்டார்கள். பெரியம்மாவும், பெரியப்பாவும் கிணற்றருகில் பொங்கலிடப் போனார்கள். அம்மன் சாமியைக் கும்பிட்டு விட்டு, கிணற்றடிக்கு வந்தோம். ஒரு சாமியார் கிணற்றருகே உட்கார்ந்து ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தார். கிணற்றைச் சுற்றி பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கல் பொங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று, ‘கல் விழுந்துடுச்சி’ என்று அந்த சாமியார் உரத்தக் குரலில் சொன்னார். கூட்டம் கிணற்றருகே கூடியது. பெண்கள் மஞ்சளையும் பூவையும் கிணற்றில் போட்டு குலவை ஒலி எழுப்பினார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை, புரியவுமில்லை. பிறகு எல்லோரும் அருகிலிருந்த ஒரு சிறிய மண்டபத்திற்குச் சென்று பொங்கல் படைத்து, விழுந்து வணங்கினார்கள்.

நானும் சாமி கும்பிட்டுவிட்டு, ‘அப்பா, காசு குடுப்பா, ரங்க ராட்டினம் சுத்தணும்’ என்றேன். ஐந்து 10 நயாபைசா நாணயங்களைக் கொடுத்து, ‘போய் விளையாடு, அம்மாவுக்கும் என்ன வேணுமோ வாங்கிக்கொடு’ என்று என்னிடம் சொல்லி விட்டு, ‘சரோஜா, நிலம் விக்கற விசயமா அண்ணா எங்கிட்டே பேசணும்னு .சொன்னார். நான் அவரோட பஸ்லே வீட்டுக்கு முன்னாடி போறேன். நீ அண்ணியாரோடு பசங்களைக் கூட்டிட்டு வந்திடு’ என்றார் அம்மாவிடம். ‘சரிங்க, இந்தக் கூட்டத்தைப் பார்த்தா தான் பயமா இருக்கு. அவனை என் கூடவே இருக்கச் சொல்லுங்க. நான் மதியமே வந்திடறேன். நம்ம 6 மணி ரயிலைப் புடிச்சி ராத்திரிக்குள்ள மதராஸ் போய்டலாம். நீங்க வேறெங்கியும் உங்க நண்பர்களைப் பார்க்கணும்னு கெளம்பிடாதீங்க ‘ என்றார். ‘சரி, பசங்க பத்திரம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அப்பா.

‘நீ இங்கே கடைங்களை பார்த்திட்டிரு சரோஜா, நான் கொஞ்ச நேரத்திலே வரேன்’ என்று சொல்லிவிட்டு பெரியம்மா சில பெண்களுடன் கோவிலுக்குப் போனார்.

‘ரொம்ப கூட்டமா இருக்கு, என் கூடவே இருக்கணும்’ என்று அம்மா சொன்னபடி அவருடைய கட்டம் போட்ட சிவப்புப் புடவையைப் பிடித்துக் கொண்டே எல்லாக் கடைகளையும் சுற்றி வந்தேன். ரங்க ராட்டினம் சுற்றினேன். குச்சி ஐஸ் சாப்பிட்டோம். அம்மா தம்பிக்கு ஒரு கிலுகிலுப்பை வாங்கினர். நான் ஒரு கார் பொம்மை வாங்கிக்கொண்டேன். ‘பயாஸ்கோப் பார்க்கணும்மா’ என்றேன். ‘ஏன்டா, நம்ம ஊர்லே சினிமா பார்க்கலியா, இது எதுக்குடா?’ என்றார். ‘நான் பார்க்கணும்’ என்று அடம் பிடித்தேன். ‘சரி போய் பாத்துட்டு அங்கே மண்டபத்தாண்ட வந்துடு. அங்கே நிழலோரமா நான் உட்கார்ந்திருக்கேன்’ என்றார் அம்மா. ஓடிப்போய் 5 நயாபைசாவை பயாஸ்கோப்காரரிடம் கொடுத்தேன். பெட்டியிலிருந்த ஒரு கம்பியை சுழற்றினார். ஒரு துளை வழியாகப் பார்த்த எனக்கு பாகவதரின் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலும், எம்ஜியாரின் கத்திச்சண்டையும், சிவாஜியின் பராசக்தி வசனக் காட்சியும் தெரிந்தன. கொஞ்ச நேரம் தான் காட்டினார். ‘இன்னும் கொஞ்சம்’ என்றேன். ‘அவ்வளவு தான்’ என்று சொல்லி என்னை அகற்றிவிட்டு, காத்திருந்த இன்னொரு சிறுமியை பார்க்கச் செய்தார்.

என்னைப் பிரிந்து இருப்புக் கொள்ளாமல், அம்மா என்னிடம் வந்து என் கையைப் பிடித்து ‘வா போகலாம்’ என்று சொல்லி பெரியம்மாவைத் தேடிப் போனார். பொங்கல் வைத்த இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்களோடு ஓரிடத்தில் உட்கார்ந்து படையலிட்ட பொங்கலை சாப்பிட்டோம். ‘மணி என்ன இருக்கும். வீட்டுக்குப் போகலாமா?’ என்று பெரியம்மாவைக் கேட்டார் அம்மா. ‘அதோ ஒரு மணி பஸ் போவுது. கூட்ட நெரிசல்லே ஏற முடியாது. அடுத்த பஸ்ல போகலாம்’ என்றார் பெரியம்மா. ‘

பஸ்ஸில் கூட்டமா இருக்கே. குதிரை வண்டியில் போகலாமே’ என்றார் அம்மா. ‘இங்கே வர்ற குதிரை வண்டியை திரும்பிப் போக பேசிகிட்டு தான் வருவாங்க. இங்க வண்டி கிடைக்காது. கிராக்கி’ என்றார் பெரியம்மா. சற்று நேரத்தில் அடுத்த பஸ் வந்தது. கூட்டம் முண்டியடித்து ஏறியது. தம்பி பாப்பாவை ஒரு கையில் வைத்துக்கொண்டு, என்னையும் இன்னொரு கையில் பிடித்துக் கொண்டு அம்மாவால் பஸ்ஸில் ஏற முடியவில்லை. இரண்டு கைகளிலும் பைகளை வைத்துக் கொண்டு பெரியம்மா எப்படியோ பஸ்ஸிற்குள் ஏறி விட்டார். அவரை பஸ்ஸில் ஏறும் கூட்டம் மறைத்தது. பஸ் கிளம்பிப் போய்விட்டது.

அம்மா முகத்தில் சோர்வு. ‘அடுத்த பஸ்ல போய்டலாம். நான் பாப்பாவைத் தூக்கிக்கிட்டு முன்னாடி ஏறிடறேன். என் பின்னாடியே நீ ஏறிடு, சரியா’ என்றார் அம்மா. சற்று நேரம் நிழலோரமாக ஒதுங்கினோம். அடுத்த பஸ் வர நேரமாகும் என்றார்கள். காத்திருந்தோம். ‘அம்மா, அடுத்த பஸ் வரதுக்குள்ளே இன்னொரு வாட்டி ராட்டினம் ஆடிட்டு வரேம்மா’ என்றேன். ‘வேண்டாம், பஸ் வந்திடும், கூட்டமா இருக்கு. உன்னைத் தேட முடியாது’ என்றார். அவர் சொன்னதைக் காதில் வாங்காமல் ‘சீக்கிரம் வந்துடுவேன்’ என்று சொல்லிவிட்டு, சட்டைப் பையில் மிச்சமிருந்த 10 நயாபைசா காசை கையில் எடுத்தவாறு ஓடினேன். ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தது. அது நிற்பதற்குள், கரும்புச்சாறு வாங்கிக் குடித்தேன். பிறகு ராட்டினம் ஏறிச் சுற்றினேன். அப்போது அடுத்த பஸ் வந்தது. கூட்டம் திமுதிமுவென்று பஸ்ஸை நோக்கி ஓடியது. சுற்றிகொண்டிருந்த ராட்டினத்திலிருந்து கீழே குதித்தேன். தரையில் விழுந்தேன். எழுந்து நின்ற போது தலை சுற்றியது. அம்மா இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். பெண்கள் கூட்டத்தின் மத்தியில் கட்டம் போட்ட சிவப்பு சேலை தெரிந்தது. அதைப் பிடித்து இழுத்து ‘அம்மா’ என்றேன். ‘ஏண்டா, சேலையை பிடிச்சி இழுக்குறே’ என்று வேறு யாரோ ஒரு பெண்மணி என் கையை விலக்கினார். பின்னாலிருந்து யாரோ என்னைத் தள்ளினார்கள். நான் ‘ஐய்யோ’ என்று பயந்து அலறிக் கீழே விழுந்தேன். வாந்தி வரும்போலிருந்தது. என்னை யாரோ கைகளைப் பிடித்துத் தூக்கினார்கள். எனக்கு மயக்கம் வந்து கண்கள் இருண்டன.

நான் மீண்டும் கண் விழித்துப் பார்த்த போது போலீஸ்டேஷன் மேசையின் மீது படுத்திருந்தேன். தொப்பி அணிந்து காக்கி நிஜார் போட்டிருந்த போலீஸ்காரர் என்னருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அம்மாவும் தம்பியும் இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். இல்லை. உடனே குரலெடுத்து ‘அம்மா’ என்று அழ ஆரம்பித்தேன். போலீஸ்காரர் தொப்பியை கழற்றி வைத்து விட்டு என்னைப் பார்த்து ‘பயப்படாதே தம்பி. நீ குரு பூஜையாண்டே மயக்கமயிட்டே. நான் தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். உன் அப்பா அம்மாவெல்லாம் இங்கே வருவாங்க. பயப்படாதே. உன் பேரென்ன?’ என்றார். அழுதுகொண்டே பெயர் சொன்னேன். அம்மா அப்பா பெயர் கேட்டார். சொன்னேன். வீட்டு விலாசம் கேட்டார். எங்கள் மதராஸ் வீட்டு விலாசம் சொல்லிவிட்டு இங்கே பெரியப்பா வீட்டுக்கு வந்ததைச் சொன்னேன். ‘பெரியப்பா பேரென்ன, அவங்க வீட்டு விலாசமென்ன?’ என்று கேட்டார். ‘விலாசம் தெரியாது, ஆனா அந்த தெரு சின்னதா இருக்கும். அந்த வீட்டு சுவர் மேலே கழுதை சாஞ்சிருக்கும்’ என்று சொன்னேன். ‘என்னது, கழுதை சாஞ்சிருக்கிற வீடா?’ என்று கேட்டுவிட்டு அட்டகாசமாகச் சிரித்தார். நான் மீண்டும் அழ ஆரம்பித்தேன். ‘சரி, சரி, அழாதே. வீட்டை அடையாளம் காட்டத் தெரியுமா?’ என்றார். தெரியாது என்று தலையாட்டினேன். ‘பெரியப்பா பேர் தெரியாது, வீட்டு விலாசம் தெரியாது, என்ன புள்ளைப்பா நீ’ என்றார். பயத்திலும் வெட்கத்திலும் என் அழுகை அதிகமாயிற்று.

‘அழாதே தம்பி, நான் ஒன்னும் செய்ய மாட்டேன். வா, உனக்கு கடலை மிட்டாய் வாங்கித் தரேன். உன் அப்பா அம்மா உன்னைத் தேடி இங்கதான் வந்தாகணும், அதுவரைக்கும் நம்ம பேசிட்டிருக்கலாம்’ என்று என்னை அழைத்துப் போய் பக்கத்திலிருந்த கடையில் மிட்டாய் வாங்கித் தந்தார். பிறகு, நான் எங்கு, என்ன படிக்கிறேன், என்ன வாய்ப்பாடு, சினிமா பாட்டெல்லாம் தெரியும், யாரெல்லாம் பிடிக்கும், என்ன சினிமா பார்த்தேன் என்று பேச்சுக் கொடுத்து என் அழுகையை மறக்க வைத்துக் கொண்டிருந்தார்.

நானும் அழுகையை மறந்து, அவருக்குத் திருக்குறள், ஆத்திச்சூடி, பதினாறாம் வாய்ப்பாடு எல்லாம் சொன்னேன். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அப்பாவும், பெரியப்பாவும் போலீஸ்டேஷனுள் அவசர அவசரமாக நுழைந்தார்கள். அப்பாவைப் பார்த்ததும், ஓடிப்போய் தாவி ஏறி அவர் தோளில் முகம் புதைத்து அழுதேன். போலீஸ்காரர் அப்பாவைப் பார்த்து, ‘உன் பிள்ளையா, சதா? வேறே பேர் சொன்னானே?’ என்றார். ‘எங்கப்பா பேரு நீடின்பன் தான்’ என்றேன். ‘அடேய், அவம்பேருஇந்த ஊர்லே இருந்த வரைக்கும் சதானந்தம்தாண்டா. மதராஸ்ல போய் பேரை மாத்திக்கிட்டான். என் கூடப் படிச்சவண்டா உங்கப்பன்.’ என்றார். பிறகு என் அப்பாவைப் பார்த்து போலீஸ்காரர், ‘ஏம்பா, பெரியப்பா பேரு, வீட்டு விலாசம்லாம் சொல்லிக்குடுக்கலியா புள்ளைக்கு. எங்கே, ஊருபக்கம் தலைய காட்னா தானே. மண்டபத்தாண்ட மயங்கி விழுந்துட்டான். கூட்ட நெரிசல் வேறே, ஆட்டு மந்தையாட்டம். நான் தான் இங்க கூட்டிட்டு வந்தேன். எப்படியும் இவனைத் தேடிகிட்டு இங்க தான் வருவீங்கன்னு தெரியும். அம்மா அம்மான்னு ஒரே அழுகை. அழுகையை நிறுத்த பேச்சு குடுத்துக்கிட்டுருந்தேன். பையன் நல்லா பேசறான், சதா. தமிழ் சரளமா வருது. கூட்டிட்டுப் போ’ என்றார்.

‘அவங்கம்மா பஸ்லே ஏறிட்டு இவனைக் காணோம்னதும், மயக்கமாயிட்டா. வீட்லே அழுதுட்டு இருக்கா. ரொம்ப நன்றி, ராமலிங்கம்’ என்று போலீஸ்காரரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார். பெரியப்பாவிடம் “குரு, உன் வீட்டுக்கு இவன் நல்ல பேர் வச்சிருக்காம்பா. கழுதை சாஞ்சிருக்கும் வீடாம்’ என்று சொல்லி விட்டு போலீஸ்காரர் மீண்டும் அட்டகாசமாகச் சிரித்தார். அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பா என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு வீட்டிற்குக் கூட்டிப்போனார். வீட்டிற்குள் போகுமுன் அந்த வெளிச்சுவரைப் பார்த்தேன். அந்தக் கழுதை அங்கில்லை.

நான் வீட்டிற்குள் நுழைந்ததும், திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த அம்மா வேகமாக எழுந்து வந்து என் முதுகில் இரண்டு அடி கொடுத்தார். வலிக்கவில்லை. அம்மாவைக் கட்டிக் கொண்டு சந்தோஷமாக அழுதேன். ‘கூடவே இருன்னு சொன்னேன். பேச்சைக் கேக்காம போய் ராட்டினம் ஆடுனே. நீ தொலைஞ்சி போயிட்டேன்னு எவ்ளோ அழுதேன். மயக்கமே வந்திடுச்சிடா, பாவி’ என்றார். ‘தப்புதாம்மா’ என்று விம்மினேன். என்னை அணைத்து ‘பயந்துட்டியா செல்லம்’ என்று கொஞ்சினார். என் பயமெல்லாம் பறந்து போனது. போலீஸ்டேஷனில் நடந்ததெல்லாம் சொன்னேன். ‘அம்மா, இந்த வீட்டு விலாசம் கேட்டதுக்கு, இது கழுதை சாஞ்சிருக்கும் வீடுன்னு அடையாளம் சொல்லி இருக்காம்மா, உன் புள்ள’ என்றார் பெரியப்பா. எல்லோரும் சிரித்தார்கள்.

‘சரோஜா, பொழுது சாஞ்சிடிச்சி, ராத்தங்கிட்டு காலை வண்டிக்கு போகலாம்’ என்று பெரியம்மா சொன்னார். இரவு பெரியப்பா வீட்டிலேயே தங்கினோம். முற்றத்தில் உட்கார்ந்து நிலா வெளிச்சத்தில் கையில் சோற்றுருண்டை வாங்கித் தின்றது சந்தோஷமாக இருந்தது. இரவு வெளித் திண்ணையில் அப்பாவுடன் படுத்துக் கொண்டேன். அப்பா அந்த ஊர், தெரு, பெரியப்பா பெரியம்மா பற்றிய விவரங்கள், அவருடைய பெற்றோர் பற்றிய விஷயங்கள், படித்த பள்ளி, விளையாடிய இடங்கள், நூலகம், சந்தை, முதலில் அவர் வேலை செய்த கடை என்று நிறைய விஷயங்களைச் சொன்னார். கதை கேட்பது போல் சுவாரசியமாக இருந்தது. கேட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.

மறுநாள் காலை மதராஸ் செல்ல குதிரை வண்டியில் இரயில் நிலையத்திற்குக் கிளம்பினோம். வண்டியில் ஏறும்போது வீட்டின் வெளிச் சுவற்றைப் பார்த்தேன். அந்தக் கழுதை வீட்டின் சுவரின் மீது சாய்ந்திருந்தது. எங்களை வழி அனுப்ப வீட்டுக்கு வெளியில் வந்திருந்த பெரியாப்பவைப் பார்த்து ‘அதோ பாருங்க, இது கழுதை சாஞ்சிருக்கும் வீடு தான்’ என்றேன். மேற்குப் பார்த்த அந்த வீட்டில், காலை வெய்யிலில், நிழலுக்காக சுவரின் மீது சாய்ந்திருக்கும் கழுதையைப் பார்த்த பெரியப்பா பெரியதாகச் சிரித்துக் கொண்டே கையசைத்தார்.

கழுதை சாய்ந்திருந்த வீடு என் கண்களை விட்டு மறையும்வரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்தக் காட்சி ஐம்பது வருடங்களானாலும் இன்னும் என் மனதிலிருந்து மறையவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *